ஒரு கல்யாண அழைப்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 15, 2024
பார்வையிட்டோர்: 1,490 
 
 

மாலை களைத்துப் போய் வீடு வந்த இராஜேந்திரனிடம் அவன் மனைவி கல்யாண பத்திரிக்கை ஒன்றை கொண்டு வந்து நீட்டினாள். உங்க நண்பராம் பச்சையப்பன்னு சொன்னா தெரியும்னு சொன்னார்.

பத்திரிக்கையை வாங்கி பார்த்த இராஜேந்திரன் கல்யாணம் எப்பொழுது என்று பார்த்தான். வரும் ஞாயிறுதான், வேலூரில் என்றிருந்தது. உங்க அண்ணன் இந்த கல்யாணத்தை பத்தி உங்கிட்ட பேசினானா?

இராஜேந்திரன் மனைவியிடம் கேட்க இல்லை என்று தலையசைத்தாள். சரி நானே பேசறேன், பாக்கெட்டில் இருந்த செல்லை எடுத்து ஆறுமுகத்துக்கு போன் போட்டான்.

ஆறுமுகத்திடம் உனக்கு பச்சையப்பங்கிட்டே இருந்து கல்யாண பத்திரிக்கை வந்துச்சா? அதற்கு அவன் என்ன பதில் சொன்னான் என்று தெரியவில்லை. இருவரும் சிறிது நேரம் பேசிவிட்டு செல்போனை மேசையின் மேல் வைத்து விட்டு கை கால் கழுவ பின்புறம் சென்றான்.

கல்யாணத்துக்கு வந்த இருவரையும் ஒன்றாக பார்த்த பச்சையப்பர் வேகமாய் வந்து இருவரையும் அணைத்துக்கொண்டார். வாங்க வாங்க, எங்கே வராம போயிடுவீங்களோன்னு நினைச்சேன். உள்ளே அழைத்து சென்றவர் அங்கிருந்த நாற்காலியில் உட்கார வைத்தார்.

நீங்க மத்தவங்களை பாருங்க, மரியாதையாய் சொன்ன ஆறுமுகத்திடம் சரி எங்கேயும் போயிடாதீங்க, நான் மறுபடி வாறேன், பரபரப்பாய் யாரையோ அழைக்க வெளியே சென்றார்.

அவர் போன பின்பு திரும்பி பார்த்த ஆறுமுகம், இராஜேந்திரன் உன்னிப்பாய் மேடையில் நின்று கொண்டிருந்த மணமக்களை பார்த்துக்கொண்டிருந்தது கண்டவுடன் மெல்ல சிரித்தான்.

அவனின் சிரிப்பின் சத்தத்தால் கவனம் கலைந்த இராஜேந்திரன் ஏன் சிரிக்கறே ஆறு? இல்லை பொண்ணு உன்னை சுத்தி சுத்தி வருவாளே, அங்கிள், அங்கிள்னு இப்ப எப்படி வளர்ந்துட்டான்னு பாக்கறயோன்னு நினைச்சேன்.

அவன் பொய் சொல்கிறான் என்று இவனுக்கு தெரிந்தது. ஏனெனில் இவர்கள் இருவரையும் அங்கிள், அங்கிள் என்று சுற்றி சுற்றி வந்தவள்தான். இவனிடம் கொஞ்சம் பயம் கலந்த எச்சரிக்கையுடன்தான் பழகுவாள். இவன் அவளுக்கு ‘கணக்கு’ பாடம் டுயூசன் எடுத்துக்கொண்டிருந்தான், முன் கோபம், சில நேரம் வசவுகள், இதனால் அவனிடம் காட்டாத பாசத்தை என்னை சுற்றி அங்கிள்..அங்கிள் என்று வருவாள். அந்த நிகழவு மட்டும் நடக்காமல் இருந்தால் இன்னும் ஒன்றரை வருடம் கூட எங்களுடன் இருந்திருப்பாள்..ம்…எல்லாம் விதி..

இப்பொழுது மேலே போய் அவளுக்கு வாழ்த்து சொல்லி வந்துவிடலாமா? கேட்ட ஆறுமுகத்திடம் வேண்டாம் அவங்கப்பா வர்றேன்னு சொல்லியிருக்காருல்லை, வெயிட் பண்ணலாம்.

சரி என்று தலையை ஆட்டினான் ஆறுமுகம், இராஜேந்திரனின் பார்வை மீண்டும் கல்யாண மேடைக்கு போக அங்கிருந்த மணப்பெண் ‘மஹீமாவை’ பற்றிய பழைய நினைவுகளுக்கு சென்றான்.

ஐந்து வருடங்களுக்கு முன்னால் சென்னை திருவல்லிக்கேனி சந்து ஒன்றில் நண்பன் ஆறுமுகத்துடன் ஒன்றாய் தங்கியிருந்த மாடி போர்ஷன் ஒன்றில், வேலைக்கு கிளம்ப படியில் இறங்கி கீழே நிறுத்தியிருந்த வண்டியை எடுக்க வந்தவன் வண்டிக்கு அருகில் பள்ளி யூனியார்முடன் ஒரு சிறுமியும், அருகில் நடுத்தர வயதுள்ள ஒரு பெண்ணும் நின்று கொண்டிருந்தனர்.

தம்பி கீழ் வீட்டுலதான் நாங்க குடியிருக்கறோம், உங்களை பத்தி தெரியும், எங்களுக்கு சின்ன ஹெல்ப் பண்ணனும், தயங்கி தயங்கி கேட்ட அந்த பெண்ணிடம் சொல்லுங்க, இந்த பொண்ணை அவங்க ஸ்கூல்ல இறக்கி விட்டுடணும், நீங்க போற வழியிலதான் ஸ்கூலு, அவளே சொல்லி இறங்கிக்குவா.. அந்த பெண்ணின் கோரிக்கையை தட்ட முடியாத இராஜேந்திரன் தலையசைத்து ஏற சொன்னான்.

பள்ளி வாசலில் இறங்கிக்கொண்ட அந்த பெண் “தேங்க்ஸ் அங்கிள்” சொல்லி விட்டு சிட்டென உள்ளே பறந்தாள். அதுதான் அவர்களின் பழக்கத்துக்கு ஆரம்பம். அதற்கு பின் அந்த நடுத்தர வயதுடைய பெண் எது செய்தாலும் இவர்கள் இருவருக்கும் கொண்டு வந்து கொடுத்து செல்வாள். அதெல்லாம் எதுக்குங்க? கேட்கும் ஆறுமுகத்திடம் சும்மாயிருங்க தம்பி, நீங்க எங்க பக்கத்து ஊருக்காரங்க,

ஆறுமுகம் எப்பொழுதும் முகத்தை கடுமையாக வைத்திருப்பான். காரணம் அவன் அப்பொழுது தனியார் பள்ளியில் கணக்கு ஆசிரியனாக இருந்தான். மாணவர்களுடன் சற்று தள்ளி இருக்கவே அவன் அப்படி முகத்தை வைத்துக்கொண்டான் என்பது இவனுக்கு தெரியும்.

அந்த பெண்ணின் கணவன் ஒரு நாள் ஆறுமுகத்திடம் வந்து தம்பி நம்ம பாப்பாவுக்கு டுயூசன் எடுக்க முடியுமா? முதலில் மறுத்த ஆறுமுகம் பின் இங்க எல்லாம் வரவேண்டாம், நான் கீழே வந்து ஒரு மணி நேரம் எடுக்கறேன். தினமும் ஏழு மணியில் இருந்து எட்டு மணி வரை அந்த பெண்ணுக்கு டுயூசன் எடுத்தான்.

அவர்களுடன் கொஞ்சம் பழக ஆரம்பித்த பின்னால் தெரிந்தது, இந்த பெண் பெயர் மஹீமா என்று. வேலூரில் இருக்கும் வியாபாரி பச்சையப்பரின் பெண், மஹீமாவை பிளஸ் டூ சென்னையில் படிக்க வைக்க விரும்பினார். இருந்தாலும் ஹாஸ்டலில் தங்கி படிக்க வைக்க விரும்பாமல் உறவுமுறையில் சகோதரியான நடுத்தர வயது பெண்ணையும், அவள் கணவனையும் படிக்கும் பெண்ணை பார்த்துக்கொள்ள கீழ் வீட்டை இரண்டு வருட குத்தகை அடிப்படையில் எடுத்து கொடுத்திருக்கிறார். அவ்வப்பொழுது அவரும் வந்து பொண்ணை பார்த்து விசாரித்து செல்வார்.

அந்த பெண்ணின் கணவர் மஹீமாவின் தந்தையிடமும் இருவரை பற்றி சொல்லியிருந்தார். பச்சையப்பரும் எப்பொழுது வந்தாலும் இவர்கள் இருவருக்கும் ஏதாவது ஒன்றை வாங்கி வந்து கொடுப்பார். இவர்கள் மறுத்தாலும் கம்முனு இருங்க தம்பி, நீங்க இரண்டு பேரும் இருக்கற தைரியத்துலதான் நான் அங்கே நிம்மதியா இருக்கேன்.

அவரின் வெள்ளெந்தியான பேச்சும், பழகும் விதமும் இவர்கள் இருவருக்கும் அவரை பிடித்து போக ஒரு சில நேரங்களில் இரவு தங்க மேலே வந்து விடுவார். மூவரும் உட்கார்ந்து விடிய விடிய அரட்டை அடிப்பார்கள். அப்பொழுது கிண்டலாக கேட்பார் உங்களுக்கு எப்ப தம்பி கல்யாணம்? ஆறுமுகம் சிரித்து கொண்டே இவன் கல்யாணம் முடிஞ்ச உடனே எனக்கு நடந்திடும், சொல்லிவிட்டு அமுக்கமாய் சிரிப்பான். சிரிப்பின் அர்த்தம் புரியாமல் இவர் அவர்கள் முகத்தை பார்க்க, இராஜேந்திரன் வெட்கத்துடன் இவன் தங்கச்சிதான் எனக்கு பேசி முடிச்சிருக்கு. அவ டிகிரி படிச்சுகிட்டிருக்கா அடுத்த வருசம் முடிச்சவுடன் கல்யாணம்.

அப்படியா.! அவருக்கு ஒரே சந்தோசம், மாமன், மச்சான் ஒரே அறையில தங்கியிருக்கீங்கன்னு சொல்லுங்க. இவர்கள் இருவரும் சிரித்து சரி உங்களை பத்தி சொல்லுங்க.

என்னைய பத்தி என்ன தம்பி, எனக்கு இவ இளைய பொண்ணு, மூத்தவளை கட்டி கொடுத்துட்டேன். மாப்பிள்ளை உள்ளுருலேயே ஜவுளிக்கடை வச்சிருக்காரு. இவளை டிகிரி வரைக்கும் படிக்க வச்சுட்டேன்னா யார் கையிலயாவது பிடிச்சு கொடுத்துட்டு நான் அக்கடான்னு ‘வியாபாரத்தை’ பாத்துகிட்டிருக்கலாம், இல்லை சும்மா உட்கார்ந்துக்கலாம்.

அவங்க அம்மா..? இந்த கேள்விக்கு சற்று மெளனமாய் இருந்தவர் பெரியவளுக்கு கல்யாணம் முடிஞ்ச கையோட என்னைய விட்டு போயிட்டா. அதனாலதான அந்த வருத்தம் இவளுக்கு தெரியக்கூடாதுன்னு இப்படி தங்க வச்சு படிப்பிச்சுகிட்டிருக்கேன்.

இருவருக்கும் மனசு கனத்து போனது. அதன் பின்னால் மஹீமாவின் மீது அதிக பாசமும் பரிவும் கொண்டனர். இருந்தும் ஆறுமுகம் படிப்பு விஷயத்தில் தன்னுடைய கடுமைகளை குறைத்து கொள்ளவில்லை என்பது மஹீமா ஆறுமுகத்தை பற்றி இவனிடம் புகாராய் தெரிவிப்பாள்…

ஆறு மாதம் கடந்திருக்கும், திடீரென மாலை ஆறு மணி இருக்கும், கதவு தட்ட அப்பொழுதுதான் வேலை முடிந்து வந்து உடையை மாற்றிக்கொண்டிருந்த இராஜேந்திரன், கட்டிய கைலியுடனே கதவை திறந்தான். அந்த பெண்ணின் கணவர் நின்று கொண்டிருந்தார். அவரது முகம் வேர்த்து பதட்டத்துடன் இருந்தது தெரிந்தது.

தம்பி..இன்னும் மஹீமாவை காணோம்..குரலில் அழுகை எட்டி பார்க்க, இவனுக்கும் தானாக பதற்றம் தொற்றிக்கொண்டது. கொஞ்சம் இருங்க, உள்ளே போய் சட்டையை மாற்றிக்கொண்டு வந்தவன், வாங்க கீழே வண்டியை நோக்கி சென்றான்.

எல்லா இடமும் தேடி விட்டார்கள். நாலரைக்கெல்லாம் பள்ளி விட்டு விடுவார்கள், அதன் பின் பள்ளி வாகனத்தில் ஏறி வீடு திரும்புவாள். ஆனால் மாலை வண்டிக்கே வரவில்லை என்றவுடன் முன்னரே வீட்டிலிருந்து யாராவது கூட்டி போயிருக்கலாம் என்று விட்டு விட்டார்கள்.

பச்சையப்பரின் முகத்தை பார்க்கவே இவர்கள் இருவருக்கும் பயமாக இருந்தது. நீங்க இரண்டு பேரும் இருக்கறீங்க என்கிற தைரியம்தான்..அவர் சொன்னது மனதில் வந்து போக சட்டென தன் முகத்தை அறைந்து கொண்டான் ஆறுமுகம் சே நான் மடத்தனம் பண்ணிட்டேன், அழுகையுடன் சொன்னான். விவரம் புரியாமல் இராஜேந்திரன் அவன் முகத்தை பார்க்க அன்னைக்கு ஒரு நாள் அவ செல்லுல இருந்து ஒரு வாட்ஸ் அப் மெசேஜை காண்பிச்சு அழகா இருக்குதில்லை அங்கிள் அப்படீன்னா, நான் அதெல்லாம் உனக்கு வேண்டாத விஷயம், முதல்ல படிப்புல கவனம் செலுத்து அப்படீன்னு திட்டிவிட்டேன். கொஞ்ச நாளா நான் பாடம் நடத்தும்போது கூட “செல்லை மறைச்சு வச்சு” பாத்து இரசிச்சுகிட்டிருப்பா. அதை அப்பவே புடுங்கி அவளை கண்டிச்சிருந்தா இப்படி வந்திருக்குமா? புலம்பினான்.

பச்சையப்பரின் செல்வாக்கு இவர்களுக்கு அப்பொழுதுதான் தெரிந்தது. எப்படியோ ஆள் பலமும், படைபலமும் வைத்து பெண்ணின் கைபேசி அழைப்பை காவல் துறை மூலம் “ட்ரேஸ்”அவுட் செய்து பிடித்து கொண்டு வந்து விட்டார்கள். வேலை வெட்டி இல்லாமல் அலைந்து கொண்டிருந்தவன் இந்த பெண்ணின் கைபேசி எண்ணை கண்டு பிடித்து இந்த வேலைகளை செய்திருக்கிறான்.

எப்படியோ மஹீமாவை கண்டுபிடித்து ஊருக்கே கூட்டி சென்றவர்கள், திரும்பி வரவேயில்லை. அதற்கு பின் மீண்டும் அவர்களை பார்க்கவே முடியவில்லை. இவர்களுக்கு நிரந்தர பணிகள் கிடைத்து உள்ளுருக்கே வந்து விட்டனர். இருவருக்கும் திருமணமும் ஆகி விட்டது.

சட்டென யாரோ தோளை தொட்டது போல உணர தலையை தூக்கியவனை பச்சையப்பர் என்ன சார் யோசனையிலே உட்கார்ந்துட்டீங்களா? வாங்க மேடைக்கு போகலாம், இருவரையும் அழைத்துக்கொண்டு மேடைக்கு வர மணப்பெண் இவர்களை சற்று குழப்பமாக பார்த்து ஞாபகம் வர முகத்தை மலர்த்தினாள்.

வாங்க அங்கிள், வாங்க, மன நிறைவுடன் வரவேற்றவளை வாழ்த்திவிட்டு, அவ்ர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டு பச்சையப்பரிடம் விடைபெற்று சாப்பாட்டு பந்தியை நோக்கி நடந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *