உயர்த்தும் செயல்கள்





(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

(இதில் வரும் மனிதர்கள் உண்மையானவர்கள், கற்பனைப் பாத்திரங்கள் அல்ல. கட்டுக் கதைகளும் அல்ல. – சுதாராஜ்)
பூரி என்றால் ஒருவகை உணவுப் பண்டம் என்றுதான் அதுவரை நினைத்திருந்தேன். மாவைப் பிசைந்து ரொட்டிபோலத் தட்டி, அப்பளம் போல எண்ணெயிற் பொரித்து எடுக்கப்படும் பலகாரம். ஆனால் பூரி என ஒரு மனிதருக்கும் பெயருள்ளது என்பது ஈராக்கில் பணியேற்ற போது தெரியவந்தது. பூரி, அந்தக் கம்பனியின் உரிமையாளர். லெபனான் தேசத்தைச் சேர்ந்த கிறிஸ்த்தவர். பிரான்ஸிற் குடியிருந்தார். லண்டன், கிரீஸ் போன்ற நாடுகளிலும் அவருக்கு வீடு வாசல் சொத்துப் ‘பத்துக்கள் இருந்தன. உலகத்திலுள்ள சுமார் பதினைந்து நாடுகளில் அப்போது அவரது நிறுவனம் பல்கிப் பெருகியிருந்தது. அவரைப் பற்றி இங்கு சொல்வதற்குக் காரணமுண்டு.
நாங்கள் ஈராக்கில் யுத்தகளத்தில் இருந்தபோதுதான் அவருடனான நேரடி அறிமுகம் கிடைத்தது.
நான்கு நாட்கள் கடந்துவிட்ட நிலையிலும் யுத்தம் இன்னுமின்னும் உக்கிரமடைந்து கொண்டிருப்பதற்கான அறிகுறிகள்தான் தென்பட்டன. இரவும் பகலும் விண்ணதிரும் குண்டுச் சத்தங்கள் காதுகளையும் செவிடாக்கிக் கொண்டிருந்தன. எங்காவது ஒரு குண்டு விழுந்தால், அது குவார்ட்டேஸ் கட்டடத்தையே ஓர் உலுக்கு உலுக்கும். குண்டுச் சத்தத்தைக் கேட்டதுமே வயிற்றைக் கலக்கும் வருத்தம் பலருக்குத் தொடங்கியிருந்தது. பய உணர்வுக்கும் வயிற்றுக்கும் உள்ள தொடர்பு பலரைப் படாத பாடு படுத்திக் கொண்டிருந்தது. ‘யுத்தம் தொடராது… இரண்டொரு நாட்களில் ஒரு செற்றில்ட்மென்ற் வந்து ஓய்ந்து போகும்’ என்ற எங்கள் நம்பிக்கைகள் எல்லாம் ஓய்ந்து போயின. இன்னும் நிலமை மோசமடைவதற்கு முன்னர், இங்கிருந்து வெளியேறிவிட வேண்டும் எனும் ஏக்கம் தொழிலாளர்கட்கிடையே ஏற்பட்டிருந்தது.
இலங்கையிலிருந்து வந்திருந்த தொழிலாளர்கள் என்ஜினியர்களாயிருந்த எங்களுக்கு நெருக்குதல் தரத் தொடங்கிவிட்டார்கள்.
“நீங்கள் பேசாமலிருந்தால் கம்பனி ஒரு நடவடிக்கையும் எடுக்கமாட்டுது… ஏதாவது ஒழுங்கு செய்து எங்களை இலங்கைக்கு அனுப்பச் சொல்லுங்கள்…” ஆள் மாறி ஆள் இதே கோரிக்கையுடன் அறைக்கு வந்து கரைச்சல் தரத் தொடங்கிவிட்டார்கள்.
நாங்களும் இதுபற்றி மிஸ்டர் பூப்பேயிடம் தெரிவித்துக் கொண்டிருந்தோம். ஆனால், அவராலும் செய்வதற்கு ஏதுமில்லை என்பதுதான் உண்மை. நிறுவனத்தின் நிர்வாக அலுவல்களைக் கவனிக்கும் அலுவலகம் பாஸ்றா நகரத்திலிருந்தது. சுமார் நூறு மைல்கள் தூரத்திலுள்ள அந்த நகரத்துக்குரிய போக்குவரத்துக்கூட துண்டிக்கப்பட்டுவிட்டது. தொலைபேசிகளும் தொடர்பிழந்து தொல்லை தரத் தொடங்கிவிட்டன. இவை எல்லாவற்றுக்கும் மேலாக உள்நாட்டு வெளிநாட்டு பயணிகள் விமான சேவைகளெல்லாம் ரத்துச் செய்யப்பட்டுவிட்டன.
இந்தக் கதைகள் ஒன்றையும் தொழிலாளர்களிடம் கூறவேண்டாமென மிஸ்டர் பூப்பே எங்களிடம் கேட்டுக்கொண்டார். அவர்கள் குழப்பமடையக் கூடுமாம். ஏற்கனவே அவர்கள் வயிற்றுக் குழப்பமடைந்திருக்கும் விஷயத்தையும் மகேந்திரன் பூப்பேயிடம் தெரிவித்தான். ஒருவாறு அவர்களைச் சமாளித்துக் கொள்ளுமாறும், எப்படியாவது தான் மிஸ்டர் பூரியுடன் தொடர்பு கொண்டு பயணத்துக்குரிய ஒழுங்குகள் செய்து தருவதாகவும் கதை விட்டுக் கொண்டிருந்தார். ஆனால்… ‘அவர்களை நாங்கள் எப்படிச் சமாளிப்பது…? அவர்கள் தாங்களாகத்தானே (வயிற்றுக் குழப்பத்தை) சமாளிக்க வேண்டும்…?’ என மகேந்திரன் அப்பாவித்தனமாக அவரிடம் கேட்டான்.
‘பக்கத்திலுள்ள பாஸ்றா நகரத்துடனேயே தொடர்பு கொள்ளமுடியவில்லை. இவர் எப்படி பிரான்சிலிருக்கும் பூரியுடன் தொடர்பு கொள்ளப் போகிறார்?’ என எனக்குத் தோன்றியது.
எங்களுக்கோ தர்ம சங்கடமான நிலையாயிருந்தது. தொழிலாளர்களைச் சமாளிப்பதென்பது இலகுவான காரியமல்ல. ‘கூடிய சீக்கிரம் எங்களை இலங்கைக்கு அனுப்பாவிட்டால்… நாங்கள் சாப்பிடப்போவதில்லை, உண்ணாவிரதம் இருப்போம்’ என மிரட்டத் தொடங்கிவிட்டார்கள்.
இதைக் கேட்டதும் வார்டனாகப் பணியாற்றிய ஆங்கிலேயருக்குச் சந்தோஷமாயிருந்தது. ஏனெனில்… சீக்கிரம் எல்லோருமே உண்ணாவிரதம் இருக்க வேண்டிய நிலைமை நெருங்கிக் கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார். உணவு வகைச் சாமான்கள் கையிருப்பிலிருந்து வெகுவாகக் குறைந்து வருகிறதாம். அதனால் சாப்பாட்டைக் கொஞ்சம் கட்டு மட்டாக, குறைத்து எடுக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார்.
இதைக் கேட்டதும் உண்ணாவிரதப் போராட்டம் வேறுவடிவம் எடுத்தது. ‘இங்கே வைத்து எங்களைப் பட்டினி போட வேண்டாம்… ஒழுங்காகச் சாப்பாடு போடுங்கள் அல்லது ஊருக்கு அனுப்பி வையுங்கள்…’
எப்படியாவது இங்கிருந்து போய்விட வேண்டுமென்ற கவலை எனக்கும் இருக்கவே செய்தது. வானத்தில் குண்டு வீச்சு விமானங்களின் கோர இரைச்சலைக் கேட்கும்போதெல்லாம் நெஞ்சுறையும் பயம் ஏற்படும். எனினும் அதை அவர்களுக்குக் காட்டிக்கொள்ளாமல் துணிஞ்ச கட்டை போல பாவனை செய்து கொண்டிருந்தேன். எப்படியாவது அவர்களது மனோதைரியத்தைக் கெடச் செய்யாமல் பார்த்துக் கொள்ள வேண்டியிருந்தது.
குவார்ட்டேசின் பின்புறத்தில் நின்று பார்த்தால், அந்தப் பாலைவன வெளியில் வெகு தொலைவில் அணி அணியாகச் செல்லும் யுத்தத் தாங்கிகள் தெரியும். அவை ஈராக்குக்குச் சொந்தமானவையா, ஈரானிய தாங்கிகளா என மனதிற் சஞ்சலம் அதிகரிக்கும். எனினும் மாலைச் சூரியனின் ஒளியில் சிறு எறும்புகள் போல ஊர்ந்து செல்லும் யுத்த தாங்கிகளைப் பார்ப்பதில் ஒரு திறில் இருந்தது.
பாலைவன வெளிகளிற் திரியும் கட்டாக்காலி நாய்களெல்லாம் குவார்ட்டசிற்கு அண்மையில் வந்திருந்தன. (குண்டு முழக்கங்கள் அவைகளையும் கலக்கியிருக்கிறது) உருண்டு திரண்டு பருத்த கறுப்பு நிற காய்கள்.
“இவை பொல்லாத நாய்கள். கடித்துக் குதறி ஆளையே முடித்து விடும்…!” என எங்களில் ஒருவர் கதை அளந்தார். அவர் ஏற்கனவே பல வருடங்கள் அரபு நாடுகளில் பாலைவன வெளிகளில், தான் வேலை செய்த அனுபவத்தையும் இப்படி நாய்களிடம் மாட்டிக் கொண்டு சாதுர்யமாகத் தப்பிய விதத்தையும் எடுத்துக் கூறினார். அதனால் நாங்கள் அந்த நாய்களைக் கண்டதும் ஓடினோம். அவை எங்களைக் கண்டு ஓடின!
ஒரு மாறுதலுக்காக ரெலிவிசனைப் பார்த்தால் அதில் எந்த நேரமும் போர் ஊக்கப் பாடல்களைப் போட்டுக் கொண்டிருந்தார்கள். அதைப் பார்த்தால் (பாஷை புரியாவிட்டாலும், துவக்குத் தூக்க வேண்டும்போல) ஒருவித உற்சாகம் ஏற்படவே செய்தது.
எனினும், பொதுவாகச் சொல்வதானால் எல்லோரும் சோர்ந்து போனோம். பட்டரி வீக் ஆகிய பொம்மைகளைப் போல ஒவ்வொருவரின் இயக்கமும் இருந்தது. அத் தருணத்தில்தான் அவர் வருகை தந்தார்.
ஆறாவது நாள் காலை ஒன்பது மணியளவில் ஒரு ஜீப் வந்து நின்றது. அதிலிருந்து அவர் இறங்கினார். கிளீன் சூட் ரை சகிதம் பளிச் என்ற தோற்றம். நடுத் தலை வரை வெளித்திருக்கும் நெற்றி.
பாஸ்றா அலுவலகத்திலிருந்து யாராவது வந்திருக்கிறார்களாயிருக்கும் என்ற எண்ணத்தில் அவருக்கு அண்மையாக, புதினம் அறியும் ஆவலுடன் எல்லோரும் கூடினார்கள். தங்களுக்குத் தெரிந்த அரைகுறை ஆங்கிலப் புலமையைக் கொண்டு அவரைக் கேள்விகளால் துளைக்கத் தொடங்கி விட்டார்கள். அவர் புன்முறுவலுடன் பதிலளித்துக் கொண்டிருந்தார். “டோன்ற் வொறி, எல்லாரும் வீடுகளுக்குப் போகலாம்…” என அடிக்கடி கூறினார்.
பின்னர், பொது அறையில் மிஸ்டர் பூப்பேயுடனும் என்ஜினியர்மார்களுடனும் ஒரு கலந்துரையாடல் நடந்தது.
“இவர் தான் மிஸ்டர் ஜோர்ஜ் பூரி…!” என பூப்பே அவரை அறிமுகம் செய்து வைத்தார்.
“அட!” என ஓர் ஆச்சரியம் ஏற்பட்டது. கோடானு கோடி பணம் புரளும் சர்வதேச நிறுவனமொன்றின் சொந்தக்காரர், இப்படி ஓர் இக்கட்டில் மாட்டியிருக்கும் தன் தொழிலாளர்களை விடுவிக்க, யுத்த முனைக்கு வருவார் என்பதை நம்ப முடியவில்லை. தனது நிறுவனத்தில் பணிபுரியும் யாரையாவது அவர் ஒழுங்கு செய்து அனுப்பியிருக்கலாம். கதியற்றுப் போயிருந்த எங்கள் அவல நிலையை உணர்ந்து வந்திருந்தது, அவர் மேல் பெருமதிப்பை ஏற்படுத்தியது. அவர் சொன்ன செய்தி மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.
“விமான சேவைகள் எல்லாம் நிறுத்தப்பட்டு விட்டன. எனினும் தரைமார்க்கமாக குவைத்துக்குப் போய், பின்னர் அங்கிருந்து உங்கள் நாட்டுக்கு பிளேனில் போக ஒழுங்குகள் செய்திருக்கிறேன். ஆனால் முதலில் 125 பேருக்குத்தான் சீற் கிடைத்திருக்கிறது. மற்றவர்களுக்கு இன்னும் இரண்டு நாட்களுக்குள் ஒழுங்கு செய்யலாம். இன்றைக்கு இரவு பன்னிரண்டு மணிக்கு ஃபிளைற். இன்றைக்கு போகக் கூடிய ஆட்களின் லிஸ்ட்டை தயார் செய்து தாருங்கள்.”
லிஸ்ட்டை தயார் செய்வதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது. இன்னும் இரு நாட்கள் றிஸ்க் எடுத்து இங்கு நிற்க யாரும் தயாராயில்லை. யாரைச் சேர்ப்பது? யாரை விடுவது? இவர்களையெல்லாம் பாதுகாப்பாக ஊருக்குக் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டுமல்லவா?
மூன்று மணியளவில் ஆயத்தமாகி, பெரிய பஸ்களில் புறப்பட்டோம். முன்னே பூரியின் ஜீப் சென்று கொண்டிருந்தது. குவைத்திற்குள் பிரவேசிப்பதற்கான ஈராக் போடருக்கு வந்து சேரும்போது மாலை ஆறு மணி.
குடிவரவு, குடியகல்வு நிலையத்துக்கு அண்மையாக பஸ்கள் நிறுத்தப்பட்டன. இனித் தொடர்ந்து பஸ்களில் போக முடியாதாம். இங்கு உரிய பத்திரங்களை நிரப்பி பாஸ்போட்டில் பதிவு செய்து கொண்டு, குவைத் குடிவரவு, குடியகல்வு நிலையம் வரை நடக்க வேண்டும். இடைப்பட்ட தூரம் சுமார் ஆறு கிலோ மீட்டர் எனச் சொல்லப்பட்டது. போர்க் குணம் கொண்ட சிலர் இதைக் கேட்டு முறுகத் தொடங்கி விட்டார்கள். “அதெப்படி? இவ்வளவு தூரம் நடப்பது?”
எப்படியோ பெட்டி படுக்கைகளையெல்லாம் எடுத்துக்கொண்டு நடக்கத்தான் வேண்டும். படுக்கைகளையும் சிலர் சுமந்து வந்திருந்தது உண்மைதான். கம்பனியால் கொடுக்கப்பட்ட கம்பளி போன்ற படுக்கைவிரிப்புக்கள் – விட்டு விலகும்போது அவர்களிடமே விட்டுச் செல்ல வேண்டிய சொத்து – அவற்றை விட மனமில்லாது கொண்டு வந்திருந்தார்கள்.
அவர்களுடைய சுமையைக் கண்டு மனமிரங்கியவர் போல, மிஸ்டர் பூரி பாரமான ஒரு தொகை பொதிகளை கூடுமானவரை தனது ஜீப்பின் உள்ளேயும் மேலேயும் லோட் பண்ணும்படி கூறினார். முன்னே மெதுவாக ஜீப்பை ஓட்டிச் செல்லுமாறு ட்றைவரிடம் பணித்துவிட்டு அவர் எங்களோடு சேர்ந்து நடக்கத் தொடங்கினார்.
“அடடே…!” எனக்கு இன்னொரு முறை ஆச்சரியம். இவ்வளவு எளிமையாக எங்களோடு சேர்ந்து நடந்து வருகிறாரே! ‘இவருக்கு இந்தப் பெரிய கொம்பனியின் முதலாளியாக இருக்கத் தகுதியே இல்லை…’ எனச் சிலர் அபிப்பிராயப்பட்டார்கள். நடந்து நடந்துகொண்டே எங்களோடு மிக அன்னியோன்யமாக பேசத் தொடங்கினார் பூரி.
இரண்டொரு கிழமைக்கு முன்னர்தான் அனேகர் வேலையிற் சேர்ந்திருந்தார்கள். வெளிநாட்டில் நிறைய உழைக்கும் கனவுகளுடன் வந்தவர்கள். “போன மச்சான் திரும்ப வந்தான்” எனத் திரும்ப நேரிட்டாலும் உள்ளூர அவர்களுக்குக் கவலையிருந்தது. “ஊரில் போய் வேலை வெட்டி இல்லாமல் இருக்க வேண்டுமே, திரும்ப இந்த வேலை கிடைக்குமா…?” இப்படி இப்படிக் கற்பனைகள்… கலக்கங்கள்.
இதை உணர்ந்து கொண்டது போல பூரி கூறினார். கவலைப்படாமல் போங்கள். குடும்பத்தினருடன் சந்தோசமாயிருங்கள். சீக்கிரமாகவே திரும்ப உங்களை எனது கம்பனியின் மற்றைய நாடுகளிலுள்ள புறஜெக்டுகளுக்கு கூப்பிடுவேன்… நீங்கள் வீட்டில் நிற்கும் நாட்களுக்கெல்லாம் சேர்த்து சம்பளப் பணம் கிடைக்கும்.” அவரது செயல்கள் இன்னுமின்னும் ஆச்சரியத்தையே தந்தன. அவர் தனது தொழிற் துறையில் உயர்ச்சி நிலை அடைவதற்கும் இவ்வாறான குணவிசேடமும் காரணமாயிருக்கலாம் என எண்ணிக்கொண்டே நடந்தேன்.
குவைத் குடிவரவு நிலையத்தை வந்தடைந்த போது இரவு எட்டு மணியைத் தாண்டிவிட்டது. பன்னிரண்டு மணிக்கு ஃபிளைற். அதைத் தவற விட்டுவிடுவோமோ எனப் பூரி அவசரப்பட்டுக் கொண்டிருந்தார். அவரது அவசரம் புரியாமல் கௌண்டருக்குள் இருந்த அலுவலர் மிகச் சோம்பேறியாயிருந்தான். நீங்கள் போனாலென்ன வந்தாலென்ன என்பது போல அவன் தேனீரைச் சுவைத்துக் குடிப்பதும், இடைசுகம் ஒரு கருமத்தைச் செய்வதுமாக இருந்தான்.
எங்களை முன்னேயுள்ள வெளி நிலத்தில் போய் நிற்குமாறு பூரி பணித்தார். நாங்கள் அங்கு போய் நெடுநேரமாகக் காத்திருந்தோம். நேரம் ஒன்பது, பத்து எனக் கடந்து கொண்டிருந்தது. எங்களுக்கும் இருப்புக் கொள்ளவில்லை. இங்கிருந்து எத்தனை மணிக்குத்தான் கிளம்புவது? விமான நிலையத்துக்குப் போய்ச் சேர எவ்வளவு நேரமாகும்…? அதுவரை விமானம் காத்து நிற்குமா?
பூரியின் ட்றைவர் அப்போது வந்தான். “இங்குள்ள ஒரு என்ஜினியரைக் கூட்டிவருமாறு பூரி அழைக்கிறார்…” எனத் தகவல் தந்தான். அவனோடு போனேன்.
கரும பீடத்தின் முன் நின்றுகொண்டு, எங்களுடைய பாஸ்போட்களை விரித்து விரித்து அதிலுள்ள பெயர் விபரங்களை ஒரு பத்திரத்தில் எழுதி, அதில் ஒட்ட வேண்டிய முத்திரைகளை தனது நாக்கால் ஈரமாக்கி ஒட்டிக் கொண்டிருந்தார் பூரி.
என்னைக் கண்டதும், “எனக்கு சற்று உதவி செய்ய முடியுமா?” எனக் கேட்டார். கரும பீடத்தினுள் நிற்பவனை சமிக்ஞையால் காட்டி “இவன் சரியான சோம்பேறி. இவனை விட்டால் இந்த அலுவலை நாளைக் காலையிலும் முடிக்க மாட்டான். பிளேனை சற்று தாமதப்படுத்தும்படி கேட்டிருக்கிறேன். நீங்கள் எனக்குக் கொஞ்சம் உதவி செய்யுங்கள். உங்கள் பெயர்களை சட்டென வாசித்து எழுதுவதற்கு சிரமமாயிருக்கிறது.”
அவரை இன்னும் ஆச்சரியத்துடனும் பிரமிப்புடனும் பார்த்தேன். அலுவல்களை முடித்து, பாஸ்போர்ட்டுக்களை கௌண்டருக்குள் கொடுக்க அவன் ரப்பர் ஸ்டாம்பை மட்டும் மிகவும் சிரமப்பட்டு அடித்துத் தந்தான். வெற்றிச் சந்தோஷத்துடன் வெளியே வந்தோம். ‘அப்பாடா இனிப் போய்விடலாம்…’ என நெஞ்சில் ஆறுதலும் ஏற்பட்டது. ஏற்கனவே தயாராயிருந்த பஸ்களிற்குள் குதூகலத்துடனும் அவசரத்துடனும் பாய்ந்து, எல்லோரும் இடம் பிடிக்கத் தொடங்கினார்கள்.
ஆனால் அந்தச் சந்தோஷம் நீடிக்கவில்லை… விமானம் புறப்பட்டுவிட்டதாகச் செய்தி வந்தது.
– மல்லிகை, 2002.
– மனித தரிசனங்கள் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 2005, மணிமேகலைப் பிரசுரம், சென்னை.
![]() |
விபரக்குறிப்பு இயற்பெயர்: சிவசாமி இராஜசிங்கம்புனைபெயர்: சுதாராஜ்கல்வி: பொறியியற் துறை, மொரட்டுவ பல்கலைக்கழகம், இலங்கை. தொடர்புகளுக்கு:முகவரி: சி.இராஜசிங்கம், (சுதாராஜ்)சீ கிறெஸ்ட் அபார்ட்மென்ட்,189/1, 6/1, மகாவித்தியாலய மாவத்த,கொழும்பு 13, இலங்கை. S.Rajasingham (Sutharaj)Seacrest Appartment,189/1, 6/1, Mahavithyalaya Mawatha,Colombo 13, Srilanka. தொலைபேசி: 0094 112380999 (இலங்கை)தற்போதைய தொலைபேசி தொடர்பு: 00218 913084524 (லிபியா) E mail: rajsiva50@gmail.comrajasinghamsivasamy@yahoo.com படைப்புகள்: (வெளிவந்த நூல்கள்) சிறுகதைத் தொகுப்பு பலாத்காரம் - தமிழ்ப்பணிமனை வெளியீடு -1977…மேலும் படிக்க... |