கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 18, 2026
பார்வையிட்டோர்: 168 
வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்

(1988ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சித்ரா ஒரு வித்தியாசமான பெண் எதையும் ஆராய்ந்து அவள் எடுக்கும் முடிவே இறுதியான முடிவு. அம்முடிவு சிலவேளைகளில் மடமையாகத் தோன்றலாம். ஆனால் அதைச் சிந்தித்துப் பார்த்தால், அவள் செய்வது நியாயமாகவேபடும். எதிலும் புதுமை இருக்க வேண்டும் என்று எண்ணுபவள். அவளுடைய பேச்சுத்திறனும் உயர்ந்த கருத்துக்களும் ஒருவரைச் சிந்திக்க வைப்பன. அவளை இவ்வாறு புகழும் நான் யாரென்று நினைக்கிறீர்களா? நான் அவள் ரசிகையல்ல; அவளுடன் சுமார் இருபத்தைந்து ஆண்டுகளாக இணைபிரியாது பழகி வரும் பள்ளித் தோழி. பீட்டி உயர்நிலைப் பள்ளியில் தான் ஒன்றாகப் படித்தோம், பழகினோம், வளர்ந்தோம். ஒரே சிந்தனையாலும் செயலாலும் இணைந்திருந்தோம். ஆனால் எங்களுடைய சந்திப்பு, ஜோசப் என்பவர் குறுக்கீட்டால் சற்றுக் குறைந்திருப்பினும், அது எங்கள் நட்பைப் பாதிக்கவில்லை, உறவைக் குலைக்கவில்லை.

எங்களுடன் கல்வி பயின்று வந்த ஜோசப் சித்ராவின் நட்பை முதலில் பெற்று அந்நட்பைக் காதலாக வளர்த்துக் கொண்டான். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அவர்களது காதல் உறவு வலுப்பெறத் தொடங்கியது. பள்ளி முடிந்ததும் ஒவ்வொரு நாளும் இருவரும் பாசிரீஸ் பூங்காவிற்குச் சென்றுவிட்டுத்தான் வீடு திரும்புவார்கள். “ஏன் தாமதம்?” என்று சித்ராவின் பெற்றோர் கேட்டால், ”இன்று எனக்குக் கணக்குப் RE- MEDIAL பாடம்’ என்று கூறுவாள். தாயைச் சிறுவயதில் இழந்து, தந்தையை விபத்தில் பறிகொடுத்து, உடன் பிறந்தவர்கள் என்று சொல்லிக் கொள்ள யாரும் இல்லாமல், வருந்திய அவனுக்கு அவளின் உறவு பழம் நழுவிப் பாலில் விழுந்தது போலவும் அதுவும் நழுவி வாயில் விழுந்தது போலவும் மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. அதுமட்டு மல்லாமல் கண்ணிரண்டும் இழந்த குருடன் ஒருவன் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் பார்வை பெற்றதைப்போல மகிழ்ந்தான். வேலை செய்து கொண்டே படிப்பது என்பது கடினம் தான். ஆனால் அவனுடைய தன்னம்பிக்கையும், விடாமுயற்சியையும், உழைப்பையும், நான் பாராட்டாமல் இருக்க முடியாது.

நான்கு ஆண்டுப் பள்ளி வாழ்க்கை அவர்களிருவரின் உறவை வலுப்படுத்திது. ஒருவரையொருவர் புரிந்து கொள்ளவும் வழிவகுத்தது. படிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கச் சிங்கப்பூர்ப் பொதுக்கல்விச் சான்றிதழ் சாதாரண நிலைத் தேர்வும் விரைவாக வந்தது. பிறகு நாங்கள் மூவரும் நல்லபடியாகத் தேர்வை எழுதினோம். ஓரளவு வெற்றியையும் பெற்றோம். அதன் பிறகு மூவரும் ஆர்ச்சட் சாலையில் அமைந்துள்ள சென்டர்பாய்ண்ட் கடைத் தொகுதியிலுள்ள ஒரு கடைக்கு விண்ப்பம் செய்தோம்.

ஜோசப்புக்கு மட்டும் வேலை கிடைத்தது. சித்ராவும் நானும் சாங்கி விமான நிலையத்தில் கணக்கர் வேலைக்கு விண்ணப்பம் செய்து வேலையும் பெற்றோம். இப்படியே இரண்டு ஆண்டுகள் மோட்டார் வாகனங்களில் பொருத்தப்பட்டிருக்கும் RPM சக்கரம் சுழல்வது போல் மிக விரைவாக உருண்டோடியது. சித்ராவின் காதல் அவள் பெற்றோருக்கு மெல்லத் தெரிய வந்தது.

சித்ராவின் காதலை அறிந்த அவளுடைய பெற்றோர் அதற்குத் தடையாக நின்றனர். அதற்கு மதம் ஒரு சிக்கலாக இருந்ததே காரணமாகும். ஆதலால் அவள் பெற்றோர் ஜோசப்பை அழைத்து அவனுடன் கலந்து பேசித் தங்களின் மதத்திற்கு மாறுமாறு வற்புறுத்தினார்கள். ஆனால் ஜோசப் உறுதியாகவும், இறுதியாகவும், ஆணித்தரமாகவும் கூறிய பதில் என்னைச் சற்றுநேரம் வியப்பில் ஆழ்த்தியது. “நான் கிறிஸ்துவன்தான், ஆனால் உங்கள் மகள் மதம் மாறி என் மதத்துக்கு வரவேண்டும் என்று சொல்லவில்லையே சிறுவயது முதல் ஒரு மதத்தைப் பின்பற்றி வரும் ஒருவரை மதம் மாறச் சொல்வது, இயலாத செயல். ஆனால் சிலர் வற்புறுத்தலின் பெயரால் மதம் மாறிக் கொண்டாலும், அந்த மதத்தின்படி அவர்கள் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யாமல் இருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை, தன் மதத்தைப் பற்றி அறியாத ஒருவனால்தான் பிற மதத்துக்கு மாற முடியும். நான் ஓரளவுக்கு என் மதத்தைப் பற்றி அறிந்து வைத்திருக்கிறேன். அதேபோல்தான் நீங்களும். ஒவ்வொருவருக்கும் தங்கள் மதம் தான் உயர்ந்தது. அதேபோல்தான் எனக்கும். எங்கள் காதலில் ஒருவரை ஒருவர் உணர்ந்து மனதாலும் நினைவாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு வாழ்விலும் சாவிலும் என்றுமே ஒன்றாக வர்ழ வேண்டும் என்ற எண்ணத்தாலும் உள்ளத்தாலும் நாங்கள் அன்பைப் பறிமாறிக் கொண்டோம். அப்படிப்பட்ட உறவை மதத்தால் பிரிக்க முடியாது.

“இறைவன் அங்கு இணைத்ததை மனிதன் இங்கு பிரிக்காதிருக்க வேண்டம்.”

“இது கிறிஸ்துவின் வாக்கு மட்டுமல்ல இது மனிதனுக்காக வழங்கப்பட்ட வாக்கு. நாங்கள் வாழ்க்கையில் ஒன்று சேர்வதற்கு மதம் என்ற எல்லைக்கோட்டைப் போட்டு நான் அதில் உங்களுக்காக அடங்கி இருக்க வேண்டும் என்று தடை போடாதீர்கள். இரண்டு மனங்கள் ஒன்றுபடுவதற்கு மதம் ஒரு வேலியாக நிற்க நியாயமில்லை. எனக்காக அவளும், அவளுக்காக நானும் இன்பத்தையும், துன்பத்தையும் பகிர்ந்து கொள்வோம். இதைவிட மதம்தான் உயர்ந்தது என்று நீங்கள் நினைத்தீர்களானால், என் முடிவு நிச்சயமாக எதிர்மாறாகத்தான் இருக்கும்” என்றான் ஜோசப்.

இதைக்கேட்ட சித்ராவின் பெற்றோர் வெகுண்டு பிடிவாதமாக மறத்துவிட்டார்கள். “சித்ரா, நீ அவனை மறந்துவிடுவது உனக்கும் நல்லது. நம் குடும்பத்துக்கும் நல்லது. இதையும் மீறி அவனை மணம் செய்து கொண்டால், உனக்கும் எங்களுக்கும் உள்ள உறவு அறுந்து விட்டதாக நினைத்துக்கொள். அப்படியே உன்னைக் கைகழுவிவிடுவோம்!” என்றார்கள். சித்ராவினுடைய பெற்றோரின் முடிவு மாறம் என்ற நம்பிக்கையில் நான் அவர்களின் மனத்தை நினைத்ததும் வீணாகியது. நானும் சித்ராவிடம் “பொறுத்திரு காலம் வரும். உன் பெற்றோர் மனம் மாறும்” என்றேன். அதற்கு அவளோ ”உன்னைவிட என் பெற்றோரைப் பற்றி எனக்கு நன்றாகவே தெரியும். இவர்கள் எடுத்த முடிவும் மாறாது. அதைப்போல் நானும் இக்காலத்துப் பெண்கள் படி தாண்டித்தான் ஒரு நல்வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும் என்றால், நான் தயாராக இருக்கிறேன். எனக்கு என்றும் அவர்தான், அவருக்குக் கொடுத்த இடம் கொடுத்தது தான் அதில் வேறொருவரை குடியேற்ற என்னால் முடியாத செயல். வாழ்விலும் சாவிலும் அவருடனே இருக்க விரும்புகிறேன். என்று என் மனத்தை அவருக்குக் கொடுத்தேனோ அன்றே அவருக்கு உள்ளத்தால் மனைவியாகிவிட்டேன். எனவே நான் அவருடன் வாழ்வதுதான் முறை” என்று கூறிப் பெற்றோரின் வெறுப்பையும் சாபத்தையும் பெற்றுக் கொண்டு, வீட்டை விட்டு வெளியேறி, ஜோசப்பின் காலடியில் சரணடைந்தாள். அன்போடும், ஆனந்தத்தோடும் அவளை ஏற்றுக் கொண்டான் ஜோசப். போராட்டங்களுக்குப் பின் மகிழ்ச்சி அதில் கிடைக்கும் திருப்தியே ஒரு தனிச்சுவை.

