கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 24, 2025
பார்வையிட்டோர்: 7,388 
 
 

வெய்யில் வாட்டி வதைக்கும் பொழுது. அத்தனை பெரிய சிறைச்சாலையின் ஓர் ஓரத்தில் என் பத்து வயது மகனுடன் நான் நின்று கொண்டிருந்தேன். ஏழ்மை எங்கெங்கேயோ கொண்டு நிறுத்தும் என்பதற்கு என் கணவனின் வாழ்க்கைதான் எடுத்துக்காட்டு. என்னென்னவோ குற்றம் சாட்டினார்கள். இப்பொழுது தூக்கு மேடை வரை கொண்டு வந்து விட்டார்கள். என் உறவினர்களிடம் நான் பல முறை சொல்லி விட்டேன். என் கணவன் பாவி இல்லை. அபாக்யம் அவரைப் பிடித்து ஆட்டுகிறதே, வறுமையால் வந்த வினைகளே தவிர அவர் நிரபராதி அவர் நல்ல மனிதன். நான் சொன்னதை யார் ஏற்றார்கள்? யார் ஏற்பார்கள்?

நேற்று எனக்கு ஒரு கடிதம் வந்தது. அரசாங்கத்தின் கடிதம். என்னுடைய கணவன் என்னைப் பார்க்க விரும்புகிறார் வர வேண்டும் என்று. ஆம் சந்திப்பு. கடைசி சந்திப்பு. கடைசி சந்திப்பு எப்படி இருக்கும்? நான் அவரது தலையை கோத முடியுமா? அவரது விரல்களுடன் என் விரல்களைப் பின்னிக் கொள்ள முடியுமா? வெடித்து அழ முடியுமா?

கடிதத்தை நான் படித்துக் கொண்டிருக்கும் போதுதான் என் அன்பு மகன் கோபால் அருகில் வந்தான். ‘அப்பா ஏன் வருவதே இல்லை? எங்கே போனாரு?‘ நான் என்ன பதில் சொல்வேன்?

‘அப்பாவை நாம நாளைக்குப் போய் பார்க்கலாம்’

பையன் சொன்னான் – ‘அப்பா கிட்ட எனக்கு சைக்கிள் வாங்கி கொடுன்னு கேட்கப் போறேன்’

நான் என்ன சொல்வேன்? பெருமூச்சு தான் வெளிப்பட்டது.

ஜெயிலர், நான் பணிந்து கொடுத்த கடிதத்தைப் பார்த்தார். காவலர் ஒருவரை கூப்பிட்டார். என் கணவரைப் பார்க்க அழைத்துச் செல்லும்படி கட்டளையிட்டார்.

நானும் என் மகனும் அவரைப் பின் தொடர்ந்தோம்.

சீருடை அணிந்த வாட்டசாட்டமான அந்தக் காவலர் ‘பிரகாஷ்’ என்று குரல் கொடுத்தார். என் மகன் , மகளின் ஒளியான என் கணவர் வந்தார். ஒட்டிப் போயிருந்த கன்னங்களில் தாடி . நான் பார்த்துக் கொண்டே இருந்தேன்.

காவலர் இரக்கம் சிறிதும் இல்லாமல் ‘ஐந்து நிமிடம்தான்… பேசி விட்டு வந்து விடு ‘ என்று என்னிடம் சொல்லி விட்டு அந்த இடத்தை நகர்ந்தார்.

கோபால் அப்பாவின் அருகில் சென்றான் – ‘அப்பா, முன்னி என்னோட சிலேட்டை உடைச்சுட்டா வேற வாங்கிக் கொடுப்பா…’

என் கணவர் என்னையே பார்த்தார். அவருடைய கண்களில் கண்ணீர் . நான் என்ன பேசுவேன்? நா எழவில்லை. பிரகாஷ் இல்லாமல் எங்கள் வருங்காலம் இருள் ஆகி விடுமே…

என் கணவர் தழுதழுத்த குரலில் பேசினார் –

“இந்தா கோபாலுக்கு வேற சிலேட் வாங்கி கொடு… என்ன நடக்குமோ அதுதான் நடக்கும் கடவுள் உனக்கு தைரியம் கொடுப்பார்.. பசங்களை பார்த்துக்க ஜாக்கிரதையா…”

“அப்புறம் அப்புறம்” என் குரல் ஈன ஸ்வரத்தில் ஒலித்தது. என்னுடன் வாழ்ந்து என்னுடைய பிள்ளைகளுக்குத் தகப்பனானவனை நான் பார்த்துக் கொண்டே இருந்தேன்… விதியின் வடிவத்தில் அந்தக் கடுமையான காவலர் வந்து விட்டார்.

‘கிளம்பு கிளம்பு அஞ்சு நிமிஷம் முடிஞ்சுடுச்சு.. போ…’

பிரகாஷ், கோபாலின் கன்னத்தை வருடி அவனுக்கு முத்தமிட்டார்.

‘லட்சுமி பசங்கள படிக்க வை.. அடுத்த ஜெனமத்தில் விதி இருந்தால் சந்திப்போம்…’

கணவர் எங்களை கடைசி முறையாகப் பார்த்து விட்டு உள்ளே சென்றார்.

என் அருகில் நின்ற கோபாலின் கைகளைப் பிடித்துக் கொண்டு சிறைச்சாலையின் வாசலை நோக்கிச் சென்றேன் நான். நான் என் கணவனைப் பார்த்த சிறைச்சாலையில் போதுமான வெளிச்சம் இல்லை. சிறைச்சாலையில் மட்டுமா?

(முதுபெரும் இந்தி எழுத்தாளர் மோகன்லால் மஹதோ வியோகி (1902 – 1990) அவர்கள் எழுதிய பாஞ்ச் மினட் என்கிற உருக்கமான கிளாசிக் இந்தி சிறுகதையை தமிழில் கொடுக்கும் அடியேனுடைய முயற்சி இந்தச் சிறுகதை)

எஸ்.மதுரகவி விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுரகவி (1962) எண்பதுகளிலிருந்து சிறுகதைகள். புதுக்கவிதைகள். நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருபவர். புதுச்சேரி வானொலியில் 1984-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். சென்னையில் விளம்பரவியல் துறையில் 1984 முதல் 2000 வரை ஊடகத் தொடர்பு மேலாளராகப் பணியாற்றியவர். 2000ம் ஆண்டு முதல் முழுநேர விளம்பரத்துறை எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். தொண்ணூறுகளில் இவரது படைப்புகள் சுமங்கலி, அமுதசுரபி, குங்குமம், குங்குமசிமிழ். முல்லைச்சரம், குடும்பநாவல் ஆகிய இதழ்களில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *