ஏமாற்றம்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 7, 2016
பார்வையிட்டோர்: 8,671 
 
 

தமிழ், ஆங்கிலம் என்று இரு மொழிகளில் ஏழெட்டு தினசரி பத்திரிகைகள் கோவைப்பதிப்புகள் வெளி வருகின்றன. கடந்த நான்கு மாதங்களாக எல்லாப் பத்திரிகைகளிலும் ஏதாவது ஒரு மூலையில் செயின் பறிப்பு செய்திகள் கட்டாயம் இடம் பெறும்!

அந்த செயின் பறிப்பு நிகழ்ச்சிகளை புதுப் புது கோணங்களில் ரொம்ப வித்தியாசமாக செய்திருப்பார்கள். ராஜேஷ் குமார், பட்டுக் கோட்டை பிரபாகர் போன்றவர்களுக்கு கூட அப்படி வித்தியாசமாக சிந்திக்கத் தெரியாது!

ராகவன் தொடர்கதை படிப்பது போல் அதை தினசரி தேடிப் பிடித்துப் படிப்பான். அதோடு அவன் மனைவியிடமும் சொல்லி எச்சரிக்கை செய்வான்.

ஏனென்றால் காலை ஆறு மணிக்கு முன்பே நடைப் பயிற்சிக்கு அவள் சற்று தொலைவில் இருக்கும் பூங்காவிற்கு கிளம்பி விடுவாள்.

ராகவன் வீட்டிலிருந்து பூங்கா வரை தனியாகத் தான் போக வேண்டும். அங்கு அவள் வயசு தோழிகள் நிறைய சேர்ந்து கொள்வார்கள். அவள் தோழிகள் எல்லாம் வசதி படைத்தவர்கள்!

கோமதி தாலிச் செயினோடு, தினசரி நல்ல புடவைகள் கட்டிக் கொண்டு போவதை தவிர்க்க முடியாது! அதனால் தான் தினசரி ‘ஜாக்கிரதை! ஜாக்கிரதை!’ என்று ராகவன் எச்சரித்து அனுப்புவான்.

கோமதிக்கு சகுனம், சடங்கு, சம்பிரதாயம் எல்லாவற்றிலும் ரொம்ப நம்பிக்கை! ஒரு காரியத்தைத் தொடங்கும் பொழுது, ஒரு சிறிய சகுனத் தடை ஏற்பட்டால் கூட அதை பூதாகாரமாக்கி கவலைப் படுவாள் .பூனை குறுக்கே போனால் கூட என்ன நடக்குமோ ஏது நடக்குமோ என்று பயந்து சாவாள்!

அன்று காலை 6-30 க்கு பேப்பர் படித்துக் கொண்டிருந்த ராகவனுக்கு ஒரு போன் கால் வந்தது. எடுத்தான்.

“ சார்!…நான் உங்க ‘வொய்ப்’போட பிரண்டு பேசறேன்!..நீங்க உடனே புறப்பட்டு ‘பார்க்’.. க்கு வாங்க!…”என்ற குரலில் ஒரே பதற்றம்.

“ என்னம்மா!…நடந்தது?…கோமதிக்கு ஏதாவது ஆகிப் போச்சா?…” என்று ராகவனும் பதறிப் போனான்.

“ சார்!…உங்க ‘வொய்ப் பார்க்’ க்கு பக்கத்தில் வரும் பொழுது பைக்கில் வந்த இருவர் கழுத்தில் கத்தியை விட்டு, தாலிக் கொடியை அறுத்திட்டுப் போயிட்டாங்க!…அவங்க வேதனையில் துடிச்சு கதறி அழறாங்க!…நீங்க உடனே வாங்க!…”

வீட்டு மூலையில் பல்லி கத்தினாக் கூட எதாவது கெட்டது நடந்து விடுமோ என்று பதறும் கோமதியால், தாலி அறுக்கப் பட்டதை நிச்சயம் பொறுத்துக் கொள்ள முடியாது! அதை எப்படி எல்லாம் கற்பனை பண்ணி பயப் படுவாளோ என்று நினைத்து பதறினான் ராகவன்.

அவன் பூங்காவுக்குப் போகும் பொழுது, கோமதியை ஒரு பெஞ்சில் உட்கார வைத்து, தோழிகள் சமாதானப் படுத்திக் கொண்டிருந்தார்கள்.

ராகவனைப் பார்த்ததும் பெரிதாக சத்தம் போட்டு அழுதாள்“ என்னங்க!…இப்பத்தான் ஸ்ரீராம் சிட்டு கம்பெனி சீட்டு எடுத்து எட்டுப் பவுனில் செய்த புத்தம் புதிய தாலி செயினுங்க!….அதோடு போகலிங்க அந்த பாவிங்க!…என் சேமிப்பிலே மாங்கல்யத்தின் இரு பக்கமும் ஏழட்டு தங்கக் காசுகளை வேறு கோர்த்து வச்சிருந்தேனுங்க!…..அதையும் கொண்டு போயிட்டானுக சண்டாளப் பாவிங்க!…எல்லாம் போச்சுங்க!…இப்ப தங்கம் விக்கிற வெலையிலே உடனே உங்களாலே எப்படிங்க இதை எல்லாம் உங்களாலே வாங்க முடியும்?…நினைச்சா என்னாலே தாங்க முடியலையுங்க!…” என்று மீண்டும் அழுகைத் தொடர்ந்தாள் கோமதி.

பாவம் ராகவன்! கோமதியை எப்படி சமாதானம் படுத்தலாம் என்று யோசித்து வந்தானோ அதற்கு அவசியம் இல்லை என்று தெரிந்த பொழுது அவனுக்கு ஏமாற்றமாக இருந்தது!

– புதுகைத் தென்றல் பொங்கல் மலர் 2016

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *