ஏவிவிடப்பட்ட கொலையாளி

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 31, 2026
பார்வையிட்டோர்: 121 
வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்

(2008ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்

அத்தியாயம் 6-10 | அத்தியாயம் 11-15 | அத்தியாயம் 16-20

11. குழந்தைகள் பறிக்கப்பட்ட கதை

என் உயிர்த்துளி நீரில் கலங்கிச் சிதைந்து போனது. அவளுடன் உறவு கொண்டு திருப்திப்படாது, முணுமுணுத் துக் கொண்டிருந்தவளின் வார்த்தைகளைத் துரத்தி புணர்ந் தெழுந்து குழந்தை பெறச் செய்து அவளை சந்தோசிக்க வைத்து பெற்ற மகவுகள் ஊதிக் கரைந்து போயின. உயிரற்ற நிழலாய் சுடு மணற்பருக்கைக்குள் கால் புதைந்து கொப்பளித்துப் போய் கிடக்கின்றேன். 

கடல் பரவி ஊர் தின்ன வருகையில் ஊரே பெட்டி படுக்கைகளுடன் ஓடிக் கொண்டிருந்தது. நீண்டு வளைத்துக் கிடந்த என் சாரனை மடித்து சுருக்கி ஒரு வயதுடன் 15 நாள் நிரம்பியிருந்தவனுக்கு காகம் கரைவதைக் காட்டலை நிறுத்தி வீட்டினுள் நுழைந்தேன். கனவுக்குள் சிதைந்து கால் விரிந்து உயிரிழுத்துக் கிடந்த நான்கும், ஆறு வயது மான இருவரதும் உயிர் நூலை இழுத்து உடலுக்குள் ஏற்றி உறக்கத்தைக் கலைத்து உலகுக்குக் கொண்டு வந்தேன். 

மனைவியின் கைகளுள் மூத்தவனை திணித்து விட்டு, இரண்டாமவனின் இடுப்பை என் இடுப்புடன் இறுக்கிக் கொண்டு ஓட்டமெடுத்தோம். எதையும் எடுத்துக்கொள்ள அவகாசம் துளியளவும் இல்லாத நிலை இருந்தது. எடுக்க வேண்டிய பொருட்களின் பெறுமதியைப் பதற்றம் அழித்தது. நான் மேற்சட்டைகூட அணிந்திருக்கவில்லை. அப்போது சுற்றியிருந்த சாரத்துடன்தான் இப்போதும் உள்ளேன். நான்கைந்து, எட்டுக் கடந்திருந்தோம். கூரையில் ஏறிப் பாய்ந்த தண்ணீர் எல்லோரையும் அள்ளியது. கபாலத்துள் சுழன்று கொண்டிருந்த அவளின் பெயரை அழைத்த வண்ணமே கால்களை உதறி மேலே மிதக்க எத்தனித் தேன். நீரின் துணையுடன் அவிழ்ந்த சாரன் – கால்களைக் கட்டி உள்ளே இழுத்தது. 

கைகளில் இருந்த உருக்கொண்டிருந்த என் உயிரணுக் களை மார்புடன் இன்னமும் இறுக்கினேன். அழுகையும் நீர் விழுங்கி வெளிவிட்ட முட்டை ஒலியும், அவஸ்தையுடன் காதுக்குள் நுழைகின்றது. தூக்கியிருந்த அலை கரையக் கரைய கால்கள் நிலத்தில் பட தப்பி விடும் நம்பிக்கை உச்சத்துக்கு ஏறிக் கொண்டிருந்த போது ஆணலையால் திரும்பவும் தூக்கப்பட்ட போது அந்தரத்தில் சுழன்று கொண்டிருந்த என் மூக்கில் நுழைந்து கைகளை விடுவித்து – குழந்தைகளைப் பறித்துப் போனது. நீரை அலசி கை களை அலைய விட்டுப் பார்க்கின்றேன். உப்புக் கரிக்கக் கண்களை விழித்துத் தேடுகிறேன். பெண் பிள்ளை யொன்று கத்திக்கொண்டு மிதக்கிறது. குழந்தைகளோ, மனைவியோ பார்வைப்புலத்துள் சிக்கவில்லை. ஆனால் பிணங்களும், குரல்களும் மிதந்த வண்ணம் சென்றன. என்னையே காப்பாற்றிக் கொள்ள நான் போராட வேண்டி யிருந்தது. பிடிமானத்திலிருந்து நழுவி விழும் கைகளை திரும்பவும் எடுத்து வைக்கின்றேன். உரு வந்த கணக்கில் உடல் ஆடி மயிர்கள் ஈட்டியாகின. போராடிக் கொண்டே மரத்தில் முகம் சாய்ந்து கிடந்தேன். என்னைக் கடந்து சென்ற கணங்களின் பொதிகள் எதுவும் நினைவுக்குள் இல்லை. தனக்குள் என்னை நுழைத்துக் கொண்டது மயக்கமா உறக்கமா என்பதையும் யான் அறியேன். 

வட்டுக்குள் வசதியாய்க் குந்தியிருந்த என்னைக் கீழே யிருந்து மூவர் கூப்பிடும் வரை – தொலைந்து போய்க் கிடந்த நான் கீழேயிறங்கி வரும்போது நீர் விட்டுச் சென்ற நுண்ணிய கருமணல் துகள்களால் ஆன சகதி மட்டும் விரவிக் கிடந்தது. வழிகாட்டி கைப்பற்றி அழைத்து வந்து மனைவியைக் காட்டும்வரை துடிப்பிழந்து கிடந்த இதயத்தை நீங்கள் கற்பனையிலும் காண முடியாது. அழைத்து வந்த முகங்களின் பிரதிகள் எதுவும் என்னிட மில்லை. அவளைக் கட்டி, மார்பில் சாய்ந்து கொண்ட துடன் சிறிது சிறிதாய் இரத்தம் உடலில் பரவத் தொடங்கியது. அவளை அலை தூக்கி வீட்டுக் கூரையில் வைத்திருந்தது பற்றியும், கூரையிலிருந்து பாய்ந்து கால் காயம்பட்டு குருதி வழிந்த தடத்தைக் காட்டினாள். இழப்பதற்கு எதுவுமற்றுப் போன நிலையில் தலையிலடித்துப் புலம்பினாள். 

என் உயிரணு உருவாக்கிய மூன்று ஆண் சிங்கங்களும்… ஐயோ… 

12. வல்லுறவு

இது எனக்குள் துளியாய் உருவானதோ கபாலத்துள் உதித்து உதிர்ந்ததோ வாழ்வுக் கோட்டில் ஏற்பட்ட – கீறலோ – புள்ளியாகவோ இல்லை. செவிப்பறை மென்சவ்வை அதிரச் செய்தது. துவாரத்துள் காற்றுடன் பிணைத்து விட்டவன் – கட்டடத்தின் மேல் மாடியில் ஒரு மூலையில் குறுகிக் கிடப்பான். உண்மையின் நிழல் அவனிடம் தான் உள்ளது. 

துயரத்தின் நுனி அது பனையால் விழுந்தவனை மாடு மிதிப்பதற்கு ஒப்பானது. 

நீர்த்திவலைகள் மரமேற்றியிருந்தவளை இறக்கி வந்த இருவர் வார்த்தைகள் கொடுத்துக் கூட்டி வந்திருக்கிறார்கள். 

அவளின் வயது 15, 16 வருடங்களாக இருக்குமாம். கண் களால் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டு புதருக்குள் இழுத்துச் சென்று மறைந்தபோது அவளதுகள் புதர் முட்களில் சிக்குண்டு கிடந்ததாம். தங்களை மாறி மாறி ஒவ்வொருவராய் அவளுள் நுழைத்துக் கொண்டு மீள்கை யில் கிழிபட்டு உயிர் குறுகிப் போயிருந்தது. 

அலை தோண்டி வைத்திருந்த குழிக்குள் அவளது சதைப் பிண்டத்தை இழுத்துப் புதைத்து – முழுப் பிணமாக்கி ஓட்டமெடுத்திருக்கிறார்கள், அவர்களைப் பிடிக்கக்கூடிய வயது தன்னிடம் இல்லாமல் போனதையிட்டு அவன் என்னிடம் நொந்து கொண்டான். 

ஒளி உதிர்ந்து இருள் படர்ந்து ஊர் முழுக்கக் கிடந்த கணம். நீண்டு – குறுகி தங்கள் தங்கள் இடத்தில் சுருண்டு போயிருந்த நிசியில் தவழ்ந்து வந்து ஒருத்தியை இனங் கண்டு கொண்ட நால்வர், அவளது குரலை வெட்டி விரல் களால் நடந்து அள்ளிப் போயிருக்கிறார்கள். கைகளை விரித்து தன் வாயால் அவள் வாயை மூடி கவிழ்ந்து கொண்டு புணர்ந்து களைத்து மற்றையவனுக்கு இடம் விட்டு அகல அவன் சுகித்து எழ……. 

நால்வருமாய் வன்புணர்வில் ஈடுபட்டுச் சலித்து நாளைக் காய் இன்னொருத்தி தேடி ஓடிப்போனார்களாம். 

எல்லா இடமும் தஞ்சம் கொடுத்து காம இச்சை தீர்த்தது பற்றிக் கதைகள் எழுந்து கொண்டே இருந்தது – காய்ந்த உணவுக்காய் பின்னிப் போனவர்கள். உடை வேண்டி உடை யகற்றினார்கள். குளிர் நடுக்கத்தில் பிணைந்தவர்கள். 

கண் துடைக்க தொடை கேட்டவர்கள். 

இந்தக் காலத்தில் புணர்தல் ஒழுக்கமாகி இருந்தது. 

13. இராகவன் கதை

மன்னிக்க வேண்டும். உங்கள் கதைகளைக் குழப்பி விட நான் இங்கு வரவில்லை – அவைகளைக் கேட்டுக்கூட இல்லை. எனது நோக்கமெல்லாம் அவர்களைத் தேடுவது தான். உங்களின் கதைகளின் மையம் இருந்த கிராமத்தில் தான் எனக்கென இருந்த ஓரேயொரு சகோதரன் இருந் தான். அவனைத் தெரியாமல் நிறையப் பேர் இருக்க மாட்டார்கள். ராஜேந்திரன் என்ற அவனை நேத்திரன் என்றே பலர் ஞாபகம் வைத்திருந்தார்கள். முன்னையது அப்பாவும்,அம்மாவும், சேர்ந்து சரியான முதலெழுத்தும், எடுத்துக்களின் இலக்கங்களைக் கூட்டிச் சரியான கூட்டெண் ணும் வரும்படியாக வைத்தது. பின்னயைதை அவனே அவனுக்கென வைத்துக் கொண்டான். அதற்கு பெயர் வைப்பதற்குரிய சம்பிரதாயங்களை அவன் பின்பற்றி னானா இல்லையா என்பது பற்றி நான் அறியேன். எந் நேரமும் எதையாவது கிறுக்கிக் கொண்டிருக்கும் அவன் அதனாலேயே இறந்து போனான். அவனது மனைவியும் – எனக்கு அண்ணி இரு ஆண் பிள்ளைகளும் இருந்த குடும்பத்தை நானே பார்த்துக் கொண்டேன். மூத்தவன் பத்தாவது படித்துக் கொண்டிருந்த ராகவன், இளையவன் ஏழாவது படித்த மோகன். 

நான்கு பகலும், மூன்று இரவுமாக தொடர்ந்து அவர் களைத் தேடிக் கொண்டிருக்கிறேன். பகலில் நனைந்து தோய்ந்து நடுங்கிக் கொண்டே நிற்கும் அவர்கள் தங்கள் உடைமைகள் போனதாகவும், மூத்தவன் தனது புத்தகங் களும் – கனவுகளும் இல்லத்தாகியதாகவும் தலைகளில் அடித்துக் கொண்டே கதறினார்கள். கண்களை மூடாம லேயே அவர்கள் தெரிந்தார்கள். இரவுகளில் கண்களை மூடிக்கொண்டால் தண்ணீரில் மூழ்கிக் கொண்டே காப்பாற் றும்படி கைகளை ஆட்டியாட்டி இழுபட்டுப் போனார்கள். இதனாலேயே கண்ணயர முடியாமல் கண்கள் வீங்கிப் போயின. 

சவச்சாலைக்கும், வீதி ஓரங்களுக்கும் புதியதாக எடுத்து வரப்படும் பழைய பிணங்கள் ஒவ்வொன்றின் அருகிலும் நான் நின்றேன். ஊதிப்போய் இருந்தவற்றை கண்களுக் குள் எடுத்து அவற்றை வற்ற வைத்தேன். கறுத்தவற்றை யும், சிதைந்தவற்றையும் இயல்பான உருவமாக்கி ஞாபகத் துள் இருந்தவற்றுடன் ஒப்பிட்டேன். எதுவும் சரியாக இணை ந்து கொள்ளவில்லை. இதற்காகவே எனது செல்லிடப் பேசி யின் இலக்கத்தை எல்லோருக்கும் விநியோகித்து வரு கிறேன் – போகும்போது உங்களுக்கும் தர இருக்கிறேன். 

பாதிக்கப்பட்டோர் தங்கி இருக்கும் இடங்களுக்கெல் லாம் சென்று வந்தேன். ஞாயிறு அந்தி சாயும் பொழுதில் தொடங்கி இப்போது நிற்பது முப்பத்திரண்டாவது. இன்றைய நாளில் இது ஏழாவது. இந்த நிலையப் பதிவாளர்கள் எல்லோரிடமும் என்னுடன் பேசக்கூடிய இலக்கமும் உண்டு. 

இன்று அதிகாலையில் சூரியனுக்கு முன்னமே கடலின் கரை வழியே இருபது கிலோமீற்றர் வரை நடந்து களைத்தேன். நேற்று பாலங்கள் உடைந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்ட இடங்களுக்கும் தோளில் சைக்கிளைத் தூக்கி வைத்து கொண்டே போய் வந்தேன். அப்போதுகூட கடல் வருவதான காற்றின் கத்தல் கேட்டு தலை தெறிக்க ஓடி காயப்பட்டேன். நாளையும் எங்கு தேடுவதெனத்தான் திட்ட மிட்டு வருகிறேன். இதுவரை மூவரில் ஒருவர் கூட கிடைக்க வில்லை. 

வீட்டின் அடித்தளத்தையும், சின்னவன் விளையாடிய விளையாட்டுக் காரையும்தான் கண்டேன். அது கூட கோயில் திருவிழாவின்போது அவன் கேட்டு அழுததற்காக நான் வாங்கிக் கொடுத்ததுதான். 

எனது வேதனைகளை நீங்கள் புரிந்திருப்பீர்கள். உங்களால் முடிந்தால் ஏதாவது தகவல் கிடைக்கும் போது என்னுடன் தொடர்பை ஏற்படுத்தினால் எனது அலைச்ச லுக்கு முடிவு கிடைக்கும். இப்போது நான் போனாலும் திரும்பியும் வருவேன். இரண்டு தினம் – ஒரு வாரம் கழிந்ததாக அல்லது நாளையாகக்கூட அந்த நாள் இருக்கலாம். 

14. கொள்ளையிடப்பட்ட கிராமங்கள்

கிட்டத்தட்ட எல்லா வீடுகளினதும் கதவுகளும், யன்னல் களும் உடைக்கப்பட்டன, கடலும், கள்வர்களும் போட்டி போட்டு பொருட்களை அள்ளிப் போனார்கள். கடலால் கொண்டு செல்லப்பட்டவையும், திருடர்களால் களவாடப் பட்டவையும் பிரித்துப் பார்க்க முடியாதிருந்தது. கடலால் வெளித் தெரியும் கனவுதான் புரிய முடிந்தது. அத்தகைய பொருட்களை எங்காவது கண்டு கொள்ளக் கூடியதாக கரையொதுக்கி இருந்தது. ஆனாலும் எது யாருடையது ‘என்பதைப் பிரித்துக் கண்டு கொள்ளக்கூடியதாக இருக்க வில்லை. சில மண்ணுள் மூடுண்டு போயிருக்கலாம், என்ற ஊகங்கள் மட்டும்தான் மிச்சமிருந்தது. எப்படியானாலும் கடல் கொண்டு போனவைகளைக் கணக்கிட முடியாது. அதைப் போலவே திருடர்களால் களவாடப்பட்டது குறித்தும் கணக்கிட முடியாது. கடல் விட்ட மீதியையும் கடலிடமிருந்து கொஞ்சமும் அவர்களால் கொண்டு செல்லப்பட்டு பதுக்கப் பட்டன. இந்தத் திருட்டு எப்போது நடந்தது என்பதை யாராலும் அறிய முடியாமல் இருந்தது. தங்கள் தங்கள் உயிரை இறுகப் பற்றிக் கொண்டு ஒட்டமெடுக்கையில் பொருளும், நகையும் அவர்களின் ஞாபகத்துள் எட்ட வில்லை. எட்டியிருக்கவும் முடியாது- ஆனால் அதே நினைவுகளில் அலைந்தவர்களாலேயே கொண்டு செல்லப் பட்டன. இதில் அவர்களுக்கு ருசி நிறைந்திருந்தது அல்லது நிறையவே இருப்பதாக நினைத்துக் கொண்டிருந்தார்கள். 

இதனாலேயே கடல் ஊருக்குள் அடிக்கடி வந்தது. இரண்டாம், நான்காம் தினங்களிலும், ஒரு கிழமை கழித் தும்….. வந்து கொண்டே இருந்தது. அடிபட்டு விழுந்து, மிதிபட்டு ஒட்டமெடுத்தார்கள். இறந்து போனார்கள். வீடுகள் திறந்து அனாதையாகக் கிடந்தன. 

உதடு காய்ந்து நா தொங்கிக் களைத்து அவர்கள் வீடு களுக்குத் திரும்பி வந்தபோது வீடுகள் மட்டுமே அநாதையாகக் கிடந்தன. இப்படியான கொள்ளைகள் திருடர்களால் மட்டுமே நிகழ்த்தப்பட்டன என்பதை யாரும் அறிந்திருந்தாலும் யார் என்பது குறித்துத் தகவல்கள் கிடைக்கவில்லை. 

மணலால் மூடுண்டு இருந்த கிராமத்தின் பாதியை அவர்களே தோண்டி ஆராய்ந்திருந்தார்கள். கடல் சோர்ந்து பதுங்கி நகர்ந்த வீடுகளை உடைத்த இவர்கள்தான், கடலுக்கு வல்லமை அதிகம் என்பதைப் பரப்பிக் கொண்டிருந்தார்கள். 

இதைப் போலவே கொள்ளையிடும் ரகசியம் நிறையத் தெரிந்த பலர் இருந்தார்கள். எந்தப் பாதிப்பும் இன்றி நிவாரணத்துக்கு முண்டியடித்தார்கள். குடும்பப் பட்டியலில் மீண்டும் பலர் புதிதாக இறந்தார்கள். அவர்களுக்கான பணத்தையும் திருடிக் கொண்டு இன்னமும் அவர்கள் கொழுத்துக் கொண்டிருந்தார்கள். 

15. தகப்பனால்-தாய் போன கதை 

….ம்மா… தான் ன்யை… ம்…. ம்மா… கடக்கி… போய் ப்பாக்கு சாப்பாடு… ய்யோ ஓ.. ஓ..

அவனால் எதையுமே சொல்ல முடியவில்லை. பழைய நினைவுகள் அவனைத் தோற்கடித்துக் கொண்டே இருந்தன. ஒவ்வொரு முறையும் தன் கதையைக் கூற முனையும் போதெல்லாம் வார்த்தைகளை இடைமறித்தது, எவ்வளவு முயன்றும் அவனால் தோற்றுப் போய்விடுவதைத் தவிர்க்க முடியாமலேயே இருந்தது. 

அவனுடைய கால்கள் இரண்டையும் மடக்க முடியாமல் முழங்காலின் மீது துணி கட்டப்பட்டிருந்தது. நெற்றியிலும் கூட, அலை தூக்கி மின்சாரக் கம்பத்துடன் அவனை அடித்த போது நெற்றியின் வலது கண்ணுக்கு நேரே நெற்றி பலமாக தாக்கப்பட்டதுடன் வலது முழங்கால் சில்லு உடைபட்டது. இதனால் நிலை குலைந்த அவனின் கைகளில் இருந்து நழுவுண்ட அப்பா நீரினுள் அமிழ்ந்து போனார். இரண்டாம் நாளில் அவனுடைய அப்பா, அம்மா, தங்கை மூவரது பிணங்களும் வைத்தியசாலை சவக்கிடங்கில் கிடத்தப் பட்டிருந்தன. 

இரண்டு மாதங்களாக கடுமையான நோய்க்கு ஆட் பட்டிருந்தவர் ஒரு வார போராட்டத்தின் பின் கட்டிலுடன் நாட்களை கடத்திக் கொண்டிருந்தார். ஒவ்வொரு தினத் திலும் மெத்தை விரிப்பு மாற்றப்படும் பத்து நிமிடங்கள் வரை சாய்மனைக் கதிரையில் கிடந்து பின்னர் கட்டிலுடன் சங்கம மாகி விடுவார். அவரை அறியா வண்ணமே மலமும், சலமும் போய்க்கொண்டிருந்ததால் நாற்றமெடுக்கும் மெத்தை விரிப்பையும் இரண்டு அல்லது மூன்று தினங் களுக்கு ஒருமுறை மெத்தையையும் மாற்ற வேண்டி இருந்தது. ஆனாலும் அவரைக் காப்பாற்றி விடலாம் என்ற நம்பிக்கை இருந்து கொண்டே இருந்தது. 

அலை ஊருக்குள் வருவது குறித்துத் தகவல் கிடைத்த போது இவன் அப்பாவிற்கு இடியப்பம் வாங்கும் பொருட்டு நின்று கொண்டிருந்தான். பணத்தைக் கொடுத்து இடியப்பத்தை வாங்கிக் கொள்ளாமலேயே ஓட்டமெடுத்தான். அம்மாவையும், தங்கையையும் முன்னே ஓடச் சொல்லி விட்டு அப்பாவைத் தோளில் கிடத்திக் கொண்டு ஓடத் தொடங்கினான். 

“ஐயோ அம்மா நான் உன்னையாவது கூட்டிக்கொண்டு ஓடியிருந்தால் காப்பாற்றி இருப்பேன் …… ஐயோ …. ஐயோ”

“உன்னைப் போல ஒருத்தரை இனியும் என்னால் காண முடியுமா……” 

‘ஏன் என்னை மட்டும் விட்டுத்து எல்லோரும் போனீங்க…” 

“நானும் வாறன் என்னையும் கூட்டித்து போங்க……”

இப்படியே தான் அவனது புலம்பல் நீடித்திருந்தது. இரு கைகளையும் அடித்துக் கொள்ளும்போது மணிக்கட்டின் கீழ் பகுதி ஒன்றுடன் ஒன்று நைபட்டு மீளும், தலையில் அடி பட்டதன் விளைவாய் அவனுக்குப் பித்தம் கலங்கி விட்டதாக அதிகமானோர் எண்ணினர். 

இடுப்புவரை பரவி நிறைந்த பெண்ணலை அப்பாவைத் தொடாமல் இரு கைகளையும் அப்பாவுடன் தலைக்கு மேலால் உயர்த்தி நீரைக் கிழித்து நடக்கும்போதுதான் ஆணலை அவனைத் தூக்கிக் கம்பத்துடன் மோதியது. மறு நாள் அந்தி சாயும் வேளையில் நினைவு திரும்பியவன் அதற்கடுத்த நாள் மூவரையும் பிணமாய்க் கண்டதிலிருந்து வார்த்தைகள் எதுவும் சரியாய் எழாமல் தோற்றுப் போய் புலம்பல் வாயுடன் மட்டும் இருந்தான். 

அவன் பழைய நினைவுகளுடன் இயல்புக்குத் திரும்பி விடுவான் என்பதில் பலருக்கு நம்பிக்கை இருக்கவில்லை. இன்று, நாளை அல்லது நாளை மறுதினத்திலாவது எப்படியும் ஒரு வாரத்துள் அவன் எலி/ பூச்சி மருந்து என எதையாவது குடித்தோ, தூக்கில் தொங்கியோ இறந்து போய் விடுவான் என எண்ணிக் கொண்டிருந்தார்கள். சிலர் அவன் கடலில் மூழ்கித் தன்னைச் சாகடித்துக் கொள்வான் என நம்பிக் கொண்டு இருந்தார்கள். பழைய நினைவுகளில் மூழ்கிப் போன பலர் அப்படித்தான் கடலில் மிதந்தார்கள். 

– தொடரும்…

– ஏவிவிடப்பட்ட கொலையாளி, முதற் பதிப்பு: டிசம்பர் 2008, சிறுகுநுனி பதிப்பகம், கொழும்பு, ஸ்ரீலங்கா.

எழுத்தாளர் திசேரா, இலங்கையின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த குறிப்பிடத்தக்க தமிழ் எழுத்தாளர், திறனாய்வாளர் மற்றும் கதைஞர் ஆவார். முக்கிய சிறப்பம்சங்கள்: படைப்புகள்: ஈழத்து இலக்கியச் சூழலில் நவீன சிறுகதை வடிவம் மற்றும் யதார்த்த கதைசொல்லும் முறையில் புதிய பாய்ச்சலை உருவாக்கியவர். இவரது 'ஏவிவிடப்பட்ட கொலையாளி' (2008) மற்றும் 'வெள்ளைத்தோல் வீரர்கள்' போன்ற படைப்புகள் பெரிதும் அறியப்பட்டவை. பின்னணி: மாற்றுப் பாலினத்தவரின் (ஓரினச் சேர்க்கையாளர்கள்) மன உணர்வுகள், யுத்தத்தின் பின்னரான வலிகள்,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *