எங்கெங்கு காணினும் சக்தியடா
கதையாசிரியர்: எஸ்.மதுரகவி
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: June 20, 2026
பார்வையிட்டோர்: 247

கதை நிகழும் ஆண்டு 1980 ஆம் ஆண்டு.
விழுப்புரம். திங்கட் கிழமை . மாலை நேரம். இருபத்து இரண்டு வயது கட்டிளங்காளை இளைஞன் பார்த்திபன் , அவளுடைய அக்கா நர்மதாவைப் பார்க்க , அவள் ஆசிரியராகப் பணிபுரியும் தனியார் பள்ளிக் கூடத்திற்குச் சென்றான்.
பள்ளியின் நுழைவாயில் அருகே அவனைப் பார்த்த பியூன் பாபு, ‘அக்கா, மாலதி டீச்சர் வீட்ல இருப்பாங்கப்பா.. வ.உ.சி தெருவுல அவங்க வீடு.. மொட்டை மாடில டியுசன் எடுத்துகிட்டு இருப்பாங்க’ என்றார்.
‘சரிங்க தாங்க்ஸ்’ என்று கூறிய பார்த்திபன், மாலதி டீச்சரின் வீட்டை நோக்கி நடந்தான்.
வீட்டுக்கு வெளியே இருந்த படிக்கட்டுகள் வழியாக சிறுவர் சிறுமிகள் வருவதைப் பார்த்த பார்த்திபன், அந்தப் படிக்கட்டுகளில் ஏறி மொட்டை மாடிக்குச் சென்றான். அங்கே அழகான, ஒடிசலான தேகம் கொண்ட, எளிய நீலநிற சேலை ரவிக்கை அணிந்திருந்த அவனுடைய அக்கா நர்மதா, ஒரு நாற்காலியில் அமர்ந்து பாடம் நடத்திக் கொண்டு இருந்தாள். பார்த்திபன் எதுவும் பேசாமல் அவள் அருகில் இருந்த சிறிய ஸ்டூலில் அமர்ந்து கொண்டான். மாணவமணிகள் விடை பெற்றுச் சென்ற பின்னர், நர்மதா பேசினாள் –
“என்ன பார்த்தி … நான் இருக்கிற இடம் தேடி வந்திருக்கே…”
“வீட்ல ஒன் கிட்ட பேச முடிய மாட்டேங்குது … நீ எப்பவும் நோட்ஸ் ஆப் லெசன் எழுதற இல்லேன்னா நம்ம நிலத்தோட குத்தகை கணக்கை பார்த்துகிட்டு இருக்கே …இல்ல தியேட்டர் கணக்கு வழக்கை பார்க்கறே”
“அதெல்லாம் இன்னிக்கு நேத்திக்கா பார்க்றேன்.. தாத்தா போனதுலேந்து நான்தான் பார்க்கறேன் … நம்ம அப்பா பொறுப்பா இருந்திருந்தா … “
“இவங்க வீட்லேந்து பசங்களுக்கு டியூஷன் எடுக்க ஆரம்பிச்சு இருக்கியா அக்கா “
“மாலதி டீச்சருக்கு குழந்தை பிறக்கற வாரம் இது … ஒரு மாசம் என்னை ட்யூஷன பார்த்துக்க சொன்னாங்க…”
வாட்டசாட்டமான உருவம் கொண்ட மாலதியின் கணவர் அங்கு வந்தார்.
“ஒங்க தம்பியா டீச்சர் .. வீட்ல கீழே வந்து பேசுங்களேன்…”
நர்மதா பதில் சொன்னாள் –
“பராவால்லே அண்ணே .. இப்ப கிளம்பிடுவோம் “
அவர் புன்னகைத்தபடியே அங்கிருந்து நகர்ந்தார் .
“என்ன பார்த்தி என்ன பேசணும் சொல்லு…”
பார்த்திபன் பேசினான்
“நீ நாள் பூரா வேலை செஞ்சசு களைச்சு போயிருப்ப … வீட்ல போய் ஏதாவது சாப்பிட்டுட்டு பேசலாமா?“
“ வீட்ல தான் பேச முடியலேன்னு சொல்றியே … என்னன்னு சொல்லு…”
“ஒண்ணு சுகுணா சித்தி…”
“சுகுணா சித்திக்கு என்ன .. நாம நல்லாதானே கவனிச்சுகிட்டு வரோம் . ஒரு கருத்தான பொறுப்பான அக்கா புருசனா நம்ம சித்திக்கு கல்யாணம் பண்ணி வைக்க வேண்டிய அப்பா , அவங்கள தொட்டுட்டாரு… சரி விதியேன்னு அவங்கள நம்ம அப்பாவுக்கு கட்டி வைச்சேன் … சித்தியை மறுபடியும் சித்தி ஆக்கிகிட்டேன். அப்பனுக்கு கல்யாணம் பண்ண மகள் நானாதான் இருப்பேன்… அவங்க தனி வீட்ல தான் இருப்பேன்னு
சொன்னாங்க .. அவங்கள தனியா வாடகை வீட்ல இருக்க வைச்சு … தேவையானதை கொடுக்கறோம் இல்ல அப்புறம் என்ன சித்திக்கு”
“ அப்பா தலைமறைவா இருக்காரு இல்ல அவரால அடி வாங்கின ஆளு இன்னும் கோமால தான் இருக்கான் … சித்தி , நான் மெட்ராசுக்கு போய் ஏதாவது வேலை பார்த்துக்கறேன்னு சொல்லுது. ஊரெல்லாம் ஒரு மாதிரியா பேசறாங்க ன்னு சொல்லுது…”
“அதுக்கு .. நாம ஊர்ப் பேச்சை சகிச்சுகிட்டு இருக்கோம் .. இல்ல அப்பா வீட்ல அடைஞ்சு இருந்தா இந்த பிரச்சினை வருமா … கூடா நட்பு … கூட்டாளிங்களோட தண்ணி அடிச்சப்ப காலம் போன காலத்துல உனக்கு எதுக்குடா ரெண்டாவது .. ன்னு கேட்ட பெரிய மனுசன் வீட்டுப் பிள்ளையை அடிச்சுட்டு இப்ப தலைமறைவா இருக்காரு … வர்றப்ப வரட்டும் … சித்திய இங்கேயே இருக்க சொல்லு … அப்புறம் அங்க அவங்களுக்கு ஏதாவதுன்னா போட்டது போட்டபடி போட்டு நாம பட்டினத்துக்கு போகணும் … நீ தான் சித்திகிட்ட நல்லா பேசற .. அப்பா அந்த வீட்டுக்கு வரலையே … தெரியுமா?”
“எனக்கு அந்த சந்தேகம் இருந்துச்சு நான் வீடு முழுக்க பார்த்துட்டேன்…”
“அப்பா அங்க வந்து ஒளிஞ்சாலும் சித்தி எதுக்கும் இடம் கொடுக்காம இருக்கணுமே .. அதை நீ சித்தி கிட்ட சொல்லணும் முடியுமா ? இதெல்லாம் பத்தி நாம பேச வேண்டி இருக்கு பாரு … நம்ம தியேட்டர்ல போய் பார்த்தியா அப்பா அங்க வந்தாரா இருக்காரன்னு விசாரிச்சியா?”
“அங்க போய் மேனேஜர் கண்ணன் , மத்தவங்க எல்லார் கிட்டயும் கேட்டேன் .. அப்பா இங்க வரலைன்னு சொல்றாங்க…”
“சரி ரெண்டாவது விஷயம் என்ன?”
“தங்கச்சி மீனா , நம்ம ஏரியா பெரிய புள்ளி தனசேகரனோட பையன் மகேஷ லவ் பண்றாளாம்… அம்மா கிட்ட இந்த வீட்ல இருக்க பிடிக்கல… நீங்களா கல்யாணம் பண்ணி வைக்கறீங்களா நானா போகட்டுமான்னு கேட்குதாம் அம்மா ஒன் கிட்ட சொல்ல சொன்னாங்க… அவரோட கணக்குப் பிள்ளை இன்னிக்கு நம்ம வீட்டுக்கு வந்து பெரியவர் உன்னை நாளைக்கு வந்து பார்க்க சொன்னாருன்னு சொல்லிட்டு போனாரு … அக்கா நீ … என்ன…”
“குடும்பம் இருக்கிற நிலையில இது வேறயா…? சரி அவ அவசரப்பட்டா என்ன செய்யறது … எனக்குன்னு வாங்கின நகைகளையும் அம்மா கொண்டு வந்த நகைகளையும் வெச்சு கல்யாணம் செஞ்சு அவளை அனுப்பி வெச்சிடுவோம்… கிராமத்துல இருக்கிற சித்தப்பா சித்திய வரவழைச்சு தாரை வார்த்துக் கொடுப்போம்….எனக்கு பார்த்தியா கல்யாணம் கட்டிக்கிற ராசி இல்ல … கல்யாணம் பண்ணி வைக்கத்தான் ராசி இருக்கு … பெரிய மனுசன் கூப்பிட்டு இருக்காரு மரியாதைக்கு போய் பார்த்துட்டு வா … ஆனால் , நம்ம வீடு தேடி வந்து என் கிட்டயும் அம்மாகிட்டயும் பொண்ணு கொடுங்கன்னு கேட்டாதான் நான் கல்யாணம் நடத்தி வைப்பேன் அதை எப்படி சொல்ல முடியுமோ சொல்லிட்டு வந்துடு புரியுதா…?”
“சரி அக்கா … மீனா அதுவா போயிடுச்சுன்னா…”
“அதுக்கு நாம என்ன பண்ண முடியும் ? அறையில வெச்சு பூட்டியா வைக்க முடியும் …அது அவளோட முடிவுன்னா போகட்டும்”
“அக்கா நான் உனக்கு நான் எதுவுமே ஒத்தாசையா இல்ல இல்ல…”
“தாத்தா பார்த்துகிட்டுது எல்லாம் எனக்கு தான் நல்லா தெரியும் … நீ என் தம்பியா இருக்கறதே எனக்கு யானை பலம் …. நீ டிகிரிய முடிச்சுட்டு வா … அப்புறம் உனக்கு வேலை கிடைச்சா போ.. மெட்ராசுக்கு போக , வேற எங்கேயும் போக உனக்கு
பிடிக்கலேன்னா நீதானே இதெல்லாம் பார்த்துக்கப் போற… வா வீட்டுக்கு போகலாம்…”
நர்மதா , தம்பியின் தலையை வாஞ்சையுடன் வருடினாள்…
மறு நாள் . மாலை நேரம் . நகரத்தின் முக்கிய புள்ளி தனசேகரனின் வீட்டு வாசல் அருகில் இருந்த திண்ணையில் பார்த்திபன் அமர்ந்து இருந்தான். மீனாவின் காதலன் , மாளிகை போன்ற வீட்டின் உள்ளிருந்து அவனருகில் வந்தான்.
“வா … அப்பா கூட இருந்தவங்க்கிளம்பிட்டாங்க .. அப்பா கிட்ட சொல்லிட்டேன் . வா போகலாம்.”
பார்த்திபன் அவனுடன் சென்றான். அவர்கள் இருவரும் அந்த வீட்டின் முதல் மாடிக்குச் சென்றார்கள் . அங்கே பெரிய ஊஞ்சலில் வெள்ளை ஜிப்பா வெள்ளை வேட்டி அணிந்த , மிகப்பெரிய மீசை , வாட்டசாட்டமான உருவம் கொண்ட மகேஷின் அப்பா தனசேகரன் அமர்ந்து இருந்தார். அவருடைய குறிப்பை உணர்ந்து அவர் அருகில் இருந்த இரண்டு வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை நபர்கள் அங்கிருந்து வேகமாக வெளியேறினர். பார்த்திபனும் மகேஷும் நின்று கொண்டிருந்தனர். அங்கு நாற்காலிகள் இருந்தும் மகேஷின் அப்பா அமரச் சொல்லவில்லை.
மகேஷ் பேசினான்
“அப்பா…. இது…”
தனசேகரன் கனைத்துக் கொண்டே பேசினார் –
“தெரியுதே புருஷோத்தமன் பேரன் முத்துவோட பையன் … தாத்தா ஜாடை அப்படியே இருக்கு … என்னப்பா அப்பா பத்தி ஏதாவது தெரிஞ்சுதா…”
“இல்லீங்க ஐயா…”
“ஒங்க அப்பா மேல புகார் இல்லியாமே … அவன் வெளிய வரலாமே … ஆனா அவன் வெளியே வரட்டும் கம்ப்ளெயின்ட் கொடுக்கலாம்னு அந்த தரப்பு வெயிட் பண்ணுதோ என்னவோ … சரி அது போகட்டும் அவர் நல்லபடியா வந்து சேரட்டும்ன்னு நாம பிரார்த்தனைதான் செய்ய முடியும் உன்னை ஏன் வர சொன்ன்னேன்னா .. மகேஷோட அம்மாவுக்கு உடம்பு சரியில்லே போய் சேர்ந்திடுவோம்ன்னு ஒரு பயம் அவளுக்கு அதுக்கு முன்னாடி இவனுக்கு கல்யாணம் பண்ணனும் னு தினமும் சொல்லிட்டு இருக்கா … இவன் காதல் கத்தரிக்காய்ன்னு சொன்னான் … அதுக்கும் அவங்க அம்மா சரின்னு சொல்லிட்டா.. ஒங்க வீட்லேயோ ஒங்க அப்பன் கதை இப்படி …. நீ என்ன பண்றே…. வர்ற ஞாயித்துக் கிழமை நல்ல நாள்ன்னு சொல்றாங்க …. சனிக் கிழமை , உன் தங்கச்சி மீனாவை எங்க வீட்ல கொண்டு வந்து விட்டுடு … ஞாயித்துக் கிழமை நிச்சய தாம்பூலம் நடத்திட்டு அடுத்த முகூர்த்தத்துல கல்யாணம் முடிச்சிடலாம்…”
பார்த்திபன் அவருடைய முகத்தைப் பார்த்தபடியே பேசினான் –
“ஐயா … எங்க அப்பா ரெண்டு மாசமா ஏதோ சிக்கல்ல மாட்டிகிட்டு தலைமறைவா இருக்காரு.. அவரு இருந்தப்பவும் இப்பவும் குடும்பத் தலைவியா இருக்கறது எங்க அக்கா நர்மதா …. நீங்க எங்க வீட்டுக்கு வந்து எங்க அக்கா கிட்ட முறைப்படி பொண்ணு கேளுங்க …. கிராமத்துல இருக்கிற எங்க ராஜா சித்தப்பா சித்திய வைச்சு கல்யாணத்தை முடிக்கறோம் …. இது தான் எங்க அக்கா நர்மதாவோட முடிவு “
ஊஞ்சலில் அமர்ந்து இருந்த தனசேகரன் எழுந்து நின்றார் …
“அவ யாரு ஒரு ……… சின்ன பொண்ணு அவ கிட்ட வந்து நான் பொண்ணு கொடுன்னு கேட்கணுமா … இவன் வீடு புகுந்து மீனாவை சிறையெடுத்தா உங்க அக்கா என்ன செய்யும்? இத்துனூண்டு பையன் நீதான் என்ன செய்ய முடியும் ? “
“மீனா இந்த வீட்டுக்கு அந்த வழிமுறையில வரணும் னு இருந்தா நாங்க என்ன செய்ய முடியும்? ஆனால் , நீங்க சமுதாயத்துல பெரிய புள்ளி …முறையை கடைப்பிடிப்பிங்கன்னு நெனச்சு நான் சொன்னேன். .. ஐயா பெண் ங்கறது ஒரு சக்தி … ஒங்களோட வாழ்ந்த பெண்ணின் வார்த்தைக்காக தானே நீங்க இதுல இறங்கினீங்க …. பெண்கள பத்தி தப்பா பேசாதீங்க…. நான் வரேங்க ஐயா…”
மகேஷின் கைகளைத் தொட்டு விட்டு பார்த்திபன் , தனசேகரனைப் பார்க்காமல் படிகளில் இறங்கி வேகமாகச் சென்றான்.
தனசேகரன் , மகேஷைப் பார்த்து கத்தினார் –
“சின்ன பையன் என்ன சொல்லிட்டு போறான் பார்த்தியா … உன்னால . எனக்கு இது…நம்ம ஆளுங்களோட போய் அந்த பொண்ணை வீடு புகுந்து இழுத்துகி்ட்டு வா… “
மகேஷ் அமைதியாகப் பேசினான் ..
“அப்பா.. அவங்க அப்பா இல்லாத நிலையிலும் சித்தப்பாவை வைச்சு கல்யாணத்தை நடத்தி தரேன்னு தானே அந்த பையனோட அக்கா சொல்லி அனுப்பி இருக்கு .. நாம முறையா பொண்ணு கேட்டா என்ன குறைஞ்சு போயிடுவோம்.. .?”
“அதெல்லாம் நடக்கும்ன்னு நீ கனவுல கூட நெனக்காதே… அவ என்ன…?”
“சின்ன பையன் …. இப்ப தானே சொல்லிட்டு போறான்.. பெண்களை தப்பா பேசாதீங்கன்னு … முறைப்படி பொண்ணு கேட்க முடியாது ங்கற ஒங்க முடிவா இருந்தா விட்டுடுங்க … எனக்கும் மீனாவுக்கும் எப்ப கூடி வருதோ அப்ப கல்யாணம் பண்ணிக்கிறோம் …. “
என்று கூறி விட்டு மகேஷ் , அந்த மாடியில் இருந்த தன்னுடைய அறையை நோக்கி நடந்தான். தனசேகரன் , அவனையே பார்த்துக் கொண்டிருந்தார்.
அருகில் இருந்த அம்மன் கோயிலிலிருந்து எங்கெங்கு காணினும் சக்தியடா – பாடல் உரக்க ஒலித்தது.
![]() |
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுரகவி (1962) எண்பதுகளிலிருந்து சிறுகதைகள். புதுக்கவிதைகள். நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருபவர். புதுச்சேரி வானொலியில் 1984-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். சென்னையில் விளம்பரவியல் துறையில் 1984 முதல் 2000 வரை ஊடகத் தொடர்பு மேலாளராகப் பணியாற்றியவர். 2000ம் ஆண்டு முதல் முழுநேர விளம்பரத்துறை எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். தொண்ணூறுகளில் இவரது படைப்புகள் சுமங்கலி, அமுதசுரபி, குங்குமம், குங்குமசிமிழ். முல்லைச்சரம், குடும்பநாவல் ஆகிய இதழ்களில்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
உறுப்புகளைத் தேடி…
காரை ஆடலரசன்
June 20, 2026
அப்பாவின் பட்டுவேஷ்டி
ஷைலஜா
June 20, 2026
தீர்ப்பு
ஜே.எம்.சாலி
June 20, 2026
