எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும்….!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: வீரகேசரி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 9, 2025
பார்வையிட்டோர்: 241 
 
 

(1985ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நீலக்கடலோர. வெண்மலர்ப் பரப்பில் நிரை நிரை யாக ஆண்களும் பெண்களும் கலர் கலராக பலூன்களை பரவ விட்டது போல. 

இடையையும், நெஞ்சையும் மெல்லியதாக மறைத்தும் மறையாமலும் பெண்களும் இடையை மட்டும் காட்டாத ஆண்களும் வெய்யில் காய்ந்து கொண்டிருந்தார்கள். 

பார்க்கும் இடமெல்லாம் பளபளப்புத் தேகங்களுடன் வெள்ளை அழகிகள் பவனி வருவதைப் பார்த்தால் வெட் கப்பட்டுச் சங்கடப்பட்டு மீண்டும் கலர்களைப் பார்க்க வேண்டியதாயிற்று. கூச்சப்படாமல் பார்வையால் அவர் களை வருடப் பழக வேண்டும். 

“என்ன மிஸ்டர் நதன்?” என்றார் மிஸ்டர் மாரின் நாதன் என்ற பெயரை நதன் ஆக்கிவிட்ட அவரது கேள்விக்கு பதில் சொல்லாமலே சிரித்தேன். 

யாழ்ப்பாணத்து வெய்யிலை (என்னவோ தெரிய வில்லை இப்ப வெக்கை கூடப்போல) சுட்டெரிக்கும் அதன் கொடுமையை அனுபவித்துப் பழகிய எனக்கு இந்த வெய்யில் பதைபதைக்க வைத்தது. 

ஆனால் அந்த வெள்ளையாட்கள் தங்கள் வெள்ளைத் தோல் பழுக்கப் பழுக்க ஒருவகையாக சிவந்து கனிந்து கறுக்க ஆசையோடு வெய்யில் காய்ந்தார்கள். 

மிஸ்டர் அன் மிஸிஸ் மாரின் வெய்யில் காயத் தயா ராகிக் கொண்டிருக்க அவர்களின் பிள்ளைகள் இரண்டும் (கதரின் ஒன்பது வயது, ஜோன் ஏழு வயது) மண்ணில் புரண்டு விளையாடித் திரிந்தனர். 

ஏற்கனவே வெய்யில் காய்ந்து கருவாடாக கருகி விட்டவன் என்று என்னைப் பார்க்கத் தெரிவதால் என்னவோ மிஸ்டர் அன் மிஸிஸ் மாரின் என்னை வெய்யில் காய அழைக்காமலே அர்த்தமுடன் சிரித்துவிட்டு கும்பலில் கரைந்தார்கள். 

அழகான ஆரவாரம் நிறைந்த அந்தத் தங்கக் கடற் கரையில் (கோல்ட் கோஸ்ட்) அரைகுறை ஆடை அணிந்தவர்கள் மத்தியில் முழுமையான ஆடைகளுடன் நின்று கொண்டு என்னைப்பற்றி யோசித்துப் பார்க்க எனக்கே வியப்பாக உள்ளது. 

கனவிலாவது நடக்குமா? என்றுகூட நான் நினைத்த தில்லை அவுஸ்திரேலியா போய்ச் சேருவேன் என்றோ. இப்படி நல்ல இதயம் படைத்த மிஸ்டர் மாரின் அவர் களிடம் வேலைக்கு (மிஸ்டர் மாரின் அவர்களை நண்பன் அல்லது சகோதரன் என்று சொன்னால்தான் பொருந் தும்) சேர சுவிப் விழும் எனவோ சாத்திரத்தில்கூடச் சொல்லவில்லை. 

ஜேர்மனியோ பிரான்ஸ்சோ எந்த அகதி முகாமோ அல்லது மிடில் ஈஸ்ட்டில் கடும் வெய்யில் குடித்து உடம்பு முறிய வேலை செய்து டொலராகவோ, மார்க்காகவோ அனுப்ப வேண்டி வரும் என்று நினைத்தது உண்மை தான். 

