உலகமெல்லாம் வியாபாரிகள்





(1978ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 1-2 | அத்தியாயம் 3-4 | அத்தியாயம் 5-6
அத்தியாயம்-3

மாலை ஏழு மணியாகிக் கொண்டிருந்தது. சித்திரைமாத இளம் குளிர் காற்றில் ரியுலிப்ஸ் பூக்கள் தலை சாய்த்து ஆடிக் கொண்டிருந்தன. இன்னும் நல்ல வெய்யில் அடித்துக் கொண்டிருந்தது, குளிர் காற்றுடன்.
அம்மா தொண தொணத்துக் கொண்டே இருக்கிறா. நான் ஒரு தரம் போன் பண்ணினால் என்ன? நியூயோர்க் நம்பரை அவள் விரல்கள் சுற்றின.
‘ஹலோ’ சகுந்தலாவின் குரல் மென்மையுடன் அழைத்தது. என்ன செய்கிறார், என் அருமைக் கணவர். நியூயோர்க்கில் இப்போது என்ன நேரம். அதிகாலையாக இருக்கும். அதற் கென்ன கட்டிலுக்குப் பக்கத்தில் போன் இருக்கிறது. எடுத்து விட்டு இன்னொரு தரம் நித்திரை கொள்ளட்டும். அவள் மறு படியும் ‘ஹலோ’ என்றாள். அடுத்த பக்கத்தில் ஹலோ கேட்காமல் ஏதோ கலகலப்பும் கேட்டது.
என்ன நடக்கிறது இந்த அதிகாலையில் என் வீட்டில்? என் படுக்கையறையில்? சிலவேளை தவறான நம்பரோ? நிச்சய மாக இல்லை! சகுந்தலாவுக்குத் தெரியும் தவறான நம்பர் இல்லையென்று. ஹலோ கேட்டது அடுத்த முனையிலிருந்து. ஒரு பெண்ணிடமிருந்து.
எலக்ஷன் விடயமாக நிருபர் கோஷ்டியொன்று லண்டனிலி ருந்து ஸ்கொட்லண்டுக்குப் போகிறது. சில்வியா பேப்பர் நிரு பர். அவளும் போகிறாள். போகமுதல் தாய் தகப்பனைப் பார்க்கவேண்டும். காலையில் எழும்பி றிச்மண்டுக்குப் போய் விட்டாள் பெற்றோர் வீட்டுக்கு. அடுத்த அறையில சலீமும் சிதம்பரநாதனும் எதையோ பெரிய சத்தம் போட்டுத் தர்க்கப் பட்டுக்கொண்டிருந்தது அரை குறை நித்திரையில் கேட்டது கார்த்திக்கு. கொஞ்சம் கொஞ்சம் கேட்டது என்ன சண்டை பிடிக்கிறார்கள் என்று.
இலங்கையிலிருந்து வரப்போகும் தமிழ்ப் பிரமுகரின் வரவேற்பைப் பகிஸ்கரிக்க வேண்டுமென்கிறான் சிதம்பரநாதன். இவர்களை நம்பி எங்களுக்கு என்ன நடந்துவிட்டது எங்கள் இனத்திற்கு. இவர்களின் தலைமையைத் தூக்கியெறிய வேண்டும். அவர்களுக்கு எங்கள் எதிர்ப்பைக் காட்டவேண்டும் என்று வாதம் செய்கிறான் சிதம்பரநாதன்.
ஒவ்வொருவரிலும் தவறு கண்டு ஒவ்வொருவரையும் பிரித்து வைத்துத்தான் தமிழர்களுக்கு ஒன்றும் கிடைக்காமல் இருக் கிறது. தமிழரில் எத்தனை பிரிவு. யாழ்ப்பாணத்தான், தீவான், மட்டக்களப்பான், வன்னிநாட்டான், மன்னார்த் தமிழன், தமிழ்சாதிக்குள் ஆயிரம் சாதி. இதெல்லாம் உடைய வேண்டும். எதிரிகளின் உள்ளே புகுந்து அவர்களைத் திருத்த முடியுமென்றால் திருத்துவோம். அவர்களுடன் சேர்ந்திருப்ப வர்களுக்கு, நம்புவர்களுக்குச் சொல்லுவம் எது நல்வழி, எது நம்வழி என்று. அதைவிட தனிமனித எதிர்ப்பிலோ, தனி மனித பலாத்காரத்திலோ நம்பிக்கை வைக்கக் கூடாது. இது சலீமின் வாதம்.
இமய மலையை நகர்த்தினாலும் எங்களின் தமிழ்த் தலைவர் களின் நேர்மையற்ற போக்கைத் திருத்த முடியாது. இவ் வளவு காலமும் இவர்களால் எங்களுக்கு இரண்டு இனக்கல வரமும் எண்ணற்ற அப்பாவி மக்களும் இறந்தது போதாதா? சிதம்பரன் கர்ச்சிக்கிறான்.
இரண்டு கலவரம். என்ன கோரமானது என்று அதில் அகப் படாதவர்களுக்குத் தெரியாது.
கார்த்திகேயன் கண்களை மூடிக்கொள்கிறான். அம்பாறைக் கரும்புத் தோட்டம். அதன் நடுவில்…அவன் சிந்தனை படர்கிறது.
எட்டு வயதுக் குழந்தை. பயத்தில் அலறக்கூட முடியாமல் தன் தகப்பன் பாதகர்களால் கண்டதுண்டமாக வெட்டுவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். “தமிழன் இரத்தத்தைப் பார்’ சிங்கள வெறியர்கள் தகப்பனின் மாமனின் இரத்தத் தில் அள்ளியெடுத்த துளிகளைத் தங்கள் மார்புகளில் பூசிக் கொண்டு சிரித்தார்கள். மனிதர்களாகத் தெரியவில்லை அவர்கள் அப்போது. பற்றை மறைவில் தமக்கையின் அணைப்புக்குள் முகம் பதித்து வெடிக்கிறான் கார்த்திகேயன். நிறைமாதக் கர்ப்பவதி கார்த்திகேயனின் தாய். அவளையும் இரண்டு குமர்ப் பிள்ளைகளையும் தங்கையையும் தங்கையின் குழந்தை மூன்றையும் தெரிந்த ஒரு முஸ்லீமின் காரில் மூட்டைபோல் கட்டியனுப்பிவிட்டு கார்த்திகேயனின் தந்தை யும் மைத்துனனும் கார்த்திகேயனும் அவனின் ஒரு தமக்கை யும்-அவளுக்குப் பத்துவயது- கரும்புத் தோட்டத்துக்குள் ளால் ஓடிக்கொண்டிருந்தார்கள்.
வழியில் தெரிகிறது சிங்கள வெறியர்களின் கொடுமை. கொடுமையாகக் கொலைசெய்யப்பட்டு, சின்னாபின்னமாக் கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட தமிழ் இனம் உயிரிழந்து கரும்புத் தோட்டத்தில் சிதறுப்பட்டுக் கிடக்கின்றன. இளம் கன்னிப் பெண்களின் மார்பகங்கள் கேவலமாகச் சிதைக்கப் பட்டு சிங்கள டறீ குறிபோட்டு…… தகப்பன் பார்க்க விட வில்லை இரு குழந்தைகளையும். கொஞ்சதூரம் போவதற் கிடையில் கொலை வெறி பிடித்த சிங்கள வெறியர்கள் கண்டு விட்டார்கள். தப்பியோடும் சில தமிழர்களை விடாப்பிடி யாகத் துரத்தினார்கள். குழந்தைகள் இரண்டும் பற்றைக்குள் ஒழித்துக்கொண்டனர். தகப்பன் கத்தியின் வீச்சால் விழுந்த போது மாமனை உயிருடன் பிடித்துக்கொண்டு கோரச் சிரிப்புச் சிரித்தார்கள் வெறியர்கள். சிறுவன் கார்த்திகேயன் அலற வாய் எடுத்தான். வானத்தில் நிலவு பகல் என எரிந்துகொண்டிருந்தது. தமக்கை பத்துவயது தம்பியை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள்.
மூச்சு விடாதே தம்பி. விம்மல்களுக்கிடையில் சொன்னாள். முருகா, முருகா. தகப்பனும்,மாமனும் அதைவிட வேறொன்றும் சொல்லி அலறவில்லை.
பறத் தமிழா பறத் தமிழா வெறியர்கள் சிரித்தார்கள். கோர மான, கொடூரமான சிரிப்பு. கார்த்தியின் உடம்பு நடுங்கியது கேட்டு. வானமும் பூமியும் சாட்சியாக நீதியும் நேர்மையும் மனிதத் தன்மையும் மௌனமான அந்த இரவில் தன் தகப்ப னின் உடல் அவயம் அவயமாக வெட்டுப்பட……பார்க்காதே தம்பி கண்ணை மூடிக்கொள், பத்மாவின் கண்ணீர் தம்பியின் உச்சம் தலையில் சூடாகப் பட்டது.
பூகம்பம் முடிந்ததுபோல் கொலை செய்துவிட்டு அவர்கள் இன்னும் உயிர் வேட்டையில் ஓடினார்கள் அந்தச் சிங்கள வெறியர்கள். என்ன செய்வது கரும்புத் தோட்டம் பூதாகார மாகத் தெரிந்தது. கொஞ்சம் நகர்ந்தாலும் நிலவின் ஒளியில் தெரியும்.
“அவர்கள் இதே வழியால் திரும்பி வந்தாலும் ஆபத்து. தம்பி வா போவம்” பத்மா அழைத்தாள்.
‘அப்பா அக்கா’ சிறுவன் கார்த்திகேயன் விம்மினான். தமக்கையின் பார்வை பகுதி பகுதியாய் கிடக்கும் தகப்பனின் உடம்பைப் பார்க்க அஞ்சின.
‘அப்பா செத்துப்போய்விட்டார் தம்பி’ குழந்தைகள் இருவ ரும் அழுதார்கள். ”ஏன் அப்பாவைக் கொலை செய்தார்கள்” சிறுவன் கேட்டான். கொடுமையின் கருத்து விளங்காமல் அவன் கேட்டான்.
‘ஏனென்றால் நாங்கள் தமிழர்கள்’ தமக்கை விரக்தியுடன் பதில் சொன்னாள்.
மழையில், குளிரில், இரவில், பயந்து பயந்து இரண்டு நாள் காட்டு வழியாக ஓடி சம்மாந்துறையை அடைந்து அன்புள்ளம் கொண்ட முஸ்லீம்களால் காப்பாற்றப்பட்டு…எவ்வளவு கோரமான நினைவுகள். கார்த்திகேயனின் கண்கள் கலங்கு கின்றன. அடுத்த அறையில் சலீமும் சிதம்பரநாதனும் இன் னும் தர்க்கப்படுவதை விடவில்லை. பெருமூச்சுடன் எழும்பிய கார்த்திகேயன் நண்பர்களின் அறையை எட்டிப்பார்க்கிறான். இருவரும் தங்களின் கட்சியை எடுத்துரைக்கிறார்கள். இந்தத் தலைமையால் என்ன கண்டுவிட்டோம். சிதம்பரன் திருப்பித் திருப்பிக் கேட்கிறான். ‘எதற்கும் மற்ற மாணவர்களையும் கலந்து ஆலோசிப்போம்.” அடக்கமாகச் சொல்கிறான் கார்த்திகேயன்.
இல்லை நான் டயல் பண்ணியது தவறான நம்பர் இல்லை. வீட்டு நம்பர்தான். சகுந்தலா தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள்.
அடுத்த பக்கத்திலிருந்து மூன்றாம் தரம் அந்தப் பெண் ‘ஹலோ’ என்றாள். சகுந்தலா இன்னும் பதிலுக்கு ‘ஹலோ’ என்று சொல்லவில்லை. அடுத்த பக்கத்திலிருந்து “ஹலோ” கேட்டது. இந்தத் தடவை சிவனேசனின் குரல்.
சகுந்தலாவின் உடம்பு நடுங்கியது ஆத்திரத்தில். என் வீடு, என் கணவர், என் படுக்கையறை என்ன செய்கிறாள் இந்த பெண்? என்ன செய்வார்கள்? படுக்கையறையில் பகவத் கீதையா படிப்பார்கள்? என் அருமைக் கணவர் எவ்வளவு காலமாகக் காத்திருந்திருப்பார் இந்தச் சந்தர்ப்பத்துக்கு?
கொஞ்சநேரத்தின் பின் சகுந்தலாவின் கைகள் தன்பாட்டுக்குப் போனை வைக்கின்றன.
‘என்ன சகுந்தலா மறுமொழியில்லையா?’ தாய் பார்வதி கோவா இலைகளுடன் வந்தபடி கேட்கிறாள்.
அம்மா என்ன கேட்கிறா? ஏதோ காதுகள் அடைத்த உணர்ச்சி. அம்மா திரும்பவும் அதே கேள்வி கேட்கிறா.
“இல்லை. வீட்டில் யாரும் இல்லைபோல் இருக்கிறது.” சகுந்தலாவுக்கு நம்பமுடியாமல் இருக்கிறது தன் குரலில் இருக்கும் நிதானம். உணர்ச்சி செத்துவிட்டதா?
தானா சொல்கிறேன்; என் குரலா கேட்கிறது. உடம்பு மரத்து விட்ட பிரமை.இதயம் வெடிக்கிறது. எவ்வளவு அடக்கியும் கண்ணீர் கட்டுக்கடங்காமல் வருகிறது. அம்மா கண்டால் விழல் கேள்விகள் கேட்பாள். விடுவிடுவென்று கதவைத் திறந்துகொண்டு வீதியில் இறங்குகிறாள் சகுந்தலா.
”எங்கே போகிறாய் சகுந்தலா” தாய் அவசர அவசரமாக வந்து கேட்கிறாள் வாசலில் நின்றுகொண்டு.
“மீனாவையும் கீதாவையும் காணவில்லை. போய் பார்த்து விட்டு வருகிறேன்” திரும்பாமல் பதில் சொல்கிறாள் சகுந்தலா. நீர்மாரி பொழிகிறது கண்கள். திரும்பினால் தாய் பதறிவிடுவாள் மகள் ஏன் இப்படி அழுகிறாள் என்று.
“சகுந்தலா, மீனா காரில் போறாள். எந்தப் பார்க்குக்குப் போறாளோ தெரியாது.” தாய் மகளை விளங்காமல் கேட்கிறாள்.
“அதற்கென்ன சும்மா ஒரு நடை போய்விட்டு வருகிறேன். அவர்களைக் கண்டால் அவர்களுடன் வருகிறேன்” சகுந் தலா தாயின் மறுமொழியை எதிர்பார்க்காமல் போகிறாள். குளிர் காற்றடிக்கிறது. திறந்த கதவால் இந்தக் குளிரில் வெறும் சட்டையுடன் ஜீன்சும் போட்டுக்கொண்டு – ஒரு ஓவர் கோட்டும் போடாமல்…… தாய் முணுமுணுக்கிறாள்.
சகுந்தலாவின் இருதயம் படபடவென்று அடித்துக்கொள்கிறது. என்ன துணிவு இவருக்கு. நான் எப்போது வீட்டை விட்டுத் தொலைகிறேன் என்று பார்த்துக்கொண்டிருக்கிறார் போல் இருக்கிறது. உடம்பெல்லாம் ஆத்திரத்தில் கொதித் தது. ஞாயிற்றுக்கிழமையாதலால் விம்பிள்டன் தெருக்கள் வெறிச்சென்று கிடந்தன. உலகமெல்லாம் உறங்கிவிட்டதா இந்த நேரத்தில்? என்ன செய்கிறார்கள் எல்லோரும். ஒரு விதத்தில் நல்லது. அல்லது என்னடா இந்தப் பெண் அழுத கண்களுடன் பைத்தியம்போல் போய்க்கொண்டிருக்கிறாள் என்றல்லவா பார்ப்பார்கள்? தங்களுக்கு விளங்காத மற்றவர் களின் பெயர்தானே பைத்தியங்கள்…
“என்ன கேவலமான வாழ்க்கை? ஒருவருக்கொருவர் உண் மையில்லாத – அன்பில்லாத வாழ்க்கை. உலகத்துக்காக; கல்யாணம் முடித்த குற்றத்திற்காக ஒன்றாய் வாழும் உப்புச் சப்பில்லாத வாழ்க்கை. இப்படியமையாத வாழ்க்கை எப் போது உருவாகும்?”
நீர்மழை பொத்துக்கொண்டு கன்னத்திட்டுக்களில் வழிந் தோடியது. இந்த லட்சணத்தில் மீனாவுக்குப் புத்தி சொல்லட்டுமாம். ‘கண்ணாடி வீட்டிலிருந்துகொண்டு கல் எறியவா?’ விரக்தியான சிரிப்பு அவள் உதடுகளில் நெழிந்து மறைந்தது. உபதேசம் செய்யமுதல் உபதேசம் செய்யப்பட வேண்டுமா?
என்ன சொல்ல மீனாவுக்கு “தங்கச்சி என்னைப் பார் தாய் தகப்பனுக்காக என் அன்பைக் கொன்றுவிட்டு என்னில் உயி ராய் இருந்த கார்த்திகேயனுக்கு துரோகம் செய்துவிட்டுத் தாய் தகப்பன் பார்த்த ‘பெரிய’ இடத்தில் கல்யாணம் செய்து விட்டு சாதாரண ஆள் என்றாலும் பரவாயில்லை, குடிகார னைச் செய்துவிட்டு மௌன வேதனைகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நீயும் அப்படி உன் ஆத்மாவின் ஆசை களைக் கொன்றுவிட்டு சாதி, சமய, கலாச்சார அடிப்படையில் அந்தஸ்துள்ள ஒருவனைச் செய் என்றா சொல்வது?’
யரரும் என்ன பாடும் படட்டும். என்பாட்டைப் பார்க்க வழி யில்லை. எனக்கேன் மற்றவர்கள் பிரச்சனை. மைன்ட் யுவர் ஓன் பிசினஸ் என்று மீனா முகத்திலடித்தாற்போல் சொன்னா லும் ஆச்சரியமில்லை. ஐந்து வருடங்களின் பின் லண்டன் வந்தது போதும், படும் பாடும் போதும். மீனா யாரையும் செய்யட்டும்!
சகுந்தலாவின் கண்களில் நீர் வழிந்துகொண்டே இருந்தது. கால் போன போக்கில் நடந்துகொண்டிருந்தாள்.
குளிரான காற்று முகத்தில் சில் என்று அடித்தது. எந்தத் தெருவில் திரும்பி எந்த ரோட்டால் போய்க்கொண்டிருக்கி றாள் என்றே தெரியவில்லை அவளுக்கு. மீனாவும் குழந்தை யும் இப்போது வீட்டுக்குப் போயிருக்கலாம். அம்மா மீனா வுக்குச் சொல்லியிருக்கலாம் சகுந்தலாவைத் தேடிப்போகச் சொல்லி.
சகுந்தலாவின் மெல்லிய சட்டைக்குள்ளால் குளிர் ஈட்டிபோல் குத்தித் துளைத்தது. வாழ்க்கையே இடியும் மழையும் சேர்ந்து பூகம்பமாகிக் கொண்டிருக்கிறது. இந்த மழை என்ன செய் யும்? கால் வலித்தது நடந்து. எப்படித் திரும்பிப்போவது என்று தெரியவில்லை. மனம்விட்டு அழுதபடியால் மனம் கொஞ்சம் இலேசாக இருந்தது. முகம் வீங்கியிருப்பது போன்ற உணர்ச்சி. மழையில் நனைந்தால் அழுத கண்க ளும் வீங்கிய முகமும் சிலவேளை அம்மாவுக்குத் தெரியாமல் இருக்கும். எல்லாம் மற்றவர்களுக்காக என்று சீவிக்க வேண்டியா ஆகிவிட்டது என் சீவியம்?
கண்ணீர் திரும்பவும் முட்டிக்கொண்டு வந்தது வெறிச் சென்று றோட்டுக்கரையில் கிடந்த பெஞ்சில் உட்கார்ந்தாள்.
தன்னைப் பார்க்க அவளுக்கே எரிச்சலும் பரிதாபமும் வந்தது. யார் இருக்கிறார்கள் சொல்லி அழ? யார் இருக் கிறார்கள்?
”சகுந்தலா” அவள் திடுக்கிட்டுத் திரும்பினாள். அவன் நின்றுகொண்டிருந்தான். அவளின் நீர் தவழும் விழிகளை ஆழமாக ஊடுருவிப் பார்த்தன அவனது கண்கள். வேதனை யின் நிழல் அவனின் விழிகளில் தோன்றி மறைந்தன.
”என்ன செய்கிறீர் இந்த நேரம்? இந்த ரோட்டுக்கரையில்’ அவன் குரலில் வியப்பு மேலிடக் கேட்டான். பரிவு முகத்தில் பரந்து கிடந்தது.
அவளுக்கு அவனின் பரிவு இனம் தெரியாத ஆத்திரத்தை உண்டாக்கியது. யாரும் என்னில் பரிதாபப் படவேண்டாம் என்று கத்தவேண்டும்போல் இருந்தது. பரிதாபம் தேவைப் படுவது கோழைகளுக்கு எனக்கில்லை. ”சகுந்தலா என்ன செய்கிறீர்” கார்த்திகேயன் கேட்டான்.
“செய்கிறேன் சட்டியும் பானையும். வேணுமா விலைக்கு?” அவள் வெடுக்கென்று கத்தினாள். அவன் பக்கத்தில் உட்கார்ந்தான். மழைத்துளிகள் பொட்பொட் என்று தலை யில் விழத் தொடங்கிவிட்டன. பொல்லாத குளிர்காற்று வேறு. அவள் உடம்பு வெடவெடவென்று ஆடியது.
“மழை வருகிறது வீட்டுக்குப் போவதானால் கொண்டுபோய் விடுகிறேன்”. அவன் ஆதரவாகச் சொன்னான்.
“உங்கள் தயவுக்கு நன்றி. வந்த வழியைப் பார்த்துப்போக எனக்குத் தெரியும்” அழுகையூடே அவள் சொன்னாள். திடீரென்று அவளுக்குத் தன்னை அவனுடன் யாரும் பார்த்தால் என்ற பயம் வந்தது.
“உமது வீட்டை விட்டு ஒன்றரை மைல்களுக்கு மேலே வந்து விட்டீர். உம்மைப் பார்த்தால் உல்லாசப் பயணத்துக்கு பணத்துடன் வெளிக்கிட்ட மாதிரித் தெரியவில்லை. டாக்ஸியில் போய் ஏன் உமது தகப்பனுக்குச் செலவு வைக்க வேணும்? இலவசமாகக் கொண்டுபோய் விடலாம். மீனாவின் அக்கா என்பதற்காக- சிதம்பரனின் மச்சாள் என்பதற்காக. உம்மில் தனிப்பட்ட முறையில் தயவு காட்டுவதாக தப்பபிப் பிராயப் படவேண்டாம்”.
அவன் வேண்டுமென்றே குறும்பை குரலில் காட்டுகிறான் என்று தெரியும் அவளுக்கு.
ஏன் ஒப்பாரி வைக்கிறீர் என்று கேட்டு இன்னும் அழப் பண்ணாமல் குறும்புத்தனமான பேச்சால் தன் குழப்பத்தைத் திசை திருப்பப் பார்க்கிறான் என்று தெளிவாகத் தெரிந்தது அவளுக்கு.
இவனுக்கு இன்னும் தன்னில் இருக்கும் பரிவும், அன்பும் ஏன் தொட்டுத் தாலிகட்டிய கணவருக்கு இல்லாமல் போய் விட்டது?
கணவனில் உள்ள ஆத்திரமும், தன்னால் கைவிடப்பட்ட – ஒரு காலத்தில் தன் காதலனாக இருந்த கார்த்திகேயன் காட்டும் பரிவும் அவளை இன்னும்கூட அழப்பண்ணியது. கதைப்பதை விட்டு அழுதாள். கையில் கைக்குட்டைகூட இல்லை அவளிடம்.
அவன் தன் கைக்குட்டையைக் கொடுத்தான். அவள் பெற்றுக்கொள்ளாமல் வேண்டாம் என்று தலையாட்டினாள்.
தகப்பன் தங்கள் காதலையறிந்து தன்னைப் பேசுகிறார் தாய் கண்டபாட்டுக்குத் திட்டுகிறா என்று அழுத சகுந்தலாவை அணைத்து அவள் கண்ணீரைத் துடைத்த காலம் ஞாபகம் வந்தது. இப்போது மௌனமாக அவன் உட்கார்ந்திருந் தான். ஒன்றும் சொல்லவோ கேட்கவோ உரிமையில்லாமல். “சகுந்தலா இந்தப் பகுதி நிறையத் தமிழ் ஆட்கள் இருக்கிற பகுதி’ அவன் அக்கம் பக்கம் பார்த்தபடி சொன்னான்.
“இருக்கட்டும் எனக்கென்ன அதைப்பற்றி உங்களுக்குப் பயமென்றால் போங்கள். யாரும் உங்களை வெற்றிலை: வைத்துக் கூப்பிடவில்லை.” அவள் குரலில் இன்னும் எடுத் தெறிந்து பேசும் ஆத்திரம்.
“ரோட்டோரத்தில் இருந்து அழுதுகொண்டிருந்தால் யாரும் விசரி என்று நினைத்து போலீசுக்குப் போன் பண்ணி விடுவார்கள்.” அவன் சொன்னான்.
அவள் இருக்கும் வரைக்கும் அவன் போகமாட்டான் என்று தெளிவாகத் தெரிந்தது அவளுக்கு. அவன் சொன்னது உண்மையானால் – இந்தப் பக்கம் நிறையத் தமிழாக்கள் இருக்கிறார்கள் என்பது உண்மையானால் அதைவிட வேறு வினை வேண்டாம். அவள் எழுந்தாள். குளிர் கொடும் ஊசி களாய்த் துளைத்தது.
“சரியான குளிர் சகுந்தலா. என் ஜக்கட்டைத் தருகிறேன் போட்டுக்கொண்டு போ. வீட்டுக்குப் பக்கத்தில் குப்பை தொட்டி கிடந்தால் போட்டுவிடு அனுப்பாவிட்டால். முல்லைக்குத் தேர் கொடுத்த பாரியில்லை நான். எனக்குத் தெரிந்த பெண் குளிர் பிடித்து நிமோனியா வந்து சாவதை விரும்பவில்லை நான்.” அவன் அவள் மறுமொழி சொல்லு முதல் தன் ஜக்கட்டைக் கழட்டி அவள் தோள்களில் போட்டான்.
அவனின் உடம்பின் சூடு இன்னும் ஜக்கட்டிலிருந்து அவளின் ‘உடலில்’ தொட்டது.
அவள் சட்டென்று ஜக்கட்டை எடுத்து அவனிடம் கொடுத்து விட்டுக் கேட்டாள் “கொண்டுபோய் விட்டால் மிகவும் நன்றி.”
குரல் மென்மையாக இருந்தது. அவனின் ஜக்கட்டைப் போட்டுக்கொண்டு ஊர்வலம் போவதைவிடப் பேசாமல் காரில் போய் இறங்கலாம்.
அவன் கார்க் கதவைத் திறந்து விட்டான். அவள் பேசாமல் ஏறி உட்கார்ந்தாள்.
கேட்கமாட்டானா ஏன் அழுகிறேன் என்று? உங்களை ஏமாற்றிவிட்டு ஓடிப்போய் எப்படி வாழ்கிறேன் என்று அலற வேண்டும்போல் இருந்தது. அவன் ஒன்றும் பேசாமல் கார் ஓட்டிக்கொண்டிருந்தான்.
இப்படியான பண்பான உள்ளத்தை ஏமாற்றிவிட்டுப் போய் என்ன கண்டேன். ஏமாற்றினேனா? இந்த உலகத்தின் சட்ட திட்டங்களால் விற்கப்பட்டேன். தன்னையறியாமல் அவள் கண்கள் பொலபொலவென்று கொட்டியது.
”சகுந்தலா வீட்டுக்குப் போகும் மனநிலை இல்லை என்றால் ஏதும் பார்க்கில் கொஞ்சநேரம் இருந்துவிட்டுப் போகலாம்.” அவன் சொன்னான்.
அவளுக்கு வீட்டுக்குப் போய் தாய் தகப்பனைச் சந்திக்கவும் அவர்களின் கேள்விகளுக்கு மறுமொழி சொல்லவும்முடியாது. ஆனால் தாய் தேடுவாள் எங்கே போய்விட்டேன் என்று. ”வேண்டாம் அம்மா தேடுவா எங்கே போய்விட்டேன் என்று.”
“யாரோ தெரிந்த சினேகிதியை வழியில் கண்டேன் என்று சொல்லேன்”
நல்ல யோசனைதான். அப்படி யாரும் இருந்தால் ஏன் ரோட்டில் இருந்து அழுதாளாம்.
“எனக்குத் தெரிந்த யாரும் இந்தப்பக்கம் இல்லை ” அவள் அவனைப் பார்க்காமல் சொன்னாள். கெரஞ்சநேரம் சிந்தித்தான்.
“உமது மச்சாள் புவனேஸ் பக்கத்தில்தான் இருக்கிறார். அங்கு போனதாகச் சொல்லும் வீட்டில்.”
“எந்தப் புவனேஸ்” அவள் ஆச்சரியத்துடன் கேட்டாள்.
“என்ன தெரியாதா! சிதம்பரனின் தமக்கை. கொழுக்கட்டைப் புவனேஸ் என்று உமது அண்ணர் அடிக்கடி சொல்லுவார். அப்படி என்ன உமக்குச் சொந்தக்ககாரரைக் கூடவா மறந்து விட்டது.” அவன் வியப்புடன் கேட்டான்.
“புவனேஸ் மான்ஸெஸ்டரில் என்றல்லோ கேள்விப்பட்டேன்”. அவள் சொன்னாள்.
”ஓம் அது ஐந்து வருடத்துக்கு முதல். இப்போ விம்பிள்டனில் தான் இருக்கிறாள்.”
“புவனேஸிடம் அம்மா கேட்டால்……” தயக்கத்துடன் சொன்னாள்.
”உமது தாய் தகப்பனுக்கும் புவனேஸ் வீட்டுக்கும் சரிவராது. புவனேஸின் கணவர் ஜெகநாதனும், உமது தகப்பனும் எதிரி கள் அரசியலில்.”
சகுந்தலா கொஞ்சநேரம் பேசாமல் இருந்தாள். “என்ன லண்டனில் எல்லாவிடமும் அரசியல் சண்டையா” என்றாள் கடைசியாக.
“எல்லா இடமும் அரசியலைப் பற்றிய அக்கறையிருந்தால் ஏன் எங்கள் நிலையிப்படி இருக்கிறது? இருக்கிற கொஞ்சப் பேரில் எத்தனையோ பிரிவு. ஒவ்வொரு பிரிவுக்கும் ஒவ்வொரு தலைவர். தமிழர் நிலை என்றுதான் திருந்தப்போகிறதோ தெரியாது” அவள் மெளனமாக இருந்தாள்.
அவளின் சொந்தப்பிரச்சினைகளால் ஏற்பட்ட துயர் மறைந்து இவனுடன் கதைத்துக்கொண்டிருப்பது அவளுக்குப் பிடித்தது. தூரத்தில் ஒரு டெலிபோன் பூத் தெரிந்தது. அவன் காரை நிறுத்தினான். அவள் கொஞ்சநேரம் தயங்கினாள். உமது விருப்பம் என்னும் பாவனையில் அவன் இருந்தான். அவள் இறங்கிப்போய் தாய்க்குப் போன் பண்ணினாள். தான் புவ னேஸ் மச்சாளின் வீட்டுக்குப் போய்விட்டு வருவதாக. தாய்க் குப் பிடிக்கவில்லை; அப்பாவுக்குப் பிடிக்காது என்று ஏதேதோ முணுமுணுப்பது கேட்டது.
இந்த வயதிலும் அவர்கள் இவர்களுக்கு என்ன பிடிக்கிறது என்று பார்க்கவேண்டிக் கிடக்கிறது என்று ஆத்திரம் வந்தது சகுந்தலாவுக்கு. முணு முணுத்துக் கொண்டு வந்து காரில் ஏறினாள். மழை பெலத்துப் பெய்யத் தொடங்கியிருந்தது. “இந்த லட்சணத்தில் எந்தப் பார்க்குக்குப் போவது,” என்று அலுத்துக் கொண்டாள்.
“எனக்குப் பசி உயிர் போகிறது சகுந்தலா. காலையில் குடித்த கோப்பியைத் தவிர உடம்பில் ஒன்றும் போகவில்லை” அலுத்துப்போன களைப்பில் சொன்னான். அவள் அவனைப் பார்த்தாள்.
ஐந்து வருடங்களாகி விட்டன இவ்வளவு நெருக்கத்தில் பார்த்து. ஆனால் இன்னும் அதே களையான முகம். குறும்பு தவழும் விழிகள். அவளின் நேரடிப்பார்வை தர்மசங்கடமாக இருந்தது அவனுக்கு. அவளின் நேரடிப்பார்வையால் முகத்தை வேறு பக்கம் திருப்பினான். “என்ன அப்படிப் பார்க்கிறீர். இன்னும் நரைமயிர் வரவில்லை என்றா?” அவன் புன்முறுவலுடன் கேட்டான்.
“இல்லை, உங்கள் அருமைக் கேர்ள் பிரண்டுக்கு சமைத்துப் போடுவதற்கென்ன என்று யோசிக்கிறேன்.” அவளின் குரலில் இருந்த பொறாமை அவனுக்கு வியப்பாக இருந்தது. என்ன விசித்திரமான பெண்கள் இவர்கள். தான் கல்யாணம் முடித்துக் குழந்தை குட்டியுடன் இருக்கலாம் என்றால் நான் ஒருத்தியுடன் இருப்பதால் என்ன பொறாமையாம் இவ ளுக்கு?
“ஒன்றாய் இருப்பதென்றால் ஒருத்தருக்கு ஒருத்தர் அடி மையோ அல்லது சேவகரோ என்றில்லை. எங்கள் இருவருக் கும் தனிப்பட்ட விதத்தில் நிறைய வேலைகள் இருக்கும் கவனிக்க. அதை விட்டுவிட்டு உண்பதும் உடுப்பதும்தான் பெரிய வேலையா?” என்றான்.
“ஓமோம் நீங்கள் எல்லாம் பெரிய இலட்சியவாதிகள்” அவள் நக்கலாகச் சொன்னாள்.
“இலட்சியம் என்றால் என்ன? எனக்குத் தெரியாது. ஆனால் இப்போது எங்களுக்கு ஒருகடமை இருக்கிறது எங்கள் இனத் துக்கு நடக்கும் கொடுமைகளை எதிர்த்துப் போராட. அதை யாரோ பிரச்சனை என்று பேசாமல் இருந்தால் நாளைக்கு எங்கள் அடுத்த சந்ததியை அழிக்கப் புதைகுழி தோண்டியவர்களாகி விடுவோம். அவளுக்கு விளங்கவில்லை என்ன சொல்கிறான் என்று.
எதிர்த்துப் போராடப் போகிறார்களாம். யாரை? படை பலமும் ஆள்பலமும் நிறைந்த இலங்கை ஆட்சியை, “என்ன விழற் கதை கதைக்கிறீர்கள். உங்கள் தரவழி சும்மா ஒன்று கதைக்க அங்க இருக்கிற ஆட்களுக்கு அடிவிழுகுது.” அவள் அலுப்புடன் சொன்னாள்.
“பொறுப்பில்லாமல் கதைத்து சாதாரண சனங்களை அழியப் பண்ணப் போகிறீர்கள். இரண்டு தரமும் அவர்கள் செய்த கொடுமை போதாதா?” அவள் குரலில் விரக்தி தொனித்தது.
“நாங்கள் ஒன்றாய் இருக்கிறோம், உரிமை தந்தால் என்று கேட்டபோது அடித்தார்கள். நீங்கள் அடிக்கிறீர்கள் பிரியப் போகிறோம் என்று சொன்னாலும் கொலைசெய்கிறார்கள். உமக்கு விளங்கவில்லையா? இலங்கையில் இனித் தமிழரும் சிங்களவரும் ஒன்றாகச் சீவிக்கமுடியாது என்று. சரித்திரத் தின்படி இரு இனமும் ஒன்றாக இருக்கவில்லை. தங்கள் சுய நலத்துக்கு அன்னியர் தங்கள் ஆட்சியின் கீழ் எங்களை ஒன் றாய் வைத்திருந்த குற்றத்துக்காசு நாங்கள் இன்றும் சிங்கள ஏகாதிபத்தியத்தின் அடக்கு முறையிலோ சீவிக்க வேண்டும். தமிழ்ப்பகுதிகளில் ராணுவமும் பொலிசும் எண்ணிக்கையில்லா மல் பெருகிக் கொண்டிருக்கின்றன. தான் பிடித்த நாட்டில் தன் படையை வைத்திருப்பதுபோல். தமிழ்ப்பகுதி தமிழருக் குரியது. அதில் சிங்கள ஏகாதிபத்தியத்தின் படையினருக்கு என்ன வேலை?” அவன் உணர்ச்சி வசப்பட்டுக் கேட்டான்.
“யாழ்ப்பாணம் பெரிய கடையில் சிங்களப் போலீசார் செய்த கொடுமையிலிருந்து தெரியவில்லையா? மக்களைப் பாதுகாப் பவர்களே கேவலமாக நடந்துகொள்கிறார்கள் ன வெறி பிடித்தென்று. இவர்களுடன் ஏன் கொழுவவேண்டும்” அவள் பரிதாபமாகக் கேட்டாள்.
“சகுந்தலா பொலிஸார் எந்த நாட்டிலும் எந்த மக்களுக்கும் காவலர்கள் இல்லை. பொலிஸார் ஆளும் வர்க்கத்தின் கூலிப் பட்டாளம். வெறும் கைப்பொம்மைகள். அவர்கள் ஒருநாளும் சாதாரண மக்களின் பக்கத்தில் நிற்பதில்லை. ஆனால் உண் மையாக உரிமைப் போருக்கு தமிழர் எல்லாம் பிரண்டெழுந் தால் இந்தக் காவாலிப் பட்டாளம் எந்த மூலைக்கு.”
அவன் ஒரு சாப்பாட்டுக் கடையருகே காரை நிறுத்தினான். அவனுடன் கடைக்குப்போக அவள் தர்மசங்கடப்பட்டாள். “பயப்படாதீர் இவர்கள் இத்தாலியர்கள். உமது தகப்பனுக்கோ கணவனுக்கோ கோள் சொல்லி வைக்கமாட்டார்கள்.” அவள் தயங்கிக் கொண்டு இறங்கினாள். கோள் மூட்டிவைத்தாலும் என்ன? அவள் என்ன அப்படித் தவறு செய்து விட்டாள்?
சிவனேசன் இப்போது என்ன செய்துகொண்டிருப்பான்? யார் போன் பண்ணியது என்று தெரிந்திருக்குமா அவனுக்கு? தெரிந்திருந்தால் என்ன செய்திருப்பான். இல்லை என்று மறுக்க முடியுமா? இந்த அதிகாலை நேரத்தில் என் வீட்டில் என்ன வேலை எந்தப் பெண்ணுக்கும். அவள் கொஞ்சநேரம் மறந்திருந்த வேதனை திரும்பவும் மனதில் பட்டது.
“உமக்கு என்ன ஓர்டர் பண்ண” அவன் கேட்டான். “எனக்குப் பசிக்கவில்லை. அத்தோடு அம்மா தோசை செய்து வைத்திருக்கிறா. சாட்டுக்கு என்றாலும் ஒன்று சாப்பிட்டு வைக்கா விட்டால் கோபிப்பா” அவள் சொன்னாள்.
அவளுக்கு நேரே இருந்துகொண்டு அவள் முகத்தை உற்றுப் பார்த்தான் அவன்.
வாழ்க்கையின் ஒவ்வொரு வினாடியும் ஒவ்வொரு காரியத்தை யும் மற்றவர்களின் திருப்தியை எதிர்பார்த்து வாழும் சகுந் தலா போன்ற பெண்கள் எப்போது திருந்துவார்கள். பெண் களே நீங்களும் மனித ஜன் மங்கள். உயிரும் சதையும் கொண்ட உயிரினம். ஏன் மற்றவர்கள் உங்களைப் பாவிப்பதைப் புரிந்து கொள்ளாமல் இருக்கிறீர்கள்? என்று கேட்கவேண்டும் போல் இருந்தது.
தேவையில்லாமல் அவளுடன் ஏதும் கதைத்து சண்டையை உண்டாக்க விரும்பவில்லை.
அவன் சாப்பிடுவதை மௌனமாகத் தன் தோடம்பழத் தண்ணியைக் குடித்துக்கொண்டு பார்த்துக் கொண்டிருந்தாள் சகுந்தலா.
என்ன விசித்திரம்! யாரை இனிக் காணக்கூடாது என்று இர வெல்லாம் பிரார்த்தனை செய்தாளோ அவனுக்கு முன்னாள் உட்கார்ந்திருக்கிறாள். உண்மையான பிரார்த்தனைகள் பலிக்கும் என்றார்களே ஏன் அவளின் எந்தப் பிரார்த்தனை யுமே பலிக்கவில்லை? உலகத்தில் யார் வெறுத்தாலும் யார் மறுத்தாலும், கார்த்திகேயனை கல்யாணம் செய்ய உதவி செய் கடவுளே என்று பிரார்த்தித்தேனே ஒருகாலத்தில். அந்தப் புனிதமான பிரார்த்தனைக்கு என்ன நடந்தது?
“நீர் அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாக்கிய அரிய உபதேசம் எல்லாம் போதித்தாயிற்றா மீனாவுக்கு” அவன் கேட்டான் அவளின் மௌனத்தைக் கலைத்தபடி.
“யார் உபதேசம் பண்ணவந்ததாக உங்களுக்கு அறிவித்தார்கள்” அவள் கோபத்துடன் கேட்டாள்.
“அப்படித்தான் கேள்விப்பட்டேன். அப்பாவி மக்கள் அமெரிக்க இறக்குமதிச் சாமானில் மயங்குவதுபோல உம்முடைய அமெரிக்க நாட்டு ஞானம் நிறைந்த உபதேசங்களையும் மீனாவுக்குச் சொல்ல வந்ததாக” அவளின் ஆத்திரம் எல்லை கடந்தது. அவன் கிண்டலைக் கேட்டு.
“உங்களைப்போல ஆட்கள் அப்படித்தானே சொல்வீர்கள். சொல்வது ஒன்று செய்வது ஒன்று.” அவள் படபடத்தாள்.
என்ன வெடிக்கிறாள் இவள்.
“உண்மையைத்தான் சொல்கிறேன் தமிழர் தமிழர் பிரச்சினை என்றெல்லாம் வெளுத்துவாங்குகிறீர்கள். ஏன் நீங்கள் மட்டும் வெள்ளைக்காரிக்குப் பின்னால் திரிகிறீர்கள்? அதுதான் மீனாவும் வெள்ளைக்காரனுக்குப் பின்னால் திரி வதைப்பற்றி உங்களுக்கு அக்கறையில்லை.” சகுந்தலா படபடவென்று பொரிந்துகொட்டினாள்.
“சகுந்தலா குழந்தைத்தனமாகக் கதைக்காதே. கல்யாணம் என்பது என்னைப்பொறுத்தவரையில் இரண்டு மனிதப்பிறப்பு களுக்கிடையில் நடக்கும் ஒரு நிகழ்ச்சி. அது சமயச்சார்பிலோ அல்லது வேறு எந்தப் பொருளாதார முறையிலோ அமைவது வெறும் வியாபாரம். உன் தந்தை போன்றவர்களுக்கு வாழ்க் கையில் எல்லாமே வியாபாரம். தனிப்பட்ட வாழ்க்கையிலோ அரசியலைப் பொறுத்தவரையிலோ எதிலும் லாப நட்டத்தின் அடிப்படையில்தான் அவர்களால் யோசிக்கமுடியும். நான் அவர்களைப் போல இல்லை. நீரும் வேண்டுமென்றால் இந்த உலுத்தர் வியாபாரத்தில் சேர்ந்து ஏதும் லாபம் தேடும். எனக்கு அக்கறையில்லை”. அவன் தன்னை இப்படிப் பேசியது ஆத்திரத்தைவிட அழுகையை உண்டாக்கியது அவளுக்கு.
எதுவும் லாப நட்ட அடிப்படையில் இருக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பவர்களில் என்னையும் ஒருத்தியாகவா நினைக்கி றீர்கள் கார்த்திகேயன்? கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. “சகுந்தலா மன்னித்து விடும். நான் உம்மை மனவருத்த ஏதும் சொல்லவில்லை” அவன் குனிந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
“நான் றோட்டிலிருந்து ஏன் அழுதேன் என்று கேட்கவில்லை நீங்கள்” அவள் குரல் தழுதழுத்தது.
“எனக்குக் கேட்க உரிமையில்லை. சொன்னால் கேட்கத் தடையுமில்லை” எடுத்தெறிந்து சொன்னான் அவன்.
“என் கணவருக்குப் போன் பண்ணினேன். இந்த அதிகாலை நேரத்தில் என் வீட்டில் என் கணவருக்கு ஒரு பெண்ணுடன் என்ன வேலையிருக்கும் என்று நினைக்கிறீர்கள்” அவன் கையிலெடுத்த சாப்பாட்டை வாயில் வைக்காமல் திடுக்கிட்ட படி சகுந்தலாவைப் பார்த்தான் கார்த்தி-
அத்தியாயம்-4
வீட்டுக்கு வரும்போது தகப்பனார் இரவு பத்து மணிச் செய்தி கேட்டுக்கொண்டிருந்தார் டெலிவிஷனில். மீனாவின் அறையில் குழந்தை கீதாஞ்சலியின் சிரிப்பொலி கேட்டது. “என்ன செய்கிறாள் இன்னும் நித்திரை கொள்ளாமல்.” தாய் இன்னும் குசினியில் ஏதோ செய்துகொண்டிருந்தாள். இவ்வளவு நேரமும் காத்திகேயனுடன் இருந்ததை யாரும் கண்டு சொல்லியிருந்தால்? அப்படி என்ன பிழை செய்து விட்டேன்? பாவத்துக்கு இரங்கி என்னைக் கொண்டு வந்து விட்ட கார்த்திக்கு இவர்கள் என்னென்ன சொல்லித் திட்டுவார்கள் தெரிந்தால்? மெளனமாக உட்கார்ந்தாள்.
தகப்பன் திரும்பிப் பார்த்துவிட்டுத் தலையைத் திருப்பிக் கொண்டார். அம்மா சொன்னது ஞாபகம் வந்தது. புவனேசின் கணவர் ஜெகநாதனுக்கும் தகப்பனுக்கும் சரிவராது என்று. அதுதான் மூஞ்சியைத் திருப்பிக் கொண்டிருக்கிறார். புவனேஸ் குடும்பத்தைப் பற்றி ஏதும் கேட்டால் என்ன மறு மொழி சொல்வது. கார்த்திகேயனைக் கேட்டிருக்கலாம். செய்திகள் முடியத்தகப்பன் திரும்பிப் பார்த்துக் கேட்டார் ”யார் சிதம்பரநாதனோ கொண்டு வந்து விட்டான்?”
”என்ன கேட்கிறார்?” ஓ.ஐ.சீ, புவனேஸின் வீட்டுக்குப் போய் வந்தேன் என்றல்லவோ நினைக்கிறார்.
‘உம்’ என்றாள் மனம் படபடவென அடித்துக்கொண்டது. ‘என்ன சொன்னான் கூட்டத்துக்கு வருவதைப்பற்றி தகப்பன் ஆவலுடன் கேட்டார். என்ன? கூட்டமா? என்ன கேட்கிறார்?’
“என்னிடம் ஒன்றும் சொல்லவில்லை” பட்டும் படாமலும் மறுமொழி சொன்னாள்.
”உம். நேற்றைய மழைக்கு இண்டைக்கு முளைத்த காளான் கள் இவர்கள். மைத்துனர் ஜெகநாதன் ஒரு சீர்திருத்தவாதி. இவர் சிதம்பரநாதனார் ஒரு புரட்சிவாதி. இவர்கள் மண்டைக் குள் களிமண்தான் இருக்கு புத்தி ஒன்றும் இல்லை. என்ன சொன்னார் பெரியவர் ஜெகநாதன்”தகப்பன் சுவாரஷயத்துடன் பேசத் தொடங்கினார். மேலே கீதாஞ்சலியின் குரல் கேட்டது. “என்னிடம் ஒன்றும் சொல்லவில்லை யாரும்” என்று சொன்னவள் என்ன கீதாஞ்சலி இன்னும் நித்திரை யில்லையா என்றபடி எழுந்து மாடிக்குப் போனாள்.
“சகுந்தலா தோசை ஆறிப்போய்க் கிடக்கு சாப்பிடன்” தாய் கூப்பிட்டாள்.
“பசியில்லை, புவனேஸ் வீட்டில் வடை சாப்பிட்டன்” தாய் மேலே கேள்வி ஒன்றும் கேட்காமல் இருப்பதற்காக விடு விடு வென்று மேலே போனாள்.
மீனாவும் கீதாஞ்சலியும் விளையாடிக் கொண்டிருந்தார்கள். சகுந்தலா மீனாவின் அறைக்குப் போனதும் மீனா தமக்கை யைக் கூர்மையாகப் பார்த்தாள்.
“என்ன தேடுகிறாள் என் முகத்தில்” தங்கையின் பார்வை சகுந்தலாவுக்குத் தர்ம சங்கடத்தை உண்டாக்கியது.
“எப்படி புவனேஸ் மச்சாள்” மீனாவின் அழகிய முகத்தில் குறும்பு தவழ்ந்தது. தோளில் புரளும் தலைமயிரை விலத்திக் கொண்டு சிரித்தாள். சகுந்தலா மறுமொழி சொல்லவில்லை. மறுமொழி சொல்லத் தெரியவில்லை. தங்கையை நேருக்கு நேர் பார்க்கத் தயங்கினாள்.
”அம்மா சொன்னா புவனேஸ் மச்சாள் வீட்ட போனதாக”. என்னை ஏன் எல்லோரும் கேள்விகளாகக் கேட்டுத் தொலைக்கிறார்கள்.
“நான் புவனேஸ் வீட்டுக்குப் போகவில்லை” தங்கையின் முகத்தைப் பார்க்காமல் சொன்னாள் சகுந்தலா.
மீனா என்ன யோசிக்கிறாள். எதையும் யோசிக்கட்டும் எனக் கென்ன? யாரையோ கொலையா செய்துவிட்டேன்? அல்லது யாருடைய குடும்பத்தையா குலைத்துவிட்டேன்? *’கார்த்திகே யனை அப்பாவுக்குப் பிடிக்காது” மீனா சொல்வது கேட்டது. ஏதோ உள்ளொன்று வைத்துத்தான் புவனேஸ் எப்படி என்று மீனா கேட்டாள் என்று தெரியும் சகுந்தலாவுக்கு. ஆனால் கார்த்திகேயனைப்பற்றித் தன்னிடம் நேரடியாகப் பேசுவாள் என்று எதிர்பார்க்கவில்லை. சகுந்தலா – காத்திகேயன் கதை மீனாவுக்குத் தெரியாததல்ல என்று சகுந்தலாவுக்குத் தெரியும். ஆனால் ஒருநாளும் சகோதரிகள் இருவரும் தங்கள் சொந்த வாழ்க்கையை ஒருவருக்கொருவர் சொல்லிக்கொண்டதில்லை; சொல்லிக் கொள்ளச் சந்தர்ப்பமுமில்லை. மீனா சகுந்தலாவை விட ஐந்து வயது இளையவள்தான். ஆனால் அறிவில் அழகில் உலகத்தைப் புரிந்துகொண்ட விதத்தில் மீனா எவ்வளவோ வித்தியாசம். அவள் வாழ்க்கையைப் பார்க்கும் விதம் வேறு. வாழும் முறையும் வேறு. அதுதான் தாய் தகப்பனுக்கும் மீனாவுக்கும் இவ்வளவு சண்டையை உண்டாக்கி விட்டது. கார்த்தியைத் தகப்பனுக்குப் பிடிக்காது என்று இவளா சொல்ல வேண்டும். எனக்கு எப்பவோ தெரியும். சகுந்தலா தனக்குத் தானே சொல்லிக்கொண்டாள்.
“அதிலும் நீர் கார்த்தியுடன் திரிவதாகத் தெரிந்தால் கொலை செய்யவும் தயங்கமாட்டார்” மீனா தமக்கையின் முகத்தைப் பார்த்துச் சொன்னாள்.
நானும் கார்த்தியும் ஒன்றாய்ப் போனதை மீனா கண்டிருக்கிறாள். இவள் கண்டதுபோல் எத்தனை ‘எதிரிகள்’ கண்டார்களோ? கண்டால் என்ன?
“நான் கார்த்தியுடன் திரிவதற்காகத்தான் இங்கு வந்ததாக நினைக்கிறாயா?” தங்கையில் எரிந்து விழுந்தாள். “மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதில் எனக்கு அக்கறை யில்லை. ஆனால் மற்றவர்கள் என் சொந்த விடயங்களில் தலையிடுவதுதான் எனக்கு பிடிக்கவில்லை. மீனா குழந்தை கீதாஞ்சலியைத் தன் கட்டிலில் கம்பளிப் போர்வைக்குள் மூடிய படி சொன்னாள். மற்றவர்கள், நான் எல்லாருக்கும் மற்றவர்கள்தானா?
“மீனா தேவையில்லாமல் கதைக்கவேண்டாம். நான் உமது சொந்தவிடயங்களில் தலையிட வந்ததாக மூஞ்சியை நீட்டிக் கொண்டிருக்கிறாய். என் வாழ்க்கையே பூகம்பமாகிக் கொண்டிருக்கிறது. இந்த லட்சணத்தில் மற்றவர்கள் சொந்த விடயங்களில் தலையிட எனக்கென்ன பைத்தியமா?” சொல்லிக் கொண்டிருக்கும் போது சகுந்தலாவின் வார்த்தைகள் வேதனையில் தடுமாறின, மீனா ஏன் தமக்கையின் முகம் இப்படிக் கலங்கிப் போயிருக்கிறது என்று தெரியாமல் தவித்தாள்.
மீனாவுக்கு முழுக்கத் தெரியாவிட்டாலும் சகுந்தலா கார்த்திகேயனைப் பற்றிய முழுவிபரமும் உஷா தெளிவாகச் சொல்லியிருந்தாள். தன் அருமைச் சினேகிதியின் காதல் தோல்வி யடைந்த விதத்தை. உயிருக்குயிராகப் பழகிய உஷாவுக்குக் கூட ஒரு கடிதம் எழுதாமல் எல்லோருடைய உறவையும் முறித்துக் கொண்டு அமெரிக்காவில் இருக்கும் தன் சினேகிதியைப் பற்றி எத்தனையோ தரம் கதைத்திருக்கிறாள் உஷா மீனாவைக் கண்ட நேரங்களில். எவ்வளவு தான் நெருக்கமாகப் பழகியிருந்தாலும் கல்யாணம் என்று ஆகி குழந்தை குட்டி என்று வந்துவிட்டால் பழைய கதைகள், பழம் நினைவாகக்கூட இருக்கக்கூடாது என்பது மீனாவின் அபிப்பிராயம்.
கார்த்திகேயனில் எத்தனையோ மதிப்பு அவளுக்கு. லண்ட னில் உள்ள பெரிய மனிதர்கள் ஆளுக்கொரு கட்சியும் இயக்க மும் வைத்துப் போட்டிபோடுவதைப் பார்க்க அவளுக்குத் தலை யிடிவரும். இவ்வளவு கேவலமாக நடத்தப் படுகிறோம் இலங் கையில், இப்போதுகூட எங்களுக்குப் புத்தியில்லையா ஒன் றாய்ச் சேர என்று எத்தனையோ தரம் தகப்பனைக் கேட்டிருக் கிறாள். குடும்பத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கட்சி. தகப்பன் ஒரு கட்சி, மைத்தியான புவனேசின் கண வர் ஜெகநாதன் ஒரு பக்கம். படிக்க வந்த சிதம்பரநாதனின் மாணவர் இயக்கம் மறுபக்கம். இந்தச் சிக்கலான சூழ்நிலை யில் சொந்த வாழ்க்கையில் மட்டுமல்ல அரசியலிலும் தனக்கு எதிராக மாணவர்கள் இயக்கத்துடன் சேர்ந்து நிற்கும் கார்த் திகேயனில் அவருக்கு அளவில்லாத வெறுப்பு. அப்படியான கார்த்திகேயனுடன் தமக்கை அதுவும் ஒரு காலத்தில் காதலர் களாய் இருந்தவர்கள் ஒன்றாய்த் திரிவதென்றால்…
தமக்கையை விளங்கிக்கொள்ள முடியவில்லை மீனாவால். தன் பழைய நினைவுகளுக்குப் பயந்துதான் லண்டனுக்கு வராமல் இருக்கிறாள், எப்படி கார்த்திகேயனின் முகத்தில் விழிப்பது என்ற பயமாக இருக்கும் என்று உஷா சொன்னது நினைவு வந்தது மீனாவுக்கு. லண்டனுக்கு வந்ததும் வராததுமாகக் கார்த்திகேயனுடன் திரிகிறாளா சகுந்தலா? உலகம் தன் பாட் டுக்குக் கிடக்கட்டும். உலகத்தைப்பற்றி எனக்கு அக்கறை யில்லை என்று நினைக்கிறாளா தமக்கை? போதாததற்குச் சிவனேசனைப் பற்றி அரையும் குறையுமாக எத்தனையோ கேள்விப்பட்டிருக்கிறாள் மீனா. இதெல்லாம் உண்மையா?
அதுதான் தன் மணவாழ்க்கையில் ஏற்பட்ட விரக்தியின் கார ணமாக பழைய காதலனைக் கண்டதும் மனம் பேதலித்து விட் டதா? தமக்கையைப் புரிந்து கொள்ளமுடியாமலிருந்தது மீனா வுக்கு. அதே நேரம் கார்த்தியின் செயலும் விளக்கமுடிய வில்லை, தகப்பனின் எதிரி, மகளின் காதலனாக இருந்தவன். இப்போது சகுந்தலாவைக் கண்டதும் இப்படியா நடந்து கொள்வது? தமக்கையும் தங்கையும் கொஞ்சநேரம் பேசிக் கொள்ளவில்லை.
“கார்த்தியுடன் என்னைக் கண்டதை அம்மாவுக்குச் சொன்னாயா?”சகுந்தலா கேட்டாள்.
“அவ்வளவு முட்டாள் இல்லை நான். ஆனால் ஒன்று சொல்ல விரும்புகிறேன். இந்தப் பக்கம் நிறையத் தமிழ் ஆட்கள். இப்படித்தான் நாம் வாழவேண்டுமென்று எதிர்பார்ப்பவர்கள். கல்யாணமான பெண் தனது பழைய…” மீனா முடிக்க வில்லை.
சகுந்தலாவின் கழுத்து நரம்புகள் புடைத்தன. ஆத்திரத்தில் முகம் சிவந்தது. கோபத்தின் எல்லைமீறி கண்கள் நெருப்புக் கிண்ணங்கள் போல் இருந்தன.
“சட் அப் மீனா. கல்யாணமாகிய பெண் எப்படி வாழவேண் டுமென்று எனக்குச் சொல்லத் தேவையில்லை. நான் எந்த சொந்த சந்தோஷத்தையும் தேடி லண்டனுக்கு வரவில்லை. என் வாழ்க்கையில் மற்றவர்கள் நினைக்கிறபடி சந்தோஷம் பொங்கி வழியவில்லை. அதற்காக நியாயமற்ற வழிகளில் சந்தோஷம் தேடுமளவுக்கு என் புத்தி பேதலித்துப் போக வில்லை. எனக்குத் தெரியும். கார்த்திகேயனுடன் ஒன்றும் உல்லாசப் பிராயணம் போகவில்லை’ மிகுதியை எப்படி இவ ளுக்கு விளங்கப்படுத்துவது. என் கணவருக்குப் போன் பண்ணி னேன். அவர் இன்னொரு பெண்ணுடன் உல்லாசம் பண்ணிக் கொண்டிருக்கிறார். அந்த வேதனையில் கால்போன போக்கில் நடந்துபோய் மழையில் அகப்பட்டபோது கார்த்தியைக் கண்டேன் என்று சொல்வதா?
ஏன் எல்லோருக்கும் என் சொந்த வாழ்க்கையைப் பற்றிச் சொல்லிக் கொண்டு திரியவேண்டும். தன்னை முழுக்க முழுக்கப் புரிந்தவனான கார்த்திகேயனே என்ன சொன்னான். சொறி சகுந்தலா. என்னால் ஒன்றும் சொல்லத் தெரியவில்லை. இது உன் சொந்த விடயம்! என்றுதானே சொன்னான்.
இவள் என்ன சொல்லி விடப் போகிறாள்? “சொறி சகுந்தலா” என்று சொல்லலாம். யாருக்கு வேணும் வெறும் ‘சொறி?’ யாருக்கு வேணும் பரிதாப வார்த்தைகள்? அதை விட மீனா நினைக்கமாட்டாள் என்று என்ன நிச்சயம் தன் கணவன் இன்னொரு பெண்ணைப் பார்ப்பது என் பிழைதான் என்று தமக்கையின் கோபத்தைக் கண்டு ஒருகணம் பயந்து போனாள் மீனா. ” நியூயோர்க்கில் இருந்து வந்திருக்கிறாய் சகுந்தலா. லண்டனில் தமிழர்கள் எப்படி மனம் படைத்திருக் கிறார்கள் என்று சொல்ல நினைத்தேன்” என்றாள் அமைதியாக. தமக்கையின் முகத்தில் ஒரு விரக்தியான சிரிப்புத் தோன்றி மறைந்தது. “மீனா எங்கிருந்தாலும் நான் தமிழ்ப் பெண் என்பதையோ ஒரு கல்யாணமான தமிழ் பெண்ணின் கடமை என்ன என்பதையோ நான் மறக்கவில்லை. உன்னை யும் கீதாஞ்சலியையும் தேடவந்த நான் ஏதோ யோசனையில் சும்மா நடந்துபோய் மழையில் அகப்பட்டு விட்டேன். அம்மா வுக்குக் கார்த்தியுடன் வருவதைச் சொல்ல விருப்பமில்லை. அதற்குத்தான் புவனேஸ் வீட்டுக்குப் போவதாகச் சொன் னேன்’. சகுந்தலா விளக்கமாகச் சொன்னாள்.
“ஏன் உடனடியாக வீட்டுக்கு வரவில்லை” என்று கேட்க நினைத்தாள் மீனா. தமக்கை ஏன் என்னைக் குறுக்கு விசாரணை செய்கிறாய் என்று கேட்டாலும் என்று நினைத்துக் கொண்டு மௌனமானாள்.
“மீனா உன்னை மனம் மாற்ற வந்ததாக நினைக்காதே. எனக்குத் தெரியும் நீ எப்படி வேதனைப்படுவாய் என்று. ஆனால் எங்கள் கலாச்சாரம் பண்பு எல்லாம் மறந்து ஒரு ஆங்கிலேயனுடன் எப்படிச் சீவிக்கலாம் என்று தெரியாது. உஷாவும்தான் இங்கிலீஷ்க்காரனைச் செய்தாள். என்ன நடக்கிறதோ தெரியாது அவள் வாழ்க்கையில், கார்த்தி போன்ற ஆட்களை ஒன்றும் பாதிப்பதில்லை. ஆனால் நாங்கள் பெண்கள். யோசித்துச் செய்”. மீனா பிரமை பிடித்துப்போய் இருக்க சகுந்தலா எழுந்து போய்விட்டாள்.
உஷா இங்கிலீஷ்க்காரனைச் செய்து எப்படி இருக்கிறாளோ தெரியாதாம். உஷா விவாகரத்துச் செய்துவிட்டாள் என்று தெரிந்தால் எப்படியிருக்கும் சகுந்தலாவுக்கு?
மீனா அன்று வேலைக்குப் போகவில்லை. சகுந்தலா இர விரவாக நித்திரையின்றிப் புரண்டுவிட்டு நித்திரையாக விடியற்காலை ஆகிவிட்டது. எழுந்தபோது மீனாவும் கீதாஞ் சலியும் எங்கேயோ வெளிக்கிடத் தயாராக இருந்தார்கள்.
“எங்க பிரயாணம்?’ கோப்பி குடித்துக்கொண்டே கேட்டாள் சகுந்தலா.
“நான் இன்று வேலைக்குப் போகவில்லை. கீதாஞ்சலியைக் கூட்டிக்கொண்டு வெளியால் போக யோசிக்கிறன். நீங்கள் வரவில்லையா சகுந்தலா” என்றாள்.
வீட்டிலிருந்துதான் என்ன? மீனாவுடன் போக யோசித்தாள். அம்மா தொண தொணத்துக்கொண்டிருப்பா மீனாவுக்கு புத்தி சொல்லச் சொல்லி. சகுந்தலா வெளிக்கிட்டாள்.
வைகாசி மாத இளம் குளிரில் பச்சைப் பசேல் என்ற இளம் தளிர்கள் சுகம் கண்டுகொண்டிருந்தன. இங்கிலாந்தில் பெய்த பனிமழை குறைந்து இளம் சூடு உடம்பில் பட்டது. குளிர்கால ஓவர் போடத் தேவையில்லை. உலகம் பிரகாச மாய்த் தெரிந்தது. பெருமூச்சுவிட்டாள் சகுந்தலா. என்னைப் பொறுத்தவரையில்?
சிவநேசன் இன்னும் போன் பண்ணவில்லை. கடிதம் எழுதலாம். எழுதுவானா நான் இன்னொரு பெண்ணுடன் இருந்தேன் என்பதை?
இப்படி எவ்வளவு பொய்ம்மைகளை மறைத்துக்கொண்டு வாழவேண்டியிருக்கிறது. உலகத்தில் எத்தனை தம்பதிகள் இப்படி ஒருவரில் ஒருவர் உண்மையில்லாமல் வாழ்கிறார்கள். இப்படி ஒரு தாம்பத்திய வாழ்க்கை அவசியமா? கார் நீண்ட நேரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. எங்கு போகிறாள் மீனா. கார் ஓல்ட்கேன்ட் ரோட்டில் ஓடிக்கொண்டிருந்தது.
”மீனா எங்கு போகிறாய். குழந்தையை லண்டன் காட்டக் கூட்டக்கொண்டு போகிறாய் என்றெல்லவோ நினைத்தேன்.” சகுந்தலா புதிதாக எழும்பிக்கொண்டிருக்கும் வான ளாவிய கட்டிடங்களைப் பார்த்துக்கொண்டு கேட்டாள். இந்த இடங்கள் ஐந்து வருடங்களுக்கு முன் இடிக்கும் நிலை யில் இருந்த விக்டோரியன் வீடுகளுடன் காட்சியளித்தது ஞாபகம் வந்தது அவளுக்கு. நியூகுறோஸ் ஸ்ரேசன்! உஷா எங்கேயிருப்பாள் இப்போது. நியூகுறோஸ் ஸ்ரேசனுக்கு முன் உள்ள ரோட்டில் தானே றொபினைக் கல்யாணம் முடித்தபின் வசித்தாள். கார் கிறினிவிச் பார்க்கில் நுழைந் தது. மத்தியான வெயிலின் மெல்லிய சூட்டில் ஆயிரக்கணக் கான டவோர்டில் பூக்கள் முகம் மலர்ந்து சிரித்தன. தூரத்தில் சில புள்ளி மான்கள் விழிகள் உயர்த்தி இவர்களை வியப் புடன் பார்த்தன. கார் நின்ற இடத்திலிருந்து தூரத்தில் உள்ள பெஞ்சில் இருந்த வாலிபனிடம் போய் மீனா ஏதோ கதைத்தாள். பின் இருவரும் ஏதோ கதைத்துச் சிரித்துக் கொண்டு வந்தார்கள்.
“சகுந்தலா இவர்தான் என் வருங்காலக் கணவர் அன்ரனி கார்ட்டர். அன்ரனி இவள் என் சகோதரி சகுந்தலா சிவநேசன்’ காரை விட்டுக் கீழே இறங்கக்கூட இல்லை. சகுந்தலா ஒருகணம் திடுக்கிட்டுப்போய் இருந்தாள். தங்கை யின் திடீர் ஏற்பாட்டில் குழம்பிப்போய், சகுந்தலா அவசர அவசரமாய் இறங்கி “ஹலோ, ஹவ் டூ யூ டூ என்றாள். இங்கிலிஸ்க்காரருக்கே உரிய பெரிய தோற்றம். பூனைக் கண்கள். பொன்னிறத் தலை. சிரித்த முகம். பார்த்த உடனேயே சகுந்தலாவுக்கு அன்ரனியைப் பிடித்துவிட்டது. தாய் தகப்பனுக்கல்லவோ பிடிக்கவேண்டும். அன்ரனி எடுத்த எடுப்பிலேயே கேட்டான் “என்னைச் செய்ய வேண்டாம் என்று உங்கள் தங்கைக்குச் சொல்ல வந்ததாகக் கேள்விப் பட்டன்.” சகுந்தலாவுக்கு மீனாவில் கோபம் வந்தது. எத்தனை பேருக்குச் சொல்லி வைத்திருக்கிறாள் இப்படி.
“நான் அப்படி ஒன்றும் பிளான் பண்ணிக்கொண்டு வர வில்லை. அம்மா அப்பா மீனாவின் எதிர்காலத்தைப் பற்றி பயப்படுகிறார்கள். கல்யாணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் எங்களைப் பொறுத்தவரையில். உங்களைப் பொறுத்த வரையில் கல்யாணம் பெரிய முக்கியமில்லை. இன்றைக்கு கல்யாணம் நாளைக்கு விவாகரத்து. அதுதான் மீனாவைச் சொன்னேன், செய்வதை யோசித்துச் செய்யச் சொல்லி. சகுந்தலா கஷ்டப்பட்டு தன் பிரசங்கத்தை முடித்துக்கொண் டாள். அன்ரனியின் ஊடுருவும் பார்வையைத் தாங்காமல் எங்கோ பார்வையைத் திருப்பிக் கொண்டாள். பார்க் முழுக்க நிறநிறமான பூக்கள்போல வித்தியாசமான உடையணிந்த பலநாட்டு மக்களும் நிறைந்து வழிந்தனர். குழந்தை கீதாஞ்சலி குதூகலத்துடன் கிறினிவிச் ரேகையில் துள்ளிக் குதித்து விளையாடினாள். மீனா குழந்தைக்குச் சொல்லிக் கொண்டிருந்தாள், இந்த ரேகையில் இருந்துதான் உலகத்தில் நேரத்தைக் கணிக்கிறார்கள் என்று. தூரத்தில் தேம்ஸ்நதி பாம்புபோல் வளைந்து பலதரப்பட்ட கப்பல்களைச் சுமந்து கொண்டு தவழ்ந்தது.
“ஏன் உங்கள் தாய் தகப்பன் மீனாவின் கல்யாணத்துக்கு எதிராக இருக்கிறார்கள்” அன்ரனி கேட்டான். என்ன பதில் சொல்வது இவனுக்கு? மீனா இவ்வளவு நாளும் சொல்லாமலா இருப்பாள் ஏன் எதிர்க்கிறார்கள் என்று.
“பலகாரணங்கள். வித்தியாசமான வாழ்க்கைமுறை ஒரு காரணம் என்று நினைக்கிறேன். இங்கிலாந்தில் கறுப்பரின் எதிர்காலம் எப்படியிருக்கும் என்ற பயம் இன்னொரு கார ணம். கலப்புக் குழந்தைகளின் பிரச்சனைகள் தான் இப்போதே தெரிகிறதே? தாயின் வழியிலா தகப்பனின் வழியிலா வாழ்க் ‘கையை அமைத்துக் கொள்வது என்ற பிரச்சனையவர்களுக்கு ஏற்படலாம். காதலிக்கும்போது எதிர்காலம் ஒரு பிரச்சனை யும் இல்லாமல் தெரியலாம். நாள் போகப் போகத்தான் தெரியும் எப்படிப் பிரச்சனைகள் வருமென்று.” சகுந்தலா தனக்குத் தெரிந்தமாதிரி இலகுவான விதத்தில் விளங்கப் படுத்தினாள் தாய் தகப்பனின் மன நிலையை.
”சகுந்தலா நீங்கள் தாய் தகப்பன் சொன்னவரைத்தானே செய்தீர்கள்?” அன்ரனி மரத்தில் சாய்ந்தவாறு நின்று கேட்டான்.
ஓகோ இவருக்கும் சொல்லியிருக்கிறாளா மீனா தன் பழைய கதையைப் பற்றி?
”ஓம் அதற்கென்ன” சகுந்தலா அவனின் கேள்வியின் உள் அர்த்தம் தெரியாமல் கேட்டாள்.
“தயவுசெய்து நினைக்கவேண்டாம், தனிப்பட்ட விடயங்களை பற்றிக் கேட்பதாக நினைக்கவேண்டாம். சொல்லுங்கள் சகுந்தலா, உண்மையான மனத்துடன், நீங்கள் மேலை நாட்டு வழக்கமுறை தெரிந்துகொண்டும் முன்பின் தெரியாத ஒருத்த ரைச் செய்துவிட்டு அவரின் திருப்திக்காக வாழ்க்கை எல்லாம் அர்ப்பணிப்பதை விட்டு விட்டு ஒரு நாளும் நினைக்கவில்லையா எனக்குப் பிடித்த ஒருத்தரைச் செய்து……” அன்ரனியின் பேச்சை சகுந்தலாவின் கூரிய பார்வை தடுத்தது.
”அன்ரனி, உங்கள் வாழ்க்கை முறையில் காதலித்த துணை யைக் கல்யாணம் செய்வது பண்பாடு. எங்கள் வாழ்க்கை முறையில் கல்யாணம் செய்தவரைக் காதலிப்பது பண்பாடு. எதற்கும் ஒரு விலையுண்டு. என்ன கொடுக்கிறோமோ அதன் விலைதான் கிடைக்கும்.” சகுந்தலாவின் மனம் அழுதது. எப்படித் திருத்த முயன்றும் தன்னில் சந்தேகப்பட்டு நடத்தும் கணவனை வைத்துக்கொண்டு இப்படி என்னால் பொய் சொல்ல எப்படி முடிந்தது என்று நினைத்தாள். தனக்குப் பிடித்த ஒருவனைச் செய்துகொண்டு…… அவனுக்குத்தான் அந்தத் தலைவிதியில்லையோ அதற்காக வாழ்க்கையில் எனக்குத் தோல்வி என்று சொல்லிக் கொள்ளத் தயாராய் இல்லை.
என்ன போலி வாழ்க்கை?
“என்ன பெரிய தர்க்கம் நடக்கிறது?” மீனா கேட்டுக்கொண்டு வந்தாள். அன்ரனியையும் அவளையும் பார்க்க பூரண நில வும், அமாவாசையும் போல் இருந்தது. மீனா நல்ல நிறம் தான். ஆனால் அன்ரனியின் வெளிறிய தோலுக்கு முன்னால் மீனாவின் நிறம் தெரியவில்லை. இங்கிலாந்தில் சாதாரண மாக நடக்கும் கல்யாணங்கள்போல் இவர்கள் கல்யாணமும் விவாகரத்தில்போய் முடியுமா?
“ஏன் எங்கள் கல்யாணத்துக்கு உங்கள் தாய் தகப்பன் எதி ராக இருக்கிறார்கள் என்று உங்கள் தமக்கையைக் கேட்டேன். அதற்குப் பல தத்துவக் கருத்துக்கள் மறுமொழிகளாக வரு கின்றன. அன்ரனி சிரித்துக்கொண்டு சொன்னான். எவ்வளவு துணிவு மீனாவுக்கு? எனக்கேன் இல்லாமற் போய் விட்டது. இலங்கையனைக் காதலித்ததற்கே எனக்குப் பேச்சு. இவள் இந்த வெள்ளைக்காரனுடன்; எவ்வளவு பேச்சு விழுந்திருக்கும். இப்படித் துணிவுள்ளவள் ஏன் சொல்லாமல் கொள்ளாமல் கல்யாணத்தை முடித்துவிட்டு இருப்பதுதானே? ஏன் உத்தியோகபூர்வமாக அறிவித்துவிட்டு அவதிப்படுகிறாள்? போதாதற்கு என்னையும் இழுத்தடித்து…” மத்தியானச் சாப்பாடு ஒரு இந்தியன் கடையில் சாப்பிட்டு விட்டு அன்ரனியைக் கொண்டுபோய் கிறினிவிச்சில் விட்டாள் மீனா.
சொல்லாமல் கொள்ளாமல் அன்ரனியை அறிமுகப்படுத்தியது போல் இன்னும் என்னென்ன செய்வாளோ இந்தக் குறும்புக் காரி எனத் தங்கையைப் பேசிக்கொண்டாள் மனதில்.
“ஏன் விம்பிள்டனில் ஒருவரும் இல்லை என்று கிறினிவிச்சுக் குத் தேடி வந்தாயா மாப்பிள்ளையை பிடிக்க” தங்கையைக் கேட்டாள் சகுந்தலா. மத்தியான வெயில் முடிந்து குளிர்காற்று திறந்திருந்த கார் ஜன்னலால் உள்ளே புகுந்து விளையாடி யது. ‘இவர் கிறினிவிச்சில் வேலைசெய்கிறார். சொந்த இடம் வால்த்தம்குறோஸ். யூனிவர்சிட்டியில் பழக்கம்” என்றாள் மீனா. தமக்கை அன்ரனியைப் பற்றி என்ன நினைக்கிறாள் என்று தங்கை கேட்கவில்லை. ‘நீங்கள் யார் நினைத்தாலும் என்ன நினைத்தாலும் அக்கறை இல்லை’ என்று நினைக்கிறாளா மீனா? “அவ்வளவு துணி வுள்ள நீ என் அம்மா அப்பாவுக்குச் சொல்லித் துக்கப் படுத்த வேணும்.பேசாமல் கல்யாணம் செய்வதுதானே? என்னையும் இழுத்தடித்து என்ன கூத்துக் காட்டுகிறாய்” சகுந்தலா கடிந்துகொண்டாள் தங்கையை.
“அப்பாவும் அம்மாவும் இப்படிக் காட்டுமிராண்டித்தனமாக எதிர்ப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. அத்துடன் உலகம் முன்னேறிக்கொண்டு போகிறது. அவர்களும் முன் னேறியிருப்பார்கள் என்று நினைத்தேன். உனக்குச் செய்த கொடுமையை எனக்குச் செய்வார்கள் என்று நான் நினைக்க வில்லை.” மீனா காரோட்டும் கவனத்தில் பார்வையைப் பதித்திருந்ததால் சகுந்தலாவின் முகத்தில் படர்ந்த இருளைக் கவனிக்கவில்லை.
“மீனா அவர்கள் எங்களுக்கு நன்மையைத்தான் செய்கிறார் கள். திட்டம்போட்டு எங்களைத் துன்பப்படுத்தவில்லை.” சகுந்தலா தங்கையைச் சமாதானம் பண்ணும் தொனியிற் சொன்னாள்.
”சகுந்தலா, தாய் தகப்பனில் எனக்கு அன்பில்லாமல் இல்லை. அவர்களில் உனக்கு எவ்வளவு அன்பிருக்கிறதோ அதைவிடக் கூட எனக்கிருக்கலாம். எங்கள் படிப்புக்காக முன்னேற்றத்துக்காக அவர்கள் எவ்வளவு செய்கிறார்கள் என்று தெரியாமல் இல்லை. ஒன்று உனக்கு விளங்க வேண் டும். சகுந்தலா எங்களில் அன்புக்காக மட்டுமல்ல தங்கள் அந்தஸ்துக்காகவும்தான் இவ்வளவு கஷ்டப்படுகிறார்கள். ஒரு எக்கவுண்டனின் மகள் உதவாக்கரை யாரையும் செய்யக் கூடாது என்றுதான் தங்கள் அந்தஸ்துக்குத் தகுந்த மாப்பிள்ளை தேடுகிறார்கள். எங்கள் விருப்பு வெறுப்பைப் பற்றி அவர்களுக்கு அதிகம் கவலையில்லை. எல்லாம் பணம் அந்தஸ்து அடிப்படையில்தான்” மீனா சொல்லிக்கொண்டே போனாள்.
”மீனா அப்பா அம்மாவைப் பற்றி இவ்வளவு குரூரமாகப் பேசாதே. உலகத்தில் எந்தத் தாய் தகப்பனும் பிள்ளை களுக்குத் தகுந்ததைத்தான் செய்வார்கள்” சகுந்தலா தாய் தகப்பனுக்குப் பரிந்து பேசினாள்.
‘இவள் மீனாவுக்குப் புத்திசொல் சகுந்தலா’ என்று கெஞ்சும் தாயின் முகம் ஞாபகம் வந்தது. எவ்வளவு பரிவு பாசம் அந்தத் தாயின் முகத்தில்.
“அப்படியா சகுந்தலா. எங்கள் சந்தோஷத்தில் அக்கறை உள்ளவர்கள் ஏன் உன் விருப்பப்படி நடந்துகொள்ளவில்லை. என்ன குறை கார்த்திகேயனுக்கு? ஏதோ யார் காலையோ, கையையோ பிடித்து லண்டனுக்குப் படிக்க வந்தாற்போல் இவர்கள் எல்லாம் பெரிய ஆட்களோ என்ற சின்ன மனப் பான்மையிற்தானே உன்னைச் சிவநேசனுக்குச் செய்து வைத்தார்கள்”. மீனாவின் கேள்விகள் ஈட்டிகளாய்க் குத்தித் துளைத்தன சகுந்தலாவின் மனதில்.
“எல்லாம் என் தலைவிதி. என் விதி அப்படி என்பதற்காக ஏன் மற்றவர்களை நொந்துகொள்ள வேண்டும்?” சகுந்தலா ஏனோதானோ என்று சொன்னாள். மீனா மெல்லமாகச் சிரித்தாள். “என்ன இளிக்கக் கிடக்கு” தங்கையில் எரிந்து விழுந்தாள் சகுந்தலா.
“நான் விதியிற் பழியைப் போட்டுவிட்டு எந்தக் குடிகாரனை யும் செய்யத் தயாராயில்லை.” என்ன துணிவு இவளுக்கு இப்படி சகுந்தலாவை மட்டம்தட்ட சகுந்தலாவுக்கு மனம் நொந்தது.
சகுந்தலாவின் முகம் சிவந்தது. கோபத்தில் தங்கையைப் பேச வாய் எடுக்கமுதல் கார் சட்டென்று நின்றது. மீனா துள்ளிக் குதித்துக்கொண்டு போய் கதவைத் தட்டினாள். இது யார் வீடு? சொல்லாமற் கொள்ளாமல் எங்கெல்லாம் இழுத்தடிக்கிறாள் இவள். குழந்தை சித்திக்குப் பின்னால் குதித்து ஓடியது. தங்கையில் முணுமுணுத்துக்கொண்டு பின்னால் போனாள் சகுந்தலா.
தட்டிய கதவு திறந்தது. சகுந்தலா திறந்த வாய் மூடாமல் கதவைத் திறந்தவளைப் பார்த்தாள். அவள் கண்கள் வியப் பால் விரிந்தன. உஷா! சகுந்தலாவுக்கு வாய் வரவில்லை. “என்னடி ராசாத்தி நான்தான். என்ற ஆவியல்ல இது.’ உஷா ஒரு துளியும் மாறவில்லை. அதே அழகிய முகம். கலகலப்பான வாய். நீண்ட பெரிய விழிகள்.
“உஷா”, சகுந்தலா மேலே ஒன்றும் சொல்லவில்லை. மீனா குழந்தை கீதாஞ்சலியுடன் ஐஸ்கிறீம் கடைக்குப் போய்க்கொண்டிருந்தாள். “என்ன சகுந்தலா அப்படிப் பார்க்கிறாய்? உள்ளுக்கு வா. நீதான் எங்களையெல்லாம் மறந்தாலும் நாங்கள் யாரும் உன்னை மறக்கவில்லை.” உஷா சினேகிதியின் தோளில் கைபோட்டு அழைத்தாள். “இவள் மீனா எனக்கேன் சொல்லவில்லை? உன்னிடம் கூட்டிக்கொண்டு வருவதாக” சகுந்தலா சந்தோஷத்தின் பரபரப்பில் கேட்டாள். உஷாவின் கலகலப்பு ஒருதரம் மறைந்தது முகத்திலிருந்து.
“நான்தான் சொன்னேன் சொல்லாமற் கொள்ளாமல் கூட்டிக்கொண்டு வரச்சொல்லி.” உஷா குசினிக்குப் போய்க் கொண்டு சொன்னாள். “ஏன் உஷா” சகுந்தலா விளங்காமற் கேட்டாள். எல்லாம் என்ன மர்மமா மீனாவையும் உஷா வையும் பொறுத்தவரையில்? பின்தொடர்ந்து வந்த சினேகிதி யின் முகத்தில் தவழும் வியப்பைக் கவனித்தபடி சொன்னாள் உஷா.
“எங்களுடன் ஒரு தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்று நினைத்திருக்கிறாய். அதுதான் இவ்வளவு நாளும் ஒரு கடிதம்கூடப் போடாமல் இருந்தாய். நான் உன் மௌனத்தைக் கலைக்க விரும்பவில்லை. உனக்கு உன் பழைய நினைவுகளைக் கிளறுவது வேதனையாக இருக்கு மென்று இருந்தால் நான் எதுவும் கதைக்கவில்லை.” உஷா சினேகிதியின் முகத்தைக் கூர்மையாகப் பார்த்துக்கொண்டு சொன்னாள்.
என்ன பெருந்தன்மை என் சினேகிதிக்கு. இத்தனை நாள் ஒரு கடிதம்கூடப் போடாமல் இருந்த என்னை மன்னிக்கிறாள். எனக்குத் துன்பமாக இருந்தால் பழைய கதைகளைக் கதைக்கக்கூட விரும்பவில்லை என்கிறாள்.
“நான் கோழையாக இருந்தது உண்மைதான் உஷா. உன் கடிதங்களுக்குக்கூட பதில் எழுதாமல் இருந்தது கோழைத் தனத்தில்தான். இப்போது அப்படியில்லை. எப்படித் துன்பங்களோடும் துயரங்களோடும் வாழ்வது என்று பழகிவிட் டேன். எந்தப் பழைய நினைவும் என்னைப் பைத்தியக்காரி யாக்காது என்று நினைக்கிறேன்.” சொல்லும்போது கண்கள் கலங்கின.
மீனா குழந்தையுடன் வருவது தெரிந்தது.
“தாயைப் போலவே இருக்கிறாள் உனது மகள். என்ன பெயர்” குழந்தையை அணைத்துக்கொண்டு கேட்டாள் உஷா. கோப்பிக் கோப்பையுடன் ஆறுதலாக உட்கார்ந்தவள் சினேகிதி உஷாவை நேரடியாகப் பார்த்துக்கொண்டு சொன்னாள்.
“என் மகளின் பெயர் கீதாஞ்சலி” உஷா திடுக்கிட்டுப் பார்த் தாள் சினேகிதியை. மீனா டெலிவிஷனில் ஏதோ திருப்பிக் கொண்டு இருந்தாள். சினேகிதிகள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்வையால் படித்துக்கொள்ள முயல்வதை அவள் அறியவில்லை. உஷா முகத்தில் சிரிப்பை வரவழைத்துக் கொண்டு “என்ன மீனாவின் கல்யாணத்துக்கா வந்தீர். என்றாள்.
“ஓமோம் மீனா வெற்றிலை வைத்துக் கூப்பிட்டாள் வெள்ளைத் தோலுக்குப் பின்னால் ஓடப்போவதாக. வந்து சேர்ந்திருக்கிறேன்” சகுந்தலா சொன்னாள் உஷாவுக்கு. நீயும் என்ன என்னை மீனாவின் கல்யாணத்தைக் குழப்ப வந்திருக்கிறாயோ என்று கேட்கவா போகிறாய் என்பது போல் பார்த்தாள் சகுந்தலா.
“உடுப்புத் தைப்பதும், உரியவனைத் தேர்ந்தெடுப்பதும் அவரவர் உள்ளத்தைப் பொறுத்தது என்பார்கள். எனக்கேன் தேவையில்லாத வேலை” சகுந்தலா அமைதியாகச் சொன்னாள்.
“என்னிடம் சொல்லும் இதே கருத்தை உமது தாய் தகப்ப னுக்குச் சொன்னால் என்ன? வெள்ளைக்காரனைச் செய்வதை விட நீ செத்துப்போனால் சந்தோஷப்படுவேன் என்று சொன் னாவாம் உனது தாய் உஷா சொன்னாள். என்னைப் பொறுத்த அளவில் எனக்கிருக்கும் சொந்தப் பிரச்சனைகளே போதும். மீனாவுக்குத் தெரியும் என்ன செய்யவேண்டு மென்று. ஏன் கெதியாய்ச் செய்கிறாள் இல்லை என்றுதான் தலையிடியாக இருக்கிறது. இந்தக் கூத்து ஒன்றையும் பார்க்காமல் ஓடிவிடலாம்.” சகுந்தலா அலுத்த குரலில் சொன்னாள்.
“இவ்வளவு செலவழித்து வந்துவிட்டாய். இன்னும் ஒரு மாதத்தில் எல்லாம் முடியவிட்டுப் போகலாம். இந்தக் கிழமை முடிவில் அன்ரனி வியாபார விடயமாக ஹொஸ்கொக் போகிறார். ஒரு மாதத்தில் வருகிறார். பின்னர் யாருக்கும் கவலையில்லாமல் போய்த் தொலைகிறேன்.” மீனா வேடிக்கையாகச் சொன்னாலும் போய்த் தொலைகிறேன் என்பதை அழுத்தமாகச் சொல்லும்போது தமக்கையைப் பார்த்தாள்.
தங்கையின் மனநிலை புரிந்தது சகுந்தலாவுக்கு. இந்த நாடகம் பார்க்க வராமல் நியூயோர்க்கிலேயே இருந்திருக்க லாம் என்று தோன்றியது சகுந்தலாவுக்கு.
“அதுசரி உஷா எங்கே உமது கணவர்?” சகுந்தலா சினேகிதியைக் கேட்டாள்.
உஷா மீனாவைக் கருத்துப்பொதிந்த விதத்தில் பார்த்தாள். “உமது கணவர் றொபினை மீனா என்ன அவளின் ஜீன்ஸ் பொக்கட்டிலா வைத்திருக்கிறாள்?” சகுந்தலா வேடிக்கையாகச் சிரித்துக்கொண்டு கேட்டாள். மீனா டெலிவிஷன் பார்க்கும் பாவனையில் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
உஷா மீனா மாதிரி தாய் தகப்பனை எதிர்த்துக்கொண்டு வெள்ளைக்காரனைச் செய்தவள். அதன் காரணமாக பேரின்பநாயகத்தார் சகுந்தலாவை உஷாவுடன் பழகக் கூடாது என்றுகூடத் தடை விதித்திருந்தார்.
எங்கே றொபின் போய்விட்டான். கேள்விக்குறியுடன் சினேகிதியைப் பார்த்தாள் சகுந்தலா. “மீனா சொல்ல வில்லை. நான் றொபினை விவாகரத்துச் செய்துவிட்டேன்” என்றாள் உஷா.
– தொடரும்…
– உலகமெல்லாம் வியாபாரிகள், முதற் பதிப்பு: ஏப்ரல் 1991, நீலமலர், சென்னை.
![]() |
இராஜேஸ்வரி பாலசுப்பிமணியம் கிழக்கு இலங்கையில் பிறந்து லண்டனில் கடந்த 45 வருடங்களாக வாழ்கிறேன். கல்வி: மானுட மருத்துவ வரலாற்றில் முதமாமணிப்பட்டம் (எம்.ஏ) திரைப்படத்துறையில் பி.ஏ ஹானர்ஸ் பட்டம்.இன்னும் பல பட்டங்களும் தகுதிகளும் எழுத்துக்கள்: 7 நாவல்கள், 6 சிறுகதைத் தொகுப்புக்கள், 2 மருத்தவ நூல்கள, 1 முரகக் கடவுள் வழிபாடு பற்றிய ஆராய்ச்சி. இலங்கையிலும் இந்தியாவிலும் பல விருதுகள் கிடைத்திருக்கின்றன. கோவை ஞானி ஐயாவின் உதவியுடன் பதினொருவருடங்கள் பெண்கள் சிறுகதைப்…மேலும் படிக்க... |