கதையாசிரியர்:
தின/வார இதழ்: ஈழநாடு
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 19, 2025
பார்வையிட்டோர்: 10,851 
 
 

எனது அன்புத்தந்தை அகஸ்தியரின் நினைவு தினம் டிசம்பர் 8ஆம் திகதி (29.8.1826 – 08.12.1995). அதனை நெஞ்சிருத்தி அவரது ‘உள்ளுணர்வு’ என்ற சிறுகதையினை இத்துடன் அனுப்பி வைக்கின்றேன். நீங்கள் செய்யும் அத்தனை பணிகளுக்கும் இனிய நன்றிகூறி விடைபெறுகின்றேன். எல்லோரும் தேகசுத்துடன் இருக்க வாழ்த்தி நிற்கின்றேன்.

அன்புடன்
நவஜோதி


போனவ தன்னோட அதையும் கொண்டு போகாம, இஞ்ச எனக்குப் பாரமா விட்டிட்டு அவபோட்டா. அது ஊருக்கு நாணயசீலப்பட்டு அலையுது. ஆம்புளையெண்ட வாக்குத்தன்மை இல்லாட்டியும், நாலுபேர் பேசிற பேச்சை, கொஞ்ச நஞ்சமாலும் தெரிஞ்சு கொள்ள எப்பன் புத்தியும் கூட இல்லையே. கடவுளே இம்மட்டு வயது வந்து பெண் கொள்ற பெரிய இளந்தாரியா வந்தும் இப்பவும் ஐந்து வயதுப் பாலனாட்டம் கதைச்சா ஆர் மதிப்பினம்? அவ என்ர வயித்தில புறந்து ராசாத்தியாட்டம் இருந்திட்டு அவ தன்ர வயித்தில வந்த இந்த வலது குறஞ்சதை இப்படி என்னோட அலைக்கழிய விட்டிட்டு, கரச்சல் இல்லாமல் போட்டா… கண் கெடுவான் இதயும் ஒரு சாவா எடுக்காமல் இந்த ஊரவையெல்லாம் பழிச்சு நையாண்டியும் பண்ணிவிட்டான். இதுவும் என்ர தலையெழுத்து. இதுக்க கிடந்து உத்தரிக்க யாரால ஏலும்? அப்பு! நீ மேல இருக்கிறியே? அதையும் என்னையும் ஓரவாக்கியமில்லாமல் ஒண்டாக் கூப்பிடு…’

பனக்கூடலுக்குள் திரிந்து விறகு பொறுக்கி, அடுக்கி. அதை நாரால் இறுக்கி வரிந்து ஒரு கட்டுக்கட்டி, அப்படியே கட்டோடு தலையில் தூக்கி வைத்துக்கொண்டு நுள்ளான் குடுகுடுப்பு ஓட்டத்தில் கொண்டு வந்த விறகுக்கட்டை அடுக்களைச் சார்வோடு போட்டுவிட்டு திண்ணைக் கப்புடன் பாடாய்ச் சாய்ந்து கொண்டாள் சின்னம்மாக்கிழவி.

கால்களிரண்டையும் நீட்டி முதுகுழைவு ஆற்றிய வண்ணம், பேரன் பொன்னுத்துரையை நினைத்து மனம் அழுந்தும் கிழவியின் கண்கள் கலங்கிக் கொண்டு வந்தன. சேலைத் தலைப்பை எடுத்துத் துடைத்துக் கொண்டவள் ‘இதில நிண்டபொடியைக் காணன்’ என்று நாலாபக்கமும் விழிகள் பேந்தப் பார்க்கிறாள்.

பொன்னுத்துரையைக் காணவில்லை.

‘போனால் போனதுதான். பொடி எப்பனுக்காவது வீடு வாசலோட இருந்தால்தானே எல்லாம் என்ர செல்லம்தான். சும்மா ஒரு கண்ட சீருக்கு வெள்ளாடு மாதிரி ஓடித்திரியிறதுதான் இந்தப் பொடிக்கு வேலை. நல்ல காலம் இந்தப் பொடியை நம்பி முத்தத்தில நெல்லைக் காயவிட்டிருந்தா கோழியள் வந்து முழுநெல்லையும் முடிச்சிருக்கும்.

கிழவி கோழியை நினைவு கூர்ந்து அஞ்ச, அதுவே ஒன்று அப்போது அடுக்களைக்குள் வந்து தலையை நீட்டியது. ‘சுய்,ஹாய்…. இஞ்ச என்ன கிடக்கெண்டு ஓடிவாறியள்? அங்கினேக்க அயலட்டையில போய் அவன் பொன்னுத்துரையைப் போல மேயுங்கோ…போங்கோ….’

சடாரென்று அவள் நெஞ்சு துணுக்குற்றுச் சாம்பியது. யானை தன் கையால் மண்ணைப் போட்ட நிலை.

நான் கூட என்ர பிள்ளையை கேவலமா மதிச்சிட்டனே. நான் கண் கெடுவாள். அவனைப் பெத்தவள் இருந்தால் – என்ர தாயத்தின்னியை அப்படி எழுந்தமானமாச் சொல்லிப்போட்டன். நான் கெட்டவள். இந்த அறுந்தவாய் சும்மா கிடக்கேல்ல….’

பொருமி வந்த துக்கம் நெஞ்சைக் குடைகிறது. உமிழ் நீரை ‘மூடுக்’ கிட்டத் தொண்டைக்குள்ளே இழுத்து மீட்டித் துப்பிக் கொண்டாள். மனப்பிராந்தி அவளை விட்டு அகலவேயில்லை. அது அவனைச் சுற்றியே நாய் வாலாக உள்ளது.

‘…. காலமே பழஞ்சோறு திண்ட கையோட போன பொடி, பொழுதும் திரும்பி மத்தியானமாப்; போச்சு இன்னும் வீட்டுக்கு வர மனமில்லாம இருக்கே. வேற எங்க போயிருப்பான்? அங்கேதான் போவான். அவே, குருகுருப்பில செல்லம் பொழிஞ்சு கொம்மாளம் அடிக்கிறதை இது வாய்விடாச் சாதிபோல, ஒண்டுந் தெரியாம ‘ஆ’வெண்டு நிண்டு பார்த்துக்கொண்டிருக்கும். புத்திபுடிபாடு இல்லாட்டியும் அது எனக்கும் மச்சாள் தான். வயதும் கூடியது எண்டு அவள் கொஞ்சமும் எண்ணிப் பார்க்காமல் இந்தத் தாய் தேப்பனைத் தின்னிக்கு முன்னால், என்னம் போரு ஊரவனோட இருந்து குமுதம் குத்தி விளையாடுவாள். அவர் என்ன அம்மட்டுப் பெரிய ஆளே? கவுண்மேந்தில ஒரு கிளாக்கனாம். அது பெரிய வேலையே? நல்லா விளையாடட்டன், எங்களுக்கென்ன? அதுக்காக இந்த வலது குறஞ்சதுக்கு முன்னாலதான் அவே தங்கட குமரி – இளந்தாரி ஆட்டத்தைக் காட்ட வேணுமோ? அது கிடக்க, இது ஏன் அங்க நெடுக நெடுக ஓடுது? வரட்டுக்கும் செப்பமாகச் சொல்றன்….?’

முற்றத்தில் காய்ந்து தகதகக்கும் கானலைகளைப் போல், கிழவியின் இருதயமும் கனல் கக்கி, எரி;ந்து அலையெழுப்பிப் புண்ணில் இறகுச் சிறாம்பாய்க் குத்துகிறது.

‘தம்பி பொன்னுத்துரை’ எட தம்பியோய்….’

‘கூ, கூய், என்னணோய்?’

‘ம், பாரன், அவர் அங்க நிண்டு என்னணையாம்’

‘உங்கயிருந்து என்னுமடா விடுப்புப் பார்க்கிறாய்? வாவன் வந்து சோத்தைத் தின்னன்’

‘இந்தா வாறனண பெத்தாச்சி’

ஏன்னும் பொரு ஊரவன் கவுண்மேந்திலை ஓரு கிளாக்காக இருக்கிறான்’ என்று புண்ணில் புளிவிட்டு, கிழவி பாலசிங்கத்தைத் தாழ்வாக நிந்தித்து தனக்குள்ளே திருப்தி கொண்டாலும், அவன் இரண்டு மூன்று மாதங்களுக்குள்ளே நிரந்தர இடம் பிடித்துவிடப் போகிறான் என்பது மட்டும் உண்மை. இதெல்லாம் சின்னம்மாக் கிழவிக்குத் தெரியாது. பொன்னுத்துரை கட்டும் தாலி தங்கமலரின் கழுத்தில் ஏறும் என்று தான் நம்பிக் கொண்டிருக்கிறாள் கிழவி.

கிழவியின் வயிறு, தான் பெற்றவளுக்காக மட்டும் துடிக்கவில்லை. தான் பெற்றவள் பெற்று அனாதையாக விட்டுப் போன பொன்னுத்துரைக்காகவும் எரிந்தது.

எப்பிடியெண்டாலும், நடேசன் தான் தன்ர கூடப்பிறந்த தங்கச்சிக்கு வாக்குக் குடுத்து ரண்டு பேரும் போட்டுவைச்ச சாணைக் கூறைய எப்பனும் மறக்கான். எல்லாம் என்ர இந்த வயித்தில பிறந்து வந்ததுகள் தான். இதுவும் பேரன் அதுவும் பேத்தி, ரண்டையும் சேர்த்து வைச்சிட்டு கண்ணை மூடினாத்தான் நான் அங்கால போய் இதைப் பெத்தவளுக்குக் கணக்குக் கொடுப்பன். அல்லாட்டி என்ர இரண்டு கண்ணும் அவியும். ஆரோ வந்து போறானாமே, ஆரது? இருக்காது, சாணைக்கூறை போட்டிருக்கல்லே?

கிழவிக்கு இந்தச்; சாணைக் கூறையை நினைவு கூரும் போதுதான் கொஞ்சமாவது மன ஆறுதல் அடைகிறது. ஆனால் சற்று வேளைக்கு முன்;தான், ‘பொன்னுத்துரை தங்கமலர் வீட்டுக்கு ஏன் அடிக்கடி போகணே;டும்?

அவனுக்கு இனி அங்கே என்ன உரிமை இருக்கின்றது. ஆரோ கிளாக்கனோட தங்கமலர் கும்மாளம் அடிக்கிறாள்’ என்றெல்லாம் சொல்லித் தனக்குள் கறுவிக்கொண்டிருந்தாள்.

அவள் பொன்னுத்துரையைச் சுமக்கும் ஒரு வெறும் கொட்டு, கிழவிக்கு எல்லாம் தடுமாற்றம்.

‘கூப்பிட்ட குரலுக்கு இந்தா வாறெனண பெத்தாச்சி யெண்ட’ பொடி, இன்னும் இஞ்சால வரல்லியே’

தன்பாட்டுக்கு புசத்திக் கொண்டிருந்த கிழவி சினத்தோ:டு எழுந்து மறுபடியும் கூப்பிட வாயெடுக்க, பொன்னுத்துரை வந்து சேர்ந்து விட்டான்.

சடலத்தில் ஒட்டியிருந்த புழுதிப் படலங்களோடு வியர்வைத்துளிகள், நீர்த்துளிகளாய், அழுக்குச்சரடாய் படைவிட்டுப் பணியாகத் திரண்டு கோடிட்டு வழிந்து கொண்டிருந்தது. அவன் அதையெல்லாம் கவனியாது தன் வேட்டித் தலைப்பால் துடைத்தபடி, சிரித்துக் கொண்டு வருவதைக் கண்ட கிழவிக்கு ஆத்திரமும் துக்கமும் நெஞ்சுக்குள் கனக்க, அவை கடும் வார்த்தைகளாகப் பரிணமித்துக் கல் சொரிகி;ன்றன.

‘இதென்னடா உன்ர கோலம்? ஒரு ஆன துணியைக் கட்டித் தலையைச் சீவிக்கீவி முழுகிக் குளிக்கிறேல்ல. ஆனவாகில வயித்தையும் கவனியாம அங்க போய் என்ன விடுப்புப் பாக்கிறனி?’

‘பேசிவிட்டு, ஓயாமல் என்ர புள்ளயப் பேசிறனே’ என்கின்ற கவலை முகத்தில் குருக்குத்த, அவனைப் பரிவோடு பார்க்கிறாள்.

‘விடுப்பில்லயணை பெத்தாச்சி, அந்த அண்ணை…’

‘அதென்டா அண்ணை, எந்தண்ணை?’

‘அதாணை, எங்கட தங்கமலரக்காவோட வந்து பேசுவாரணை, பாலசிங்கமண்ணை…அவர் …’

‘எடேய் உனக்குத் தங்கமலர் ஆற்றா? ஐயோ நீ முறைகூடத் தெரியாமக் கிடக்கிறியே, அந்தச் சிங்கிணி நோனா உன்ர மச்சாள்தான்ரா அதுபோக, அவள் உனக்கு எத்தனையோ வயதுக்கு இளையவளல்லே, அவளைப் பார்த்து அக்கா என்டிறியே’

‘என்னணை, அவ இம்மட்டுப் பெரிய பொம்பளையா இருக்கிறா, சின்னத்தங்கச்சியக்காவை விட, இவ பெரிசாம்’ மெண்டு தொக்கையா ஊதியிருக்கிறா அப்ப என்னெண்டு நான் தங்கச்சியெண்டு கூப்பிடுறது, சொல்லனணை?’

‘ஐயோ! ஏன்ர அப்பு! கண்கெடுவான் பாத்து உன்னை இப்படிச் செய்து போட்டானே!’

அவள் உதிரம் கரைந்து கண்ணீராய்ச் சுரக்கிறதது. ஏந்த விஷயமாகச் சொல்லி அவனுக்கு விளங்கவைப்பதென்று கிழவிக்குத் தெரியவில்லை.

‘எப்படி? நான் சொன்ன பிறகுதானே பெத்தாச்சி கடுவலா யோசிக்கிறா, இப்பத்தான் அவவுக்கு புத்தி புடிபட்டிருக்கு, என்டாலும் பெத்தாச்சி நெடுக ஒருகண்ட சீருக்கு அழுகுது. பாவம் அதோட நல்லா மெலிஞ்சு எலும்பாப் போனா, கனநாள் பாத்திருக்கிறன். அவ எனக்குச் சோத்தைப் போட்டுத் தந்திட்டுத் தான் போய் வெத்திலை இடிச்சுத் திண்டிட்டுப் படுத்திடுவா.

தங்கமலரக்காவே வயிறு வெடிக்க நல்லாத் தின்னுவினம். பெத்தாச்சி எப்பவும் பட்டினிதான். அப்ப என்னெண்டு பெத்தாச்சிக்கு புத்திவரும்?’

பொன்னுத்துரை கிழவியைப் பரிதாத்தோடு பார்க்கிறான. கலங்கிய கண்களோடு கிழவியும் அவனைப் பார்க்கிறாள். அவளுக்கு இருமுனைத் தாக்கலான உபத்திரவம். ஓன்று, பொன்னுத்துரை, மற்றது இவன் சொன்ன ‘அவன்’ என்ற வாள்.

‘பெத்தாச்சி, நீ ஏனணைஅழுகிறாய்?’

‘என்ர அப்பு நான் ஏனடி அழுகிறன்? நீ என்னவோ, தங்கமலரோடவந்து பறையிற அண்ணையெண்டியே, அதாரது?;’

பொன்னுத்துரையின் தலையைத் தடவிக் கோதிக் கோதிக் கொடுத்துக் கொண்டு, கிழவி அவனையே வைத்த கண் எடுக்காமல் இரங்கிப் பார்த்தபடி இருக்கிறாள்.

இப்படிக் கேட்டதும் இருளில் ஏற்றிய தீப ஒளியாக இருந்த அவன் முகம் சூரியக் கதிர்களைப் புகார் விழுங்க இருள் சூலாகும் பூமி போல் கறுத்து வருகிறது.

‘… அவர், நீ தோசை சுடுறத்துக்குக் குழைப்பாயணை அமெரிக்கன் மா, அதைப் போல என்னத்தையோ ஒரு களியை எடுத்து பாணில் பூசித் திண்டார். திண்டிட்டு எனக்குத் தந்தார். அய்யோ. அது பொல்லாத அழுகல் மணம் நான் வேண்டாமெண்டிட்டன், புறகு அக்காவோட என்னவோ ‘கசுக்குப் புசுக்’ கெண்டு… என்னவோ எனக்குத் தெரியாதணை, போணை… இஞ்சாணை சோத்தை….’

‘ஏன்ர அப்பனுக்குச் சோறு தரத்தானே கூப்பிட்டனான். கதை சொல்லுறத்துக் கிடையில அவருக்கு கோவம். அது எண்ணென்டு எனக்குத் தெரிஞ்சாத்தானே?’

என்னவோ இங்கிலீசில் கதைச்சார். அதுக்கு அவ ‘உங்க உவரைவிட்டு வாங்குவியுங்கோ? எண்டு என்னை அவருக்குக் காட்டிச் சொல்ல, சொன்னோடன அவர் என்னைக்கூப்பிட்டு, பொன்னுத்துரை நல்ல புள்ளையாட்டம் ஓடிப்போய் ஒரு நேவிகாட் சிகறேற்றுப் பைக்கேற் வேண்டிக் கொண்டு ஓடியா’ எண்டு காசு தந்தார். நான்…’

‘நீ வேண்டியந்து குடுத்தியாக்கும், என்ன?’

‘ஓமணை’

‘ஓமணையோ’

‘அப்ப, குடுக்கப்படாதே?’

‘சரி சரி’ சொல்லு இந்தக் கோதாரிக் கதையெண்டாலும் எப்பனுப்பனுக்குக் கேப்பம்’

‘…ஓடிப்போய்வேண்டியந்து பாத்தன், விறாந்தைக் கதிரையில இருந்து அக்காவும் அவரும் பறையினம்’

‘ஆட்டக்காரக் குமரி?’

‘ஆரணை ஆட்டக்காரக்குமரி, அக்காவோ, எண அவ அப்புடி ஒண்டும் ஆடேலயண, சும்மாதான் இருந்தவ. மெய்யணை பெத்தாச்சி, அவ இன்னும் கலியாணம் செய்யேல்ல, அதுக்கு முந்தி ஆம்பிளையோட தனியாப் பறையக் கூடாதல்லே, என்னணை?’

‘அவள் தோறையை விடு, உன்ர சங்கதி என்ன, நீ அதைச் சொல்லு’

‘…நான் அவுக்கடியெண அவவைத்தான்கூப்பிட்டன் அவ எழும்பேல, அவன்தான் எழும்பி ‘சீ ஏன் கழுதை மாதிரிச் சத்தம்போட்டனி? இஞ்சா சிகரேற்றைத் தந்திட்டுப் போ’ எண்டு கோவிச்சுப் பேசி, கையில் இருந்த சிகரேற் பெட்டியை புடுங்கிக் கொண்டு, மறுக்காலும் கதைக்கத் துவங்கிவிட்டார்….’

‘ஆ, ஆ இதுக்குத்தான் அவ பெத்துவிட்டுப் போனவவாக்கும்? டேய், நீ அவனுக்குப் பல்லுடைய அடியாதையன்ரா’

‘போணை, அவர்தான் கோவமாய்ப் பேசினவர். ஆனா அக்கா அவரைத்தான் தாறுக்கும் மாறுக்கும் பேசிப்போட்டா’

‘எப்ப பேசினவள்?’

‘நான் கதவோட நிண்டு ஒட்டுவியளம் கேட்டன். ‘அது பாவம், இந்த நெருப்பாய் எரியுற வெயிலுக்கால ஒரு கட்டைத்தூரம் ஓடிப்போய் சின்னப்புள்ள போல வேண்டிக்கொண்டு வந்து தருகுது. அதைப் போய் பேசிறியளே, அதுபோ எண்டால் போகுது ‘வா’ எண்டால் வருகுது. மூளை இல்லை எண்டதுக்காக மாடாட்டம் நாங்கள் பாவிக்கலாமே? அது ஒரு நல்ல பிறவியெண்ட படியால்தான் தன்பாட்டில் போகுது, ‘கறுமக் கட்டை’ எண்டு சொல்லிப் போட்டுக் கடைசியில, ‘அது எப்பிடியெண்டாலும் என்ட ரத்தம் எண்டு பேசு பேசெண்டு பேசினா நான் அதோட ஓடியாந்திட்டன், என்னென்டாலும் அக்கா நல்லவ என்னணை பெத்தாச்சி?’

‘ஓ… ஓ… நல்வள்தான், எங்கட வங்கிஷத்திலயும் இல்லாத கிலிசகேட்டை நடத்திறாள். நீ இனிமேல்பட்டு அங்க போகாதே’

‘ஏனணை?’

‘அது உனக்குத் தேவையில்லை. போகப்படாதெண்டால் போகப்படாது. மதியாதார் வீட்டு முற்றம் மிதியாதை, அம்மட்டும் தான்’

‘அவ நல்லவதானே?’

‘அவ நல்லவ, அவனுக்கடா உனக்கில்லை, பேசாமவிட்டோட இரு.’

‘சரியணை, எணை பெத்தாச்சி, சடங்கு செய்யிறத்துக்கு முந்திப் பொம்பளையோட ஆம்புளை கதைக்கிறேல்ல, அப்ப இவே கதைக்கினமே, இது புழைதானே?’

‘அது புழைதான். அவள் எக்கேடுகெட்டுப் போகட்டும். எங்களுக்கென்ன? ஆனா நீ இனி அங்காலை போகாதை. போனா நான் உன்ர கோத்தையைப் போல செத்துப்போவன்’

‘என்னணை கதைக்கிறாய்? நீ செத்தா எனக்கு ஆர் சோறு தருவினம்? அப்ப நானும் சாவன். சரி, நான் இனிமேல் போகேல்லேயணை?’

‘என்ர , பெத்தாச்சியாண எண்டு. என்ர தலையில அடிச்சுச் சத்தியம் பண்ணி வாக்குக்குடு’

‘அ, இந்தா என்ர பெத்தாச்சியான நான் அங்கால போகேல்ல’

‘எடி, என்ர ராசகிளி, இம்மட்டு, நல்ல புள்ளையா இருக்கிற உனக்கு, இந்த ஓரவாங்கியம் பிடிச்ச கடவுள், என்ர அப்பனுக்குக் கொஞ்சமெண்டாலும் அறிவைத் தராமல் போட்டானேயடி!

ஐயோ, என்ர அப்பு!’

பொன்னுத்துரையை வாரியணைத்துக் கட்டிப் பிடித்துக்கொண்டு அவள் விம்முகிறாள். கிழவியைப் பார்த்தவுடன் அவன் முகமும் வெதும்பல் மாங்காயாகிறது. ’ஏன் அழுகிறோம்?’ என்று இருவருக்கும் பூரணமாகத் தெரியாத சோகநிலை.

இத்தனை காலமாக எந்தச் சலனக் கழியிலும் சிக்காமல் சுதந்திர வியாபியாயிருந்த பொன்னுத்துரை, கிழவிக்குச் சத்தியம் செய்து வாக்குக் கொடுத்த பின் ஏதோ தன் மனதில் பெரும் சுமை ஒன்று வந்து ஏறியிருப்பதாகவும், அதனால் தன் மனம் போனபடி, ஏகாந்தமாய்த் திரிய முடியாமலிருப்பதாகவும் உணர்ந்து அதனால் கிழவி மீது வெந்து வெடித்து எரிந்து கொண்டான்.

கல்யாணம் புரிவதற்குமுன் ஆணும் பெண்ணும் ஒன்றாய்க் கூடி கதைப்பது மரபல்ல’ என்று தான் தெரிந்து கொண்டதைக் கிழவியும் சேர்ந்து ஆமோதித்துக் கொண்டதால் அவனுக்கு ஒரு நிறைவு. ஆனால் இதைப்போய் தங்கமலருக்கு அல்லது பாலசிங்கத்துக்கு எடுத்துச் சொல்ல முடியுமா? கிழவி. வலிச்சல் கட்டையென்றாலும் எப்படியோ பொன்னுத்துரையின் கால்களுக்கு விலங்கு போட்டுவிட்டாள்.. ஆள் காரியகாறிதான்.

ஒரு நாள் தங்கமலரும் பாலசிங்கமும் தெருப்படலையோடு நின்று கெக்கலித்துச் சிரித்துப் பேசிக்கொண்டிருப்பதைப் பொன்னுத்துரை பார்த்துவிட்டான். பார்த்ததும் ரோஷம் குபீரென்று பாய்ந்து கோபம் மேலிடுகிறது. அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல், ‘வேறு ஏதோ சோலியாகப் போகிறானாக்கும்’ என்று தன்னை

அவர்கள் எண்ணிக்கொள்ள வேண்டுமென்பதற்காக, புறங்கைக்கட்டுடன் அதே தெருவால் போய்க்கொண்டிருந்தான். தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு கிட்ட நெருங்கி, இருமிக் கனைத்து பாவனை செய்து வெறும் உமிழ்நீராய், மங்கூக்கா…துப்’பென்று படலையைப் பார்த்து முகத்தைக் கோணி வைத்தபடி நாக்கைப் புரட்டி வறட்டி எடுத்த துப்பலைத் துப்பிவிட்டு கடைக்கண்ணால் வெறிகொள்ளப் பார்த்தான் ‘மலர், எங்கட அறிஞர் பொன்னர் வாறார்’

பொன்னுத்துரையைச் சுட்டிக்காட்டி, தங்கமலரைப் பார்த்துக் கொண்டே குனிந்து நிமிந்து சிரித்தான் பாலசிங்கம். தங்கமலரும் சிரித்துவிட்டு பொன்னுத்துரையையே நூதனமாகப் பார்த்தாள். இரக்கமும் பரிகாசமும் கலந்த சிரிப்பு.

அவ்வேளையாகப் பார்த்து ஒரு, ‘யூனிவர்ஸிட்டி’க் காற்சட்டைக் கூட்டம் ஒன்று பிரசன்னமாகி ‘ஹலோ மச்சான் பாலு, ‘வென் இஸ் யுவ மரீஜ்?’ என்று ‘பிக்னிக்’ போகும் சுதிசுரக்க, ஒரு ‘ஹனிமூன்’ தோரணையில் ஆர்ப்பாட்டக்குரல் போட்டுத் தங்கமலரையே பார்த்து நின்றது. தங்கமலர் அப்போ தன் முகத்தை நாணிப்பூவாக மலர வைத்துப் பாலசிங்கத்தை விழுங்கிக் கொண்டிருந்தாள். பாலசிங்கத்துக்கு விஷயம் இன்னதென்று விளங்கிவிட்டது.;

வந்த கூட்டத்தைத் தங்கமலருக்கு அறிமுகப்படுத்தி வைத்தபின் பாலசிங்கம் ‘பொக்கட்’டுக்குள்ளே கையை வைத்தான். அது ‘எம்ரி’ சிகரட் ஒன்று கூட இல்லை. முன்னே போய்க்கொண்டிருக்கும் பொன்னுத்துரை மீது, ‘நீ தான்ரா தஞ்சம்’ என்று மனம் கெஞ்சி, அவன் மீது பாலசிங்கத்தின் கண்கள் பருந்து இறாஞ்சிகின்றன.

‘பொன்னுத்துரை, ஒருக்கா உந்தக் கடைக்குப் போய்…. ஓ, மன்னிக்க வேணும், நான் இவரை உங்களுக்கு அறிமுகப்படுத்த மறந்துபோனேன். இவர்;, நம்ம மலரின்ர ஆசை மச்சான். ஏன்ன சிரிக்கிறியள்? சத்தியமா உண்மை. ஆளும் ஏக்கிபோக்கியான ஆளில்லை, ஒரு அறிஞர் எடயப்பா, நீங்க எல்லாரும் ஒருமிக்கச் சிரிக்க அந்தாளுக்குக் கோவம் வரப்போகுது. உண்னான நான் பகுடி இல்லாம….சொல்றன், நல்ல வெள்ளை மனசு, சொன்னதெல்லாம் செய்யும்..’ அறிமுகக்கதையோடு பாலசிங்கம் ஒரு ரூபாய் நோட்டை எடுத்து பொன்னுத்துரையிடம் நீட்டி ‘இதோ ஓடிப்போய் ஒரு பைக்கட் சிகரட் வேண்டியா’ என்று கொடுத்தான்.

உலைச்சோறாய்க் கொதிக்கும் குடுவைக்குள் பொன்னுத்துரையின் இதயம் விழுகிறது. கண் பிழிந்த தக்காளிப்பழமாக உழிந்து நைகின்றன. உடலின் இரத்த நரம்புகள் அறுத்துபோட்ட ஆட்டின் துள்ளல்.

ஓன்றும் பேசாமல் தங்கமலரையே அவன் பாhக்கிறான். அவனின் பார்வைக்குள் அவள் பஞ்சாகத் துருதுருக்கிறாள்.

அவளுக்கு ஒன்றும் புரியவில்லை, புரியும் நிலையிலுமில்லை.

‘என்னது என்னை உப்புடிப் பூந்து பார்க்கிறாய்? போவன், போய் வேண்டிக் கொண்டு வந்து குடன்’

தங்கமலரின் கிளிச்சொண்டுகள் உறீஞ்சிக் கூழ்குடிக்கும் பாவனையில் தடம்புரள்கின்றன. ‘கொண்டா காசை’.

பொன்னுத்துரை பாலசிங்கத்திடம் தானகவே வாய்விட்டுக் காசைக் கேட்கிறான். தன்னுடைய சொல்லுக்கு மதிப்பளித்துவிட்ட பொன்னுத்துரை மீது தங்கமலருக்கு உண்மையிலேயே இரக்கம் பீறிடுகிறது.

கைநீட்டி காசை வாங்கிய பொன்னுத்துரை ஒரு அடி கூட எடுத்து அப்பால் நகரவில்லை அதைக் கைக்குள் மடக்கி உருட்டி, மறுபடி எடுத்து விரித்துப் பார்த்துக் கொள்கிறான். மனசில் ஒரு குறும்புப் புத்தி எழுந்து வறுத்து அழுது சாம்புகிறது.

. ‘இந்த ஒரு ரூவாத்தாளை, தூள் தூளாகக் கிழிச்சி இவன்ர முகத்தில், அல்லாட்டி அவளின்ர மூஞ்சையில் ‘சுழட்டி வீசட்டோ? என்னத்துக்கு வேண்டாம், பெத்தாச்சி அறிஞ்சா எக்கணம் என்னைத்தான் பேசுவா’

அவன் உடல் படபடக்கிறது.

‘இந்தா உன்ர காசு, உனக்குச சிகரட் வாங்க இனி நான் போகமாட்டன்’

‘எடே!’

பாலசிங்கத்துக்கு அதிர்ச்சி, அது வென் நெஞ்சில் ஏற்றிய குண்டுசி.

‘எடி ஆத்தே!’

தங்கமலரின் கண்கள் வியப்பில் குமிழ்ந்து பிள்ளைக்கற்றாளைச் சதையாகப் பிதுங்குகின்றன. ‘என்ன மிஸ்டர் பாலு. உங்கட அறிஞர் உம்மட காதைச் செவ்வையாகக் கடிச்சிட்டாரே’

நண்பர்கள் பாலசிங்கத்தின் காதைத் திருகிவிடுகிறார்கள். சூய்க்காட்டும் அவர்களின் வார்த்தையை விழுங்கி பாலசிங்கம் கோபத் தீக்குள் தஞ்சமாகின்றான். புலிப்பாய்ச்சலில் எழுந்த அந்தகாரம் பூனைச் சீறலில் வந்து தரிக்கிறது.

‘ப்ளடி றாஸ்கல்’

பாலசிங்கத்தின் பொறுமைக்குச் சோதனை, அவனது நெகிழ்ந்த கோழிமுட்டை

‘ப்ளடி றாஸ்கல், என்ரா சொன்னனி?’

நெருப்புப் பிடிச்சி சீறுவாண வேகத்தில் ஒரு மின்னல் அவன் வாயில் தெறிக்கிறது.

‘பெரிய இங்கிலீசு படிச்சுப் போட்டார். தமுழில பேசாம, ‘புளடி கிளடி’ யெண்டு இங்கிலீசில பேசினாப் போல நான் பயந்து போய் வேண்டித் தந்திடுவானாக்கும். நான் பெத்தாச்சிக்குத்தான் பயம் நான் அவ சொல்லுறதைத்தான் செய்வன்’

‘இதில் நிண்டு கதையாதை, போடா கழுதை.’

‘அ, நீதான்ரா கலயாணம் முடிக்க முந்தி, பொம்பளையளோட வெக்கமில்லாமல் கதைக்கிறனி. அண்டைக்கு ஒரு நாள் பாத்தன், வேற ஒரு பொம்பளையோட கதைச்சனி, நீதான் போடா’

நண்பர்கள், ’சோஷல் மூமன்’ என்னவென்று இந்தப் பிறவிக்கு எப்படியப்பா தெரியும்? என்று கசித்துக் கொல் என்று சிரிக்கின்றார்கள். எரியும் பலசிங்கத்தின் இருதயத்தில் அது எண்ணெய் வார்க்கிறது. பாலசிpங்கம் பாலசிங்கமாக இல்லை.

‘கண்ட நீண்ட நாயளுக்கெல்லாம், படிச்சவயளோட சரிக்கட்டிக் கதைக்க இடம் கொடுத்தா இப்படித்தான் கடைசியில் ‘றிசல்ட் வரும் ஓர்றா கழுதை.

‘ஆற்றா கண்ட நிண்ட நாய்? நீதான்ரா புறத்தியான். ஏன்ர ஆச்சியையும் அக்காவின்ர.. இல்ல வயதுகூட… தங்கமலரின்ர அப்புவையும் எங்கட பெத்தாச்சிதான்ரா பெத்தவ. அப்ப ஆற்றா புறத்தி?’

‘பிறதர், இந்தாளோட, வாய்க்கு வாய் குடுத்துப் பேசிறது உனக்கு ’றெஸ்பெக்டா? ‘கம் கம்…’

நண்பர்கள் நயமாக எடுத்துச் சொல்லியும் பாலசிங்கத்தின் மண்டைக்குள் புயல்தான் அடிக்கிறது.

‘டேய், வாய்க்கு வாய் குடுத்து முகரைக் கட்டை உடைய வாங்காமல் எங்கையும் ஓடுறா கழுதை.’

‘உப்புடிச் சொன்னியண்டா, நான் உன்னையும் கழுதை எண்டுதான் சொல்லுவன்.’

‘சொல்றா பாப்பம்?’

‘நீர் சொல்லும் பாப்பம்?’

‘கழுதை, மூதேவி, தூ…’

‘நீயும் கழுதை, மூதேவி, நாய், தூ… தூ….’

மின்னல் போல் ‘சடா’ ரென்று பொன்னுத்துரையின் தலையில் ஒரு பலமான அடி விழுகிறது.

‘ ஐயோ ஏன்ர பெத்தாச்சி! இவன் பாலசிங்கம் எனக்கு அடிச்சுப் போட்டாணோய்…!

அடித்த கரம் ஓய, ‘சா, ஏன் அடிச்சன்’ என்று தன் கையை பாலசிங்கம் தூக்கிப் பாhக்க்pறான்.

அந்தக் கையில் ஒரு பனம் சிலாகை இருக்கிறது.அது இன்னும் அவன் கையை விட்டு நெகிழவில்லை.

தன் கைக்கு அது எப்பிடி வந்ததென்று அவனுக்கும், அந்த மின்சார வேகத்தில் அந்த அடி பொன்னுத்துரைக்கு எப்படி விழுந்தது என்று மலருக்கும் புரியவில்லை.

இந்தச் சூறாவளியில் தவித்து நிற்கும் போது, ‘ஐயோ, என்ர தாயத்தின்னிக்கு எந்தக் குறுக்கால போவான்டரா அடிச்சவன்? டோய், தாற்றா அந்தப் புழுக்கப்பயல்?’ என்று நிலம் அதிரக் குடுகுடென்று விழுந்தடித்துக் கொண்டு கிழவி தெருவுக்கு ஓடி வருகிறாள். கிழவியைக் கண்டதும் பொன்னுத்துரை, ‘என்ர பெத்தாச்சி, இவன் பாலசிங்கம் எனக்குப் பொல்லால மண்டையில அடிச்சுப் போட்டானணை’ என்று சொல்லி ஒப்பாரியாய்ப் புலம்பி, அடி விழுந்து வீங்கிய உச்சந்தலையையும் ஓரு கையால அழுந்திப் பிடித்த வண்ணம், கேவிக் கேவிக் குரலெடுத்து அழத் தொடங்கிவிட்டான்.

கிழவியைப் பார்த்து அவன் அழ, அவனைப் பார்த்துக் கிழவி பிரலாபித்துக் கொள்ள இப்படி எல்லோரும் அங்கலாய்த்து நிற்கும்போது அங்கேதெரிவது ஒரு சந்தடி நிறைந்த கறிக்கடை, தங்கமலர் விழியை உருட்டி, கிழவியையும் பொன்னுத்துரையையும் பாhக்கிறாள். செத்த கண்கள்.

;எடிய குமரி, எல்லாம் உன்னாலதானடி வந்தது. அது பாவம், சின்ன வயதில தேப்பனையும் தாயையும் திண்டிட்டுத் தேடுவாரத்து நாயா அலையுது… என்ர ராசா நீ அழாதபடி… டியே, உன்ர கொப்பனும் இதின்ர தாயும் ஒரே வயித்தில பிறந்து வந்தவை. செத்தவன் உன்ர மாமியோட போட்ட சாணக்கூறையையும் உன்ர கொப்பன் கைகழுவி வாக்குத்தவறிப் போட்டான். காரியமில்லை. அதுதான் போகட்டுக்கும். இது வலது குறைஞ்சதெண்ட இளக்காரத்தில கைவிட்டியள். சரி, அதுவும் வேண்டாம். நீ இதை உன்ர ரத்தமெண்டு எப்பாவது மதிச்சியேடி? புதுப்பணம் வந்துபுடிபட்ட திமிரிலை, நீ என்னும் ஊரவனோட… எங்கேயோ கிடந்த காவாலிக்கு மவுசுகுடுக்கிறாய், உன்ர ரத்தத்தை நாயாக்கூட மதிக்கேல, உங்களைக் கடவுள்தான்ரி எக்கணம் நீதி கேப்பார்…’

கிழவிக்கு இன்னும் ஆவேசம் அடங்கவில்லை. மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்குவதால் தன் ஆத்திரம் தீரப்பேசவும் முடியவில்லை.

தங்கமலர் ஒன்றும் பேசாமல் ஊமையாயிருக்கிறாள். அவள் நெஞ்சில் சூல்கொண்டு இருப்பது ஒரு மௌன சபை. ஆனால் பாலசிங்கத்தால் அப்படியிருக்க முடியவில்லை.

‘ணேய் கிழவி, என்ன நாயாட்டம் குலைக்கிறாய்?’

‘டேய் புளுக்கப் பயலே கீழ்சாதி வடுவா. உனக்கு உனக்கு அடிப்பன்ரா பழம் விளக்கமாத்தால. ஆரைப்பாத்தடா நாயெண்டுறாய்? ஒரு சொட்டுப் பச்சைத் தண்ணிக்கும், இந்தவரை காலமும் ஆரிட்டயும் பின் செண்டறியன், நீதான் விசர் நாயாட்டம் கண்ட நிண்ட டவுன்காறியளோட ஓடி ஓடித் திரிஞ்சு குசுகுசுக்கிறனி, காவாலி, வப்பி…’

‘சிக், கிழட்டுச் சனியன், இதில் நிண்டு சத்தம் போடாம போடி வெளியால!’

‘மிஸ்டர் பாலசிங்கம்! வாயை மூடும். கொஞ்சமெண்டாலும் மனுத்தன்மை வேணும், அது இப்ப எங்க இருக்கெண்டு தெரிஞ்சுபோச்சு, பாயிற அணில ஒரு கொப்பில இருக்காது. பிளீஸ் கெட் அவுட்’

கழுத்தறுக்கும் கத்தியாக இந்தக் குரல் வருகிறது. மடை, உடைத்த வெள்ளம் கடலுக்குள் சங்கமிக்கும் வேகம் பாலசிங்கத்தின் கர்ச்சனையைச் சிதைத்துக் கிழித்துக் கொண்டு, தங்கமலர் கத்திய வெஞ்சொற்கள், அவனுக்கு ஒரு மரணக் குரலாகக கேட்;டு, அவன் நெஞ்சுப் பொட்டகத்தைக் கொலுப்பிரிக்கின்றன. அவன் இதயம் ஒரு வெடித்த பலூன்.

பாலசிங்கம் நடக்கிறான்.

தங்கமலர் பொன்னுத்துரையை இமைக்குள் வாங்கிக் கனிவோடு பார்க்கிறாள். அவளின் கண்மடல்களில் நெய்யுருகிக் கண்ணீர் வழிந்து கொண்டிருக்கிறது.

‘பெத்தாச்சி, நீ அழாதனையணை, எல்லாத்துக்கும் நான் இருக்கிறன்.!

தங்க மலரின் கனிவான அழைப்பு, கிழவியின் நெஞ்சுக்குள் வெண் மலர்கள் தூவுகின்றது. ‘இனி நான் நிம்மதியாகச் சாவன்’

கிழவி மேலே பார்க்கிறாள். ‘தங்கமலர் நல்லவளெண்டு நான் எப்பவோ சொன்னனான். பெத்தாச்சிதான் மறுத்து நிண்டா. இப்ப ஆர் சொன்ன வாக்குச் சரி வந்தது?’

தன்னுள் பெருமையுற்று, நாணிப் புளகித்த பொன்னுத்துரையின் முகத்தில் இப்போது தெரிவது ஒரு செவ்வரத்தம் பூ.

– 16.02.1964.

– ஈழநாடு சிறுகதைகள் (தொகுதி-1), முதல் பதிப்பு: 2008, பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வட மாகாணம், திருகோணமலை.

– 18.10.2024, அனுப்பியவர்: நவஜோதி ஜோகரட்னம்.

குறிப்பு:: அமரர் அகஸ்தியர் ஈழத்தின் முற்போக்குப் படைப்பாளி. சிறுகதை, குறுநாவல், நாவல் ஆகிய துறைகளில் ஈடுபாடுடையவர். மண்ணில் தெரியுது வானம், எரிமலை என்பன இவரது நாவல்களாகும். மக்களின் பேச்சு வழக்கை நன்கு பயன்படுத்தித் தன் சிறுகதைகளை எழுதுவார். சற்றுக் கடினமான உரைநடை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *