ஏமாற்றம்
கதையாசிரியர்: இரா.துரைமாணிக்கம்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: August 23, 2026
பார்வையிட்டோர்: 65
(2006ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“அம்மா” என்று அழைத்துக் கொண்டே வீட்டுக்குள் நுழைந்தேன்.
“போன காரியம் என்ன ஆயிற்று? காயா பழமா?” என்று கேட்டவாறு என் அம்மா என்னை நோக்கி வந்தார்.
“யாமிருக்க பயமேன்?” என்று தன் சிவந்த கரத்தை உயர்த்திக் காட்டி புன்னகை செய்து கொண்டிருக்கும் முருகன் நமக்குத் துணையாக இருக்கின்ற வரைக்கும் நமக்கு எல்லாமே பழம்தான் அம்மா” என்றேன்.
”நான் விண்ணப்பித்திருந்த நிறுவனத்தில் வேலை கிடைத்துவிட்டது. மாதம் இரண்டாயிரத்து ஐநூறு வெள்ளி சம்பளம். வேலைக்கு நாளைக்கே வரச் சொல்லிவிட்டாங்க” என்றேன்.
“அப்படியா?” அப்பா முருகா! என் குடும்பத்தைக் காக்கும் கடவுளே’ என்றார் என் தாய்.
“போய் குளித்துவிட்டு கோயிலுக்குப் போய்விட்டு வா.” என்று தொடர்ந்து சொன்னார் தாய்.
கோயிலுக்குப் போய்விட்டு வந்த நான், மறுநாள் வேலைக்குச் செல்வதற்குரிய முக்கியமான பொருட்களை எல்லாம் எடுத்து வைத்தேன்.
படுக்கையில் படுத்தால் தூக்கமே வரவில்லை.
வேலைக்குப் போகப் போகிறோம் என்ற மகிழ்ச்சியா அல்லது இதுநாள் வரையில் பட்ட துன்பங்கள் நீங்க போகிறதாலா? தூக்கம் வராமைக்குக் காரணம் புரியவில்லை.
தாலி கட்டிய மனைவியையும் தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் தன்னந்தனியாகத் தவிக்கவிட்டுவிட்டு, எங்கோ போய்விட்டார் என் அப்பா.
அவர் இருந்த போதும் என் அம்மாவுக்குப் பாரமாகத்தான் இருந்தார். இல்லாததும் என் அம்மாவுக்குப் பாரமாகத்தான் இருந்தது.
ஒழுங்காக வேலைக்குப் போவதுமில்லை. அப்படி போனாலும் பெறுகிற சம்பளத்தை எல்லாம் குடித்து முடித்துவிட்டு, வீட்டுக்கு வந்து, என் தாயிடம் பணம் கேட்டு, அடித்துத் துன்புறுத்துவார். “பொறுமைக்குப் பூமியை ஒப்பிடுவார்கள். என் தாய் தன் கழுத்தில் கட்டிய தாலிக்காகப் பூமியைவிட அதிகமாக பொறுத்துக் கொண்டிருந்தார். தனக்காக இல்லாவிட்டாலும் தன் பிள்ளைகளுக்காவது துணையாக இருக்கட்டும் என்று எண்ணிதான் அப்படி இருந்தார். ஆனால், எதற்கும் ஓர் எல்லை உண்டு அல்லவா? சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பார்கள்.
அதுமாதிரி என் தாய் ஒரு நாள் என் அப்பாவை எதிர்க்கத் துணிந்தவுடன், ஓடியவர்தான். அதன் பிறகு அவர் திரும்பவே இல்லை. சட்டிச் சுட்டதடா கை விட்டதுடா’ என அம்மாவும் பேசாது இருந்துவிட்டாள். ஆனால், சின்னஞ்சிறு குழந்தைகளான என்னையும் என் தங்கையையும் வளர்க்க அவர் பட்டுவரும் பாட்டுக்கு அளவே இல்லை. இருந்தாலும் என்னை நல்லமுறையில் படிக்க வைத்துவிட்டால், தன்னுடைய துன்பமெல்லாம் நீங்கிவிடும். என் தங்கைக்கும் உதவியாக இருக்கும் என்ற எண்ணத்தில் என்னைப் படிக்க வைத்தார்.
இன்று நான் படித்து ஒரு பட்டதாரியாகிவிட்டேன். எனக்கு ஒரு நிறுவனத்திலும் வேலை கிடைத்துவிட்டது. இனிமேல் என் தாயையும் தங்கையையும் நன்றாக பார்த்துக் கொள்வதுதான் என் கடமை என்று எண்ணியவாறு படுத்திருந்தேன்.
பொழுது புலர்ந்தது. புள்ளினங்கள் சத்தமிட்டன. சாலைகளில் வாகனங்களின் இரைச்சல், தூக்கம் என்னும் சாக்காட்டில் கிடந்த மக்கள் கண் விழித்தனர். நானும் எழுந்து குளித்துவிட்டு, கடந்தாண்டு தீபாவளிக்காக வாங்கிய சேலையை உடுத்திக் கொண்டு. அம்மாவிடமும் தங்கையிடமும் விடைபெற்றுக் கொண்டு வேலைக்குப் புறப்பட்டேன்.
குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே நிறுவனத்திற்கு வந்துவிட்டேன். நிறுவனத்தின் கதவு இன்னும் திறக்கப்படவில்லை. ஒருவர் ஒருவராக அங்கே பலர் வந்துவிட்டனர். அவர்கள் சாடை மாடையாக என்னைப் பார்த்தனர். அப்போது கார் ஒன்று வந்தது. “முதலாளி வந்து விட்டார்” என்றார் ஒருவர்.
காரிலிருந்து கீழே இறங்கியவரைப் பார்த்தேன். அவர்தான் நேற்று என்னைப் பேட்டி கண்டவர். சுமார் இருபத்தி எட்டு வயதிருக்கும். நல்ல நிறம். சிரித்த முகம். என்னைப் பார்த்ததும் புன்னகை செய்தார். நான் கைகுவித்து வணங்கினேன்.
அங்கு வந்த ஒருவரிடம் நிறுவனத்தின் சாவியைக் கொடுத்து கதவைத் திறக்க சொன்னார்.
பிறகு, அவர்எ ன்னை தன்னோடு வருமாறு அழைத்தார். நானும் அவர் பின்னால் சென்றேன். அவருடைய அறையில் என்னை உட்காருமாறு சொன்னார். சிறிது நேரத்தில் கதவைத் தட்டிக் கொண்டு உள்ளே நுழைந்தவரைப் பார்த்து. “வாங்க கனேஷ், உட்காருங்க. இவர்தான் மிஸ்.மாலதி. நம் நிறுவனத்தின் மேற்பார்வையாளராக இன்று முதல் பொறுப்பு ஏற்கிறார்” என்று என்னை அவருக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். நான் அவருக்கு வணக்கம் கூறினேன். பிறகு, இவர்தான் நம் நிறுவனத்தின் பொருட்கூடத்தின் பொறுப்பாளர். உங்களுக்கு வேண்டிய பொருட்களை இவரிடமிருந்து பெற்று உற்பத்தியாளர்களிடம் கொடுக்க வேண்டும். பிறகு, உற்பத்தி செய்யப்பட்டப் பொருட்களை இவரிடமே ஒப்படைக்க வேண்டும்” என்று என்னிடம் கூறினார்.
அதன் பிறகு என்னை அந்நிறுவனத்தில் உற்பத்தியாளர்களாகப் பணி ஆற்றும் ஊழியர்களிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். அதன் பிறகு என் பணியை நான் செய்யத் தொடங்கினேன்.
நாட்கள் வாரங்களாகி, வாரங்கள் மாதமாக மாறியது. முதல் மாதச் சம்பளத்தைப் பெற்றுக் கொண்ட நான் பெற்ற மகிழ்ச்சியைச் சொல்ல எனக்கு வார்த்தைகளே கிடைக்கவில்லை. சம்பளத்தைப் பெற்றுக் கொண்டு நேராக புடவைக் கடைக்குச் சென்று, என் அம்மாவுக்கு ஒரு பட்டப்புடவையும், தங்கைக்கு ஓர் உடுப்பும். சாமிக்குப் பூமாலையும், பழங்களும், இனிப்பு பலகாரங்களும் வாங்கிக் கொண்டு வீடு திரும்பினேன்.
“இதெல்லாம் என்ன மாலதி! இப்படியா பணத்தைச் செலவு செய்வது?” என்று கோபித்துக் கொண்டாங்க அம்மா.
”எனக்குத் தெரிந்து நீங்க ஒரு நல்ல சேலை கட்டியிருக்கிங்களா அம்மா?” அல்லது நல்ல உணவாவது சாப்பிட்டிருப்பீங்களா?” இனிமேல் எந்தக் குறையும் உங்களுக்கு இருக்கக் கூடாது அம்மா” என்றேன்.
“இனிமேல் எனக்கு என்னம்மா சுகம் வேண்டி இருக்குது? கண்ட படி செலவு செய்யாமல் உன் எதிர்கால வாழ்வுக்குச் சேர்த்து வைத்துக்க” என்றாள் என் தாய்.
“ஏன்?”
“நீ உன் கணவன் வீட்டுக்குப் போகும்போது உனக்குக் கொடுக்க என்னிடம் எதுவும் இல்லை. நீயே சம்பாதித்து சேமித்துதான் கொண்டு போக வேண்டும்” என்றார் அம்மா.
“நான் திருமணமே செய்து கொள்ளப் போவதில்லை. உங்களையும் தங்கையையும் பார்த்துக் கொள்வதுதான் என் கடமை” என்றேன்.
“அப்படி எல்லாம் சொல்லாதே மாலதி. பழுத்த பழம் சாப்பிடப்படாமல் அழுகிப் போவதில் யாருக்கு என்ன பயன்? நீ எனக்குச் சோறு போடுவதைவிட, உன்னை மாலையும் கழுத்துமாகப் பார்ப்பதுதான் பெரும் மகிழ்ச்சியாக இருக்கும். உன் வயிற்றில் ஒரு குழந்தை பிறந்து அந்தக் குழந்தையை என் கைகயால் எடுத்து கொஞ்சினால் என் பிறவிப் பயனை அடைந்திடுவேன்” என் அம்மாவின் கண்கள் கலங்கின.
அம்மாவின் கண்களைத் துடைத்துவிட்டுவிட்டு, எதுவும் பேசாமல் என் அறைக்குள் சென்றேன்.
காலச்சக்கரம் சுழன்று ஓடியது. நான் பணியாற்றிய நிறுவனத்தின் வளர்ச்சிக்கு என்னால் முடிந்த அளவுக்கு உதவி செய்தேன். உற்பத்தியாளர்களிடம் அன்பாகப் பழகி, அவர்களில் ஒருத்தியாக மாறிவிட்டேன். அவர்களின் உடன் பிறப்பாகவே என்னிடம் பழகினார்கள். அதனால் பொருட்களின் உற்பத்தி அதிகரித்தது. அதைக் கண்ட முரளி, என்னை வெகுவாகப் பாராட்டினார். “என்னைப் பாராட்டுவது முக்கியமல்ல. இந்த ஆண்டு எப்போதையும் விட கூடுதலாக ஒரு மாத ‘போனஸ்’ கொடுக்க வேண்டும் என்றேன்.”
“அதற்கென்ன கொடுத்துவிடுவோம்” என்றார் முரளி.
ஒருநாள், என் முதலாளி முரளி, தன்னுடைய அறையிலிருந்து என்னை அழைத்தார். “இன்று மாலை வேலை முடிந்ததும் நான் உங்களிடம் ஒரு முக்கியமான செய்தி பேச வேண்டும். அதனால், வீட்டுக்கு வருவதற்குக் கொஞ்சம் நேரமாகும் என்று உங்கள் அம்மாவிடம் சொல்லிவிடுங்கள்” என்று சொன்னார்.
“நான் என்ன பேசப் போகிறீங்க?” என்று எதுவும் கேட்காமல், என் அம்மாவிடம் அவர் சொன்னபடியே தெரிவித்தேன்.
வேலை முடிந்து, எல்லோரும் வீட்டிற்குப் போய்விட்டார்கள். முதலாளி எப்போதுமே நேரங்கழித்துத்தான் செல்வார். அதனால் அவரைப் பற்றி யாருமே எதுவும் கண்டு கொள்வது இல்லை. நான் அவருடைய அறைக்குள் நுழைந்தேன்.
“உட்கார்” என்றார்.
”உட்கார்ந்தேன்.”
மௌனம் நிலவியது.
நான் அவரைப் பார்ப்பதுமாகவும் சுவர்க்கடிகாரத்தைப் பார்ப்பதுமாகவும் இருந்தேன்.
முதலாளி முரளி தன் இருக்கையில் இருந்து எழுந்தார்.
“நான் இந்த நிறுவனத்துக்கு உன்னை உரிமையுடையவளாக்க விரும்புகிறேன்” என்றார்.
“புரியவில்லையே?”
“புரியவில்லையா? உண்மையாகவா?’
“ஆமாம்!”
“சுற்றி வளைப்பானேன்? உன்னைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்.”
“சார்.”
“உண்மைதான் மாலதி. ஏதோ வேடிக்கையாகச் சொல்வதாக நினைத்துவிடாதே.”
”உங்களுக்கும் எனக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. குப்பையைக் கொண்டுபோய் கோபுரத்திலே வைக்கப் போகிறேன் என்கிறீங்களே!” என்றேன்.
“முதல் முதலில் உன்னைப் பார்த்த அன்றே. நீ என் மனக்குளத்தில் நீந்தும் செந்தாமரைமாகிவிட்டாய். உன் அழகும். அறிவுத் திறனும், அன்பும் என்னை மயக்கிவிட்டன. வாழ்ந்தால் உன்னோடுதான் வாழ வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன்” என்றார்.
“என்னால் இப்போது எதுவும் சொல்ல இயலாது. நீங்கள் என் அம்மாவை வந்து பாருங்கள்” என்றேன்.
“நீண்ட நேரமாகிவிட்டது. வா நானே உன் வீட்டில் விட்டுவிட்டுப் போகிறேன்” என்றார்.
”இல்லே! வேண்டாம்.”
“நான் நாளை மாலை உன் அம்மாவைப் பார்க்க வருகிறேன் என்று சொல்.”
தலையை ஆட்டிக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டேன். வீடு சேர்ந்த நான் விவரத்தை அம்மாவிடம் சொன்னேன்.
என் அம்மாவின் அகத்தின் அழகை முகத்தில் பார்த்தேன்.
“இது பெரிய இடத்து விஷயம். நாம் கவனமாக நடந்து கொள்ள வேண்டும்” என்றேன்.
”ஆமாம்! அந்தத் தம்பி நாளை வரட்டும், நன்றாக எல்லாவற்றையும் விவரமாகத் தெரிந்து கொள்வோம்” என்றார் அம்மா.
மறுநாள், ஞாயிற்றுக்கிழமை. முரளி வருவதாகச் சொல்லி இருந்தார். அதனால் நானும் தாயாரும் பலவகையான இனிப்புப் பலகாரங்கள் செய்து வைத்துக் கொண்டிருந்தோம்.
முரளி சொன்னபடி வந்தார். அவரை வரவேற்று உட்கார வைத்துவிட்டு, நான் சமையல் அறை பக்கம் சென்றுவிட்டேன்.
“நான் வந்திருப்பதற்கான காரணம் தெரியுமா?” என்று அம்மாவைப் பார்த்து கேட்டார்.
“மாலதி சொன்னாள்.”
“உங்களுக்குச் சம்மதம்தானே?’
“எனக்குச் சம்மதம்தான். ஆனால் உங்க வீட்டிலுள்ளவர்களுக்கு இதிலே சம்மதம் என்றால் எங்களுக்கு எங்களுக்கு எவ்விதமான தடையுமில்லை. நீங்க சொல்வதைச் செய்ய நாங்கள் காத்திருக்கிறோம்” என்றாங்க அம்மா.
“உங்க சம்மதம் கிடைத்துவிட்டது. இனிமேல் என் அப்பா அம்மாவைச் சம்மதிக்க வைப்பது என்னுடைய பொறுப்பு. விரைவில் நல்ல முடிவோடு வருகிறேன்” என்றவாறு எழுந்தார்.
“இருங்க தம்பி! காப்பி பலகாரங்கள் சாப்பிட்டுவிட்டுப் போங்கள்” என்று சொல்லியவாறு சமையல் அறை பக்கம் வந்தார்.
“கையில் பலகாரத்தட்டையும் தேநீர் கோப்பையையும் ஏந்திக் கொண்டு மெல்ல மெல்ல நடந்து போனேன். தினமும் அவரைப் பார்த்தபோது ஏற்படாத வெட்கம் இன்று எங்கிருந்துதான் வந்தது என்று எனக்குத் தெரியவில்லை. இதைத்தான் பெண்மையின் குணம் என்கிறார்களோ? தலை குனிந்து கொண்டு நின்ற என்னைப் பார்த்தவாறே பலகாரங்களைச் சாப்பிட்டு முடித்தார்.
வாசல் வரை சென்று அவரை வழியனுப்பி வைத்தோம்.
முரளி, தான் மாலதியை மணந்து கொள்ள விரும்புவதாக அவரின் பெற்றோரிடம் சொன்னபோது “நீ என்ன நினைத்துக் கொண்டு இருக்கிறாய்? ஊர் பேர் தெரியாத யாரையோ எனக்கு மருமகளாகக் கொண்டுவர உனக்கு எப்படி துணிச்சல் வந்தது?” எது எது எங்கே இருக்க வேண்டுமோ அது அது அங்கேதான் இருக்க வேண்டும். இடம் மாறி இருந்தால், அதன் மதிப்பும், பயனும் குறைந்து போய்விடும். குளியலறையில் இருக்க வேண்டிய பொருளைத் தெய்வம் இருக்கும் அறையில் வைக்க முயற்சிக்கலாமா?” பெற்று வளர்த்த எங்களுக்குத் தெரியாதா? உனக்கு ஏற்ற பெண்ணைப் பார்த்துத் திருமணம் செய்து வைக்க? நான் சொல்கிற பெண்ணில் கழுத்தில்தான் நீ தாலி கட்ட வேண்டும்” என்று சிங்கம் போல் கர்ஜித்தார் அப்பா.
முரளி மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் நின்று கொண்டிருந்தான். தாயைப் பார்த்தான். தாய் தரையைப் பார்த்தார்.
முரளி விடுவிடு என்று வீட்டை விட்டு வெளியேறினான்.
என் வீட்டிற்கு வந்தவர் கூறியவற்றைச் கேட்டுவிட்டு, நான் மௌனமாக நின்றேன். என் அம்மா சோகத்தோடு உட்கார்ந்திருந்தார்.
“நான் ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன். என் அப்பாவினுடைய சொத்தில் ஒரு காசு கூட வேண்டாம். நானே உழைத்து உங்களைக் காப்பாற்றுவேன். நீங்க அடுத்த புதன் கிழமை பதிவுத் திருமணத்திற்குத் தயாராய் இருங்கள் என்று சொல்லிவிட்டு, எங்களுடைய பதிலுக்குக்கூட காத்திருக்காமல் கிளம்பிவிட்டார் முரளி.
நாங்களும் நடப்பது நடக்கட்டும் என்று எங்களுக்கு மிகவும் வேண்டியவர்களில் ஒரு சிலரை மட்டும் திருமணப் பதிவகத்திற்கு வரச் சொன்னோம். புதன் கிழமை காலையில் திருமணப் பதிவகத்திற்குச் சென்றபோது, நிறுவனத்தில் பணிபுரியும் சிலருடன், கணேஷ் மாலைகளுடன் காத்திருந்தார். எங்களைப் பார்த்ததும் மகிழ்ச்சியுடன் வரவேற்றார். முரளி விரைவில் வந்துவிடுவார் என்றும் சொன்னார்.
நேரம் ஒன்பது, பத்து. பதினொன்று என்று சென்று கொண்டிருந்தது. முரளி வரவில்லை. கணேஷ் எங்களைப் பார்த்துக் கொண்டு, உள்ளேயும் வெளியேயும் போய்க் கொண்டும், வந்து கொண்டும் இருந்தார். முரளிக்குப் போன் செய்தார். பதில் இல்லை. வந்திருந்த சிலரும் முணுமுணுக்கத் தொடங்கிவிட்டார்கள். முரளி என்ன ஆனார்? ஏன் வரவில்லை? அவருடைய அப்பா அவரைத் தடுத்து வைத்திருக்கிறாரா? எதுவுமே புரியவில்லை. கணேஷ், முரளியின் வீட்டுக்குப் போய் பார்த்துவிட்டு வருவதாகச் சொல்லிவிட்டு போனார். கொஞ்ச நேரத்தில் அவர் திரும்பினார். எல்லோரும் அவனையே பார்த்தனர். முரளி எங்கே என்று கேட்டனர்?
“என்னை மன்னிச்சிடுங்க. நாம் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு நிகழ்ச்சி நடந்துவிட்டது”
“என்ன அது?”
“கணேஷ்சால் பேச முடியவில்லை. தொண்டை அடைத்துக் கொண்டது. முரளி முரளி… இறந்துவிட்டார்.”
“என் தலையில் வானமே விழுந்தது போன்ற ஓர் உணர்வு ஏற்பட்டது.”
”முரளீ!” என்று சத்தமிட்டேன். பிறகு என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது. கண்விழித்துப் பார்த்தபோது என் தாயும் தங்கையும் கண்ணீர் வடித்துக் கொண்டு என் பக்கத்தில் நின்றார்கள்.
முரளி… என் முரளி என்றேன்.
“திருமணப் பதிவகத்திற்கு வந்து கொண்டிருந்தபோது அவருடைய கார் விபத்துக்குள்ளாகியதால், அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கொஞ்ச நேரத்திலேயே நினைவு திரும்பாமலேயே போய்விட்டாராம்” என்று அம்மா அழுது கொண்டே சொன்னார்.
சுவற்றில் தொங்கிய முருகனின் படத்தைப் பார்த்தேன். அதே சிரிப்புதான். அவனின் சிரிப்பின் அர்த்தம் எனக்குப் புரியவில்லை.
– எல்லைக்கோடு (சிறுகதைகள்), பதிப்பாண்டு: 2006, தமிழ்க் கலை அச்சகம், சிங்கப்பூர்.
![]() |
இரா.துரைமாணிக்கம் (பிறப்பு: அக்டோபர் 15 1945) இவர் ஒரு சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளராவார். தமிழ்நாடு, தஞ்சை மாவட்டம் வேப்பக்குளம் எனுமிடத்தில் பிறந்த இவர் சிங்கப்பூருக்கு புலம்பெயர்ந்து அங்கு விவேகானந்தர் தமிழ்ப் பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியையும், உமறுப் புலவர் உயர்நிலைப் பள்ளியில் உயர்நிலைக் கல்வியையும் கற்றார். தமிழ், ஆங்கிலம், மலாய் போன்ற மொழிகளில் தேர்ச்சிமிக்க இவர் தமிழாசிரியராகப் பணியாற்றிவந்தார். அத்துடன் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் சார்பில் 1999ல் சிங்கப்பூர்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
உண்மைச் சுதந்திரம்
அல்போன்ஸ் மோசஸ்
August 25, 2026
கிழக்கின் வெளிச்சம்
தாட்சாயணி
August 25, 2026
அந்த நிமிடம்
சந்திரகௌரி சிவபாலன்
August 25, 2026
