உயிர் காத்த கோவூர்கிழார்




(ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
திருக்கோவலூர் என்று ஒர் ஊர் திருவண்ணுமலேக்குப் போகிற வழியில் இருக்கிறது. பழைய காலத்தில் அது ஒரு சிறிய காட்டுக்குத் தலைநகராக இருந்தது. காரி என்ற வள்ளல் அந்த நாட்டுக்குத் தலைவனாக விளங்கினான். அந்த நாட்டுக்கு மலையமான் காடு என்று பெயர். மலையமான் என்பது, அதை ஆளும் தலைவனுக்குப் பெயர். காரியை மலையமான் திருமுடிக்காரி என்று சொல்வார்கள்.
அவனுக்கு உள்ளது சிறிய காடுதான்; ஆனாலும் சேர சோழ பாண்டிய நாட்டுப் பொருளெல்லாம் அவனைத் தேடி வரும். எப்படி என்று கேட்கிறீர்களா? சொல்கிறேன்.
காரி பெரிய வீரன். அவனிடம் மிகவும் பலசாலிகளான வீரர்கள் பலர் இருந்தார்கள். அவர்கள் யாவருமே காரியின் சொல்லே மீறாதவர்கள். அந்தப் படை எங்கே போர் செய்யப் போனாலும் வெற்றிதான்.
காரிக்குப் பகைவர் யாரும் இல்லை. ஆனாலும் அவன் அடிக்கடி தன் படையுடன் போரில் ஈடுபட்டிருப்பான். சேர சோழ பாண்டியர்கள் எப்போதேனும் யாருடனவது போர் செய்ய வேண்டியிருந்தால், தங்கள் கட்சிக்கு உதவி செய்ய வேண்டும் என்று காரியை வேண்டிக்கொள்வார்கள். அவன், தன் படையுடன் சென்று, அவர்களுடைய படையுடன் சேர்ந்து, போர் செய்வான். நிச்சயமாக அவன் சேர்ந்திருக்கும் கட்சிக்குத் தான் வெற்றி உண்டாகும். இந்த உண்மையைத் தமிழ் நாட்டு அரசர்கள் யாவரும் உணர்ந்திருந்தார்கள். போர் முடிந்து, வெற்றி பெற்ற பிறகு, தமக்கு அந்த வெற்றியை வாங்கித் தந்த பெருவிரனாகிய மலையமானுக்கு, அவன் உதவியைப் பெற்ற அரசன், பொன்னும் பொருளும் யானேயும் குதிரையும் தேரும் வழங்குவான். பகைவரிடமிருந்து பெற்ற பொருளிலும் பங்கு கொடுப்பான். மலையமான் பெரிய அரசனைப் போன்ற செல்வத்தோடு வாழும் அளவுக்கு அவனுக்குப் பொருள் கிடைத்தது.
ஆனால் அவன் என்ன செய்தான் தெரியுமா? தமிழ்ப் புலவர்களிடத்திலும் இசைவாணர்கள் இடத்திலும் அவனுக்கு அளவற்ற அன்பு, அவன் போர்செய்யாத காலமெல்லாம் எப்போதும் புலவர்கள் தன்னைச் சூழ, இருப்பான். அவர்களுடைய கவிகளைக் கேட்டு மகிழ்வான். பொன்னை வாரி வழங்குவான். யானே, குதிரை, தேர் ஆகியவற்றைக் கொடுப்பான். இப்படிக் கணக்கில்லாத தேர்களைப் புலவர்களுக்குக் கொடுத்ததனால் ‘தேர்வண் மலையன்’ என்று அவர்கள் அவனைப் பாராட்டினர்கள். தேர் வழங்கும் வள்ளன்மையை உடைய மலையமான் என்பது அதற்குப் பொருள்.
மலையமான் திருமுடிக்காரியின் துணையைப் பெறாத அரசர்கள் அவன் பெயரைக் கேட்டாலே நடுங்குவார்கள். அக்காலத்தில் உறையூரில் இருந்து, அரசு செலுத்திய சோழனுக்குக் கிள்ளிவளவன் என்று பெயர். அவன் இரண்டொரு சமயங்களில் மலையமானுடைய உதவியைப் பெற நினைந்தான். அவனால் பெற முடியவில்லை. அதனால் அவனுக்குக் காரியினிடம் கோபம் உண்டாயிற்று. அந்தக் கோபம் காரியை என்ன செய்ய முடியும்!
திருமுடிக்காரி இறந்துவிட்டான். அந்தச் செய்தியைக் கேட்டுத் துடிதுடித்துப்போனர்கள் புலவர்கள். தன்னுடைய வீரத்தால் புலமையை வளர்த்த பெருமான் அல்லவா அவன்! புலவர்களுக்கு உதவி புரியாத மன்னர்களிடமும் தன் படையை உதவி, பொருள் பெற்றுப் புலவர்களுக்கு ஈந்த வள்ளல் அவன். அவனால் பல போர்களில் வெற்றி பெற்ற மன்னர்களும் அவனுடைய மறைவை அறிந்து, துயரடைந்தார்கள்.
இத்தனை பேர்களுக்கிடையே, ‘மலையமான் தொலைந்தான்’ என்று மகிழ்ச்சி அடைந்தவர்களும் இருந்தார்கள். அவர்களில் கிள்ளிவளவனும் ஒருவன். இனிமேல் மலையமானுடைய படை நம்மை எதிர்த்தால் என்ன செய்வது என்ற ஏக்கம் எந்த அரசருக்கும் உண்டாகாது. அவரவர்களுடைய சொந்த வீரத்துக்குத் தக்கபடி வெற்றி தோல்வி அமையும் என்று சொல்லி மகிழ்ந்தான்.
“அவனுக்குக் குழந்தைகுட்டிகள் உண்டோ” என்று விசாரித்தான் வளவன்.
“இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள்” என்று அமைச்சன் ஒருவன் சொன்னன்.
“அப்படியா? அந்தப் பாம்புக்குக் குட்டிகளும் இருக்கின்றனவா?” என்று சொல்லும்போது அவன் குரலின் வன்மை குறைந்தது.
“சிங்கத்துக்குப் பிறந்த குட்டிகள் அல்லவா?” என்று அங்கு வந்திருந்த புலவர் ஒருவர் கேட்டார். கிள்ளிவளவன் அதைக் காதில் வாங்கிக்கொள்ளவில்லை.
அன்று முதல் அவன் உள்ளத்தில் பொல்லாத எண்ணம் ஒன்று முளையிட்டது. எப்படியாவது அந்தப் பிள்ளைகளையும் தகப்பனார் போன இடத்துக்கே அனுப்பிவிட வேண்டும் என்ற எண்ணந்தான் அது. அவர்கள் இருவரும் குழந்தைப் பருவம் தாண்டாதவர்கள் என்பதை அறிந்தும் அவன் மனத்தில் பதிந்திருந்த பகையுணர்ச்சி போகவில்லை. குழந்தைகளாக இருந்தால் என்ன? முள்மரத்தை இளஞ்செடியாக இருக்கும்போதே களைந்து எறிவதுதான் நல்லது” என்று கிள்ளிவளவன் சொன்னன்.
அந்தச் சின்னஞ் சிறு பாலகர்களை எப்படியோ பற்றிக் கொண்டுவந்து விட்டார்கள் முரடர்கள். கிள்ளிவளவனிடம் பரிசுபெறச் செய்த வேலே!
“அக்குழந்தைகள் இருவரையும் யானைக்காலில் இடறி விடுங்கள்!’ என்று உத்தரவிட்டான் கொடுமணம் படைத்த கிள்ளிவளவன்.
இந்தச் செய்தி எப்படியோ நாட்டுமக்களுக்குத் தெரிந்து விட்டது. காரியினிடம் யாவருக்கும் அன்பு இருந்தது. “இளங்குழந்தைகளைக் கொல்வது முறையாகாது” என்று அரசனேடு நெருங்கிப் பழகுகிறவர்கள் எடுத்துரைத்தார்கள். அவன் சிறிதும் இரங்கவில்லை.
குழந்தைகளைக் கொல்ல நாள் குறித்தாயிற்று. கொலை செய்யும் யானையும் வந்துவிட்டது. புலவர் உலகத்திலும் இந்தச் செய்தி மெல்லப் பரவியது. எல்லோரும் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தனர்.
அக்காலத்தில் கோவூர் என்று சோழ மண்டலத்தில் உள்ள ஊரில் ஒரு பெரும் புலவர் வாழ்ந்துவந்தார். புலவர்கள் யாவரும் மதிக்கும் மாட்சி பெற்றவர் அவர் முடியுடைய மன்னர்கள் வணங்கும் தகுதி பெற்றவர். அவர் வந்து, வளவனுக்கு நல்லுரை கூறினால் ஒருகால் அந்த இளங்குழந்தைகள் உயிர் பிழைக்கும் என்ற எண்ணம் புலவர்களுக்கு உண்டாயிற்று. சில புலவர்கள் இந்தக் கொடுமையைக் கோவூர்கிழாரிடம் போய்ச் சொன்னர்கள். “நம் காரியின் குழந்தைகளையா கொல்லப் போகிறான்!” என்று திடுக்கிட்டவராய் அவர் உடனே புறப்பட்டுவிட்டார்.
இங்கே, கொலைக்களத்துக்குக் குழந்தைகளைக் கொண்டு சென்றனர். யானையைக் கொண்டுவர ஏற்பாடாகிவிட்டது. மக்கள் அங்கங்கே கூடிக் கூடி, “மகா பாபி! எதற்கும் அஞ்சாத கொடியவன்” என்று சோழனைத் துாற்றிக்கொண்டிருந்தனர்.
“கோவூர்கிழாருக்கு இந்தச் செய்தி போயிருக்கிறதாமே! அவர் வந்தால் சோழன் தன் மிடுக்கைத் தளர்த்துவான்” என்றார் சிலர்.
“அவர் ஊரில் இருந்து, சமயத்துக்கு வரவேண்டுமே!”என்று சிலர் சந்தேகத்தை எழுப்பினர்.
“அவர் வந்தால்தான் என்ன செய்வது? இந்த முரடன் இரங்குவான?” என்று ஒருவர் கேட்டார்.
“என்ன அப்படிச் சொல்கிறீர்? கோவூர்கிழாராலே சாதிக்க முடியாத காரியமும் உண்டா? இந்தக் குழந்தைகளின் தலைச் சுழி நன்றாக இருந்தால் அவர் வருவார்” என்றார் மற்றொருவர்.
அப்போது புதிய ஆரவாரம் கேட்டது. “வந்துவிட்டார்: வந்துவிட்டார்!” என்று மக்கள் பேசிக்கொண்டார்கள். கோவூர் கிழாரே வந்துவிட்டார். அவர் முதலில் அரசனிடம் போகவில்லை. நேரே கொலைக்களத்துக்குச் சென்றார். அங்கே குழந்தைகள் இரண்டும் அழுதுகொண்டிருந்தன. அப்போதுதான் யானையையும் கொண்டு வந்து நிறுத்தினர்கள். அதைப் பார்த்த குழந்தைகள், சிறிது நேரம் அழுகையை நிறுத்தி, வேடிக்கை பார்த்தன. தம்மைக் கொல்ல வந்த யானை என்று தெரிந்து கொள்ளாமல் குழந்தைகள் அழுகையை நிறுத்திப் பார்க்கிறார்கள் என்பதைக் கவனித்த கோவூர்கிழாருக்கு அழுகை வந்தது. அவர் தம் கண்ணைத் துடைத்துக் கொண்டார். குழந்தைகளிடம் போனார். அருகில் அவர்களுக்குக் காவலாக நின்றுகொண்டிருந்த அதிகாரியைப் பார்த்தார். “உங்கள் வேலையைச் சிறிது நேரம் நிறுத்தி வையுங்கள். நான் மன்னனிடம் சென்று, மீண்டும் வந்து சொல்கிறேன்” என்றார்.
புலவர்களுக்கு மதிப்புக் கொடுக்கும் தமிழ் காட்டில் பிறந்தவன் அல்லவா அந்த அதிகாரி? கோவூர்கிழார், முடியுடை மன்னர் போற்றும் பெருமையை உடையவர் என்பதை அவன் அறிவான். அவன் ஒப்புக்கொண்டான்.
உடனே புலவர், கிள்ளிவளவனே நோக்கிச் சென்றார். அவன், தன் அரண்மனையின் மேல் மாடத்தில் நின்றுகொண்டிருந்தான். கோவூர்கிழார் வேகமாகச் சென்று, அவன்முன் நின்றார். வந்த வேகத்தினால் அவர் பெருமூச்சு விட்டபடியே நின்றார்.
அவரைக் கண்டவுடன், கிள்ளிவளவன் எழுந்து வரவேற்றான். “மிக விரைவாக மூச்சு வாங்கும்படி வந்திருக்கிறீர்களே! சொல்லி அனுப்பவில்லையே! உட்காருங்கள்” என்றான்.
“மூச்சு வாங்கும்படி நீதான் செய்தாய். எனக்கு உட்கார நேரம் இல்லை. உன்னிடம் சில செய்திகளைச் சொல்ல வந்தேன்.”
“என்ன அவசரமான காரியம்?”
“ஆம்: தலைபோகிற காரியம் இது. சொல்லட்டுமா?”
“சொல்லுங்கள்” என்றான் அரசன்.
“இளங் குழந்தைகள் இருவரை நீ கொலை புரியுப் போவதாக நான் கேள்வியுற்றேன். அது நியாயமா என்று கேட்கத்தான் வந்திருக்கிறேன்” என்று படபடப்புடன் கூறினார் புலவர்.
“அவர்கள் இருவரும் மலையமான் பிள்ளைகள், அரசர்களை யெல்லாம் நடுங்கச் செய்த கொடியவனுடைய பிள்ளைகள் பெரியவர்களாகி அவனைப் போலவே கொடுமை புரிவார்கள். அப்போது அடக்குவதைவிட இப்போதே ஒழித்துவிடலாம் என்று எண்ணினேன்” என்றான் அரசன்.
“அரசே! மலையமானைக் கொடியவன் என்றா சொல்கிறாய்! இன்று தமிழுலகம் முழுவதும் அவனைப் போற்றுகிறது. அவன் உனக்கு என்ன தீங்கு செய்தான்? இந்தக் குழந்தைகள் உனக்கு என்ன தவறு செய்துவிட்டார்கள்? பாலைவனத்தில் வழியே போகிறவர்களை இரக்கம் இல்லாமல் கொல்லும் வேடன் செய்யும் செயலல்லவா இது? உன்னுடைய மரபைப்பற்றிச் சிந்தித்தாயா? சிபிச்சக்கரவர்த்தியின் வமிசம் என்றல்லவா உன் மெய்க் கீர்த்தி சொல்கிறது! அந்தச் சிபி என்ன செய்தான் என்பதைச் சற்றே நினைந்து பார். ஒரு புறாவைக் காப்பாற்றுவதற்கர்கத் தன் சதையை அரிந்து கொடுத்தான்! தானே தராசில் ஏறி நின்றான்! அவனுடைய மரபில் வந்த நீயா இந்தக் கொலை பாதகத்தைச் செய்யத் துணிந்தாய்!” கோவூர்கிழார் சிறிதே நிறுத்தினார்.
கிள்ளிவளவன் நெற்றியில் வேர்வைத் துளிகள் புறப்பட்டன. அவற்றைத் தன் கையால் துடைத்துக்கொண்டான். ஒன்றும் பேசாமல் இருந்தான். மறுபடியும் கோவூர்கிழார் சொல்லலானார்.
“இவர்கள் யார் தெரியுமா? என்னைப்போலத் தம்முடைய புலமையையே விவசாயமாகக் கொண்டு வயிறு பிழைக்கிறவர்களுடைய துன்பத்தைத் தன் துன்பமாக ஏற்றுக்கொண்ட வள்ளலினுடைய குழந்தைகள். தனக்குக் கிடைத்தவை எல்லாவற்றையும் புலவர்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்து, அவர்களுடைய நெஞ்சிலும் காவிலும் நாவிலும் வாழ்கிறவனுடைய குழந்தைகள்! பச்சிளம் பாலகர்கள். இவர்களைக் காப்பாற்ற வேண்டியது நல்லோர் கடமை. அப்படி இருக்க இவர்களைக் கொல்லத் துணிந்தாய்! நான் கொலைக்களத்துக்கு இப்போதுதான் போய் விட்டு வருகிறேன். அங்கே கண்ட காட்சி என் உள்ள்த்தை உருக்கிவிட்டது. வந்த அழுகையைத் தடுத்துக்கொண்டேன்.”
இங்கே சற்று நிறுத்தினர். மன்னன் சற்றுக் கூர்ந்து கவனித்தான். அவன் முகத்தில் நிழல் படர்ந்தது.
“அந்த இரண்டு இளங் குருத்துக்களும் அழுதுகொண்டிருந்தன. தம் உயிரை வாங்கப் போகிறார்கள் என்று அல்ல. அவர்களுக்கு அது தெரியாது. புதிய இடம், புதிய மனிதர்கள், ஆகையால் அழுதுகொண் டிருந்தார்கள். அப்போது அவர்கள் உயிரை வாங்கும் யானை முன்னே வந்து நின்றது. அதைக் கண்டவுடன் சிறிது அழுகை நின்றது. யானையைக் கண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டே நின்றார்கள். அடுத்த கணத்தில் தம் உயிரை முடிக்கப் போகும் அதை வேடிக்கை பார்த்தார்கள் என்றால் அந்தப் பிஞ்சு நெஞ்சம் எவ்வளவு மாசு மறுவற்றது என்று நினைத்துப் பார். புலவர் உலகம் போற்றும் ஒருவனுடைய குழந்தைகள் என்பதை மறந்தாலும், பேதைப் பிள்ளைகளின் இளம் பருவத்தையாவது நினைத்துப் பார். அந்தக் குழந்தைகளையா யானைக்குப் பலியிடுவது!”
அரசன் பேச முற்பட்டான். குரல் எழும்பவில்லை; கனத்துக்கொண்டான். புலவர் வருணித்த காட்சி, அவன் மனத்தை உருக்கிவிட்டது. அதோடு இந்தச் செயலால் புலவர்களின் சாபம் தனக்கு வரும் என்ற அச்சமும் உண்டாயிற்று.
மெல்ல வந்தது வார்த்தை “தங்கள் உபதேசப்படி நடக்கிறேன். என் பிழையைப் பொறுக்க வேண்டும்” என்று கிள்ளிவளவன் கையைக் குவித்தான். உடனே உத்தரவு பறந்தது. கோவூர்கிழாரே மறுபடியும் ஓடினார். “என் கண்மணிகளே!” என்று அந்த இரண்டு குழந்தைகளையும் மார்போடு அணைத்துக் கொண்டார். அவருடைய இருதயம் அப்போது அடைந்த உவகையை அந்தக் குழந்தைகளால் அறிய முடியுமா!
– கவிஞர் கதை, கலைமகள் வெளியீடு