உந்தன் நிழலாய் நானடி தோழி…
கதையாசிரியர்: காஞ்சி.தங்கமணி சுவாமிநாதன்
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: October 29, 2026
பார்வையிட்டோர்: 440
அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9
அத்தியாயம் – 4

அன்று வெள்ளிக்கிழமை.
காலை மணி ஒன்பதைத் தொடவிருந்தது.
பள்ளிக்குக் கிளம்பிக் கொண்டிருந்த சாரு இன்னும் சாப்பிடவில்லை.சாப்பாடு ஒன்னும் இட்லியோ தோசையோ இல்லை. பழைய சோறுதான்.
அந்த பழைய சோற்றையும் சித்தி சாப்பிட அனுமதித்தால் தான் சாப்பிடலாம்.
சித்தி வாசலில் தெக்குத்தெரு ராமு மாமாவிடம் பேசிக் கொண்டிருப்பது கேட்டது.
இவரா?இவர் ஒருவாரமா ஊர்ல இல்ல..காஞ்சிபுரம் போயிருக்கார். அங்க காமாக்ஷி அம்மன் கோவில்ல சண்டி ஹோமம்.. பாராயணம் நடக்கறது..
அதுக்கு வேதம்படிச்சவா நெறையா பேர் தேவப்படுவா ளோனோ?அதுக்கு கும்மோணம் சங்கரமடத்து லேந்து சிலபேர காஞ்சிபுரம் அனுப்பிருக்கா..அதுல இவரும் ஒத்தர்.
இன்னிக்கு ராத்திரியோ நாளைக்குக் காலம்பரயோ வந்துடுவார். ஏம்மாமா எதுக்கு இவரத் தேடறேள்?
வர வியாழக்கெழம சதுர்த்தில்லியா?அன்னிக்கு ஆத்துல கணபதிஹோமம் பண்ணலாம்னு நெனக்கிறேன்.
அதா சாம்புவால வந்து பண்ணிவெக்க முடியுமானு..
பேஷா..பேஷா..செஞ்சு வெப் பார்.அதா இன்னிக்கோ நாளைக்கோ வந்துடுவாரே?
இன்னிக்குதானே வெள்ளிக் கெழம..வியாழக்கெழம தானே சதுர்த்தி? நடுப்பற அஞ்சுநாள் இருக்கே? நிச்சயமா வந்து ஹோமத்த பண்ணிவெப்பார்.
அவர ஆத்துக்கு நாளைக்கோ நாளாண்ணிக்கோ வரச் சொல்றேன்.
சரி..வரச்சொல்லுங்கோ.. வாங்கவேண்டிய சாமான் லிஸ்ட் போடணுமே..
நா வரேன்..ராமுமாமா நகர்ந்தார்.
மணி ஒன்பது அஞ்சு.
சித்தி இன்னும் உள்ளே வரவில்லை.வாசலில் போய் சித்தி சாப்ட..என்று கேட்டால் முடிந்தது கதை..
ஸ்கூல்க்கு லேட்டாவதால் தவித்தாள் சாரு.
அஞ்சல..பத்துநாளா கொஞ்சம் பெரண்ட (பிரண்டை)கொண்டுகுடு அப்பளம் இட பெரண்ட வேணும்னு கேட்டேனே?குடுத்தயாநீ?..சும்மாவா கேட்டே.?கொண்டுகுடுத்தா காசுகுடுக்கமாட்டே?
தெருவில் நடந்துசென்ற தயிர்க்காரியிடம் குறைபட்டுக் கொண்டாள் நாகலெஷ்மி.
அய்யோ கடவுளே..சுத்தமா மறந்துட்டேம்மா..நிச்சயமா நாளைக்குக் கொணாந்து தாரே..நின்றுகூட பதில் சொல்லாமல் நடந்து போய்க் கொண்டே சொல்லிக் கொண்டு போனாள் தயிர்க்காரி.
திமிரபாரு..தயிர்க்காரி மு…டைக்கு..நின்னு மூஞ்சிபாத்து பதில் சொன்னா என்ன?கொறஞ்சாபோயிடுவா?அதா கால்தேய தெருத்தெருவா நடந்து தயிர்விக்கறா.. ஆட்டுக்கு வால ஆண்டவ அளந்துதா வெப்பா..
எத்தன காலமானாலும் தயிர்வித்துதா வயிறு வளப்பா திமிர்புடிச்ச நாயி..
நாக்கில் நரம்பின்றி தயிர்க்காரியைத் திட்டும் சித்தியிடம் சாப்பாடு கேட்கவே பயமாயிருந்தது சாருவுக்கு.
மணி ஒன்பதேகால்.
பேசாமல் புத்தகமூட்டையை எடுத்துக்கொண்டு கிளம்பி னாள்.
வாசலுக்கு வந்தபோது எதிர் வீட்டு பாலசுந்தரி பாட்டி யோடு பேச்சை ஆரம்பித் திருந்தாள் நாகலெஷ்மி.
சித்தி ஸ்கூலுக்கு போயிட்டு வரே..மும்முரமாய்ப்பேசிக்கொண்டிருக்கும் சித்தியிடம் சொல்லிக்கொண்டாள் சாரு.
காதில் விழவில்லையா விழுந்தும் கண்டுக்காமல் இருந்தாளா நாகு என்பது அவளுக்குதான் தெரியும்.
சித்தி சித்தி என்று அழைக்கும் சாருவைத் திரும்பிக்கூடப்பார்க்க வில்லை.
பாலசுந்தரிபாட்டிதான்..நாகு..
கொழந்த கூப்டறா பாரு என்றார்.
அப்போதுதான் சாரு அழைத்தது காதில் விழுந்ததுபோல் திரும்பிப் பார்த்தாள் நாகலெஷ்மி.
என்ன..வருங்கால கலெக்டரம்மா..பள்ளிக்கூடம் கெளம்பியாச்சா?..கேள்வி யில் நக்கலும் நையாண்டி யும் கலந்திருந்தது.
போ..போ..மூட்ட துணிகெடக்கு தோய்க்க.. நீதா வந்து தோய்க் கணும்..மத்தியானம் சாப்பாட்ட மட்டும் நெனச்சிண்டு நாக்க தொங்கப்போட்டுண்டு வராத..
மத்தியான ஸ்கூல் போரதுக் குள்ள துணிய தோச்சுப் போடுட்டுப்போ..அப்பறம் வெய்யில் போயிடும்.
ஏண்டி நாகு.. கொழந்த சாப்டாளா?சுந்தரிப்பாட்டி கேட்கவும்..
நன்னாருக்கே..எட்ர மணிக் கெல்லாம் இட்லிவாத்து சட்னி அரச்சு.. போட்டுட்
டேனே?சாப்டாமயா பள்ளிக்
கூடம் போவா?சாப்ட்டா.. சாப்ட்டா..
பகீரென்றது சாருவுக்கு.. பழேத்துக்கே வழியில்ல.. இட்லி வாத்துப்போட்டேன்னு எப்பிடி புளுகரா சித்தி.. கண்கள் கலங்கிப்போனது சாருவுக்கு
சாப்ட்டியா என்றுகூட கேட்காத சித்தி..இட்லி வாத்தா போட்டுடுவா?பசிதாங்கல..
நினைத்தவாரே நாலடி நடந்தவளை சாரு இன்னிக்கு ரொம்ப லேட்டுடி நீ..
பள்ளிக்கூட மணி அடிக்கிற சத்தம் கேக்குதுபாரு..வாடி சீக்கிரம்..தன்வீட்டு வாசலில்
சாருவுக்காகக் காத்து நின்ற ரேவதி சாருவின் சோர்வான முகம் பார்த்து சட்டெனப் பேச்சை நிறுத்தினாள்.
சாரூ..ஏண்டி சோர்வாருக்கு மூஞ்சி..சாப்டியா இல்லியா?
ப்ச்..இல்லடி..சித்தி சாப்ட சொல்லல..சாப்டுனு சொல்லாட்ட எப்பிடீடி சாப்டறது..பழேதுதா..அதை யும் சித்தி சொன்னாதா சாப்ட லாம்..சாப்டுனு சொல்ல லியே என்னடி பண்றது?
சாப்டுனு சொல்லாம நானா சாப்டுட்டேன்னா..இந்தக் கைதானே என்னக்கேக்காம சாதத்த எடுத்து வாயில போட்டுண்டுதுன்னு இலுப்பக்கரண்டி காம்பாலயே வெரல்ல அடிப்பா..
அய்யோ..சாரூ..ரேவதியின் தொண்டைக்குழியிலிருந்து
கேவல் வெளிப்பட்டது. தோழியின் கையை ஆதரவாய் இறுகப்பற்றிக் கொண்டாள்.கண்கள் கலங்கிப்போனது.
பள்ளிக்கூடம் இருக்கும் தெருவுக்குள் நுழைந்தா யிற்று.
பள்ளியை அடைய இன்னும் சிறிதுதூரமே இருக்கும் நிலையில் வலப்புறம் இருந்த சந்துக்குள் நுழைந்தாள் ரேவதி.
ஏண்டி ரேவி சந்துக்குள்ள போற?
வாடி சொல்றேன்.. சொல்லிக் கொண்டே நடந்தவளைப் புரியாமல் பின்தொடர்ந்தாள் சாரு.
ரேவதி வீட்டின் கொல்லைப் புறம்.
எதுக்குடி ஒங்காந்து கொல்லைக்கு வந்து நிக்கிற?
சொல்றே..
மூங்கில் பிளாச்சால் போடப்பட்ட கேட்..மூங்கில் முள்ளால் கட்டப்பட வேலிப்படல் அடைப்பு..
மூங்கில் கேட்டின் மீது போடப்பட்டிருந்த கம்பிவளை யத்தை எடுத்துவிட்டு கேட்டைத் திறந்து கொண்டு கொல்லையில் கால்வைத் தாள் ரேவதி.
ரேவதி ஸ்கூல் பெல்அடிச்சு நாழியாயிடுச்சுடி..எதுக்கு இங்கவந்த?கேட்ட சாருவை..
சித்தநாழி சும்மா இருடி சாரு..
அமைதியானாள் சாரு.
கொல்லைக்கதவு.லேசாகக் கதவைத்தட்டினாள் ரேவதி.
கிணற்றடியில் குளித்துக் கொண்டிருந்த ரேவதியின் அப்பா கணேசன்..யாரது என்றார்.
அப்பா நாந்தாப்பா..
ஈரம் சொட்டும் துண்டோடு வந்து கதைவைத்திறந்த கணேசன்.என்னங்கடி குட்டிங்களா பள்ளிக்கூடம் போகல..எதுக்கு கொல்லை யால ஆத்துக்கு வரேள்?
அடியே..மங்களம்..இங்க வந்துபாரு.. ரேவதியு..உள்ளே பார்த்து மனைவிக்குக் குரல் கொடுத்தார்.
அப்பா..கத்தாதிங்கோப்பா..
சாரு சித்தி காதுல கீதுல விழுந்துடப் போறுது.
ஓ..சரி..சரி..போங்கோடி குட்டிங்களா..மீண்டும் கிணற் றடிக்குப் போய்விட்டார்.
சாரு..சாப்புடு..இரண்டு இட்லியும் எண்ணை ஊற்றிய மிளகாய்ப் பொடியும் வைத்த தட்டைத் தன்னை நோக்கி நீட்டிய ரேவதியின் அம்மாமாவைப் பார்த்தாள் சாரு..
மாமி..வேண்டாம் மாமி..
ஏண்டி வேண்டா?..ஏ வேண்டா?..ரேவதி சொன்னா
நீ சாப்டலேன்னு.
மூஞ்சியப் பாத்தாலே தெரியருது..வயத்துல ஒன்னுமில்லேன்னு.. சுண்டிக்கெடக்கு மூஞ்சி..
பட்டபட்னியா கொழந்தைய இப்பிடியா பட்னிபோடுவா..
எந்தக்கொழந்தையையும் பட்னிபோடக்கூடாது.அதுவும் பொண் கொழந்தைய பட்னிபோட எப்பிடிதா மனசு வருதோ..ராட்சஷி..பாவி..
இல்ல மாமி..சித்தி பாவியில்ல..நாதா பாவி.. எப்பவோ நெறைய பாவம் செஞ்சுருக்கேம் போலருக்கு..
அதா என்னவிட்டுட்டு அம்மா செதுப்பேட்டா..அம்மாவோட நானும் பேருக்கலாம்..
சாரூ.. அப்பிடி சொல்லாதடி சாரு..நால்லாம் இருக் கேண்டி ஒனக்கு. வருத்த மாய்ப்பேசும் சாருவின் பேச்சை இடை மறித்தாள் ரேவதி.
ராமா..பத்துவயசு கொழந்தைய இப்பிடி பேசர அளவு வெச்சுட்டி யேப்பா..வருத்தப்பட்டார் ரேவதியின் தாய் மங்களம்.
இந்தாங்கோடி ஆளுக்கு ஒருவா காப்பி குடிங்கோ..
ரேவதியின் அம்மா பாசமுடன் கொடுத்த இதமான சூட்டிலிருந்த அந்த காபி அமிர்தமாய் இருந்தது சாருவுக்கு.
இரண்டு இட்லியும் காபியும் வயிற்றுக்கு நிறைவைத்தர..
அப்பாடி என்றிருந்தது. புத்துயிர் வந்ததுபோல் தோன்றியது.
பாவம்தான்.சாரு..தாய் ஒருத்தி இல்லாவிட்டால் எத்தனை அவதி தாயில்லா பிள்ளைகளுக்கு.
மங்களம்மாமிபோல் சிலர் இருப்பதால்தான் உலகம் சீராய் இயங்குகிறதோ?
மீண்டும் பள்ளிக்குக் கிளம்பினார்கள்.
மாமி..ரொம்ப டேங்ஸ்(தேங்ஸ்) மாமி..என்றாள் சாரு..குரல் தழுதழுத்தது.
போடி கொழந்த.. டேங்ஸாமே.. டேங்ஸ்.. எதுக்குடி டேங்ஸ்சு? நீயும் ரேவதிமாரிதா எனக்கு..
கிளம்புங்கோ பள்ளிக் கூடத்துக்கு..லேட்டுன்னு வாத்தியார் வையப்போறார்.
ரேவி ஏ லேட்டுனு சார் திட்டுவாராடி?..
அடிபோடி.. நம்ம நாராயண சாமி வாத்தியார் திட்டவே மாட்டார்டி..மேஜேல சாஞ்சிண்டு தூங்கிப் போயிருப்பாருடி..நைஸா நொழஞ்சி நம்ம எடத்துல போய் ஒக்காந்துடுவோம்டி..
காஞ்சனா.. சார்ட்ட சொல்லு வாடி..ரெண்டுபேரும் நைஸா உள்ள வந்துட்டாங்க சார்.. அப்பிடீன்னு போட்டுக் குடுப்பாடி.
அவமட்டும் அப்பிடிசெஞ்சா..
அவ எலிவால் பின்னல ப்ளேடால அறுத்து விட்ருவேண்டி..சொல்லிவிட்டுச் சிரித்தாள் ரேவதி.
ச்சீ..பாவண்டி அவ.. அப்டீல்லாம் செஞ்சுடாதடி.
ஆமா சொன்னாத அப்டியே செஞ்சுடுவேனாக்கும்.ஆனா லும் சாரு.. ஒனக்கு ரொம்ப எரக்க மனசுடி..சிரித்தாள் ரேவதி.
தோழியோடு சேர்ந்து சாருவும் சிரித்தாள்.
பள்ளிக்கூடத்தின் படிகளில் ஏறினார்கள் இருவரும். ரேவதி இரண்டாம் படியில் ஏறும்போது முதல் படியில் ஏறினாள் சாரு.
இரண்டாம் படியில் ஏறிய ரேவதி கொஞ்சமாய்த் திரும்பி முதல்படியில் ஏறிய சாருவின் வலதுகை தோளுக்கும் முழங்கைக்கும் இடையேயான பகுதியைப் பிடித்து இரண்டாம் படியில் ஏற்றிவிட்டாள்.மொத்தமாய் ஐந்துபடிகள்.
மொத்தப்படிகளையும் தினமும் இப்படித்தான் ரேவதி ஏற்றிவிடுவதும் சாரு ஏறுவதும் வழக்கம்.
மொத்தப் படிகளையும் ஏறி முடித்தாகிவிட்டது.
அக்கால வீடுகளில் இருப்பது போல் ரேழி இருந்தது அப்பள்ளியில்.ரேழியைத்தாண்டிதான் பிள்ளைகள் அவரவர் வகுப்புக்குச் செல்ல வேண்டும்.
அந்த ரேழிக்குள் நிலைப் படியைத்தாண்டி சாருவும் ரேவதியும் கால் வைத்தார்கள்.
இன்று இதோ ஒன்றாய்ச் சேர்ந்து பள்ளிக்குள் கால்வைக்கும் தாங்கள்..
இனி..என்றுமே இதுபோல் ஒன்றாய் கைகளைக் கோர்த்தபடி பள்ளிக்கு வரப்போவதில்லை.. பள்ளிக்குள் ஒன்றாய் நுழையப்போவதில்லை.
இப்படி வருவது இதுதான் கடைசி நாள் என்பதையோ..
ஏன்?இனி வாழ்க்கை முழுவதும் ஒருவரையொரு வர் சந்திக்கவே போவதே இல்லை என்பதையோ எப்படி அறிவார்கள்?
மூன்று வயதில் வெறும் ஜட்டியை மட்டும் போட்டுக் கொண்டு சொப்புசாமான் வைத்துக் கொண்டு சாருவும் ரேவதியும் விளையாட ஆரம்பித்த ஸ்னேகம்..
எப்போது சாருவின் அப்பா சாம்பு சாருவின் ஐந்து வயதில் இரண்டாம் திருமணம் செய்து நாகலெஷ்மியை அழைத்து வந்தானோ அத்தோடு..
சாரு..ரேவதியின் சொப்பு வைத்துவிளையாடும் விளையாட்டு முடிந்து போனது.
சாருவைப் பெத்துப் போட்டு விட்டு முதல் மனைவி கண்ணைமூட..சாருவின் ஐந்துவயதுவரை குழந்தை சாருவை நன்றாகத்தான் பார்த்துக் கொண்டான் சாம்பு.
ரெண்டாவதாய் நாகலெஷ்மி யைக் கொண்டு வந்தபிறகு எல்லாமே தலைகீழாயிற்று.
சாரு குழந்தையென்றும் பாராமல் வெறுப்பை உமிழ்ந்தாள் நாகு.மூத்தா பெத்த குழந்தை வேம்பாய்க் கசந்தது.
சாருவைப் பள்ளியில் சேர்ப்பதைக்கூட எதிர்த்தாள்.
ஆனாலும் எப்படியோ சாரு பள்ளியில் சேர்க்கப்பட்டாலும் சாருவைத் தன் மனதில் சேர்த்துக் கொள்ளவில்லை நாகு.
எப்பிடியாவது மூத்தா பெத்த மூதேவிய பள்ளிக்கூடம் போகாம செஞ்சுடமாட்டேன்..
மனதுக்குள் கறுவியபடி இருந்தாள்.அதற்கான நேரத்திற்காகக் காத்திருந் தாள்.
தாயில்லா தகப்பன் தாயாதி என்று சொல்வதுபோல் தாயில்லா சாருவுக்கு தகப்பன் சாம்பு கொஞ்சம்கொஞ்சமாய் தாயாதிபோல் மாறிப் போனான்.நாகுவால் மாற்றப் பட்டான்.
குழந்தை சாருவுக்கு பிறந்த வீடே சிறையாயிற்று.
தந்தையிருந்தும் குட்டிப் பெண் சாரு அனாதைபோல் ஆகிப் போனாள்.
எல்லாக்கதவையும் சாத்தி விட்டாலும் ஒரேயொரு ஜன்னலையாவது ஆண்டவன் திறந்து வைப்பான் என்பது போல்..
குட்டிப்பெண் சாருவுக்கு ரேவதியின் தோழமையை மட்டும் விட்டு வைத்திருந் தான் ஆண்டவன்.
எங்கே பக்கத்தாத்து மங்களம் மாமியின் பெண்குழந்தையை சாருவோடு விளையாடக் கூடாது..சிநேகமாய் இருக்கக் கூடாது என்று தடை விதித்தால் பக்கத்துவீட்டுப் பொல்லாப்பு வருமென்று அஞ்சி சாருவும் ரேவதியும் பழகுவதை அனுமதித்திருந் தாள் நாகு வேறு வழியின்றி.
சாருவுக்கு ரேவதியின் தோழமையெனும் ஒற்றை ஜன்னலைத் திறந்து விட்டிருந்த ஆண்டவன் அதனையும் மூட நினைத் தானோ?..
இன்னும் இரண்டே நாட்களில் தோழிகள் இருவரையும் பிரிக்கக் காலமோ..விதியோ..
இறைசக்தியோ இம்மூன்றில் ஏதோவொன்று சதிசெய்யக் காத்திருப்பதை அறிய வில்லை இப்பிஞ்சு நெஞ்சங்கள்.
அத்தியாயம் – 5
கையிலிருந்த புடவையை தோள் மீது போட்டுப் பார்ப்பதும்..கையால் புடவையைத் தடவிப் பார்ப்பதுமாய் சந்தோஷம் பிடிபடவில்லை நாகுவுக்கு.
ஏன்னா..பாத்தேளா?காஞ்சிபுரம் பட்டுன்னா காஞ்சிபுரம் பட்டுதா.. கலரும்..ஜரிகையும்.. வழவழப்பும்..
நம்ம திருவிடமருதூர் பக்கத்துல இருக்கற திருபுவனம் பட்டுப்பொடவ ஒசத்திதா.. இல்லேங்கல..
ஆனாலும் பட்டுன்னா.. காஞ்சிபுரம்னுதா எல்லார் மனசுலயும் தோணும் இல்லையா?எனக்கு இந்தப்பொடவ நன்னாருக்கு மான்னா கட்டிண்டா?கொஞ்சலாய்க் கேட்டாள் கணவன் சாம்புவிடம் நாகு..
அதென்ன அப்பிடிக் கேட்டுட்ட நாகு..ஒனக்கு இந்தகலர் ரொம்ப பாந்தமா இருக்கும்டி.
அப்பிடிச்சொல்லுங் கோன்னா..
சீனுதான்னா ஒரு வாரமா ஒங்களப்பாக்காம ஏங்கிப் போய்ட்டான்..சிணுங்கிண்டே இருந்தா..கண்ணு அங்கயும் இங்கயும் ஒங்களத் தேடருது..
ஏண்டா கண்ணு அப்பாவத் தேடறயான்னு கேட்டேம் பாருங்கோ..கொழந்த கண்ணுல அப்பிடி ஜலம் கொளம் கட்டிடுத்து.
பேச்சுமட்டும் பேசத்தெரிஞ் சிருந்துது..அப்பாட்டபோணும் அப்பாட்டபோணும்னு அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிருப் பான் நம்ம கொழந்த சீனு.
கொழந்த ஒங்களப்பாக்காம ஏங்கிப்போயிடுத்துன்னா..
ஏகத்துக்கும் நடித்து கண்களில் கண்ணீரை வலுக்கட்டாயமாய் வரவைத்துக்கொண்டு கணவனை நம்ப வைத்தாள் நாகு.
சீனு.. சீனுக்கண்ணா.. அப்பாவக் காணும்னு அழுதியா செல்லம்.. தோ..அப்பாவந்துட்டேனே.. எஞ்செல்லம்..அப்பாட்டவா அப்பாட்டவா.. என்றபடி ஊஞ்சலிலமர்ந்திருந்த சாம்பு அதிலிருந்து இறங்கி பிள்ளையை நோக்கி இரண்டடி வைத்தான்.
கீழே தரையில்.. பெய்த மூத்திரத்தின் நடுவிலமர்ந்து ஓடும் அதைக் கையால் தளக்தளக்கென்று அடித்து நாலாபுறமும் தெறிக்க விடுவதும்..மூத்திரக்கையை வாயில் வைத்துக் கொள்வது மாயிருந்த ஒன்னரைவயது சீனு தன்னைப்பெற்றவனை நிமிர்ந்தும் பார்க்கவில்லை..
செய்யும் செயலில் மும்முரமாய் ஈடுபட்டிருந்தான்.
அய்யோடீ..மூத்தரத்லுல எத்தன்நாழியா ஒக்காந்தி ருக்கான்னு தெரியிலயே?
பேச்சுப்ளாக்குல பாக்காம இருந்துட்டேனே?
ஏ..மூதேவி சனியனே.. கொழந்தைய பாக்க மாட்டியா?மூத்தரத்துல வெளையாடிண்ருக்கா.. அதக்கூட பாக்காம நீ என்ன பண்ணீன்ருக்க?
பாக்கரபார்வையப்பாரு..
புதுசா ஒன்னு கெடச்சுடப் படாதே எனக்கு..
புதுப்பொடவேல நீ பாக்கறப்பார்வையால ஓட்ட ஓட்டையா விழுந்துடும் போலன்னா இருக்கு.. தீசப்பொணம்..
வாயிலிருந்து வெறுப்பாய் வந்து விழுந்தன வார்த்தைகள்.
இல்ல சித்தி..தம்பி மூச்சா போனத நாம் பாக்கல சித்தி..
பயந்துபோய் மெலிதாய் பதிலளித்தாள் சாரு.
போ..சீனுவத்தூக்கிண்டு போய் பின்பக்கம்..காலு கையெல்லாம் தண்ணி ஊத்தி அலம்பு..
துணியாலத் தொடச்சிவிடு..
சுருணய எடுத்துண்டு வந்து இந்த எடத்தத் தொட..
சரி சித்தி..வீட்டுப்பாடம் எழுதிக்கொண்டிருந்த சாரு எழுந்தாள்.
சீனுவைத் தூக்கிக்கொண்டு ரெண்டாம்கட்டுக்குப் போனாள் சாரு.
த..பாருங்கோன்னா..ஒங்க மூத்தாந்தாரத்துப் பொண்ணுக்குன்னு கொண்டு வந்திருக்கேளே
பாவாட சட்டைக்கான பட்டுத் துணி..நல்ல பச்சகலர்ல அரக்குபார்டரும் கெட்டிச் ஜரிகையுமா.. பாத்தா கண்ணப் பறிக்கறது.
இவுளுக்கொன்னும் அத பாவாட சட்ட தைக்க வேண்டாம். எ அண்ணா பொண்ணு மீனாட்சிக் குன்னா குடுத்துலாம்னு இருக்கேன்.
பச்ச கலருக்கும் அதுக்கும்.. அவுளுக்குத்தச்சுப்போட்டா
பக்கப்பதிய அப்பிடியே மதுர
மீனாட்சி அம்மன் சின்னப் பொண்ணா இருக்கறச்சே
கட்டிண்டாப்ல இருக்கும்.
ஏ அப்பிடி சொல்ற நாகு?காமாக்ஷி கோயில்ல சுஹாசினி பூஜைக்கும்.. கன்யா பூஜைக்கும் நூத்தி எட்டு சுமங்கலிகளுக்கும்.. கன்யா பொண்களுக்கும் பூஜபண்ணி வெச்சுக்குடுத்த பட்டுப் பொடவேல.. ஒன்னு ஒனக்கும்..கன்யா கொழந்தே ளுக்குக் குடுத்த பாவாட சட்டைக்கான துணில
சாருவுக்கு ஒன்னும் குடுத்தா..
நேர்ல வராட்டியும் பாதகமில்ல.. பூஜபண்ணின பொடவ.. பாவாட சட்டத் துணி..ஆத்துல மாமிக்கும்.. பொண்ணுக்கும் கொண்டு குடுங்கோ..ஷேமமா
இருக்கட்டும்னு சொல்லி ஆசிர்வாதம் பண்ணிக் குடுத்தா..அப்பிடியான பொடவ..பாவாடத்துணியாக்கும் இதெல்லாம் தெரியுமோனோ?
அம்பாள் காமாக்ஷியோட பிரசாதம்..கெடைக்குமா எல்லாருக்கும்?..அதப்போய்..
இப்ப என்ன சொல்ல வரேள்?
காமாக்ஷி பிரசாதம் எ அண்ணாபொண்ணுக்கு கெடச்சுடப்பிடாது..அவுளுக்கு அம்பாள் பிரசாதத்த வாங்கிக்கிற தகுதியில்ல..
ஒங்க மூத்த பொண்டாட்டி யோட பொண்ணுக்குதா
அந்தத் தகுதியிருக்கு.. அதானே?
எ அண்ணா பொண்ணு எ ரத்தம்தா.. அவுளுக்குத் தகுதியில்லேன்னா எனக்கு மட்டும் அந்தத் தகுதி வந்துடுமான்ன?
இந்தாங்கோ..பொடவ..இத ரெண்டா கிழிச்சா ஒங்க மூத்தாந்தாரத்துப் பொண்ணுக்கு இன்னும் ரெண்டுபாவாட சட்ட தெக்கலாம்.மொத்தமா மூணு பாவாட மூணு சட்டையாச்சு..
போட்டுண்டு மினுக்கட்டும்.
இந்தாங்கோ..கையிலிருந்த புடவையை ஊஞ்சலை நோக்கி விட்டெறிந்தாள்.
சீனுவின் உடலைத் துணியால் துடைத்தவாறே ரெண்டாம் கட்டிலிருந்து தாழ்வாரத்தில் கால்வைத்த சாருவிடமிருந்து
சீனுவை வெடுக்கெனப் பிடுங்கிக்கொண்டு கூடத்திலிருக்கும் அறையை நோக்கி கோவமும்
அழுகையுமாய் வேகமாக நடந்தாள் நாகு.
அவளின் மாய்மாலத்தில் பயந்துபோனான் சாம்பு.
டீ..டீ..நாகு.. நாகு.. என்னடி நாகு இப்பிடி கோச்சுக்குற?.. நானே ஒருவாரமா நாகுவப் பாக்கணும் சீனுவப்பாக்க ணும்னு தவியா தவிச்சிண் ருந்தேன் தெரியுமா?
ஒருவாரம் கழிச்சி இன்னிக்குதானே வந்திருக் கேன். என்னமோ தோணித்து சொல்லிட்டே..
அதுக்குப்போய் இப்பிடியா கோச்சுப்ப?.. பல்லைக்காட்டி நாகுவை சமாதானம் செய்தான் நாப்பத்திநாலு வயது சாம்பு.
என்னவோ ஃபாரின் போய்விட்டுப் பத்துவருஷம் கழித்து வந்தவன்போல் கெஞ்சிக் கொஞ்சினான்.
இப்ப என்னங்கிற..பாவாட சட்ட பட்டுத்துணிய ஒ அண்ணா பொண்ணுக்குக் குடுக்கணும் அவ்ளதானே?.. ஓ ஆசைக்குக் குறுக்கா நா நிப்பேனா?மீனாட்சி யாரு? ஒ அண்ணா பொண்ணு..எம் மச்சினம் பொண்ணு.. குடுத்தான்ன?
குடு.. குடு.. குடுடி நாகு.. வழிந்தான்.
வெற்றியாளினியாய் சிரித்தாள் நாகு..நாக லெஷ்மி.
நடந்த அனைத்தையும் பார்த்துக்கொண்டும் கேட்டுக்கொண்டுமிருந்த சாரு எதையும் கண்டு கொள்ளவில்லை.
எப்போதும் நடக்கும் நடப்பு தான்.காரணங்கள்தான் வேறுவேறாய் இருக்குமே தவிற நடந்தே இராத புதிய நாடகமல்ல இது.
இதுவரை இதுபோல் நடந்த நிகழ்வுகளெல்லாம் சாருவைப் பாதித்ததில்லை. தன்னை அவை பாதிக்க சாரு விட்டதில்லை.
இப்படித்தான் தாயில்லா தனக்கு நடக்கு மென்று அனுபவம் சொலித்தந்த பாடத்தால் பத்துவயதிலேயே பக்குவப் பட்டிருந்தாள் சாரு.
ஆனாலும் நாளை மறுநாள் திங்கட்கிழமை சித்தி நடத்தப்போகும் நாடகம் தன்னை அடியோடு வீழ்த்தப் போவதையும்..அந்நாடகத் தால் தான் எப்படியான நிலைக்கு ஆளாகப் போகிறோம் என்று அறியாத வளாய் மீண்டும் வீட்டுப் பாடம் எழுதும் வேலையில் ஈடுபட்டாள்.
இப்போது நடந்த நாடகத்தால் அப்பாவின் மீது வைத்தி ருந்த மிகக் கொஞ்சமான நம்பிக்கையும் அழிந்து போய் ஒன்றுமில்லாமல் ஆனது.
மனதில் வெற்றிடம் உருவாகி.. அடுத்தநொடி அவ்வெற்றிடம் முழுவதையும் அன்புத் தோழி ரேவதி..ரேவி வந்து தன்னை நிரப்பிக் கொண்டாள்.
ஆனாலும் அந்த அன்புத் தோழியிடமிருந்தும் காலம் தன்னைப் பிரிக்கப்போவது தெரியாமல் கண்களில் நிரம்பியகண்ணீர்.. வீட்டுப் பாடம் எழுதும் நோட்டில் விழுந்து தெறிக்க.. இடக் கையால் கண்களைத் துடைத்துக் கொண்டாள் சாரு.
ஒருவாரம் வெளியூர் போய்விட்டுத் திரும்பிய சாம்புவுக்கு தனக்கு ஒருமகள் இருக்கிறாள் என்பதையே மறந்து விட்டவன்போல நாகு நாகு எனச் சுற்றிச்சுற்றி வந்தான்.
நிஜமாகவே மகளைப்பற்றிய அக்கறை அவனுக்கு இல்லையா?இல்லை நாகுவுக்குப் பயந்து அப்படி இருக்கிறானா என்பது அவனுக்குத்தான் தெரியும்.
சனிக்கிழமை.பள்ளிக்கு லீவு.
அதற்காக ஜாலியாய் தூங்கிக்கொண்டெல்லாம் இருக்கமுடியாது.காலை ஆறுமணிக்கெல்லாம் எழுந்து வாசல் தெளித்துப் பெருக்கிக் கோலம் போட வேண்டும்.
மணி அஞ்சே முக்கால்.
எழுந்து படுத்திருந்த பாயில் அமர்ந்து கொண்டாள் சாரு.
கண்கள் கூடத்து உள்ளைத் திரும்பிப் பார்த்தன. இப் போதைக்கு சாத்தியிருந்த அதன் கதவு திறக்காது. இவள் மட்டுமே கூடத்தில் ராத்திரி தனியாய்ப் படுப் பாள்.
நடுராத்திரி க்ரீச் க்ரீச்செனக் கத்திக்கொண்டு எலிகள் இங்குமங்கும் ஓடும்..
சமையலறையில் பாத்திரங்களை உருட்டும்.
சிலசிமயம் சாருவின் கால்கள்மீதுகூட ஏறியிறங்கி ஓடும்ங்கள்.அப்போதெல் லாம் பயந்து நடுங்குவாள் சாரு.
பயத்தில் கத்த வாய் திறக்கும்.ரெண்டுகையாலும் சத்தம் வெளியே வராமல் வாயைப் பொத்திக் கொள்வாள்.
ஒருமுறை எலிகள் கால்கள் மேல் ஏறி ஓட பயத்தில் கத்திவிட்டாள் சாரு.
அறைக்கதவைத் திறந்து கொண்டு ஆவேசமாய் வெளியே வந்த நாகு.. சனியனே ஏண்டி கத்தற.. நிம்மதியா தூங்க விடமாட்டியா? பட்டென முதுகில் ஒன்று வைத்தாள்.
சித்தி..எலி..கால்மேல ஏறி ஓடிச்சு.பயமாருந்துது சித்தி..அதா கத்திட்டே..
ஆமா அப்பிடியே ரெண்டு காலும் மர்லின்மன்றோ காலு..
அதா ஆசையா கால பாக்க வந்துது எலி..
நொண்டி சனியனே..
நல்லா தூங்கின்ருந்தே.. கூச்சல் போட்டு எழுப்பி விட்டு..பீட..
அடுத்து வந்த வார்த்தைகள்..
சாருவின் பிஞ்சுமனதை ரணமாக்கின.
அந்த நிகழ்வு ஞாபகம் வர..
‘ப்ச்’ என்றபடி படுக்கையை விட்டு எழுந்தாள் சாரு.
மணி எட்டு.
ஏன்னா.. தெக்குத்தெரு ராமுமாமா வரச் சொன்னார் னு சொன்னேனே எப்ப போறேள்?
குளிச்சிட்டு மொதல்ல கோவிலுக்குப் போய்ட்டு வரேன்.பத்துமணிக்கு மேல அவாத்துக்குப் போறேனே?
சரின்னா..மேலத்தெரு ஜகதத்துமாமி ஆத்துக்கு ஒருநட வந்துட்டுப்போ..ஒரு சமாச்சாரம் ஒன்னண்ட பேசணும்னு நேத்திக்கே சொன்னா.நீங்க தெக்குத் தெருவுக்குப்போறச்சே நானும் வரேன்.மேலத்தெரு வழியாலதானே போவேள்?
ஆமாண்டிநாகு..இன்னிக்கு சனிக்கெழம..கால ஒம்போது லேந்து பத்தர ராகுகாலம்.
ராகுகாலம் முடியட்டும் கிளம்புவோம்.
அதுவும் சரிதான்னா.. நாம்போய் சீனு முழுச்சுண்ட் டான் போலருக்கு சிணுங்கற சத்தம் கேக்கறது..போய்ப் பாக்கறேன்.மூத்தரதுல கெடப்பான்.
ஏண்டா ஏண்டா கண்ணு.. அழாதடா செல்லம்..வா..வா..
அம்மாட்டவா..எஞ்செல்லம் என்றபடி சீனுவைத் தூக்கிக் கொண்டாள்.
டீ..சாரு..ஏ ஒலக்க..என்ன பண்ற? வாயிங்க..
பாய்..போர்வ எல்லாத்தியும் கெணத்தடிக்குக் கொண்டு போய் அலசிப்போடு..
மொட்ட மாடீல கொண்டு காயப் போடு..
பொத்தினாப்ல கொல்லக் கொடீல போட்டுடாத..
அப்றம் காயாது..ராத்திரி கொழந்த எதுல படுப்பா?..
அய்யோ மொட்டமாடிலயா?..
பத்தம்போது படி..எப்பிடி ஏறுரது?பயந்துபோனாள் சாரு.
நானே எறமுடியாது..இதுல பாய் போர்வ எல்லாத்தியும் தூக்கிண்டு.
சரி சித்தி என்றாள் வேறுவழியின்றி.
சித்தி சொன்னதும் செய்யறேன்னு பதில் சொல்லா விட்டால்..
நா சொல்றேன்..ஒடனே சரின்னு சொல்லவேண்டா?..
அமுக்குனிமாதிரி நிக்கிற..
வாய்ல என்ன கொழக் கட்டையா?..
அதென்ன அப்பிடியோரு நிஷிதம்?
இவ என்ன சொல்றது நாம என்ன கேக்குறதுன்னா?
எல்லா எவ்விதி..வடிச்சு வடிச்சி கொட்றேனோனோ? தின்னுபிட்டு அப்பிடிதா இருப்ப..
மூத்தா பெத்ததுங்கிட்டகூட நா நிஷிதப்படவேண்டிருக்கு..
எந்தநேரத்துல என்னப் பெத்தாளோ என்னப் பெத்தவா?இப்படி சீரழிய..
சாரு.. சித்தி சொன்னா ஒடனே சரின்னு பதில் சொல்ல மாட்டியா?பொண்டாட்டிக்குப் பரிவான் சாம்பு.
அப்டீல்லாம் இல்லப்பா.. பதில் சொல்லுவே.. சொன்னத செய்வேன்.
அறைக்குச்சென்று மூத்திரப்பாய் போர்வை ரெண்டுமூன்று துணிகள் எல்லாவற்றையும் அள்ளிக்கொண்டு வெளியே வந்தாள் சாரு.நாற்றம் குடலைப்பிடுங்கியது.
அப்பிடியே நாலு சொம்பு தண்ணீல முக்கி எடுத்துடாத..அய்நூத்தி ஒன்னு பார்சோப் இருக்குபாரு..
அதப்போட்டுத் தேச்சு நெறையா தண்ணிவிட்டு அலசு.கெணத்துத்தண்ணி கொறஞ்சுபோய்டாது.
சரிசித்தி..கிணற்றடி நோக்கி நடந்தாள் சாரு.
மணி பத்தே முக்கால். அப்பாவும் சித்தியும் வெளியே போயாயிற்று.
பாயையும் போவையையும் மேலும் இரண்டு துணிகளை யும் எடுத்துக் கொண்டு மாடிப்படி யருகே வந்த சாரு கீழேயிருந்து படிகளை நிமிர்ந்து பார்த்தாள்.
சின்னச்சின்னதாய்.. குறுகலாய் செங்குத்தாய்த் தெரிந்த படிகள் கிலியை ஏற்படுத்தின.மலைப்பாய் இருந்தது சாருவுக்கு.
படியில் ஏறப்ப பயந்து கொண்டு தயக்கத்தோடு நின்றாள்.
டீ..சாரு..வாசலில் ரேவதி யின் குரல்.
ஏய் ரேவி வாடி..
ரேழியிலிருந்து மாடிக்குச் செல்லப் படிக்கட்டுகள் இருக்க..முதல் படியிலேயே கால்வைக்காமல் நின்று கொண்டிருந்த சாருவின் அருகில் வந்தாள் ரேவதி.
என்னடி சாரு மாடிக்குக் கொண்டுபோயா ஒணத்தப்போற?ஏண்டி?
என்னடி செய்யிறது?சித்தி மாடிலதா ஒணத்தணும் னுட்டா..
ம்..நல்லவேள நா வந்தே..
ஒங்கப்பாவும் சித்தியும் மேலத்தெருபக்கம் நடந்து போனத பாத்தேண்டி..
ஆத்துல நீ மட்டும்தா இருப்பேன்னு வந்தே..
குடுடி..நாம்போய் ஒணத்திட்டு வரே..
ஒனக்கு கஷ்டங்குடுக்கறே னேடி ரேவி..
ஏய்.. நீ இப்பிடிச்சொல்றது தாண்டி எனக்குக் கஷ்ட்டங் குடுக்கறது.
வெடுக்கெனப் பிடுங்காத குறையாய் சாருவின் கையிலிருந்து பாய்.. போர்வை..துணிகளை வாங்கிக்கொண்டு படியேறினாள் ரேவதி.
உலர்த்திவிட்டு கீழே இறங்கினாள் ரேவதி.
இது ரொம்ப அந்யாயண்டி சாரு..வேணும்னே ஓங்க சித்தி செய்யறாப்ல இருக்கு..
ஆமாண்டி ரேவி..இப்ப நீ ஏறிப்போய் ஒணத்திட்டு வந்துட்ட..
காஞ்சிருந்தா போய் எடுத்துண்டுவாம்பாடி..
எப்பிடிடி ஏறுவே?
எனக்கே ஏற பயமாருக்குடி சாரு..குறுகலா அங்கங்க பேந்துபேந்து..படியெல்லாம் பாத்தாலே பயமாருக்குடி..
வாசலில் பிள்ளைகளின் சத்தம் ஏகத்துக்கும் கேட்டது.
கூட்டமாய் விளையாட வந்தாயிற்று.இனி மதியம் ஒருமணி ரெண்டு மணி வரை தெரு திமிலோகப் படும்.
வாசலுக்கு வந்தார்கள் சாருவும் ரேகாவும்.
நீளமான தெரு என்பதால் தெருவில் பாதியை ஆம்பளப் பசங்களும்..மீதிபாதியை பொம்பளப்பசங்களும் எடுத்துக்கொள்வார்கள்.
ஆம்பளப்பசங்கள்..பிள்ளையார்பந்து..பம்பரம்..கிட்டிப் புள்.. பச்சைக் குதிரை தாண்டுதல்.. சடுகுடு.. கோலி போன்ற விளையாட்டுக்கள்.
கிரிக்கெட் என்றால் மட்டும் வேறிடம்.
பொம்பள பசங்கள் பாண்டி..
கல்லா மண்ணா..திருடன் போலீஸ்..கண்ணாமூச்சி ரேரேரே..மீன்வலை..நாலு மூலதாச்சி..ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பூ
பூத்துது. .பூப்பரிக்க வருகிறோம்..குலைகுலைக்கா முந்திரிக்கா..போன்ற விளையாட்டுக்கள்.
வழக்கமாய் தன் வயதையொத்த சிறுமிகள் ஓடியாடி சப்த மெழுப்பியபடி சந்தோஷமாய் விளையாடு வதைப்பார்த்தபடி திண்ணை யில் தேமேனென்று அமர்ந்திருப்பாள் சாரு.
தானும் அவர்களோடு அதே குதூகலத்துடன் விளையாட ஆசைப்படுவாள்.
ஆனால் தன்னால் அவர்களளவுக்கு ஓடிகீடி விளையாடுவது இயலாது என்ற எண்ணம் எழும்போது நெஞ்சின் ஏக்கம் கண்களில் வழியும்.
இப்போதும் சிறுமிகள் விளையாடுவது பார்த்து சாருவுக்கும் விளையாட ஆசையாய்த்தான் இருந்தது.
தன்னால் அவர்களைப்போல் விளையாட முடியாது என்ற எண்ணம் தோன்ற ஏக்கத்தில் கண்களில் கண்ணீர் அரும்பியது.
சகதோழிகளோடு அவ்வப்போது சேர்ந்து விளையாடுவதும்..சட்டென. விலகிநிற்பதுமாய் இருந்தாள் ரேவதி.
விளையாடும்போது அவள் பார்வை அவ்வப்போது சாருவிடம் வந்துவந்து லயித்தது.சாருவின் கண்களில் தோன்றிய ஏக்கம் புரிந்தது.
சட்டென மொத்தமாய் விளையாட்டைவிட்டு அகன்று சாருவின் அருகில் வந்து அமர்ந்து கொண்டாள் ரேவதி.
ஏண்டி..வெளையாடல?பாதீல வந்துட்ட?
வெளையாட்டு புடிக்கிலடி..
வெளைட்டு புடிக்கிலன்னு யாராவது சொல்லுவாளா?
ஆமாண்டி சாரு..நீயும் வந்து வெளையாடினா எனக்கு ஜாலியாருக்கும்..நீ வல்ல..
அதா எனக்குப் புடிக்கில..
சட்டென தோழியின் கைகளைப் பற்றிக் கொண் டாள் சாரு.
இருவர் கண்களிலும் கண்ணீர் நிரம்பியது.
அத்தியாயம் – 6
டீ ரேவிகுட்டி..மணி என்ன ஆறுது?ஆத்துக்கு வர்ர நெனப்பே இல்லியா?வீட்டு வாசலில் நின்றபடி குரல் கொடுத்தார் ரேவதியின் அப்பா.
டீ..ரேவிக்குட்டி..மணி என்ன ஆறுது?ஆத்துக்குவர்ர நெனப்பே இல்லியா?அச்சு அசல் அவரைப்போலவே
இமிடேட் செய்தான் விளையாடும்போது பெண்பிள்ளைகள் விளையாடும் இடத்திற்கு அருகில் வந்து விழுந்த பந்தை எடுக்கவந்த கோபி.
என்னடா சட்டிமண்டையா..
கொழுப்பா?ரேவதி அப்பா மாதிரியே பேசிக்காமிக்கிற..
சண்டைக்குப்போனாள் பவானி.
போடி எலிவால் பின்னல்..
ஒனக்கென்னடி?
போடா சட்டித்தலையா.. முட்டக்கண்ணா..
கோபிக்கு வக்காலத்து வாங்க நாலு பசங்களும்..
பவானிக்கு ஆதரவாய் நான்கு தோழிகளும் கூட..
அந்த இடமே களேபரமா யிற்று.
டேய்..டேய்..போங்கடா..போங்கடா..பொம்மணாட்டி கொழந் தேளோட சண்டைக்கு நின் னுண்டு..பஞ்சு அய்யர் பசங்களை அதட்ட முணு முணுத்துக்கொண்டே இடத்தைக் காலி செய்தார்கள் பசங்கள்.
ஏண்டி ரேவதி ஒங்கப்பாவ தானே கோபி பரியாசம் (பரிகாசம்)பண்ணினான்.. நீ ரோசப்படாம ஒக்காந்திருக்க? பவானி ரேவதியிடம் கோவப்பட்டாள்.
விடுடி..நீ கேட்டுட்டீல்ல.. அதுவே போதும்டி..அவ ஒரு
லூசுப்பய..அவனோட போயி..
ஆமாண்டி..வாங்கடி அவாஅவா ஆத்துக்குப் போவோம்..அவுனுங்களோட சண்டபோடறது நமக்குப் புதுசா என்ன?
பாத்துண்டே இரேன்.. சாயந்திரம் நாம விளையாடும்போது திருடன் போலீஸ் வெளையாட்டுல எங்களையும் சேத்துக்குங் கடினு வந்து நிப்பானுங்க..
பக்கிப் பசங்க..
அப்ப முடியாதுன்னு சொல்வம்டி..
சரி..சரி..சண்டபோடறதும் சேந்துக்குறதும் வழக்கம் தானே?
இதுதான் கிராமத்துக் குழந்தைகளின் வெள்ளந்தி யான விளையாட்டு மனது.
நா கெளம்பறேன்.. சாயந்திரம் பாப்போம்.. ஒருத்தி சப்தமாய்க்கத்த..
மற்றவர்களும் அவரவர்கள் வீடுநோக்கி ஓடினார்கள்.
சாரு..நா போரேண்டி..டீ..டீ
அதோ தெருக்கோடீல ஒ சித்தியும் அப்பாவும் வராடி..என்றாள் ரேவதி.
ஐயோ..நானும் உள்ள போறேண்டி..திண்ணேல ஒக்காந்திருக்குறத பாத்தா சித்தி பிலுபிலுன்னு புடிச்சிண்டு கண்டமேனிக்குத் திட்டுவாடி..
எழுந்து கொண்டாள் சாரு..
நாகு எப்பேர்ப்பட்ட விஷயத்தைக் கொண்டு வருகிறாள் என்பதை அறியாத தோழிகள் பாவம்தான்.
ரேவதி தன் வீட்டுக்கும்..சாரு உள்ளேயும் போனார்கள்.
வீட்டைப்பெருக்குபவள் போல் சாரு விளக்கு மாற்றால் கூடத்தைப் பெருக்கிக் கொண்டிருந்தாள்.
உள்ளே நுழைந்தார்கள் நாகுவும்..சாம்புவும்.
உள்ளே நுழைந்த அவர்களை நிமிர்ந்து பார்த்தாள் சாரு.
ஏனோ அப்பாவின் முகத்தைப் பார்த்தபோது அவர் குழப்பத்தில் இருப்பது போல் தோன்றியது சாருவுக்கு.
சீனு நாகுவின் தோளில் சாய்ந்து தூங்கிப்போயிருந் தான்.
ஏய்..கொழந்த தூங்கிட்டான்..
படுக்கவைக்கத் துணிய ஒதறி பிரிச்சுப்போடு.. துணீல எறும்புகிறும்பு இருந்துடப் போறது.
சரிசித்தி..சுவரின் ஓரத்தி லிருந்த கூடையிலிருந்து இரண்டு துணிகளை எடுத்துப் பட்பட்டென உதறி கூடத்திலேயே பிரித்துப் போட்டாள் சாரு.
ஊஞ்சலில் மௌனமாக அமர்ந்திருந்த அப்பாவின் மீது சாருவின் பார்வை சென்றது.
மணி ஒன்னாகப்போறது.
சமைக்கணும்.என்ன சமைகிறது சொல்லுங்கோ..
என்னவோ தினமும் கணவனைக் கேட்டு அவன் சமைக்கச் சொல்வதைத் தான் சமைப்பதைப்போல் கேட்டாள் நாகு.
எதையாவது சம.. பட்டுக்கொள்ளாமல் பதில் சொல்லும் அப்பாவை வினோதமாகப் பார்த்தாள் சாரு.
அப்ப மணத்தக்காளி வத்தலும்.. அப்பளாமும் போட்டு வத்தக்கொழம்பு வெச்சு வடாம் பொரிக்கிறேன்.
வயசு பத்து ஆறது..ஒரு சாத்த வடிச்சிக் கொழம்பு வெக்கத் தெரியிறதா? ஏதுடா அப்பாவும் சித்தியும் வெளீல போயிருக்காளே..திரும்பி வந்தவொடனே சமைக்க ணும்னா சித்திக்கு அலுப்பா ருக்காதான்னு ஒரு பத்துவயசு பொண்ணுக்குத் தோணவேண்டா?
எல்லா எந்தலயெழுத்து.. ஒருநாளப்போல ஆக்கி ஆக்கி கொட்டணும்னு..
ஒன்ர மணிக்கெல்லாம் தட்ட வெச்சுண்டு ஒக்காந்தா யிடும்..
சித்தி கொழம்பு வெக்கத் தெரியாது சித்தி..இல்லாட்ட..
தெரிஞ்சிருந்தா அப்டியே செஞ்சு வெச்சுக் கிழிச்சிடுவ..
வலது கை விரல்களை மடக்கி சாருவின் தாவாங்கட்டையை ஒரு நெம்புநெம்பிவிட்டு சமயலறைக்குள் முணு முணுத்துக்கொண்டே நுழைந்தாள் நாகு.
கண்கள் கலங்கிப்போயின சாருவுக்கு.
மௌனமாய் ஊஞ்சலில் அமர்ந்திருந்த சாம்பு எழுந்து கொல்லைப்புறம் நோக்கி நடந்தான்.
அப்படி நடக்கும் போது ஏனோ திரும்பி கண்கலங்கி நிற்கும் சாருவை ஒருபார்வை பார்த்துவிட்டு சட்டெனப் பார்வையை நகர்த்திக் கொண்டான்.
அப்பா..என்றாள் சாரு..
நின்று திரும்பினான்..சாரூ என்றவன் குரல் நெகிழ்ச்சி யோடு வெளிப்பட்டது.
என்ன அங்க?அப்பாவும் பொண்ணும் பேசியாருது?
சமையலறையிலிருந்து எட்டிப்பார்த்துக் கேட்டாள் நாகு..குரலில் எரிச்சல் தெரிந்தது.
திங்கக்கெழம பள்ளிக் கூடத்துல மேஜிக் ஷோ பண்ணிக்காமிக்க யாரோ வராளாம்.அதுக்கு ஆளுக்கு ரெண்டு ரூவா குடுக்கணு மாம்.அதா ரெண்டு ரூவா..
திங்கக்கெழமதானே? அன்னிக்கு நீ பள்ளிக்கூடம் போனா பாத்துப்பம்.
அதென்ன அப்பாகிட்ட காசுகேக்குற பழக்கம்?நா செத்தா போய்ட்டேன். என்னண்டன்னா கேக்கணும்?எனக்குத் தெரியாம காசு குடுத்துவாரா ஒங்கப்பா?இல்ல இந்த திருட்டுத்தனம் ரொம்பநாளா நடக்கறதா? கத்தினாள்.
இல்லசித்தி இன்னிக்கிதா கேட்டேஞ்சித்தி..குரல் நடுங்கியது சாருவுக்கு..
சித்தியைப் பார்த்து பதில் சொல்லிவிட்டுத் திரும்பிய போது அப்பாவைக் காணவில்லை.
ஏனோ அப்பாவும் சித்தியும் ஒத்தர்மீது ஒத்தர் கோவத் தில் இருப்பதுபோல் தோன்றியது சாருவுக்கு.
அன்று முழுவதும் அப்படித் தான் அதிகம் பேசிக் கொள்ளாமல் இருந்தார்கள் நாகுவும் சாம்புவும்.
ராத்திரி படுக்கையில் படுத்தபோது காலையில் சித்தி சொன்ன வார்த்தை சட்டென நினைவு வந்தது.
திங்கக் கெழம பள்ளிக்கூடம் போனா பாத்துப்பம்.
அப்டீன்னா?..திங்கக்கெழம நா ஸ்கூலுக்குப் போமாட்டேனா?ஏ?ஏ சித்தி அப்பிடி சொன்னா?அன்னிக்கு ஆத்துல ஒன்னும் விசேஷமில்லையே?நாளு கெழமகூட இல்லையே..
அம்மாவோட தெவசம்கூட இல்லையே திங்கக் கெழம..
அப்பறம் ஏ சித்தி அப்பிடி சொன்னா?ஒன்றும் புரியவில்லை சாருவுக்கு.
அந்தச்சின்னஞ்சிறு நெஞ்சம் அமைதியின்றி தவித்தது.
நாளை சித்தி அப்படி சொன்னதற்கான காரணத்தைத் தெரிந்து கொள்ளும்போது..அந்தச் சின்ன இதயம் அதை எப்படித் தாங்கிக் கொள்ளுமோ?
கூடத்தில் படுத்திருந்த சாருவின் காதில்.. கூடத்து அறையில் படுத்திருக்கும் அப்பாவும் சித்தியும் ஏதோ வாக்குவாதத்தில் ஈடுபட்டி ருப்பதுபோல் வார்த்தைகள் வந்து விழுந்தன.
எதுவும் புரியவில்லை சாருவுக்கு..அம்மா..என்றது மனதும்..உதடுகளும். விழியோரம் ஈரம் கசிந்தது.
உலகத்தில் ரேவியைத்தவிற தனக்கு யாருமே இல்லாத தைப்போல் இருந்தது.
தூங்கிப்போனாள் பத்து வயது சாரு..
ஞாயிற்றுக்கிழமை.காலை மணி ஒன்பதரை.
குளித்துவிட்டு கொல்லைக் கொடியிருந்து காய்ந்து போனத் துணிகளை எடுத்துவந்து கூடத்து ஊஞ்சலில் போட்டு மடித்து வைத்துக்கொண்டிருந்தாள் சாரு.
தாழ்வாரத்தில் கிடந்த பென்ச் ஒன்றில் அமர்ந்திருந்தான் சாம்பு.
ஏன்னா ஒருவா காபின்னா குடிக்கிறேளா?
ப்ச் என்றான்..
என்ன உச்..உச்ங்கிறேள்?
நீங்க பெத்த பொண்ணுக் குதானே நா நல்லது செய்யணும்னு இந்த ஏற்பாட்டை பண்றேன்.
குனிந்து துணியொன்றை மடித்துக் கொண்டிருந்த சாரு சட்னென நிமிர்ந்து பார்த்தாள்.
நீங்க பெத்த பொண்ணுக்குத் தானே நல்லது செய்ய ஏற்பாடு செய்யிறேங்கிறா சித்தி..
அப்பாவப்பாத்து ஒங்க பொண்ணுக்குதானேன்னா? அந்தப் பொண்ணு நாந்தானே?..எனக்கு நல்லது செய்ய ஏற்பாடுன்னா என்ன அர்த்தம்?
என்ன அடியோட வெறுக்கற சித்தி எனக்கு நல்லது செய்ய நெனைக்கிறாளா?
பயம் வந்தது மனதுக்குள்.
அப்பா எந்தபதிலும் சொல்லாம ஒக்காந் திருக்கா?..
எதாவது சித்திக்கு பதில் சொன்னாலும்..என்ன விஷயம்?..சித்தி எனக்கு என்ன நல்லது செய்ய.. என்ன ஏற்பாடு செய்யிறானு கொஞ்சமாவது தெரியும்..
மனதின் பயம் அதிகமானது.
சித்தி அப்பாவிடம் காபியைக்கொண்டு வந்து நீட்டினாள்.
சாதாரணமாக இருந்தால்.. என்னடி நாகு..காபியா?.. இப்பதா நெனச்சே கேக்கணும்னு.. நீயே குடுத்துட்ட..அதென்னமோ கால மொதகாப்பியவிட ரெண்டாவது டோஸ் ஒம்போது மணி காபிதாண்டி நாகு டேஸ்ட்டா இருக்கு.
ஹிஹிஹி..நாகுவிடம் குழைவான் சாம்பு.
அப்படியான அப்பா இப்போது சுவாரஸ்யமின்றி காப்பியை வாங்கிக் கொள்வ தாய்த் தோன்றியது.
அதைப்பற்றி சித்தி கவலைப் படுவதாய்த் தெரியல்லை.
இந்தா ஒனக்கு..என்றபடி சாருவிடமும் அரைட் டம்ளர் காபி இருந்த டம்ளரை நீட்டினாள் நாகு.
தன்னிடமும் சித்தி காப்பியை நீட்டிய போது கொஞ்சம் அதிர்ச்சியும் அதிசயமுமாய் தான் இருந்தது சாருவுக்கு.
நே..நேக்கா?என்றாள் குழப்பமாய்.
பின்ன ஒங்கிட்ட தானே டம்ளர நீட்டினேன்..
வாங்குவதா காபி வேண்டாம் சித்தி.. என்று சொல்லி மறுப்பதா புரியவில்லை சாருவுக்கு.
வேண்டாண்ணு சொன்னா..
அதென்ன பெரியதனம்?
குடுத்தா வேண்டாங்கிறது..
அதா வயித்துல பொறந்த பொண்ணுக்கும் மூத்தா பெத்த பொண்ணுக்கு மிருக்கிற வித்தியாசமென்று சம்மந்தா சம்மந்தமே இல்லாமல் பேச்சு ஆரம்பமாகிடும் என்று நினைத்தவளாய..கைநீட்டி டம்ளரை வாங்கிக் கொண்டாள்.
சாரு..ஒங்கிட்ட ஒன்னு சொல்லணும்..பேசணும்..
எப்போதும்போல் இல்லாமல் சித்தியின் குரலில் லேசான கனிவு தெரிவதுபோல் இருந்தது சாருவுக்கு.
இப்படியெல்லாம் அன்பாய் கனிவாய் சித்தி தன்னிடம் பேசியே அறியாத சாருவுக்கு சித்தி பெரிதாய் ஏதோ சொல்லப்போவதாகத் தோன்றியது.
இனம்தெரியாத பயம் மனதிற்குள் உருவானது.
தபாரு..இப்ப இன்னும் கொஞ்ச நாழீல..பங்கஜம் மாமி இருக்காளோனோ?..
அந்தமாமிக்குத் தெரிஞ் சவா..ஆம்படையாம் பொண்டாட்டி..சின்ன வயசுக்காராதா ரெண்டு பேர்வருவா..
அவா ஒன்னண்ட சில கேள்வி கேப்பா..நீ சரி சரின்னு தலையாட்டணும்..
சரின்னு சொல்லணும். தெரிஞ்சிதா?
அவா என்னகேப்பா?நா எதுக்கு சரினு தலையாட்ட ணும் சித்தி?அவாள்ளாம் யாருன்னே எனக்குத் தெரியாதே சித்தி?
ம்..சீக்கிரமே தெரிஞ்சிப்ப..
தபாரு..அவா ரெண்டுபேரும் பம்பாய்லேந்து வந்துருக்கா..
அவாளுக்கு நம்ம சீனுமாரி ஒன்ரவயசுல ஒரு கொழந்த இருக்காம்.
ரெண்டுபேரும் வேலைக்குப் போறாளாம்.கொழந்தையப் பாத்துக்க நம்பிக்கையா ஆளில்லையாம்.யாராவது தெரிஞ்ச ஆளாருந்தா சொல்லுங்கோ..
அவா எங்காத்துலயே தங்கிக்கிலாம்னும்..மாசம் நானூரு ரூவா சம்பளம் தர்ரதாவும்.. வருஷத்துக்கு மூணு ட்ரெஸ் வாங்கித் தருவோம்ன்னும் ஜகதாம்பா மாமிண்ட சொல்லிருக்கா..
அதுக்கு நா என்ன சித்தி பண்ணனும்? எங்கிட்ட அவா எதுக்கு கேள்விகேக்கணும்?சாருவின் குரல் பிசிறடித்தது.
பின்ன யாருட்ட அவா கேள்வி கேப்பா?ஒங்கிட்டதா கேப்பா..
நீதானே அவா கொழந்தை யப் பாத்துக்க அவாளோட பம்பாய்க்குப் போகப்போற..
அடிவயிறு சிலீரிட்டது..உடல் நடுங்கியது..பயம் நெஞ்சைக் கவ்வியது..படீரென அணை
உடைந்து தண்ணீர் வேகத் தோடு வெளிப்படுவதுபோல் கண்களில் கண்ணீர் வெளிப்பட்டது..குரல் கேவியது..
சித்தீ..சித்தீ.. வேண்டாஞ் சித்தி..நா பம்பாய்க்குலாம் போலசித்தி..வேண்டா.. வேண்டா..வேண்டா சித்தி..
அவாளயெல்லாம் எனக்குத் தெரியாது சித்தீ.. பம்பாய் லாம் எங்க இருக்குன்னே தெரியாது சித்தி..
சித்தி சித்தி நா எங்கயும் போலசித்தி..ஒங்ககூடவே இருக்கேஞ்சித்தி..நானே தெனமு சமைக்கறே.. தம்பிய பாத்துக்கறே..ஆத்துல எல்லா வேலையையும் நானே செய்யறேஞ்சித்தி..
என்ன யாரோடையும் எங்கையும் அனுப்பாதேள் சித்தி.. பயமாருக்குசித்தி.. கதறிக்கொண்டே சித்தியின் காலில் விழுந்து நாகுவின் இரு கால்களையும் பற்றிக் கொண்டு கெஞ்சினாள் பத்துவயது சாரு.
ச்சீ..மூதேவி முண்டமே.. வலியவர ஸ்ரீதேவிய ஏ வேண்டாங்கற?
முழுசா கையோடையும் காலோடையும் இருக்கற
பொண்ணுங்களுக்கே இந்தகாலத்துல கொட்டிக் குடுத்துக் கல்யாணம் பண்ணவேண்டிருக்கு..
ஒன்னாட்டம் நொண்டி யன்னா ஒன்னப்பெத்தவ பெத்துப்போட்டுப் போயிருக்கா..எந்தலேலன் னா கட்டிட்டு போய்ச் சேந்துட்டா.. எந்தலை யெழுத்து நா வசமா வந்துமாட்டிண்டுட்டே..
எவ வருவான் ஒன்ன கட்டிக்க?
ஒங்கப்பா என்ன பெரிய பண்ணையாரோ?காசுபணத்தக் காட்டி இளிச்ச வாயந்தலேல ஒன்ன கட்டிவெக்க?
சித்தீ எனக்கு கல்யாணம்லா வேண்டாஞ்சித்தி..நா ஒங்ககூடவே இருக்கே சித்தி..
நா எங்கியும் யார்கூடவும் போலசித்தி..கால்களைப்பிடித்துக்கொண்டு கதறும் சாருவை.. கால்களை அவளின் பிடியிலிருந்து உருவிக்கொண்டு எட்டி உதைத்தாள் நாகு.
தலை டமால் என்று சுவரில் மோதி அம்மா..என்று கத்தியபடி இருகைகளாலும் தலையைப் பிடித்துக் கொண்டாள் சாரு.
வலிதாங்காது துடித்தாள் சின்னஞ்சிறு சாரு.
தானாடாவிட்டாலும் தன் சதையாடுமோ?
சாரு என்று கத்திக் கொண்டே பென்ச்சிலிருந்து எழுந்து ஓடிவந்தான் சாம்பு.
அப்பா அப்பா..நா பம்பாய்க்கு லாம் போலப்பா.. யாரோடை யும் போலப்பா..சித்தீட்ட சொல்லுங்கோப்பா..ஒங்க ளல்லாம் விட்டுட்டுப் போமாட்டேம்ப்பா..
சித்தீட்ட சாருவ பம்பாய்க்கு அனுப்ப வேண்டாம்னு சொல்லுங்கோப்பா..நா படிக்கணும்ப்பா.. அங்கெல் லாம் போக எனக்கு பயமாருக்குப்பா..இப்போது தந்தையின் கால்களில் விழுந்து கெஞ்சினாள் சாரு.
அடிமனதில் தவிப்பாய்த் தான் இருந்தது சாம்புவுக்கு.
நாகு கொழந்த பாவம்டி.. வயசு பத்தாருது..இன்னும் ரெண்டோ மூணோ வருஷத் துல பெரிய மனுஷியா யிடுவா.பிறத்தியாராத்துல விட்டுவைக்கிறது பாதுகாப்பானதா சொல்லு.
எங்கியோ தூரதேசத்துக்கு முன்னப்பின்ன தெரியாதவா ளோட.. பொண்கொழந்தைய அனுப்புவாளா? சொல்லு..
வேண்டாம் விடு..அவ ஆத்தோட இருக்கட்டும்..
என்ன..என்ன ..என்ன சொன்னேள்?..என்ன சொன்னேள்?..இந்த சனியன அரிசின்னு அள்ளுவாரில்ல.. உமின்னு ஊதுவாரில்ல..
பொட்டக் கழுதைய அதுவும் நொண்டிக் கழுதையப் பெத்து வெச்சிண்டு..ஏம் பேசமாட்டேள்? ஒழச்சுக் கொட்ட நானிருக்கேன்ல.. ?எல்லாரையும் ஒக்காத்தி வெச்சு வடிச்சு வடிச்சுக் கொட்றேனோனோ?
அதுக்குத்தானே நன்னிலம் நாராயணனும் தையநாயகி யும் என்னப் பெத்துப் போட்ருக்கா..
ஏதுடா இந்த சனிய அவாளோட போனா அவா மாசம் நானூற்ரூவா பணம் அனுப்புவாளே..அத சேத்து வெச்சு ஒரு நகதட்ட வாங்கிச் சேத்தோம்..பாத்ரம் பண்டம் வாங்கி வெச்சோம்..
இந்த ஊனச்சிய எவுனுக் காவது கட்டிவெச்சோம்னு கடமையச் செய்லாமேன்னு நல்ல மனசோட யோசன பண்ணினா..அப்பாவும் பொண்ணும் அழுச்சாட்டி யமா பண்றேள்?
ரெண்டாந்தாரமா வாக்கப் பட்ட எந்த பொம்மனாட்டி மூத்தாளோட பொண்ணுக்கு நல்லது செய்யணும்னு கெடந்து தவிப்பா? நாதா கேனச்சி..
மூக்கைச்சிந்திப்போட்டு.. வராத அழுகையை வரப் பண்ணிக்கொண்டு அழுது நடித்தாள் நாகு.
வழக்கம்போல் கூடத்து அறைக்குள் அழுது கொண்டே பிள்ளையைத் தூக்கிக் கொண்டு உள்ளே நுழைந்து தாழ்ப்பாள் போட்டுக்கொள்ள முயன்ற போது..
நாகு..நாகு..அழாதடி நாகு..நீ சரியாத்தாண்டி சொல்லுவ.. என்றபடி மனைவியைப் பதைபதைப்போடு விரட்டிக் கொண்டு போய் தானும் அறைக்குள் நுழைந்து கதவைச் சாத்திக் கொண்டான் சாம்பு.
– தொடரும்…
![]() |
பெயர்: காஞ்சி.தங்கமணி சுவாமிநாதன். ஊர்: காஞ்சிபுரம். காஞ்சி.தங்கமணி சுவாமிநாதன் எனும் நான் ஓர் பெண். தங்கமணி எனும் பெயர் ஆண்/பெண் இருபாலருக்கும் பொருந்துவதால் வாசகர்கள் குழம்பிப்போகிறார்கள். அதனால் தான் விளக்கம் தந்துள்ளேன். நிறைய சிறுகதைகள், தொடர்கதைகள், ஆன்மிகக் கதைகள், சிறார்களுக்கான கதைகள், கவிதைகள் வாராந்திர அச்சு ஊடகங்கள், மின்னிதழ்களில் காஞ்சி.தங்கமணி சுவாமிநாதன் என்ற பெயரில் எழுதியுள்ளேன்..தற்போதும் எழுதிவருகிறேன். கதைகள்: காஞ்சி.தங்கமணி சுவாமிநாதன்மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
கல்விக்கண்
நெல்லை அன்புடன் ஆனந்தி
October 29, 2026
ரேவதம்
அனந்த் ரவி
October 29, 2026
பரிகாரம்
இரா.துரைமாணிக்கம்
October 29, 2026
