ஒரு அப்பா, ஒரு மகள், ஒரு கடிதம்!






இரண்டு கடிதங்கள் வந்திருந்தன. ஒன்று அவர் எதிர் பார்த்துக் கொண்டிருந்த டி.என்.ஏ ரிப்போட், மற்றது அழகாக குண்டு குண்டாக அவருக்கு நன்கு பழக்கப்பட்ட கையெழுத்தில் முகவரி எழுதப்பட்டிருந்தது. ஊட்டி கான்வென்ட் ஹாஸ்டலிலிருந்டது எழுதப்பட்டிருந்த அக்கடிதத்தைத்தான் முதலில் பிரித்துப் படித்தார்.

‘அன்புள்ள அப்பா’
பதினைந்து வயது நிரம்பிய மகள் திவ்யாவிடம் இருந்து கடிதம் வந்திருந்தது. ஆர்வத்துடன் தொடர்ந்து வாசித்தார்.
‘அப்பா இனிமேல் உங்களை உரிமையோடு ‘அப்பா’ என்று என்னால் அழைக்க முடியுமோ தெரியாது. ஆனாலும் நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கும் டி.என்.ஏ ரிப்போர்ட் உங்கள் கையிற்கு வருமுன் எனக்கும் உங்களுக்கும் இடையே இருந்த உறவைப் பற்றி மனம் விட்டுப் பேசவிரும்புகின்றேன்.
அப்பா என்றால் பாசம், அப்பா என்றால் அன்பு, எனக்கு எல்லாமுமாய் நீங்கள் தான் இருந்திருக்கிறீர்கள். அம்மாவின் அலட்சியமும், அசட்டையும், உதாசீனமும் என்னை அம்மாவிடம் இருந்து தூரவிலகிப்போக வைத்ததாலோ என்னவோ, உங்கள் மீது அதிகம் ஈடுபாடு கொள்ள வைத்தது. அன்பையும் பாசத்தையும் என் இதயத்தில் விதைத்து விட்டு உங்கள் இதயத்தை மட்டும் எப்படி அப்பா உங்களால் கல்லாக்கிக் கொள்ள முடிந்தது?
அம்மாவிற்கும் உங்களுக்கும் இடையே ஏற்பட்ட மனஸ்தாபம் பூதாகரமாய் வளர்ந்து இப்படி விவாகரத்தில் முடியுமென்று நான் கனவிலும் நினைத்து பார்க்கவில்லை. ‘இவளுக்கு அப்பா நீங்கள் அல்ல’ என்று அம்மா ஆவேசமாகக் கத்திக் கூச்சல் போட்ட போது கூட நான் அதைப் பெரிது படுத்தவில்லை. ஆனால் ‘நீ என் பெண்தானா?’ என்ற கேள்விக் குறியோடு என்னை நீங்கள் நிமிர்ந்து பார்த்தீர்களே அதைத்தான் என்னால் தாங்க முடியவில்லை.
பெற்றோருக்குள் ஏற்படும் பிரச்சனைகளால் பிஞ்சுமனங்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகின்றன என்பதை ஏன்தான் பெற்றவர்கள் உணர்ந்து கொள்ள மறுக்கிறார்களோ தெரியாது. என் எதிர் காலத்தை நினைக்க எனக்கே பயமாக இருக்கிறது. எல்லோர் பார்வையிலும் நான் ஒரு கேள்விக் குறியாய்த் தெரிகிறேன். என்னைப் பொருத்தவரை எனக்கேற்பட்ட இந்தப் பாதிப்பு ஒரு மாறாத ரணமாய் என் மனதில் பதிந்து விட்டது.
அப்பா கடைசியாக உங்களிடம் ஒரு வேண்டுகோள்! விஞ்ஞானம் முன்னேறி விட்டது. அம்மா சொன்னது உண்மை என்றால் டி.என்.ஏ ரிப்போட் வந்ததும் நான் உங்கள் பெண் அல்ல என்பது நிரூபணமாகிவிடும். அந்த நிமிடமே நான் உங்களை விட்டு அன்னியப்பட்டு விடுவேன். அப்படி ஒரு நிலைமை ஏற்படுமுன் கடைசியாக ஒரு முறை உங்களைச் சந்திக்க விரும்புகின்றேன். எனக்கென்னவோ உங்கள் தோளில் முகம் புதைத்து மனதில் இருப்பதை எல்லாம் உங்களிடம் அழுது கொட்டித் தீர்க்க வேண்டும் போல இருக்கிறது! உங்கள் பிடிவாதத்தை கைவிட்டு என்னைப் பார்க்க ஒரே ஒரு முறையாவது வருவீர்களா?’
அந்தக் கடிதத்தை வாசித்ததும் அவர் இடிந்து போய்விட்டார். கணவன் – மனைவி பூசல் காரணமாக ஒன்றுமறியாக் குழந்தை வீணாகத் தண்டிக்கப் படுகிறாளே என்று நினைத்தார். விவாகரத்துக் கோரும் அளவிற்கு அவர் என்ன தான் தப்புச்செய்தார்?
கல்யாணமான புதிதில் அவருக்கு ஏற்றமாதிரி நடந்து கொண்ட மனைவி காலப் போக்கில் தன் சுயரூபத்தைக் காட்டத் தொடங்கினாள். சிறிது சிறிதாக அவர்களுக்குள் தொடங்கிய பிரச்சனை குழந்தை பிறந்த பின்பும் தொடர்ந்து விசுவரூபம் எடுத்தது.
அவரிடம் பணம் இருந்தது, அவளிடம் அழகும் இளமையும் இருந்தன. அவளது விருப்பம் இல்லாமல் அவளது குடும்பத்தின் நிர்ப்பந்தம் காரணமாகத்தான் இந்தக் கல்யாணம் நடந்தது என்பது அவளாகச் சொல்லும் வரை அவருக்குத் தெரியாது. ஆனாலும் தனது குடும்ப சூழ்நிலையை மனதில் கொண்டு அவரிடம் உள்ள வசதிகளை அனுபவிப்பதற்காக அவளும் இவ்வளவு காலமும் மௌனமாய் அவரோடு ஒத்துப் போயிருக்கிறாள்.
‘உனக்கு விருப்பம் இல்லாமலா இந்தக் கல்யாணம் நடந்தது?’
‘ஆமா! என்னை ஒரு பெண்ணாய் யாருமே மதிக்கலே! உங்களுடைய பணத்தைக் குறிவைத்து என் ஆசைகளை, என் காதலை, கடந்த காலத்தை எல்லாவற்றையுமே எங்க அப்பா அடமானம் வைத்து விட்டாரே!’ அவள் விசும்பி விம்மலாய் வெடித்தாள்.
‘காதலா…….?’
‘ஆமாம் காதல்தான்! என் காதலனைத் திருமணம் செய்யப்போவதாக நினைத்துத் தான் அவனோடு நான் நெருங்கிப் பழகினேன். ஆனால் விதி தான் உங்கள் உருவத்தில் வந்து விளையாடி விட்டதே! இனிமேலாவது எனக்கு விவாகரத்து மூலமா விடுதலை கொடுங்க…’
‘அப்போ இத்தனை காலமும் என்னோட வாழ்ந்ததெல்லாம்……?’
‘வாழ்ந்தது இந்த மீனாவோட உடம்பு மட்டும் தான், மனசல்ல! இனியும் போலியாய் என்னை நானே ஏமாற்றிக் கொண்டு உங்களோடு வாழ என்னாலே முடியாது. எனக்கு இந்த நரகத்தில் இருந்து விடுதலை வேணும்!’
‘பிரிஞ்சு போகத்தான் வேண்டும் என்றால் அதை யாராலும் தடுக்க முடியாது, ஆனால் நம்ம பெண்ணோட கதி?”
‘நம்ம பெண்ணா? யார் சொன்னது அவ உங்க பெண் என்று?’
‘நீ… என்ன சொல்கிறாய்?’
‘ஆமாம்! திவ்யாவிற்கு அப்பா நீங்க இல்லை!’
”இந்தா பார்! நம்ம குடும்ப வாழ்கையோட விளையாடாதே!’
‘நான் விளையாடலே, ஆனால் அதுதான் உண்மை!’
இடி ஒன்று தாக்கியது போல அவர் அதிர்ந்து போனார்.
‘அப்போ திவ்யா என்னோட பெண் இல்லையா?’
‘இல்லை.
‘பொய்..! என்னை அவமானப்படுத்த பொய் சொல்றே.. பிரியணும்னா போய்த் தொலை.. எதுக்காக இப்படி சித்திரவதை பண்றே..’
‘இப்போ திவ்யா உங்க பெண்ணு இல்லைன்னு நிரூபிக்கணும் இல்லியா..?’
‘கடவுளே!…
‘நிரூபிச்சுக் காட்டறேன்
மனித மனத்தில் விழும் ஏமாற்றப் பள்ளங்கள் குரூரமாக வக்கிரங்களால் நிரம்பிவிடும் போலும்… அவள் அவனை அவமானப்படுத்தவே சதி தீட்டினாள். லீவுக்கு வந்த திவ்யாவைக் கட்டாயப்படுத்தி பரிசோதனைக்கு உட்படுத்தி…
ஹாஸ்டல் விருந்தினர் அறைவாசலில் எதிர்பாராமல் அவரைக் கண்டதும் ஒரு கணம் திகைத்துப் போய் நின்று விட்டாள் திவ்யா. அப்புறம் சமாளித்துக் கொண்டு, ‘நான் உங்களுக்கு ஒரு கடிதம் போட்டேனே கிடைத்ததா?’ என்றாள்.
‘கிடைச்சதும்மா…’
‘டி.என்.ஏ ரிப்போட் இன்னும் வரல்லையா?’
‘வந்திடிச்சு!’
‘வந்திடிச்சா?’
அவள் முகத்தில் ஏமாற்றமும், அதே நேரத்தில் அதன் முடிவை அறிந்து கொள்ளும் தவிப்பும் தெரிந்தன.
‘நினைச்சேன், நீங்க தயங்கி நிற்கும்போதே உங்களுக்கு உண்மை தெரிஞ்சிருக்கும் என்று நினைச்சேன்!’
‘தெரியும்!’
‘அப்போ அம்மா சொன்னது அத்தனையும் உண்மை தானே?’
‘இல்லை, அம்மா சொன்னதில் உண்மையில்லை! அம்மாவிற்கு என்னோடு வாழப்பிடிக்கலை, அதனாலே எனக்குக் கோபமூட்டி என்னிடம் இருந்து விவாகரத்து வாங்கத்தான் அம்மா அப்படிச் சொல்லியிருக்கா!’
‘அப்பா! நீங்க என்ன சொல்லுறீங்க?’
‘டி.என்.ஏ ரிப்போட்டைப் பார்த்தேன்! நீ என்னோட பெண்தான்!’
‘உண்மையாவா…?’
‘ஆமாம்! யார் என்ன சொன்னாலும் நீ என்னோட மகள்தான்!’
‘அப்……பா!’ அந்த ஒரு சொல்லுக்காகவே காத்திருந்தது போல அவள் பாய்ந்து வந்து அவரைக் கட்டி அணைத்து மார்பிலே முகம் புதைத்து விக்கி விக்கி அழுதாள். இன்னும் பெரிதாக நெஞ்சு வெடிக்க ஓலமிட்டு அழவேண்டும் போல அவளுக்கு இருந்தது.
‘அழாதே அம்மா!’ அவர் பாசத்தோடு கண்ணீரைத் துடைத்து விட்டார். சட்டென்று அழுவதை நிறுத்தி, அவள் அவரை நிமிர்ந்து பார்த்தாள்.
‘இனிமேல் நான் அழமாட்டேன், எனக்கும் அப்பா இருக்கிறார்!’ அவள் சந்தோஷமிகுதியால் அவர் கைகளுக்குள் முகத்தைப் புதைத்து வாய்விட்டுச் சிரித்தாள்.
மகளைத் திருப்திப் படுத்திய சந்தோஷத்தோடு அவர் வீடு திரும்பினார். வீடு வந்ததும் முதல் வேலையாக பிரித்துப் படிக்கப்படாத அந்த டி.என்.ஏ ரிப்போட்டை அப்படியே கவரோடு சேர்த்துக் கிழித்துக் குப்பைத் தொட்டியில் போட்டார். மனம் அமைதியாக இருந்தது. இந்த அமைதிக்காக அவர் கொடுத்த விலைகூட அதிகமாகத் தோன்றவில்லை. மீனா கோரிய விவாகரத்தில் பரஸ்பர சம்மதம் என்று மறுபேச்சின்றி கையெழுத்து போட்டுக் கொடுத்திருந்தார்.
பதிலுக்கு அவளும் டி.என்.ஏ அறிக்கை முடிவை திவ்யாவிடம் வெளியிடுவதில்லை என்று வாக்குறுதி அளித்திருந்தாள். விவாகரத்து வழக்கு முடிய சிறிது காலம் ஆகலாம்… ஆனால் திவ்யாவின் நிம்மதி ஆயுட்காலத்திற்கும் நீடிக்கும்.
குழந்தையின் மனதைப் புரிந்து கொண்டு, எந்தக் குற்றமும் செய்யாத அந்தக் குழந்தையை, நீ என் குழந்தைதான் என்று ஏற்றுக் கொண்ட தந்தைமையின் உயர்வைக் காட்டிய விதம் மிக மிகச் சிறப்பு.
இந்த இடத்திலேயே கதையின் முடிவை ஊகித்துவிட முடிகிறது.
அதற்கு அடுத்தாற்போல்
பிரித்துப் படிக்கப்படாத அந்த டி.என்.ஏ ரிப்போட்டை அப்படியே கவரோடு சேர்த்துக் கிழித்துக் குப்பைத் தொட்டியில் போட்டார்.
என்று எழுதவே வேண்டியதில்லை.
சிறுகதையின் தொடக்கம் முதல் எழுதப்பட்டிருக்கும் எழுத்து நடை மிக மிக அருமை.
சொல்லாடல்கள் மிகவும் சக்தியுடையதாக அமைந்துள்ளன.
மனதில் நிற்கும் சிறந்த கதைகளில் இதுவும் ஒன்று.
வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
ஜூனியர் தேஜ்
“மற்றவரிடம் கொள்ளும் அன்பாக இருக்கட்டும், உங்கள் தோட்டத்தில் மலரும் பூக்களாகட்டும், வாழ்வில் நீங்கள் அடையும் வெற்றிகளாகட்டும். தகுந்த சூழ்நிலையை உருவாக்கத் தவறிவிட்டால், அவை நிகழ்வதில்லை. ஒரு மலரை உருவாக்குவதைவிட, அதற்கான தகுந்த சூழ்நிலையை உருவாக்குவதற்கே நாம் முனைய வேண்டும்.”
ஒரு மலரை உருவாக்குவதைவிட, அதற்கான தகுந்த சூழ்நிலையை உருவாக்குவதற்கே நாம் முனைய வேண்டும்.”
நல்லதொரு கருத்தைக் குறிப்பிட்டீர்கள். உங்களின் இந்த வரிகள் ஒரு மலரை உருவாக்குவதைவிட, அதற்கான தகுந்த சூழ்நிலையை உருவாக்குவதற்கே நாம் முதலில் முனைய வேண்டும்.” என்றிருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்
குரு அரவிந்தன்.
பதினைந்து வருஷ பெண் வளர்ப்பு எளிதில் மறையக் கூடியதில்லை.அப்பா மகள் உறவு என்றும் மாறாது.
Test செய்யதபின் அப்பாவின் மகளாக முடியுமா? என்ன? எத்தனை வளர்ப்புக்கு குழந்தைகள் நாட்டில் வளர்கின்றன, ஒரு 15 வயது பெண்ணின் மனநிலையில், ஒரு சான்றிதழ் தான் நிர்ணயம் செய்யும் நான் இவர் மகள் என்று என்பதை, அந்த வயதின் அதி மடத்தனமே தவிர, வேற என்ன! அவளின் அறியாமையின் கதையாகவே என் மனிதில் பதிகிறது…
வணக்கம். உங்கள் அனைவரின் கருத்துப் பரிமாறலுக்கும் நன்றி. இந்தக் கதை எங்கோ ஓரிடத்தில் உங்கள் மனதைச் சீண்டியிருக்கின்றது. 15 வயதேயான ஒரு சிறுமியின் மனநிலையைப் புரிந்து கொள்ளவது மிகவும் கடினமானது. பெற்றோர்கள் ஒரு சினேகிதியாக அவளோடு பழகுவதன் மூலம் மட்டுமே அவளைப் புரிந்து கொள்ள முடியும். பதும வயதில் ஏற்படும் மாற்றங்கள், நல்லதோ கூடாததோ அதுதான் அவளது எதிர்காலத்தை நிர்ணயிக்கும்.
அருமையானா கதை.
Pirikka Padamal Kizhitherintha Kaditham Manathai Pirithu Kizhithuvittathu Arumai
Sirappu
This story has been filmed as short film Uravum Unarvum. for
kalaignar Tv.- Naaleiya Iyakkunnar – Epi-12
You could watch at site: Youtube.com
Thanks Praveen
நல்ல கதை ……. முடிவு அருமை , வாழ்வில் இது போன்ற நிகழ்வுகள் , நெகிழ்வுகளே .
எதிர்பார்த்த முடிவு தான் என்றாலும் எழுதிய விதம் அருமையாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.
நன்றாக இருக்கிறது . வாழ்த்துகள்
குரு அரவிந்தன்
நன்றி
குரு அரவிந்தன்