உள்ளும் புறமும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 16, 2025
பார்வையிட்டோர்: 240 
 
 

(1970ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பிடி மண்ணைக் குழிக்குள் போடும் கடைசி வேளை, கண்கள் குளமாவதை அவனால் தடைசெய்ய முடியவில்லை. வாய்விட்டே அழுது விட்டான். 

அவன் அழுவதைக் கண்டதும், சுற்றி நின்ற அத்தனை பேருக்கும் அழுகை பீறிட்டுக் கொண்டு வந்தது. 

அவன் தொட்டு தாலி கட்டிய மனைவி இறந்து, அவள் பிரேதத்தை இடுகாட்டுக்கு எடுத்துச் சென்று குழிக்குள் வைக்கும்போதும் இவ்விதம் தான் அவனுக்கு அழுகை பீறிட்டது. 

அது நடந்து பத்து வருடங்களுக்கும் மேலாகிவிட்டது. 

அப்போது அவனுக்கு வைராக்கியம் அதிகம். அவன் பிறவிக் குணமே அப்படி. அவன் மனைவி சாகும் பரியந்தம் அது மாறவேயில்லை. தோட்ட நிர்வாகம் அவனை பழி வாங்க துடித்துக் கொண்டு நின்ற சமயம் அது. அவன் சாதா ரண தொழிலாளிதான். கூடவே, தொழிலாளர்களுக்குத் தலைவனாகவும் அவன் இருந்தான். 

அவர்கள் செய்யும் அர்த்தமற்றதும், நியாயமற்றதுமான காரியங்களை அர்த்தமும் நியாயமுமுள்ளவனாகக் கற்பித்துக் கொண்டு அவர்கள் சார்பில் தொழிலாளர்களின் உரிமை களை உதாசீனப்படுத்தும் நிர்வாகத்தோடு வாதாட வேண்டிய நிலையில் அவன் இருந்தான். 

கொக்குபோல அவனைக் கொத்தித் தீர்க்க காத்திருந் தது தோட்ட நிர்வாகம். நிர்வாகம் செய்யும் துறையின் கட்டளையை நிறைவேற்றும் வழி தெரியாமல் விழித்தனர் அவரது உத்தியோகத்தர்கள். 

எழுத்தில் இருந்ததென்றால் யாரும் யோசிக்கப் போவ தில்லை. சொன்னது நீ, செய்தது நான் என்று தப்பித்துக் கொள்ளலாம். அதற்கு வழி இல்லாமல் செய்து விட்டார் பெரியதுரை. 

எழுத்தில் இல்லை என்பதற்காக, தன்னிடம் நேரில் அவராகவே வாய் திறந்து சொல்லியதைச் செய்யாமல் விடுவதா என்று சிந்தித்துச் சிந்தித்து அந்தச் சிந்தனையே ஒரு சுமையாக, அந்த சுமையே வாழ்வாக அவர்கள் ஒவ் வொருவரையும் வதைத்துக் கொண்டிருந்தது. அப்படி ஒரு சுமையான வாழ்க்கையை வாழ்ந்து முடிந்த ஒருவருக்காகத் தான் இன்று அவனும், அவன் கூட்டத்தாரும் கண்ணீர் சிந்துகிறார்கள். 

தோட்ட உத்தியோகம் என்பது வாழ்க்கைச் சுமையை ஏற்கத் தைரியம் இருப்பவர்களுக்கு அல்ல, வாழ்க்கையையே சுமையாக ஏற்கத் தைரியமுள்ளவர்களுக்குத்தான் இலாயக் கானது. அவரிடம் அந்தத் தைரியம் அளவுக்கு அதிகமாகவே இருந்தது. இருபது வருட காலமாக அதனால்தான் அவரால் அதே தோட்டத்திலேயே கண்டக்டராக ‘இழுத்து’ வர முடிந்தது. 

நிர்வாகம் இடும் சட்டத்தின் கோரத்தினால் தாக்குண்டு தவிக்கும் தொழிலாளர்களுக்காக மனதுக்குள்ளாக மௌன மாக அழுது கொண்டு அவர்களின் தவிப்பை புரிந்து கொள் ளாதவராக புரிந்துகொண்டாலும் புறக்கணிப்பவராக நடந்து கொள்ளும் அசாத்திய துணிச்சல் அவருக்கிருந்தது. 

மேலிடத்திலிருந்து ஆபத்தும், கீழிடத்திலிருந்து குழப்ப மும் எதிர்பாராத எந்த வேளையும் வரக்கூடும் என்று எதிர் பார்த்துக் காத்திருந்து சமாளிக்க அவருக்குத் தெரிந்திருந்தது. 

ஆபத்தையும், துர்ப்பாக்கியத்தையும் எந்நேரமும் எதிர் பார்த்துச் சமாளிக்கப் பழகிபோன எவருக்கும் வாழ்க்கையின் அழுத்தச் சுமை தெரிவதே இல்லை. 

‘ஷோ கோஸ்’ என்றும், ‘வார்னிங் லெட்டர்’ என்றும் எத்தனை கடிதங்களை, அவர் செய்யும் தொழிலை ஆட்டு விக்கும், அச்சுறுத்தும் கடிதங்களை துரை அவருக்குக் கொடுத்திருக்கிறார். 

அவைகளுக்குக் காரணங்கூற அவருக்கா தெரியாது? காலை மாலையென்று கடந்த இருபது வருட காலமாக நாள்தோறும், இரவில் கண்மூடும் சில மணி நேரங்கள் தவிர்த்து அவரின் பார்வையில் வளர்ந்த தொழிலாளர்களும், பராமரிப்பில் செழித்த தேயிலைச் செடிகளும், ஆயிரம் கார ணங்களை அவருக்குப் புதிது புதிதாய் எடுத்துச் சொல்லப் போதுமே. தன் சொந்தக் குழந்தையின் வளர்ச்சியில் அக்கறை கொண்ட தந்தை அதன் வளர்ச்சியின் ஒவ்வோர் அம்சத்தையும் சிலாகித்து மகிழ்வது போல அவர் மகிழ்ச்சி அடைந்த நிகழ்ச்சிகள்தாம் எத்தனை? கொழுந்து குறைந் தாலும் சரி, ‘கோஸ்ட்’ கூடினாலும் சரி அவர்தான் துரைக்கு பதில் சொல்வது, ஆக, மனிதனின் ஆசைக்கும் அறிவுக்கும் கட்டுப்படாத இயற்கையின் தட்பவெப்பம் விளைவிக்கும் அத்தனைக்கும் அவர் காரணம் காட்டியாக வேண்டும். 

ஆனால் இன்று அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

துரைக்கு அவர் தந்த பதில் அர்த்தமற்றதாகி விட்டது.

தொழிலாளர்களுக்கு அவர் பேச்சு தேவையற்றதாயிருந்தது. 

அவர் மலைத்துப் போனார். இருபது வருட காலமாக அதே தோட்டத்தில் கண்டக்டராக இருந்தும் தொழிலாளர்களைக் கட்டுப்படுத்த முடியாத அவரை துரை கடிந்து கொண்டார். 

அவர் என்ன செய்வார்? தொழிலாளர்கள் ஒரே பிடிவாத மாக இருந்தனர். தங்கள் கோரிக்கைகளுக்கு நிர்வாகம் இணக்கம் தெரிவிக்கும்வரை-எழுத்தில் இசைவு தரும் வரை யிலும் வேலைக்குப் போவதில்லை என்று அவர்கள் தீர்க்க மாக முடிவு செய்திருந்தனர். கொடுக்க வேண்டியதற்கே, எங்கே எழுத்திலிருந்தால் எதிர்தரப்பினருக்குப் பிடிகிடைத்து விடுமே என்று நினைத்துப் பயந்து ஒதுங்கும் தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களுக்குத் தரவேண்டிய சலுகைகளுக்கா எழுத்தில் இணக்கம் தர முன்வரும்? 

தொழிலாளர்களின் தீர்க்கமான முடிவுகளுக்காக அவர் மனம் மகிழ்ந்திருக்கிறார். இப்போதும் அடிமனதில் அவருக்கு மகிழ்ச்சிதான். அவர் மனசோடு முயற்சித்தால் வேலை நிறுத்தத்தை உடைத்தெறிய முடியும் என்றாலும் அப்படிச் செய்ய அவருக்கு மனம் வரவில்லை. மாறாக, நீரின் குளிர் மையாய் நெஞ்சில நிறைந்திருக்கும் மகிழ்ச்சியை வெளிக் காட்டிக் கொள்ளாமல், வெளிக்காட்டினால் வீதியில் நிற்க வேண்டியது தான்தாம் என்பதை நன்குணர்ந்தவரான அவர், அவர்களின் உறுதி குலைக்கும் முயற்சியில் அவரை ஈடுபடுத்தும் முயற்சியில் துரைகொடுத்த பேச்சுக்களுக்குப் பிடிகொடுக்காது பட்டுப்படாமலும் ஏதேனும் கூறி சமாளிப்பார். 

அந்த முயற்சியில் அவரை ஈடுபடுத்தும் துரை அவருக்குக் கூறுவது அச்சுறுத்தும் வார்த்தைகளை-ஆட்களிடம் கூறுவது ஆசை வார்த்தைகளை. 

அச்சுறுத்துதலுக்கு அஞ்சாதவர்கள் கூட ஆசைக்கு மயங்கி விடுவதுண்டு என்பது மெத்தச் சரியானதுதான். 

சொல்லளவில் தோட்டத்து நிர்வாகம் தருவதாகச் சொன்ன சலுகைகளை ஏற்றுக் கொண்ட தொழிலாளர்கள் சிலர் வேலைக்குச் செல்லத் தொடங்கினர். சிலரைப் பலராக்கி வேலை நிறுத்தத்தை முறியடிக்க முனைந்த வெள்ளைக்காரத் துரையின் மூளை வெகுவேகமாக வேலை செய்தது. 

அந்தச் சனங்களின் பழக்க வழக்கங்களையும், பாமர நம்பிக்கையையும், பொருளாதார இடர்பாட்டையும், “யாரையாவது பிடித்து எப்படியாவது வாழணும்” என்கிற அர்த்தமற்ற வாழ்க்கைக் கோட்பாட்டையும் அவர் ஓரளவுக்கு அறிந்து வைத்திருந்தார். துரையாகத் தொழில் புரிய அவரின் ஆரம்ப மூலதனமே அந்த அறிவும் அநுபவமும் தாம். அவை இரண்டும் தன்னைவிட தனது கண்டக்டருக்கு அதிகம் என்பதை அவர் அறிவார். 

அவை இன்று பயன் தரவில்லை என்றுதான் அவருக்கு ஆத்திரம். 

வாலிப மிடுக்கும், வாய்துடுக்கும் மிகுந்த ஒரு சிலருக்குக் கங்காணி வேலை கொடுக்கப்பட்டன. கொடுக்கச் சொன்ன வர் துரை. கொடுத்தவர் கண்டக்டர் ஐயா. ஆக, இருதரப் யினருக்கும் ஆகாதானவர் அவர்தான். 

நான்குநாள் வேலை நிறுத்தம் நீடித்திருந்ததே என்று அவரிடம் ஆத்திரப்பட்டார் துரை. நான்கு நாள் வேலை நிறுத்தம் இப்படி நாசமானது அவரால்தானே என்று கோபப்பட்டனர் தொழிலாளர்கள். 

ஆளோடு ஆளாக கூடி குனிந்து நின்று கூலிவேலை செய்தவர்களுக்கு கம்பும் கத்தியுமாக கைகளை ஆட்டி கதைக்க வைக்கும் கங்காணி வேலை கொடுத்தால் கசக்கவா செய்யும்? 

ஒற்றுமை உடைந்த காரணத்தால் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் பிசுபிசுத்து விட்டது. அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு நிர்வாகத்தைப் பணிய வைக்க முடியாது போயிற்று. 

அவருக்கு அது குறித்து அடிமனதில் வேதனைதான். 

என்றாலும், அவரிடத்தில் ஆரம்பத்தில் துள்ளிக்குதித்த துரை இன்று தொழிலாளர்களின் ஒற்றுமை குலைந்ததை யிட்டு, ஆத்திரமடங்கியிருப்பதில் அவருக்குத் திருப்தி. 

அதற்கிடையில்தான் அப்படி ஒரு சம்பவம் நடந்தது. 

வேலை நிறுத்தம் ஆரம்பித்து மும்முரமாக நடந்து கொண்டிருந்த இரண்டாவது நாள். முத்துவின் மனைவி இறந்து போனாள். 

தொழிலாளர்கள் யாராவது இறந்து போனால், தோட்டச் செலவில் சவப்பெட்டி கொடுப்பது என்பது அங்கு சம்பிரதாயம். அந்தச் சம்பிரதாயத்தை வேலை நிறுத்தத்தைக் காரணம் காட்டி துரை மீறினார். 

தனக்கு எதிராகப் போகும் ஒவ்வொருவரையும் காத் திருந்து பழிவாங்கத் துடித்துக் கொண்டிருந்த துரை இப்படி ஒரு சம்பவத்தை விட்டு வைப்பாரா? 

வேலை நிறுத்தத்தில் ஈடுபடுபவர்கள் தோட்ட நிர்வாகம் தரும் சலுகைகளை பெறும் வாய்ப்பை இழந்தவர்கள் கள் என்று நோட்டீஸ் ஒட்டி வைத்தார். அப்போதாவது அவர்களின் உறுதி குலையாதா என்று. 

தொழிலாளர்கள் முன்னிலும் அதிகம் ஆவேசப்பட்டார்கள். அவர்களைப் பிரதிநிதித்துவம் செய்த அவனோ குமுறும் எரிமலையானான். என்றாலும் அவனது ஆத்திர மும் ஆவேசமும் இறந்து போனவளின் இறுதிச் சடங்கு களைச் செய்ய உதவவில்லை-அவன் அதை அறிவான் என்பதால் தான் திகைத்துப் போனான். 

அவனிடம் ஐம்பது ரூபா பணத்தைக் கையளித்த கண்டக்டர் ஐயா சொன்னார்: “முத்து, உன்னுடைய நிலைமை எனக்குத் தெரியும். இருந்த பணத்தை எல்லாம் கட்சி என்றும் சங்கம் என்றும் செலவழித்துவிட்டு, மனைவி இறக்க கிடப்பது தெரிந்திருந்தும் உன்னுடைய சக தொழி லாளர்களின் நன்மையே பெரிதெனக் கருதி நீ உழைத்துக் கொண்டிருக்கிறாய். உயிரோடிருக்கும்போது அவளுக்கு நீ செய்யத் தவறியதை சாவிலாவது செய்தாக வேண்டும். இந்தா இதை வைத்துக்கொண்டு ஆகவேண்டியதைச் செய்” 

அவன் நிலை குலைந்து போனான். அவனுக்கு அவரைப் பிடிக்காது என்றாலும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு இப்படி உதவி செய்வது தோட்ட நிர்வாகத்துக்கெதிரான செயல் என்பதை அவன் அறிவான். தனக்கு பிடிக்காதவர் என்றாலும் தன்னால் அவர் சிரமப் படுவதை அவர் விரும்பவில்லை. அவன் உணர்ச்சிகளை புரிந்து கொண்ட அவர் பேசினார். 

”முத்து, உனக்கும் எனக்கும் என்றைக்குதான் வாய் தர்க்கம் ஏற்படாதிருந்தது? ஆனால், அதெல்லாம் தொழில் செய்யும் இடத்தில். தொழிலாளர்களுக்கென்று நீ வாய் திறந்து பேசும்போது நீ சொல்வது சரியென்று பட்டாலும் அதை வெளிக்காட்டாதிருப்பதின் மூலம் நான் தோட்ட நிர்வாகத்துக்கு விசுமாசமாக இருக்க முயற்சிக்கிறேனே அல்லாது வேறில்லை.” 

”உண்மையில் இப்போது நீங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பது எனக்கு உடன்பாடுதான். ஆனால், அது சரியான செயல் என்று ஆமோதிக்க நான் தயாராக இருந்தால் தலைவர் வேலைக்கு நீயும், கண்டக்டர்வேலைக்கு நானும் தேவையே இல்லை” அவர் பேசி முடித்தார். அவன் ஆமாம் என்பதுபோல் தலையை ஆட்டினான். 

“உங்கள் பக்கம்தான் நான் என்றாலும், நாளைக்கே. துரை வேலை நிறுத்தத்தை முறியடிக்கும் முயற்சியில் முழு மூச்சோடு ஈடுபடு என்று என்னைக் கேட்கும்போது ‘ஆகட்டும் சரி’ என்றுதான் சொல்வேன். அப்படி ஒரு நிலைமை என்னுடையது. ஆக ‘உள்ளும் புறமும்’ ஒட்டி உறவாடாத உணர்ச்சிகளைச் சகித்துக் கொண்டு வாழுகிறவர்கள் நாங்கள்” 

அவன் அவருக்காக அநுதாபப்படத் தொடங்கினான். தன் துயரத்தையும் மறந்து அவர் தொடர்ந்தார். 

”முத்து, மோட்சம் என்றும் நரகம் என்றும் சொல் கிறார்களே எனக்கென்னவோ அவற்றிலெல்லாம் நம்பிக்கை இல்லை. தன் மனசுக்குச் சரியென்று பட்டதை வெளியில் தப்பென்று சொல்லி தடுத்து வைக்கவும், தன் உளமார விரும்பாத ஒன்றை வெளிக்கு ஆதரித்து மகிழ்ச்சி அடைவது மான. இந்த தோட்டத்து உத்தியோகத்தைவிட வேறு ஒரு நரகம் இருக்க முடியாது.” 

“நான் இறந்து போனால், எனது சவக்குழியை யாரும் வெறுப்போடு பார்க்காவிட்டால் அதுபோதும் எனக்கு என்று அவர் சொல்லும்போதே அவன் இடைமறித்தான்- ”ஐயா, அப்படியெல்லாம் பேசாதீர்கள்.” 

ஆனால், இன்று. 

அவன் அவரை எது குறித்து பேசவேண்டாம் என்று தடுத்தானோ அது நடந்தேறிவிட்டது. அவர் போய் விட்டார். 

அவருக்காக அவனும் அவன் கூட்டத்தாரும் கண்ணீர் வடிக்கின்றார்கள். ஆனால். அவர்களுக்குத்தான் எத்தனை வேறுபாடு? 

அவர்கள் அழுவது அநுதாபத்தால்.
அவன் அழுவது பிரிவால். 
அவர்களுக்கு அவர் இருந்தது தெரிந்தது. 
அவனுக்கு அவர் இல்லாததும் தெரிகிறது. 

– ‘மலர்’ (1970) 

– மலைக் கொழுந்தி (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: டிசம்பர் 1994, பாரி நிலையம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *