எனக்கு நானே எல்லாம்!
(1975ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அன்புள்ள சுபைதாவுக்கு!
உன் கடிதம் கிடைத்தது. நீ என்ன மனோ நிலையில் இருந்து அந்தக் கடிதத்தை எழுதினாயோ எனக்குத் தெரி யாது ஆனால் நீ கடிதம் எழுதியிருப்பதன் நோக்கத்தை மட்டும் என்னால் ஊகித்துக் கொள்ள முடிகிறது. உன் கடிதத்தைப் படித்துவிட்டு நான் புழுப்போல் துடிக்க வேண்டும்; கதறி அழுதுகொண்டு உன்னிடம் ஓடிவர வேண்டும் என்று நீ எதிர்பார்த்திருந்தால் நீ தோல்வியையே தழுவிக்கொண்டவளாகத்தான் இருப்பாய்! அந்தக் கடித த்தின் மூலம் நீ எதிர்பார்த்த பலன்களில் இரண்டில் ஒன்று நிறைவேறியிருக்கிறது ஆம்! நான் உனது கடிதத்தைப் படித்துவிட்டுப் புழுப்போல் துடித்தது என்னவோ உண்மை தான் ஆனால் கதறி அழுது கொண்டு உன்னிடம் ஓடிவரப் போவது மட்டும் நிச்சயம் இல்லை. அந்த அளவுக்கு என் மனதை பக்குவப்படுத்திக் கொண்டேன். ‘கல் நெஞ்சன்.” என்று எழுதியிருந்தாய் உண்மையிலேயே எனது இதயத் தைக் கல்லாக இறுக்கிக் கொண்டேன். இனி அதை உருக்கி விடமுடியாது! உடைக்கத்தான் முடியும்.
நான் உனக்குத் துரோகம் செய்துவிட்டதாக எழுதியி ருந்தாய். என் மனசாட்சிக்கு விரோதமாக நான் உனக்கு எந்தவித துரோகத்தையும் செய்யவில்லை என்றே கருதுகிறேன். நான் உன்னுடன் பழகியது உண்மைதான்! நீ எனது முறைப் பெண்ணாக இருந்ததும் கல்லூரியில் என்னோடு ஒன்றாகப் படித்ததும், வாசிற்றியிலும் என்னுடனேயே இருந்ததும் கூட உண்மைதான். நான் நீ குறிப்பிட்டதுபோல இனிக்க இனிக்க உன்னிடம் பேசியதும் உண்மைதான். உனது வீட்டிற்கு நான் வந்து செல்வது நீ கொடுக்கும் தேநீரை அருந்துவது, நீ மனநிறைவோடு தயாரித்தளிக்கும் ‘உறைப்பு அடை’ நிலக்கடலை, ஆகியவற்றையெல்லாம் உண்டு மகிழ்ந்ததும் உண்மைதான். ஆனால் அவையெல்லாம் நீ குறிப்பிட்ட அந்த ”ஒன்றுக்’காக அல்ல சுபைதா ஒன்றுக்காக அல்ல.
எனது குடும்பத்தைப் பற்றித் தெரியும் உனக்கு நன்றாகத் தெரியும் நாங்கள் பரம்பரையிலேயே ஆண்டி வாப்பா இல்லை. வயோதிபத்தாய்! அது என்ன செய்யும் திருமணம் ஆகாமலேயே அக்கா இருவரும் அரைக்கிழவியாகிக் கொண்டிருக்கிறார்கள் தங்கைமார் மூவர் வேறு பயங்கர எதிர்காலத்தை நோக்கிக் காத்திருக்கிறார்கள். ஒழுங்கான வீடோ வாசலோ ஊஹும் என்னிடம் உள்ள தெல்லாம் வெறும் கல்வி. அந்தச் செல்வம் மட்டும் தான் உண்டு, அது தந்த தொழில்; அது தரும் சோறு; இவை தான் எனது ஓட்டைப்படகு ஒருவாறு அசைந்து செல்வ தற்குக் கைகொடுக்கின்றன. இந்த நிலையில் உனது கடிதம் என்னைப் பயங்கரமாகத் தாக்கியிருக்கிறதே!
நீ என்னை விரும்பியிருக்கலாம், நானும் கூட சில சந்தர்ப்பங்களில் உன்னை விரும்பியிருக்கலாம் ஆனால் அவை யெல்லாம் எனது அறிவு மழுங்கியிருந்த சமயத்தில் நிகழ்ந் தவையாகவே இருக்கும். ஆனால் இப்போது எனது அறிவு கூர்மையாகிவிட்டது. அதனால் நான் விழித்துக்கொண்டேன்.
“ஆசை காட்டிக் காட்டி மோசம் செய்வதே இந்த ஆண்களுக்குரிய குணம்!” என்று திட்டித் தீர்த்திருக்கிறாய் எனக்காக முழு ஆண் வர்க்கத்தையுமே வைதிருக்கிறாய் பாதகமில்லை நீ பேசு அந்த உரிமைகூட உனக்கு இல்லாவிட் டால் நான் உன்னுடன் பழகியதற்கான பிராயச் சித்தம் இல்லாமலே போய்விடும் ஆனால் ஒன்று நீ என்னிடம் நெருங்கி வரும் நேரத்திலெல்லாம நான் ஒரு வார்த்தை சொல்வேனே ஞாபகம் இருக்கிறதா… ம் ஞாபகம் இருக்கும் என்று நம்புகிறேன் ‘மயக்க மணல் மேட்டில் சுற்பனை விதைகளைத் தூவாதே நிச்சயமாக அது ஒரே முளைக்காது’ என்று…. ஆனால் ‘முளைக்கும்’ என்று ஒரே வார்த்தையில் உறுயுதிடன் அழுத்தம் திருத்தமாக நீ அடித்துச் சொல்வாயே அது முளைக்கவில்லையம்மா! முளைக்க வேயில்லை.
என் கண்ணீர்த்துளிகள் இக்கடிதத்தை நனைக்காவிட்டாலும் எனது நீண்ட பெருமூச்சுக்களின் தாக்கம் கடிதத்தின் எழுத்தைத் தழுவித்தான் செலகின்றன. இதை நீ உணர்கிறாயோ என்னவே “இன்பராகங்கள் மீட்டிய இதய வீணையைச் சுக்கு நூறாக உடைத்து எறிந்து விட்டீர்கள்” என நீ உன் வார்த்தைத் தூரிகையால் என்னை வதைத்திருக்கிறாய். ஆனால் உன் வீணை உன்னிடமே பத்திரமாக இருக்கிறது. அதனை நீ மறந்து விடாதே!
“எனக்கு மோசம் செய்துவிட்டு, என்னைப் படுகுழியிலும் தள்ளிவிட்டு, ஒரு இருப்புப் பெட்டியைக் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறீர்களே! உங்களைப் போன்ற நம்பிக்கைத்துரோகிகள் வாழத்தான் வேண்டுமா? என்று கேட்டிருக்கிறாய்.
“என்னைப் போன்றவர்கள் வாழத்தான் வேண்டியிருக்கிறது. ஏனென்றால் என்னைச் சுற்றியிருக்கும் இருண்ட உலகில் என்னோடு ஒட்டிப் பிறந்த சில உள்ளங்களுக்கு விடிவிளக்கு ஏற்றுவதற்காக நாங்கள் வாழத்தான் வேண்டியிருக்கிறது.
“கார், பங்களா, காசு பணம் இவற்றைக்கண்டு வெறி பிடித்து விட்டதா. காசுக்காகப் போய் இப்படி விழுந்து விட்டீர்களே. உங்களுக்கு ஓர் சுயகெளரவமே இல்லையா” என்று சாடியிருக்கிறாய் காசுக்காகத்தான் விழுந்தேன் உண்மைதான். வெறிதான் பிடித்து விட்டது. அதுவும் உண்மை தான். சுயகௌரவம் செத்துவிட்டதுதான். உனது எழுத்து உண்மேையதான் ஆனால் அந்த உண்மை அனைத்தும் ஒரு போலி உண்மை. எனது வயதேறிய றாத்தாமார் இருவரும் திருமணம் செய்து ஊரில் நாலு பேரைப்போல் தலை நிமிர்ந்து வாழவேண்டும். எனது தங்கைமாருக்கும் நல்லதொரு வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கவேண்டும் என்பதற்காக நானே வலிந்து தேடிக் கொண்ட போலி உண்மை அது, போலி கெளரவம் அது.
“என்னிடம் பணமில்லையா? என்னிடம் அழகில்லையா. நான் கேட்டால் தந்திருப்பேனே. அவளுடைய அழகில் மயங்கிவிட்டீர்களே என்று எழுதியிருக்கிறாய், உன்னிடம் அழகுண்டு. ஏன் இலட்சம் இலட்சமாகப் பணம் உண்டு. ஆனால் அந்தப்பணத்தைத் தருவதற்கு உன்னால் முடியாதே! உன் தந்தைதான் “இந்த வீட்டில் மையித்து விழுந்தாலும் அது நடக்காது” என்கிறாரே. பிறகு ஏன் இத்தகைய மனக் குழப்பம்.
“அவளிடம் பணமுண்டு, அழகுண்டு இங்கே நான் அழகென்று குறிப்பிடுவது புற அழகையல்ல அவளது அக அழகைத்தான்” பணத்தை அள்ளித்தருகிறார்கள். வலியக் கேட்டு வந்துள்ளார்கள். எனது றாத்தாமாருக்கும் வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கிறார்கள். வேறென்ன வேண்டும் பெரிதாய். அது போதாதா எனக்கு. நான் இப்படியே இருந்து கிழமாகி மௌத்தானானும் கூட இவை நடந்துவிடக் கூடியதா, அதனால்தான் வலிய வந்த சீதேவியை உதறித் தள்ளிவிட என்னால் முடியவில்லை. உனது தந்தையின் எதிர்ப்புக்கு மத்தியில் எழுந்த உனது காதலை உதறிவிட முடிவு செய்தேன். எனவே என்னை மன்னித்துக் கொள்ளம்மா. இறுதியாக ஒன்று “அவள் கறுப்புக் கண்ணாடி போட்டுக் கொண்டு வலம் வருபவளாமே” என்று எழுதியிருக்கிறாய். அதில் ஏதோ கொஞ்சம் உண்மை இருக்கத்தான் செய்கிறது. கறுப்புக் கண்ணாடி அணிவது உண்மைதான். நான் மறுக்கவில்லை ஆனால் அவள் கண்ணாடியைப் போட்டுக் கொண்டு ஊர் சுற்றுபவளல்ல, தள்ளு கதிரையே அவளுக்குத தஞ்சம்!
ஆமாம்! ஆமாம் சுபைதா!
தள்ளு கதிரைதான் அவளுக்குத் தஞ்சம்.
அவளுக்கு இரண்டு கண்களுமே தெரியாது.
பிறவிக்குருடு அவள்! பிறவிக்குருடு அவள்.
– 1975
– ஒரு வெள்ளி ரூபாய் (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: செப்டம்பர் 1982, மன்னார் வாசகர் வட்டம் வெளியீடு, இலங்கை.