வேதங்களின் மந்திரங்களோடோ ஆலயமணியோசை யுடனோ அவர்களின் திருமணம் நடைபெறவில்லை. மிகவும் எளிமையான முறையில் போர்ட் கேனிங் (Fort Canning Hill) மலையில் அமைந்துள்ள சிங்கப்பூர்ப் பதிவுத் திருமண அலுவலகத்தில் நடைபெற்றது. சாட்சி கையொப்பமிட நானும் எங்களுடன் படித்த இன்னொரு மாணவனும் சென்றோம். திருமணத்திற்குப் பிறகு வாழ்க்கை எளிமையாகவும் மகிழ்ச்சியாகவும் அவர்களுக்கு அமைந்தது. திருமணத்திற்குப் பிறகு வேலைக்குச் செல்ல வேண்டாம் என்று ஜோசப் சொல்லியும் கேளாமல் ஒரே பிடிவாதமாக சித்ரா வேலைக்குச் செல்லத் தொடங்கினாள். அவர்கள் வாழ்க்கையைப் பிரச்சனையாக நினைக்காமல், பிரச்சனைகளை எப்படித் தவிர்ப்பது? என்ற நோக்கத்தோடும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையோடும் நீக்குப் போக்குடன் ஒருவரையொருவர் புரிந்து நம் சிங்கை அரசு வலியுறுத்தும் குடும்நலப் பண்புகளைப் பின்பற்றியும் வாழ்ந்தார்கள். அந்த ஈராண்டுகளும் ஈராயிரம் ஆண்டுகள் போல் இன்பமாக வாழ்ந்த இன்பத்தைப் பெற்றார்கள்.

குழந்தை பேறுக்காக ஏங்கித்தவித்த அவர்களின் குறை நீண்டு நீடிக்கவில்லை. மருத்துவப் பரிசோதனையில் அவள் மூன்று மாதம் என அறிந்ததும் ஆனந்தத்தில் இறைவனின் மகிமையைப் புகழ்ந்தார்கள். ஆனால் விதி என்கிற சதிகாரன் அவர்கள் இன்பத்திற்கும், மகிழ்ச்சிக்கும் முற்றுப்புள்ளி வைத்தான். வேலைக்குச் சென்று வீடு திரும்பிய ஜோசப், வேகமாக வந்த வாகனம் ஒன்றில் மோதி அதே இடத்தில் மரணமடைந்தான். இச்செய்தியை அறிந்த சித்ரா அடியற்ற மரம்போல் சாய்ந்தாள். உடனடியாக அருகிலிருந்தவர்கள் முகத்தில் நீர் தெளிக்கச் சற்று நினைவு வந்தவளாகி அனலில் இட்ட சருகானாள். பறிகு கதறி அழுதாள். ஜோசப்பின் இறுதிச் சடங்குகள் நடைபெற்று முடிந்தன. ஆனால் அவளுடைய சோகம் இன்னும் முடியாமல் நெஞ்சக் கூட்டில் வந்து வந்து நினைவலைகள் வதைத்துக் கொண்டே இருந்தன. ஆனாலும் அவளுடைய உறுதியான உள்ளம் தன் எதிர்காலக் குழந்தையைச் சுற்றி நம்பிக்கையோடு அசைபோட்டது.

(1988-ஆம் ஆண்டு)

– விண்ணில் ஒரு மணல் வீடு (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: பிப்ரவரி 2011, தமிழ்க் கலை அச்சகம், சிங்கப்பூர்.

ஆசிரியரின் பிற நூல்கள் கதைத் தொகுதிகள் மரபுத்தொடர்க் கதைகள் (1990) ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு (1995) மனதில் உறுதி வேண்டும் (1995) தியாகப் பிறவி (1995) கட்டுரைத் தொகுதிகள் ஊன்றுகோல் (1989) கட்டுரை மலர்கள் (1990) என்னுரை - விண்ணில் ஒரு மணல் வீடு - பிப்ரவரி 2011 சிறுகதை எழுதுவது என்பது ஒரு கலை. அத்தகைய கலையை ஆர்வத்தோடு படைப்பவனும் படிப்பவனும் கலைஞன். இத்தகைய சிறுகதைகளை ஆர்வத்தோடு வாசகர்கள்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *