ஐஸ் காக்கா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 12, 2025
பார்வையிட்டோர்: 317 
 
 

(1977ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஐஸ் காக்காவின் நெஞ்சமெல்லாம் ஐஸ் தூள்!

அவர் மனம் அவரிடம் இல்லை!

அது மூவாயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் பறந்து சென்று பழைய நினைவுகளில் ஒன்றித்திளைத்துக் கொண்டிருந்தது.

அம்மகிழ்ச்சியில்தான் காக்காவின் கட்டை, ஐஸ் வண்டியைத் தள்ளிக்கொண்டு சென்றது.

“கட… கட…கட…”

“கிணிங்… கிணிங்…”

“பீப்…… பீப்…”

“கட கட கட… “

“பீப்… பீப்…”

“கிணிங்… கிணிங்…”

ஐஸ் வண்டி கட கட ஒலி எழுப்பிக்கொண்டே புதிதாகக் கப்பிபோட்ட சாலையில் சென்றது. வண்டியில் உள்ள பானக்குப்பிகள் ‘கிEங் கிணிங்’ என்றும், சாலையில்சென்ற ஊர்திகள் ‘பீப்… பீப்…’ என்றும், மிதி வண்டிகள், “கிணிங்… கிணிங்…” என்றும் ஒலி எழுப்பின. அவற்றின் ஒலி காக்காவின் உணர்வலைகளுக்கு இசையாக அமைந்தது.

“பீப்…பீப்…”- நீண்டு அழுத்தமாக ஒலித்தது.

உணர்வுபெற்ற ஐஸ் காக்காவுக்குத் தாம் சிங்கப் பூர்ச் சாலையில் செல்வது நி னைவுக்குவந்தது. போக்கு வரத்துக்கு இடம் கொடுத்தபடி முச்சக்கர ஐஸ் வண்டி யைத் தள்ளிக்கொண்டு சென்றார். இருந்தாலும்’கிணிங் கிணிங், பீப் பீப், கிணிங் கிணிங்’ ஒலி சேர்ந்துதான் ஒலித்தது.

சாலைச் சந்திப்பு.

ஐஸ் வண்டி ஒரு மூலையில்போய் நின்றது. ஐஸ் தேர் நிலைகுத்தியதும் காக்கா மடித்துக்கட்டியிருந்த கயிலியை இறக்கிவிட்டுத் தளர்த்திக் கட்டிக்கொண்டார்! தலை யில் கைக்குட்டையை மடித்துக் கட்டிக்கொண்டு வண்டி உருளாமல் இருக்க கட்டைகளை எடுத்து மூன்று சக்கரங்களுக்கும் முட்டுக்கொடுத்தார்.

இழைப்புளிக் கட்டையில் நீர்விட்டுக் கழுவினார். இழைப்புளியை ஐஸ் இழைப்பதற்கு ஏதுவாக கீழே தட்டி சமப்படுத்தினார். பிறகு கட்டையில் ஐஸ்கட்டி யை எடுத்துவைத்து அதன் மேல் சிறிய துவாலையை நான்காக மடித்துப் போட்டார்.

வண்டிக்கு மேலே இரு பக்கவாட்டிலும் அடுக்கப்பட்டிருந்த பானக் குப்பிகள் நகர்ந்திருந்தன. வண்டி தள்ளிக்கொண்டு வரும்போது ஏற்பட்ட அசைவில் அவை நகர்ந்திருந்தன. அவற்றை ஒழுங்காக அடுக்கி வைத்தார்.

தேங்காய்ப் பால் ஆடிப்பானையில் முக்கால் பானை அளவு இருந்தது. அதில் கிடந்த ‘சென்டோல்’ சிறுசிறு பச்சைநிற மீன்குஞ்சுகளை நினைவு கூர்ந்தது. மாவில் செய்த சென்டோல் இருந்த அந்தப் பானையைத் திறந்தார். மரத்தூளிலிருந்து எடுத்த ஐஸ்கட்டியைக் கழுவி விட்டு அதில் போட்டார்! என்ன வியப்பு பச்சை நிற மீன்குஞ்சு ஓடியது!

வேலைகளைச் செய்துவிட்டு ஊதுவத்தியைக் கொளுத்தினார்.

“காக்கா பத்துக்காசுக்குச் சென்டோல் போடுங்க” சாலையில் குழிபறித்துக் கொண்டு நின்றவர் வந்து கேட்டார். அவர்யாருக்கும் குழிபறிப்பவர் இல்லை; மின்வடம் போட குழிபறிப்பவர்.

காக்கா ஆடிக்குவளையை எடுத்தார். இழைப்புளிக் கட்டையிலிருந்த ஐஸ்சை இழைத்தார். ஆடிக்குவளையில் ஐஸ்தூள் முக்கால் குவளை வந்தது. அதில் தேங்காய்ப் பால் கலவையை ஊற்றி சர்க்கரை நீர் சேர்த்துக் கொடுத்தார். வந்தவர் வாங்கிப் பருகிவிட்டு பத்துக்காசைக் காக்காவிடம் கொடுத்தார். காக்கா, “பிஸ் மில்லா” என்று சொல்லியவாறு கல்லாவில் பத்துக்காசைப் போட் டார். பத்துக் காசு கைக்கு வந்ததும் காக்காவுக்கு ஒரே மகிழ்ச்சி. அம்மகிழ்ச்சியில் வண்டியின் மேல் தட்டில் (பலகையில்) வைத்திருந்த பீடிக்கட்டை எடுத்து அதில் ஒரு பீடியை உறுவினார். அடுத்த நொடியே பீடி வாயில் புகைந்துகொண்டிருந்தது. சுருள் புகை காக்காவின் மனத்தைப்போல மேல் நோக்கிப் பறந்துகொண்டிருந்தது.

“கட கட கட் கட கட கட்…”

“பீப்… பீப்…”

“கிணிங்… கிணிங்…”

ஒலிகள் மாறி மாறியும், ஒன்று கலந்தும் ஒலித்தன. ஆனால் கட கட என்று ஒலித்தது ஐஸ் வண்டி இல்லை. பழைய இரும்பு, தகரக்குவளைகள் பொறுக்கும் சீனக்கிழ வரின் வண்டிதான் வந்துகொண்டிருந்தது. சட்டையோ, பனியனோ அணியாத அவர் உடம்பு தமிழரை நினைவு படுத்தியது. கறுப்பு முழுக்கால் சட்டை மட்டுந்தான் போட்டிருந்தார்.

ஐஸ்காக்கா வண்டியை நெருங்கியதும், “ஏய் என்ன செய்தி, வியாபாரம் நடந்திடுச்சா?” என்று மலாய் மொழியில் வினவினார். ஐஸ் காக்காவுக்குக் கோபம் வந்துவிட்டது.

“ஏய் உனக்கு மூளை இருக்கா. இப்போதுதான் நான் வந்திருக்கிறேன். அதற்குள் கடன் சொல்லிவிட்டு ஐஸ்நீர் குடிக்கப் பீடிகையா போடுகிறாய். போ… போ… போய் முதலில் வேலையைப் பாரு” என்றார் காக்கா. சீனக்கிழவர் சிரித்துக்கொண்டே “அது எனக்குத் தெரியும்; நீ உன் வேலையைப் பாரு” என்று சொல்லிவிட்டு நிறுத்தியிருந்த வண்டியைத் தள்ளினார். மீண்டும் கட கட ஒலி. காக்கா வுக்கும் சிரிப்பு வந்துவிட்டது. கோபப்படுவதைப்போல் காட்டிய முகத்தில் புன்னகை மலர்ந்தது. “நீ போ” என்று அழுத்திச் சொன்னார்.

விளையாட்டுப் பேச்சுக்கிடையில் காக்கா பீடியின் அடித்துண்டைக் கடித்துத்துப்பத் தவறவில்லை.

நீண்டநாள் பழக்கமுள்ள இருவரும் விளையாட்டாக மட்டும் பேசிக்கொள்வதில்லை. சில சமயங்களில் கை களால் கூட அடித்து விளையாடுவர். அந்த அளவுக்கு நெருக்கம்.

“சென்டோல்”

வாண்டுவின் குரலில் தேன் சொட்டியது.

இழைப்புளிக்கட்டைக்குக் காக்காவின் கை சென்றது.

‘கர்புர் கர்புர்’என்று ஐஸ் தூளாக விழுந்தது. அதை ஆடிக்குவளையில் போட்டு பழச்சாறு ஊற்றி பிள்ளை யிடம் கொடுத்தார். பிள்ளை பத்துக்காசு கொடுத்தது. அதை வாங்கி கல்லாவில் போட்டார். இந்த முறை அவர் ஒன்றும் சொல்லவில்லை. பத்துக்காசு கைக்கு வந்த தும் எல்லாவற்றையும் மறந்து விடும் மாந்தர்சிலர் செயலை அவர் செயல் நினைவுகூர்ந்தது.

“ஐஸ் பால் மாமா”

யாரோ காக்காவுக்கு உறவினர்கள் ஐஸ் பால் கேட் கிறார் என்று நினைக்க வேண்டாம். மலாய்ச்சிறுவன்தான் அன்போடு அப்படிக் கேட்டான் ‘மாமா’ என்று அழைப் பது அவர்கள் பண்பு; பழக்கமும் கூட.

காக்கா, “போலே” என்றார்.

‘சரி’ என்ற காக்காவின் வலக்கை ஐஸ்கட்டியை இழைத்துக்கொண்டிருந்தது. சற்றுநேரத்திற்குள் இடக்கை நிறைய பஞ்சுபோல் ஐஸ். ஒரு சிறு பனிமலை யே அவர் கையில் இருந்தது. அதில் சிறு பள்ளம் பறித்தார். அவித்துவைத்திருந்த தட்டைப் பயற்றிலும், சென்டோலிலும் கொஞ்சம் எடுத்து பள்ளத்தில் வைத்தார். மறுபடியும் ஐஸ் இழைத்தார். மீண்டும் இமயம் அவர் கையில் இருந்தது. அதைப் பந்தாக உருட்டினார். சிவப்பு, பச்சை நிறங்களில் இருந்த சர்க்கரைப் பாகைத் தெளித்தார். ஐஸ் உலகம் பலவண்ணப் பந்தாக காட்சியளித்தது. காசும், ஐஸ் பந்தும் கைமாறியது. மலாய்க் காரப் பையன் வாயெல்லாம் பல்! மகிழ்ச்சியோடு வாங்கி அதை உறிஞ்சியவாறு நடந்தான்.

மற்றொரு சீனச்சிறுமி வந்தாள். குயில் குரலால் சென்டோல் கேட்டாள். அடிக்கடி சென்டோல் வாங்கும் அவளுக்குக் காக்கா கொஞ்சம் தட்டைப் பயறு கூடவே போட்டு தேங்காய்ப்பால் ஊற்றிக்கொடுத்தார்.

வெயில் ஏற ஏறச் சூடும் ஏறியது. வியாபாரமும் சூடு பிடித்தது.

“என்ன வெயில் என்ன வெயில் இப்படிக் கொளுத்துகிறதே!” பலர் வாய் முணுமுணுக்கிறது.

“காக்கா ஐஸ்”

“காக்கா சென்டோல்”

“எலுமிச்ச நீர்”

“நன்னாரி”

“ஆரஞ்சு” இப்படிப் பலரும் கேட்டனர். காக்கா காகத்தைப்போல் பறந்தார். ஒருவர் துன்பம் மற்ற வர்க்கு இன்பமாகவும், சிலர் துன்பம் பலருக்கு இன்ப மாகவும் இருக்கத்தான் செய்கிறது. இது மனநிலையைப் பொருத்ததுதான். ஐஸ் காக்காவுக்கும் வெயிலின் கொ டுமை தெரிகிறது. ஆனால் வியாபாரம் நடப்பதைப் பார்த்து அவர் மகிழ்ச்சி அடைந்தார். வெயில் நல்லா அடிக்கட்டும் என்று மனத்திற்குள் சொல்லிக் கொண்டார். ஐஸ் கடைக்கு நேர் எதிரில் போட்டிருந்த காப்பிக் கடைக்காரக் காக்கா, கடையில் ஈ ஓட்டிக்கொண்டிருந்தார். அவர் உடலும் உள்ளமும் புழுங்கிக் கொண்டிருந்தன. வெயிலைத் திட்டிக் கொண்டிருந்தார். ஐஸ் காக்காவைப் பார்க்கும்போது அவர்க்குப் பொறாமையாக வேறு இருந்தது

‘கிணிங்’ மிதிவண்டியின் மணி ஒலி. அஞ்சல்காரர் வண்டி வந்து நின்றது முடங்கல் வந்திருந்தால் காக்கா விடம் கொடுத்துவிட்டுப் போவதும், சில சமயம் குளிர் நீர் பருகிவிட்டுச் செல்வதும் வழக்கம். அன்று குளிர் நீர் பருகச் சென்றார்.

அவரைக் கண்டதும் காக்காவுக்கு ஒரே மகிழ்ச்சி இன்று ‘கத்து வந்திருக்கும் போலிருக்கு’! என்று எண்ணி யவாறும், பழச்சாற்றுக் குப்பியை எடுத்துத் திறந்த வாறும், “மடல் வந்திருக்கிறதா” என்று அஞ்சல்காரரை நோக்கி வினவினார்.

அஞ்சல்காரர் “யா” என்றபடி மடலை எடுத்துக் கொடுத்தார். காக்கா ஈரக்கையோடு முடங்கலை வாங்கிக் கொண்டு குளிர் நீரை அஞ்சல்காரரிடம் கொடுத்தார்.

அஞ்சல்காரர் குளிர் நீர் பருகிவிட்டு காசு கொடுக் கும்போது காக்கா “வேண்டாம்” என்றார்.

“இது வியாபாரம்” என்று அஞ்சல்காரர் சொல்லிய படி காசைப்போட்டார். அடுத்த நொடியே மிதிவண்டி பறந்தது.

காக்கா முகத்தில் அல்லி பூத்தது. மடலைத்திருப்பிப் பார்த்தார். காக்காவின் மனம் படிக்கத் துடித்தது.

குளிர் நீர் குடிக்க வந்தவர்களையும் பொருட்படுத் தாமல் காக்கா மடலைப்பிரித்து படிக்கத் தொடங்கினார்.

வயிறு குளிர குளிர் நீர் குடிக்க வந்தவர்கள், “சுருக் காக்கொடுங்க” என்றும். “எனக்கு வேலை இருக்கு நான் போக வேண்டும். சென்டோல் கொடு” என்றும் கேட் டனர். அதுகாக்கா காதுகளில் விழுந்தது. ஆனால் அது அவருக்குப்புரியவில்லை. ஒருமனத்தோடு காக்கா கடிதத் தைப் படித்தார். அவர் முகம் மறு நொடியே வாடியது முடங்கலைத் தூக்கிப் போட்டுவிட்டு வந்தவர்களுக்குக் குளிர் நீர் கொடுத்தார். எப்போதும் அவர் கொடுக்கும் சென்டோலுக்குத் தனிச் சுவை இருக்கும். ஆனால் அன்று இல்லை! வந்தவர்கள் காக்காவைச் சிறிது சினக்குறியோடு பார்த்துவிட்டுச் சென்றனர்.

காக்கா சோகத்தோடு நின்றிருந்தார். அப்போது ‘கடகட’ என்று வண்டி ஒலி கேட்டது. வேறு யார் வண்டியும் இல்லை. சீனக் கிழவரின் வண்டி தான் அது.

காக்கா ஐஸ் வண்டிக்கு அருகில் வந்ததும் “ஏய்” காக்கா இன்னிக்கு உனக்கு நல்ல வியாபாரம் நடந்திருக்குமே! நல்லா வெயில் அடிக்குதே” என்றவாறு கடகட ஒலி எழுப்பிய வண்டியை நிறுத்தினார்.

காக்கா அவனை முறைத்துப் பார்த்தார். இருந்தாலும் அவரால் கவலைக் குறியை மறைக்க முடியவில்லை. காக்காவின் கவலை தோய்ந்த முகத்தைப் பார்த்ததும் பகடியாகச் சிரித்த சீனக் கிழவரின் முகமும் மாறியது. எப்போதும் கிண்டல் செய்பவர் இன்று இப்படிப் பார்க்கிறாரே என எண்ணினார். அவர் அருகில் சென்று “என்ன தவக்கே (முதலாளி) ஏன் என்னவோபோல் இருக்கிறே?” என்று வினவினார்.

“ஒன்றுமில்லை”- சலிப்போடு காக்கா தலையை ஆட்டினார். அவர் கை வேலை செய்யத் தொடங்கியது. ஆடிக் குவளையில் சீனக்கிழவர்க்கு ஐஸ்போட்டு சென்டோல் கலந்த தேங்காய்ப்பால் ஊற்றிக் கொடுத்தார். சென்டோல் என்றால் அவருக்கு விருப்பம். சீனக்கிழவர் அதை வாங்கியபடி “சும்மா சொல்லு காக்கா! ஏன் கவலையாக இருக்கிறாய்?” என்று இரக்கத்தோடு கேட்டார்.

“சொல்லுகிறேன் முதலில் சென்டோல் குடி”

“நீ சொன்னால் தான் நான் குடிப்பேன், நீ கவலையாக இருக்கும்போது எனக்குச் சென்டோல் போட்டுக் கொடுக்கிறாயே. நான் குடிக்க மாட்டேன்”

“சொல்லுகிறேன் குடி”

“சொல்லவேண்டு…ம்…” என்று சொல்லிவிட்டுச் சீனக் கிழவர் குடித்தார். சீனக்கிழவரின் வயிறு குளிர்ந் தது. ஆனால் அதே நேரத்தில் காக்காவின் முகவாட்டம் அதை மறக்கச் செய்தது.

குடித்ததும், “என்ன காக்கா சொல்லு” என்று சொல்லியபடி ஆடிக் குவளையை வைத்தார். வைக்கும் போதும் கடிதம் அவர் கண்களில் பட்டுவிட்டது. அதைப் பார்த்ததும் அவர் மனமும் என்னவோ ஏதோ என்று பதறியது. உடன் பிறப்புக்களிடம் கேட்பதைப் போல் “ஊரிலிருந்து கடிதம் வந்திருக்கே!” என்றார்.

“ஆமாம்”

“என்ன எழுதியிருக்கிறாங்க?”

“என் மனைவிக்கு வயிற்றை வலித்ததாம். மகப் பேற்று வலியாசுத்தான் இருக்கும். ஒருவாறு எட்டாவது மாதத்திலேயே – குறைமாதத்தில் – பிறந்தாலும் பிறக்கும் என்று மருத்துவமனைக்குக் கொண்டு போயிருக்கிறாங்க. மருத்துவர் பார்த்துவிட்டு மருத்துவமனை யிலேயே இருக்கவேண்டும். உடம்பில் இரத்தம் இல்லை என்று சொல்லிவிட்டாராம். நான் உடனே நாட்டுக்குப் போகலாம் என்று நினைக்கிறேன். எப்படிப் போக முடியும்? செட்டியார்கிட்டே வேறே கடன் வாங்கி ஊருக்கு அனுப்பி இருக்கிறேன். ஒரு தவணை தான் கட னும் கட்டி இருக்கிறேன். இனிமேல் எப்படி கடன் வாங்குவது. ஊருக்கு எப்படிப் போவது எனக்கு ஒன்றுமே புரியலே” என்றார்.

காக்கா சொல்லியது சீனக்கிழவரின் மனத்தை நெக் குருக வைத்தது. இருந்தாலும் தாம் நினைத்தபடி ஏதும் நடக்கக்கூடாதது நடக்காததை நினைத்து உள்ளூற ஆறு தல் அடைந்தார். “என்ன காக்கா இப்படிச் சொல்லுறே! பத்துப்பதினைந்து ஆண்டா இங்கேயே இருந்து சம்பாதிச்சு ஊருலே வீடுவாசல் கட்டினே. தோப்பெல்லாம் வாங்கினே! முப்பது வயசு ஆகிவிட்டதுனு நினெச்சு திருமணமும் இப்போதுதான் போய்ச் செய்துட்டு வந்தே! வந்து கொஞ்ச நாளிலேயே இப்படிக் கடிதம் வந்திருக்கே! ஏழைங்களுக்கே இப்படித்தான் காக்கா! இந்த தபேக்கொங் (கடவுள்) ஏன்தான் இப்படிச் சோதிக்கிறாரோ” என்றார், சீனக்கிழவர். அவர் மனம் காக்காவுக்கு உதவ எண்ணியது.

காக்கா, “எல்லாம் அல்லாஹுவின் செயல்” என்று நீண்ட பெருமூச்சுவிட்டார்.

சீனக்கிழவர் கறுப்பு நிறக்காற்சட்டைப் பைக்குள் கையைவிட்டார். ஒவ்வொரு வெள்ளித்தாள் கற்றையாக வந்தது. அதில் ஒரு தாளை எடுத்துப் போட்டார். கையில் காசிருக்கும்போது குளிர்நீர்க் கடனை முடித்து விடுவது வழக்கம். சீனக்கிழவர்தான் குளிர் நீர் குடித் தது இத்தனை வேளை என்று கணக்குப். பார்த்துக் காசு கொடுப்பார். காக்கா சீனக்கிழவரைப் பற்றி கவலையே படுவதில்லை.

“காக்கா, கவலைப்படாதே. தபேக்கொங்கை நினைத்துக்கொண்டு பேசாமல் இரு, எல்லாம் சரியாகப் போய் விடும்” என்றார். அவரால் கூற முடிந்த ஆறுதல் அது தான் என்றாலும் தன்னிடம் பணம் இல்லையே இருந்தால் காக்காவை ஊருக்கு அனுப்பி நேரில் பார்த்துவிட்டு வரச் சொல்லலாமே என்றும் ஓடியது. வண்டியைத் தள்ளினார். அவர் மன ஓட்டத்தைப்போல வண்டியும் மேடு பள்ளங்களில் ஏறி இறங்கி கடகட என்று ஓடியது, இரைச்சலும் காதை அடைத்தது. சீனக்கிழவர் அங்கிருந்து சென்றதும் காக்கா ஐஸ் கட்டியில் கைவைத்தார்.

உச்சி வேளை! வெயில் கொளுத்தியது. சாலைகளில் ஆவி! தொலைவில் இருந்து பார்க்கும்போது சாலையில் நீர் கிடப்பதுபோன்ற காட்சி!

இழைப்புளிக் கட்டையில் எடுத்துவைத்திருந்த ஐஸ் கட்டி தீர்ந்துவிட்டிருந்தது.

மரத்தூளில் கிடந்த ஐஸ் கட்டியை எடுத்துக் கழுவி விட்டு வைத்தார். உச்சி வெயிலாக இருந்தும் சாப்பாட்டு நேரமாக இருந்ததால் அரிதாகச் சிலர் வந்தனர் அவர்களுக்கு சென்டோல், பழச்சாறு, ஐஸ்பால் என்று காக்கா கொடுத்துக்கொண்டிருந்தார். அவருக்கும் பசி எடுத்தது.

மேல் தட்டில் உள்ள கட்டுச்சோற்றை எடுத்தார். காலையில் எழுந்து சோறு கறி ஆக்கிவிடுவது காக்காவிற்கு வழக்கம். கட்டுச்சோற்று சட்டியில் போட்டிருந்த துணியை அவிழ்த்ததும் அலுமினியச் சட்டி மூடியைத் திறந்தார். மூடியில் ஆவிநீராக அரும்பிநின்றது. அதை ஊற்றினார். கொடுவாய்க் கருவாட்டுச் சம்பால், கடுகுக் கீரை பிறட்டல், முட்டை அவியல் மிளகுநீர் எல்லாம் கமகமத்தன.

எடுத்து வைத்துக்கொண்டு கரண்டியால் சோற்றை அள்ளி வாயில் வைத்தார். யாரும் ஐஸ் நீர் குடிக்க வந்தால் அந்த நேரத்தில் கையைக் கழுவிக்கொண்டு இருக்க முடியாது என்றுதான் கரண்டியால் சாப்பிட்டார். ‘சுள்’ என்றிருந்த கருவாட்டுச் சம்பாலை எடுத்து நாக்கில் வைத்தார். கடுகுக்கீரையில் கொஞ்சம்! அறுசுவை உணவு! அதுவும் அவர் கையால் சமைத்தது. அப்படியிருந்தும் சோறு தொண்டையைவிட்டு இறங்க வில்லை. சோற்றை அப்படியே வைத்துவிட்டு பீடியில் ஒன்றை எடுத்துப் பற்றவைத்தார். அவர் மனம் ஊரையே வட்டமிட்டுக் கொண்டு இருந்தது.

“அல்லாஹு எந்துகொண்டு என்னே இங்ஙனே கவலைப்பட வைக்குது? யான் எந்து செய்து” என்று முணு முணுத்தபடி நின்றார். வெயில் தாழ்ந்துகொண்டிருந்தது. அவர் மனத்தில் உள்ள கவலை மட்டும் தணியவில்லை. மூளைவேறு குழம்பியது.

“செட்டியாரிடம் எங்ஙனே கடன் கேட்க முடியும்? நாட்டுல இருந்து, இவ்வடே வந்ததும் அயாளுக்கிட்டே ஆயிரம் வெள்ளி வாங்கியாச்சே. ஆயிரத்தையும் ரூபாயாக மாத்தி நாட்டுக்கு அனுப்பியாச்சே. ஐஸ் கடைக்குச் சரக்கு வாங்கணும்னு பறைஞ்சதும் இருநூறு வெள்ளி நாள் தவணைக்குக் கொடுத்ததுல! ஈயாள் நம்பிக்கைக் கொண்டே கொடுத்திருக்குணு. இனிக்கேட்டா எங்ஙனேயானு கொடுக்கும். காக்கா நாட்டுக்குப் போயிட்டு வந்து எங்ஙனே எல்லாக் கடனையும் தவணையாகக் கட்ட முடியும்னு நினைக்கும்ல! எந்த முகத்தைக்கொண்டானு ஈயாளுக்கு கிட்டப்போய் பணம் கேட்கிறது” இப்படி எண்ணியபடியே நின்றார்.

செட்டியார் நினைவு வந்ததும் ஒவ்வொரு நாளும் நாள் தவணைக்குக் கொடுக்க வேண்டிய பணமும் நினைவுக்கு வந்தது. கல்லாவைத் திறந்து அன்று கொடுக்க வேண்டிய தவணைப் பணத்தை எண்ணி வைத்தார்.

மாலை வேளை. வேலையாட்கள் கலைந்து சென்றனர். ஐஸ் நீரும் நன்கு ஓடியது.

மணி ஆறு அடித்தது. செட்டியார் சொல்லி வைத்தாற் போல் வந்துவிட்டார். அவர் வந்ததும் காக்கா நாள் தவணைப் பணத்தைக் கொடுத்தார். செட்டியார் முகத்தில் முல்லை பூத்தது. பணத்தைப் பத்திரமாக சட்டையின் உள் பைக்குள் வைத்துக்கொண்டு காக்காவைப் பார்த்தார். வழக்கம்போல் ‘வியாபாரம் எப்படி இருக்கு? நல்ல நடக்குதுல ‘ என்று வாய்ப் பேச்சுக்குக் கேட்டுவைத்தார்.

“இருக்கு”

“என்ன காக்கா என்னவோபோல் இருக்குறீக?”

சமயம் பார்த்துக்கொண்டிருந்த காக்கா அதை நழுவவிட நினைக்கவில்லை. உடனே கடிதத்தை எடுத்தார். அது மலையாளத்தில் எழுதி இருந்ததால் கடிதத்தைச் செட்டியாரிடம் காண்பித்துவிட்டு அதில் உள்ள செய்தியை விளக்கிச் சொன்னார்.

சொல்லிவிட்டுச் செட்டியாரிடம் இருந்து ஏதாகிலும் நம்பிக்கைக்குரிய செய்தி வருகிறதா என்று காதைக் கூர்மையாக்கிக் கொண்டு அவர் வாயைப் பார்த்தார்.

ஆற அமர செவிமடுத்துக் கொண்டிருந்த செட்டியார். “இந்தாப் பாருங்க காக்கா இதெல்லாம் உலகத்திலே சகசமா நடக்கிறதுதான். இதைப்போய் பெரிசா நினைக்கிறீகளே கவலையை விட்டுத் தள்ளுறீகளா……! விட்டுத் தள்ளுங்க! அதான் மருத்துவருக்கிட்டக் கொண்டுபோய் காட்டி மருத்துவமனையில் வைத்திருக்கிறாகளே! இனிமே கவலைப்படுறதுக்கு என்ன இருக்கு! நீங்க அதை மறந்துவிட்டு வேலையைப் பார்த்திகனா நல்லது… ஊருல உள்ளவங்க கவனிச்சுக்கிருவாக! எல்லாம் நல்லபடியா நடக்கும்; கடவுள் கைவிடமாட்டார்” என்றார்.

செட்டியார் மேலும் கடன் கொடுத்து நாட்டுக்குப் போகச் சொல்லமாட்டார் என்று காக்காவுக்குப் புரிந்து விட்டது. இனிமேல் வாய் விட்டுப் பணம் கேட்டால் தன்னைத் தரக்குறைவாகவும் நினைத்துக் கொள்வார் என்றும், கடன் முடியாமல் இருக்கும்போது கேட்பது சரியில்லை என்றும் எண்ணிக்கொண்டு, “ஆமா எல்லாத்துக்கும் அல்லாஹ் இருக்குது” என்றார் காக்கா. செட்டியார் மேலும் ஆறுதல் கூறிவிட்டுச் சென்றார்.

காக்கா வண்டியின் கீழறையில் சாமான்களை எடுத்து வைத்தார். ஒருவழியாக அன்றையப் பொழுது கவலையோடு ஓடி விட்டது.

காக்கா வண்டியைத் தள்ளிக் கொண்டு வீட்டை நோக்கி நடந்தார். வண்டி வீட்டை அடைந்ததும் வண்டிச்சக்கரத்தைச் சங்கிலியால் பிணைத்துப் பூட்டினார் தேங்காய்ப்பால் இருந்த பானையையும், ஆடிக் குவளை களையும் கழுவி வைத்தார். வண்டியில் இருந்த சாமான்களை வீட்டிற்குள் கொண்டுபோய் வைத்தார். வேலை வழக்கம்போல் நடந்தது என்றாலும், அவர் மனம் மட் டும் ஊரையே வட்டமிட்டவண்ணம் இருந்தது.

இரவுச் சாப்பாட்டிற்குச் அரிசியைக் களைந்து அடுப் பில் போட்டுவிட்டு ஊரிலிருந்து வந்திருந்த கடிதத்தை மீண்டும் படித்தார். தனிமை அமைதிக்கு ஏற்றது என் றாலும் அவர் தனிமையில் இருந்து படிக்கும்போது மனம் அமைதியடையவில்லை. மனத்தில் அலைகள் எழுந்த வண்ணம் இருந்தன.

துன்பச் சுமைக்கிடையில் நாளும் ஓடியது.

காலை நேரம்.

காக்கா ஐஸ்வண்டியில் வியாபாரத்திற்குரியசாமான் களை வைத்துக் கொண்டிருந்தார். வியாபாரத்திற்குச் செட்டியாரிடம் வாங்கிய நாள் தவணைப் பணம் முடியும் தருவாயை நெருங்கிவிட்டதும் அவர் மனத்தில் ஓடியது. இன்னும் ஒரு கிழமைக்குள் முடிந்துவிடும் செட்டியாரிடம்இன்னும் நானூறு, ஐநூறு வெள்ளி வாங்கி, கையில் மடியில் உள்ளதைச் சேர்த்து நாட்டுக்குப்போய் மனைவியைப் பார்த்துவிட்டுத் திரும்பிவிடலாம் என நினைத்தார். மனத்தில் இப்படி ஓடியதும் வியாபாரத்திற்கு ஐஸ்வண்டியில் எடுத்து வைத்த சாமான்களை மீண்டும் வீட்டிற்குள் கொண்டு போய் வைத்தார்.

பணம் கேட்பதற்காகச் செட்டியார் கடைக்குச் சென்றார். தன் மனத்தில் உள்ள உணர்ச்சிகளைச் செட்டியாரிடம் கொட்டினார். எல்லாவற்றையும் பொறுமையாகச் செவிமடுத்துக் கொண்டிருந்த செட்டியார், “ஏன் காக்கா அஞ்சு காசுக்கும், பத்துக்காசுக்கும் ஐஸ் வித்துச் சம்பாதிக்கிற பணத்தை வீணாக்குறீக! இப்ப நீங்க போய் என்ன செய்யப்போறீக. அதுதான் மருத்துவமனையிலேயே ஒன்றரை மாதத்துக்கு மேலே வச்சிருக்காகளே! இனிமேல் எல்லாம் நல்லபடியாக முடியுங்கிறதுல கொஞ்சங்கூடச் சந்தேகம் இல்லே. நீங்க கவலைப்படாம வியாபாரத்தைக் கவனிங்க காக்கா! வேணும்னா நானூறு ஐநூறு ரூபா அனுப்பி வைங்க! பணந்தர்றேன்” என்றார்.

காக்காவுக்கு எதுவும் சொல்ல முடியவில்லை. “யான் ஒன்னு நினைச்சா ஈயாள் ஒன்னு பறையுதே! ஒரு வாரத்தில் வந்துடும்னு பறைஞ்சும் யோசிக்குதே! அங்கே ஏதாகிலும் ஒண்ணு ஆயிட்டா திரும்ப வரமாட்டான் பணம் போயிடும்னு நினைக்குதோ!” என்று காக்கா மனத்தில் ஓடியது. மனத்திற்குள் செட்டியார் மேல் ஆத்திரமாகவும் இருந்தது. ஆனால் ஆனால் காக்கா வெளியில் காட்டிக் கொள்ளாமல் வீடு திரும்பினார். இன்னும் ஒரு வாரத்தில் எப்படியும் நாட்டுக்குப் போக வேண்டும் என்று அவர் மனத்தில் உறுதி ஏற்பட்டது. மீண்டும் ஐஸ் வண்டியில் சாமான்களை எடுத்து அடுக்கினார்- ‘தேங்காய்ப் பால்’ பிழிந்து ஆடிப்பானையில் ஊற்றினார்.

வண்டியைத் தள்ளினார். இப்போது ‘கட கட’ ஒலி இல்லை. கப்பி போட்டிருந்த அந்தச் சாலையில் தார் போடப்பட்டிருந்தது.

வியாபாரமும் தொடங்கியது

குளிர் நீர் குடித்தவர்கள் காக்காவை ஏற இறங்கப் பார்த்தனர். நன்றாக இருக்கும்போது எதுவும் சொல்லாத சிலர், “சென்டோலுக்குச் சர்க்கரை போதாது, தேங்காய்ப் பால் தண்ணீயா இருக்கு” என்று குறைபட்டுக் கொண்டனர்.

வெயில் ஏறியது. கிணிங் … காக்கா திரும்பிப் பார்த்தார். அஞ்சல்காரர் ஒரு மடலை காக்காவிடம் நீட்டிவிட்டு குளிர்நீர் வாங்கிப் பருகினார். காக்காவுக்கு ஒரே கவலை இது என்ன செய்தியைத் தாங்கி வந்திருக்கிறதோ என்று!

அஞ்சல்காரர் வண்டியும் நகர்ந்தது

காக்கா கவலை கப்பிய முகத்தோடு முடங்கலைப் பிரித்தார்; படித்தார். அவர் முகத்தில் உடனே முல்லைப்பூ பூத்தது. முடங்கலை மடித்தவாறு சுற்றுப்புறத்தைப் பார்த்தார். அவர் கண்களில் புத்தொளிவீசியது. ஏதோ புதிய இடத்தைப் பார்ப்பதைப்போன்ற உணர்வு பிறந்தது.

“சென்டோல்”

“ஐஸ் பால்”

“ஆரஞ்சு”

என்று குரல் மாறிமாறி ஒலித்தது.

“சர் சர்”

“டொக்… டொக்…”

ஐஸ் கட்டியை இழைப்பதும், சிறிய சில்லுகளை உடைப்பதும், ஆரஞ்சுக் குப்பிகளைத் திறப்பதும் மாறி மாறி நடக்கின்றன; அவற்றின் ஒலியும் கேட்கின்றன.

வியாபாரமும் சூடுபிடித்துவிட்டது.

“கட கட கட்… கட கட கட்…”

“பீப் பீப்…”

“கிணிங் கிணிங்..”- சீனக்கிழவரின் வண்டிதான் வந்தது. சாலையில் தார் போட்டிருந்தாலும் சிறுசிறு இரும்பு உருளைகள் ஒலி எழுப்பவே செய்தன.

அலைந்து திரிந்த சீனக்கிழவர் ஐஸ் வண்டியை நெருங்கிவிட்டார். ‘கட கட கட்’ இரைச்சல் அடங்கி யதும் “ஏன் காக்கா இன்னிக்கு நேரங்கழிச்சு வந்திருக்கிறே? நான் வண்டி தள்ளிக்கொண்டு போகும்போது ஐஸ் வண்டியைக் காணோமே” என்றார். அவர் பார்வை தம் வண்டியில் அடுக்கிவைத்திருந்த இரும்புச் சாமானில் இருந்தது.

“செட்டியார் கடைக்குச் சென்றிருந்தேன்” என்று சொல்லியவாறு காக்கா சீனக்கிழவர்க்கு என்றுமில்லாத அளவுக்குச் சென்டோல் கலக்கினார்.

சீனக்கிழவர் சென்டோலை வாங்கிப் பருகியபடி காக்கா முகத்தைப் பார்த்தார். காக்காவின் மலர்ந்த முகத்தைப் பார்த்ததும் அவர் முகமும் மலர்ந்தது. சுவைமிக்கச் சென்டோலை பாதி பருகிவிட்டு, “என்ன காக்கா? செட்டியார் ஊருக்குப்போகப் பணம் தருவதாகச் சொன்னாரா?” என்று வினவினார்.

“இல்லை”

பாதியிருந்த சென்டோலைக் குடித்த சீனக்கிழவர்க்கு வியப்பாக இருந்தது. அப்படி என்றால் மகிழ்ச்சியாக இருக்கக் காரணம் என்ன என்று எண்ணியவாறு சென்டோல் குவளையைச் சென்டோல் பானைக்கு அருகில் வைத்தார். அவர் கண்களில் கடிதம் பட்டுவிட்டது.

“என்ன காக்கா? கடிதம் வந்திருக்கு போலிருக்கே!”

“ஆமா”

“பிள்ளை பிறந்துவிட்டதா? ஒரே மகிழ்ச்சியாக இருக்குறீயே!” என ஆவலோடு வினவினார்.

காக்காவின் பல்லெல்லாம் வெளியே தெரிந்தது. இரண்டு விரல்களைக் காண்பித்தார்.

“இரட்டைப் பிள்ளையா?” – சீனக்கிழவர்தான் இரட்டை மகிழ்ச்சியோடு வினவினார். அவர் கடைவாய் தெரிந்தது ஆனால் பல்லைக் காணவில்லை. பொக்கை வாய் திறந்து சிரித்தபடி, “என்ன பிள்ளை?” என்றார்.

“ஆணும், பெண்ணும்” -இப்படி சொல்லும்போது காக்கா மனத்தில் தேனாறு ஓடியது.

சீனக்கிழவர்க்கு மகிழ்ச்சி மும்மடங்காகியது. காக்காவின் முதுகில் தட்டிக்கொடுத்துவிட்டு தம் காற்சட்டைப் பைக்குள் கையைவிட்டார். அவர் பையிலிருந்த வெள்ளிக்கற்றை தட்டுப்பட்டது. அது கடந்த இரண்டு மாதமாக சிக்கனமாகச் சேர்த்த பணந்தான்.

கையை வெளியே எடுத்த சீனக்கிழவர் பணம் இருந்த பையைத் தட்டிப்பார்த்துவிட்டுச் சிரித்தார்.

“பையில் என்ன?” என்று காக்கா வினவினார்.

“அதுவா பணம்! ‘ஊருக்குப் போக வேண்டும்! கையில் மடியில் காசு இல்லை!’ என்று சொன்னாயே அன்று முதல் சேர்த்த பணம்” என்றார். அவர் சொல்லும் போது உணர்ச்சி இழையோடியது.

சீனக்கிழவர் சொல்லியதைச் செவிமடுத்த காக்கா சிலையாக நின்றார். அவருக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை.

“கட கட கட்…” சீனக்கிழவர் வண்டி கிளம்பியது.

“பீப்… பீப்…”

“கிணிங்…… கிணிங்…”

– குங்குமக் கன்னத்தில் (சிறு கதைகள்), முதற் பதிப்பு: 1977, மறைமலை பதிப்பகம் வெளியீடு, சிங்கப்பூர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *