ஊனம்
கதையாசிரியர்: செ.யோகநாதன்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: August 8, 2026
பார்வையிட்டோர்: 83
(1973ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பார்க்கும் எவருக்கும் அவனுடைய உருவம் நிமிஷத்திற் குள் மனந்தனிலே பதிந்துவிடும். அவனுடைய புன்முறு வலால் வசீகரமுற்றிருக்கும் முகமல்ல அதற்குக் காரணம். அந்தப் புன்னகை, பின்னர் – நன்றாகப் பழக்கமுற்ற பின்னர் தான் மனதிலே பதிந்து நினைவிலிருக்கும்.
முதலிலே கண்களிற்குத் தெரிவது, அவனது கால்ஊனந் தான். அவனுடன் பழகுகின்ற பெரும்பாலானவர்களுக்கு அவனுடைய ஊனமானது ஒரு வாரங்கழியுமுன்னரே மன திற்கும். கண்களிற்கும் மறந்து போய்விடுகின்றது. அவ் வேளையிலே இவையெல்லாவற்றையும் மீறிக்கொண்டு கடு மையறியாத முகமும், இனிய குரலுந்தான் அவனுடைய தனிப்பலமென உயர்ந்துபோய் நிற்கின்றது. அந்த உருவங்களாக அவன் மாறிப்போய் விடுகின்றான்.
பரமசிவம் என்னுடைய மனதினால் மறந்திட முடியாத நண்பன். இளவயதிலிருந்து மனோகரக் கனவுகளாலான வளரிளம் பருவத்தையும் தாண்டி நட்பாயிருந்தவர்கள் நாங்கள். படிப்பொன்றையே என்னுடைய சகலமுமாய் ஆக்கிவிட்ட என் பெற்றோர்களின் கட்டுப்பாடு, விளையாட் டிலேயே என்னுடைய கவனத்தினைப் படியாமற் செய்து விட்டது.
இன்னும் என்னுடைய கடந்தகால இளமை நாட்களை நான் நினைத்துப் பார்க்கின்றேன். என்றுமே எந்த விளை யாட்டு மைதானத்திலும் நான் கால் தரித்து நின்ற தில்லை.
டிறில் வகுப்பு நேரங்களிலே எனக்குச் சுகவீனம் ஏற்பட்டு விடும். விளையாட்டுப் போட்டிகளின் கலகலப்பும், வெற்றிப் பெருமிதக் களிப்புகளும் குரலிடுகின்ற இடங்களை எல்லாம் தவிர்த்து மௌனத்தின் ஏகாந்தப் பொழுதில் புத்தகங்களிடையே ஆழ்ந்து மூழ்கிப்போயிருப்பேன் நான். இதனாலே எனக்கு நண்பர்களின் இணைப்பே இல்லாது போயிருந்தது. என்னை எல்லோரும் அதிசயப் பிறவியாகக் கணித்தாலும், படிப்பிலே நான் முன்னணியிலே இருந்தமை யினால் என்மீது மதிப்பும் அன்பும் வைத்திருந்தார்கள். இயல்பாகவே நான் இளகியசுபாவம் உள்ளவன். அடிபிடிக்கு அஞ்சியொதுங்கும் பச்சைத் தண்ணீர். இத்தகைய இயல்பு களே என்னுடைய சுபாவமாச அமைந்தமையினால் பரமசிவமும் நானும் இணைபிரியாத தோழர்களாவது சாத்தியமாயிற்று.
அவனுடைய கால் ஊனமானது, அவனைத் தனியனாக்கி யது. அந்தத் தனியனுக்கு நான் நல்ல துணைவனானேன்.
உடலில் ஏதோ ஒரு ஊனமிருக்கின்றவனுக்கு அசாத்திய மான திறமை ஒன்றிருக்கும் என்பதற்குப் பரமசிவம் நல்ல உதாரணம். அவனுடைய இடது கால் கணுவுக்குக் கீழே சூம்பிப்போய் சதைப் பற்றற்று குச்சித்தடிபோலத் தோற்ற மளித்தது. அதனைத் துடுப்பு வலிப்பதுபோல அவன் இழுத்து இழுத்து நடப்பது பார்வைக்கு மிகுந்த வேதனையினை அளிக்கும். ஆனால் அவன் பாடத்தொடங்கிவிட்டால், நாம் சஞ்சரித்திருக்கின்ற சூழலே அந்த இசையின் வலிமையினால் கரைந்து மறைந்துபோய்விடும். அத்தனை குழைவும் இனிமை யும் அந்தக் குரலுக்கு.
அந்த இனிய சாரீரம் வசப்படுத்தாத இருதயம் இருக்க முடியாது. அந்த நாதம் மெல்லத் தொடங்கி தன் பிடிக்குள்ளே தன் சொற்களின் அர்த்தத்தினுள்ளே-அது கூறும் உணர்ச்சியினுள்ளே — அந்த உணர்ச்சியின் கரை யில்லாத பிரவாகத்தினுள்ளே எவரையும் ஆழ்த்தி மோக னமான கனவுகளிலே சஞ்சரிக்க வைத்துவிடும். அவ னுடைய புன்னகை ததும்புவதால் மலர்ந்திருக்கின்ற முகத்தினை, பாடுகின்ற போதிலே நீங்கள் பார்க்கவேண் டும். அது சொல்லிலே அடக்கிக்கொண்டு வரமுடியாத காட்சியின் அநுபவம். அப்படியானதோர் முகத்தின் கம்பீரத்தைப் பெருமிதத்தினை என் வாழ்விலே என்றுமே நான் தரிசித்ததில்லை.
பரமசிவத்தை கடைசியாக நான் கண்டு பல வருஷங் களாகி விட்ட போதிலும் அவனுடைய அந்தக் கம்பீரமான முகத்தினை, இனிய குரலினை என்னாலே மறக்கவே முடிய வில்லை. நேற்றுத்தானே அவனது குரலினைக் கேட்டது போல, நேற்றுத்தான்-இல்லை சற்று முன்னர்தான் அவனது முகத்தைக் கண்டதுபோல ஒரு பிரமை எனக்கு. இதைக் கேட்கின்றபோது இது ஒரு அசட்டுத்தனமாக உங்களுக்குப் படலாம். ஆனாலும் ஒன்று உங்களுக்குத் தெரிய வேண்டும் வாழ்வில் நாம் கொள்ளும் பல அசட்டுத்தனங்களில் தனியானதொரு ருசியிருக்கின்றது.
பாலிய கால நினைவுகளை மனதினுள்ளே மீட்டுச் சுகங் காணாத மனிதப் பிறவியைப் பற்றி எனக்குக் கொஞ்சம் சந்தேகமாக இருக்கின்றது.
இறந்த காலத்தினை, அது துயரங்களினால் சூழப்பட்டதாயிருந்த தாயினும் நினைத்து அசைபோடாத மனிதன் உலகிலேயே மிகக் குறைந்த தொகையினனாகத்தான் இருப்பான்.
2
பரமசிவம் தன்னுடைய உடல் ஊனத்தைப்பற்றி மனதி னுள்ளே ஏக்கமுற்று என்னோடு என்றுமே கதைத்ததில்லை. தன் ஊனத்தையிட்டு அவன் கவலைப்பட்டதாக யாருமே சொன்னதுமில்லை. படிப்பிலே அவன் நல்ல கெட்டிக்காரன். கண்களில் ஒற்றிக்கொள்ளச் சொல்லும் அழகான கை யெழுத்து அவனுடையது.
அவனுடைய வீட்டிற்கு நான் அடிக்கடி போய்வந்திருக் கிறேன். அவன் அலங்காரப் பிரியன். சின்னஞ்சிறிய அந்த வீட்டினை மிக அழகாக வைத்திருப்பதற்கு அவனே பிரதான காரணம்.
ஒரு இளமங்கையின் மென்மை பொருந்திய கவனிப்புத் தான் அப்படியொரு அழகினையும் மெருகினையும் அந்த அலங்காரங்களிற்குக் கொடுக்கமுடியும் எனினும், அந்த வீட்டிலே அப்படி யாருமே இல்லை. அவன்தான் அதன் காரணமானவன். அந்த நடுத்தரக் குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் புத்தகப் பைத்தியம். எல்லோருமென்றால் அவனுடைய தகப்பன், தாய், அண்ணன் கிருபாகரன் ஆகியோர்.
பத்திரிகைகளில் வருகின்ற தொடர்கதைகளை யெல்லாம் மொத்த மொத்தப் புத்தகங்களாகப் ‘பைண்ட்’ செய்து அலமாரிக்குள் அழகாக அடுக்கி வைத்திருந்தான் கிருபாகரன்.
இந்த வசீகரிப்பினாலும் நான் அடிக்கடி பரமசிவத்தின் வீட்டிற்குச் சென்று வந்தேன். வீட்டிலும் அயலிலும் உள்ளவர்கள் பரமசிவத்தின்மீது அநுதாபம் அடங்கிய பிரியம் வைத்திருந்தனர்.
இந்த ஊனமானது, பரமசிவத்திற்குப் பிறவியிலேயே வந்ததல்ல. இடைப்பட்டு வந்ததுதான். ஆறு வயதிலே அப்படி ஆயிப்போயிற்று. வேண்டாத தெய்வங்களில்லை. கண்ணீரில் கரைந்த அவனது தாய் எல்லாப் பிரயத்தனங் களும் தோல்வியுற்ற பின்னர் இதுவும் ஒரு தெய்வ சோதனை என்ற கவலைப் பாரத்தோடும், பெருமூச்சோடும் ஓய்ந்துபோய் விட்டாள்.
அவன் நடைபயின்று விளையாடிய இடமெல்லாவற்றை யும் பெற்றோர் எனக்குக் கவலை ததும்பிய குரல்களின் விளக்கத்தோடு காண்பித்தார்கள். என்னை மீறிக்கொண்டு நான் பெருமூச்செறிந்தேன்.
பரமசிவம் என்னோடு ஜி. சி.ஈ. வகுப்புவரை ஒன்றாகவே படித்தான். எங்களெல்லோருக்கும் உத்தியோகமே இலக்கு. எங்களைப் பெற்றவர்கள் எங்கள் மீது படிப்பதற் கான செலவுகளை மூலதனமிட்டிருக்கின்றார்கள். மூலதனம் ஊதியம் கொடுக்கின்ற நிலைமை உத்தியோகத்தின் மூலமே வரவேண்டும்.
எனது இலக்கும், மனத்தின் உள்ளார்ந்த கனவும் பல்கலைக் கழகத்திற்குப் போய் பட்டதாரியாக வந்து பின்னர் ஆசிரியனாகக் கடமையாற்றுதல். பரமசிவம் உத்யோகத்தைப்பற்றி என்றுமே கதைத்ததில்லை. ஒருவேளை தன் ஊனமே அதற்கு இடையூறாகுமென நினைத்திருந்தான் போலும். பல்கலைக் கழக புகுமுக வகுப்பிலே பயின்றுகொண் டிருந்தபோது, அதற்குமுன்பு வெறும் புத்தகப்புழுவாக இருந்த நான் என்னளவிலே பல மாறுதல்களை அடைந்தேன்.
வாழ்வில் உண்மையான பிரச்சனைகளை நான் அறியத் தொடங்கியமையினால் அதற்கேற்ற வகையிலேயே புத்தகங்களையும் தேர்ந்து எடுத்துக்கொண்டேன். பரமசிவமும் நானும் இப்போது ஒரே வகுப்பில், ஆனால் வேறு வேறு பிரிவு களிலிருந்தாலும் முன்னைய உறவுகளிலே மாற்றமெதுவும் இருக்கவில்லை. அடிக்கடி சந்தித்துக் கதைத்துக்கொள்வோம்.
நீங்கள் ‘வீரம் விளைந்தது’ என்ற புத்தகத்தினை வாசித் திருக்கிறீர்களா? நிக்கலாய் ஓஸ்ரோவொஸ்கி என்ற ருஷ்யப் போராளியான இளைஞனால் எழுதப்பட்ட அற்புதமான நாவல் அது. அந்த நாவல் வெறும் கற்பனைக் கதையல்ல. மக்கள் படையில் இளவயதிலேயே பங்குகொண்டு, காலுங் கையும் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டுவிட, பிறகும் எவ் வகையிலேனும் மக்களுக்குச் சேவை செய்யவேண்டும் என்ற நினைப்போடு தன் வாழ்வையே நாவலாக எழுதி அதை எல்லோருக்கும் உற்சாகமூட்டும் கருவியாக்கியவன் ஓஸ்ரோ வொஸ்கி,உடலே ஊனப்பட்டு விட்ட போதிலும் மிகத் தீவிரமாகவும், ஆழ்ந்த மக்கள் விருப்போடும் ஒடுக்கப்பட்ட மனித குலத்திற்குச் சேவை செய்வதையே வாழ்வின் நெறி யாகக் கொண்டிருந்த அந்த மகத்தான போராளியின் கதை உலகில் பலகோடி இளைஞர்களுக்கு சிறந்ததோர் ஆதர்சமாக விளங்குவது போலவே என்னையும் தன்னோடு பிணைத்துக் கொண்டு விட்டது. அந்த புத்தகத்தை நான் பலமுறை வாசித்தேன். வாசித்து முடிந்ததும் மிகுந்த விருப்போடு அதனைப் பரமசிவத்திடம் கொடுத்தேன்,
அந்தப் புத்தகத்தை இரண்டு நாட்களில் பரமசிவம் படித்து முடித்து விட்டான். அவன் அப்புத்தகத்தை என் னிடம் திருப்பித் தந்தபோது அவனுடைய அபிப்பிராயத்தை அறிவதற்காக அவனுடைய முகத்தை ஏறிட்டேன்.
“நல்ல புத்தகம்… இதன் கதாநாயகன் பாவெல் அற்புதமானவன்”
அவன் கூறியபோது புருவங்கள் சுருங்கின.
”ருஷ்யா போன்ற நாடுகளிலை பாவெல் போன்றவர்கள் தோன்றலாம். ஆனால் அரசியலையே பணம் சம்பாதிக்கின்ற தொழிலாகக் கொண்டிருக்கின்ற நாடுகளிலை அப்படித் தோன்ற முடியுமா?”
என்னால் அவனது கேள்வியினைப் பூரணமாக உணர்ந்து கொள்ள முடியவில்லை. அவனது கேள்வியே குழம்பிக் கிடந்தது.
“விளங்கும்படியாகச் சொல்லும்.”
“ஒரு பூரணமான மனிதனையே சாராயத்தாலும் பணத் தாலும் கெடுத்துக் குட்டிச்சுவராக்குகின்ற அரசியல் உள்ள நாடுகளிலை, மக்களுக்காக உழைத்து அதிலையே பூரணம் அடைகிற பாவெல் போன்ற இளைஞன் தோன்ற முடியுமா?”
நான் சில கணங்கள் யோசித்துவிட்டு அவனுக்குப் பதில் சொல்ல வாயெடுக்கு முன் அவன் சிரித்துக் கொண்டே கூறினான்.
“உமக்குப் புத்தகங்களைத் தவிர வெளியுலக அனுபவம் குறைவு சிவா”—அவன் வெகு சாதாரணமாகச் சொன்ன சொற்கள் எனது நெஞ்சினுள்ளே சுரீரென்று தைத்தன.
என் மனதை மீறிய எரிச்சல் என்னைப் பற்றிக் கொண் டது. நன்றாக எங்கும் நடந்து திரிகின்ற என்னைப் பார்த்து. இந்தக் கால்கள் ஊனமானவன் அனுபவக் குறைவானவன் என்பதா? சில கணங்களின் பின்னர் நான் என்னைச் சமாளித்து நிலைப்படுத்தினேன்.
“உம்முடைய அநுபவத்தை நீர் சொல்லும் கேட்கிறேன்.”
“உமக்கு எங்களின்ரை வேதாரணியத்தைத் தெரியுமோ?”
“தெரியும், நல்ல மனுஷன். நிதானமும் நேர்மையும் உள்ள ஆளென்று சனங்கள் அவரைப் பற்றிக் கதைக்கக் கேள்விப்பட்டிருக்கிறன்”
பரமசிவம் கண்கள் மின்னச் சிரித்தான்.
“எல்லோரையும் போலத்தான் நீர்சொல்கிறீர் சிவா…”
நான் முந்திக்கொண்டு கேட்டேன்.
“உமக்கு என்ன தெரியும் அவரைப் பற்றி?”
“சொல்லுகிறேன் கேளும். போன எலெக்ஷன் நாட் களிலை வேதாரணியத்தை ஆதரித்து நடந்த எலெக்ஷன் கூட் டங்களிலை எல்லாம் நான் மேடையிலை அவரைப் பற்றிப் பாட்டுகள் பாடியிருக்கிறன். எப்படியான விஷயத்தைப் பாட வேணுமென்று அவர்தான் எனக்கு ஐடியாக்கள் சொல்லு வார். என்னுடைய பாட்டைக் கேட்பதற்கும் சனங்கள் நிறைய வருகின்றதென்று யாரோ அவருக்குச் சொன்னத னாலே அவர் என்னிலை விசேஷ கவனம் வைத்திருந்தார். ஒவ்வொரு முறையும் கூட்டத்திலை நான் பாடப்போவதற்கு முதல், அவர் தன்னுடைய கையாலேயே மேடைக்குப் பின் புறம் வைத்து எனக்கு லெமனற் ஊற்றித் தருவார். அதைக் குடித்தவுடன் எனக்குத் தனி உற்சாகம் வந்துவிடும். என்னை மறந்து பாடுவேன்…”
நான் கண்களை மூடிக்கொள்ளாமலே அந்தக் காட்சியினை நினைவு கூர்ந்தேன். மக்கள் வெள்ளத்தின் நம்ப முடியாத மௌனத்தின் முன்னே ஆவேசம் பொங்க அவன் வெகு அற்புதமாகப் பாடியிருக்கிறான். நையாண்டியாகப் பாடி மக்களைச் சிரிக்க வைப்பதிலும் அவனுக்கு நிகர் அவனேதான்.
“நான் மேடையிலே வேதாரணியத்திற்கு எதிராகப் போட்டியிட்ட ராமநாதனைப் பற்றி எவ்வளவு நையாண்டி பாட்டுக்கள் பாடியிருக்கிறேன் தெரியுமா? அவரைப்பற்றி யும், அவருடைய பெண்சாதிப் பிள்ளைகளைப் பற்றியும் நையாண்டியாய்ப் பாடும்படி சொன்னது யார் தெரியுமா?” அவன் கேள்வியோடு என்னைப் பார்க்க நான் மௌனமாக இருந்தேன்.
“வேதாரணியந்தான்; தான் எலக்ஷனிலை வெல்றதுக்கு அவர் எதையுமே செய்யச் சித்தமாயிருந்தார்…அவர் பெரு வாரியான வாக்குகளாலை வெற்றி பெற்றதும் அதை எல்லோரும் தர்மத்தின் வெற்றி என்று சொன்னார்கள்…”
சிறிது நேரம் மௌனமாயிருந்துவிட்டு அவன் தொடர்ந்தான்.
“உண்மையாகவே சிவா, என்னுடைய வாழ்க்கையை ஏதாவதொரு பயனான காரியத்திற்குப் பாவிக்க வேண்டு மென்று நான் ஆசைப்பட்டேன்.”
நான் உற்சாகத்தோடு சொன்னேன்.
“அதற்கு இன்னமும் காலம் போய்விடவில்லை”
அவன் களைத்த குரலில் பதில் சொன்னாள்.
“ஒரு குடிகாரனாலை இனி என்ன செய்ய முடியும்!”
நான் திடுக்கிட்டேன்!
“பரமு என்ன சொல்கிறீர்?”
விரக்தி பொங்க சிரித்தான் பரமசிவம்.
“நான் இப்ப நல்லாகக் குடிக்கப் பழகி விட்டேன்,”
அந்தச் சொற்கள் என்னைத் தூக்கி எறிந்தன.
“நானாகக் குடிக்கப் பழகவில்லை. வேதாரணியம் என்னோடு இனிக்க இனிக்கக் கதைத்துக் குடிக்கும்படி தந்தது வெறும் லெமனற் இல்லை. அது குடிவகை கலந்த லெமனற். அது தான் எனக்கு அளவு மீறிய உற்சாகத்தைத் தந்தது. அதில்லாமல் இப்போது என்னால் எதுவுமே செய்ய முடியாது…”
அவனது குரல் கம்மிக் கரகரத்தது. உதடுகள் நடுங்கின. நான் மனங்கனத்து நின்றேன்.
3
பரமசிவம் இந்த ஐந்தாண்டு காலத்திற்குள் எப்படி மாறியிருப்பானோ என்று நான் அடிக்கடி நினைத்துப் பார்ப் பேன். வெளியூரிலே இருக்கின்ற நான் எவ்வளவுதான் முயற்சித்தாலும் எனது மனதிலே அவனது குரலும், கனி வான முகமும் மாறுபட்டோ கவர்ச்சிகுன் றியோ தோன்றிய தில்லை. விடுமுறையிலே ஊருக்குச் சென்ற நான் பரம சிவத்தைச் சந்திப்பதற்காக இருமுறை அவனுடைய வீட் டிற்குச் சென்றிருந்தேன். வீட்டிலே அவனுடைய வயோ திகத் தகப்பன் மட்டுமேயிருந்தார். அவருக்கும் கண் பார்வை மங்கிவிட்டது. என்னோடு வேண்டா வெறுப்பாகக் கதைத்தார். கிருபாகரனும் பெற்றோரோடு மனங்கசந்து எங்கோ ஓடிப்போனதாக அறிந்து கொண்டேன்.
அந்த வீடு தன் பொலிவினை இழந்து போயிருந்தது. பூனையொன்று மூலையிலே குறங்கிக் கிடந்தது. விரித்த பாயி னருகே துப்பற்படிக்கம் சரிந்துபோய்க் கிடந்தது. கோழி கள் எச்சமிட்டிருந்தன. வீட்டினுள் திறந்திருந்த அலமாரியினுள் இரண்டொரு புத்தகங்கள் முதுகு முறிந்து கிடந்தன.
பரமசிவத்தின் வாழ்க்கையை நான் ஊகித்துக் கொண் டேன். வேலி விழுந்து போய்க் கிடந்த அந்த வீட்டை விட்டுக் கவலையோடு வெளியேறினேன்.
அந்தச் சந்திப்பை நான் எதிர்பார்த்திருந்த போதும் திடுக்கிட்டு விட்டேன். தாடி, மீசை, சிவந்த கண்கள், குப்பென்ற நாற்றம், உளறுகின்ற குரல், நன்கு கறுத்த தேகம், எல்லாம் சேர்ந்த பரமசிவம் நின்றான்.
தன் ஊனத்தினை வென்று வாழு நினைத்த பரமசிவத்தின் கதை என்னளவிலே முடிந்து போனதாக நான் உணர் வுற்றேன். எனினும் அந்நேரத்து சூழ்நிலையிலே என்னையும் மீறிக் கனிவோடு அவனை அழைத்தேன்.
“பரமசிவம், என்னை நினைவிருக்கிறதா?”
தாடி மீசை, சிவந்த கண்கள், குப்பென்ற நாற்றம் என்பன என்னைப் பரமசிவமாக எதிர்கொண்டன. நான் மனத்தில் வைத்திருந்த பரமசிவத்தின் முகத்தை அந்த முகத்தோடு ஒட்ட முயன்றேன். முடியவில்லை.
அந்தச் சிவந்த கண்கள் கலங்கின. நாற்றமடிக்கும் அந்த வாய் சொற்களின்றி நடுங்கித் தடுமாறியது. கலங்கிய கண் கள் நீரைச் சொரிந்தன. பரமசிவம் கையினால் முகத்தினை மூடிக் கொண்டு விசும்பினான்.
என்னால் என்னை கட்டுப்படுத்த முடியவில்லை. “பரமு வாரும் வீட்டுக்குப்போய் கதைக்கலாம்” என்னைச் சமா ளித்துக் கொண்டு சொன்னேன் நான்.
பரமசிவம் எனக்கு ஒன்றுமே சொல்லவில்லை. விசுக் கென்று திரும்பினான். சூம்பிப்போன காலினைத் துடுப்புப் போல வீசிக்கொண்டே வேகமாக அங்கிருந்து நடக்கத் தொடங்கினான்.
நான் அவனைக் கூப்பிடவில்லை. ஆனால் அன்றொருநாள் அவனுக்கு நான் சொல்ல உன்னிய பதிலினை இப்போது நினைத்துக் கொண்டேன்.
“பரமு, பாவெலும் உன்னைப் போலவே அழுக்கடைந்த சூழ்நிலையிலே வாழ்ந்துதான் பூரணம் பெற்றான்…. நீயோ இந்த அழுக்கடைந்த மனிதர்களோடு சேர்ந்து இன்று அதிலேயே அழுந்திப்போய் விட்டாயே, எவ்வளவு பரிதாபத்திற்குரிய மனிதன் நீ.”
– 1973
– தேடுதல் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர் 1983, நர்மதா பதிப்பகம், சென்னை.
![]() |
ஈழத்து எழுத்தாளர் செ.யோகநாதன் - எழுதியவர்: முல்லை அமுதன் - 05 February 2008 1942ல் பிறந்த செ.யோகநாதன் அவர்கள் மாரடைப்பால் இறக்கும் வரை நிறையவே எழுதிக்குவித்தவர். 1962ல் தன் முதல் சிறுகதையான ‘மனக்கோலத்தை’ எழுதியது முதல் தொடர்ந்து சிறுகதை, நாவல், குறுநாவல், சிறுவர் இலக்கியம், திரைப்படம், விமர்சனங்கள் என எழுத்தை விரிவுபடுத்தியவர். ஜெயகாந்தனின் ‘வாழ்க்கை அழைக்கிறது’ நாவலை ‘அக்கினிப் பிரவேசம்’ எனும் சிறுகதையை வாசித்தபோது ஏற்பட்ட அதிர்வலைகள் எனக்கு…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
நலம் தரும் நட்பு
அல்போன்ஸ் மோசஸ்
August 19, 2026
எமன் அக்காள் கழுதை
நாகரத்தினம் கிருஷ்ணா
August 19, 2026
அலைபேசியும் அழுக்கு வேஷ்டி தாத்தாவும்
முனைவர் வெங்கடேஷ் கணபதி
August 16, 2026
