என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 31, 2026
பார்வையிட்டோர்: 99 
வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்

(2002ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மலர்க்கொடி படுக்கையிலிருந்து எழுந்து சோம்பல் முறித்தபோது, தொலைபேசி சிணுங்கியது. இந்த விடியற்காலையில் தொலைபேசியில் தொந்தரவு செய்வது யாராக இருக்கும்? என்று எண்ணிக்கொண்டு  “ஹலோ” என்றாள் தொலைபேசியை எடுத்து காதில் வைத்தவாறு. 

“என்னம்மா மலர்… சௌக்கியமா?!” என்றது எதிர்முனையில் கரகரத்த குரல். 

கொஞ்சம் சுதாரித்துக் கொண்டு “யார் சார் பேசறது?” என்றாள். 

“உங்க தாத்தாவிற்கு முப்பாட்டன்” என்றது எதிர்முனை. 

“அவங்க எல்லாம் செத்து பல நூற்றாண்டாகி விட்டது. நீங்க கண்டிப்பாக அந்த ஆவியாக இருக்க முடியாது. யார் பேசறது? சொல்லுங்க… பணத்தை தவிர இந்த உலகத்தில் எதைப்பற்றியும் தெரியாத ஆர்.கே தானே பேசறது?”

“எவ்வளவு சரியாக கண்டுபிடித்துவிட்டாய்!” 

“என்ன விஷயம் நேற்று வந்தபோது ‘உங்கள் துடிப்பு’ பத்திரிகை வாசித்துவிட்டீர்கள் என்று நினைக்கிறேன்” 

“ஏம்மா, உனக்கு ஒருமுறை சொன்னா புரியாதா? போன முறை இப்படி வேண்டாத வேலையாக என் விஷயத்தில் தலையிட்டுதான் உன் அம்மாவை இழந்தாய். அடுத்து வீணாகத் தலையிட்டு ஒரு கை உடைந்து வீணாக கட்டுப் போட்டுக்கொண்டு திரிந்தாய். இவ்வளவு நடந்த பிறகும் என் விஷயத்தில் தலையிட மாட்டாய் என்று நினைத்தால்… என்ன… என்ன… மலர்க்கொடி. உன்னையும் ஒரு மலரின் கொடி போல உடைத்தெறிய வேண்டிய நிலைக்குத் தள்ளிவிட்டாயே” 

“மிஸ்டர் ஆர்.கே. வீணாக பூச்சிப் புடிச்சி காட்டுகிற வேலைகளெல்லாம் என்னிடம் வேண்டாம். ஒரு சிறிய லைசென்சில் நீங்கள் செய்த தகிடு தத்தம் வெளியானதில் நாறிப்போய் என் மேல் வைத்த குறி என் அம்மாவை பறித்துக் கொண்டது. அன்றுதான் முடிவெடுத்தேன், இந்தியாவில் எங்கே ஊழல் நடந்தாலும் என் உயிரே போனாலும்கூட கவலைப்படாமல் தட்டிக் கேட்பேன் என்று. அதற்குள் அடுத்தபடி உங்கள் தொழிலாளர் பிரச்சனைகளை பற்றி நான் எழுதியதற்கு இன்னும் சரி செய்ய முடியாமல் இருக்கும் என் இடது கை முறிவு.

ஆனாலும் ஆர்.கே. சார், இந்தமுறை நீங்கள் செய்திருக்கும் இறக்குமதி அனுமதியிலுள்ள குளறுபடிகளால் இந்திய நாட்டின் வருமானத்தில் நூறில் ஒரு பங்கு பணத்தை அப்படியே நீங்கள் சாப்பிட்டு ஒப்பம் விட்டுவிட்டுப் போய் விட்டீர்கள்.  இந்த லைசென்ஸ் கொடுத்த அதிகாரிக்கு கூட பணம் கொடுத்து சிங்கப்பூருக்கு அனுப்பி விட்டீர்கள், இதனால் இந்தியாவில் எத்தனை நல்ல திட்டங்களுக்கு போகக்கூடிய பணம் முடங்கிப் போய் விடுகிறது. இதைப் பற்றி எழுதினால் உங்களுக்கு கோபம் வந்து இப்படி அதிகாலையிலே தனியாக இருக்கும் பெண்ணிற்கு தொலைபேசி செய்து தொந்திரவு கொடுக்கிறீர்கள்” நமட்டுச் சிரிப்பு சிரித்தாள் மலர். 

“மகூம்_ மலர்க்கொடி இனியும் உன்னை விட்டுவைப்பது தவறென்று தோன்கிறது” 

“என்ன சார்…. நான் என்ன கொக்கா, குருவியா…. நீங்கள் நினைத்தவுடனே சுட்டுப் போடுவதற்கு சுதந்திரத் தாயின் இந்தியப் பிரஜை” 

“அய்யோ…. உன்னை நினைத்தால் சிரிப்பாக இருக்கிறது மலர். எனக்கு எதிராக பேசுபவர்களும் எழுதுபவர்களும் கொசுவும் எனக்கு ஒன்றுதான். நசுக்கி விடுவேன்” 

“சும்மா சத்தம் போடாதீங்க சார். இதற்கே இவ்வளவு சப்தமிடுகிறீர்களே…. அடுத்த இதழில் நீங்கள் ஸ்விஸ் வங்கியில் எவ்வளவு பணம் போட்டிருக்கிறீர்கள் என்றும் அதற்கு நம் நாட்டு மத்திய மந்திரி ஒருவர் எவ்வளவு அழகாக உதவி செய்திருக்கிறார் என்பதையும், அந்தப் பணம் முழுவதும் ஏழை மக்களுக்கு வீடு கட்ட வாங்கிய வங்கியில் வாங்கிட கடன்  என்பதையும் கூட விவரமாக எழுதியிருக்கிறேன் சார்” அட்டகாசமாக சிரித்துவிட்டு எதிர் முனையில் தொலைபேசியில் ‘டொக்’ என்று சப்தம் கேட்க, போனை வைத்துவிட்டு பல் விளக்க ஆரம்பித்தாள். 

திடுதிப்பென்று கதவை உடைத்துக்கொண்டு பத்து பனிரெண்டு பேர் உள்ளே வந்து மலரை கொத்தாக அள்ளிக்கொண்டு போய் நின்றிருந்த டாடா சுமோவில் திணித்து ஜிப்பை ஸ்டார்ட் பண்ணி ஓட்டினார்கள். 

திமிறிப் பார்த்து முடியாமல் அமைதியாக சுற்றிப் பார்த்தாள். கொஞ்ச தூரம் ஜீப் ஓடி நிற்க, ஏறக்குறைய திரும்பவும் அள்ளிக்கொண்டு போய் அந்த மாளிகையின் முன்னறையில் கொண்டுவந்து நிறுத்தினார்கள். 

“வருக… வருக… வணக்கம் மகாராணி. மன்னிக்கணும் சுதந்திர இந்தியாவின் இளவரசியே…. இப்படி உங்களை வலுக்கட்டாயமாக இங்கே தூக்கி வந்து விட்டார்கள். சே! மடப்பசங்க. அம்மாவை டிரஸ் கூட பண்ண விடாமல் மாக்ஸியோடு தூக்கிட்டு வந்திருக்கீங்களே…

என் அருமை சுதந்திர இந்தியாவின் மகாராணி மலர்க்கொடியே… என்ன சாப்பிடுகிறீர்கள்? காபி…. டீ…. பால்-ஹார்லிக்ஸ்.. ஏன் பேசாமல் வாயடைத்துப் போய் விட்டாய். 

என் வீட்டு விஷயங்கள், என் கம்பெனி தகிடுதத்தங்கள் உனக்கெப்படி வருகிறதென்று முதலில் நான் ஆச்சரியப்பட்டு போனேன். அப்புறம்தான் இந்தக் களை செடி கூட இங்கே என் கூடவே வளர்ந்திருக்கிறது. ஆமாம் இங்கே வேலை செய்யும் உன் காதலன் செல்வனைத்தான் சொல்கிறேன். அதோ, அந்தக் காரிலே அவனைக் கட்டி வைத்திருக்கிறோம்” என்று சொல்ல.

“வீணாக என்னோடு விளையாடுகிறீர்கள் ஆர்.கே. நான் நேற்றே உங்களைப்பற்றி உங்கள் கம்பெனியின் இறக்குமதி அனுமதியிலுள்ள குளறுபடிகளைப் பற்றி விவரமாக தக்க ஆதாரங்களுடன் டி.ஜி.பி.க்கு எழுதி அனுப்பியிருக்கிறேன். ஏன் பிரதமர் அலுவலகத்திற்கு கூட ஒரு காப்பி போயிருக்கிறது. வீணா என்னையோ என் செல்வனையோ நீங்கள் சீண்டினால் அதன் விளைவுகளைச் சந்திக்க வேண்டியதிருக்கும்” – கத்தினாள் மலர். 

“பாருடா இன்னும் வேகம் அடங்கலை. இன்னும் கொஞ்ச நேரத்திலே இந்தக் காரிலே நீயும் செல்வனும் எதிர்பாராத விபத்தில் சாகப் போகிறீர்கள்” 

“அதற்குள் எப்படியும் போலீஸ் படை உங்களைச் சுற்றி விடும் மிஸ்டர் ஆர்.கே.” 

“பாரு நீ சொல்லி முடிப்பதற்குள் டி.ஜி.பி. யுகேந்திரனே இங்கு வந்து விட்டார். வாங்க சார், என்ன விசயம்?” 

“இந்த செய்தி உண்மைதானா? ஓ! இதுதான் நீங்கள் சொன்ன மலர்க்கொடியா? என்றவாறு வந்தார் டி.ஜி.பி.

“ஓ! இவரையும் விலைக்கு வாங்கியாச்சா. உண்மை ஒரு நாளும் சாகாது. அடுத்த இதழில் உங்கள் உண்மைகள் அம்பலமாகும். நான் இறந்தாலும் என் எழுத்துக்கள் உங்களைச் சாகடிக்கும்” என்று சீறினாள் மலர். 

“அதுதான் நடக்காது கண்மணி. உன் பத்திரிகை ஆசிரியர் தன் உயிருக்குப் பயந்து விட்டார். அடுத்த இதழிலிருந்து அது இனி வெளிவராது. நீ சொன்னயோ பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பிய காப்பி. அதையும் என் டெல்லி ஆள்போய்ச் சேரும் முன் எடுத்து விடுவான்” என்று சிரித்த ஆர்.கே. “டேய்…. இவளையும் காரில் இருக்கும் செல்வனோடு சேர்த்துக் கட்டி ஏதாவது ஆக்ஸிடெண்ட் உண்டு பண்ணி காரை எரிச்சுடுங்கடா” என்றார். 

டி.ஜி.பி. புன்னகையோடு பார்த்துக் கொண்டிருக்க, “நீங்கள் கேட்ட பங்களா மற்றும் சுமோ கார் சாவி எடுத்துக்குங்க” என்றார் ஆர்.கே. 

“ரெம்ப நன்றி சார்” என்று சாவிகளை பொறுக்கிக்கொண்டார் டி.ஜி.பி. 

மறுநாள் தினசரி பத்திரிகைகளில்…. ‘முன்னோடி நிருபரான மலரும் அவருடைய காதலர் செல்வனும் காரில் போய்க் கொண்டிருக்கும்போது எதிர்பாராத விபத்தில் அகால மரணமடைந்தனர்’. படங்கள் போட்டு விபரமாக செய்திகள் வந்திருந்தன.

– ஆகஸ்டு, 2002, மும்பை துடிப்பு.

GeorgeChandran பெயர்: பிலிப் ஜார்ஜ் சந்திரன்.M.A., M.H.M., புனைப்பெயர்: இரஜகை நிலவன் ஊர்: இரஜகிறிஸ்ணாபுரம் (திருநெல்வேலி) எழுதும் பெயர்: இரஜகிறிஸ்ணாபுரம் ”இரஜகை”யாக சுருங்கி உதயம் சந்திரன் "நிலவனா'க மாறிட புனைப்பெயர் உதயமானது விருதுகள்: சிறுகதைச்செல்வர், சிறுகதைச்செம்மல், கவித்திலகம், கவிமாமணி, கவிக்கதிர், கவிச்சிகரம்,சேவை சிற்பி,தமிழ் முகில். பணி: தனியார் அலுவலில் இயக்குனராக. வாழுமிடம்: டோம்பிவிலி (மும்பை) துணைவி: மேரி ராஜேஸ்வரி அடுத்த தலைமுறைகள்: பிலிப் வினிங்ஸ்டன், பிலிப் விஜய்ங்ஸ்டன். பிடித்தவை: தேடல்கள்…, வாசிப்புகள்…,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *