எரி நிலம்!
கதையாசிரியர்: மா.சித்திவினாயகம்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: August 25, 2026
பார்வையிட்டோர்: 119

கனடாவின் அடர்ந்த காடுகள் எரியத் தொடங்கியபோது, வானம் தன் நீல நிறத்தை இழந்து, கண்ணுக் கெட்டாத தூரம் வரை மஞ்சள் நிற நச்சுப் புகையை மட்டுமே மண்டிக் கிடந்தது. பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, பனிப்பாறைகள் உருகி வழிந்தபோது பிறந்த இந்த நிலத்தை செவ்விந்தியப் பழங்குடிகளின் மூதாதையர்கள் தங்களின் தாயாக ஏற்றனர். அவர்கள் நிலத்தை ஆக்கிரமிக்கவில்லை, நிலத்தின் ஒரு பகுதியாக மாறினர்.
மனித இனம் எப்படி ஒரு நதிக்கரையிலிருந்து இன்னொரு நதிக்கரைக்கு நகர்ந்து, இயற்கையோடு போராடி நாகரிகங்களை உருவாக்கியதோ, அதேபோன்ற தொல்வரலாறு இந்தச் செவ்விந்தியர்களுக்கும் இருந்தது. ஆனால் நாகரிக மனிதர்களாகி நாடுகளைப் பிடித்து மனிதர்களை மனிதர்களே அடிமையாக்குகிற காலனியாதிக்க வன்மம் இவர்களிடம் இல்லை. இவர்களை போரால் அழித்தும், நோய்கண்ட போர்வைகள் கொடுத்து நயவஞ்சகமாக கொன்றும், அவர்களினத்தை நிர்மூலமாக்கி அவர்களிடத்தை ஆக்கிரமித்து ஆண்டுகொண்டிருப்பது காலனியாதிக்கம். மனிதன் ஆதியில் இருந்த இடத்தில் இருந்து இன்று வெகுதூரம் வந்து விட்டான்.
ஆனாலும் இந்தியக் கங்கைக் கரையின் முனிவர்கள் இயற்கையை எப்படி வருணனாகவும், அக்னியாகவும் ஓரிடத்திலிருந்தே வழிபட்டார்களோ, அப்படியே இந்தச் செவ்விந்திய மக்கள் தம்முன்னிருந்த இயற்கையை ‘மகா ஆத்மா’ என்று வழிபட்டுக் கொண்டிருக்கின்றனர்.
அப்படிப்பட்ட ஒரு பாரம்பரியத்தில் வந்த ‘அஹோதே’ என்ற ஆதிக்குடிக் கிழவர் தன் பழங்குடி இனத்தின் இருபதாவது தலைமுறை வாரிசு. அவரது தோல் சுருங்கிய கைகள், காட்டின் மரப்பட்டைகளைப் போலக் கரடுமுரடானவை. அவர் ஓடும் நதியின் சத்தத்தை வைத்தும், மரங்களின் இலைகள் அசையும் திசையை வைத்தும் காட்டின் மனநிலையைக் கணிக்கக்கூடியவர். அவரது குடும்பம் ‘கிரே’ மொழிப் பழங்குடி இனத்தைச் சேர்ந்தது. அவரது மனைவி மாய், மகன் தகுகா, மருமகள் ஒலினா, மற்றும் பேரன் இஸ்டாஸ் ஆகியோருடன் அவர் வாழ்ந்த கானகம், வெறும் மரங்களின் தொகுப்பல்ல. அது அவர்களின் ஆன்மா, அவர்களின் கடவுள், அவர்களின் வாழ்வாதாரம்.
ஆனால், நவீன மனிதனின் பேராசையால் விளைந்த காலநிலை மாற்றம் பூமியைச் சுட்டெரித்துக் கொண்டிருந்த அந்தச் சூழ்நிலையில், காடு பல வருடங்களாக மழையைக் காணாமல் வறண்டு கிடந்தது. ஒரு நாள் அதிகாலையில், வழக்கமான பறவைகளின் கீதங்களுக்குப் பதிலாக, காடெங்கும் ஒரு விசித்திரமான அமைதி நிலவியது. கிழக்குத் திசையில் வானம் மெல்ல மெல்ல மஞ்சள் நிறமாக மாறத் தொடங்கியது. அது விடியலின் ஒளியல்ல; மரணத்தின் புகை மூட்டம்.
“அப்பா, காடு எரிகிறது!” என்று பதற்றத்துடன் ஓடிவந்தான் தகுகா. அஹோதே வெளியே வந்து வானத்தைப் பார்த்தார். காற்று சுழன்றடித்தது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை காடுகள் எரியத் தொடங்கியிருந்தன. மஞ்சள் புகை ஒட்டுமொத்தக் கனடாவின் வான்பரப்பையும் மூடிக் கொண்டது. சூரியன் ஒரு சிவப்புப் பொட்டு போல மங்கலாகத் தெரிந்தது. புகை மூட்டம் படரத் தொடங்கியதும், காடே மரண ஓலமிட்டது. நூற்றுக்கணக்கான பறவைகள் சிறகுகள் கருகி, பறக்க முடியாமல் தரையில் விழுந்து பரிதாபமாகத் துடித்துக் கருகின. கண்ணுக்கெட்டாத தூரம் வரை பரவியிருந்த பசுமை, சில மணி நேரங்களிலேயே சாம்பல் நிறமாக மாறிக் கொண்டிருந்தது. வேட்டையாடிப் பழகிய அஹோதேயின் கண்களுக்குப் புதிய காட்சியிது. மனம் வேதனையால் கலங்கியது.
காட்டின் ஆழத்தில் வாழ்ந்த கரடிகள், மான்கள், ஓநாய்கள் என அனைத்தும் மனிதர்களைப் பற்றிய பயமின்றி, தங்களின் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள மனிதர்களின் குடியிருப்பு நோக்கி ஓடி வந்தன. இயற்கையின் சீற்றத்திற்கு முன்னால் வேடனும் ஒன்றுதான், இரையும் ஒன்றுதான். நெருப்பு அவர்களின் கிராமத்தை நெருங்கியபோது, “எல்லாவற்றையும் விட்டுவிட்டுப் புறப்படுங்கள்!” என்று பழங்குடித் தலைவர் உத்தரவிட்டார்.
பல தலைமுறைகளாகச் சேர்த்த சொத்துக்கள், பாரம்பரிய உடைகள், வேட்டைக் கருவிகள் என எதையும் அவர்களால் எடுக்க முடியவில்லை. அவர்கள் சேமித்து வைத்திருந்த காட்டுப் பழங்கள், உலர வைக்கப்பட்ட காய்கறிகள், குளிர்காலத்திற்காகச் சேமித்த தானியங்கள் என ஒட்டுமொத்த வாழ்வாதாரமும் தீக்கு இரையாகின. அஹோதேயின் குடும்பம் ஒரு பழைய படகில் ஏறி, எரியும் காட்டின் நடுவே ஓடிய நதியின் வழியே தப்பிக்க முயன்றது.
ஆனால் சுற்றிலும் தீப்பிழம்புகள் நடனமாடின. அசுர வேகத்தில் வந்த மஞ்சள் புகை அவர்களின் சுவாசத்தை அடைத்தது. கண்கள் எரிந்தன; தொண்டை வறண்டது. அவர்கள் தப்பித்துச் செல்லும்போது அவர்களிடம் பொருள் ஏதும் எஞ்சியிருக்கவில்லை. அவர்களின் உடம்பில் இருந்த ஆடைகளும், ஒருவருக்கொருவர் காட்டிய அன்பும், தங்களின் மூதாதையர்கள் கற்றுக்கொடுத்த இயற்கையின் மீதான நம்பிக்கையும் மட்டுமே எஞ்சியிருந்தன. தீயின் வேகம் நதிக்கரையையும் எட்டத் தொடங்கியபோது, தப்பிக்க வழியின்றி அனைத்துப் பழங்குடி மக்களும், விலங்குகளும் ஒரு பெரிய பாறையின் மீது தஞ்சமடைந்தனர். அங்கே மனிதனும் விலங்கும் எதிரிகளாக இருக்கவில்லை, ஒரே தாயின் குழந்தைகளாகத் தவித்தனர்.
அனர்த்தங்கள் அனைவரையும் ஒன்றாக்கி விடுகிறது.
அஹோதே தன் கைகளை வானோக்கி உயர்த்தினார். நதிக்கரையில் இருந்த ஒட்டுமொத்த மக்களும் மண்டியிட்டனர். பூர்வகுடி மக்களின் பாரம்பரிய ராகத்தில், இயற்கையை சாந்தப்படுத்தும் உருகிய பிரார்த்தனை ஒலிக்கத் தொடங்கியது. “இயற்கையன்னையே, இந்த வெறிச்சோடிய தீயை அணைக்க வானத்திலிருந்து பெருமழை பொழியுங்கள்! அன்பான அன்னையே , இந்த ஏழை மக்கள் தங்கள் வாழ்நாளில் சேர்த்த எல்லாவற்றையும் இழக்காமல் காப்பாற்றுவாயாக! அன்னையே, காட்டில் வாழும் வனவிலங்குகள், நீரில் நீந்தித் தப்பிக்க எண்ணுவோர் , வானில் பறப்பவை என அனைத்து ஜீவராசிகளையும் காப்பாற்றும் ! அன்னையே .., நான்கு கால்கள் கொண்ட விலங்குகள், இரண்டு கால்கள் கொண்ட மனிதர்கள், நாங்கள் உண்ணும் பழங்கள், காய்கறிகள் மற்றும் எங்கள் வாழ்வாதாரங்கள் அனைத்தையும் பாதுகாக்க மழை பொழியட்டும்! மகா அன்னையே, இந்த அப்பாவி மக்களின் கதறலைக் கேளும், எங்கள் பிரார்த்தனைகளைக் கேட்டருளும்! மிக்க நன்றி இயற்கை அன்னையே” என்று அவர்கள் ஆன்மா உருகிப் பிரார்த்தித்தனர்.
பிரார்த்தனையின் ஒலி, அடர்ந்த மஞ்சள் புகையைக் கிழித்துக் கொண்டு மேகங்களை எட்டியது. மனிதர்களின் கண்ணீரும், விலங்குகளின் தவிப்பும் பிரபஞ்சத்தின் ஆத்மாவை அசைத்தன. திடீரென வான்வெளியில் ஒரு மின்கீற்று தோன்றியது. காற்றில் ஈரம் கலந்தது. அடுத்த சில நிமிடங்களில், பெரிய பெரிய மழைத்துளிகள் எரியும் கானகத்தின் மீது விழத் தொடங்கின. அது சாதாரணமாகப் பெய்யவில்லை; நிலத்தின் தாகத்தைத் தீர்க்கும் கனமழையாகக் கொட்டித் தீர்த்தது. இயற்கையன்னையின் கொடையது. நெருப்பின் நாக்குகள் ஒவ்வொன்றாக அடங்கின. மஞ்சள் புகை மெல்ல மெல்லக் கலைந்து, புதிய பூமியின் வாசனை காடெங்கும் பரவியது.
அஹோதே தன் பேரனைத் தூக்கிக் கொண்டு மழையில் நனைந்தார். அது வெறும் மழையல்ல, மக்களின் கண்ணீரையும், காட்டின் தாகத்தையும், விலங்குகளின் பயத்தையும் துடைக்க வந்த பேரருள்!
அவர்கள் எல்லாவற்றையும் இழந்துவிட்டனர், உண்மைதான். ஆனால், உயிர் பிழைத்திருந்தனர். பூமி மீண்டும் பச்சைப் பசேலென மாறும், கருகிய மரங்களில் இருந்து புதிய தளிர்கள் முளைக்கும், பறவைகள் மீண்டும் கூடுகட்டும் என்ற நம்பிக்கையோடு, அந்தப் பூர்வகுடிக் குடும்பம் புதிய விடியலை நோக்கித் தன் காலடிகளை எடுத்து வைத்தது.
தொடர்புள்ள சிறுகதைகள்
எதிர் காணல்
பொ.நாகேந்திரன்
August 22, 2026
வெம்மை நிமிடங்கள்
விமலன்
August 22, 2026
நலம் தரும் நட்பு
அல்போன்ஸ் மோசஸ்
August 19, 2026