உருவத்தைத் தாண்டி




(1961ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
‘க்ளிக்!’
கறுப்புத் துணிக்குள்ளிருந்து தலையை வெளியே இழுத்த மாணிக்கம் நீண்டதொரு பெரு மூச்சு விட்டான். எதிரே பெரியவர்களும் குழந்தைகளுமாய் உட்கார்ந்திருந்த கூட்டம் எவ்வளவு தூரம் அவன் பொறுமையைச் சோதித்துவிட்ட தென்று அவனுக்கல்லவா தெரியும்!

ஒரு நிமிஷம் அமைதியாய் உட்கார்ந்த கூட்டம் இப்போது சலசலத்துக் கலைந்தது.
“படம் சரியாய் வந்திருக்குமில்லே?” என்றார் ஒரு நடுத்தர வயதினர்
“அதைப் பத்திக் கவலையை விடுங்க!”
“எப்போ கொடுப்பீங்க படத்தை?” இது ஒரு பெண் மணி. வேறு யார் இவ்வளவு அவசரப்படுவார்கள்!
“நாளை சாயங்காலம் கொடுத்திடறேன்.”
“அவ்வளவு நாழி ஆகுமா?” ஓர் இளைஞனின் மிடுக் கான குரல்.
“ஆகும் ஸார்.”
“கொஞ்சம் டச் பண்ணிக் கொடுங்க” என்றார் ஒரு கிழவர், தம் முகத்துக் கோடுகளைத் தடவிக்கொண்டே கோடுகள் அதிகமாய்ப் புகைப்படத்தில் தெரிந்துவிடப் போகிறதே என்ற கவலை. வயதுக்கும் சபலத்துக்கும் சம்பந்தமே கிடையாதோ?
“அப்படியே செய்யறேன் ஸார்”
“என் சட்டையிலிருக்கிற நீலப் பூ போட்டோவில் தெரியுமோ?” என்று கவலையோடு விசாரித்தாள் ஒரு ஐந்து வயதுப் பெண்.
மாணிக்கம் பதில் சொல்வதற்குள் கூட்டத்தைச் சேர்ந்த ஒரு சிறுவன், “வெள்ளையிலிருக்கிற பூ எங்கேயாவது படத்தில் தெரியுமா? மக்கு!” என்றான்.
“ஏன் தெரியாதாம்? தடியா ! அப்போ உன் புஷ் கோட்டு மட்டும் தெரியுமோ?”
“வாயாடினாயானால் தலையில் குட்டுவேன்.”
“நான் உன் காதைத் திருகுவேன்.”
“ஏய், ஏய், இரையாதீங்க.”
இவர்கள் வெளியே போய்த் தொலைய மாட்டார்களா? மாணிக்கம் உள்ளேயே புலம்பினான். சரியாக உட்காருவ தற்குள் இந்த மனிதப் படை செய்த தொந்தரவு! அப்பப்பா! படம் பிடிப்பவனென்று ஸ்டூடியோவில் வந்து நின்று விட்டால் மனிதனாய் இருக்கக் கூடாது. இயந்திரமாகத் தான் மாறிவிட வேண்டும்.
“அப்போ நாளை சாயங்காலம் வரேன், படத்தை வாங்கிக்க.”
“சரி ஸார்.”
இரைச்சல், வாத விவாதங்கள், குழந்தைகளின் சண்டைகள். ஒரு வழியாய்க் கூட்டம் கடைசியில் வெளியில் சென்றது.
மாணிக்கம் ஆயாசத்துடன் முகத்தைத் துடைத்துக் கொண்டான். வெளியே தூங்கி வழிந்து கொண்டிருந்த வேலைக்காரச் சிறுவனை எழுப்பி உட்கார்த்திவிட்டு பக்கத்தி லிருந்த இருட்டறைக்குச் சென்றான்.
பத்து நிமிடத்தில் வெளி வராந்தாவில் பேச்சுக்குரல். படம் எடுத்துக் கொள்ள வந்தவர்கள்தான்.
மாணிக்கம் களைப்பைக் களைந்துவிட்டுப் புன்னகையை எடுத்துத் தரித்தவனாய் வெளியில் வந்தான்.
“வாங்க ஸார்”.
ஒரு பெரியவர். உயரமாக, சற்று மாநிறமாய் இருந்தார் பஞ்சகச்ச வேஷ்டி, பனியன் தெரியும்படியாய் மஸ்லின் ஜிப்பா , மேலே அங்கவஸ்திரம், நெற்றியில் விபூதி; அதன் கீழ் சிறிதாய் ஒரு சந்தனப் பொட்டு. அவர் ஏதோ ஒரு பொது நல ஊழியராம். அடுத்த வாரம் அவர் படத்தை ஒரு பிரபல பத்திரிகை வெளியிட விரும்பியது. அதற்குத்தான் வந்திருந்தார்.
“நல்லாப் பார்த்து எடுங்க” என்றார் கவலையோடு .
“அதுக்கென்ன. இதோ பாருங்க, இந்த ஸ்கிரீனைப் பின்னாலே வைக்கலாமா?”
மாணிக்கம், சரியும் மரத்திரை ஒன்றைக் காட்டினான். சில பட்சிகள் பறக்கும் ஓவியத்தைப் பார்த்ததும் அம்மனிதர், “இது வேணாம். ஏதாவது பட்சி நூலா படிச்சிருக்கேன் நான்?” என்றார்.
“அப்போ இதைப் பாருங்க.”
மரத்திரை சரிந்து இன்னொரு காட்சியைக் காட்டியது. நீர்த் துறையும் சில மரங்களும். இயற்கையை வரைகிற ஓவியனா நான்? என்று கேட்பாரோ? மாணிக்கத்துக்குச் சந்தேகம்தான். ஆனால் ஏனோ அவருக்கு அக்காட்சி பிடித்து விட்டது.
“இது நல்லாயிருக்குது. உம், இங்கே கண்ணாடி ஒண்ணுமில்லையா?”
“அதோ அந்தச் சின்ன அறையில் இருக்குதே.”
அவன் குறிப்பிட்ட அறையில் ஒரு மேஜை. அதன் மேல் சீப்பு, முகப்பெளடர் முதலியவை. சுவரில் நிலைக் கண்ணாடி, கோட்ஸ்டாண்ட் ஒன்றில் சில கோட்டுகள் – இவை இருந்தன. பெரியவர் அங்குச் சென்று கண்ணாடியின் முன் தம் அழகைச் சிறிது செவ்வைப் படுத்திக் கொண்டு திருப்தியுடன் வெளியே வந்தார்.
“நான் ரெடி.”
“உட்காருங்க.”
அன்றாட நாடகமேதான். ‘இப்படித் திரும்புங்க’ ‘கொஞ்சம் மேலே பாருங்க ரொம்ப சாயாதீங்க கொஞ்சம் சிரிக்கணும்.’
“சிரிப்பு அதிகம் வேணாங்க. பொது நல ஊழியனுக்குச் சிரிக்க ஏதுங்க நேரம்?” என்றார் அவர்.
“இருந்தாலும் போட்டோவுக்கு …….”
“அதிகப்படி நமக்கு இஷ்டமில்லை.”
மாணிக்கம் பொறுமையாய் மேலே வேலையைக் கவனித்தான். படம் எடுக்கப்போகும் சமயம், “இருங்க இருங்க” என்றார் வந்தவர்.
“என்ன ஸார்?”
“பக்கத்திலே ஒரு மேஜைமேலே சில புஸ்தகம் வைத்தால் நல்லாயிருக்காது?”
‘பொது நல ஊழியருக்குப் படிக்க நேரமுண்டா?” என்று மாணிக்கம் கேட்கவில்லை; நினைத்துக் கொண்டான்.
“இதெல்லாம் என்ன புஸ்தகம்?”
“நீங்களே பாருங்களேன்” என்றான் மாணிக்கம்.
“இங்கிலீஷிலே இருக்குது. நமக்குத் தமிழ்தாங்க தெரியும். பரவாயில்லே. படத்துக்குத்தானே! என்ன புஸ்தகமானா என்ன?”
எல்லாம் பகட்டு, ஆடம்பரம். வெளித் தோற்றம். படம் பிடிக்கும் கலையே வாழ்வின் ஓர் இதயமற்ற, வெளிப் பூச்சான அம்சத்தைச் சித்திரிப்பதுதான்.
“படம் நாளை சாயங்காலம் கிடைக்கும். என்ன அளவிலே வேணும்?”
“காபினட்ஸைஸிலே கொடுங்க.”
தினம் இதே மாதிரிதான். மனிதர்கள் வருவதும் படம் எடுத்துக் கொள்வதும் வெளிப்புறத் தன்மைக்கு இலக் கணம் கூறும் ஒரு கலையாகவே அமைந்து விட்டது. மாணிக் கத்துக்கு அதுதான் சோறு போட்டது என்றாலும் மனித சமுதாயத்திலேயே ஒருவித இளக்காரம் – அதிகமாய்ப் போனால் பொறுமையுடன் பார்த்துச் சிரிக்கும் ஒரு மேல் நோக்கு – ஏற்பட்டது அவனுக்கு.
“வாங்க ஸார்.”
ஓர் இளம் ஜோடி. புதுமணத் தம்பதி என்று சொல்லித் தானா தெரியவேண்டும்? இருவர் முகத்திலும் சிரிப்புப் பொங்கி வழிந்தது.
“நீ உக்காரு புஷ்பா. நான் பக்கத்திலே நிக்கறேன். அப்படித்தான் போட்டோ …”
“ஊஹும்” அழகு கொஞ்ச பெண் சிணுங்கினாள். “நல்லாயிருக்குது ! நான்தான் நிப்பேன்.”
“கூடாது. அப்புறம் கால் நோவு வந்தால் நானில்லே பிடிக்கணும்?”
சூழ்நிலையை மறந்த உற்சாகம் ஆண் மகனுக்கு. ஆனால் பெண் மறக்கவில்லை. “சும்மா இருங்க” என்று கோபித்தாள். குரல் பொய்த்தது.
“அது போகட்டும், கையைப் பிடிச்சுக்கிட்டு நிக்கலாமா?”
“ஐயையோ, வேணாங்க!” நாணம் அழகிட்டது. “படத்தை வீட்டிலே எல்லாரும் பார்ப்பாங்களே! முதல்லே சண்பகம் என்ன சொல்லும்?”
சண்பகம் யாரோ, என்ன சொல்லக்கூடியவளோ, தெரியாது. ஆனால் அந்த நினைவினால் இருவரும் சிரித்துக் கொண்டார்கள்.
“கொஞ்சம் தலை சீவிக்க முடியுங்களா?”
“அந்த ரூமுக்குப் போங்க.”
கேட்டவள் பெண்தான். ஆனால் கூடவே அவனும் சென்றான். இது சீக்கிரத்தில் முடியாதென்று மாணிக்கத் துக்குத் தெரியும். நிதானமாக ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்துக்கொண்டு உட்கார்ந்தான்.
அலங்கார அறையிலிருந்து பேச்சும் சிரிப்பும் கேட்டன. சிறிது நேரத்தில் தம்பதி வெளியில் வந்தார்கள். மாணிக்கத் துக்கு அவர்கள் தோற்றத்தில் எந்த முன்னேற்றமும் தெரிய வில்லை. அவர்கள் கண்களுக்குத்தான் தெரியும் போலும்.
கணவனின் அருகில் ஒரு சிறு பலகையை வேலைக்காரப் பையன் கொண்டு வந்து போட்டான். மனைவி அதன்மேல் ஏறி நிற்கவும் உயரம் சமமாகியது.
முதலில் அப்படியே படம் எடுத்துக் கொண்டார்கள். பிறகு “இன்னும் ஒரு போஸ் ஸார்!” என்றவாறு அந்த வாலிபன் மனைவியின் கையைப் பிடித்துக் கொண்டான்.
“ஸார், அந்த முதல் போட்டோவை நான் கொடுத்த வீட்டு விலாசத்துக்கே அனுப்பிச்சிடுங்க. அப்புறம்… வந்து….. அந்த ரெண்டாவது ‘போஸை’… இந்த விலாசத்துக்கு அனுப்பறீங்களா?”
தயங்கித் தயங்கி வெட்கத்துடன் வாலிபன் இன்னொரு விலாசம் கொடுத்தான். அது அவனது காரியாலய விலாசம். கையைப் பிடித்துக் கொண்டிருக்கும் காட்சி வீட்டிலுள்ளவர்களுக்கல்ல, அவர்கள் இருவருக்கு மட்டும் தான்.
“ஆகட்டும் ஸார். அப்படியே அனுப்பறேன்.”
அவர்கள் போனார்கள். வேறு பலர் வந்தார்கள். ஒரே இயந்திர ஒழுக்கம். அவனும் அதில் ஒரு விசை, மாணிக்கத்துக்கு அலுப்பாயிருந்தது. இந்த மேல் ஓட்ட நிலையைத் தவிர அவன் தொழிலில் ஆழத்துக்கு ஒரு நிமிஷம்கூட இட மிருக்காதா?
பெரிய கும்பல் வந்து அறையை ஆக்ரமித்தது. மாணிக்கம் ஒரு கணம் திகைத்துப் போய்விட்டான்.
“குழந்தையைப் படம் எடுக்கணுங்க. நல்லா எடுப்பீங்களா?”
ஆண்களும் பெண்களுமாய்ச் சூழ்ந்திருந்த அந்தக் கூட்டத்துக்கு நடுவே மாணிக்கம் ஒரு சின்ன குழந்தையைச் சிரமப்பட்டுக் கண்டு பிடித்தான்.
“எடுக்கறேனுங்க. பையா, அந்த மேஜையைக் காமிரா வுக்கு எதிரே இழுத்துப்போடு. குழந்தையை மேஜை மேலே விடுங்க.”
“மூணு மாசத்துப் பிள்ளை இது. குழந்தை மிரண்டு போகாமே பிடிக்கணும்.”
மாணிக்கம் கோபத்தை அடக்கிக்கொண்டு மேஜை மேல் ஒரு விரிப்பைப் போட்டான். “ம், குழந்தையை விடுங்க.”
குழந்தை மேஜைமேல் விடப்பட்டது. “கண்ணுக் குட்டி, எங்கே சிரி” யாரோ கொஞ்சினார்கள்.
“பட்டுச் சொக்காய் போட்டிருக்குதே, அது படத்திலே நல்லா விழுங்களா?”
“உம் , விழும், விழும்.”
“அதிலே இருக்கிற பூவேலை கையாலே செய்தது. அது நல்லாத் தெரியணும்.”
சொன்னவளின் குரலிலிருந்து பூ வேலை செய்தவள் அவள் தானென்பது வெட்ட வெளிச்சமாயிருந்தது.
“பாபு, சிரிடா கண்ணு! அதோ காமிராவைப் பாரு!”
“படம் பிடிச்சு குழந்தையின் தகப்பனாருக்கு அனுப்பணும். நல்லாப் பிடியுங்க.”
மாணிக்கத்துக்குத் தாங்கவில்லை.
“குழந்தையின் பாட்டனாரே பார்க்கணும்னாக்கூட நல்லாயிருக்கும்படி பிடிக்கிறேன். கொஞ்சம் எல்லாரும் விலகிப் போங்க.”
“அப்புறம் குழந்தை அழுமே!”
“அப்போ அதை வெச்சுக்கிட்டு எல்லாருமா உக்காந்துக்குங்க.”
“ஐயய்ய, வேணாம்.”
எல்லோரும் விலகினார்கள். ஆனால் பேசுவதை நிறுத்த வில்லை. “கண்ணு , இதோ பாரு!”
“சிரிடா ராஜு?”
“காமிராவைப் பார்த்துப் பயப்படுது அது!”
“சிச்சிச்சிச்சிச்சி……” சப்தமிட்டார் ஒருவர். “இதோ பாரு? ஊஊ…….”
குழந்தை சிரிப்பதற்காக முகத்தைக் கோணிக் கொண்டாள் ஒருத்தி.
“டக்கு டக்கு டக்கு!”
“த்ஸொ த்ஸொ த்ஸொ!”
இந்த இரைச்சலிலும் பட்டுச் சொக்காயின் புழுக்கத் திலும் குழத்தை மிரள விழித்து அழ ஆரம்பித்தது. சிரிப்பு வந்தது. மாணிக்கத்துக்குத்தான். குழந்தை கிடக்கட்டும், அதைச் சிரிக்க வைக்க முயலும் பெரியவர்கள் செய்து கொள்ளும் முக விகாரங்களை யெல்லாம் படம் பிடித்தால் எவ்வளவு நன்றா யிருக்கும் என்று எண்ணினான் அவன்.
“ஐயோ, அளுவுதே பிள்ளை!”
“நான் அப்பவே சொன்னேன், பழரசம் கொடுத்து எடுத்து வாங்கன்னு, யாரு கேக்கறாங்க என் பேச்சை.”
“அது ஒண்ணுமில்லே. தூக்க சமயம் அதுக்கு விடியற்காலயே வேறு முழிச்சிக்கிட்டுதா?”
“அதுதான் நேத்து சாயந்திரம் பூரா தூங்கிச்சே?”
“அதுக்காகக் காலையிலே சீக்கிரம் முழிச்சிக்கிடுமா? தெரிஞ்சவ மாதிரிப் பேசறியே!”
“நான் நாலு குழந்தை பெத்தவ. எனக்குச் சொல்லித் தரியா நீ?”
எல்லோருக்கும் வீடு என்றே நினைப்பு. மாணிக்கம் கடைசியில் ஸ்டூடியோவிலிருந்த சில விளையாட்டுச் சாமான் களைக் காட்டி ஒருவிதமாய்க் குழந்தையின் அழுகையை நிறுத்திப் படம் எடுத்து முடித்தான்.
“அழகா வருமில்லே குழந்தை?”
அழகு அழகு! எப்போதும் அதுதான் லட்சியம். இந்த உலகத்தில் வெளித் தோற்றத்தைத் தவிர வேறொன்றுமே இல்லையா? அந்த வெளி உருவத்துக்கு மட்டுமே அழுத்தம் கொடுக்கும் புகைப்படத் தொழில் இதயமற்றதுதான்.
“வரும் வரும். கவலைப்படாதீங்க!”
இப்படி எவ்வளவு நாள்! குடும்பப் படம், வியாபாரத் துக்காகப் படம், கல்யாணத்துக்காகப் படம், குழந்தையின் படம், பெரியவர்களின் படம்……….
“எங்கே தலை சீவிக்கலாம்? அழகாய் வருமில்லே ?”, இதேதான் கேள்விகள்.
“என்னாங்க போட்டோகிராபர் ஐயா! நல்லா விழணும் என் மகள் படத்திலே. பார்த்துப் பிடியுங்க.”
வேறொரு நாளில் ஒரு தாயின் கரிசனம் இது. அவள் மகளின் அலங்காரத்திலிருந்தே கல்யாண நோக்கத்தோடு படம் பிடித்துப் பிள்ளை வீட்டாருக்கு அனுப்புகிறார்கள் ளென்பது தெரிந்தது.
“இதுவரை நாலு இடம் தட்டிப் போச்சுங்க. பெண் கறுப்புன்னு எல்லாரும் வேணாங்கறாங்க. எங்க சரஸா முகத்து அழகு யாருக்கு வரும்? அதான் இனிமேல் படத்தையே அனுப்பறதுன்னு தீர்மானிச்சிட்டேன்.”
கவலை மிகுதியில் தாய் தன்பாட்டில் சொல்லிக்கொண்டிருந்தாள். ஓர் அன்னியனிடம் சொல்கிறோமென்ற நினைப்பே இல்லை.
மீண்டும் படமெடுக்கும் வேதனை. ”கொஞ்சம் திரும்புங்க. இன்னும் சிரியுங்க.” மகளின் சேலையைத் தாய் அக்கறையோடு தடவி, ஒவ்வொரு இடத்திலும் ஜரிகைக் கரை முழுவதும் தெரியும் படியாய் விரித்து விட்டாள். கழுத்து ஆபரணத்தைச் சேலைக்கு வெளியே இழுத்துப் பொருத்தினாள். அது மட்டு மல்ல. தாயின் கரமல்லவா? படத்தில் விழாத பாகம் என்ற உணர்வு இன்றிப் பின்னால் சென்று மகளின் தலையிலிருந்த
பூவைக் கூடக் குவித்துச் சரிப்படுத்தினாள்.
“படம் நல்லா வருமில்லே? சரஸா அழகா விழணும். கொஞ்சம் பார்த்துச் சரி செய்யணும்னாலும் செய்யுங்க.”
இப்படி ஒருவகை.
அடுத்த நாள் வேறொருத்தி வந்தாள். சேலைக்குமேல் கறுப்பு அங்கி: கையில் சதுரமான கறுப்புத் தொப்பி; ஒரு காகிதச் சுருள்; பரீட்சை தேறியவள், ‘கான்வகேஷன்’ உடையில் தன் வித்தைப் பெருமிதத்தை விளக்கிட்டு
வைத்துக்கொள்ள வந்திருந்தாள்.
“பின்னால் ஸ்க்ரீன்’ அம்மா?”
“சித்திர ஸ்க்ரீன் ஒண்ணும் வேண்டாம். ‘ஸிம்பிளாக ஒரு துணி போடுங்க, போதும் “
கையில் தேர்வுப் பத்திரத்தைப் பிடித்துக்கொண்டு, பூக்கிண்ணம் ஏந்திய மேஜைமேல் முழங்கையைப் பதித்த வளாய்ச் சற்று மேல் நோக்கிய பார்வையுடன் நின்றாள் அவள். அதுதான் ‘படிப்புப் பார்வை’ என்ற எண்ணம். கறுப்புக் குல்லாய் அவள் தலைமேல் கோமாளித் தனமாய்க் காட்சியளித்தது. ஆனால் அவள் பெருமையாய்த்தான் நின்றாள். இனி அந்தப் பத்திரத்தைத் தொலைத்தாலும் இந்தப் படத்தைத் தொலைக்க மாட்டாள். தன் வித்தையைப் பறைசாற்றும் ஓர் ஆடம்பரச் சாதனமல்லவா அது? நல்ல வித்தை! அடுத்த வருஷம் எவனுக்கோ கழுத்தை நீட்டி, வீடு எங்கே வம்பு எங்கே என்று அழப்போவதற்கு இது ஒரு படியா? என்ன படிப்பு ! எல்லாம் வெளி ஜம்பத் துக்காக .
அடுத்ததாக வந்த ஆளும் மாணிக்கத்தின் எரிச்சலைக் குறைக்க உதவவில்லை. ‘பாலிஷ்’ ஜோடுகள் அணிந்த பாதங்களிலிருந்து, க்ரீம்’ சுடர் விடும் கலையாத கேசம் வரை நாகரிகத்தில் திளைக்கும் அலங்காரத்துடன் ஓர் இளைஞன். படம் என்னவோ மார்புவரைதான் எடுத்துக் கொள்ளப் போகிறான். பெரிய சுங்க அதிகாரியின் மகனாம். பூ பரா மரிப்புத் துறையில் மேற்படிப்புப் பெற அமெரிக்கா செல்கிறா னாம். இந்த விஷயம் எல்லாப் பத்திரிகைகளிலும் அவனது புகைப்படத்தோடு விளம்பரம் ஆகப்போகிறதாம்.
இவன் அப்பாவை முதலில் யார் கண்டார்கள்? இவன் என்ன பயிற்சிக்காக எங்கே போனாலென்ன, போகா விட்டால் என்ன? என்னவோ பொதுஜனங்கள் இதே சிந்தனையில் தூக்கமின்றிக் கவலைப்படுவதாக ஒரு பிரமை.
“படம் நல்லா வரணுங்க , டிப்டாப்பா இருக்கணும். லைட் பத்திரிகையில் கூட வெளியாகப் போவுது. பாஸ்போர்ட் அளவு”
“சரி ஸார்”
ஒருவாறு அந்த ஆளும் வெளியேறிய பிறகு, மாணிக்கம் தன் கைக் குட்டையால் முகத்திலிருந்த வியர்வையையும் புன்னகையையும் வழித்தெறிந்தான்.
உஸ்! என்ன போலி வாழ்க்கை ! ஆடம்பரம், அழகு உருவம், சீ!
கடிகாரத்தில் மணி ஆறடித்தது. ஸ்டூடியோவை மூடிச் சற்று நிம்மதி அடைவதென்பது உண்டா? சின்ன ஸ்டூடியோ. அவனே முதலாளி, அவனே படம் பிடிப்பவன். ஆனாலும் இன்று மனம் மிகவும் அயர்ந்து போயிருந்தது. வாயில் ஒரு சிகரெட்டுடன் வாசலுக்கு வந்தான்.
ஸார்! அட துரதிருஷ்டமே ! இன்னுமா ஆட்கள் ? ஒரு ஆண் ஒரு பெண், பெண்ணின் கையில் ஒரு குழந்தை. குடும்பப் படமா?
“நாளைக்கு வாங்க. நான் வெளியே போறேன். வேறே ஆளு இல்லை.”
அந்த மனிதன் ஏமாற்றத்துடன் மனைவியைப் பார்த்தான்.
“ரொம்ப தூரத்திலேருந்து வரோமுங்க. பஸ் கிடைக்க நேரமாயிடுத்து. இன்னிக்கு இல்லேன்னா திரும்பியும் குழந்தையைச் சிரமப்படுத்திக்கிட்டுத் தூக்கி வரணும்.”
அப்பெண் பரிதாபமாகப் பேசினாள். “சரி சரி, வாங்க உள்ளே!” என்று முனகியவனாய் மறுபடியும் அறைக்குள் சென்றான் மாணிக்கம்.
“பையா, ஸ்டூலைக் கொண்டு வந்து போடு. ரெண்டு பேரும் நிக்கத்தானே போறீங்க ஸார்? உட்கார்ந்து குழந்தையை மடியில் வைச்சுக்கறீங்களா?”
“கொஞ்சம் தலை சீவிக்க முடியுங்களா?” என்றாள் அப்பெண்.
“அந்த ரூமில் சீவிக்குங்க.”
அவள் குழந்தையுடன் உள்ளே சென்றாள். கணவன் போகவில்லை.
“நீங்களும் போறதானால் போங்களேன் ஸார். கோட்டு கூட மாத்திக்கலாம். இப்போ நீங்க போட்டிருக்கிற கோட்டைவிட அங்கேயிருக்கிறது படத்தில் நல்லா விழும்” என்றான் மாணிக்கம், ஒரு சின்னஞ் சிறு ஏளனச் சிரிப்புடன்.
“வேண்டாம். நான் படத்துக்கு நிக்கப் போறதில்லை.”
“அம்மாவும் குழந்தையும் தானா? பையா, அந்த ஸ்டூலை எடுத்திட்டு நாற்காலி மட்டும் வை. பின்னாலே என்ன மாதிரி ஸ்கிரீன் வேணும் ஸார்? அழகான படம் வரணுமில்லே”
எத்தனையோ நாளாக இருந்த எரிச்சலெல்லாம் இன்று பேச்சில் வெடித்துச் சிதறியது.
“குழந்தையை மட்டும் தான் படம் எடுக்கணும்.”
“அப்படிங்களா? அப்போ மேஜை மட்டும் போதும். பையா, மேஜையை இழு.”
இதற்குள் தாயார் வெளியே வந்துவிட்டாள். கைகளில் அணைத்துப் பிடித்திருந்த குழந்தைக்குத்தான் தலை வாரிச் சீர் செய்திருந்தாள், தனக்கல்ல.
“குழந்தையை மேஜைமேலே விடுங்கம்மா. உட்காருகிற குழந்தையா? ரைட்! கையிலே ஏதாவது சாமான் கொடுக்கலாமா? அப்போ குழந்தை இன்னும் அழகா விழும் படத்திலே.”
“எப்படி விழுந்தாலும் சரி”
அம்மனிதன் மெதுவாகப் பேசினான்.
“எங்க குழந்தைக்கு வைத்தியம் இல்லாத ஒரு அபூர்வ ரத்த வியாதி. இன்னும் ரெண்டு மாசம் தான் தாங்குமாம். அதுக்காகத்தான் …. ஒரு படம் எடுத்து வச்சிட்டா எப்பவும் பார்த்துக்கிட்டே இருக்க முடியுமில்லே …….”
மாணிக்கத்தின் வாயிலிருந்து சிகரெட் தானே நழுவி விழுந்தது. தான் திடீரென்று தெய்வ சன்னிதானத்தில் நிற்பதாக உணர்ந்தான் அவன், அந்த மகத்தான துயரத்தின் முன்னே .
உலகத்தில் இதயமில்லாத இடமே இல்லை ! ஆடம்பரத்துக்கெல்லாம் நடுவே ஓர் ஆழமான உணர்ச்சியா! செயற்கைகளுக்கெல்லாம் இடையில் இந்த இடத்திலும் ஓர் உண்மைத் தாபமா! இதயமற்ற விளம்பரமாய் இருந்த தொழில் இப்போது இரண்டு உள்ளங்களின் கரைகாணாச் சோகத்தைத் தாங்கித் தடவிக் கொடுக்கும் ஒரு புனிதத் தாயகமா!
அவன் பணிவாகி, பக்தியாகி, உறைந்து விட்டான்.
விம்மலோடு குழந்தையை மேஜைமேல் இருத்தி விட்டுத் தாய் விலகிய போது அவன் வெறும் விசையாய் இல்லை. மனிதனாய் மாறிக் காமிராவை நோக்கிச் சென்றான்.
– சிறுகதைக் கோவை (பதின்மூன்று சிறந்த எழுத்தாளர்களின் உயர்ந்த ஓவியங்கள்), முதற்பதிப்பு: மே 1961, எஸ்.ஆர்.சுப்பிரமணிய பிள்ளை பதிப்பகம், திருநெல்வேலி.