ஏஜென்சிக்குப் பின்னாலும் தெரிந்தவர்களுக்குக் கடிதங்கள் எழுதி போஸ்ட் ஒவ்பீஸ்சில் முத்திரைகள் தட்டுப்பட யாழ்ப்பாணக் கச்சேரியடி வேப்ப மரத்தடி புறோக்கரிடம் கூட விலை கொடுத்து முத்திரை வாங்கி கடிதங்கள் போட்டு பதிலை எதிர்பார்த்துக் கடிதங்கள் கிணற்றில் போட்ட கல்லுகள் மாதிரி ஆயின. 

இப்படி எத்தனை நாட்கள் எப்படி எப்படியோ கழிந்தது. பிறந்து வளர்ந்த மண்ணில் நண்பர்களுடன் சைக்கிளில் பவனி வந்த றோட்டில் செக்கன்ட் ஷோ படம் பார்த்து விட்டுத் திருப்புகழ் பாடிக்கொண்டு வந்த அனுப வத்தைக் கோயில் திருவிழாவில் விடிய விடிய திருவிழா பார்ப்பதாகச் சொல்லிக் கொண்டு கண்களைக் கழற்றி எறியும் கன்னம் சிவந்த பைங்கிளிகளைப் பார்த்துக் கச்சான் கடலை வாங்கிக் கொடுத்ததை…… 

ஒருவனை ரயிலில் பயணமேத்த ஒன்பது சைக்கிளிலில் பதினெட்டுப் பேர் போய் பிளாட்போம் நிரையில் நின்று ஒப்பாரி வைத்து அனுப்பியதெல்லாம்… 

யோசித்துப் பார்த்தால் நெருஞ்சி முள்ளின்மேல் படுப்பதுபோல இருக்கும். 

“தம்பி வெளியால போகாத. லைபிரரிக்கும் வேண் டாம். கடைத் தெருவுக்கு நாங்கள் போறம்” என்பதை யெல்லாம் கேட்டு… 

வீடே சிறையாக மனத்தில் வெறுமை…வரட்சி நிறைந்து எதிலுமே விரக்தி, கடைசி வீட்டில் தன்னும் நிம்மதியாக இருக்க முடிந்ததா? 

“தம்பி கெதியாய்ப் போடா. குஞ்சியப்பு வீட்டைப் போய் கொஞ்சநாள் இரு. இஞ்சைஇருந்தால் பிரச்சினை” என்று அம்மா அழுதழுது சொன்னதைக் கேட்டு அங்கும் இங்கும் ஓடித் திரிந்ததுதான் மிச்சம். 

எங்கள் வீட்டில், எங்கள் தெருவில், கிராமத்தில் நகரத்தில் இருக்க முடியாமல் எல்லாமே அட்டமத்துச் சனியன் பிடித்ததுபோல, கடைசியில் வெளிநாடு போனால்தான் ஆயுள்ரேகை பலமாக இருக்கும் என்று குறிப்புப் பார்க்காமலே நடைமுறையில் உணர்ந்தேன். 

எத்தனை ஆட்டம் போட்டு எவ்வளவு கூத்தாடி யார் செய்த புண்ணியமோ அம்மாவின் நேர்த்திக் கடனோ தெரியாது. அதனால்தான். 

எங்கு பார்த்தாலும் யூகலிப்டஸ் மரங்கள் போன்ற, என் வாழ்க்கையில் காணாத உயர்ந்த மரங்களையும் வார்த்தைகளால் விபரிக்க முடியாத தன்மை கொண்ட காடுகளையும் பாரிய தோட்டங்கள், மெய் சிலிர்க்க வைக் கும் இயற்கைக் காட்சிகள், அதிர வைக்கும் நகரங்கள் அவற்றின் அதிசயமான அமைப்புக்கள், வானுயர்ந்த கட்டிடங்கள். 

சௌந்தரியம் நிறைந்த பூரிப்பான மனிதர்கள் குறிப் பாக,நெஞ்சத்தை சுண்டியிழுக்கும் ரூபவதிகளான பெண் களும் நிறைந்த அவுஸ்ரேலியாவில் இப்படி சர்வ சுதந்திர புருஷனாக இருக்க முடிகின்றது. 

யாரால் நம்ப முடியும். இப்போதுகூட ப்ரிஸ்பேன் நகருக்கு ஐம்பது மைல் தூரத்தில் உள்ள இந்தத் தங்கக் கடற்கரையில் நிற்கும்போது கூட நம்ப முடியாமல் இருக் கிறது. 

எத்தனை ஆயிரம் கார்கள் ஸர்ஃபிஸ் மட்டைகள் சகிதம் (கடலலை மீது சவாரி செய்ய) ஆண்களும் பெண் களும் குழந்தைகளுமாக எவ்வளவோ தூரத்திலிருந்து வருகின்றார்கள். 

அப்படித்தான் ஆஷ்லிங் என்னும் இடத்தில் இருந்து ப்ரிஸ்பேன் நகருக்கு அலுவலாக வந்த மிஸ்டர் மாரின் அப்படியே இங்கே வந்து விட்டார். 

ஒவ்வொரு அவுஸ்ரேலியரும் அப்படித்தான். சனி ஞாயிறு இரண்டு நாள் விடுமுறையையும் அட்டகாசமாக பொழுதுபோக்குவர். 

இந்த இனிமையை அதிலுள்ள சுகத்தினை அதற்கான தேவைப்பாட்டினை என்னால் உணர முடியவில்லை. ஏற்ற மனப்பக்குவம் என்னில் ஏற்படவில்லையா? என் மனம் வரண்டு போய் விட்டது? தெரியவில்லை. 

வெறும் சவுக்கு மரங்களைக் கொண்ட சின்னஞ்சிறு கசுர்னாபீச்சில் கிடைத்த சந்தோஷம் இங்கு ஏன் வரமாட் டேன் என்கிறது. 

ரப்பர் கானில் கொண்டு போகும் பனங்கள்ளும், நண்டுப் பொரியலும் தந்த ஆறுதலும், அதில் கிடைத்த உவகையையும் இங்கு எங்கு போல்த் தேடுவது.(ஞானஸ் கந்தன் மேளம் தட்ட சாள்ஸ் ரஞ்சித் ‘தென்றல் உறங்கிய போதும்தென்றல் உறங்கியபோதும் கண்கள் உறங்கிடுமா என்று பாட, நாங்கள் மணலில் நர்த்தனம் புரிய, அதன் விளைவாக நெஞ்சங்களில் முகிழும் மலர்ச்சி எங்கு போனாலும் கிடையாது. 

உழவு மாடு போல திரும்பத் திரும்ப சுற்றிக் கொண்டு ஒரு இடத்திலேயே நிற்கின்றது. மனம் இங்கு எதிலுமேயே ஒட்டவில்லை. 

இன்று மாத்திரமா? வந்த நாள் தொடக்கம் இப்படித்தான். 

ஆஷ்லிங் ஒரு அதி அற்புதமான இடம். அப்படியான ஒரு இடத்தைப் பார்த்தது வாழ்க்கையில் இப்போது தான் முதற்தடவை என்பதால் எனக்கு ஒப்பிடத் தெரியவில்லை. 

மனதுக்குப் பிடித்த இதமான கலரில் வாங்கிய துணியைப் பார்க்கும் தன்மையை அல்லது இதயத்தைக் கவர்ந்த காதலியைக் காணும் உணர்வினை ஆஷ்லிங்கை பார்க்கும்போது அடையலாம் என நினைக்கின்றேன். 

ஆஷ்லிங்கில் ஒரு பிரமாண்டமான தோட்டத்தின் மத்தியில் மிஸ்டர் மாரின் அவர்களின் பெரிய மரவீடு. 

சொன்னால் நம்ப முடியாத அளவு உண்மையாக ஒரு இலட்சத்துக்கு அதிகமான ஏக்கர் கொண்ட நிலப்பரப்பு மாரின் அவர்களுக்குச் சொந்தமானது. அதில் சிறு பகுதி யில்தான் தோட்டம். 

மிகுதி எல்லாம் யூகலிப்டஸ் மரங்கள் நிறைந்த காடுகள். அவற்றோடு இரண்டறக் கலந்த அமைதி. எப்போதாவது தென்படும் கங்காருகள். 

மரவீட்டைச் சுற்றி ஸ்ட்ராபெரி மரங்களின் கிளைகள் வழங்களை சுமக்க முடியாமல் சுமந்து வளைந்து ததிங் கினத்தோம் போட்டுக் கொண்டிருந்தன. 

வீட்டின் ஒருபுறத்தே டிராக்டர்கள், புல்டோசர், கார், மோட்டார் சைக்கிள்கள், விவசாய இயந்திரங்கள். 

அனுதினமும் அதே ஒழுங்கில் ஒரே இடத்தில் குழம்பாமல் இருக்கும். அதுவும் தங்கள் நாளாந்த வேலை களை ஒழுங்காகச் செய்து கொண்டு. 

தோட்டத்துக்கு வரும் பாதையின் இரு மருங்கிலும் ஜகராண்டா மரங்கள். நீலநிறப் பூக்களை அந்த மரங்கள் பூப்பதில்லை. நீலநிற சாயத்தில் மூழ்கி எழுந்தது போல இவை தெரியாமல் கிளை வெளிப்படாமல் நீலக்குடை களாக கோபுரங்களாக பூக்கள், நீலப் பூக்கள். 

முதன்முதலில் பார்த்தபோது அந்த நீலநிறம் எனக்கு பிரியாவைத்தான் ஞாபகப்படுத்தியது. கல்லூரியில் படித்த அந்தக் காலத்தில் நானும் ஞானஸ்கந்தனும் வேறொரு பெண்கள் கல்லூரியின் டின்னருக்கும் போனோம். 

நீல சாரியில் நீலப்பொட்டு என்று எல்லாமே நீலமாக அசைந்த பிரியாவைக் கண்டு மெய் மறந்ததுதான் நினைவுக்கு வந்தது. 

அது அந்தக் காலம். இப்ப அழகுணர்ச்சியை ரசிக்கும் மனோபாவமே மாறிப் போய் விட்டது. யாழ்ப் பாணத்தில் நிம்மதியாக கொஞ்சதூரம் சைக்கிளிலில் போனாலே பெரிய புண்ணியமாக இருக்கையில் ரசிக்கும் மனம் எப்படி வரும். 

வந்த புதிதில் தோட்டத்திற்கு உதவியானேன்.. யத்தாயிரம் ஏக்கர் இருக்குமா? மாரின் அவர்களிடம் கேட்கவில்லை. கேட்டு என்ன செய்வ பது. 

இவ்வளவு நாளும் மாரின் குடும்பத்தினர் தனித்துப் பார்த்த தோட்டம்தானே. எல்லாமே இயந்திர உதவிகள் இப்பகூட நானுமானேன். 

ஒரு தடவை மாடுகளை மேய்க்க மிஸ்டர் மாரின் அவர்களின் மூத்த பிள்ளை கதரினுடன் போனேன். மாடு கள் ஒன்றா, இரண்டா, ஐம்பதா.நூறா… 

சிறிய மந்தை, பெரிய மந்தை என்று எண்ணாயிரம் மாடுகள்…அந்தப் பிள்ளை குதிரையுடன் வந்தது. அப்படி யல்ல குதிரையில் வந்தது. 

நானும் குதிரை ஏறிப் பழக வேண்டும். கண்ணுக்கு எட்டிய தூரம்வரை விரிந்து பரந்திருந்த அந்தத் தோட்ட மும் புல்வெளியில் மந்தை மேய்ப்பையும் பார்க்கும்போது என்ன யோசனை வரும். 

இப்ப யாழ்ப்பாணத்தவர்கள் செய்யும் சில ஆயிரம் கன்று தோட்டத்தரைகள் என்ன பாடுபடுகின்றன. புகையிலை நல்ல விலை போகவில்லை. 

குழை தாட்ட செலவுகளும் மருந்தடித்த செலவு களும் வருமா? போக்குவரத்துக்குறைந்து எண்ணெய் தட்டுப்பாடு வந்த பிறகு கள்ள விலைக்கு வாங்கும் எண்ணெயைக் கொண்டு இறைத்தால் எங்கே கொண்டு போய் விடும்? 

அதையும் இதையும் ஒப்பிட முடியுமா? போய்ச் சேர்ந்த ஒரு கிழமையின் பின்னர் வயிற்றில் சாடையான வலி எடுத்தது. 

“மிஸ்டர் நதன் எங்கள் நாட்டுப் பாலை கவனமாக பருகுங்கள். அவுஸ்ரேலிய பாலுக்குக் கொழுப்புச் சத்து அதிகம். சீரணம் ஆவது கடினம்” என்று மிஸ்டர் மாரின் சொன்னார். 

அதுதான் காரணமா? அப்பிளா, ஸ்ட்ராபெரிபழமா, திராட்சையா, வாதாம் பருப்பா, பீரா, பதம் செய்யப் பட்ட இறைச்சியா? இன்னும் பெயர் தெரியாத பொருட்களா? 

மெல்லியதாக இருந்த வலி அன்று இரவு பெரிதா கியது மிஸ்டர் மாரின் தன்னிடம் இருந்த சில மருந்து களைத் தந்தார். 

டாக்டரிடம் போவது என்பது டாக்டர் என்ன பக்கத்து வீடே இல்லை பக்கத்து தோட்டம்தான். அந்தத் தோட்டத்து வீட்டுக்கு காரில் போக எவ்வளவு நேரம் செல்லும் போய்ப் பார்க்க வேண்டும். 

யாழ்ப்பாணத்தில் இப்படித்தான் ஒரு நாள் இரவு ஏழு மணி இருக்கும் றோட்டில் சனநடமாட்டம் இல்லை. ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தது. 

ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்ததோ இல்லையோ தெரு சூனியமாகி விடும். வீடுகளின் வெளிவிறாத்தை லைட் எரியாது. 

காதைக் கூர்மையாக்கிக் கொண்டு வீட்டில் உள்ளவர் கள் இருப்பார்கள். ஒருவருடன் ஒருவர் கதை குறைவு. வேலைக்குப் போன அத்தான் பல மாதங்களாக வர வில்லை என்று அக்காவுக்குக் கவலை. 

அக்கா பிள்ளைகள் மேசையில் இருப்பார்கள் ஆனால் படிப்பதில்லை. குசுகுசு என்று கதைப்பார்கள். வயது வித்தியாசம் இல்லாமல் அந்தக் கதை இருக்கும். நிச்சய மாகப் படிப்பைப் பற்றி இராது. 

ரேடியோவில் ஆறு மணி, ஆறரை, ஏழு பதினைந்து, ஏழு நாற்பத்தைந்து, ஒன்பதேகால், ஒன்பது நாற்பத் தைந்து என்று சகல நியூஸ்களையும் கேட்பது வருத்தத் திற்கு நேரத்துக்கு நேரம் குளிசைகள் போடுவது போல ஒரு நாளாந்தக் கடமை. 

அன்றைக்கும் ஆறரையானும் கேட்டுவிட்டு ஏழு பதினைந்துக்காகக் காத்திருந்தோம். தூரத்தில் ஏதோ சத்தம் கேட்டது. நாய்கள் குலைத்தன. 

“லைட்டை நூருங்கோ” என்று சொன்னார்கள்.

றோட்டுக்கரை என்பதால் எல்லோரையும் விட பயம் கூட. சட்டென்று சத்தம் அடங்கியதால் லைட் நிப்பாட் டப்படவில்லை. 

வீட்டின் ஹாலில் சுருண்டு படுத்திருந்த அம்மா சற்றே முனகினார். அமைதியான அந்த நேரத்தில் அது பெரிதாகக் கேட்டது. 

“என்ன அம்மா” என்று அக்காதான் ஓடிப்போனாள் 

“ஒண்டுமில்லைப் பிள்ளை. சாடையான நெஞ்சுவலி பெரிசாய் இல்லை.வாயுக் குழப்படியாய் இருக்கும்” 

அம்மா வேதனையை சமாளித்துக் கொண்டு சொல்லுகின்றாளா? அல்லது உண்மையிலேயே வேதனை இல்லையா? புரிந்து கொள்ள முடியவில்லை. 

அக்காவைக் கொண்டு சில கைமருந்து செய்தா சாய்ந்து படுத்தா, எங்கள் வீடு றோட்டோரம். பிற்பக்கம் மதில் கொண்ட வீடுகள். அதற்குப் பின்னால் தோட்ட வெளி வெகுதூரம் வரை. 

சும்மா நேரத்திலேயே றோட்டில் போவது சிக்கல் ஊரடங்கு நேரத்தில் என்றால் எப்படி இருக்கும். றோட்டு பக்கமே தலை காட்ட முடியாது. விடியும்வரை சமாளிக்க வேண்டும். 

நாங்கள் பதட்டப்பட்டோம். அம்மா பெரிதுபடுத்த வில்லை. எல்லாம்சரிவரும் என்றா. அப்படியே நெஞ்சுவலி குறைந்து விட்டது. 

விடியத்தான் ஆஸ்பத்திரி போய் பில்ஸ்சும், மிக்ஸ்சரும் வாங்கிக் கொண்டு வந்தர். அதைக் கூட ஒழுங்காக் குடித்தாவோ தெரியாது. 

மிஸ்டர் மாரின் அடிக்கடி என் வயிற்றுவலி பற்றி கேட்டார். அவர் தந்த சில மருந்துகளால் வலி போன இடம் தெரியவில்லை. 

ஆனால் மனிசன் என்னை விடவில்லை. படுக்கையில் கிடத்தி விட்டார். இரண்டு நாள் ரெஸ்ட் எடுக்கச் சொன்னார். தோட்டப் பக்கமே தலைகாட்ட வேண்டாம் என்று தடை உத்தரவு போட்டார். 

அறையில் நுரை மெத்தையில் படுத்துக் கொண்டு யன்னல் ஊடாகத் தெரியும் பசிய புல்வெளியைப் பார்த்துக் கொண்டு இரண்டு நாளைக் கழித்த பின்னர் தான் தோட்டப் பக்கம் விட்டார். 

இரண்டு நாள் றெஸ்ட் எடுத்த பின்னர் மாலையில் புல்வெளிப் பக்கமாக நடக்க ஆரம்பித்தேன். கூட கதரினும், ஜோனும் நெடுகச் சிரித்துச் சிரித்து வந்தனர். 

அந்தப் பிள்ளைகள் நெடுகச் சிரித்த படிதான். யாழ்ப் பாணத்தில் கொஞ்ச நாள் இருந்தால் இப்பிடிச் சிரிக்குமோ தெரியாது. 

கடும் பச்சைப் புல்வெளியில் இடையிடையே மலர்க் கூட்டங்கள் தெரியும். கலர் டி.வியில் காணும் பிரகாச மான வண்ணங்களைக் கொண்ட மலர்கள். 

ஒரு இடத்தில் அமர்ந்து பிள்ளைகள் விளையாடத் தொடங்கினார்கள். அதில் இருந்து சுற்றிப் பார்த்தால் ஒரே பிரமிப்பு. 

ஊரில் பின்னேரங்களில் ஸ்ரேசனடி பிளாட் போமில் இருந்து எதிரே தெரியும் தோட்டங்களையும், தென்னை பனை மரங்களையும் பார்த்து மயங்கிய கண்களுக்கு, 

இந்தக் காட்சி அதிசயத்தை தான் உண்டு பண்ணும் ஆனால், 

இப்ப ஸ்ரேசனடி பிளாட்போமில் இப்படி இருக்க முடியுமா? ஸ்ரேசன் கட்டிடமே பாழடைந்தது போல் ஆகிவிட்டதே. பிளாட்போமில் கூட. புல் மண்டிக்கிடப்ப தாக சொல்லக் கேள்வி. 

ஒரு நாள் மனத்தை ஆற்றுவதற்காகப் போய் இருந் தால் நிம்மதியாக ஆறுதலாக அந்த பிளாட்போமில் இருக்க முடியவில்லை. 

ஐந்து பத்து நிமிடங்கள் கழிந்திருக்கும். தோட்டங் களில் இருந்து புல்லுக்கட்டுகளுடன் ஆண்களும் பெண்களுமாக சனங்கள் ஓடி வந்தார்கள். 

“ஏன்ர தம்பி இருக்கிறாய் கெதியாய்ப் போ” என்று அவர்கள் சொன்ன விதத்திலிருந்து நிலைமையை உணர்ந்து இருந்த இடத்தை விட்டு விரைந்து மறைந்தோம். 

இப்ப பச்சை வண்ணமாய் பரந்திருக்கும் இந்த புல்வெளியில் வண்ணமலர்களைக் களைப்பு இல்லாமல் தாங்கும் செடிகளைத் தூரத்தில் நீலவண்ணக் கன்னிக ளாக ஜொலிக்கும் ஜகராண்டா மரங்களையும் பார்த்து பெருமூச்சு விடுவதைத்தவிர வேறு வழியில்லை. 

ஒரு கிழமை கழிந்த பின்னர் பழையபடி அந்த நேரம் அம்மாவுக்கு நெஞ்சுவலி வந்தது. ஆனால் வலி அதிகம் போல, அம்மா கடுமையான வலியுடன் போராடுவது தெரிந்தது. 

வீட்டில் எல்லோரும் கலவரப்பட்டார்கள். வெறுமை விரக்தி நிறைந்த மனங்களில் விபரிக்க முடியாத வேதனை நோகின்ற இடத்தை மேலும் அழுத்தி வலியை உண்டாக் கும்போல். 

எப்பிடியும் ஆஸ்பத்திரி கொண்டு போக வேண்டும். எப்படிக் கொண்டு போவது தலையை மோதி உடைக்க வேண்டும் போன்ற உணர்வு. பிரச்சினைக்கு தீர்வு எப்படிக் காண்பது. 

தெரு முனையில் ஒரு கார் இருந்தது “பாஸ்” ஒட்டி இடையிடையே ஓடும். வெள்ளைக் கொடி பிடித்து ஆஸ்பத்திரி போகலாம் என்று அந்தக் கார்க்காரரிடம் போனோம். 

அவர்கள் வீட்டுக் கதவைத் திறக்கவே பலமுனைப் போராட்டம் நிகழ்த்திக் கடைசியில் கார்க்காரர் வெளியே வந்தார். 

மிகப் பணிவாக வேண்டுகோள் விடுத்தும் பயன் இருக்கவில்லை “வெள்ளைக் கொடி பிடிச்சால் என்ன பிடிக்காவிட்டால் என்ன. பிரச்சினை ஒண்டுதான் விளை வும் ஒரே மாதிரித்தான் தம்பி. என்னைக் கேட்டு குறை நினையாதை. நான் வரமாட்டன். வேணும் என்றால் காரைத் தாறன் கொண்டு போங்கோ. நானும் பிள்ளை குட்டிக்காரன் என்ரை மனிசி பிள்ளையள் சம்மதிக்காது கள். உங்கடை நிலையும் எனக்கு விளங்குது தம்பி. என்று அவர் சொல்வது நியாயந்தான். 

ஆனால் என்ன செய்வது. 

அசாத்தியத் துணிச்சலுடன் சைக்கிளில் புறப்பட்டு றோட்டால் போய் தெரிந்த டாக்டர் ஒருவரை கண்டு மன்றாடி… 

“சைக்கிளில் வந்து பாருங்கோ’ கூப்பிட்டபோது டாக்டர் வீட்டுக்காரரும் போர்க்கோலம் கொண்டு விட்டார்கள். அவர்கள் நிலையில் அது சரிதான். எப்கள் நிலையில்… 

விதியை நொந்து கொண்டு அவர் ஒரு குறிப்பில் தந்த மருந்துகளுடன் வீட்டை வந்தால்… 

அதற்கிடையில் யாரோ புண்ணியவான் அந்த நேரத் தில் துணிந்தவன் காரோடத் தெரிந்தவன் உதவிக்கு வந்து தெருமுனைக்குக் காரைக் கொண்டுவந்து அம்மா வைக் காரில் ஏற்றிக்கொண்டிருந்தார்கள். 

ஆனால் இதற்கிடையில் எவ்வளவு நேரம் ஒடிவிட்டது.  

இனி எவ்வளவு விரைவாக ஆஸ்பத்திரி போக வேண்டும். ஆனால் பாதுகாப்பாகப் போகமுடியுமா? இடறிவிழும் தெருவில் வாகனம் வேகமாகப் போக முடியாது. 

எப்படிப் போய்ச் சேருவது. 

கொஞ்ச நாள் கழித்து எனக்கு மீண்டும் வயிற்றுவலி எடுத்தது. அன்று கதரினுடன் காலையில் மாடு மேய்க்கக் குதிரையில் போனேன், கும்பலாக மாடுகள் புல்தரையில் ஊர்ந்த போது… 

அடிவயிற்றில் முள்ளாகக் குத்தியது போல வலி உண்டானது. சமாளிக்க முனைந்து முடியவில்லை. 

புல்லுத் தரையில் கொஞ்ச நேரம் படுத்தேன். சரிவர வில்லை. நிச்சயமாக அவுஸ்திரேலியா கொழுப்பு நிறைந்த பாலினர்லோ அல்லது வேறு எந்தப் பதார்த்தி னாலோ இருக்க முடியாது.. 

நான் சாப்பாட்டு விடயங்களில் இப்ப அதிக கவனம் எடுத்திருந்தேன். வலி அதிகமாக கதரினைத்தனியே விட்டு வீட்டுக்குப் போனேன். புன்னகையுடன் அது விடை கொடுத்தது. 

தோட்டத்தில் மிஸ்டர் அன் மிஸிஸ் மாரின் வேலை செய்து கொண்டிருந்தனர். நான் வீட்டை நோக்கி நடக் கும் போது எனது நிலையை உணர்ந்து போலும் அவர் கள் விரைந்து வந்தார்கள். 

என் வேதனை அவர்கள் முகங்களில் தெரிந்தது. ஆத ரவுடன் அழைத்துச் சென்று படுக்கையில் படுக்க வைத்துப் போன போலவே மருந்துகளைத் தர அது முறை பிரயோசனப்படவில்லை. 

அந்த நேரம் ஜோனுக்கு வகுப்பு நடந்து கொண்டி ருந்தது. ஜோன் இருந்தது தங்கள் வீட்டில்தான். ஆனால் வாத்தியாரோ பல மைல்களுக்கு அப்பால் இருந்தார். 

 அங்கு இருந்த ரேடியோ நிலையத்திலிருந்து வாத்தியார் பாடம் புகட்டுவார். ஒவ்வொரு தோட்டத்து வீடு களிலும் உள்ள பிள்ளைகள் தங்கள் வீட்டை வகுப்ப றையாக்கி பாடம் படிப்பர். 

பல நூறு மைல்கள் விஸ்தீரணத்தில் வகுப்பறை இருக்கும். பிள்ளைகளின் முன்னால் ரேடியோ (ஸ்ராண் சீவர்) ஆசிரியராகக் காணப்படும். 

தேவையான நேரத்தில் பிள்ளைகள் சுவிட்சைப் போட்டு வாத்தியாரிடம் விளக்கம் கேட்பார்கள். அப் படியான நேரடித் தொடர்பு. 

ரேடியோ நிலையம் சமயத்தில் வைத்திய நிலைய மாகத் தொழிற்படும். அல்லது வைத்திய நிலையம் தான் கல்வி – ரேடியோ நிலையமாகத் தொழிற்படுகிறதோ தெரியாது. 

மிஸ்டர் மாரின் விரைவாகச் செயற்பட்டார்’ ஜோனின் படிப்பை இடைநிறுத்தி ரேடியோ மூலம் வைத்தியருடன் தொடர்பு கொண்டு டாக்டரை அழைத்து தார். 

அடுத்த விநாடி டாக்டர் என்னோடு கதைத்தார். கேள்விகளைக் கேட்டார். சரிவரவில்லை. தானே வருவ தாகச் சொன்னார். 

முன்பு இருந்த டாக்டர் அவரே பிளேன் ஓடுவார் இப்போது இருப்பவர் தயாராக இருந்த பைலட்டுடன் புறப்படுவதாக அறிவித்தார். 

நான் படுக்கையில் புரண்டு கொண்டிருக்க ஜோன் கவலையோடு பார்த்தான். மிஸிஸ் மாரின் 

என்னை கண்கள் கலங்கிக் கொண்டிருந்தன. 

மிஸ்டர் மாரின் காரை எடுத்துக் கொண்டு பிளேன் வந்து இறங்கும் இடத்திற்குப் போய்விட்டார். சிறிது நேரம்கழிய டாக்டர் மாரினின் காரில் வந்து இறங்கினார்.

அடுத்த சில நிமிடங்களில் டாக்டரின் பரிசோதனை. ஆஸ்பத்திரி போய்ச்சேர்த்து, எனக்கு ஒப்பிரேசன் நடந்தது. நான் சுகமானது வேறு விசியம். 

ஒரு மாதம் கழித்து ஊதிய உயர்வும் உப்பிய கன் னங்களுடன் மிஸ்டர் மாரினின் தோட்டத்திற்கு வந்து பழையபடி புல்வெளி தோட்டம் யூகலிப்டஸ் மரங்களைப் பார்த்து அவற்றுடன் ஐக்கியமானேன்.ஆனால்,

அம்மாவை நினைத்தால் கண்கள் கலங்குகின்றன. அம்மாவும் என்னைப் போல அவுஸ்திரேலியாவில் இருந்திருந்தால் அன்றைக்கு உயிர் தப்பியிருப்பாளா? 

– வீரகேசரி, 21-7-1985.

– வெட்டு முகம், முதற்பதிப்பு: ஆகஸ்ட் 1993, சவுத் ஏசியன் புக்ஸ், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *