எப்படி…? எப்படி?




“நம்ம சின்னான் மவன் சங்கரைக் கவனிச்சியா… நாலு வருஷத்துக்கு முன்னே ஒரு வேளை சோத்துக்கே சிங்கியடிச்சவன். இன்னிக்கு சொந்த வீடு, புது பைக்கு, அவன் சம்சாரத்து காதுலயும் கழுத்துலயும் தங்கமா மின்னுது… அடேங்கப்பா!”
“அட, ஒனக்கு விஷயம் தெரியாதா… எல்லாம் மாமனார் வூட்டுப் பணம்ப்பா!”
“ஒனக்கு அவ்ளதான் தெரியுமா? அவன் மச்சான் கடத்தல் பிஸினஸ் பண்றவன். எல்லாம் தப்பு வழியில வந்த பணம்.”
“சங்கரு மட்டும் யோக்கியம்னு நெனப்பா உனக்கு! அப்பப்போ பட்டணம் போய் வரானே, எதுக்கு? எல்லாம் டப்ளிங்! ஒண்ணுக்கு ரெண்டு. புரியலே? கள்ளநோட்டு கைமாத்துற பிஸினஸ்!”
“அடப்பாவி! அவன் பொண்டாட்டிக்குத் தெரியுமா இதெல்லாம்?”
“தெரியுமாவா? காதைக் கொண்டா! அவன் வூட்டுக்கு அப்பப்போ பெரிய மன்சங்க வந்து போறாங்களே, அவங்கல்லாம் யாருன்னு நெனைச்சே…”
“அவனோட கஸ்டமருங்களா?”
“ம்… அவன் பொண்டாட்டியோட கஸ்டமருங்க! மானங்கெட்ட மனுஷன்! இதெல்லாம் ஒரு பொழைப்பு!”
இங்கே குட்டிச் சுவரில் அமர்ந்து, வெட்டிக் கூட்டம் பிதற்றிக்கொண்டு இருக்க, அங்கே சங்கர் தன் வொர்க் ஷாப்பில் சுறுசுறுப்பாக உழைத்துக்கொண்டு இருந்தான்.
– 22nd ஆகஸ்ட் 2007