ஏகாந்தம்




அந்திமந்தாரை பூக்கள் மலர்ந்து நறுமணம் பரவும் வேளையில் அரவிந்தன் தனது வேலைகளை முடித்துக் கொண்டு மருத்துவமனையிலிருந்து வீட்டிற்குக் கிளம்பினான். இன்று அம்மாவிடம் பேசவேண்டும். நேற்றே கால் ரொம்ப வலிக்குதுன்னு சொன்னாங்க? எப்படியிருக்காங்கன்னு தெரியலையே. இந்த அப்பா படுத்துறபாடு தாங்கமுடியல. வேலைக்காரங்க எல்லாம் பாத்துக்கிடறதுனால சரியாப்போச்சு. இல்லேன்னா கஷ்டம்தான் என்று நினைத்துக்கொண்டே கார் பார்க்கிங் சென்று காரிலேறி டிரைவ் செய்தான்.

வீட்டிற்கு வந்தவுடன் அம்மாவுக்குப் போன் செய்தான்.
“அம்மா எப்படி இருக்கீங்க? கால் வலி எப்படி இருக்கு”
“பரவாயில்லப்பா. கால்வலி அதுபாட்டுக்கு இருக்கு. உங்க அப்பாதான் இன்னைக்கு வீட்ல இருந்து நான் குளிச்சிட்டு வர்றதுக்குல்ல வெளில போய்ட்டாரு. இன்னும் ரூமுக்குள்ள வச்சு பூட்டத்தான் செய்யணும் போல. கத்துவாரு. கொஞ்ச நேரம் கத்தட்டும்”
“வெளில போனவர பாத்து கூட்டிட்டு வந்துட்டிங்கள்ள. பேசாம அண்ணன்ட்ட சொல்லி ஆஸ்பத்திரில்ல கொண்டு வந்து விடுங்கம்மா”
“சரிப்பா. விடச்சொல்றேன் எனக்கு முன்னாடி அவர் போய்ச்சேர்ந்துடனும்டா. இல்லேன்னா அவரப் பாத்துக்கிடறது உங்களுக்கும் கஷ்டம். அவருக்கும் கஷ்டம்” என்றாள்.
என்று சொன்ன சொர்ணம் அம்மாளுக்கு வயது எழுபத்தைந்து ஆகிறது. அவரது கணவர் முத்துவேலுக்கு எண்பதுவயது. கொஞ்ச நாட்களாகவே வயது முதிர்வின் காரணமாக நினைவை இழந்த அவருக்கு என்ன செய்கிறோம் என்ன பேசுகிறோம் என்பதே இல்லாமல் செயல்கள் செய்து வந்தார். கண்ட இடத்திலெல்லாம் பாத்ரும் போவதுடன் சொர்ணம் அம்மாளைப்படாதபாடு படுத்தினார். கொஞ்ச நேரம் கவனிக்காவிட்டாலும் கால்போன போக்கில் போவதும் வழக்கமாகிவிட்டது.
சொர்ணம் அம்மாளின் இளையமகள் கற்பகத்தின் மகள் பிரியங்காவிற்குத் திருமணம் முடிவாகி நிச்சயதார்த்தம் செய்ய ஏற்பாடானது. அவள் தனது அம்மாவையும் நிச்சயதார்த்தத்திற்கு அழைத்திருந்தாள். சொர்ணம் அம்மாளுக்கு மகள் வீட்டு விசேஷம். போகாமல் இருந்தாலும் தப்பாயிடும். இவரை வச்சுட்டு எப்படிப் போறது? என யோசனையாய் இருந்தது. சரி மகன்களிடம் பேசி முடிவெடுப்போம். அரவிந்தனிடம் அது பற்றி பேச அவன்,
“ஒண்ணும் பிரச்சினையில்லம்மா, அப்பாவை வேலைக்காரர்களிடம் விட்டுட்டுப் போவோம். அவங்க பாத்துப்பாங்க” என்றான்.
மூத்தவன் பார்த்திபனிடம் கேட்டால்,
“கூடவே கூட்டிட்டுப் போலாம்மா. உள்ளுர்தான்னாலும் நம்ம வர ரெண்டு மூணுமணிநேரம் ஆகிடும். அவங்களால சமாளிக்க முடியாது” என்றான். அவளுக்கும் அவரை விட்டுச்செல்ல மனமில்லாத காரணத்தால் அது சரியெனப்படவே ஒத்துக்கொண்டாள்.
நிச்சயதார்த்தம் அன்று அவரை ரெடிபண்ணிக் காரில் அழைத்துச் சென்றார்கள். பார்த்திபன், மனைவி, பிள்ளைகள், சொர்ணம்மாள் என அனைவரும் ஒன்றாகச் சென்றனர். அரவிந்தன் தனது மனைவி சகிதம் வந்திருந்தான். நிச்சயதார்த்தம் தடபுடலாக வெகு சிறப்பாக நடைபெற்றது. சாப்பாடு எல்லாம் முடிந்து பாத்ரூம் செல்வதாகச் சொல்லிச் சென்ற சொர்ணம்மாள் நீண்ட நேரமாகியும் வராமல் போகவே, பார்த்திபன் தனது மனைவியிடம் சொல்லி,
“அம்மாவைப் பார்த்து வா” என அனுப்பினான். பாத்ரூம் சென்ற பார்த்திபனின் மனைவி அங்கு விழுந்து கிடந்த மாமியாரின் நிலையைக் கண்டு, ‘ஆ’ வென அலறினாள். அங்கு வந்த பார்த்திபனும் மற்ற உறவினர்களும் சேர்ந்து சொர்ணம்மாளைத் தூக்கினார். வலியில் கதறித்துடித்த சொர்ணம் அம்மாளை மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஏற்கனவே இதய அறுவைச்சிகிச்சை செய்திருந்த சொர்ணம் அம்மாளுக்குக் காலில் ப்ராக்சர் ஏற்பட்டதால் அரவிந்தன் தனது மருத்துவமனையிலேயே அறுவைச்சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்தான். அறுவைச்சிகிச்சை முடிந்து நன்றாக இருந்த சொர்ணம்மாள் மறுநாள் இறந்துபோனார். தாயின் இறப்பு அரவிந்தனுக்கு பெரும்பாதிப்பை உண்டு செய்தது. தனக்கு முன்பே கணவர் இறந்துவிடவேண்டும், நினைவு தப்பிய அவர் துன்பத்தை அனுபவிக்கக்கூடாது என்று நினைத்த சொர்ணம் அம்மாளின் இழப்பையும் உணராது 50 ஆண்டு திருமணவாழ்வையும் மறந்த முத்துவேலின் வாழ்வு தனிமையிலும் துணையில்லாமலும் கழியப் போகும் அவலநிலையை மறந்து தானாக பேசிக்கொண்டிருந்தார்.
தனது தாயின் இழப்பினாலும் தந்தையின் நிலையை எண்ணியும் அரவிந்தன் ஓவெனக் கதறியழுதான். தாயின் விருப்பம் நிறைவேறாது தந்தையின் தனிமை நிலையை எண்ணியபோது அளவுகடந்த வேதனை மனதில் மண்டியது. முதுமையில் வரும் தனிமை என்பது துயரமானது. அதை அறியாத முத்துவேல் வாய்விட்டுச் சிரித்துக்கொண்டிருந்தார்.