கதையாசிரியர்:
தின/வார இதழ்: மல்லிகை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 18, 2025
பார்வையிட்டோர்: 157 
 
 

(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘எழுச்சி வரவேற்கிறது.’ 

நெஞ்சம் நிறைந்த துயரத்துடன் பஸ்ஸை விட்டிறங்கிய போது கிராமத்தின் எல்லையில் புதிதாக நாட்டப்பட்டிருந்த அந்த எல்லைப் பலகையே முதலில் என் கண்களில் திரையிட்டது. 

அக்கா எனக்கு அனுப்பி வைத்த அந்தத் தந்தி? கண்களிலிருந்து பனித்த நீர்த்துளி கைகளில் புரண்ட அந்தத் தந்தியில் பட்டுத் தெறிப்பதை மட்டுமே என்னால் உணரமுடிகிறது. 

திரும்பிப் பார்க்கிறேன். 

சதா மலர்ந்த முகத்துடன் மிளிரும் என் மனைவி, பொலிவிழந்த முகத்தால் பரிதாபமாக என்னைப் பார்க்கிறாள். அவள் கையிலே சூட்கேசைத் தூக்கிக் கொண்டு, மறுகையில் இரு பிள்ளைகளையுந் தாங்கியவாறு முன்னேறுமாறு தன் முகத்தால் சைகை தருகிறாள். 

அம்மா இறந்து விட்ட…இந்தச் சேதியைக் கூட எனக்கு அறிவிக்க முடியாதவராக, ஐயா இன்னமும் அதே போலிக் கௌரவத்துடன் தான் இருக்கிறாரா? 

கால்கள் முன் நோக்குகின்றன். 

பத்து வருஷங்கள். நினைக்கவே நெஞ்சு நெகிழ்கிறது. பெற்ற தாயையும், பிறந்த ஊரையும் விட்டு இத்தனை காலம் எப்படித் தான் இருந்தேனோ? நேற்று நடந்த நிகழ்ச்சி போல அது இன்னமும் பசுமையாக என் நெஞ்சமெல்லாம் நிறைந்து நிற்கிறது. அதற்கிடையில் 

இருபத்தைந்து வயதாகியும் வேலை வெட்டியில்லாமல் ஊரில் திரிந்த நான் ‘எக்கவுண்ஸ் கிளாக்காக’ அந்த ‘இன்டஸ்றீயில்’ சேர்ந்த போது தான் சாந்தியைச் சந்தித்தேன். பெற்றவரை உடன் பிறந்தவர்களை விட்டுத் தனியாக வாழத் தலைப்பட்ட காலகட்டம் அது. வீட்டு நினைவுகளில் லயித்திருந்த என்னைத் தனியாக வாழத் தைரியமூட்டியதோடன்றி ‘எக்கவுண்சே’ என்னவென்று புரியாத எனக்கு பக்கத்தில் நின்று, சகலதையும் புரியவைத்து புத்துணர்வூட்டினாள் சாந்தி. 

பக்கத் துணையாக நின்றவள் என் அந்தரங்கங்களையும் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்ததோடன்றி, பட்ட கஷ்டங்களிற்கும் தன் புரிந்துணர்வையுந் தரத் தொடங்கிய போதுதான், எங்களது பழக்கம் நட்பையும் மீறி அடுத்த ‘இக்கட்டான’ கட்டத்திற்குச் செல்ல ஆரம்பித்தது. 

சாந்தி துணையின்றி எதுவுமே என் வாழ்வில் இல்லை என்ற நிலையை என் அறிவுப்பூர்வமாக நான் உணர ஆரம்பித்த போது தான் சாந்தியுடன் இணைத்து என் பெயரும் பரவலாக ‘ஒவ்வீஸ்’, ‘ஃபக்ரறி’ முழுவதுமே படு பயங்கரமாக அடிபட ஆரம்பித்தது! 

இந்தச் சேதி ‘பேசணல் மனேஜர்’ வரை எட்டியதன் முடிவு….. இருவரையும் தன் முன்னழைத்து ஒரு நீண்ட ‘அட்வைஸையே’ தந்தார் அவர். 

அவரது ‘அட்வைஸின்’ விளைவு, அன்று வேலை முடிந்த பின்பு அவளுக்கு நான் சொன்னது. “சாந்தி, நானுன்னை கல்யாணம் செய்யிறதாக முடிவெடுத்திருக்கிறன்.” 

வேதனைச் சிரிப்புடன் அவள் சொன்னாள். யாழ்ப்பாணத்தில் உள்ள கிராமமொன்றிலே கீழ் சாதியிலே தான் பிறந்தவளாம். ஏழைக் குடும்பமொன்றிலே ஏழு பெண்களுக்கு மூத்தவளாம் தான். தலைப் பிள்ளையாயிருந்தும் தனக்கென்று கூட வீட்டில் தர ஆன வீடுவாசல், காணி பூமி, நகை நட்டு. காசு பணம் என்று எதுவுமே இல்லையாம். 

கல்யாணப் பேச்செடுத்ததுமே சாதி, சமயம், குலங், கோத்திரம் என ஆதி அந்தங்களை ஆராய்ந்து பார்க்கிற எங்களது மண்ணின் பாரம்பரியம் சாந்தியில் குடிகொண்டிருந்ததிலும், ஆச்சரியப்பட எதுவுமில்லைத்தான். 

“சாதி, சமயம், இன பேதம், இதுகளுக்கு அப்பாற்பட்டவன் நான் என்பதை இவ்வளவு ‘இன்ரிமேற்றா’ என்னோடை பழகின நீ கூடப் புரிந்து கொள்ளேலையா சாந்தி?” 

“நீங்கள் உங்களின்ரை கொள்கைகள் இதுகளை, இந்தப் போலிக் கட்டுக்களைத் தகர்த்தெறியத் தயாராயிருக்கலாம். ஆனால், நீங்கள் வாழ்ந்த சூழல், உங்களின்ரை உற்றம் சுற்றம் எல்லாவற்றையும் மீறி இந்தக் காரியத்தைச் செய்யமுடியாது, ஏனெண்டால் இன்னமும் நாங்கள் அந்தக் கட்டுக்களிற்குக் கட்டுப்பட்டுத்தான் இருக்கிறம். இந்தச் சமூகம் போட்ட வரம்புகளுள் தான் இனியும் வாழப்போறம்”. 

“வசதி படைத்தவர்கள், நிலப்பிரபுக்கள் தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யிறதுக்காக ஏழை எளியதுகளை அடிமைப்படுத்துறதுக்காகத்தான் இந்தக் கட்டுக்களை உருவாக்கினார்கள். இந்த வரம்புகளைப் போட்டார்கள். இப்ப நாங்கள் ஒரு புது நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிருக்கிறம். சாந்தி, அடிமைத்தளை அறுத்து உயர் பதவிகளை வகிக்கிறதுக்கு எல்லாருக்கும் உரிமை இருக்கைக்குள்ளே சம்பந்தம் வைச்சுக் கொள்ளுறதிலை மட்டும் வேலி போடுறது எந்த வகையிலை நியாயம்?” 

“நீங்கள் சொல்லுறது கதைகளுக்கும், நாடகங்களுக்கும் மெருகேற்றலாம். ஆனால், நடைமுறைக்கு சரி வராதது. இப்படியான எழுச்சிகளை ஏற்றுக் கொள்ளுற பக்குவத்துக்கு இந்தச் சமூகம் இன்னமும் வரேலை. சரி. கனக்க ஏன்? இந்தக் கலப்பு மணத்தை ‘அற்லீஸ்ற்’ உங்கடை ‘பெமிலியிலையே’ ஏற்றுக் கொள்ளுவினமா?” 

“நல்ல கதையிது. ஊரிலே சாதி குறைஞ்ச சனங்கள் பிள்ளையார் கோயிலுக்கை உள்ள வேணுமெண்டு நாண்டு கொண்டு நிண்ட போது, அவையளுக்கு ஒத்தாசை புரிந்து, அவையளைக் கோயிலுக்கை உள்ளடுத்தினவர் என்னுடைய ஐயா. நானுன்னைக் கலியாணஞ் செய்யிறதை அவர் போற்றுவாரே தவிர ஒரு நாளும் ஏற்காமல் விடமாட்டார். எங்களை ஒதுக்கி வைக்கமாட்டார். “ஐயாவின் ‘எழுச்சியை’ நம்பி நான் தான் கதையளந்தேன். அப்படி வாய்விட்டுச் சொன்ன எனக்கா இந்தக் கதி?” 

முதன் முதலாக சாந்தியுடன் நான் வீட்டிற்குச் சென்ற போது பூனையாயிருந்து எல்லாவற்றையும் கேட்டறிந்தவர், வேங்கையானார். 

“உமக்கென்ன நெஞ்சழுத்தமிருந்தால் எனக்கொரு சொல்லுக் கூடச் சொல்லாமல் உவளையுங் கூட்டிக் கொண்டு இஞ்சை வந்திருப்பாய்? போடா வெளியாலை.” 

“ஐயா, நான் சொல்லுறதை…” 

“நீர் ஒண்டும் சொல்லத் தேவையில்லை. இல்லைக் கேக்கிறன். குடும்ப நிலவரமறியாமல் நீர் கண்டவளையுங் கூட்டிக் கொண்டு வர இதென்ன தங்குமடமா?” 

“நடந்தது நடந்து போச்சு. அதுக்கேன் இப்ப நெருப்பெடுக்கிறியள்?” அம்மா தான் கூறினா. 

“என்னடி நீ பூராயம் பிடிக்கிறாய்? அந்த நாளையிலை பூசாரியார் எண்டு என்ரை பாட்டனுக்கு ஒரு பட்டப் பேர் இருந்தது. அப்படிப்பட்ட பரம்பரையிலை பிறந்திட்டு இப்பிடிக் குலங், கோத்திரம் எண்டு ஒரு இழவும் பாராமல் எங்கையோ இருந்து எவளையோ கூட்டிக் கொண்டு வரவோ? இல்லைத் தெரியாமல் தான் நான் கேட்கிறன் இவகளவை பல்லைக்காட்டிப் பழகினாப் போலை, நாலெழுத்துப் படிச்சாப் போலை, காவோலை கட்டி இழுத்துத் திரிஞ்ச பழசுகள் எல்லாம் மறைஞ்சு போயிடுமோ?” 

“என்ன கண்டறியாத பழம் பெருமைகள் பறையிறியள்? உங்கை உதுகள் எல்லாரும் மனுசர் எண்டு சொல்லித்தானே திடலிற் சனங்களை பிள்ளையார் கோயிலுக்கை உள்ளடுத்த வலு மும்முரமாக நிண்டனிங்கள். அந்த முகாந்திரங்கள், முசுப்பாத்தியள் எல்லாம் இப்ப எங்கை போட்டுது?” 

“தாலியறுப்பாளே, அது கோயில்”. 

“அப்ப உங்கடை முகாந்திரங்கள் எல்லாம் கோயில் குளத்தோடைதானோ?” 

அம்மாவின் அக்குரல் ஓய முன்பே, ஓங்கி வந்த ஐயாவின் கைகள் அவவைப் பதம் பார்க்கின்றன. 

முற்றத்து வேம்பில் சாத்தியிருந்த பூப்பறிக்கும் தடியை எடுத்தவாறே அவர் சத்தமிடுகிறார்! “இண்டுமேற்பட்டு நீ எனக்கு மகனுமில்லை, நானுனக்கு அப்பனுமில்லை. நான் கவுண்டாப் போலை …” அவரது போலிக் கௌரவங்கள் முரட்டுப் பிடிவாதங்களாகி, என்னை வெளியேற்றத் தான் வேண்டுமென்ற வைராக்கியமான பின்பு, அவருடன் நான் என்ன கதைப்பது? எதை எடுத்துரைப்பது? 

பற்றை பற்றிய பனைமரங்களினூடாக பிள்ளையார் கோவில் இராஜ கோபுரம் என் கண்களில் திரையிடுகிறது. இந்தப் பத்து வருஷத்தே நிகழ்ந்த கிராமத்தின் மாறுதல்கள்..? 

சிறு பராயத்தில் கூட்டாளிமாருடன் கூடி நான் கிளித்தட்டு விளையாடிய புளியடிப் பிலவில் மாபெருந் தொழிற்பேட்டை, எதிராகத் தொடரமைப்பில் மாடிவீடுகள். மாவில் வயல் மறைந்து அதில் நெசவாலை. அருகே மாதர் சங்கம். அடுத்தாற்போல் எழுச்சி சனசமூக நிலையம். 

பிள்ளையார் கோவில் கூட முழுக்கவே மாறிவிட்டது. நீல வானம் வரை நீண்டு நிமிர்ந்து காற்றில் ‘சலசலத்த’ மகிழ மரங்கள் நின்ற இடத்தே சீனப் பெருஞ்சுவரை விஞ்சிய தேர்முட்டி. அதனுள்ளே அழகிய சித்திரத் தேர். கோவிலினருகே புதிய பொலிவுடன் தீர்த்தக் கேணி. 

சந்தியைத் தாண்டி கல்லுாரி வீதிக்கு வந்துவிட்டோம். கொட்டிலுங் குடிலுமாக இருந்த அரசடிப் பள்ளி, இன்று மாட கூடங்களுடன் கூடிய இந்துக் கல்லுாரி அன்று சேறும் சகதியுமாய் இருந்த வண்ணாமூலை இன்று கல்லூரி வீதி, வடலியும் பனையுமாய் இருந்த திடல், வளமான திடலூார். 

குடிமைத் தொழிலாக, அடிமைத் தொழிலாக தொழிலைக் கருதாது, தங்களைத் தேடி பிறரை வரவைக்கும் சுதந்திரத் தொழில் செய்பவர்களாக மக்கள் இயங்க ஆரம்பித்து விட்டார்கள் என்பதைப் படம் பிடிக்குமாப் போல் ‘லோன்றி’, ‘சலுான்’, தொடரில் பனம் பொருள் விற்பனை நிலையம். 

மொத்தத்தில் பழைய அரசடிக் கிராம நிலை கூர்ப்புற்று இப்போ, எழுச்சி மிக்க புத்தார் ஒன்று கண்களில் திரையிடுகிறது. 

தூரத்தே.. 

வீட்டு வாசலில், மதவடியில், என் ‘அன்னை இல்லத்தில்’ பலர் குழுமியிருப்பது எனக்குத் தெளிவாகவே தெரிகிறது. என்னையே அறியாது நெஞ்சம் விம்மி கண்களில் நீர் கரைகின்றது. 

‘நான் கவுண்டாப்போலை கொள்ளி வைக்கிற உருத்துக்கூட உனக்கில்லை எண்டு உங்கடை ஐயா அண்டைக்குச் சொன்னாரே. அதை…’ மீதியைச் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாது சாந்தி தவிப்பதை என்னால் நன்குணர முடிகிறது. 

ஐயா ஏன் இப்படி எல்லாம் வெறுப்பைக் கொட்டி என்னுடன் நடந்து கொள்கிறார். அப்படி நான் செய்த தவறு தான் என்ன? புரியாத புதிராகவே இருக்கிறது. என்னால், என் செய்கையால் கோயில் குருக்கள் அளித்த பூசாரியார் என்ற பட்டப் பெயரும், பதவியும் பறிபோயிடுமே என்றா, இவர் இப்படிக் கவலைப்படுகிறார்? 

நிலப்பிரபுத்துவம் கற்பழிந்து ஓர் எழுச்சிமிக்க சமுதாயத்தைப் படம் பிடிக்கும் கிராமத்தில், இன்னமும் பழம் பெருமைகளைப் பிரதிபலிக்கின்ற இதயங்களா? காலத்தின் மாறுதல்களோடு மனிதர்களின் இயல்பும் மாறாமலா போய்விடப் போகின்றது? 

அம்மாவின் இந்தச் சாவுக்கு அவவின் ஆஸ்மாதான் காரணமாயிருக்கும். ‘அக்கை வருத்தத்தோடை கண்டபடி வேலை செய்யாதை’ என்று டொக்டர் மாமா எவ்வளவு எடுத்துச் சொன்னாலும், ஒண்டையுமே கேளாமல் ஓயாத வேலை. அப்பிடி அவிச்சுக் கொட்டித்தான் என்னத்தைக் கண்டுட்டா? கடன்தனிக் கவலையள் ஒருபுறம், என்னுடைய சிந்தனையள் ஒருபுறம், எல்லாம் ஒருமிக்கச் சேர்ந்து தாரைவார்த்துப் போட்டுது. 

அக்கா தனது கலியாணத்துக்குப் பிறகு வேற்றார் குடியேறிய பிறகு தங்கச்சி தானே தனிய அவவிற்குத் துணையாயிருந்தவள். அப்ப அவளுக்கு பன்னிரண்டு, பதின்மூன்று வயது. இப்ப அவள் பெரிய குமராகியிருப்பள். 

வீட்டுப் படலை கிட்டிவிட்டது. ஏனோ என் சதுரம் நடுங்க ஆரம்பிக்கிறது. கால்கள் தள்ளாடுகின்றன. படலையைத் தாண்டி முற்றத்தில் காலடி வைக்கிறேன். 

“என்ரை செல்லத்தம்பி, நீ வந்து சேர்ந்தியோடா. எங்களைப் பெத்த தெய்வம். ” அம்மாவின் தலைமாட்டிலிருந்த அக்கா ஓடிவந்து என் காலடியில் விழுகின்றா. தொடர்ந்து சீனியம்மா, பொங்கி வந்த துயரத்தை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. என்னையே அறியாமல் நான்… 

அழுகுரல்கள் ஓய்ந்தன. 

“ஒருவரும் இஞ்சை வரத் தேவையில்லை. கொள்ளி வைக்க ஏன் நான் இருக்கிறன். நான் வடிவா வைச்சு முடிப்பன்.” அப்போது தான் எங்கிருந்தோ வந்த ஐயா சற்றுச் சத்தமாக சொன்னார். அவர் பின்னால் ஆவேசத்துடன் அவரது ஒன்றுவிட்ட சகோதரி கனகத்தின் கணவன் சந்திரசேகரர் நிற்கிறார். 

“அம்மா சொல்லைக்கை பேசாமல் நிண்டுட்டு இப்பென்ன சமா வைக்கிறியள்?” அழுது களைத்திருந்தாலும் அக்காவின் மூச்சுக் குறையவே இல்லை. 

“என்ன…என்ன…சொன்னவ?” 

“தான் செத்தாப் போலை தனக்கு மோன் தான் கொள்ளி வைக்க வேணு மெண்டு, சீவன் போகக்குள்ளை அந்த மனுசி மண்டாடினதெல்லே? கையெடுத்துக் கும்பிட்டதெல்லே?” 

ஒப்பாரிக் குரல்கள் ஓய்கின்றன. கட்டியணைத்து அழுத பெண்கள் எட்ட விலகிக் குந்துகின்றனர். 

“சந்திரசேகரி, என்ன பார்த்துக் கொண்டு நிக்கிறாய்? ஆக்களைப் பிடிச்சு வெளியாலை அனுப்பு.” சாகப்போகிற வயதிலும் தந்தையார் தன் சாகாத பிடிவாதத்தால் சத்தமிடவே, குடுமிக்கார அம்மான் தன் குடுமியை ஒருமுறை உலுப்பி முடிந்து கொண்டே, தன் கடமையில் ஈடுபட முனைகின்றார். அரவமறிந்து அலுவலுடன் நின்ற கனகம் மாமியும் ஓடி வந்து விடுப்புப் பார்க்கிறா. 

“அம்மான், சும்மாயிருங்கோ. அவனை வரச்சொல்லி நான் தான் தந்தியடிச்சனான்.” 

“ஒகோண்டானாம். அதுவும் உம்மடை முகாந்திரமோ?” 

இழவு வீட்டிற்கு வருவோரை அறிவிக்கும் பறை விட்டு விட்டு ஒலித்தது. இடையிடையே அழுகுரல்கள்…….. 

“அம்மா! இஞ்சை என்ரை நிலையைப் பாரம்மா. நீ எங்களையெல்லாம் விட்டுவிட்டுப் போய் விட்டாய். இஞ்சை நாங்கள் படுகிற பாட்டைக் கொஞ்சம் கண்திறந்து பாரம்மா.” அம்மாவின் தலைமாட்டில் நான் விழுந்து புரளுகிறேன். சாந்தியும்,என் இரு பிள்ளைகளும் என்னருகே விழுந்து அழுகிறார்கள். 

அம்மா நிம்மதியாக உறங்குகின்றா. அவவிற்குத்தான் நரகத்திலிருந்து விடுதலை கிடைத்து விட்டதே. 

கொள்ளி வைப்பது யார் என்ற பிரச்சனை. குருக்கள் பகுதியிலும். “ஏன் பொடியன் வந்திட்டான் தானே? வரச் சொல்லுங்கோவன்.” டொக்டர் மாமா தான் சத்தமாகச் சொல்கிறார். தன் உடன் பிறந்தவளின் இறுதி எண்ணமாவது நிறைவேறட்டுமே என்ற அங்கலாய்ப்பு அவரிற்கு. 

“என்ன டாக்குத்தர் புது நாணயக்கதை பறையிறியள்? அது அத்தானெல்லோ கிறுத்தியத்துக்கு நிக்கிறது.” சந்திரசேகரி அம்மான் அடிக்குரலெடுத்தார். 

“ம்…கிறுத்தியத்துக்கு நிக்கிறாள் தோஞ்சு வெள்ளை வேட்டி கட்டி வரவேணும்.” 

குருக்கள் இயங்க ஆரம்பித்து விட்டார். கும்பங்களைப் பரப்பி, சுள்ளிகளால் சுவாலை எழுப்பி ஓமம் வளர்க்கிறார் அவர். 

ஐயாவை அழைத்துக் கொண்டு அம்மான் கிணற்றடிப் பக்கம் செல்கிறார். அப்போ…”என்னக்கா செய்யுது?” 

“ஒண்டுமில்லையடா. தலைக்கை ஒரே அம்மலாக் கிடக்குது. மயக்கம் வருமாப் போலக் கிடக்கு.” அக்காவின் சிவந்த முகம் இருண்டு கொண்டு வந்தது. கண்கள் பிரண்டன. பக்கத்து வளவு புவனேசு அக்கா கோப்பி கொண்டு வந்து சாந்தியிடம் கொடுக்கின்றா. 

“புவனேசு, என்ன விசர் வேலை பார்க்கிறாய்? அவளுக்கு கோப்பியை நீ பருக்கு.” அவசர அவசரமாக ஓடிவந்த கனகம் மாமியின் குரலது. எதுவுமே வேண்டாமென அக்கா சாந்தியிடம் சைகை காட்டுகிறா. 

“தங்கைச்சி எங்கை?” அருகிலிருந்த சீனியம்மாவிடம் கேட்கிறேன். 

“அவள் கலியாணங் கட்டி புருஷனோடை கிளிநொச்சி யிலையடா. தந்தியடிச்சனாங்கள். இன்னுங் காணேல்லை.” கண்கள் கலங்க சீனியம்மா புலம்பினா. 

“குளிப்பாட்டுற பெண்டுகள் குடமெடுக்க வாருங்கோ.” அம்மான் என்னருகே வந்து நின்று கூறுகிறார். 

இரத்த உருத்துக்கள், மாமி,மச்சாள் முறைதலைகள் அலசப்படுகின்றன. முதலில் கனகம் மாமியின் பெயர் பிரேரிக்கப்படுகிறது. மேலும் ஒன்றுவிட்ட சில உறவு முறைகள், இருவர் தேர்வாகின்றனர். 

“என்ன இதெல்லாம் இரத்த உருத்தாக் கிடக்கு? சம்பந்த வழியிலையும் ஓராள் தேவையெல்லே?” கோணியக்கையின் குரலது. 

“அந்தச் சீரழிவுகளையும், சீத்துவக் கேடுகளையும் ஏன் கோணி இப்ப கேட்டு பரிசுகேடு படுத்துறாய்?” வேட்டியை மடித்துக் கட்டியவாறே அம்மான் என்னைப் பார்த்துக் கறுவிவிட்டு பின் நகருகிறார். 

“கட்டாடி எங்கை? எட…என்ன வலு எட்டத்தை நிக்கிறாய்? உனக்கு உதி கிடக்கிற வண்ணா முலையிலையிருந்து வர இவ்வளவு நேரமே? சரி…. சரி…. போய்க் குளிப்பாட்டுற இடத்துக்கு வெள்ளை கட்டிவிடு. ம்…ம்… விலத்துங்கோ, குளிப்பாட்ட சவத்தைத் தாக்கப் போறம்.”தனக்கு அளிக்கப்பட்ட கெளரவம் காரணமாக கனகம் மாமி பம்பரமாகிவிட்டா. 

நான் விலகுகிறேன். 

அருகிலிருந்த சாந்தியைக் கைத்தாங்கலாக்கி அக்கா குளிப்பாட்டுமிடம் செல்கிறா. 

“மூப்பன், என்ன நீ வந்த நேரந் தொடக்கம் பறையோடையே மெனெக்கெடுகிறாய்.ஒல்லுப்போலை உதிலே பொடியனை விட்டுட்டு இஞ்சை பசுவதிக்கு பாடை கட்டுறதுக்கு கொஞ்சம் வந்து உதவி செய். கோணி. கதைக்குள்ளை கதை உங்கடை பகுதியிலை நாலு பொடியங்களைப் பாத்து ஆயத்தப்படுத்து பாடை தூக்க. ம்.. என்ன கந்தன் அத்தான்ரை அலுவல் முடிஞ்சுதே? இஞ்சை வா. உண்ணானை உன்ரை கத்தியாலை என்ரை முகத்தையும் ஒருக்கால் தட்டிவிடு.” அம்மானுக்கோ வலு உசார். 

“பந்தம் பிடிக்கப் பேரப் பிள்ளையள் எல்லாரையும் கூப்பிடுங்கோ.” கோணியக்கை சத்தமாகச் சொல்லிய போது, அக்காவின் மூன்று பிள்ளைகளையும் அழைத்தவாறே கனகம் மாமி வருகிறா. மேலும் இரு பந்தங்களைக் காவிக் கொண்டு சீனியம்மா என் பிள்ளைகட்கருகில் வரும் போது, “மச்சாள் என்ன வேலை பாக்கிறாய்?” என மாமி கேட்கிறா. 

பலாத்காரமாகப் பந்தங்கள் பறிக்கப்படுகின்றன. 

பந்தங்கள் பறிக்கப்பட்டாலும், விடாப்பிடியாக சீனியம்மா என் 

பிள்ளைகளை அம்மாவின் தலைமாட்டில் வைத்திருக்கின்றா. 

“ம்…. இன்னும் என்ன அலுவல்?” ஒரு நிலையில் நில்லாது பந்தலில் ஆடிய தோரணங்களை விலத்தியவாறே ஐயா என்னருகே. 

“சவத்தைத் தூக்கப் போறம். வாய்க்கரிசி போடுற பெண்டுகள் ஒல்லுப்போலை எழும்புங்கோவன். அது சரி மெய்யேப்பா? உவன் சரவணை சுடலைக்குப் போட்டானோ? பாத்து ஆளை அனுப்பு. போன கிழமை பெய்த அடை மழையாலை விறகுகளும் ஒரே பச்சையாயிருக்கப் போகுது. உவன் போய் அதுகளைப் பாத்து ஒழுங்கு பண்ணாட்டி நாங்கள் தான் போய் நிண்டு மாரடிக்க வேணும். திடலாருக்குமெல்லே இப்ப கண்டறியாத வால் முளைச்சிட்டுது கண்டியோ? அவயளுக்கு ஒரு கிழிஞ்ச திடலுார்? எங்கடை பகுதிக்கை சீத்துவக்கேடுகள் இருக்கைக்குள்ளே, ஏன்? ” அம்மான் புதுக்கோலம் பூண்டு விட்டார். 

மாமனாரின் மரத்துவிட்ட வார்த்தைகளால் மௌனியான சாந்தி, மௌனம் கலைந்து ஏதோ மெல்ல ‘முணு முணு ‘க்கிறாள். 

“பொறப்பா, சுடலைக்காவது போட்டுப் போவம்.”நான் சற்று ஆவேசத்துடன் கூறுகின்றேன். 

“ஏன் சுடலைக்கு, என்னையும் உடன் கட்டை ஏத்தவோ?” அழுகுரல்கட்கு மேலாக இன்னமும் அதே அழுத்தமான குரல். 

“இப்ப நான் போறன். பிறகு ஒரு நாளைக்கு இங்கை வரத்தான் போறன்.” 

“ஓ! வருவாயாக்கும். அது நான் கவுண்டாப்போலை.” 

‘நீங்கள் கவுண்டாப் போலையில்லை. உங்களோடையொட்டிய இந்தப் போலிக் கௌரவங்கள், பழம் பெருமைகள், சுயநலங்கள் கழண்டாப் போலை.’ எனக்குள் நான் கூறுகிறேன். 

“தம்பி., என்ரை செல்லத் தம்பி. … ” அழுகுரல்கட்கு மேலாக அதே அழுத்தமான குரல். 

என் காதுகளைச் செவிடாக்குகிறேன். இதயம் தான் கல்லாகி விட்டதே. கால்களை இயந்திரமாக்கி. 

என் பின் தொடரும் மூன்று ஜீவன்களிடையே விம்மலும் விசும்பலும்.

“என்ன மாதிரியிருந்த பூசாரியார் வளவிற்கு எப்பிடி வாழ்மானம் வந்தது பாத்தியளே? பொடியரும் அப்பிடி. இனி இளையவளும் படிப்பிச்ச இடத்திலே எளிய சாதிக்கை. அது தான் அவன் திடலில் வாத்திப் பொடியனோடை ஓடினாலும் ஓடினாள். பெத்த தாய் செத்ததுக்கே வரேல்லைப் பாத்தியளே.” படலையடியில் யாரோ ஒருவர் கூறிக்கொள்கிறார். 

பார்வைக்கும், பெயருக்கும் மட்டுமே எழுச்சி காட்டி, அடிமைத் தனத்திலும் குடிமைத்தொழிலிலும் இன்னமும் அதே அரசடியாகவே விளங்குகின்ற இந்தக் கிராமத்திலே…தங்கச்சி வாழ்க்கை முறையாலை அதை நீ மாற்ற முயன்றிருக்கின்றாயே…? 

ஆலயப் பிரவேசம் எண்டு பத்து வருடங்களுக்கு முந்தி அப்பருந்தான் ‘எழுச்சி’ செய்தார். அதை நம்பி கலப்பு மணம் எண்டு சொல்லி நான் கூடத்தான் ‘புரட்சி’ செய்தேன். அப்படிச் செய்த எனக்கு இந்த ஊர் இதே எழுச்சிக் கிராமம், தந்த வசைமாரிகளை, வரவேற்புகளை நேரில் கண்ட நீயே இப்படியொரு புதுமையைச் செய்யத் துணிந்தாயே. தங்கைச்சி உண்மையிலை நீ தானம்மா ஒரு எழுச்சி. 

சடங்குகளிலும், சம்பிரதாயங்களிலும் பிறரைக் குடிமைத் தொழில்களுக்குப் பயன்படுத்தாது தாமே அதையேற்று எப்போது அரசடி இயங்க ஆரம்பிக்கின்றதோ… அதுவரையில் தங்கச்சி உனது செய்கையும், சிந்தனையும் எழுச்சியாகவே இந்த அரசடிக் கிராமத்தில்… அர்த்தப் பட்டுக் கொண்டிருக்கும். 

அந்த இந்துக் கல்லுாரி, பிள்ளையார் கோவில், எழுச்சி சனசமூக நிலையம், மாதர் சங்கம், தொடர் மாடி வீடு, தொழிற்பேட்டை யாவற்றையும் விட நாம் முன்னேறி விட்டோம். 

இதோ, இப்போ கிராமத்தின் எல்லையில் நாட்டப்பட்டி ருக்கும் அந்த எல்லைப் பலகை வாசகங்கள் கலங்கிய கண்களுக்கும் மிகத் தெளிவாகவே எமக்குத் தெரிகிறது. 

‘நன்றி மீண்டும் வருக.’ 

– மல்லிகை

– புதிய பயணம் (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: வைகாசி 1996, பதிப்புரிமை: திருமதி இ.சாந்த குமாரி, கொழும்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *