உள்ளம் கொள்ளை போனதே…!




நவீனாவுக்கு கூச்சம் பிடுங்கித்தின்றது. முக்கியமாக பல வருடங்களுக்குப்பின் நகரத்திலிருந்து கிராமத்துக்கு, தங்கள் வீட்டிற்கு வந்திருந்த மாமன் மகன் வருணைப்பார்த்ததும் வெட்கம் தன்னை முழுவதுமாக ஆட்கொண்டு, கூச்சத்தோடு கைகோர்த்து, நாணமும் கூட்டணி சேர ஒரு வித மயக்கம் தன்னை ஆட்கொள்ள, கூண்டில் அடைபட்ட கிளியாக அவளது மனம் விடுபடமுடியாமல் சிக்கித்தவித்தது.

“ஏய்… ஏய்… நவீ…… உன்னைத்தான்….” கையைப்பிடித்து தாய் உலுக்கிய போது, சுய நினைவு வந்தவளாய் திண்ணையில் போடப்பட்டிருந்த பிரம்பு சேரில் அமர்ந்திருந்தவள், தலை குனிந்தவாறு எழுந்து வீட்டிற்குள் கால் கொலுசுகள் சத்தமிட ஓடிய படி தனது அறைக்கதவை மூடி கட்டிலில் குப்புற படுத்துக்கொண்டாள்.
உடல் ஒரு வித நடுக்கத்தில் ஆட்பட்டிருப்பதை நிறுத்த இயலவில்லை. உதடுகள் வறண்டு போயிருந்தன. எச்சிலை நாக்கில் எடுத்து உதடுகளை நனைத்தாள். தலையில் சூடிய மல்லிகையின் நறுமணம் உடல் மயக்கத்தையும், வருணின் நேர் கொண்ட பார்வை உள்ளத்தின் மயக்கத்தையும் தர, உடலும், உள்ளமும் அறிவுக்கு கட்டுப்பட மறுத்தன. உட்காரவும் முடியாமல், படுக்கவும் முடியாமல் தவித்தாள்.
இவ்வளவுக்கும் நவீனாவின் தாய் சுந்தரி தான் காரணம். சிறு வயதிலிருந்தே ‘மாமன் மகன் தான் உன்னை கல்யாணம் செய்து கொள்ளப்போகிறவன்’ என அடிக்கடி கூறி ஆசை விதையை வெகுளிப்பெண்ணான நவீனாவின் மனதில் விதைத்ததில், அவ்வாசை பல கிளைகளாக பிரிந்து பெரிய விருட்சமாக வளர்ந்திருந்தது.
“நவீனா….”
“ஏ… ஏம்மா….?” படுக்கையை விட்டு எழாமல் கேட்டாள்.
“இங்க வாடி. இந்த பஜ்ஜிய வருணுக்கு கொண்டு போய் கொடு….”
“நீ… நீயே கொண்டு போய் கொடு. எ.. என்னால முடியாது…”
“கட்டிக்கப்போறவனோட பேசுடி. அவன் பேசிட்டு போகத்தான் வெளிநாட்ல இருந்து வந்திருக்கான். அத்தை பொண்ணு ஊமைன்னு நெனைச்சுட்டு வேற பொண்ணப்பார்த்து கட்டிக்கப்போறான். காலங்கலிகாலம். என்ற பொறந்தவனுக்கு ஒரே பையன். நல்லா சம்பாதிக்கிறான். பொண்ணுங்கள ஏறெடுத்துப்பார்க்காம ரொம்ப ஒழுக்கமா வேற இருக்கான்னு சொல்லறாங்க. உலகத்துல வேற எங்க தேடுனாலும் அவன மாதர பையன் கெடைக்கமாட்டான்….” என கூறியபோது ‘கைக்கு வந்தது வாய்க்கு வராமல் போயிருமோ…? தேடி வந்ததை தெருவில் விடலாமா….?’ என பயம் மனதைக்கவ்வ, பஜ்ஜியை எடுத்துச்சென்று வருணிடம் கொடுத்தாள்.
தட்டை எழுந்து கைநீட்டி வாங்கிக்கொண்டவன், “உன்னோடபேரு…?” எனக்கேட்டவனை முறைத்துப்பார்த்தாள்.
“என்னோட பேரக்கூட அமெரிக்கா போனதுனால மறந்துட்டியா..? இல்லே வருசம் ஒருவாட்டி எங்கப்பம்மா பேர மாத்தி எனக்கு வெச்சிடுவாங்கன்னு நெனைச்சியா…? இல்லே வேற எவ பேரையாச்சும் ஞாபகம் வெச்சிட்டு என்னோட பேரையே மறந்துட்டியா….? நவீ… நவீ…ன்னு ஒரு நாளைக்கு ஆயிரம் தடவ சின்ன வயசுல இங்க வந்துட்டு போறப்பெல்லாம் கூப்பிட்ட பேரு மறந்து போச்சா….?” கேட்டவள் ‘ஓ….’ வென அழுது விட்டாள்.
“ஏய்… அசடு… எதுக்காக தேம்பி, தேம்பி அழறே….? என்ன பேசறதுன்னு தெரியல. நீ சின்ன வயசு என்னோட பப்பிக்குட்டி நவியா இல்ல. பெருசா நெடு நெடுன்னு வளர்ந்திருக்கே. ஜடையெல்லாம் போட்டு, குஞ்சம் வெச்சு கட்டியிருக்கே. காலேஜ்ல வேற போயி படிச்சிருக்கே. சின்ன வயசுல ஒடிப்புடிச்சு விளையாடின மாதிரி இல்லையே….? உன்னப்பார்த்ததும் எனக்கே உதறல் வந்துடுச்சு. நான் கட்டுப்படுத்திட்டேன். நீ ஓடிட்டே…. இந்த வயசுல அது வரனம். புடிச்சவங்கள ரொம்ப நாளைக்கப்புறம் பார்த்தா அப்படித்தான் வரும்….”
உடனே மீண்டும் வெட்கம் வந்தவளாய் “அப்ப மாதிரியே இப்பவும் என்னை உனக்கு புடிச்சிருக்கா….?” பிதற்றுவது போல வார்த்தை சிதற கிரீச் குரலில் வெள்ளந்தியாகக்கேட்டாள்.
எழுந்து அவளருகில் வந்து அவளது கண்களையே உற்றுப்பார்த்தவன், திடீரென நவீனாவை காதலுடன் இறுகக்கட்டியணைத்தான். இதை எதிர்பாராதவள் அவனிடமிருந்து, திமிறி, விலகி மீண்டும் வெட்கத்திடம் தன்னை இழந்தவளாய் உடல் நடுங்க வீட்டினுள்ளே ஓடிச்சென்றவள், சமையலறையிலிருந்த தன் தாயை தன் உடல் நடுக்கம் போக இறுக்கமாகக்கட்டிப்பிடித்துக்கொண்டாள்.
“ச்சீ…. என்னடி பண்ணறே….? புதுப்பழக்கமா இருக்கு…? ரொம்ப இறுக்காதே… இடுப்பு எலும்பு ஒடைஞ்சிடப்போகுது… வருண் மேல எவ்வளவு ஆசைய நீ வெச்சிருக்கறேன்னு எனக்கு புரியுது….”
“புதுப்பழக்கம் என்கிட்டில்ல. அமெரிக்காவுல வாழற உன்னோட அண்ணம்புள்ளகிட்டத்தான் இருக்கு. அங்க பொது எடத்துல ஆம்பளையும், பொம்பளையும் கட்டிப்புடிச்சுக்கிறத பார்த்து இவனும் பழகிட்டாம் போலிருக்கு. கூட வேலை பார்க்கிற பொண்ணுங்களை இப்படித்தான் கட்டிப்பிடிச்சிருப்பானோன்னு நெனைச்சா பயமா இருக்குது….”
“உன்னக்கட்டிப்புடிச்சானா….?”
“ம்….”
“கட்டிக்கப்போறவன் தானே… கட்டிப்புடிச்சா என்ன தப்பு…?”
“அதுக்காக…. அப்பா பார்த்திருந்தா என்ன நினைப்பார்? பொண்டாட்டியாகப்போறவளா இருந்தாலும் பொது வெளிலையா….? இன்னும் என்ற கழுத்துல தாலியே கட்டலையே….? பொண்டாட்டியா ஆகலையே...? எனக்கு புடிக்கலே…”
“ஓ…ஓ…அப்புறம் என்னத்துக்கு என்ன வந்து குறுக்கு எலும்பு ஒடையற மாதர இறுக்கமா கட்டிப்புடிச்சே…? என்னக்கட்டிப்பிடிக்கிறப்ப அவனை மனசுல நெனைச்சுதானே புடிச்சே….?”
“ச்சீ…. போம்மா. நீயும் என்னோட வயச கடந்து வந்திருக்கே…. நல்லாவே எல்லாமே புரியுது. மாமாவ வரச்சொல்லி உடனே எங்களுக்கு கல்யாணத்த பண்ணி வெச்சிடு. பஞ்சுல நெருப்பு பத்திகிட்ட மாதிரி என்னோட நெஞ்சுல அவன் பார்வை நெருப்பு வந்து பத்திடுச்சு…. அவனோட நானும் வெளிநாட்டுக்கு பறந்திடறேன். நல்லா வித விதமா சமைச்சுப்போட்டு அசத்திடறேன்… அவன என்னோட முந்தானைல முடிஞ்சு வெச்சுக்கப்போறேன்….”
நவீனா பேசுவதை வெளியில் அமர்ந்திருந்து கேட்ட வருண் மகிழ்ந்தான். வருண் சென்ற பிறகு மனம் அவனருகில் எப்போதும் இருக்க வேண்டும் என ஏக்கம் கொண்டது. ‘இதைத்தான் காதல் என்கிறார்களோ….?’ புதிரான விசயம் புரிந்தது. அரிதான காதல் கதிரவன் உதயமாவது போல் உள்ளத்தில் ஒளியை பிரகாசிக்கச்செய்தது. உலகமே வேறு விதமாகத்தெரிந்தது. அனைவரையுமே, அனைத்தையுமே நேசிக்கத்தோன்றியது.
‘பல நூறு வருடங்கள் உடலோடு வாழ உயிர் வேண்டும்’ என இறைவனை வேண்டிக்கொண்டாள். பதட்டம் நீங்கி பட்டறிவு எட்டிப்பார்த்தது. கட்டுத்தறியில் கட்டுண்டு கிடக்காமல் கட்டுப்படுத்த முடியாத பறவையைப்போல் அவனுடன் பறக்கத்தோன்றியது.
‘ஆண், பெண் பிறப்பு அவசியம்’ என நினைத்தாள். ஆடைகள், அணிகலன்கள், பணம், படிப்பு, சொத்து, கண்ணில் காணும் காட்சிகள் அனைத்துமே ஒன்றுமில்லாத சூன்யமாகத்தெரிந்தன. உடலோடு வாழ்வது கூடத்தெரியவில்லை. உணர்வுகளுக்கும் இடமில்லை. உள்ளம் மட்டுமே தெரிந்தது. அதுவும் வருணிடம் இருப்பது பாதுகாப்பானதாகப்பட்டது. அதே போல் தன் வசமுள்ள, தான் அவனிடமிருந்து திருடிய உள்ளத்தையும் பொறுப்புடன் பாதுகாத்தாள்.
‘திருமணமாகாமல், அவனுக்கு நாம் முழுமையாக சொந்தமாகாமல் அவனைப்பற்றி இவ்வளவு உரிமையை எடுத்துக்கொண்டது சரியா? தன்னை அவனிடம் மனதளவில் முழுமையாக இழந்து நிற்பது சரியா? ஒரு வேளை இந்த திருமணம் நடக்காமல் போனால் வேறு ஒருவரை கணவராக ஏற்று மகிழ்ச்சியாக வாழ முடியுமா? எல்லை மீறி கற்பனை உலகில் சஞ்சரித்து விட்டோமோ…? எதுவானாலும் இந்த மன சுகம் பசுமையாக உயிருள்ளவரை மாறாமல், மனதிலிருந்து அழியாமல் இருக்கப்போகிறது. அது போதும். அவனில்லையென்றால் வேறு யாருமே வேண்டாம். அவனது நினைவே போதும்’ என மனம் நவீனாவை அவனுக்காகவே மாற்றியிருந்தது.
நவீனாவின் தாய் சுந்தரி பல முறை போன் செய்தும் அவளது சகோதரன் எடுத்துப்பேசாதது பதற்றத்தைக்கொடுத்தது. நேரில் சென்று பார்த்து வர யோசித்தாள். கணவன் சண்முகனுக்கு வெளிநாட்டிலுள்ள மைத்துனன் மகனுக்கு பெண் கொடுக்க விருப்பமில்லை. ‘முடிந்த வரை உள்ளூரிலேயோ, பக்கத்து ஊரிலேயோ சம்மந்தம் வந்தால் அடிக்கடி பெண்ணை பார்த்துக்கொள்ள முடியும்’ என நினைத்தார்.
“ஏங்க….”
“சொல்லு சுந்தரி….”
“அது…. வந்து….” கையை பிசைந்தாள்.
“உன்ற பொறந்தவன் நீ கூப்பிட்டதுக்கு பதில் சொல்லலை. அது தானே….?
“ம்….”
“பரவாயில்லை. அவங்க வாழ்க்கை வேற. நம்ம வாழ்க்கை வேற…”
“வாழ்க்கை வேறையா இருந்தாலும் மனசுங்கிறது ஒன்னு தானே….? சின்ன வயசுல இருந்து வருணுக்குத்தான் நவீனான்னு அவ கிட்டையும் ஆசையை வளர்த்து வெச்சிட்டோம்….”
“வெச்சுடாடோம் இல்ல…. நீ ஆசைய வளர்த்தி வெச்சிட்டே… இதுக்குத்தான் நானும் படிச்சுப்படிச்சு சொன்னேன். கல்யாணத்தும்போது பார்த்துக்கலாம்னு. நீ கேட்கல. மொதல்ல உன்ற பொறந்தவன் மாசம் பத்தாயிரம் சம்பாதிச்ச போது சரின்னான். நீ சொன்னதுக்கு தலையாட்டினான். இப்போ வருண் மாசம் பத்து லட்சம் சம்பாதிக்கிறான். ஆனா நாம மொதல்ல இருந்த கண்டிசன்ல தான் இப்பவும் வாழறோம். எப்படி பொருந்தும்? நீயே சொல்லு..”
“அதுக்கில்ல போன வாரம் வருண் வந்துட்டு போனதுக்கப்புறம் நவீன அவனையே நெனைச்சிட்டு இருக்காள்…. அவனும் நம்ம பொண்ணப்புடிச்ச மாதிரி தான் நடந்துட்டான்….”
“ஓ…ஓ… வந்துட்டு சோத்தத்திண்ணமா, அத்தையப்பார்த்தமான்னு சும்மா போகாம இத வேற பண்ணியிருக்கானா….? அவன் டவுன் கேப்மாறி… இந்த வெள்ளச்சோளத்துக்கு ஒன்னுந்தெரியாது. இதுக்குத்தான் அவன் வரும்போது அவளை உங்கொப்பமூட்டுச்சேரி போகச்சொல்லீருன்னு சொன்னேன். மொதல்ல வேற மாப்பிள்ளையப்பார்த்து கண்ணாலத்த பண்ணியிருக்கோணும். மேல படிக்கிட்டும்னு உட்டது தப்பாப்போச்சு. நாளைக்கே புரோக்கர வரச்சொல்லறேன்” என கணவன் உறுதியாகக்கூறியதைக்கேட்டு சுந்தரி கவலை கொண்டதோடு, உள்ளிருந்து ஜன்னல் வழியாக தந்தை பேசியதைக்கேட்டு துக்கம் தொண்டையை அடைக்க தாயின் மடியில் முகம் புதைத்து தேம்பி அழுதாள் நவீனா.
பக்கத்து ஊரில் பெரிய பண்ணையார் மகன் எனக்கூறி போட்டோவை தந்தை நவீனாவிடம் கொடுத்தபோது வாங்கியவள், உடனே தாமதிக்காமல் கிழித்து வெளியே வீசினாள். வீட்டிற்குள்ளிருந்து பல பொருட்களை வெளியே தூக்கி வீசினாள். பின்பு அழுது புரண்டவளை ஓர் இளைஞனின் கை தூக்கிவிட நீட்டியதும் அவனது முகத்தைப்பார்த்து இன்ப அதிர்ச்சியடைந்தாள்.
“இந்தக்காலத்துல ஸ்கூலுக்கு, காலேஜூக்கு, வேலைக்குன்னு பொண்ணுங்களும் போறீங்க. பல பேரோட பழகறீங்க. அப்படி பழக்கம் ஏதாச்சும் இருந்தா அத மனசுல வெச்சுட்டு பெத்தவங்க நாங்க சொல்லறதுக்காக சொந்தக்காரப்பையன கல்யாணம் பண்ணிட்டு ஒத்துமையா வாழாமையோ, கொஞ்ச நாளைக்கு வாழ்ந்துட்டு பிரிஞ்சோ வந்திடக்கூடாதுன்னு தான் வேற மாப்பிள்ளை பார்க்கப்போறதா சொன்னனே தவுத்து வருணை எனக்கு புடிக்காம இல்லே. நாந்தான் உங்கம்மாவோட போன் கால் வந்தா எடுக்க வேண்டாம்னு உன்னோட மாமங்காரன் கிட்ட போன் பண்ணி சொல்லி வெச்சிருந்தேன். வருணை நீ கட்டிக்கனம்னு மனசுல வெச்சிருக்கிற பிடிவாதமான ஆசைய அவங்களும் நேர்ல பாத்துக்கட்டும்னுதான் அவங்களோட காரை வெளிலயே நிறுத்தச்சொல்லிட்டு வந்து மறைவா நிக்கச்சொல்லியிருந்தேன்” என தந்தை கூறியதைக்கேட்டு மகிழ்ந்த நவீனா, தனது கரத்தைப்பற்றிய இளைஞனான வருணை அங்கே நின்றிருக்கும் அனைவரையும் மறந்து காதலோடு கட்டிப்பிடித்துக்கொண்டாள்.