உந்தன் நிழலாய் நானடி தோழி…
கதையாசிரியர்: காஞ்சி.தங்கமணி சுவாமிநாதன்
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: October 24, 2026
பார்வையிட்டோர்: 55
அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6
அத்தியாயம் – 1

மும்பை. செம்பூர் பகுதி.
ஞாயிற்றுக்கிழமை.காலை மணி பத்து.
பங்களா டைப்பிலிருந்த அந்தவீட்டின் காம்பௌண்ட் சுவரில் பதிக்கப் பட்டிருந்த..
டாக்டர்.ஆர்.சாருலதா எம்பிபி எஸ்.டிஜிஓ என்று ஆங்கிலத் தில் பெயர் பொறிக்கப் பட்டிருந்த பித்தளைப் பெயர்ப் பலகை வெய்யில் பட்டுப் பளபளத்தது.
அந்த பிரம்மாண்ட வீடு.. காலையிலிருந்தே யாரையோ வரவேற்கக் காத்திருப்பது போல் மிகுந்த பரபரப்பாய்க் காணப்பட்டது.
இருக்காதா பின்னே?
ஆறுவருட மருத்துவப் படிப்பை வெற்றிகரமாக முடித்துவிட்டு பவித்ரா அமெரிக்கா விலிருந்தல்லவா திரும்புகிறாள் அன்று.
அமெரிக்கா சென்று படிக்கத் தொடங்கியபிறகு இரண்டு வருடங்கங்ளுப் பிறகு ஒரே ஒருமுறை இந்தியா வந்ததோடு சரி.
அதற்குப்பிறகு மொத்தமாய்ப் படிப்பை முடித்து விட்டு இன்று வருகிறாள் பவித்ரா என்றால் அவளைப் பார்ப்பதற்கு எத்தனை எதிர்பார்ப்பு இருக்கும்?
பவித்ராவுக்காக..அவளின் வரவைக் கொண்டாடும் விதமாக சமையலறையில் ஏகதடபுடலாய் விருந்து தயாராகிக் கொண்டிருந்தது.
பதார்த்தங்களின் கமகமக்கும் வாசம் அந்த பங்களாவின் பெரும்பாலான இடத்திலும் பரவி வியாபித்தி ருந்தது.
நெற்றியில் பூத்திருந்த லேசான வியர்வைத் துளிகளைக் கையிலிருந்த சின்னசைஸ் டவலால் ஒற்றியெடுத்தபடி சமையலறையிலிருந்து வெளியே வந்தார் மகப்பேறு மருத்துவர் சாருலதா.
அவர் விருந்துக்கான பதார்த்தங்களைத் தயாரிக்க வில்லையென்றாலும் சமையக்காரம்மாவுக்கு சின்னச்சின்ன டிப்ஸ் கொடுத்துவிட்டு கிச்சனை விட்டு வெளியே வந்து கொண்டிருந்தார்.
சொல்ல வேண்டியதைச் சொல்லி விட்டு நெற்றி வியர்வையை ஒற்றியெடுத்த படி கிச்சனை விட்டு வெளியே வந்து கொண்டி ருந்த.. ஐம்பத்திரெண்டு வயது டாக்டர் சாருலதா கனகம்பீரமாய்த் தெரிந்தார்.
ஐம்பத்திரெண்டு வயதிலும் மருத்துவரென்பதாலோ என்னவோ உடலைச் சிக்கென்று சீராய் வைத்திருந்தார்.
அதனாலேயே இளமை இன்னும் அவரைவிட்டு முற்றிலுமாய் விலகிச் செல்லவில்லை.
ஐந்தரையடி உயரம் பவுன் நிறம்.முகத்தில் அழகும் அறிவும் அமைதியும் கூட்டு சேர்ந்து கனகம்பீரத்தைக் கொடுத்திருந்தன.
முன்னுச்சியின் இருபுறமும் வயதுக்கேற்றபடி ஓரிரு வெளுத்தமுடி டாக்டர் சாருலதாவின் அழகையும் கம்பீரதையும் மேலும் கூட்டிக் காண்பித்தது.நெற்றியில் வைத்திருந்த மெரூன்கலர் வட்டவடிவ ஸ்டிக்கர் பொட்டு கூட பளீரென்று அவரின் முக அழகை மேலும் கூடுதல் அழகாய்க் காட்டியது.
மொத்தமாய்ச் சொல்ல வேண்டு மென்றால் பார்ப்பவர்கள் மரியாதை யோடு கையெடுத்துக் கும்பிட வைக்கும் அளவுக் கானத் தோற்றத்தோடு காணப்பட்டார் டாக்டர் சாருலதா.
ஆனாலும் அவர் நடக்கும் போது அவரைச் சற்று உற்று நோக்கினால் அவர் ஒருகால் நெட்டையாகவும் மற்றொரு கால் ஒரு இன்ச்சோ ரெண்டு இன்ச்சோ சற்று குட்டையாக அமைந்துவிட்டவர்கள் நடக்கும் போது வலப்பக்கமும் இடப்பக்கமும் இப்படியும் அப்படியும் சாய்த்து சாய்த்து நடப்பது போல் நடப்பது தெரியும்.
இக்குறைபாட்டை அதற்கான காலணியை அணிந்து கொண்டு நிவர்த்தி செய்து கொள்ளலாமென்றாலும்..
சாருலதா வீட்டிலிருக்கும் போது அப்படியான காலணியை அணிந்து கொள்வதில்லை.
வெளியே செல்லும் போதும்.. மருத்துவமனைக்குச் செல்லும் போதும் மட்டும் அணிந்து கொள்வது வழக்கம்.
அதனால் வெளியாட்கள் யாருக்கும் அவரின் இச்சிறு குறைபாடு தெரியாது. நெருங்கிய சிலருக்கு மட்டுமே தெரியும்.
இச்சிறு குறைபாடு அவரின் அழகையும் கம்பீரத்தையும் எள்ளளவும் குறைத்து விடவில்லை.
கிச்சனைவிட்டு வெளியே வந்தவர் காலில் காலணி அணியாத காரணத்தால் சற்றே சாய்த்து சாய்த்து நடந்து நேராய் தன் அறைக்கு அடுத்ததாய் அமைந்திருந்த அறையின் கதவைத் திறந்த கொண்டு அவ்வறைக்குள் நுழைந்தார்.
இதோடு காலை விடிந்ததி லிருந்து மூன்றாம் முறையாய் அவறைக்குள் நுழைகிறார் சாருலதா.
அறைக்குள் நுழைந்தவரின் பார்வை அறையின் சுவற்றில் அடிக்கப்பட்டிருந்த ஆணியிலிருந்து பெரிய சைஸ் ஃபோட்டோ ஒன்று தொங்கிக் கொண்டிருக்க..
அப்புகைப்படத்தின் கீழ்ச் சட்டம்.. ஸ்டாண்ட் ஒன்றில் அமர்ந்திருக்க..புகைப்படத்தில் இருபத்தைந்து வயதிற்குள் தான் இருக்கும் என்று நினைக்கவைக்கும் இளம் பெண்ணின் உருவம் புகைப்படத்துக்குள் நின்றிருக்க.. அப்படத்துக்கு ரோஜாப்பு மாலை போடப் பட்டிருந்தது.
அப்புகைப்படத்தின் முன்போய் நின்றார் சாருலதா..
புகைப்படத்தைப் பார்த்ததும் கண்களில் கண்ணீர் திரண்டு நின்றது.
ரேவி..வாய்விட்டு அழைத்தார் புகைப்படத்திலிருந்த பெண்ணைப் பார்த்து.குரல் கரகரத்தது.
ரேவதி..ரேவி..ஒம் பொண்ணு பவி..பவித்ரா வராடி ரேவி அமெரிக்காலேந்து..ஆறு வருஷ மருத்துவப்படிப்ப முடிச்சுட்டு இன்னிக்கு வராடி..
மதியம் ஒன்னர அல்லது ரெண்டு மணிக்குள்ள நம்ம செல்லம் வீட்டுக்கு வந்துடுவாடி.
ஒம்பொண்ணுனு சொல்லிப் பிரிச்சுப் பேசறேன்னு நெனைக்கிறியா? ஒங்கிட்ட தாண்டி ரேவி இப்பிடி சொல்றே..
ஆனா பவித்ராக்குத் தெரியாதுடி அவ ஒம் பொண்ணுனு…
தன்னப்பெத்தவ நீன்னு..
தன்னப்பெத்த அம்மா நாந்தான்னுதாண்டி நெனச்சிண்ருக்கா அவ..
நாதா அவ அம்மான்னு நம்பிண்ருக்காடி..
அவுளுக்கு இருவத்துநாலு வயசாச்சு..இதுவர நாந்தா அவளப்பெத்தவன்னு நெனைச்சிண்ருக்கா..
உண்மை என்னிக்காவது எப்பிடியாவது அவுளுக்குத் தெரியவந்தா அப்ப என்னமாதிரி ரியாக்ட் பண்ணுவா பவின்னு பயமாருக்குடி ரேவி..
ஆனாலும் தெரியணும்னு தாண்டி நா நெனைக்கிறே..
கஷ்டப்பட்டு பெத்து..பெத்த அந்தக் கொழந்தையோட மொகத்தகூடப்பாக்காத உயிரவிட்டவ நீ..
ஒனக்குப் பிரசவம் பாத்தவளே நாந்தான்னு தெரியாதேடி ரேவி ஒனக்கு..
தாம்பெத்த கொழந்தைய தன் தோழி கிட்டயே ஒப்படச்சுட்டுப் போறோம்னு கூட தெரியாம போய்ச் சேந்துட்டியேடி ரேவி..
பொங்கும் கண்ணீரைத் துடைத்தபடி புகைப்படத்தில் சிரித்த முகத்தோடு நிற்கும் தன் ஆருயிர்த் தோழியைப் பார்த்தபடி நின்றார் சாருலதா.
மெல்ல நகர்ந்து அவ்வறையிலிருந்த பீரோவின் அருகில் சென்றார்.
பீரோவின் லாக்கரிலிருந்து அந்த சின்னசைஸ் மஞ்சள் நிற தகர டப்பாவை வெகு பத்திரமாய் எடுத்தார்.
டப்பாவின் மூடிமீது வரையப் பட்டிருந்த கருப்புநிற ரயில் எஞ்சின் படம் மங்கலாகத் தெரிந்தது.
டப்பாவின் அடிப்பாகத்தில் லேசாய்த் துருப்பிடித்து சின்னச்சின்னதாய் அங்கொன்றும் இங்கொன்று மாய்ப் பொத்தல்கள்.
நாற்பத்ரெண்டு வருடங்க ளுக்கு முன் தன் அன்புத் தோழி ஆருயிர் சிநேகிதி ரேவதி கொடுத்த தகர டப்பா..
தன் தோழி ரேவதியின் டப்பா.. அவள் கைபட்ட டப்பா.. அந்த டப்பாவில்தான் ரேவதி சிலேட்டுக்குச்சித்துண்டுகள்.. குட்டிகுட்டியாய்ப் பென்சில் துண்டுகள்..தேய்ந்துபோன. ரப்பர் துண்டுகள்.. சாக்பீஸ் துண்டுகள் போட்டு வைத்திருப்பாள்.
அடிக்கடி அந்த டப்பாவைத் திறந்து பார்ப்பதும் மூடுவதுமாக இருப்பாள். அப்படி தன் தோழி ரேவதி ஆசை ஆசையாய் வைத்திருந்த டப்பா அது. அன்புத் தோழியின் கைபட்ட டப்பா.
சிலசமயம் டப்பா டைட்டாய் மூடிக்கொண்டு திறக்க முடியாமல் போகும். அப்போதெல்லாம் ரேவதி கீழ்வரிசை முன்பற்கள் இரண்டை உபயோகித்து மூடியைத்திறப்பாள் .
அப்படித் தோழியின் கைபட்ட..பல்பட்ட டப்பா அது.
சாருலதாவைப் பொருத்தவரை வெறும் தகர டப்பா அல்ல அது.
அவரின் உயிருக்கு நிகராய் அவர் மதிக்கும் டப்பா.
உயிர்த் தோழி ரேவதி நாற்பத்ரெண்டு வருடங்களுக்கு முன் அவருக்குக் கொடுத்த டப்பா..
வலதுகையிலிருந்த டப்பாவை இடக்கையால் மெதுவாய் மிருதுவாய்த் தடவிவிட்டார் சாருலதா.
ரேவி என்றன உதடுகள்.
ரேவி இந்த டப்பாவ நீ ஒன்னோட பத்து வயசுல எங்கிட்ட குடுத்த..அப்ப எனக்கும் பத்து வயசுதா.
ரெண்டு பேரும் அஞ்சாம் க்ளாஸ்தானே படிச்சிண்ருந்தோம் அந்தசமயத்துல..
நீ இந்த டப்பாவ எங்கிட்ட குடுத்த சூழ்நிவைய இப்ப நெனச்சாலும் தாங்க முடியலடி ரேவி.ஆனா இந்த டப்பாவ நீ ஒனக்குத் தெரிஞ் சேதா எங்கிட்ட குடுத்த அப்ப..
ஆனா.. ஆனா..ரேவி.. நீ பெத்த பொண்ண..ஒ வயத்து லேந்து அப்பதா வெளீல வந்த அந்தப் பிஞ்சுக் கொழந்தையோட மொகத்தக் கூடப் பாக்காம..
அந்தப் பிஞ்சுக் கொழந்தைய..
தன்னுயிர்த் தோழியான சாருகிட்டதா விட்டுட்டுப் போறோம்கிறதக்கூட தெரிஞ்சுக்காம எங்கிட்ட குடுத்துட்டுப் போய்ட்டியேடி ரேவி..
ஏண்டி..ஏண்டி ரேவி..
என்னடி அவசரம் ஒனக்கு செத்துப்போக?தான் ஒரு மருத்துவர் என்பதையும் மறந்து தேம்பினார் சாருமதி.உடல் குலுங்கியது.
மெதுவாய் நடந்து அறையை விட்டு வெளியே ஹாலுக்கு வந்தார் சாருலதா.
ஹாலிலிருந்த சோஃபாவில் அமர்ந்தவர் புடவைத் தலைப்பால் தகரடப்பாவை மிருதுவாய்த் துடைத்தார்.
இருகை கட்டை விரல்களால் நெம்பி மூடியைத்திறக்க முற்பட்டபோது வாசல் வராண்டாவிலிருந்து அம்மா என்ற குரல் கேட்டது.
கார் டிரைவர் சுந்தரத்தின் குரல்.
வாங்க டிரைவர் சார்..உள்ள வாங்க..
உள்ளே வந்தார் டிரைவர் சுந்தரம்.பவ்யமாய் நின்றார்.
அம்மா மணி பத்தர ஆகப்போவுது..பாப்பா வர்ர ஃப்ளைட் எத்தன மணிக்குமா வருது?
மதியம் பனிரெண்டர மணிக்கு வருது..
அப்ப ஏர்போர்ட்டுக்கு இப்ப காரெடுத்துக் கிளம்பினா சரியாருக்கும்ல..
ட்ராஃபிக்கத் தாண்டிப்போக சரியாருக்கும்லம்மா..
ஆமா சரியாச்சொன்னீங்க..
இப்ப கிளம்பினாதா சரியாருக்கும்..கிளம்புங்க டிரைவர் சார்.
நீங்கம்மா..
இல்ல நா வல்ல..நீங்க போய் அழைச்சிட்டு வந்துடுங்க.. வண்டீல பெட்ரோல் இருக்குல்ல?..வண்டி நல்ல கண்டிஷன்ல இருக்குல்ல?..
அதெல்லாம் பக்காவா இருக்குங்கம்மா..
அப்ப கிளம்புங்க..பாத்து பத்ரமா பாப்பாவ அழச்சிட்டு வாங்க..பாப்பாவ அடையாளம் தெரியும்ல?
தெரியும்மா..தெரியும்மா.. லேசாய்ச் சிரித்தார் டிரைவர் சுந்தரம்.
வரேங்கம்மா..கையெடுத்துக் கும்பிட்டுவிட்டுக் கிளம்பினார் சுந்தரம்.
மேஜைமீதிருந்த செல்ஃபோன் ஒலியெழுப்பியபடி ஒளிர்ந்தது.
சோஃபாவிலிருந்து எழுந்த சாருலதா கையிலிருந்த டப்பாவை மெதுவாய் சோஃபாவின் மீது வைத்து விட்டு மேஜையருகே சென்று ஒளிரும் செல்லைப் பார்த்தார்.
மருத்துவமனையிலிருந்து நர்ஸ் ராதிகா..
எடுத்து ஆன்செய்து காதில் வைத்தார்.எதிர்முனையி லிருந்து சொல்லப்பட்ட விஷயங்களுக்கான பதிலைச் சொல்லிவிட்டு செல்லை அணைத்து மீண்டும் மேஜைமீதே வைத்துவிட்டு மறுபடியும் சோஃபாவில் வந்து அமர்ந்து கொண்டார்.
மணி பத்து முப்பத்தைந்து.
அருகே இருந்த தகரடப்பா மீண்டும் அவரின் கைகளுக்குள் வந்தது.
ரேவி..முடியலடி ரேவி.. இன்னிக்கு ஒன்னையே ரொம்ப அதிகமா மனசு நெனைக்குதுடி..
ஏ?..ஒ ரத்தத்துல உதித்த செல்லக்குட்டி பவித்ரா நிரந்தரமா இந்தியாவுக்கே வரான்னா?
அவளப்பாக்கும் போதெல் லாம் ஒன்னையே பாக்க றாப்ல எம்மனசுக்கு தோணும் தெரியுமா?மனசு பொங்கும்டி ரேவி..நீ இல்லாத ஒலகத்துல
நா இருக்கேன்ற வருத்த மிருந்தாலும்..
ஒ ஜெராக்ஸா இருக்குற ஒம்பொண்ணு என்னோட இருக்கா..அவளப் பாக்குறப்ப மனசுக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கும்.
எ ரேவதியோட..எ உயிர்த்தோழியோட பொண்ணு என்னோடதா இருக்கான்னு மனசுக்கு நிம்மதியா இருக்கும்டி ரேவி.
கண்களில் கண்ணீர் தளும்பி கண்ணீர்த் துளிகள் கையிலிருந்த தகரடப்பா வின் மீது விழுந்து தெறித்தன.
புடவைத் தலைப்பால் கண்ணீர்த்துளிகளைத் துடைத்தார் சாருலதா.
இருகை கட்டை விரல்களாலும் டப்பாவை நெம்பித் திறந்தார்.
பார்வை டப்பாவுக்குள் நிலைத்தபோது கண்களில் மீண்டும் கண்ணீர் திரை யிட்டது.
இத்தனைக்கும் அந்தத் தகர டப்பாவுக்குள் இருப்பவற்றை அவர் இன்று புதிதாய் ஒன்றும் பார்க்கவில்லை.
கடந்த நாற்பத்ரெண்டு வருடங்களில் அவர் அந்த டாப்பாவை எத்தனைமுறை தொட்டிருப்பார் எத்தனை முறை திறந்திருப்பார் எத்தனைமுறை டப்பாவுக்குள் இருக்கும் பொருட்களைப் பார்த்து அழுதிருப்பார் என்பதற்கெல்லாம் கணக்கு மில்லை..கணக்கு வைத்துக் கொள்ளவும் முடியாது. அதற்கு சாத்தியமுமில்லை.
கண்களில் திரையிட்டு பார்வையை மறைத்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டார் சாருலதா.
ரேவி..பேரை உச்சரிக்கும் போதே தொண்டை அடைத்து தொண்டைக்குழி குழிந்தது.
விம்மல் வெடித்துச் சிதறியது. கேவல் வெளிப் பட்டது.
டப்பாவை..நாற்பத்ரெண்டு வருடங்களுக்கு முன்பு பத்துவயது சாருலதா முதன் முதலாய்த் திறந்து பார்த்த போது உருண்டை வடிவிலி ருந்த ஏழு கமர்க்கட்டுகளும்.. நாலைந்து சிலேட்டுக்குச்சி துண்டுகளும்..ரெண்டு புழுக்கைப் பென்சிலும்.. நான்கு கலர் சாக்பீஸ் துண்டு களும்.. ஆறு கண்ணாடி வளையல்களும்..பாதியளவு நெயில் பாலிஷ் இருந்த சின்ன நெயில் பாலிஷ் பாட்டிலும்..சிகப்பு கலர் சாந்து பாட்டிலொன்றும்..
நான்காய் மடித்து வைக்கப்பட்டிருந்த கோடு போட்ட நோட்டுப் பேப்பர் ஒன்றும் இருந்தது.
கமர்கட்டுகள் கருப்பும் வெளுப்புமாய் பூராணி பூத்துப் போய்.. உருகிப்போய் தகர டப்பாவில் ஈஷிக் காய்ந்து கெட்டிப் பிடித்துப் போயிருந்தன.
மற்ற எல்லா பொருட்களுமே தொட்டால் உதிரும் நிலை யில்தான் இருந்தன. அதனால் தகரடப்பாவை அலுங்காமல் நலுங்காமல் திறந்து பார்த்துவிட்டு மீண்டும் மிகக் கவனமாக மூடி வைப்பார் சாருலதா.
அழுத்தமாய்த் தொட்டால் உதிர்ந்து விடுமோ என்று நினைக்கும் அளவுக்கு நைந்து பழுப்பேறிப் போயிருந்த கோடு போட்ட நோட்டுப் பேப்பரை மிக மெதுவாய் எடுத்துப் பிரித்தார் சாருலதா.
சாரு..என்ன விட்டுட்டுப் போறியாடீ..நா இனிமே யாரோடடி பள்ளிக்கூடம் போவே? யாரோடடி நா வெளையாடுவே? நீ இல்லாட்ட நா செத்துப் போயிடுவேண்டி சாரு..
என்ன விட்டுட்டுப் போகாதடி.. என்னையும் அழச்சுண்டு போடி..நா அழறேண்டி சாரு..
என்று சின்னச்சின்ன தப்புகளோடு கோடு போட்ட நோட்டுப் பேப்பரில் கோணல் மாணலாய் ரேவதியால் எழுதப்பட்ட கடிதம்.
எழுதும் போதே ரேவதி அழுதிருக்க வேண்டும். கண்ணீர்த் துளிபட்டு சில எழுத்துக்கள் லேசாய் அழிந்திருந்தன.
தோழியின் கண்ணீர்பட்டு லேசாய் அழிந்து தெரிந்த எழுத்துக்களைத் விரலால் தொட்டுப் பார்த்தார் சாருலதா.
இந்த லெட்டர எழுதும் போது அழுதியாடி ரேவதி? அழத்தா அழுதிருப்ப..ஒ கண்ணீர் பட்டுதா இந்த எழுத்தெல்லாம் லேசா அழிஞ்சிருக்கு..
இந்த டப்பாவ நீ எங்கிட்ட குடுக்கணும்னு..நா ஒக்காந்திருந்த.. வேகமா ஓடுற அந்த மாட்டு வண்டி பின்னாடியே சாரு.. சாருன்னு கத்திண்டே ஓடி வந்தியேடி ரேவி..
எங்க ஒன்ன திரும்பிப் பாத்துட்டா வண்டீலேந்து குதிச்சிடுவமோன்னு பயந்து..
சாரு..சாருன்னு கத்திண்டே ஓடிவந்த ஒன்ன திரும்பிக் கூடப் பாக்காம மனச கல்லாக்கிண்டு வண்டிக் குள்ள ஒக்காந்திருந்தேனேடி ரேவி..பாவிடி நா..பாவி நா..
அதுக்கபறம் பதினெட்டு வருஷங்கழிச்சி ஒங்கடைசி மூச்சு நிக்கிற நிமிஷந்தானேடி நா ஒன்னப்பாத்தே..
ஆனா நீ… என்னப் பாக்காமலேயே.. நம்ம சாருதா இவன்னு தெரிஞ்சுக்காமயே ஒங்கொழந்தைய.. அதோட மொகத்தக்கூட பாக்காம.. நம்ம சாருகிட்டதா நம்ம கொழந்தய. ஒப்படைக் கிறோம்னுகூட தெரிஞ்சுக் காம எங்கிட்ட ஒப்படச்சிட்டுப் போயிட்டயேடி ரேவி..
கலங்கிப்போனமனம் தாங்கமுடியாத சோகத்தில் தவித்துத் தடுமாறியது.
நாற்பத்ரெண்டு ஆண்டுகளுக்கு முன்னால் பத்து வயதில் இருந்த காலத்திற்குள் டாக்டர் சாருலதாவின் மனம் நுழைந்தது.
அத்தியாயம் – 2
ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி.
ஒன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்புவரை மட்டுமே இருக்கும் அந்தப் பள்ளியில் மாலை நேர வகுப்புகள் முடிந்து பள்ளி முடிந்துவிட்டதற்கான அறிவிப்பாய்..
டண்..டண்..டண்..டண்..என மணி ஓங்கி ஒலித்தது.
பெல் எப்படா அடிக்கும்.. ஸ்கூல் எப்படாவிடும்..என்ற ஆவலோடு புத்தக மூட்டையை மடியில் ரெடியாய் வைத்துக் கொண்டு காத்திருந்த சிறார்கள் மணியடிக்கும் சப்தம் கேட்டதோ இல்லையோ வில்லிலிருந்து புறப்படும் அம்பாக வாசலை நோக்கி ஓடினார்கள்.
பள்ளி விட்டாயிற்று என்ற சந்தோஷத்தில் ஹோ வென்று ஆரவாரமாய் சத்தம் எழுப்பிக் கொண்டு முட்டி மோதிக் கொண்டு ஒரே நேரத்தில் பிள்ளைகள் வாசலை நோக்கி ஓட பள்ளியே அல்லோலகல் லோலப்பட்டது.
சிறு பிள்ளைகள் என்பதால் ஆண் பெண் பேதமின்றி கலந்து கட்டியாய் ஓடினார்கள். ஸ்கூல் விட்டாச்சு என்ற சந்தோஷம்தான் பிள்ளைகளை எப்படி சத்தமிட்டுக் குதூகலிக்க வைக்கிறது?
பசங்களா ஒத்தர் மீது ஒத்தர் இடிச்சி கிட்டு கீழ விழுந்துடாதிங்க..நிதானமா போங்க..
அந்தந்த வகுப்பின் ஆசிரியர்களின் கத்தல் பிள்ளைகளின் காதில் விழந்ததாய்த் தெரியவில்லை. அப்படி விழுந்தாலும் சட்டை செய்திருக்க மாட்டார்கள்.அவர்கள் சந்தோஷம் அவர்களுக்கு.
நிமிட நேரத்திற்குள் பள்ளி காலியாயிற்று. பணியாற்றும் ஆசிரியர்களைத் தவிர மொத்தமாய்க் காலியாயிற்று பள்ளி.
இல்லை..இல்லை..அப்படிச் சொல்லமுடியாது. அதோ ஐந்தாம் வகுப்பில்.. தரை பெஞ்சில்.. பக்கத்தில் புத்தக மூட்டை இருக்க.. தன்னை யொத்த வயதுடைய பிள்ளைகள் பள்ளி மணியடித்ததும் புத்தக மூட்டையை எடுத்துக் கொண்டு ஹோ எனக் கத்தியபடி விருட்டென வாசலை நோக்கி ஓட்டமாய் ஓடுவதை.. ஏக்கப் பார்வையோடு பார்த்தபடி..தன்னால் அவர்களைப் போல் செய்ய முடியவில்லையே என்ற நினைப்பில்.. ஏக்கத்தில் அமர்ந்திருந்தாள் சாருலதா..
எல்லோரும் வெளியேறியாகி விட்டது என்பதை உறுதிப் படுத்திக் கொண்டு.. மாணவ மாணவிகள் அமருவதற் கெனப் போடப்பட்டிருக்கும் தரையிலிருந்து அரையடி உயரமே இருக்கும் தரை பெஞ்சில் மெல்ல இரு கைகளையும் ஊன்றி உடலைத் தூக்கி வெகு சிரமப்பட்டு எழுந்தாள்.
குனிந்து புத்தகமூட்டையை எடுத்து நிமிர்ந்தவளுக்கு லேசாய்த் தடுமாறியது. சமாளித்தாள்.
அவளையே பார்த்துக் கொண்டு நின்றிருந்த வகுப்பாசிரியருக்கு மனம் கலங்கிப்போயிற்று.
ப்ச்..பாவம் தாயில்லாப் பொண்ணு..கால்வேற சரியில்ல..எல்லாப்புள்ளைங்களும் போனப்புறம் நிதானமா எழுந்து கிளம்புறதப் பாத்தா மனசேல்ல வலிக்கிது.
மத்த பசங்களெல்லாம் கத்திக்கிட்டே அடிச்சு மோதிக்கிட்டு வேகமா ஓடுரதப் பாத்துக்கிட்டே ஒக்காந்திருக்கும் இந்தச் சின்னப் பொண்ணு சாருவ பாக்கும் போது அவ கண்ணுல தெரியுற ஏக்கம்..தன்னால இவுங்களெல்லாம் போல ஓட முடியிலயேங்கிற தவிப்பு நல்லா புரியுது..
இந்தப் பொண்ணும் சின்னப் பொண்ணுதானே? பாவம் இந்தபொண்ணு சாருவுக்குத் தாய்தா இல்ல.. காலாவது சரியா இருக்கக்கூடாதா? ப்ச்…
நல்ல மனம் கொண்ட அந்த ஆசிரியரின் மனம்.. ஐந்தாம் வகுப்பு படிக்கும் பத்து வயது சாருவைப் பார்த்து பரிதாபப் பட்டது.
பாத்தும்மா..பாத்தும்மா..இன்னிக்கு ரேவதி பள்ளிக்கூடம் வல்ல..அவ வந்திருந்தா ஒம் புத்தகமூட்டைய தானே தூக்கிட்ருப்பா..
சொன்ன வாத்தியாரைப் பார்த்த்து லேசாய்ப் புன்னகைத்துவிட்டு வாசலை நோக்கி.. உடல் வலப்புறமும் இடப்புறமும் மாறிமாறி இப்படியும் அப்படியும் சாய நடக்க தொடங்கினாள் பத்துவயது சாருலதா.
வலதுகாலைவிட இடதுகால் ரெண்டு இன்ச்சோ மூணு இன்ச்சோ உயரம் கம்மியாய் இருக்கவேண்டும். அதனால் அப்படியானநடை சாருவுக்கு.
அவளால் வேகமாக வெல்லாம் ஓடமுடியாது.
பள்ளிக்குள்ளிருந்து வெளியே வந்தபோது பள்ளியிருந்த அந்தத் தெருவே அமைதியாய் இருந்தது.
அந்தச் சின்னஞ்சிறு கிராமத்தில் நாலு தெருக்களைக் கொண்ட அக்ரஹாரத்தின் ஒரு தெருவில் தான் பள்ளியிருந்தது. மற்றொரு தெருவில் தான் சாருலதாவின் வீடு. எனவே வீட்டிற்கும் பள்ளிக்கும் இடையே அதிக தொலைவில்லை.
பள்ளியிலிருந்து கொஞ்சதூரம் நடந்து இடப்பக்கம் திரும்பினால் சாருவின் வீடிருக்கும் தெரு.
தெருவின் நான்காவது வீடு அவளது வீடு.
இன்னும் பத்தடி நடந்தால் இடப்பக்கம் திரும்பி தெருவுக்குள் நுழைந்து விடலாம் என்ற நிலையில் எங்கிருந்தோ ஏழெட்டு நாய்கள் விதவிதமாய் குரலை எழுப்பிக் கொண்டும் குரைத்துக் கொண்டும் ஆக்ரோஷமாய் ஒன்றோ டொன்று சண்டைபோட்டுக் கொண்டும் சாரு நடந்துவரும் அந்தத் தெருவுக்குள் நுழைந்தன.அவற்றின் கத்தலாலும் குரைப்பாலும் தெருவே கிடுகிடுத்தது.
பயந்து போனாள் சாரு. அவளுக்கு வெகு அருகாமையில் ஆக்ரோஷ நாய்கள் சண்டை போட்டுக் கொண்டே நகர்ந்து வந்தன.
பயத்தோடு சட்டெனத் திரும்பி நடந்து வந்த பாதையிலேயே வேகமாக நடந்தாள் சாரு.
ம்கூம்..வேகமாக நடக்க அவளின் சாய் நடை இடம் கொடுக்கவில்லை.
இப்போது நாய்களின் கூட்டம் அவளுக்கு மிக அருகில்.. சண்டையை நிறுத்தாமல் ஒன்றின் மீது ஒன்று பாய்ந்து பாய்ந்து சண்டை போட்டபடி வந்தன.
பயத்தில் கத்த ஆரம்பித்தாள் சாரு. வேகமாய் ஓட கால்கள் ஒத்துழைக்க மறுத்தன.
அப்படியும் நாய்களுக்குப் பயந்து.. ஒத்துழைக்காத கால்களின் வேகத்தை வலுக்கட்டாயமாய் அதிகப்படுத்தினாள்.
நெட்டையும் குட்டையுமான கால்கள் அவளின் பயத்தினை அறியுமா என்ன? ஒரு கட்டத்தில் எக்குத்தப்பாய் கால்களை வைக்க..
குண்டும் குழியுமாய் கல்லும் மண்ணுமாய் தெரு..
ஆங்காங்கே பூமியில் கொஞ்சம் பதிந்தும் மீதிபாகம் வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் ஜல்லிக் கற்கள்.
அப்படி பூமிக்குமேலே வெளியே நீட்டிக் கொண்டிருந்த கல்லொன்று தடுக்க..
முகத்தைக்கூட பார்த்திராத தாயை ..அம்மா என்று அழைத்தபடி கீழே குப்புற விழுந்தாள் சாரு.
புத்தகமூட்டைப்பை காது பிய்ந்து நாலடி தள்ளிப்போய் விழுந்தது.
தெருவில் சின்னதும் பெரிதுமாய் நீட்டிக் கொண்டிருந்த ஜல்லிகள் கீழே விழுந்த சாருவைப் பதம் பார்த்தன.
நெற்றி..முழங்கை..முழங்கால்.. கால்கட்டைவிரல் என்று பதம் பார்த்தன கற்கள்.
அய்யோ அம்மா..வலியால் கத்தினாள் சாரு..நெற்றி கசகசத்தது. ரத்தம் கசிந்து மூக்கில்வழிந்து மூக்கின் நுனியில் வந்து நின்றது.
முழங்கையில் மண்ணும் கல்லுமாய்த்தேய்த்து சிராய்ப்பு ஏற்பட்டிருந்தது.
முழங்காலில் வலி.. இடதுகாலின் கட்டைவிரல் நுனி பிளந்து ஏகத்துக்கும் ரத்தம் கசிந்தது.
பயத்தாலும் வலியாலும் சின்னக்குரலில் அழுதாள் சாரு.
சட்டென சித்தியின் நினைப்பு வந்தது.நடுங்கியது உடல். கீழே விழுந்ததால் உண்டான காயங்கள் தந்த வலியை விட வீட்டுக்குப் போனதும் கொஞ்சமும் இறக்கமின்றி சித்தி பேசப் போகும் வார்த்தைகளால் உண்டாகப் போகும் மனவலியை நினைத்து பயந்து அழுதாள் பத்து வயது சாரு.
சட்டென எழுந்திருக்க முடியவில்லை.
ம்..ம்..ம்..முனகினாள். கைகளை ஊன்றி எழ முனைந்தாள்.முடியவில்லை.
இப்போது நாய்களைக் காண வில்லை.
கைகளைத் தரையில் ஊன்றி முழங்கால்களை மண்டிபோட்டு எழுந்திருக்க முயன்ற போது அடிபட்டிருந்த முழங்கால் கடுமையாக வலித்தது.
அம்மாடி வலிதாங்கலயே அரற்றியபடி எழமுயன்ற சாருவை..
சாரு விழுந்துட்டியாடி என்று துக்கம் தொண்டையை அடைக்கக் கேட்டபடி சாருவின் இரு தோளுக்குக் கீழே அக்குள்களில் கைகளை வைத்து முன்புறமாய்க் கொண்டு வந்து வளைத்து அப்படியே அவளை மெல்லத் தூக்கின இரு கைகள்.
அவள்..அவள்..சாருவின் வயதான அதே பத்து வயதே ஆன ரேவதி..சாருவின் வகுப்பில் படிப்பவள். இருவரும் உயிர்த்தோழிகள்.
சாரூ..ரொம்ப வலிக்கு தாப்பா?வா..வா.. ஞானாம்பா மாமியாத்து சிமெண்ட் ஆளோடி தரேல கொஞ்சநாழி ஒக்காந்துக் கோ..என்றபடி சாருவின் இடதுகையைத் தன் தோள்மீது சுற்றி வளைத்து வைத்து தன் வலது கையைச் சாருவின் வலப்புற இடுப்பில் வைத்துச் சாருவைத் தன் தோளோடு அணைத்தபடி சிமெண்ட் தரையை நோக்கி மெது வாய்த் தன் அன்புத் தோழி யை அழைத்துச் சென்றாள் ரேவதி.
சிமெண்ட் தரையில் சாருவை அமரவைத்துவிட்டு ஓடிச் சென்று காதறுந்து கிடந்த சாருவின் புத்தக மூட்டையை எடுத்துக்கொண்டு திரும்ப ஓடிவந்தாள் ரேவதி.
சாரு ரொம்ப வலிக்குமேடி.. அடியா பட்டுக்கெடக்கே..
மெல்ல தோழியின் அடிபட்ட இடங்களைத் தொட்டுப் பார்த்தாள் ரேவதி.
ஸ்..ஆ..ரொம்ப வலிக்கறுதிடி
ரேவி..கேவினாள் சாரு..
ரத்தம் வருதுடி நெத்தி லேந்து..தொடைக்கணுமே..
தோ வரே இரு..
தெருவிலிருந்த பஞ்சாயத்து பைப்பைநோக்கி ஓடினாள் ரேவதி. பைப்பைத் திறந்த போது நூலிழைபோல் தண்ணீர் வந்தது.தண்ணீர் வருவது நிற்கும் நேரம்.
தண்ணிய எதுல புடிச்சிண்டு போறது..கையில புடிச்சிண்டு போனா சாருகிட்ட போறதுக் குள்ள வெரலிடுக்கால தண்ணீல்லாம் கொட்டிப் போயிடும்.நொடிநேரம் செய்வதறியாது தவித்தாள்.
தாவணி அணியும் வயதில்லை என்பதால் வெறும் பாவாடை சட்டை மட்டுமே அணிந்திருந் தாள்.தாவணியிருந்தால் அதன் தலைப்பிலாவது தண்ணீரை நனைத்துக் கொள்ளலாம். அதற்கும் வழியில்லை.
சட்டென தீர்மானத்துக்கு வந்தவள் போல் முன்புறப் பாவாடை முழுவதையும் சொதசொதவென நனைத்துக் கொண்டாள்.
வலது கையால் ஈரப் பாவாடை உடலோடு ஒட்டா மல் நகர்த்திப் பிடித்தபடி வேகமாய் நடந்து சாருவிடம் வந்தாள்.
பாவாடையின் ஈரத்தை இடக்கையால் பிழிந்து பிழிந்து வலக்கையில் தண்ணீரைப் பிடித்து சாரு வின் நெற்றியையும் கால் கட்டை விரலையும் ரத்தம் போகத் துடைத்தாள்.
அதற்குமேல் பத்துவயது சிறுமி வேறு என்ன செய்து விடமுடியும்?
சாரூ..அழாதடி..நீ அழுதா நானு அழுவேண்டி..ரொம்ப வலிக்கும்தாண்டி..ஏண்டி விழுந்த?
நா ஸ்கூல்லேந்து வந்துண்ருந்தேனா..அப்ப ஏழெட்டு நாய்ங்க கொலச்சுண்டே ஒண்ணோட ஒண்ணு சண்ட போட்டுண்டே..எங்கிட்டாப்ல வந்திடுத்துடி.. நா பயந்துட் டேண்டி..
திரும்பி ஓடினேம்பாரு.. என்னாலதா ஓடமுடியா தில்ல..கல்லுதடுக்கி விழுத்துட்டேண்டி ரேவி… வலிதாங்கமுடியலடி..
தலயவேற விண்ணு விண்ணுனு வலிக்கிறதுடி ரேவி..
விசும்பி அழும் தோழி சாருவைப்பார்த்து தாங்க முடியாமல் தானும் அழுதாள் ரேவதி.
தோழியை எப்படி சமாதானம் செய்வதெனத்தவித்தது
ரேவதியின் சின்ன இதயம்.
தன் அன்புத்தோழி சாரு வலியில் பாதியைத் தன்னிடம் கொடுத்தால் ஏற்பதற்குத் தயாராய் இருந்தது ரேவதியின் மனது.
தபாரு..தபாரு சாரூ இங்க பாரேன்..நா கும்மாணம் அத்தையாத்துக்குப் போனேன்ல.. வரச்சே ஒனக்கு என்ன வாங்கிண்டு வந்திருக்கே பாரேன்.
பாவாடையின் நாடாவுக்குக் கீழே இடுப்புப் பகுதியில் செருகி வைத்திருந்த பேப்பர் பொட்டலம் ஒன்றை எடுத்தாள் ரேவதி.
தபாரு தபாரு சொல்லிக் கொண்டே பொட்டலத்தைப் பிரித்து சாருவின் கண்ணெதிரே நீட்டினாள்.
