உயிர் படிப்பு!





மருத்துவக்கல்லூரியிலிருந்து வீட்டிற்கு சோர்வுடன் வந்த கயா, ‘தான் மருத்துவப் படிப்பைத் தேர்வு செய்திருக்கக்கூடாது’ என தன் தாயிடம் வருத்தத்துடன் கண்ணீர் மல்க கூறினாள்.

‘பள்ளியில் தான் நன்றாகப்படித்து முதல் ரேங்க் எடுத்தபோது, நன்றாகப்படிக்காமல் கடைசி ரேங்க் எடுத்த, சுமாராகப்படித்த தோழிகள் தொழில் கல்வியில் சேர்ந்து நான்கு வருடம் மட்டுமே படித்துவிட்டு, அதிலும் மூன்றரை வருடங்களிலேயே கேம்பஸ் இன்டர்வியூவில் வேலை கிடைத்து, ஐடி கம்பெனியில் மாதம் லட்சங்களில் சம்பளம் வாங்குவதோடு பகலில் மட்டுமே வேலை, வாரம் இரண்டு நாட்கள் விடுமுறை என மகிழ்ச்சியோடு திருமணம் முடித்து வாழ்கின்றனர்’ என புலம்பினாள்.
‘மருத்துவப்படிப்போ முதலில் ஐந்தரை வருடங்களில் கடைசி ஒரு வருடம் பயிற்சி மருத்துவராக இருபத்து நான்கு மணி நேரம், முப்பத்தாறு மணி நேரம் என நேரத்துக்கு உணவின்றி, உறக்கமேதுமின்றி இரவு, பகல் பாராது கடினமாக எச்சரிக்கையுடன், மூத்த மருத்துவர்களிடம் திட்டுகளை வாங்கிக்கொண்டு, நோயாளிகளின் உறவுகளிடம் பயந்து கொண்டு, பதற்றத்துடன் பிறர் உடலைக்காக்க நம் உடலைக்கவனிக்காமல் உழைக்க வேண்டியுள்ளது. உழைப்பிற்கேற்ற, படிப்பிற்கேற்ற சம்பளமும் கிடைப்பதில்லை’ எனக்கூறி வருந்தினாள்.
பள்ளிப்படிப்பு முடித்து ஒரு வருடம் நிறைய பணம் கட்டி நீட் பயிற்ச்சிப்பள்ளியில் படித்து, நீட் தேர்வு எழுதி, உரிய மதிப்பெண்கள் கிடைக்காமல் லட்சங்களில் வீட்டை விற்று கல்லூரிக்கு டொனேஷன் கொடுத்து, கல்விக்கட்டணம் கட்டி படிப்பில் சேர்ந்து, இஷ்டங்களைத்துறந்து கஷ்டப்பட்டு படிப்பை முடித்த பின் இப்படிப்பு போதாதென தெரிந்ததும் அதிர்ந்து போய், மேற்படிப்பிற்கென மறுபடியும் ஒரு வருடம் நீட் பயிற்ச்சி நிறுவனத்தில் பணம் கட்டி இரவு பகலாகப்படித்து அதற்கும் நீட் எழுதினாலும், இரண்டு லட்சம்பேர் எழுதினால் இரண்டாயிரத்துக்குள் வந்தால் தான் எதிர் பார்க்கும் படிப்பு கிடைக்கும் நிலை உள்ளதைத்தெரிந்த போது, இவ்விசயங்களைத்தெரியாமல் இப்படிப்பில் தன் மகளைச்சேர்த்து தவறு செய்து விட்டதாக கவலை கொண்டனர் கயாவின் பெற்றோர்.
மேற்படிப்பிற்கான நீட் தேர்வில் கயா நல்ல மதிப்பெண்களைப்பெற்றதால் அதன் பின் மூன்று வருடங்கள் இரவு பகலாக உழைத்து படிப்பை முடித்தாலும் மாதம் லட்சங்களில் இல்லாமல் ஆயிரங்களிலேயே சம்பளம் கொடுப்பதாக மருத்துவ மனைகள் கூறியதை அறிந்த போது மன வருத்தத்தைக்கொடுத்தது. அதுவும் உறுதியாக உடனே கிடைக்க வாய்ப்பில்லை. கிடைத்தாலும் விடுமுறையில்லை, நேரக்கணக்குமில்லை. அழைக்கும் போது அவசர அழைப்பிற்கு உடனே வர வேண்டும் எனும் நிர்பந்தம் வேறு அவளை கவலையின் உச்சத்திற்கு கொண்டு சென்றது.
நீட் படிப்புடன் சேர்த்து இரண்டு டிகிரி முடித்த போது மொத்தம் பத்து வருடங்களைக்கடந்திருந்தாள். ‘வயசு முப்பதாச்சு’ என அம்மா கவலையில் கூறிய போது தானும் வருந்தினாள். எதிர்காலம் பற்றிய கனவுகளைக்காணக்கூட நேரம் கிடைக்காமல் வயதை, இளமையை படிப்பிற்கும், வேலைக்கும் இறையாக்கி பாடுபடும் தொழிலே மருத்துவம் என்பது தற்போதுதான் புரிந்தது.
‘இத்தன வருசத்தையும், பணத்தையும் செலவு பண்ணி படிச்சுப்போட்டு வெட்டில சும்மா இருக்க முடியுமா? சும்மா இருந்தா மத்தவங்க மதிப்பாங்களா? சம்பாறிக்கிறது உன்ற செலவுக்கானாலும் வேலைக்கு போறது தான் சரி. அப்பதான் நாங்க உனக்கு நல்ல எடத்துல மாப்பிள்ளை பார்க்க முடியும்’ என தந்தை சொல்ல, மறுக்காமல் வேலையில் சேர்ந்தாள்.
கார் பெட்ரோலுக்கும், புதிதாக வாங்கிய காருக்கு வாங்கிய வங்கிக்கடன் இ எம் ஐக்கும் போதாத மாத சம்பளத்தில் ஒரு தனியார் மருத்துவ மனையில் சேர்ந்து பணியாற்றுகையில் ஒரு நாள் வேலைப்பழு அதிகமாகி சோர்ந்து போனாள்.
‘நாளையிலிருந்து இந்த வேலையே வேண்டாம். வேறு ஏதாவது தொழில் செய்து பிழைத்துக்கொள்வோம். வாழறதுக்கு பணத்த விட ஒடம்பு தான் முக்கியம். நாமும் மத்தவங்களைப்போல சந்தோசமா வாழ வேண்டும். உடனே வீட்டில் மாப்பிள்ளை பார்க்கச்சொல்லி திருமணம் செய்து கொள்ள வேண்டும். கணவனுக்கு சமைத்துப்போட வேண்டும். பசி வரும்போது ருசியாக, சூடாக சமைத்து சாப்பிட வேண்டும். உறவுகளின் விசேசங்களுக்கு தவறாமல் போக வேண்டும் . குழந்தைகளைப்பெற்று நன்றாக படிக்க வைக்க வேண்டும். ஆனால் டாக்டருக்கு மட்டும் படிக்க வைக்கவே கூடாது’ எனும் மன ஓட்டத்தில் தனக்காக ஓய்வெடுக்க, உடை மாற்ற ஒதுக்கப்பட்டிருந்த அறையில் டேபிள் மீது கைகளை மடக்கி சோர்ந்து தலை சாய்த்தபோது, நர்ஸ் ஓடி வந்து “டாக்டர் எமர்ஜென்ஸி… பத்து நிமிசத்துல ஆபரேசன் பண்ணலைன்னா தாயும், குழந்தையும் செத்துருவாங்க. சீக்கிரமாக வாங்க” என்றதும் கவலைகளையும், சோர்வையும் மறந்தவளாய் ஆபரேசன் தியேட்டருக்கு ஓடினாள்.
ஐடி கம்பெனியில் அதிக சம்பளம் பெறும் தன் தோழி ரியா, திருமணத்தின் போது பிறர் பொறாமைப்படும் அளவிற்கு இண்ஸ்டாவில் போஸ்ட் போட்டு மகிழ்ந்தவள், பிரசவ வலியால் துடித்துக்கொண்டிருந்தாள்.
“கயா… என்னைக்காப்பாத்து…” எனக்கதறினாள். ‘கம்ப்யூட்டரை கையாண்டு பணம் பார்க்கும் படிப்பால் ஒரு மனிதனின் உயிரைக்காப்பாற்ற முடியாது’ என்பதை தற்போது புரிந்து கொண்ட கயா, அறுவை சிகிச்சையில் குழந்தையை வெளியே எடுத்து நர்ஸ் கையில் கொடுத்து விட்டு, அறுத்த வயிற்றில் தையல் போட்டவள், தன் வேலை முடிந்து வீட்டிற்கு கிளம்ப வெளியே சென்றாள். வெளியே நின்றிருந்த ரியாவின் பெற்றோர் உள்பட பலர் ஓடி வந்து ‘தெய்வமே…’என காலில் விழ வந்தபோது மருத்துவப்படிப்பின் அவசியத்தைப்புரிந்து கொண்டாள்.
வீட்டிற்குச்சென்றவள் தனது தாயிடம் “அம்மா நான் டாக்டருக்கு படிச்சதுக்காக இப்ப சந்தோசப்படறேன். நான் படிச்சது நிறைய பணம் சேர்க்கிற உயர் படிப்பு இல்லை. பெத்தவங்களைப்போல மனசோட மத்தவங்க குறையைப்போக்கிற உயிர் படிப்பு. மருத்துவம், படிக்கிறவங்களோட தேவைக்கானதில்லை. மக்களோட சேவைக்கானது” என உணர்ச்சி பொங்க தன் மகள் சொன்னதைக்கேட்ட கயாவின் பெற்றோர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை.