உளவறிய ஆவல்
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: September 27, 2012
பார்வையிட்டோர்: 11,271
உளவுத் துறை ஐ.ஜி. ஆனந்தமோகன் பதற்றமாக உணர்ந்தார். ரிமோட்டில் ஏ.சியின் தாக்கத்தைக் குறைத்துவிட்டு, செல்போனில் பதிவாகியிருந்த குறுஞ் செய்தியை மீண்டும் படித்தார்.
‘ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பு தொடர்பாகத் தேடப்பட்டு வரும் தீவிரவாதி இசாக் அலி, சென்னையில் இருக்கிறான் ரெங்கா.’
ரெங்கா, அவரது இன்ஃபார்மர்களில் ஒருவன்.
நேற்று இரவு நடந்த உளவுத் துறை அதிகாரிகள் கூட்டத்தில் ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பு தொடர்பாகக் கவலைப்பட்டு இருந்தார்கள். உள்துறைச் செயலாளரும் டி.ஜி.பியும் தமிழகத்தில் ஒரு சிறு அசம்பாவிதம்கூட நடக்கக்கூடாது என்கிற முதல்வரின் எதிர்பார்ப்பை, அதிகாரிகளுக்கு எச்சரிக்கையாகச் சொல்லியிருந்தார்கள். உளவுத் துறைக்குப் பொறுப்பு வகிப்பவன் என்கிற முறையில் அடுத்து என்ன செய்யலாம் என்கிற யோசனை முழுமை பெறுவதற்குள் இப்படி ஒரு தகவல்.
ஆனந்தமோகன் லேப்டாப்பை உயிர்ப்பித்தார். விரல்களை அலையவிட்டார்.
இசாக் அலி சார்ந்திருக்கும் தீவிரவாத இயக்கத்தின் பயோடேட்டாவை குறிவைத்துப் பாய்ந்தார். அதேநேரம் மூளையின் இன்னொரு பக்கம், அடுத்த சில நிமிடங்களில் செய்ய வேண்டிய வேலைகளைப் பட்டியலிட்டபடி இருந்தது.
ஆனந்தமோகனுக்குக் காவல் துறையில் இருபதாண்டு கால அனுபவம். போலீஸ் சர்வீஸில் இன்ஸ்பெக்டராகத் தேர்வுபெற்றவருக்கு முதல் உத்தியோகம் வடசென்னை, வண்ணாரப்பேட்டையில். காவல் துறை மீது ஆனந்தமோகனுக்கு நிறைய மரியாதை உண்டு. பார்க்கும் உத்தியோகம் குறித்து கௌரவம் உண்டு. மனதை அலைபாயவிடாமல் பார்த்துக்கொண்டார். உழைப்பு, நேர்மை இது மட்டுமே குறுகிய காலத்தில் உயர் பதவிக்குக் கொண்டுசெல்லும் என்கிற நம்பிக்கைகொண்டவர்.
அனுபவத்தில் அவர் மிகவும் உறுதிகொண்ட விஷயம், உளவறிதல். உளவாளி களை நியமித்து அல்லது உருவாக்கி தனது ஏரியாவின் அசைவுகளை உள்ளங்கையில் வைத்திருக்கும் எந்த ஒரு காவல் துறை அதிகாரியும் பணியில் தோற்க மாட்டான் என்பது அவரின் அசைக்க முடியாத நம்பிக்கை.
”சார்! மணிக்கூண்டு பஸ் ஸ்டாப் பக்கத்துல தள்ளுவண்டியில புரோட்டா வியாபாரம் பண்றேன். பையன் இன்ஜினீயரிங் படிக்கிறான். என் வருமானத்துலதான் குடும்பம் நடக்குது. தினம் நைட் ரெண்டு ரவுடிங்க குடிச்சுட்டு வந்து மாமூல் கேட்டுத் தகராறு பண்றாங்க.”
புகார் வந்த பத்தாவது நிமிடம், இரண்டு ரவுடிகளையும் தூக்கிவந்து ஸ்டேஷனில் வைத்து செமத்தியாகக் கவனித்தார். ‘ இனிமேல் அந்தப் பக்கமே போக மாட்டேன். குடிப்பழக்கம் பழகிவிட்டது. அதை விடவே முடியாது. சம்பாதிக்க உடம்பில் தெம்பில்லை’ என்று கதறினார்கள்.
”டெய்லி காலைல என் வீட்டுக்கு வா. பணம் தர்றேன். குடிங்க.”
”ஐயா” காலில் விழுந்தார்கள்.
”அதற்கு எனக்குக் கைம்மாறு வேணுமே.”
”என்ன செய்யணும்… சொல்லுங்க சார்?”
”ஏரியாவுல உள்ள ரவுடிங்க ஒவ்வொருத்தனும் என்ன பண்றான்னு எனக்குத் தெரியணும்.”
”சரி சார்” சந்தோஷமாக நகர்ந்தார்கள்.
அன்றைய தினம் இரவு தள்ளு வண்டிக்காரன், தன் இன்ஜினீயரிங் மகனோடு குவார்ட்டர்சுக்கு வந்தான்.
”ரொம்ப நன்றி சார்… இன்னிக்கு அவங்க வரல.”
”இனிமே வர மாட்டாங்க.”
”உங்களுக்குக் கடன்பட்டிருக்கோம்.”
”உன் பேர் என்ன?”
”கண்ணன்.”
”எந்த காலேஜ்ல படிக்கிறே?”
புகழ்பெற்ற தனியார் கல்லூரி ஒன்றின் பெயரைச் சொன்னான் மகன்.
”வெரிகுட்” ஆனந்தமோகன், தள்ளு வண்டிக்கார னைப் பார்த்தார். எட்டு மாநிலங்களில் பணியாற்றி இருபதாண்டுகளை நகர்த்திவிட்டு, தமிழ்நாட்டில் உளவுத் துறை ஐ.ஜியாகப் பதவியேற்றவுடன் அவர் அலுவலகத்துக்கு வரவழைத்த இருபது இன்ஃபார் மர்களில் தள்ளுவண்டிக்காரனும் ஒருவன். இதுதான் உளவு வட்டம். வளையம்.
ஆனந்தமோகன் மணி பார்த்தார்.
பத்து.
மாநகரம் இயங்கத் தொடங்கியாயிற்று. பேருந்து களில், ரயில் நிலையங்களில், சாலைகளில், கோயில் களில் கூட்டம் பிதுங்கும். ஒரு கோடி மனிதர்களில் இசாக் அலி எங்கே இருக்கிறான். பதுங்குவதற்கு வந்திருக்கிறானா? இல்லை பாய்வதற்கா?
லேப்டாப்பிலிருந்து சில நம்பர்களை எடுத்தார். பிரைவேட் லைனில் அந்த நம்பர்களைப் போட்டார். தடதடவென உத்தரவுகளைப் பிறப்பித்தார். மாநகர போலீஸ் அதிகாரிகளை உசுப்பிவிட்டார். இசாக் அலியின் உத்தேச கம்ப்யூட்டர் வரைபடத்தின் நகல்கள் எட்டுத் திக்கும் பறந்தன. கண்ணுக்குத் தெரியாத காவல் துறையின் நுட்பமான ஒரு வலைப்பின்னல் சென்னை மாநகரத்தை இறுக்கத் தொடங்கியது.
இசாக் அலி பிடிபடுவானா?
பிடிபடுவான்.
ஆனந்தமோகனுக்கு நம்பிக்கை இருந்தது.
அவரது திறமை மீது அதீத நம்பிக்கை உண்டு. பல சந்தர்ப்பங்களில் அதை அவர் அரசுக்கு, அவரது தலைமைக்கு உணர்த்தியிருக்கிறார். அலுவல் சாராத பல நிகழ்வுகளில் தனது திறமையை நிரூபித்திருக்கிறார். உளவுத் துறை அதிகாரியின் கட்டாயம் அது.
‘மோகன். இது மிகவும் ரகசியம். சிறிது நேரத்தில் உங்களுக்கு ஒரு புகைப்படம் வரும். சென்னையின் மிக செல்வாக்குள்ள குடும்பத்துப் பெண். புகழ் பெற்ற இன்ஜினீயரிங் கல்லூரியில் இரண்டாமாண்டுதொழில் நுட்பம் படிக்கிறாள். காலை கல்லூரிக்குக் கிளம்பியவள், கல்லூரி பேருந்தைத் தவிர்த்திருக்கிறாள். இப்போது அவளைக் காணவில்லை. செல்போனை சுவிட்ச்ஆஃப் செய்திருக்கிறாள். இன்னும் இரண்டு மணி நேரத்தில் அவள் வேண்டும். உங்களால் மட்டுமே இது முடியும். பெண்ணின் அப்பா, முதல்வருக்கு நெருக்கமானவர். ஜாக்கிரதையாக விஷயத்தைக் கையாளுங்கள்.’
சென்னை காவல் துறையில் உளவுத் துறை இன்ஸ்பெக்டராக இருந்த ஓர் அதிகாலை நேரத்தில் சீனியர் அமைச்சர் ஒருவரிடமிருந்து அவருக்கு வந்த உத்தரவு இது.
அடுத்த விநாடி ஆனந்தமோகனின் மூளையில் தீப்பற்றிக்கொண்டது. புகைப்படம் கைக்கு வந்தது. பெண் அழகாக இருந்தாள். அவள் படிக்கும் கல்லூரி, கண்ணன் படிக்கும் அதே தனியார் கல்லூரி.
உடனே செல்போனில் நம்பர் போட்டார்.
”கண்ணன்… நான் மோகன். எனக்கு ஒரு விவரம் வேண்டும். விசாரித்துச் சொல்.”
சில நிமிடங்களில் கண்ணன் கொடுத்த விவரம் அவரை விசிலடிக்கவைத்தது. அடுத்த நிமிடம் பைக்கை எடுத்தார்.
வழக்கமாக அவள் கல்லூரிப் பேருந்து ஏறுமிடத்தை அடைந்தார். தெரு முனையில் காய்கறிக் கடைவைத்தி ருக்கும் ஒரு கிழவி, அந்தப் பெண் ஒருவனோடு பைக்கில் ஏறிய விஷயத்தைச் சொன்னது. பைக் போன திசை, கோயம்பேடு.
பிரபாவதி… கூடப் படிக்கும் பையனோடு காதல். வீட்டில் கடுமையான எதிர்ப்பு. காதல் அதைவிடக் கடுமையானது.
காலை ஏழு மணிக்குப் புறப்பட்டு, செல்லை அணைத்துவிட்டுக் காதலனோடு எங்கே செல்வாள்?
பேருந்து நிலைய பெட்டிக் கடைகளில், கண்டக்டர்களிடம் பிரபாவதி போட்டோகாட்டினார். பத்து
பேரிடம் போட்டோ காட்டியதில், ஒருவர் வாய் திறந்தார்.
திருப்பதி செல்லும் பேருந்தில் ஒருவனுடன் ஏறினாள். அவருக்குப் புரிந்தது. வேறு வாகனத்தில் சென்றால் சுலபமாக மடக்கிவிடுவார்கள் என்பதால் பயணிகளோடு பயணிகளாகப் பேருந்தில் திருப்பதி நோக்கி…
திருத்தணி போலீசுக்குத் தகவல் பறந்தது.
பேருந்து, திருத்தணியிலிருந்து திருப்பதி செல்லும் வழியில் மடக்கப்பட்டது. திருத்தணி இன்ஸ்பெக்டர், ஆனந்தமோகனிடம் கதறிய காதலர்களை ஒப்படைத்த போது, அவருக்குக் கொடுக்கப்பட்டு இருந்த இரண்டு மணி நேரத்தில் இருபது நிமிடங்கள் மிச்சமிருந்தன.
இதுபோலப் பல நிகழ்வுகள், அரசியல் அதிரடிகள். அவரது லேப்டாப் வலைப் பதிவுக்குள் ஆயிரம் அரசியல்வாதிகள். சக அதிகாரிகள். இப்போது இசாக் அலி பிடிபடுவானா?
செல்லிடப்பேசியில் உத்தரவுகளைப் பிறப்பித்துக் கொண்டே இருந்தார். போலீஸாரின் செயல்பாடுகளைக் கண்காணித்துக்கொண்டே இருந்தார்.
நேரம் நகர்ந்துகொண்டே இருந்தது.
இரவு ஒன்பது மணிக்கு அவருக்குக் கீழே பணி யாற்றும் மூன்று முக்கிய அதிகாரிகள் உதட்டைப் பிதுக்கினார்கள்.
”முழு பலத்தையும் பிரயோகித்துவிட்டோம். வேறு சில முக்கிய வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கிடைத்தார்கள். இதுவரை இசாக் அலி சிக்கவில்லை. வேட்டை தொடர்கிறது.”
ஆனந்தமோகன் ஏமாற்றமானார். எங்கே பதுங்கி இருக்கிறான்?
சென்னையில்தான் இருக்கிறானா அல்லது, இன்ஃபார்மர் கொடுத்த தகவல்? உறுதியானது. அதில் பிழை இருக்க வாய்ப்பில்லை.
ஆனந்தமோகன் யோசித்தார். தகவல் கொடுத்த உளவாளி ரெங்கா! ரெங்கா?
லேப்டாப்பை உயிர்ப்பித்தார்.
செல்லிடப்பேசியில் இருந்த நம்பரையும். லேப்டாப்பில் இருந்த நம்பரையும் ஒப்பிட்டார். திடுக்கிட்டார். தவறு. இரண்டும் வேறுவேறு. ஒரு சமயம் வேறு நம்பரிலிருந்து குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறானோ?
செல்லிடப்பேசியில் பதிவாகியிருந்த நம்பரைப் போட்டார்.
ஆஃப் செய்யப்பட்டு இருந்தது.
லேப்டாப்பில் இருந்த நம்பரைப் போட்டார்.
வழக்கமாக உளவாளிகளிடம் அவர் பேசுவதில்லை. பேசக் கூடாது. அவர்கள் சங்கடமான சூழ் நிலையில் சிக்கியிருந்தால், மாட்டிக்கொள்ள நேரிடும். மிகவும் அவசியமென்றால், ரகசியமான இடத்தில் சந்திப்பார். பேச வேண்டுமென்பது இப்போது கட்டாயம்.
”ரெங்கா… மோகன். தகவல் உண்மை தானே?”
மறுமுனை சிறிது யோசித்தது. ” நான் உங்களுக்குத் தகவல் ஏதும் தரவில்லையே சார்.”
ஆனந்தமோகன் தலையில் குத்திக்கொண்டார். பரபரவென மனதுக்குள் எண்ணங்கள் ஓடின. என்ன நடக்கிறது?
செல்போனில் காலையில் எடுக்காமல் விட்டுப் போன நம்பர்களைப் பார்த்தார்.
வீட்டு வாட்ச்மேன் நம்பர் இருந்தது.
மிகமிக அவசியம் என்றால் ஒழியக் கூப்பிடக் கூடாது என்கிற நிபந்தனையோடு கொடுத்திருந்தார்.
நம்பர் போட்டார்.
”ஐயா… காலைல பாப்பா ரொம்ப சீக்கிரமே காலேஜுக்குக் கிளம்பிடுச்சு. காலேஜ் பஸ்சுல போகல. நம்பர் போட்டேன் எடுக்கல. பாப்பா செல்போன் ஆஃப் பண்ணியே இருக்கு… அதான் உங்களுக்கு…”
ஆனந்தமோகனுக்குப் பரபரவென்றிருந்தது.
மகள் ரேணுகாதேவி. அழகானவள். இரண்டாமாண்டு பொறியியல். அம்மா இல்லாததால் கூடுதல் செல்லம். அதே நேரம் கடுமையான கட்டுப்பாடு. அவளுக்கென்று அழகான உலகம் ஒன்றை அவர் நிர்மாணித்துத் தரத் திட்டமிட்டு இருந்தார். மாப்பிள்ளைகூடத் தயார். அவள் இப்போது எங்கே?
செல்போனில் நம்பர் போட முயன்ற விநாடி, குறுஞ்செய்தி வந்தமைக்கான சத்தம் வந்தது.
செய்தி பார்த்தார்.
‘அப்பா, காலையில் திருப்பதியில் திருமணம்செய்து கொண்டோம். இசாக் அலி பிடிபட்டானா?’
நம்பர் பார்த்தார்.
காலையிலிருந்து அவரைப் பரபரக்கவைத்த அதே நம்பர்!
– 27th ஆகஸ்ட் 2008