கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 8, 2026
பார்வையிட்டோர்: 89 
வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்

(1972ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“இப்ப, ஏன் எல்லாருமாகச் சேர்ந்து துள்ளியடிக்கிறீங்கள். உலகமே உங்களைப் பார்த்துச் சிரிக்கிறமாதிரியாக நினைச்சுக் கொண்டு, ராசேசைப் போட்டு ஏன் படாதபாடு படுத்திறியள்?” 

இதுவரை ஒலித்த விம்மல், விசும்புதல்கள், உறுக்குதல் களின் நடுவே கந்தவனத்தாரின் குரல் ஆறுதலாக நிதான மாகக் கேட்கிறது. நாற்பத்தைந்து வயதான கந்தவனத் தாரின் மூத்த மகள் ஆனந்தி, தொண்டைக்குள் விழுங்கி யிருந்த விம்மலை. அந்தச் சொற்களின் ஆறுதலால் அழுது தீர்த்தாள். அவளது முகம் அழுததால் பொருமிக் கண்கள் சிவந்து அவளே அதைத்துப் போனவள் போலத் தோற்றங் கொடுத்தாள். வெகு அமைதியான தன் தாயும், ஒன்று விட்ட சகோதரியும் தன்னைச் சொற்களினால் இவ்வளவு படுபயங்கரமாகக் குதறி எறிவார்களென அவள் கனவிலே தன்னும் நினைத்திருக்கவில்லை. எனினும் நடந்தது உண்மை. ஏழு மணிக்கு அங்கு வெடித்த பூகம்பம் இன்னுமே ஓயவில்லை. இனந்தெரியாததொரு கனவு மயக்கத்தில், அச்சத்தின் முன் பயமுறுத்தலையும் ஒதுக்கி விட்டு நிமிஷத்துணிவிலே அவள் செய்த காரியம் இப்படியொரு வினையில் வந்து முடிந்திருக்கிறது. 

“எங்கடை பரம்பரையிலை ஒருத்தர் கூடச் செய்தறியாத காரியத்தைச் செய்துபோட்டு, இப்ப என்னத்துக்காக நீ முட்டைக் கண்ணீர் வடிக்கிறாய்? இஞ்சை உன்ரை அக்கா முப்பது வயதாகியும் என்ன அடக்கமா, மற்றவை பார்த் தாலும் நிமிர்ந்து பார்க்காமல், இருக்கிறதெண்டு மற்ற வையளுக்கும் தெரியாமல் இருக்குது….நீ, நீ என்ன துணி விலை இந்தக் காரியம் செய்திருக்கிறாய்? எங்கடை முகத்தை நினைச்சுப் பார்க்கிறனியாக இருந்தால் இந்தக் காரியத்தைச் செய்திருப்பியே உனக்குக் கூட ஒரு ஆறுதல்-”மகளைத் திட்டியபடி தன் கணவனையும் சாடுகிறாள் இரத்தினா. 

கந்தவனத்தார் மனைவியை உறுத்துப் பார்த்தார். இரு பத்திமூன்று வருஷங்களுக்கு முன்னர், தன்னை ஒரு திரு விழாவின் போது கண்டு, காதல் மயக்கத்திலே ஆழ்த்திக் கடிதங்களைத் தூதாக அனுப்பி, வீட்டின் பின்புறத்திலுள்ள அன்னமுன்னா மரங்களின் மறைவிடத்திலே இருளின் வலை யினுள்ளே சந்தித்து கண்டறியாத இளமையின் சுகங்களை யெல்லாம் தனக்குக் கொடுத்தும், எடுத்தும் வாழ்ந்து மணம் முடித்த வரலாற்றை மறந்தா இரத்தினா இப்படித் துள்ளிக் குதிக்கிறாள்? அந்தப் பரபரப்பின் இடையேயும் இவர் கழிந்து போன நாட்களினை நினைத்து இரத்தினாவை எண்ணி அதிசயமுற்றார். வாய் பரபரத்த போதும், நெருப் பெரியும் இரத்தினாவின் முகத்தின் முன்னர் அதைச் சொல்லாது தவிர்த்துக் கொண்டார் கந்தவனத்தார். வீண் வார்த்தையாடல்களை எப்போதுமே வெறுப்பவர் அவர். 

தாயுந் தந்தையுமற்ற அனாதையும் இரத்தினாவின் தூரத்து உறவினருமான அகிலா அவ்வூரிலே நெசவு ஆசிரியை. நீண்டகாலமாக அவர்களோடேயே வசித்த இராஜேஸ்வரிக்கு அக்கா முறையானவள். இரத்தினா சொல் வதற்கெல்லாம் தலையாட்டிக் கொண்டு பூரணமான ஆமோதிப்பிற்கு அடையாளமாக இரண்டைாரு சொற்கள் கூறிக் கொண்டிருந்தாள். எனினும் அவள் மனதினுள் அவளது சிந்தனைகளே குறுகுறுத்தன. அவளுக்குள் அவள் மனதேயறிந்த காதல் ஏக்கங்கள் குடியிருந்திருக்கின்றன! அழகியல்ல. வளைந்த தேகம், ஆணொருவனைப் போன்ற உருளை உடம்பு. சிறிதே மிதப்பான பற்கள் தன் சினே கிதியர்களோடு ஆண்கள் சிரித்துக் கதைக்கும் போதும், காதலித்ததாக அறியும் போதும் அவள் தன்னையே மீறி நெட்டுயிர்த்துப் பெருமூச்சு விடுவாள். அவள் காதலிக்கவும் காதலிக்கப்படுவதற்கும் ஆசைப்பட்டிருந்தவள். இன்றுந் தான் அந்த ஆசை. காதல் நவீனங்களையும் சினிமாவையும் பார்த்து அதையே நினைத்து நெஞ்சின் விம்மலோடு தனிமையில் மனந்தவித்து, தன் பெற்றோரையும், தன் அவள் அழகையும். தன்னையும் நொந்து அலுத்திருக்கின்றாள் அவள். வெறும் படுக்கையை வெறுத்தற்குரிய தரிப்பிடமாகக் கொண்ட அவளிற்கு வந்த நாளிலிருந்து இராஜேஸ்வரிமீது அளவிடற்கரிய வெறுப்பு; ஏதோ ஒரு எரிச்சல். 

“பள்ளிக்கூடத்திற்குப் போகும் போது ஆடம்பரமாகப் போகக் கூடாது. பவுடர் பூச்சு, பொட்டெல்லாம் என் னத்துக்கு? உட்சட்டையை தொளதொளக்கப் போட வேணும், நானெல்லாம் அப்படித்தான் படிச்சனான்” 

அவள் நெஞ்சாரச் சொல்லும் பொய்யையெல்லாம் இராஜேஸ்வரி கேட்பதில்லை; கிழட்டு அபிப்பிராயமாக ஒதுக்கி விடுவாள். மகளின் அழகில் கந்தவனத்தாருக்குத் தனிப்பெருமை. 

”அவளின்ரை வடிவுக்கு எத்தினைபேர் போட்டி போட்டுக் கொண்டு, வீட்டு வாசலிலை வந்து நிக்கப் போ கிறாங்கள் எண்டு பார்…வடிவான குமரியைப் படங்கீற நினைக்கிறவனுக்கு இராஜேஸ் தேவதை மாதிரித் தோன்றுவாள்” 

இப்படி அவர் சொல்கையில் இரத்தினா பெருமையினால் பூரித்துப் போய்விடுவாள். பிறகு நாவூறு கழிவதற்காக ‘துப்துப்’ என்று துப்புவாள். 

இப்போது அவர் சொன்னதற்கு வினை விடிந்திருக்கிறது. 

“எல்லாத்துக்கும் அப்பா இருக்கிறார் எண்டு மகள் சொல்லச் சொல்ல அவளுக்கு நல்லாச் செல்லம் குடுத் தீங்களே இப்பவும் அப்பிடித்தான் சிரிச்சுப் போட்டிருக்கப் போறீங்களோ?” 

அவள் கதைக்கக் கதைக்க கந்தவனத்தாருக்கு சினம் ஏறிற்று. 

“இரத்தினா, இராஜேஸ் இப்ப என்ன செய்து போட்டா ளெண்டு இப்பிடித் துள்ளிக்குதிக்கிறீர்? அவள் ஒரு பொடி யனிட்டைக் கடிதம் வாங்கிப் போட்டாள். அதுக்கு இப்ப என்ன செய்யச் சொல்லுறீர்?” 

சாவாதானமாக அவர், கேட்டு முடியுமுன் இரத்தினா துள்ளினாள். 

“இவள் கடிதம் வாங்கினது பள்ளிக்கூடத்திலே பிறின்ஸ் பலுக்குத் தெரிஞ்சு போச்சுது, அந்த ஆள் ஒரு நல்ல மனுஷன். வீட்டை தேடிவந்து சொல்லிப் போட்டுப் போயிருக்குது. வேறு யாரேனுமெண்டால்?” 

இரத்தினா பெருமூச்சு விட்டாள். 

“அவள் கடிதம் வாங்கினவ ளெண்டதாலை, அவள் அதுக்கு விருப்பப்பட்டவள் என்ற கருத்திருக்குதே? அவள் தெரியாத் தனமாக வாங்கியிருப்பாள். சொல்லுறமாதிரிச் சொன்னால், அவள் இப்படிச் செய்ய மாட்டாள். பிறின்ஸ் பல் அவள் அந்தப் பொடியனுக்கு கடிதம் எழுதினதெண்டு சொன்னவரோ?” 

“சொல்லயில்லை, என்றாலும் அவமானந்தான்” 

“என்ன அவமானம் வந்திட்டுது?” 

“இனியென்ன? எங்களுக்கு என்ன கதைக்கலாமெண்டு காத்துக்கொண்டிருக்கிறவைக்கு நல்ல விஷயம் கிடைச் சிருக்கு. இனி வம்பர் மகாசபை வாசிகசாலையிலும், சந்தை யிலும் இதைப்பற்றித்தான் கதைக்கும். இந்தப் பிள்ளை றோட்டாலை போகேக்கை எத்தினை நையாண்டி செய்வினை?” 

கந்தவனத்தாரின் முகம் மாறியது. திடீரென்று இராஜேஸ்வரியைக் கூப்பிட்டார். அவள் தயங்கித் தயங்கி வந்தாள். 

“இராஜேஸ், இனி நீ றோட்டாலை போகேக்கை ஆரா வதி ஏதவன் கதைசாலும் இஞ்சை வந்து சொல்லக்கூடாது. அவங்களின்ரை மூஞ்சையிலை காறித் துப்பிப் போட்டுவா அல்லாவிட்டால் செருப்பாலை கழட்டி அடி…இரத்தினா, களவு பிடிக்கிறவனுக்கும் தன்னளவிலை நேர்மை வேணும். வம்பு கதைக்கிறவன் எவனோ, அவன்ரை மனம் நிறைய அழுக்காய்த் தானிருக்கும். அந்த நாயளுக்காக நீர் கவலைப் பட வேணாம்…” 

“நீங்க காலமை கந்தோருக்குப் போனால் பின்னேரம் வருவீர்கள். உங்களுக்கு ஒண்டும் தெரியாது… இஞ்சை பாருங்க சும்மாயிருந்த அகிலாவைப் பற்றிக்கூட இந்த ஊரிலையுள்ளவங்கள் றோட்டிலை எழுதயில்லையோ?” 

பொறுமையிழந்துபோன கந்தவனத்தார் அகிலாவையும், இரத்தினாவையும் பார்த்தபடி தணிந்த குரலில் கேட்டார். 

“இரத்தினா ராஜேசை இப்ப என்ன செய்யச் சொல்லுறியள்?” 

இரத்தினா, சிறிது தாமதித்துச் சொன்னாள்: 

“இனி ராஜேஸ் பள்ளிடக்கூடம் போக வேணாம். படிக்கப் போய்த்தான் எல்லாம் வந்தது” 

விம்மியழுது கொண்டே உள்ளேயிருந்த ராஜேஸ்வரி யின் மனம் துணுக்குற்றது. சென்ற முறை, ஜி.சி. ஈ. தேர்வு எழுதிய அவளை, அவளின் திறமையை நம்பி மதித்து பல்கலைக்கழக புகுமுக வகுப்பில் ஆசிரியர்கள் விட்டபோது அவள் மிகுந்த மனமகிழ்வோடும், பூரிப்போடும், இறுமாப் போடும் அவ்வகுப்பிற்குப் போய் உட்கார்ந்தாள். எத்தனை கனவுகள், திட்டங்கள். 

“அம்மா என்ன கொடிய தண்டனையை நீ எனக்கு வழங்குகிறாய்? சத்தியமூர்த்தி என்னைப்பார்த்துச் சிரித்ததும் நான் அவனுடைய கெட்டித்தனத்தை மதித்ததும், எனக்கே யுரிய கலகலப்போடு நான் அவனோடு பழகியதும், அவன் அந்தப் பழக்கத்தையே மாற்றி என் எண்ணத்தை நெகிழ்த் திக் கடிதம் தந்ததும் அம்மா, நான் செய்தது அறியாமற் செய்த பிழைதான் அதையேன் நீ அறிந்து செய்த பிழை யென்று கூறி, இப்படி ஒரு தண்டனையை எனக்குத் தரு கிறாய்? இதே கொடூரந்தான் நீ எனக்குத் தரும் தண் டனையென்றால் அம்மா, நான் செத்துப் போவதைத்தவிர, வேறு வழியில்லை’ தன் கையினாற் தலையில் அடித்துக் கொண்டே ராஜேஸ்வரி மனம் நெகிழப் புலம்பினாள். 

மகளின் கண்ணீர், தகப்பனுக்கு நெஞ்சினுள் தணற் துளிகளாய் விழுந்தன முகத்திலே புருவங்கள் ஏறிஇறங்கின. அங்கும் இங்கும் நடந்தார். 

“இரத்தினா, எல்லாம் பிறகு யோசிக்கலாம். முதலிலை எல்லாரும் போய்ச் சாப்பிடுங்க. ராஜேஸ், இப்ப போய் முகத்தைக் கழுவிப்போட்டு வா, போம்மா” 

மணி பதினொன்றிருக்கும். நிலவு நாள். இன்னமும் இரத்தினா உறங்கவில்லை. படுக்கையில் கிடந்து உழன்று கொண்டிருந்தாள். கந்தவனத்தார் அவளின் மனநிலையை நன்கு அறிந்தவராகையினால் அவளையே மௌனமாகப்பார்த் துக் கொண்டிருந்து விட்டு மெல்லக் குரல் கொடுத்தார். 

“இரத்தினா,கொஞ்சம் எழும்பிக் கிணற்றடிப் பக்கமாக வாரும்…” 

வீட்டின் எல்லைக்குள்ளே கிணறு இருந்தாலும் அது வீட்டிற்குச் சிறிது தள்ளி ஒதுக்குப்புறமாகவே இருந்தது. அவ்விடத்திலே போயிருந்து கதைத்தால் வீடடில் உள்ள வர்களுக்குக் கேட்கமாட்டாது. 

கிணற்றுக் கட்டில் கந்தவனத்தார் இருக்க, அவருக்குப் பக்கத்திலே இரத்தின மெளனமாய் அமர்ந்தாள். மெளன மாகக் கணங்கள் அழிந்தன. 

“இரத்தினா நீர் இவ்வளவு கடுமையாக இராஜேசைப் பேசியிருக்கக் கூடாது. தோளுக்கு மிஞ்சினால் தோழன். இளம்பிள்ளையின் மனம் நோகாமல்தான் திருத்தவேணும்.” 

“அவ செய்த வேலையின்ரை வள்ளலிலை.” 

வெடுக்கென்று விழுந்தாள் இரத்தினா. 

“இரத்தினா, இருபத்திமூன்று வருஷங்களுக்கு முந்தி, நீர் என்னைச் சந்திச்சதை ஒருக்கால் நினைத்துப் பாரும்.” 

இரத்தினா சள்ளென்று சீறினாள். 

“உங்களை நான் காதலிச்சது இப்படியில்லை. நீங்க உத்தியோகம் பார்த்தீங்கள். நானும் படிச்சுப்போட்டு வீட்டிலை இருந்தன். எங்களை ஆருமே பார்த்துச் சிரிக்க யில்லை. இது… இவளுக்கு உலகமே தெரியாது. அதுவும் படிப்பைக் குழப்பிக்கொண்டு ஒரே பெண்பிள்ளை. இவளை வைச்சு நான் எத்தினை கற்பனை பண்ணியிருக்கிறன். இவளுக்கு நான் என்னத்திலை குறைச்சல் வைச்சன்?” 

இரத்தினா தாயாகி மனம் பொருமினாள் 

“நான் அவளிலை இவ்வளவு கொள்ளையாக அன்பு வைச் சிருக்கிறதாலை தான் இப்பிடி மனம் தவிச்சுக்கொண்டிருக் கிறன். நீங்களே செக்ல்லுங்க, அவள் பதினாறு வயதுக் குழந்தை இப்படிச் செய்யலாமோ?” 

கந்தவனத்தார் மன தினுள் சிரித்தார். 

“இரத்தினா இந்தப் பிரச்சினையைப் பெரிசுபடுத்த வேணாம். இது ஒருதருக்கும் தெரியப்போறதில்லை. தெரிஞ் சாலும் இதாலை பெரிய நட்டம் வரப்போறதும் இல்லை. ஏனென்றால் இது குமர்ப்பிள்ளையள் உள்ள வீடெல்லாத்திலுமே இன்றைக்குள்ள பிரச்சினை.” 

“என்ன சொல்லுறீங்கள்? மற்றவை வளர்க்கிற மாதிரியே நாங்கள் இவளை வளர்த்தனாங்கள்.” 

பதை பதைத்தது அவளின் குரல், நிதனமான யோசனை யோடு கந்தவனத்தார் பதிலளித்தார்; 

“இன்றைக்கு ஒவ்வொரு வீட்டிலும் இளம் பிள்ளைகளைச் சரியாக வளர்க்கிறதுக்கு அளவில்லாத முயற்சிகள் நடக்குது. வீட்டைச்சுற்றிக் குப்பையும், கஞ்சலும், கிருமிகளும் நிறைந்திருக்கின்றபோது, வீட்டுக்குள்ளே மட்டும் துப்பர வாய் இருந்து ஒண்டும் செய்யேலாது. அழுக்கும் தூசியும். கிருமிகளும் சுற்றியிருந்து வீட்டுக்குள்ளை வரத்தான் செய்யும். வீட்டை அடிக்கடி கூட்டிச் சாம்பிராணி போட்டாலும் சுற்றுப்புறம் அழுக்காயிருக்கிற வரை ஒரு நன்மையும் வரப்போவது இல்லை…”

கந்தவனத்தார் நிறுத்தித் தொடர்ந்தார். 

“வீட்டின் சுற்றுப்புறத்தை துப்பரவாக வைச்சிருந்தால் தான் வீடும் துப்பரவாய் இருக்க முடியும். யன்னலைத் திறந்து வைச்சால் அப்பதான் நல்ல காற்று வரும்… சமு தாயத்திலை இன்றைக்கு இளைஞர்கள் எதைப் பெறுகிறார் கள்? நீரும் நானும் ராஜேசை சினிமாப் படத்துக்கு கூட்டிக் காண்டு போய் எவ்வளவு நாள் அவதிப்பட்டிருக்கிறம். கண்ணால் பார்க்க முடியாத காதல் காட்சி… காதாலை கேட்க முடியாத பாட்டுக்கள். இதைத்தானே படத்தில் பார்க்கிறம். எங்களுக்கே அது விரசமாயிருந்தால் அவளுக் கும், அவளைப்போலை வயதிலை உள்ளவைக்கும் என்ன மாதிரியிருக்கும்? நல்லா யோசிச்சுப் பாரும். அவள் வாசிக் கிற எந்தப் பத்திரிகையிலை காதற் கதையும், மோகமூட்டி மனதைக் கிளுகிளுக்க வைக்கின்ற படங்களும் இல்லை? இளமைப் பருவமே. இன்றைக்குக் கலாச்சார அழுக்குக ளில் விழுந்து போய்க் கிடக்குது…” 

கணவன் சொல்லும் உண்மைகள் நெஞ்சின் வருத்தத் தினைத் துடைப்பது போல அவளுக்கு இதமூட்டுகின்றது. 

“அதுக்காக இப்படியான காதலை நான் வரவேற்கிறன் எண்டு கருத்தில்லை. நான் இதுகளை மனதார வெறுக்கிறன், ஒரு நல்ல பிள்ளையையே பழுதாக்குகிற சூழ்நிலையில் நாங் கள் வாழ்க்கை நடத்துகிறம். ஒரு இளைய வயதிலையுள்ள வளின்ரை பிரச்சினையை அவளின்ரை உணர்ச்சி, சிந்தனை, சூழ்நிலை ஆகியவற்றின்ரை அடிப்படையில் வைச்சு ஆராய்ந்து தான் சரியான முடிவுக்கு வரேலும். தன்னை யறியாமலே தான் தான் பார்த்தபடம், புத்தகத்திலையி லிருந்து பெற்ற காதல் சிந்தனையாலை சத்தியமூர்த்தி, ராஜேசுக்குக் கடிதம் எழுதியிருக்கலாம். ஏதோ தடுமாற்றத்திலை ராஜேசும் அந்தக் கடிதத்தை வாங்கியிருக்கலாம். இப்பிடி நடந்ததற்கு யார் பொறுப்பு? இவையளா… இவையளை இப்பிடி ஆக்கின சூழ்நிலைகளா?” 

கணவனின் சொற்கள் அவளின் அறிவை நிமிர வைத்தன,

தன்னை மூடியிருந்த படலங்களை மீறிக் கொண்டு வெளியே வந்து கொண்டிருந்தாள். 

அந்தத் தனிமையான இரவில் திடீரென்று ஒரு குரல் வீறிட்டது. 

“அக்கா ஓடி வாருங்கோ.” 

இரத்தினா துடித்து எழுந்தாள். கண்கள் பிதுங்கின.

கந்தவனம் பதைபதைத்து வீட்டை நோக்கி ஓடினார்.

அகிலாவின் குரல் குழறியது. சொற்கள் தடக்கி முறிந்தன. 

“அக்கா ஓடி வாருங்கோ…இராஜேஸ் நஞ்சு மருந்து குடிச்சிட்…” 

“என்ரை மகளே!” 

பிறகு அழுகை, கூக்குரல். 

இராஜேஸ்வரி மௌனமாகி விட்டாள். 

– 1972

– தேடுதல் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர் 1983, நர்மதா பதிப்பகம், சென்னை.

joganathan ஈழத்து எழுத்தாளர் செ.யோகநாதன் - எழுதியவர்: முல்லை அமுதன் - 05 February 2008 1942ல் பிறந்த செ.யோகநாதன் அவர்கள் மாரடைப்பால் இறக்கும் வரை நிறையவே எழுதிக்குவித்தவர். 1962ல் தன் முதல் சிறுகதையான ‘மனக்கோலத்தை’ எழுதியது முதல் தொடர்ந்து சிறுகதை, நாவல், குறுநாவல், சிறுவர் இலக்கியம், திரைப்படம், விமர்சனங்கள் என எழுத்தை விரிவுபடுத்தியவர். ஜெயகாந்தனின் ‘வாழ்க்கை அழைக்கிறது’ நாவலை ‘அக்கினிப் பிரவேசம்’ எனும் சிறுகதையை வாசித்தபோது ஏற்பட்ட அதிர்வலைகள் எனக்கு…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *