எஞ்சியிருப்பது எது?
கதையாசிரியர்: யுவராஜ் சம்பத்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: May 19, 2026
பார்வையிட்டோர்: 111

வழக்கம்போல் இன்று காலை விடியவில்லை. நேற்று இரவு சரியாகத் தூங்காததால் சற்றே அயர்ச்சியாக இருந்தது. இருந்தாலும் 40 வருடப் பழக்கத்தைக் கைவிட மனமின்றி காலைக் கடன்களை முடித்து நடைபயணம் செல்லத் தயாரானேன். எப்பொழுதும் நடைபயணத்திற்குச் செல்வதற்கு முன்னால் அரை லிட்டர் தண்ணீரும் ஒரு நல்ல ஃபில்டர் காஃபியும் அருந்துவது என் வழக்கம். இன்றும் இல்லாள் கமகமவென மணக்கும் ஃபில்டர் காபி தயார் செய்து கொண்டு வந்து கொடுத்தார்.
காலை துயில் எழுவதற்கும் நடைபயணம் செல்லும் நேரத்திற்கும் இடையில் சற்றேறக்குறைய ஒரு மணி நேரம் ஆகும். இந்த நேரத்தில் கைபேசியில் நண்பர்களுக்கும் உறவுகளுக்கும் தினசரி காலை வணக்கமாக ஏதாவது ஒரு செய்தியைப் பகிர்ந்துகொள்வது வழக்கம்.
இரவு அழைப்புகள் ஏதாவது இருந்தாலும் இந்த நேரத்தில் அவர்களை அழைத்து பேசுவது வாடிக்கை. அப்படியே கைபேசியின் திரை மீது விரல்கள் ஓடிக்கொண்டிருக்கும் பொழுது, ஒரு புதிய எண்ணிலிருந்து வந்த காலை வணக்கச் செய்தி என்னைச் சற்று அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அந்த எண் யார் என்பது எனக்குத் தெரியாது. பொதுவாகவே என்னுடைய கைபேசியில் பதிவு செய்யப்படாத எந்த எண்ணிலிருந்தும் அழைப்புகளோ அல்லது குறுஞ்செய்திகளோ வந்தாலும் அதை பெரிதாக எடுத்துக்கொண்டு அதைப் பற்றிய நினைவுகளில் என் காலத்தைச் செலவழிக்காதவன் நான் என்பதால், இதை அப்படியே விட்டுவிட நினைத்தேன்.
ஆனால் அந்த குறுஞ்செய்தி இப்படி இருந்தது: “எல்லாவற்றையும் ஜெயித்துவிட்டு எதனுடன் வாழ? காலை வணக்கம்.”
அதை யார் அனுப்பி இருந்தாலும், உண்மையிலேயே எல்லாவற்றையும் ஜெயித்ததற்குப் பின் எதனோடு சராசரி வாழ்க்கையை நாம் வாழ முடியும்? ஏதாவது ஒரு பொருளையோ அல்லது அங்கீகாரத்தையோ பெறுவதற்கு யாராவது ஒருவரை ஜெயிக்க வேண்டும் என்கிற அந்த ஓட்டப்பந்தயத்தில் ஓடிக்கொண்டிருக்கும் நமக்கு, சராசரி வாழ்க்கையை வாழ்வதற்கு நேரம் இருக்குமா? அதற்கான முயற்சிகளில் எப்போதாவது ஜெயிக்க வேண்டும் என்கிற மனோபாவத்தைக் கொண்டுள்ள மனிதன் முயற்சித்திருக்கிறானா? அந்த குறுஞ்செய்தி என்னைக் குடைந்தது.
அதைவிட மேலாக, அனுப்பியது யார் என்பது தெரியாததால் குழப்பமான சூழ்நிலை. சரி விட்டுவிடுவோம், இப்போதைக்கு இதைப் பற்றி யோசிப்பதற்கு நேரமில்லை; காலை நடைபயணம் செல்ல வேண்டும். என் உடல் உபாதைகளை ஜெயிக்க வேண்டும். என் வயதை ஒத்த ஒருவனிடம் அவனை விட நான் ஆரோக்கியமானவன் என்று அவனுக்குச் சொல்ல வேண்டும். மற்றவர்களை விட என்னை தனித்துவம் மிக்கவனாகக் காட்ட வேண்டும். இதுதானே அந்த குறுஞ்செய்தி சொன்ன ஜெயித்தல்? ஜெயித்த பின் என்ன செய்ய?
அலுவலகத்திற்கும் வீட்டிற்கும் இடைப்பட்ட தூரம் மூன்று கிலோ மீட்டராக இருந்தாலும், சாலையில் ஏதோ ஒன்றை நோக்கி ஏதோ ஓர் அவசரத்தில் சென்றுகொண்டிருக்கும் மனிதர்கள் மத்தியில் கார் ஓட்டிச் செல்வது சற்று சிரமம்தான். இன்றும் அவ்வாறே இருந்தது. சரியாக 10 நிமிடம் முன்னதாகவே அலுவலகம் வந்தடைந்தேன். என்னுடைய வண்டி எண் எழுதப்பட்டிருந்த ‘பார்க்கிங் பே’-யில் வண்டியை நிறுத்திவிட்டுச் சென்றேன். வாசலில் செக்யூரிட்டி வழக்கமான புன்னகையுடன் “குட் மார்னிங் சார்” என்றார்.
முதல் வணக்கம் சிறப்பாகவே இருந்தது. அவர் அன்று என்னை எப்படி ஜெயிப்பது என்கிற யோசனையில் இருந்ததாகத் தெரியவில்லை.
அலுவலகப் பணிகள் வழக்கமானவையாகவே இருந்தாலும் இன்று சற்று வேறுபட்டுத் தெரிந்தது. காலையில் வந்த குறுஞ்செய்தி எல்லா அலுவலக நிகழ்வுகளிலும் ஒப்பிட்டுப் பார்க்க வைத்தது. இதைப் பற்றி இனி யோசிக்க வேண்டாம் என்று முடிவு செய்து அலுவலகப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தேன். வழக்கமான பணிகள், வழக்கமான பணியாளர்கள், வழக்கமான
மதிய உணவு இடைவேளை, வழக்கமான வீடு திரும்புதல் என எல்லாம் வழக்கம் போல் கழிந்தது. இரவு உணவுக்குப் பின் மனைவியிடம் “குட் நைட்” சொல்லிவிட்டு வந்து படுத்தேன்.
அடுத்த நாளும் அதே எண்ணிலிருந்து வேறொரு செய்தி: “காலம் எல்லாக் காயங்களையும் ஆற்றும். காலை வணக்கம்.”
யாரோ என்னையோ என் தமிழையோ சிலாகித்து இந்தச் செய்தியை அனுப்புகிறார்கள் என்பதாகப் புரிந்துகொண்டேன். ஆனால் நேற்றைய குழப்பம் இன்று இல்லை; செய்தி தெளிவாக இருந்தது. இதைப் பற்றி யாரிடமும் பேச விரும்பவில்லை.
இன்று மூன்றாம் நாள்.
அந்த எண்ணிலிருந்து வந்த குரல் செய்தி (Voice message) எல்லாவற்றையும் தெளிவாக்கிவிட்டது. அந்தச் செய்தியில்: “அண்ணா வணக்கம். நீண்ட மௌனத்தை உடைக்கும் அந்த முதல் வார்த்தை முக்கியமானது. சாரி, மன்னித்துக் கொள்ளுங்கள்.”
யாரை யார் மன்னிப்பது? எதற்கு மன்னிப்பது? ஏன் மன்னிப்பது? மன்னிப்பு கேட்பதனால் ஒரு மனிதன் தாழ்ந்து விடுகிறானா அல்லது மன்னிப்பதனால் இவன் உயர்ந்து விடுகிறானா? எல்லா மன்னிப்புகளும் ஒரே மாதிரியானவைதானா? ஆண்டவனிடத்தில் ஒரு விதமாகவும், ஆசிரியனிடத்தில் வேறு விதமாகவும், அதிகாரிகளிடத்தில் இன்னும் சற்று வேறு விதமாகவும் மன்னிப்புக் கோரும் நமக்கு, மன்னிப்பின் அர்த்தம் இன்னும் புரிபட்டதாக தெரியவில்லை. இந்தத் தம்பியை மன்னிப்பதற்கு நான் யார்? என்ன தவறு செய்தார் இந்தத் தம்பி என்பது எதுவும் புரியாததால், இன்று பதிலளிப்பது என்று முடிவு செய்தேன்.
“எதை விதைக்கிறோமோ அதையேதான் அறுவடை செய்கிறோம் தம்பி” என்று ஒரு குறுஞ்செய்தியை அனுப்பிவிட்டு என் வேலைகளைத் தொடர்ந்தேன். இருந்தாலும் இன்று இதைப் பற்றி குமார் அண்ணனிடம் விசாரித்துத் தெரிந்துகொள்வது என்று முடிவு செய்தேன். அவருக்குத்தான் ஏகப்பட்ட நண்பர்கள், உறவுகள். எந்த ஒரு எண்ணையும் மிக எளிதாக மனதில் நிறுத்திக் கொள்பவர். சுருங்கக் கூறினால் அபரிமிதமான ஞாபக சக்தி உடையவர். எந்தத் துறையிலும் தெளிவாக எதைப் பற்றியும் விசாரித்து அறிந்து கொண்டு விவாதிப்பதற்குக் கூடத் தயாரானவர்.
“அண்ணா வணக்கம்.”
“என்னப்பா, எதுக்கு கூப்பிடுற? ஆபீஸ்ல வேலை கம்மியா இருக்கா?”
“இல்லண்ணா, ரெண்டு மூணு நாளாகவே கூப்பிடணும்னு நினைச்சேன். ஆனா இன்னைக்குக் கட்டாயம் கூப்பிட்டே ஆக வேண்டும் போல் ஒரு நிலை.”
“அப்படி என்ன தலை போகிற வேலை?”
“இல்லண்ணா, ஒரு நம்பர் சொல்றேன். இந்த நம்பர் யாருன்னு ஞாபகத்துல இருக்கான்னு பார்த்துச் சொல்லுங்க” என்று அந்த எண்ணை அவரிடம் சொன்னேன்.
அவரிடமிருந்து ஒரு சிறிய இளக்காரம் கூடிய சிரிப்பு வந்தது.
“உண்மையிலேயே அவன் யாருன்னு தெரியலையா? இல்ல தெரிஞ்சும் நீ வேணும்னு என்கிட்ட கேக்குறியா?”
“இல்லண்ணா, சத்தியமா தெரியல. தெரியல அப்படிங்கறதை விடவும், அங்கிருந்து ஒரு மூணு நாளா தொடர்ச்சியா காலை வணக்கம்னு சொல்லித் தத்துவம், விரக்தி, ஞானோதயம் கலந்த செய்திகள் வந்துக்கிட்டு இருக்கு. உனக்குத் தெரியும் என்னுடைய போனில் பதிவு செய்யப்படாத எந்த ஒரு நம்பருக்கும் நான் முக்கியத்துவம் தரமாட்டேன் என்பது. ஆனாலும் அந்த காலை வணக்கச் செய்திகள் என்னை கொஞ்சம் யோசிக்க வைக்குது. கடைசியாக இன்று ‘அண்ணா மன்னித்துக் கொள்ளுங்கள்’ என்றும் ஒரு செய்தி வந்தது. மன்னிக்கக்கூடிய அளவுக்குப் பெரிய மனிதன் நான் என்பது எனக்குப் பெருமையாக இருந்தாலும், எதற்காக யாரை மன்னிப்பது என்பது புரியாததால்தான் உன்னை அழைத்தேன். உனக்குத் தெரியுதா இல்லையா?”
“ஏப்பா, தெரிஞ்சும் தெரியாத மாதிரி தானே ஒரு நெமட்டுச் சிரிப்பு சிரிச்சேன், புரியலையா உனக்கு?”
“புரியவில்லை, சொல்லித் தொலையேன்.”
“உனக்கு ரொம்ப தெரிஞ்சவன் தான். கூப்பிட்டு உன்கிட்ட பேசச் சொல்லட்டுமா?”
“வேண்டாம்.”
“ஏதாவது பழைய கதைகள், பழைய கசப்பான நினைவுகள், அனுபவங்கள் அல்லது பண இழப்பு இப்படி ஏதாவது இருந்தால் தான் ‘மன்னித்துக் கொள்ளுங்கள்’ என்கிற வார்த்தை அவனிடமிருந்து வரும். அது யாராக இருந்தாலும் பழைய உறவுகளைப் புதுப்பித்துக் கொள்ள நான் தயாராக இல்லை. பறவையிடமிருந்து பிரிந்த சிறகு, காற்று போன போக்கில் தானாகவே பறந்து சென்று ஓரிடத்தில் அழிந்துவிட வேண்டும். அந்தச் சிறகை நான் தூக்கிச் சுமக்க விரும்பவில்லை. யாராக இருந்தாலும் என்ன ஏது என்று விசாரிக்கவும் நான் தயாராக இல்லை. ஆனால் அந்தச் செய்திகள் கடந்த சில நாட்களாக என்னைக் குடைந்து கொண்டிருக்கின்றன. அதனால்தான் உன்னிடம் விசாரித்தேன்.”
“கரெக்ட்ப்பா… உண்மை தெரிஞ்சா நீ இன்னும் கொஞ்சம் கஷ்டப்படுவ. தெரிந்துகொள்ள ஆசையா?”
உடனடியாக எனக்கு ஒரு முடிவு எடுக்க முடியவில்லை. “சரி, நான் சாயந்திரம் வீட்டுக்குப் போகும்போது காரிலிருந்து பேசுறேன், அப்பச் சொல்லு. இப்போதைக்கு பை” என்று சொல்லித் தொலைபேசித் தொடர்பைத் துண்டித்தேன்.
மாலையில் மீண்டும் என் அண்ணன் அழைத்தார்.
“நீ ஒரு புரட்சிகரமான திருமணம் செய்து வைத்தாய், ஒரு 15 வருடங்களுக்கு முன்னால் ஞாபகம் இருக்கிறதா?” என்று கேட்டார்.
இந்த மாதிரி விஷயங்களில் எனக்கு உடன்பாடு இருப்பதால் பல பேருக்குப் பல நேரங்களிலும் உதவி இருக்கிறேன். ஆனால் இது யார் என்பது எனக்குக் கொஞ்சம் ஞாபக மறதியாகத்தான் இருந்தது.
“தெரியலையே… ஏதோ ஒரு சின்ன ‘க்ளூ’ குடு.”
“ஓகே, நீ ஜெர்மனி போறதுக்கு ரெண்டு நாள் முன்னாடி ஒரு பிரச்சனை. நீ ஜெர்மன் போறதைக் கேன்சல் பண்ண முடியாதுங்கறதால என்கிட்ட சொல்லி அந்தத் திருமணத்தை நடத்தி வைக்கச் சொன்னாய். நானும் நடத்தி வைத்தேன். இப்போது ஞாபகம் வருகிறதா?” என்றார் என் அண்ணன் குமார்.
“ஆஹா! அருள் – செந்தமிழ் செல்வி! அவங்களையா சொல்றீங்க?”
“ஆமாம்.”
நினைவுகள் 15 வருடம் பின்னோக்கிச் சென்றன.
அன்று இளவயது என்பதாலும், புதிதாகச் சேர்ந்த நிறுவனம் என்பதாலும் ஏகப்பட்ட வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்யும் பழக்கம் எனக்கு இருந்தது. புதிய நிறுவனத்தின் புதிய தயாரிப்புகளை ஏற்றுமதி செய்யும் பொறுப்பும் என்னிடம் இருந்தது. இதனால் அடிக்கடி வெளிநாடு செல்வதும், அதன் மூலம் பல்வேறு உயர்மட்டத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டதும், மற்றவர்களுக்கு உதவும் பழக்கமும் வாய்த்திருந்தது. குறிப்பாகக் கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு, மார்க்சியம், பெரியாரியம் போன்ற கருத்துகளில் ஈடுபாடு கொண்டிருந்ததாலும், என்னை நாடி இந்த மாதிரி உதவிகளை வேண்டி இளைஞர்கள் அணுகுவது உண்டு.
அப்படித்தான் ஒரு நாள் அருள் வந்தான். அருள் எங்கள் அலுவலகத்தில் எனக்குக் கீழே வேலை செய்துகொண்டிருந்தவன். அருள்செல்வியும் எங்கள் அலுவலக ஊழியர். இருவரும் பழகித் தங்களை உணர்ந்து, தங்கள் எதிர்காலத்தைத் தீர்மானித்துத் திருமணம் செய்துகொள்வதாக உறுதிமொழியும் எடுத்துக்கொண்டார்கள். வழக்கம் போலவே சாதி குறுக்கிட்டது. இருவரும் தமிழகத்தின் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாவட்டத்திலிருந்து வந்தவர்கள் என்பதால், அங்குப் புரையோடிக் கிடந்த சாதி இவர்களைத் திருமணம் செய்ய விடாமல் தடுத்தது.
ஆழ்ந்த விசாரணைகளுக்குப் பின்னாலும் அவருடைய பெற்றோர்களைச் சமரசம் செய்து வைக்க முடியாததால், பெண்ணின் குடும்பத்தார்களுடன் பேசி அவர்களை மட்டும் முன்னிறுத்தி அந்தத் திருமணத்தைச் செய்து வைத்தேன். அன்றிலிருந்து அந்தப் பெண்ணுக்கு நான் ஒரு உடன்பிறவா சகோதரன். எனக்கும் அந்தப் பெண்ணின் மீது அளப்பரிய அன்பு இருந்தது.
அன்புச்செல்வியின் பெரியாரிய சிந்தனைகளும், சமூகத்தைப் பற்றிய அவளுடைய தெளிவான பார்வைகளும் என்னை பல நேரங்களில் விவாதிக்க வைத்திருந்தன. ஒவ்வொரு விவாதத்திலும் அவளுடைய புத்திசாலித்தனமும் கருத்துகளை முன்வைக்கும் நேர்த்தியும் என் மனதில் அவள்மீது தனி மதிப்பை உருவாக்கியது. அவள் ஒரு நாள் மிகப் பெரிய இடத்தை அடைவாள் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது.
ஆனால் காலப்போக்கில் அது வேறு மாதிரி உருவம் எடுத்தது. எங்களுடைய தொழிலுக்குப் போட்டியாக அவர்கள் தொழில் செய்ய முயன்று, எங்கள் நிறுவனத்திற்குப் பாதிப்பு ஏற்பட்டதால் அவர்கள் மீது கடும் கோபத்துடன், “என் வீட்டின் பக்கம் கூட வராதீர்கள்” என்று துரத்திவிட்டது ஞாபகம் இருக்கிறது. சரி, அவர்கள் எப்படி இருந்தால் என்ன? ஆனால் இன்று ஏன் மன்னிப்புக் கேட்க வேண்டும்? அது மேலும் என்னைக் குடைந்தது.
“என்னப்பா பேச மாட்டேங்குற? ரொம்ப யோசிக்கிறாயோ? பரவாயில்லை, உனக்கு ஒன்னு சொல்றேன் கேக்குறியா?”
“சொல்லு, நான் கேட்டுத்தான் ஆகணும். சொல்லு என்ன ஆச்சு?”
“அன்புச்செல்வி மரணித்துவிட்டாள்.”
“என்னது! செத்துப் போயிட்டாளா? எப்போ? இரு. காரைச் சற்று நிறுத்துகிறேன்.”
என் காரைச் சாலையோரம் நிறுத்திவிட்டு, ஒரு பாட்டில் தண்ணீரை எடுத்து ஒரு மடக்கு குடித்துவிட்டு என்னை நானே ஆசுவாசப்படுத்திக் கொண்டேன்.
“ஏன்? என்ன ஆச்சு? எப்படி?”
அண்ணன் தொடர்ந்தார், ‘அவளுக்குப் புற்றுநோய் (Cancer) நான்காம் கட்டம். பிழைக்க வாய்ப்பில்லை என்று தெரிந்ததும், செத்தாலும் சொந்த மண்ணில் சாக வேண்டும் என்று ஆசைப்பட்டு நம்ம ஊருக்கே வந்துட்டாங்க. அவினாசி ரோடு குமரன் மருத்துவமனையில்தான் சேர்த்திருந்தோம்.
சாகுறதுக்கு முன்னாடி உன்னை ஒருமுறை பார்க்கணும்னு அவ துடிச்சாப்பா… நானும் அங்கதான் இருந்தேன். ஆனா, அருளுக்கும் எனக்கும் உன்கிட்ட இதை எப்படிச் சொல்றதுன்னு தெரியல. ஒருவேளை நீ வந்து அவளைப் பார்த்திருந்தா, அந்தத் திருப்தியிலேயே அவள் மரணம் கூட கொஞ்சம் தள்ளிப் போயிருக்கலாம். அவ இதயத்துல நீ ஒரு அணையாத் தீபமா இருந்தாய்ன்னு
அவளுக்குத் தெரியும், ஆனா உனக்குத் தெரியுமான்னு எங்களுக்குத் தெரியல. இப்போ அந்தத் தீபம் அணைஞ்சுடுச்சு. அதைச் சொல்லவாவது உன் நம்பர் வேணும்னு என்கிட்ட கேட்டு வாங்கினான் அருள்’ என்று அண்ணன் சொல்லி முடிக்கையில், கார் கண்ணாடியைத் தாண்டிச் சாலை எனக்கு மங்கலாகத் தெரிந்தது. கண்கள் கலங்கியிருந்தன.”
இப்போது எல்லாம் புரிந்தது. நிராகரிப்பினால் கிடைக்கும் வலி என்னவென்று அவர்களுக்கு இப்போது புரிந்திருக்கக் கூடும். அதனால்தான் அவர்கள் உன்னிடத்தில் சொல்லி என்னிடம் பேச வேண்டும் என்று கேட்டிருக்கக் கூடும். பரவாயில்லை. எந்தக் குருவி எங்கிருந்து வந்து என் வீட்டுத் தண்ணீர் தொட்டியில் தண்ணீர் குடித்தது என்பது எனக்கும் தெரியாது; தண்ணீர் வைத்தது யார் என்பது குருவிக்கும் தெரியாது. அதன் இயல்பு தாகம் தணிப்பது. என் இயல்பு தாகம் தீர்ப்பது.”சரி, நாளை நானே பேசுகிறேன்” என்று கூறி அண்ணனின் தொலைபேசித் தொடர்பைத் துண்டித்தேன்.
மிதிக்கப்பட்டேன், பாதியிலேயே கழட்டிவிடப்பட்டேன், சில நேரங்களில் அவமானப் படுத்தப்பட்டேன்… அறுந்த பின் தூக்கி எறியப்படும் செருப்பு போல நான். ஆனாலும் பயன்பட்டேன். அதுவரை மகிழ்ச்சி.
நாளை நான் கட்டாயம் அருளிடம் பேச வேண்டும்…
தொடர்புள்ள சிறுகதைகள்
ஜனனி…! ஜெயம் நீ…!
ஜூனியர் தேஜ்
May 19, 2026
போதும் என்ற மனம்
கே.என்.சுவாமிநாதன்
May 19, 2026