உலகம் சமநிலை பெற வேண்டும்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 5, 2025
பார்வையிட்டோர்: 272 
 
 

(அமெரிக்கப் பழங்குடிக் கதை)

க்ளுஸ்கபி சிறுவனாக இருந்தபோது சில விலங்குகளை வேட்டையாடுவதற்காகக் காட்டுக்குள் சென்றான். ஆனால், மனித வாடையை மோப்பம் பிடித்த பல விலங்குகள் காட்டுக்குள் மறைந்து கொண்டன. சில விலங்குகள் அவனது அம்பின் இலக்கிலிருந்து தப்பின. ஒரு சிறு பிராணியைக் கூட வேட்டையாட இயலவில்லை. ஏமாற்றத்தோடு வீடு திரும்பினான்.

“வேட்டையாடுவது மிகவும் கடினம்!” தனது பாட்டியிடம் சொன்ன அவன், வேட்டையாடுவதை எளிமையாக்கும் மந்திரப் பை ஒன்றை வேண்டுகிற ப்ரார்த்தனைப் பாடலைப் பாடத் தொடங்கினான்.

அதைக் கேட்ட பாட்டி அவனுக்கு மான் ரோமத்தால் ஆன மந்திரப் பையைப் பின்னிக் கொடுத்தாள். அவனுக்கு அது திருப்தியளிக்கவில்லை. பாட்டி மூஸ் என்னும் விலங்கின் ரோமத்தாலான இன்னொரு மந்திரப் பையைப் பின்னிக் கொடுத்தாள். அவன் அதையும் ஏற்கவில்லை. வேண்டுதல் பாடலை தொடர்ந்து பாடிக்கொண்டிருந்தான்.

இறுதியாக பாட்டி தன்னுடைய நீண்ட தலை முடியிலிருந்து ஒரு பையைச் செய்து கொடுத்தாள். அந்தப் பை நீளமாக இருந்தது. இழுக்க இழுக்க மென்மேலும் நீளமாகிக்கொண்டும் வந்தது. எனவே, அதில் திருப்தி அடைந்தான்.

மறு நாள் அந்த மந்திரப் பையோடு விலங்குகளை வேட்டையாடுவதற்காகக் கானகத்திற்குச் சென்றான்.

“விலங்குகளே! நான் சொல்வதை கவனமாகக் கேளுங்கள்! இந்தக் காடு அழியப்போகிறது!” உரக்கக் கூவினான்.

அதைக் கேட்ட விலங்குகள் அச்சம் கொண்டன.

“ஆனால், நீங்கள் அஞ்ச வேண்டாம். நான் உங்களைக் காப்பாற்றுவதற்காக வந்திருக்கிறேன்!”

விலங்குகள் ஆறுதல் அடைந்து, தமது மறைவிடங்களிலிருந்து தலை நீட்டி, அவன் சொல்வதைச் செவிமடுத்தன.

“இதோ இந்த மந்திரப் பைக்குள் நீங்கள் அனைவரும் வந்துவிடுங்கள். நான் உங்களை பத்திரமாக இங்கிருந்து கொண்டு செல்வேன். எனவே, காடு அழியும்போது நீங்கள் தப்பித்துவிடலாம்.”

உடும்பு, கீரி, பாம்பு, அணில், அரணை, மரப்பல்லி முதலான பிராணிகளும், எறும்புதின்னி, ரக்கூன், காட்டுப்பன்றி, முயல், மான், சிங்கம், புலி, கரடி, நரி, யானை முதலான விலங்குகளும் ஒன்றன் பின் ஒன்றாக வந்து மந்திரப் பைக்குள் அடைந்துகொண்டன. அவன் பையின் வாயைக் கட்டிக்கொண்டு அதி உற்சாகமாக வீடு திரும்பினான்.

“காட்டில் உள்ள அனைத்து பிராணிகள், விலங்குகளையும் பிடித்து வந்துவிட்டேன். இனிமேல் வேட்டையாட வேண்டியதே இல்லை. நமக்குத் தேவைப்படும்போது பையைத் திறந்து ஒவ்வொரு பிராணிகள், விலங்குகளை எடுத்து சமைத்துத் தின்னலாம்!” பாட்டியிடம் களிப்போடு சொன்னான்.

அதைக் கேட்டு அவள் அதிர்ச்சியுற்றாள்.

“அப்படிச் செய்வது கூடாது. கானுயிரிகள் அனைத்தையும் நாம் கொன்று தின்றுவிட்டால் பிறகு பூமியில் விலங்குகளே இல்லாமல் போய்விடும். நாம் தேவைப்படும்போதுதான் – வேண்டிய அளவுக்கு மட்டும் – பிராணிகளையோ, விலங்குகளையோ வேட்டையாடி உண்ண வேண்டும். அப்போது மற்றவை உயிர் பிழைத்திருக்கும்.

“மேலும், வேட்டையாடும்போது அனைத்து விலங்குகளும், பறவைகளும் நம்மிடம் சிக்காது. பெரும்பாலான விலங்குகளும் பறவைகளும் நமது இலக்கு, பொறி, வலைகளிலிருந்து தப்பிக்கும். விலங்குகளின் வாழ்வுக்கான போராட்டம் காரணமாக, அவற்றின் அறிவு கூடுவதோடு, நம்மிடமிருந்து தப்பிக்கிற அந்த உயிரினங்கள் மூலமாக அவற்றின் வம்சங்கள் தொடர்ந்து இந்த பூமியில் நிலைக்கவும் செய்யும். அவ்வாறின்றி அனைத்து கானுயிரிகளையும் அழித்துவிட்டால் பிறகு காடும் அழிந்துவிடும். நமக்கும் உண்பதற்கு எதுவும் கிடைக்காமல் போய்விடும். ஏனென்றால் விலங்குகள், தாவரங்கள், மற்ற பிராணிகள் அனைத்தும் ஒன்றை ஒன்று சார்ந்துதான் பல்லுயிர் வாழ்க்கைச் சுழற்சி நடந்துகொண்டிருக்கிறது. .அதில் எதையேனும் நாம் துண்டித்தால் அந்த சுழற்சி பாதிக்கப்பட்டு, இந்த பூமியில் மனிதர்கள், விலங்குகள், பறவைகள், தாவரங்கள் என எந்த உயிரினமும் இல்லாமல் போய்விடும்!” என்றாள்.

க்ளுஸ்கபி தனது தவறை உணர்ந்துகொண்டான்.

அவன் மந்திரப் பையை மீண்டும் காட்டுக்குள் கொண்டு சென்று, அதன் வாய்க் கட்டை அவிழ்த்து விலங்குகளை விடுவித்தான்.

“காட்டுக்கு வந்த ஆபத்து இப்போது நீங்கிவிட்டது. நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்கள். இனி உங்கள் இடங்களுக்குச் செல்லுங்கள்!” என்றான்.

அனைத்து விலங்குகளும், பிராணிகளும் அவனுக்கு நன்றி கூறி, தத்தமது வாழ்விடங்களுக்குச் சென்றன.

க்ளுஸ்கபி தனது பாட்டியின் பேச்சைக் கேட்டதால்தான் இப்போதும் பூமியில் எங்கும் பலவிதமான விலங்குகளும் இருப்பதை நாம் காண முடிகிறது. இந்த உலகமும் உயிர்ச் சமநிலையோடு இருக்கிறது.

ஷாராஜ் இலக்கியவாதி மற்றும் நவீன தாந்த்ரீக ஓவியர். 5 சிறுகதைத் தொகுப்புகள், 4 நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு மொழிபெயர்ப்பு, ஒரு சிறார் கதைத் தொகுப்பு ஆகியவை வெளியாகியுள்ளன. சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும் பெற்றவர். நாவல் போட்டிகளிலும், ஓவியப் போட்டிகளிலும் ஓரிரு பரிசுகள் / விருதுகள் / பதக்கங்கள் பெற்றுள்ளார். அச்சில் வெளியான நூல்கள்: வடக்கந்தறயில் அம்மாவின் பரம்பரை வீடு – சிறுகதைகள் (2004). வேலந்தாவளம்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *