உருகிய வெள்ளி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: June 24, 2025
பார்வையிட்டோர்: 1,138 
 
 

(2007ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அதே சமயம் ஒரு தாரகை உருகி மற்றென்றைத் தாவியது. அந்த வெள்ளியும் தன்னிடத்தை விட்டு உருகிப்பாய்ந்தது. என்ன இதில் ஏதாவது தத்துவம் உண்டுமா? 

குமரேசன் அந்தப் பலசரக்குக் கடையில் கணக்குப்பிள்ளையாக இருந்தான். அவனது சிரித்த முகமும், சீதேவியும் அந்தக் கடைக்கே ஒரு தனிய ழகைக் கொடுத்தன. யாரிடமும் அவன் இனிமை யாகப் பேசுவான். கலகலவென்று அவன் பேசும் வார்த்தைகளில் நகைச்சுவை நிரம்பியிருக்கும். இயற் கையாகவே கணக்கிலும் அவன் கெட்டிக்காரனாக இருந்தான். சிக்கலான கணக்குகளெல்லாம் இவனி டம் சிக்கலறுந்து ஒழுங்கு பட்டுவிடும். முத்துப் போன்ற இவனது எழுத்துக்கள் எத்தனையோ பேர் களின் கவனத்தை ஈர்த்துள்ளன. 

அவனிருந்த கடையில் அநேக வேலைக் காரர்கள் உண்டு. ஆயினும் காலையில் கடைதிறக்கும் பொறுப்பு குமரேசனையே சார்ந்திருந்தது. குமரே சன் கடை திறப்பதில் முதலாளிக்கு அவ்வளவு திருப்தி. 

காலையில் கடை திறந்ததும் குமரேசன் சாமான் களை எல்லாம் ஒழுங்குபடுத்தி வைப்பான். கடையைச் சுத்தம் செய்து, வாசலில் தண்ணீர் தெளித்து அழகு செய்வான். பிறகு மிகுந்த தூரம் வாசம் வீசும் ஜவ்வாது பத்தியை முதலாளியின் பட்டறைப் பக்கத்தில் பற்றி வைப்பான். இதன் பிறகுதான் அவன் தனது ஆசனத்தில் அமர்வது. 

இந்த சமயத்தில் பக்கத்துக் கிராமத்திலுள்ள பிள்ளைகளெல்லாம் அந்தப்பாதையின் வழியாகப் பள்ளிக்கூடம் போகத் தொடங்குவார்கள். இவர்களின் வேடிக்கைப் பேச்சுகளும், விளையாட்டுச் செய்காய்களும் குமரேசன் கருத்தைக் கவரும். அவைகளில் மனம் பறிகொடுக்கும் அவன் தனது பிள்ளைப்பிராயப் பள்ளிக்கூட வாழ்வினைப் பற்றி எண்ணுவான். கழிந்த அந்நாட்களின் பழமையில் அவன் மனம் புதைந்து கிடக்கும். அந்த ஆனந்தத்தை எண்ணி எண்ணி அவனது மனம் மகிழ்ச்சியை அடையும். இதனிடையே கடை வேலைகளையும் கவனித்துக் கொள்வான். இவ்வாறாகக் கொஞ்சம் பொழுது செல்லும், இதற்குள் முதலாளியும், மற்ற வேலையாட்க ளும் வந்து சேர்வார்கள். 

2 

ஒரு நாட்காலையில் குமரேசன் தனது வேலைகளை எல்லாம் முடித்துக்கொண்டு தனிமையாகத் தனது ஆசனத்தில் அமர்ந்திருந்தான். அப்போது பள்ளிக் கூடத்தில் படித்துக் கொண்டிருக்கும் கமலம் என்னும் ஓர் இளங்கன்னிகை சில சாமான்கள் வாங்க அங்கு வந்தாள். தான் குறித்துக் கொண்டு வந்திருந்த துண்டுப்படி எல்லாம் வாங்கினாள். பின் அவைகளை அங்கேயே வைத்து விட்டு, பள்ளிக்கூடத்திலிருந்து சாயுங்காலம் திரும்பும் போது எடுத்துச் செல்வதாகச் சொல்லி பள்ளிக்கூடம் போனாள். 

பதினான்கு வயதுக்கு மேற்படாத அந்த இளங் கன்னியின் அழகில் குமரேசன் மூழ்கி விட்டான். அடக்கத்தின் அடித்தளத்தினின்றும் பிறந்த அவள் வார்த்தைகள், குமரேசனின் காதுகளுக்கு காதல் கீதத்தின் இனிமையைக் கொடுத்தன. அவளின் இதழ்களில் உதித்த புன்முறுவல் என்னும் கதிரவன் குமரேசனின் இளமை உள்ளத்தில் காதல்க் கதிரைப் பரப்பியது. அவன் அவளைத் தேவதைபியின் சாயல் உருவம் எனக்கருதினான். ஏதோ இயற்கையாக அவன் உள்ளத்தடத்தில், அவளைப்பற்றிய பாசம் என்னும் மலர் மலர்ந்து, மணங்கமழ ஆரம்பித்தது. 

*** 

கமலம் பணக்காரக் குடும்பத்தில் பிறந்தவள். குமரேசன் குலத்தைவிட சமூகம் உயர்ந்த குலம் என்று கூறிக்கொள்ளும் ஒரு குலத்தில் தோன்றிவயள். இளமைப்பருவத்திலேயே அவளிடம் அறிவுத்தேவி நடனம் செய்தாள். சந்தடியற்ற காட்டில் மலர்ந்த ரோஜாமலர்போல், அவள் அந்தக்கிராமத்தின் நாயக மாய் விளங்கினாள். அவள், உயர்ந்த குணங்களால் அந்தக் கிராமத்தாரின் கிராமத்தாரின் அன்பிற்கு உரியவளாக இருந்தாள். 

சாயும்காலம் வரும் வரை குமரேசன் மனது நிம்மதி அடைய வில்லை. அந்தக்குமரி மறுபடியும் எப்போது கடைக்கு வருவாள் என்று அவள் வரவை எதிர் பார்த்திருந்தான். பாதையில் கேட்கப்படும் குரல்கள் அவள் குரலென்று அவன் எத்தனையோ தடவை திரும்பிப் பார்த்துப் பார்த்து, அவளல்ல என்பதை அறிந்து ஏமாற்றம் அடைந்தான். 

கமலம் கடைசியாக வந்து சேர்ந்தாள் தன் சாமான்களை எல்லாம் எடுத்துக் கொண்டாள். குமரேசனே பக்கத்தில் வந்து எல்லாவற்றையும் எடுத்துக் கொடுத்தது. அவள் போகும்போது குமரேசனுக்கு நன்றி செலுத்து முறையில் அவனை ஒரு பார்வை பார்த்தாள். அந்தப் பார்வை அவள் அவன் அழகையெல்லாம் அள்ளிப் பருகுவது போலிருந்தது. குமரேசன் ஒரு நொடிப் பொழுது தன்னை மறந்தான். அவன் உடலெங்கும் ஒரு இன்ப உணர்ச்சி. இதுவரையிலும் பெறாத ஓர் அனுபவத்தை அவன் அன்று பெற்றான். 

3 

ஒவ்வொரு நாளும் கடையில் கமலம் குமரே சனைக் கவனித்தே செல்வாள். குமரேசன் புன்முறு வலுக்கு அவள் புன்முறுவலும் பதில் கொடுக்கும். இவர்களின் இப்பழக்கம் இருவரிடையும் நெருங்கிய தொடர்பை உண்டுபண்ணிவிட்டது. இருவர்க்குள் ளும் ஒருநாள் தரிசனம் கிடையாவிடில் அது அவர்களால் சகிக்க இயலாததாய் இருந்தது. இவ்வாறு எவ்வளவோ நாட்கள் கழிந்தன. 

சந்திரிகை உலகத்தை அமர இன்பத்தில் ஈடு படச் செய்யும் வேளையிலும், அந்திப்பொழுதிலும் குமரேசனுக்கு கமலத்தின் கற்பனை உருவமே மனத் திரையில் தோன்றும். ஏகாந்தமாய் அவன் சோலை யிலும், பூந்தோட்டங்களிலும் சுற்றித் திரியும்போது அவன் அவளைப்பற்றிச் சிந்திப்பான். அவனது இந்தச் சிந்தனை ஒரு எல்லையின்றி நீண்டு செல்லும். 

கமலம் வேறுபட்ட குலத்தினள் என்பதை அவன் நன்றாக அறிந்திருந்தான். எதிர்கால வாழ்க்கைச் சிற்பத்தை தாமிருவரும் சேர்ந்து அழகு படுத்துவதற்கு சமூகம் குறுக்கிட்டுள்ளது என்பதையும் அவன் அறியாமலில்லை. ஆயினும் பாசத்தை அறுத்துத் தள்ள அவனால் இயலவில்லை. தனது இதய ஆசனத்தில் ஊழின் வன்மையாலோ வேறு எதனாலோ அமர்ந்துவிட்ட அந்த இளங்குமரியை அதிலிருந்து மாற்றுவதற்கு அவன் எவ்வளவோ முயன்றும் அவனால் முடியவில்லை. 


வீட்டு வெளித் திண்ணையில் ஒரு நாளிரவு, குமரேசன் நித்திரை செய்துகொண்டிருந்தான். அப்போது அவன் ஓர் இரக்கமான கனவு கண்டான். கமலம் எங்கோ ஓர் பாதையில் மிகவும் வேகமாகப் போய்க் கொண்டிருந்தாள். குமரேசனும் அவளைப் பின்தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறான். கமலம் குமரேசனைத் திரும்பிப் பார்த்தாள். அவளது முகம் துன்பத்தால் உலர்ந்திருந்தது. கண்கள் சிவந்திருந்தன. அவைகள் கண்ணீரைக் கொட்டிய நிலையில் இருந்தன. இவள் குமரேசனை இரக்கமான தோற்றத்தோடு பார்த்தாள். ஆனால் அவளின் வாயினின்றும் ஒரு வார்த்தையும் வெளிக் கிளம்பவில்லை. இந்தக் கோலத்தைக் கண்டதும் சொல்ல முடியாத சோகம் குமரேசனின் இதயத்தில்ப் பொங்கி எழுந்தது. திடீரென அவன் விழித்துவிட்டான். தலையணை பூராவும் கண்ணீரால் நனைந்திருந்தது. எதிரே வானம் மிகவும் விளக்கமாக அவன் கண்களுக்குத் தென்பட்டது. கணக்கற்ற தாரகை மலர்கள் அங்கே சிதறிக் கிடந்தன. அதே சமயம் ஒரு தாரகை உருகி மற்றொன்றைத் தாவியது. அந்த வெள்ளியும் தன்னிடத்தை விட்டு உருகிப் பாய்ந்தது. என்ன இதில் ஏதாவது தத்துவம் உண்டுமா? 

இக்காட்சி குமரேசனுக்குப் பெரிய மனக் கலக்கத்தைக் கொடுத்தது. இதன் இரகசியத்தை அவனால் அறிந்து கொள்ள இயலவில்லை. அன்றைய இரவுப்பொழுதை இந்த எண்ணம் கலந்த உறக்கத்தில் கழித்தான். இந்த நிகழ்ச்சி களெல்லாம் மறுநாள் அவன் மனத்திரையை விட்டு காலை நிலவைப்போல் மெள்ள மெள்ள மறைந்துவிட்டன. 

கொஞ்ச நாட்களாகக் கமலம் பள்ளிக்கூடத்திற்கு வரவில்லை. இதன் சுரரணம் என்னவென்று குமரேசன் தனக்குள்ளேயே சிந்தித்தான். ‘தான் இனிப் பள்ளிக்கூடம் வருவதில்லை’ என்றுகூட அவள் அவனுக்கு அறிவிக்கவில்லை. எனவே அவள் நோயால் படுத்திருக்கலாமோ என அவன் எண்ணினான். இல்லாவிட்டால் ஒருவேளை அவள் படிப்பைத்தான் நிறுத்தியிருக்கலாமோ என நினைத்தான். ஒவ்வொரு நாளும் கமலத்தின் வரவை எதிர்பார்த்து எதிர் பார்த்து அவன் ஓய்ந்து போனான். 

கமலத்திற்கு கலியாணம் ஆகிவிட்டதென்ற செய்தியை எவ்வளவோ நாட்களுக்குப் பிறகு குமரேசன் அறிந்தான். அவள் கணவர் நெடுந்தொலையிலுள்ள ஒரு பட்டண வாசியென்றும், அவர் ஓர் அரசாங்க உத்தியோகஸ்தர் என்றும் கேள்விப் பட்டான். அதோடு அவனுக்கு, கமலம் இப்போது புக்ககத்தில் இருக்கிறாள். என்பதையும் அறிய முடிந்தது. 

இச் செய்திகள் குமரேசனுக்கு ஒரு பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்தது. கனவில் சிறிதளவும். நம்பிக்கை கொள்ளாத அவன், அன்று தான் கண்ட கனவைப் பற்றி மிகவும் சிந்தித்தான். வானத்தில் வெள்ளி இந்த முடிவைக் காட்டுவதற்குத்தான் அன்று உருகிப் பாய்ந்ததோவென ஐயுற்றான். அந்தக்காட்சி இந்த முடிவின் அறிகுறியாக அவனுக்குத் தோன்றியது. 

அவன் நெடு நாட்களாகக் கட்டிய சிந்தனைக் கோபுரம் இப்போது சுக்குச் சுக்காய்த் தகர்ந்தது. ஆயினும் கமலத்தின் உருவப்படம் மட்டும் அவன் நெஞ்சக அறையை விட்டு மறையவில்லை. அவளிடம் அவனுக்கு அன்பும் பாசமும் பெருகியே வந்தது. அவளுக்கு அவன் ஓர்வித தெய்வீக வணக்கத்தைச் செலுத்திக் கொண்டே இருந்தான். மணமான அவளை ஒருமுறை இன்னும காண்பதற்கு அவன் நெஞ்சு துடிதுடித்துக் கொண்டிருந்தது. அதில் தனக்கு எல்லையற்ற சாந்தி கிடைக்குமென அவன் நம்பினான். அந்த நாளையும் எதிர்நோக்கிக் கொண்டிருந்தான். 

5

காலதேவனின் வேகத்தால் வருடங்கள் நான்கு ஓடி மறைந்தன.கமலம் இப்போது தன் தாய் வீட்டிற்கு வந்திருக்கிறாள். அவளுக்கு இரண்டு வயது நிரம்பிய ஓர் ஆண் குழந்தையும் உண்டு. 

அன்று பக்கத்துக் கிராமத்தில் நடக்கும் தேர்த் திருவிழாப் பார்க்க அவள் தன் கணவனுடன் சென் றாள். அந்தப் பெரிய கூட்டத்தில் கமலத்திற்கு எத் தனையோ தன் பள்ளிக்கூட சிநேகிதிகளோடு சந்திப்பு ஏற்பட்டது. அவர்களோடு அவள் என்னவெல்லாமோ பேசிக்கொண்டாள். அவர்கள் அவள் குழந் தைக்கு விளையாட்டுப் பொருட்களும், தின்பண்டங் களும் வாங்கிக்கொடுத்து கமலத்திடம் தமக்குள்ள அன்பின் ஆழத்தை அந்தக் குழந்தையின் மூலமாகக் காட்டினாாகள். 

கமலம் தன் கணவனுடன் திரண்டுவரும் கூட் டத்தைக்கண்டு ஒர் பக்கத்தில் ஒதுங்கி நின்றாள். அப்போது கையில் ஒரு மிட்டாய்ப் பெட்டியுட னும், ஒரு அழகிய பொம்மையுடனும் குமரேசன் அவ்விடம் தோன்றினான். 

கமலத்தின் கையிலிருந்த குழந்தையிடம் அவைகளை நீட்டினான். அக்குழந்தை அவைகளை வாங்குவதற்குக் கைகளைத் தாவி நீட்டியது. கமலம் தன்னை மறந்த ஒரு வியப்புடன் அவைகளை வாங்கிக் குழந்தையின் கையில் கொடுத்தாள். குழந்தை மகிழ்ச்சியினால் சிரிப்புக் கொண்டது. கமலத்திற்கு ஒன்றுமே தோன்ற வில்லை, 

கமலத்தின் கணவர் குமரேசனைப் பார்த்தவண் ணம் புன்முறுவல் வெளித்தோன்ற “இவர்கள் யார் கமலம்? எனக்குத் தெரியவில்லையே” என்று கமலத்திடம் கேட்டார். 

“இவர்கள் எனக்கு அண்ணா. எங்கள் வீட்டின் அடுத்த வீட்டில் அதிகநாள் தாமதித்திருந்தார்கள். எங்களுக்கு மிகவும் வேண்டியவர்கள்” என்று சிரித்த முகத்துடன் பதில் சொன்னாள் கமலம். 

குமரேசன் அங்கு அதிக நேரம் தாமசிக்க வில்லை. அவன் எண்ணம் பூர்த்தியாயிற்று. குழந்தையைப் பார்த்த வண்ணம் அவர்கள் இருவரிடமும் விடைபெற்றுக் கொண்டு கூட்டத்தினுள் மறைந்து விட்டான். ஆனால் கமலத்தின் இதயத்தில் மட்டும் அந்தப் பழைய கால நினைவுகள் அந்தக் கூட்டத்தை விட எத்தனையோ மடங்கு பெரிதாக வளர்ந்து கொண்டே இருந்தன. 

– கவிக்குயில் நிலையக் கதைத்தொகுதி, முதற் பதிப்பு: ஏப்ரல் 1944, கவிக்குயில் நிலையம், கோட்டாறு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *