ஏரிக்கரையில் பேய்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 9, 2025
பார்வையிட்டோர்: 648 
 
 

(1988ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

உடம்பெல்லாம் வேர்த்து விறுவிறுத்து மூச்சு முட்ட அந்தக் கிழவர் ஓடோடி வந்தார். ஏரிக் கரைக்கு பெர்ரிப் பழம் பறிக்கச் சென்றவர் சிறிது நேரத்தில் இப்படி ஓடி வந்தார். அவர் கண்களில் மருட்சி தெரிந்தது. எதையோ கண்டு பயந்து ஓடி வந்ததுபோல் இருந்தது. சிற்றூர் மக்கள் கூட்டம் கூடி விட்டனர். 

“தாத்தா! என்ன ஆயிற்று! ஏன் பயந்து ஓடி வருகிறீர்கள்?” என்று ஆளுக்கு ஆள் கேட்டார்கள். 

“பேய்! பேய்!” என்று கூவிய கிழவர் மூர்ச்சித்து மயக்கம் போட்டு விழுந்து விட்டார். 

அவர் முகத்தில் தண்ணீர் அடித்தார்கள். சற்று நேரத்தில் மயக்கந்தெளிந்து கண்விழித்தார். 

“பேய்! பேய்! என்னைக் கொத்தி விட்டது! காலைப்பாருங்கள்” என்றார் கிழவர். 

கால் சட்டை பொத்தல் பொத்தலாக இருந்தது. காலிலும் இரண்டொரு இடத்தில் ஊசி குத்தியதுபோல் இருந்தது. சிறிது இரத்தமும் வெளியில் வந்து காய்ந்திருந்தது. 

“என் காலைப் பேய் கொத்தியது, கால் சட்டைகிழிந்து விட்டது! நான் உயிர் தப்பி ஓடிவந்து விட்டேன்!” என்றார் கிழவார். 

கிழவர் சொல்வதை யாராலும் நம்ப முடியவில்லை. பொதுவுடைமைக் கட்சிக் காரர்கள், புரட்சி அரசை ஏற்படுத்தி இருபது ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆட்சிக்கு வந்த வுடனேயே நாட்டில் இருந்த பேய்களை யெல்லாம், வெடிவைத்துச் சுட்டுப் பொசுக்கி விட்டார்கள். எல்லாப் பேய்களும் ஒழிந்து போய் விட்டன. இது வரை கடந்த இருபது ஆண்டுகளாக யாரும் பேய்கள் இருப்பதாகச் சொல்லவில்லை. அப்படி யிருக்க இந்தக் கிழவர் பேயைப் பார்த்ததாகச் சொல்லுவதை யார் நம்ப முடியும்? 

மேலும் பேய்கள் இருந்ததாகக் கருதப் பட்ட பழைய காலத்தில் அவை மனிதர் களையோ மாட்டையோ அறைந்து கொன்ற தாகத் தான் கேள்விப் பட்டிருக்கிறோம். கொத்தியதாகவோ, கால் சட்டையைப் பொத்த தாகவோ கேள்விப் பட்டதில்லை. ஆகவே இந்தக் கிழவர் சொல்லுவதை நம்பமுடிய வில்லை என்று அந்த ஊர்க் கிழவிகள் கூறினார்கள். 

ஆனால், அன்று முதல் யாரும் ஏரிக் கரைக்குச் செல்லவில்லை. பெர்ரிப் பழம் பறிக்கும் வேலை நடைபெற வில்லை. சந்தையில் பெர்ரிப் பழம் கிடைக்க வில்லை. 

பேய் என்றதும் எல்லோரும் பயந்து விட்டனர். ஆனால் பேய்களுக்குப் பயப் படுவதாகச் சொல்லிக் கொள்ள அவர்களுக்கு வெட்கமாக இருந்தது. ஆகவே, ஏன் பெர்ரிப் பழம் பறிக்க ஏரிக்கரைக்குப் போக வில்லை என்று கேட்டால், இந்த ஆண்டு பெர்ரிப் பழம் விளைய வில்லை. பழம் விளைந்தால் அல்லவா பறிக்கப் போகலாம் என்று பதில் கூறினார்கள். 

ஆனால் இந்தச் செய்தி நாளிதழ் ஆசிரியர்களுக்குக் கிடைத்தது. அவர்கள் செய்தியாளர்களை அந்தச் சிற்றூருக்கு அனுப்பினார்கள். புரட்சி ஏற்பட்டு இருபது ஆண்டுகள் கழித்து முதன் முதலாகத் தோன்றியிருக்கும் பேயைப்பற்றித் தெரிந்து செய்தி கொடுப்பதற்காகச் செய்தியாளர்கள் அந்தச் சிற்றூருக்குச் சென்றனர். 

பேயைக் கண்ட கிழவரை அவர்கள் பேட்டி கண்டார்கள். பேயை எங்கே கண்டார் என்று கேட்டார்கள். ஏரிக்கரையில் கண்ட தாகக் கூறினார். 

“பேய் எப்படி இருந்தது” என்று கேட்டார்கள். 

“அது மனிதனைப் போலவும் இல்லை; பறவையைப் போலவும் இல்லை. அதன்குரல் பயங்கரமாக இருந்தது. அது விரட்டிக் கொண்டு வந்து என் காலைக் கொத்தியது. அது பாய்ந்து கொத்தியதில் என் கால் சட்டை பொத்தலாகிவிட்டது” என்றார் கிழவர். 

மறுநாள் செய்தியாளர்கள் கிழவரை யழைத்துக் கொண்டு ஏரிக்கரைக்குச் சென்றார்கள். முதலில் வரமறுத்த கிழவர், துணைக்கு ஐந்தாறுபேர் வருவதால் சிறிது மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு புறப் பட்டார். 

பேய்கள் பகலில் உச்சி வேளையிலும், இரவிலும் தான் நடமாடும் என்பது பழைய காலத்துக் கருத்து. செய்தியாளர்கள் ஏரிக் கரை போய்ச்சேரும் போது மாலை நேரம். எனவே இரவுவரும் வரை காத்திருந்தார்கள். இரவு நெடுநேரம் வரை காத்திருந்தார்கள். பேயைச் சுடுவதற்குச் சுழல் துப்பாக்கிகள், புகைப் படம் எடுப்பதற்குப் புகைப்படப் பெட்டிகள், அதன் குரலை ஒலிப்பதிவு செய்வதற்கு பதிவுநாடாக் கருவிகள் எல்லாம் கொண்டு போயிருந்தார்கள். 

நெடுநேரம் வரை எந்தப் பேயும் வர வில்லை. எனவே, செய்தியாளர்கள் ஒவ் வொருவராக ஏரிக் கரையில் தூங்கத் தொடங்கிவிட்டார்கள். 

கிழவர் மட்டும் விழித்துக் கொண்டிருந் தார். ஆனால், தரையில் படுத்துப் போர்வையால் தலைமுதல் கால்வரை இழுத்துப் போர்த்திக் கொண்டிருந்தார். கண்களையும் மூடிக் கொண்டார். எல்லாரும் தூங்குகிற போது பேய்வந்து தன்னைக் கொத்தினால், யார் உதவிக்கு வருவார்கள் என்று நினைத்துப் பார்த்தபோது அவர் நெஞ்சு நடுங்கியது. 

நடு நடுவில் கிழவர் போர்வையை நீக்கி வெளியில் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார். 

நள்ளிரவு நேரம். ஒரே இருட்டு. திடீரென்று ஏரியின் நடுவில் தண்ணீரில் யாரோ இரண்டு பேர் மோதிக் கொண்டு சண்டை போடுவது போன்ற ஓசை எழுந்தது. கிழவர் பயந்து துள்ளிப் பக்கத்தில் தூங்கிக் கொண்டிருந்த செய்தியாளர் மேல் போய் விழுந்தார். 

“பேய்! பேய்!” கம்மலான குரலில் நடுக்கத்துடன் பேசினார். 

மற்ற செய்தியாளர்கள் எழுப்பப்பட்டனர். பெரிய ஒளிவிளக்குகள் ஏரியை நோக்கி ஒளி பெருக்கிப் பளிச்சிட்டன. ஏரியின் நடுவில் ஒரு பெரிய பறவை இறக்கைகளால் நீரைப் படபட வென்று அடித்தபடி நீந்திக் கொண்டிருந்தது. 

மஞ்சளும் சிவப்பு மான அதன் இறக்கை கள் நீர்ப்பரப்பை அடித்துக் கொண்டிருந்தன. 

“பெலிகன், பெலிகன்” என்று ஒரு செய்தியாளர் கூவினார். 

உடனே மற்றொரு செய்தியாளர், “சென்றவாரம் நம் நாளிதழில் ஓர் அறிவிப்புப் போட்டிருந்தோமே! உயிர்க்காட்சி சாலையி லிருந்து ஒரு பெலிகன் பறவை தப்பியோடி விட்டது. மஞ்சளும் சிவப்புமான இறக்கை களுடன் கூடிய அந்தப் பறவை மனிதர்களை அடித்து வீழ்த்தும் ஆற்றல் உடையது. காண்பவர்கள் தகவல் கொடுக்க வேண்டும் என்று” என்றார். 

மறுநாள் காலையில் உயிர்க்காட்சி சாலைக்குச் செய்தி யனுப்பப் பட்டது. பெரிய வலைகளுடன் கூடிய சரக்குப் பேருந் தில் ஆட்கள் வந்து இறங்கினார்கள். சுற்றி வளைத்துக் கொண்டு அந்தப் பெலிகன் பறவையை வலைக்குள் விழும் படி விரட்டி னார்கள். வலையில் அகப்பட்ட பறவை அதே சரக்குப் பேருந்தில் உயிர்க்காட்சி சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. புறப் படும்போது அந்தப் பெலிகன் பறவை, செய்தியாளர்களைப் பார்த்துச் சீறியது. 

பேய்ப் பீதியைக் கிளப்பிவிட்ட கிழவருக்கு வீண் வதந்தியைப் பரப்பியதற் கான தண்டனை கிடைத்திருக்க வேண்டும். 

ஆனால், தப்பிச் சென்ற பறவையைப் பிடிப்பதற்குத் தகவல் கொடுத்ததற்கான பரிசு கொடுக்கப் பட்டது. 

பரிசு கிடைத்த மகிழ்ச்சியில் அந்தக் கிழவர் “எல்லாம் நன்மைக்குத் தான்!” என்று கூறினார். இனிமேல் எக்காரணத்தைக் கொண்டும் இல்லாத பேய்களைப் பற்றிப் பேசமாட்டேன் என்று செய்தியாளர்களிடம் உறுதி கூறினார். 

பேயின் அச்சம் நீங்கிப் பெண்கள் ஏரிக் கரைக்குச் சென்றனர். மறுநாள் சந்தையில் பெர்ரிப் பழங்கள் கூடை கூடையாக வந்து இறங்கின. 

– பாசமுள்ள நாய்க்குட்டி, முதற் பதிப்பு: ஜூன் 1988, தமிழாலயம், சென்னை.

நாரா.நாச்சியப்பன் நாரா. நாச்சியப்பன் (நாராயணன் நாச்சியப்பன்; பாவலர் நாரா. நாச்சியப்பன்) (ஜூலை 13, 1927 - 2000-த்திற்குப் பின்) கவிஞர், எழுத்தாளர், பதிப்பாளர், அச்சக உரிமையாளர். பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்களுள் ஒருவர். திராவிட இயக்கம் சார்ந்த பல படைப்புகளை, சிறார்களுக்கான பல நூல்களை எழுதினார். தமிழக அரசு இவரது நூல்களை நாட்டுடைமை ஆக்கியுள்ளது. நாரா. நாச்சியப்பன், அன்றைய ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஆத்தங்குடியை அடுத்த முத்துப்பட்டணத்தில், சித. நாரா. நாராயணன் செட்டியார்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *