ஒருத்தியின் நெஞ்சம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 2, 2021
பார்வையிட்டோர்: 3,412
(1976ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
“கௌரி உன்னைப் பெண் பார்ப்பதற்கு வருகிற திங்கட்கிழமை ஒருவர் வருவார்.”
கௌரியின் அண்ணா துடிப்போடு தான் சொன்னான்.
ஆனால் கௌரிக்கு அந்தச் செய்தி எத்தகைய இதய எழுச்சியையும் ஏற்படுத்தவில்லை.
அவளின் இருபதாவது வயதில் தொடங்கிய இந்தத் திருமண ஏற்பாடுகள் இப்போது அவளுக்கு முப்பத்தொரு வயதாகப் போகிறது – இன்னமுந்தான் முடிந்த பாடில்லையே.
அழகிய மலர்களைப்போல் ஆயிரக்கணக்கான பருவக் கனவுகள் கௌரியின் நெஞ்சிலும் அரும்பத்தான் செய்தன. ஆனால் அந்தக் கனவுகளைச் சாஸ்திர சம்பிரதாயங்களும், சமூகக் கெடுபிடிகளும், வறுமையும் ஒன்று சேர்ந்து சாகடித்து விட்டன.
“எல்லாம் விதியின் கையில், நம் கையில் என்ன இருக்கிறது?”
கௌரியின் மாமா முறையான சின்னத்தம்பி மாஸ்டர் அவள் திருமணப் பேச்சுகள் முறிவுற்றவுடன் மேற்கண்டவாறு திருவாய் மலர்ந்தருள்வார்.
“கௌரி ஏழுச் செவ்வாய்க்காரி. உங்களிடம் சீதன வசதியும் இல்லை. ஆனபடியால் காலம் சரிவரும் போது தான் கல்யாணமும் சரிவரும்”.
பாஸ்கரக் குருக்கள் இதே பல்லவியை எத்தனை வருடங்களாகப் பாடி வருகிறார்?
பாவம் கௌரி, அவளுக்குப் பதினேழு வயதாக இருக் கும்போது தான் தன் தாயைக் காசதோய்க்குப் பலி கொடுத்து விட்டாள்.
பின் – அவள் தந்தையும், தமையனுந்தான் அவள் உறவுகள்.
கொரியின் தந்தை அவளின் இருபத்தெட்டாவது வயதில் கௌரியை மணமகள் கோலத்தில் பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கத்துடன் உயிரை விட்டார்.
பிறகு அவள் திருமணப்பொறுப்பு அண்ணன் தலையில் விழுந்தது.
அவனும் தான் எத்தனை வழிகளால் முயன்றான் முயலுகிறான் ஆனால் முடிவுதான் சாதகமாக வரவில்லை.
கௌரியின் அண்ணா ஒரு அச்சுக்கூடத்தில் பணியாற்றி வந்தான். அதே அச்சுக்கூடத்தில் வேலை செய்த ஒருவன் அவள் அண்ணாவின் நண்பனானான். பின் அந்த நட்பின் பின்ணணியில் அந்த நண்பனின் தங்கைக்கும் அண்ணாவுக்கும் காதல் அரும்பித் திடீர்க்கல்யாணமும் நடைபெற்றுவிட்டது.
இப்போது கௌரி தன் அண்ணாவின் நிழலிலும் அண்ணியினதும், அண்ணாவின் இரு பிள்ளைகளது அன்பின் துடிப்பினிலும் தன் காலத்தைக் கழிக்கிறாள்.
அவன் நெஞ்சிலே இறந்தகால நினைவுகளே எப்போதும் பொங்கி வரும்.
கௌரியின் ருதுசோபன விழாவின் போது – இற்றைக்கு பதினைந்து வருடங்களுக்கு முன் அவள் பள்ளித்தோழி சுசி. “உனக்கு சீக்கிரம் திருமணம் நடக்கும். சகல மங்களங்களும் உண்டாகும்” என வாழ்த்தினாள். நடந்ததென்ன?
அவள் – சுசி ஒரு எக்கவுண்டனை மணம் முடித்து, ஆறு பிள்ளைகளைப் பெற்று மகிழ்ச்சியாக இருக்கிறாள்.
கௌரியோ ஏக்கத்தின் மடியிலே, ஏமாற்றத்தின் துணையிலே துவள்கிறாள்.
“என்ன இருந்தாலும் கெளரியைப் போல் மனச் சலன மில்லாத, அடக்க ஒடுக்கமான பெண்களைக் காணமுடியாது. அந்தச் சொக்லேட் கொம்பனி மனேஜர் ராஜா தொடக்கம், பீப்பிள்ஸ் பாங் ஒப்பீசர் ஆனந்தன் வரை எத் தனை பேர் அவனைக்கண்டு தெருவில் பல்லைக் காட்டப்பார்த் தும் கௌரி மசியவில்லையே! அவள் கற்புத் தெய்வம் கண்ணகி”.
இப்படியான பேச்சுகள் கௌரி காதிலே எட்டும் போது அவளுக்கு அளவுகடந்த எரிச்சலாக இருக்கும்.
சாஸ்திரங்களின் சகதியிலே – பண்பாட்டின் பலிபீடத்திலே தன் ஆசாபாசங்களைப் பலியிடுவதனை அவள் ஆத்மா விரும்பவே இல்லை.
ஆனால் –
அவள் அண்ணா, அவன் மனைவி மக்கள் இவர்களோடு வாழும் அவளால் – மற்றவர்களின் சொந்த விஷயங்களை விமர்சிப்பதனையே வாழ்வாகக் கொண்ட ஒரு முட்டாள்ச் சமூகத்தின் முன்னிலையிலே வதைபடுகின்ற அவளால் தன்னிச்சையாக நடந்து கொள்ள முடியாது இருந்தது.
ஒரு ராணுவ வீரனைப்போல மிடுக்கான நடையோடு நடந்து போகும் சொக்லேட் கொம்பனி மனேஜர் ராஜா, கோயிலுக்குப் போகும் அவளைப்பார்த்துச் சிரிக்கமுயலும் போது…
அப்பப்பா அவள் நெஞ்சிலே எத்துணை சந்தோஷம்!
அவள் –
ராஜாவின் கம்பீரமான புன்னகைக்குப் பதிலாகத் தானும் ஒரு மெல்லிய புன்னகையை உதிர்க்கவே விரும்பினாள். ஆனால் வில்லங்கம் தரும் விமர்சனங்களைச் சந்திக்கவேண்டி வருமே என்ற தவிப்பு அவளை ‘நாணம்’ கொண்டு தலையைக் கவிழ்க்கச் செய்து விடும்.
அந்த பாங் ஒப்பீசருக்குத்தான் என்ன குறை?
சந்திரிகா போன்ற வதனம். பித்தாக்கும் விழிகள், கனிவான புன்னகை இவை எல்லாம் அவனுக்கிருந்தது.
அவனுடைய ஆவலுக்குத் தன்னை அர்ப்பணிக்கும் எண்ணம் கௌரிக்கிருத்தது.
ஆனால் சமூகம்?
கௌரி தன் உணர்ச்சிகளை அமுக்கிக் கொள்வாள்.
இப்படியாக அவள் விரும்பியவர்களும், அவளை விரும்பியவர்களும் மிகப்பலர் தான்.
அந்தப் பரிதாபத்திற்குரியவளின் ஆசைகள் ஊமைக் கனவாக ஒடுங்கிப்போயின.
கௌரி வாழ்வில் ஒரு சம்பவம் – அது ஐந்து வருடங்களுக்கு முன் நடந்தது.
கௌரியின் மாமி முறையான பொன்னம்மாவும் அவள் மகள் நளாயினியும் அவள் வீட்டில் இருநாட்கள் தங்கியிருந்தார்கள்.
நளாயினி தங்கச்சிலையாகத் திகழ்ந்தாள்.
அவளுக்குப் பதினாறு – அல்லது பதினேழு வயது தானிருக்கும்.
கௌரி மீது நளாயினிக்குத் தனி அன்பு.
கௌரிக்கு அவள் மீது…
தற்செயலாகக் கௌரியும், மகள் நளாயினியும் தான் விரும்பாத ஒரு சூழ்நிலையில் இருப்பதனைக் காண நேர்ந்தது கௌரியின் மாமி.
“அடி மூதேவி நீயும் ஒரு பெண்ணா?” – கௌரியை ஏசிய மாமி நளாயினியை அழைத்துக்கொண்டு ஆத்திரம் வந்தவளாக அன்றே தன் ஊர் போய்விட்டாள்.
நல்லவேளை இந்த விஷயம் பகிரங்கப்படுத்தப்படாமல் அமிழ்ந்து போயிற்று.
“யாருக்குத் தெரிந்தால் தான் என்ன? ஒருவர் தன் இஷ்டப்படி நடக்க ஏன் பயப்படவேண்டும்?”
இப்படியாக ஒரு ஆவேஷம் கௌரிக்குத் தோன்றும். அடுத்த கணமே….சமூகம், உறவினர் இந்த நினைவுகள் அவளை ஊமையாக்கிவிடும்.
அந்தத் திங்கட்கிழமை வந்தது. சின்னத்தம்பி மாஸ்டர், அண்ணா ஆகியோருடன் நாற்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒருவர் வந்தார்.
கௌரி ஆளைப் பார்த்தாள், “பரவாயில்லை…மதிக்கத்தக்க தோற்றம் கொண்டவர்தான்.”
கல்யாணப் பேச்சுக்கள் ஆரம்பமாயின. பேச்சுக்கள் வழமைபோல அன்றி வெற்றியாக முடிந்தன.
கௌரியின் அண்ணன், அண்ணி, உறவினர், யாவர்க்கும் பரம சந்தோஷம்.
அவளுக்கு?
மகிழ்ச்சி ஏற்பட்டது தான். ஆனால் துடிதுடிப்பு இல்லாத மகிழ்ச்சி அது.
கௌரியின் திருமணம் நடந்தது. திருமண இரவு, அவள் எதிர்பார்த்தது என்னவோ?
ஆனால்,
விடை விசனத்திற்குரியது தான்.
கௌரிமீது கணவனுக்கு உயிர். “கௌரிக்காக நான் எதனையும் செய்வேன்” என்கின்ற கணவன் நல்லவர் தான், அவள் அன்பிற்காக உயிரையே கொடுக்கக் கூடியவர்தான்.
இருப்பினும் –
எந்த ஒரு பெண்ணும் ஆணிடம் எதிர்பார்க்கும் சுகம் இருக்கிறதே, அந்த சுகத்தை அவளுக்கு அவரால் பூரணமாகக் கொடுக்க முடியவில்லை.
அவள் எதிர்பார்ப்புகள் பூஜ்யமாகிவிட்டன. அவளுக்கு ஒரே வேதனை.
அவள் அழுதாள், ‘சீ! ஏனிந்தச் சீவியம்” என எண்ணினாள்.
காலம் ஓடியது.
அது ஒரு ஓகஸ்ட் மாதம். அவள் கணவனின் தம்பி மகன் கோபு அவள் வீட்டுக்கு லீவுக்கு வந்து இருந்தான்.
அவன் கௌரியோடு “பெரியம்மா, பெரியம்மா” என்று அன்போடு பழகுவான்.
சுருண்டகேசம், பிரகாசமான நயனங்கள், துடிப்பான புன்னகை கோபு ஒரு பேரழகன் தான்; அவனுக்கு வயது பதினெட்டு.
அவனைப் பார்த்துக் கொண்டிருப்பது கௌரிக்கு ஒரு அழகிய சொர்க்கத்தைத் தரிசிப்பது போல் இருக்கும்.
ஒரு நாள் பகல்; கணவன் இல்லை.
கௌரியிடம் கோபு சுவையாகப் பேசிக்கொண்டிருந்தான்.
கொழும்புக் கல்வியும், நாகரிகமும் கோபுவுக்கு வயதுக் கதிகமான அறிவைக் கொடுத்திருந்தது.
தனக்குப் பஸ் பிரயாணத்தின் போது அறிமுகமான சிங்கள மாணவி அநுராவின் கண்கள், தங்கள் வீட்டிற்கருகில் வாழும் முஸ்லீம் அழகரசி பாத்திமாவின் அற்புதமான புன்னகை, நவீன இசை நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்துத் தன்னை மயக்கிய பேர் தெரியாத சிங்காரியின் நிலவுமுகம் இவற்றின் அனுபவங்களை எல்லாம் கோபு பரவசமாகப் பெரியம்மா கௌரியிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.
கௌரியோ இனந்தெரியாத – கட்டுப்படுத்த முடியாத தவிப்பின் பிடியிலே தடுமாறினாள்.
ஆம், மோகம் அவள் நெஞ்சில் ராகம் இசைத்தது.
தவிப்புகள்,
துடிப்புகள்,
அவை – ஓ
ராயிரமாய் அவள் நெஞ்சில் பொங்கி வழிந்தன.
“கோபு”
“சொல்லுங்கள் பெரியம்மா”
“…”
“பேசுங்கள் பெரியம்மா”
கோபு பரிவோடு பேசினான்.
“உன் அழகு என்னை பித்தாக்குகிறது கோபு”.
“பெரியம்மா”
இருவரும் ஒருவர் கையை ஒருவர் பிடித்தபடி அறைக்குள் போனார்கள்.
அந்த அறையில் இரண்டு இதயங்கள் ஆனந்த ஊஞ்சலாடின.
அப்போது –
கௌரியின் கணவர் அறைக்குள் நுழைந்தார்.
“அடி பாதகி, நீயொரு பெண்ணா?”
கௌரி ஒரு கணம் திகைத்தே விட்டாள்.
மறுகணம் –
“நீர் மட்டும், ஒரு ஆண்மையுள்ள ஆணா? ஒரு பெண்ணின் உணர்ச்சிகளை தீர்த்துவைக்க முடியாத நீர் திருமண பந்தத்திற்கே மாசு கற்பித்த மகாத் துரோகி”
கௌரி ஆக்ரோஷமாகக் கத்தினாள்.
கணவன் ஸ்தம்பித்துப்போய் நின்றார்.
கோபு அறையை விட்டுப் பாய்ந்தோடினான்.
கௌரியும் கணவனும் ஒருவரை ஒருவர் விழுங்குவது போல பார்த்துக் கொண்டு நின்றார்கள்.
கணவன் பேசினார்:
“அடி கேடு கெட்டவளே, இந்த நிமிடமே நீ இந்த வீட்டை விட்டு ஓடிப்போ. யாருக்காவது உடலை விற்றுச் சீவியத்தை நடத்து”.
“நான் போகிறேன்; ஆனால் ஒன்று, உணர்ச்சிகள் அற்ற ஒரு ஜடத்தைக் கணவனாகப் பெற்று ஆத்மாவைக் கல்லறை ஆக்கி கல்லானாலும் கணவன் என்ற உதவாக்கரைத் தத்துவத்தில் உழல்வதைவிட ரோட்டில் போகிற ஆண்மையுள்ள அத்தியனுக்கு என்னைக் கொடுத்து வாழ்வது மேலான வாழ்க்கைதான்”.
படபடவென்று பேசிய கௌரி வெறிபிடித்தவளைப் போல் வீட்டைவிட்டுப் போனாள்.
அவள் குற்றவாளியா?
இதயமுள்ள மனிதர்களே நீங்கள் சொல்லுங்கள்.
அவள் குற்றவாளியா?
உளவியல் ரீதியாகப் பிரச்சனைகளை ஆராயத் தெரிந்த அறிஞர்களே நீங்கள் சொல்லுங்கள்.
அவள் குற்றவாளியா?
இல்லை அல்லவா?
– விஜயேந்திரன் கதைகள், முதற் பதிப்பு: ஜனவரி 1976, நயினார் பிரசுரம், மாவிட்டபுரம்