குட்டிக்குட்டியாய் குண்டு குண்டாய் உருண்டை உருண்டையாய்..பழுப்புக்கலரில் ஏழெட்டு கமர்க்கட்.
சாரு..சாரு ஒனக்குதாண்டி..
எடுத்துக்கோடி..தின்னுடி..
நோக்குன்னுதாண்டி வாங்கிண்டுவந்தே.ஒனக்கு ரொம்ப புடிக்கும்ல..ஆ காமி..
ஆ காமி..கையில் ஒன்றை எடுத்து சாருவின் வாயருகே கொண்டு வந்தாள் ரேவதி.
தோழி வலியை மறக்க வேண்டும்..அவள் அழாமல் இருக்க வேண்டும் என்ற தவிப்பு தெரிந்தது ரேவதி யிடம்.
வேண்டாண்டடி ரேவி இப்ப..
ரொம்ப வலிதாங்கல..ஆனா அடிப்பட்டதால வலிக்கிற இந்தவலியவிட..
ஏண்டி தோ இருக்கிற பள்ளிக்கூடத்துலேந்து வரதுக்கு இவ்வளவு லேட்டு?னு கேட்டு சித்தி கன்னா பின்னான்னு திட்டுவா..கீழ விழுந்துட்டே அடிபட்டுடுத் துனு சொன்னா.. சொன்னா..
அடிபட்ட எடத்துலயே இலுப்பக் கரண்டிய அடுப்புல பழுக்க காச்சி சூடுவெக்கிறே சரியாயிடும்னு திட்டுவா..
அப்படி செஞ்சாலும் செய்வாடி ரேவி.. பயமாருக் குடி..
நா செத்துப்போயிடனும்டி ரேவி..ஏண்டி எங்கம்மா என்னப் பெத்ததுமே செத்துப்போனா?என்னையும் தன்னோட கூட்டிண்டு போயிருக்கக் கூடாதா? தினம் தினம் சித்திகிட்ட திட்டும் அடியும் வாங்க முடிலடி ரேவி..
உடைந்து போய் அழும் தோழியைக்கட்டிக் கொண்டு தானும் அழுதாள் ரேவதி.
வாடி ரெண்டுபேரும் செத்துப் போயிடுவோம்.
டீ ரேவதீ..ரேவீ..நீ இப்பிடீல்லாம் பேசாதடி..நீ ஏண்டி என்னோட சேந்து செத்துப்போணும்..
நாந்தாண்டி இருக்கக் கூடாது..
அம்மா இல்லாம எந்தக் கொழந்தையும் இருக்கவே கூடாதுடி ரேவி..
சாரூ..நீ இல்லாம என்னால இருக்க முடியாதுடி..நீ இல்லாட்டி நா யாரோட பேசுவே?..யாரோட வெளையாடுவே?..யாரோட ஸ்கூல் போவே?.. இந்த ஸ்கூலுக்கு அப்பறம் வேற ஸ்கூலுக்கு யாரோட போவே?..
எ ஃப்ரெண்டுடி நீ..ஒன்னத் தவிற வேற யாரையும் ஸ்னேகிதியா நெனைக்க மாட்டேண்டி..நீ என்னோட உயிர்தோழிடி..
இனிமே இப்டீல்லாம் பேசாத..ஒன்ன நா பிரியவே மாட்டேண்டி..சாமிபிரிக்க நெனச்சாலும் பிரிய மாட்டேண்டி சாரு..தோழியின் கைபிடித்து கலங்கி அழும் ரேவதியோடு தானும் அழுதாள் சாரு.
ஸ்னேகத்தால் இணைந்த இந்தப் பிஞ்சு இதயங்க ளுக்கு எதைத்தரக் காத்திருக் கிறது எதிர்காலம்?
அத்தியாயம் – 3
சரி கெளம்பலாண்டி ரேவி..
ஆனா ஆத்துக்குப் போகவே பயமாருக்குடி..சித்தி எப்பிடீல்லாம் பேசுவான்னு நெனச்சாலே.. சொல்லவந்ததை முடிக்கமுடியாமல் தொண்டை அடைத்தது சாருவுக்கு.
சாருவின் சித்தி எப்பிடிப் பேசுவாள் என்பது தெரியும் என்பதால்.. ப்ச்..என்றாள் ரேவதி .
சாருவின் வீட்டுக்கு முதல்வீடு ரேவதியின் வீடு. அடுத்தடுத்த வீடுகள்.
மெல்ல ரேவதியின் தோளைப் பிடித்துக்கொண்டு நடக்க முடியாமல் நடந்து வீட்டு வாசலுக்கு வந்தாயிற்று.
வீட்டுக்குள் செல்லவே தயக்கமும் பயமுமாய் இருந்தது சாருவுக்கு.
சாரூ.. என்றபடி தோழியின் கையை ஆறுதலாய்த் தொட்டாள் ரேவதி.
சாரு வீட்டுக்குள் நுழைந்ததும் என்ன நடக்குமென்பது அவளுக்கும் தெரியும் என்பதால் அவளை விட்டுவிட்டுப்போகவே பிடிக்கவில்லை ரேவதிக்கு.
உள்ள போய்த்தானேடி ஆகணும்..என்னடி பண்றது சாரு.. பேசாம நீ எங்காத் துக்கே வந்துடுடி.. எங்கம்மா வே ஒன்னப்பாத்துப்பா.. சாதம் போடுவா.. ஒங்க சித்தியே வேண்டாண்டி.. விபரம் தெரியாத வயது அது..தோழி அவள் சித்தியிடம் தினம்தினம் படும்பாட்டைப் பார்த்துப் பார்த்து மனம் தாங்காமல் பேசவைத்தது ரேவதியை.
கண்கள் கலங்கிப்போனது சாருவுக்கு..அப்பிடீல்லாம் பண்ணமுடியாதுடி ரேவி..நா உள்ள போரேண்டி..பயமாதா இருக்கு.. ஆனாலும் உள்ள போய்தானே ஆகணும்.. திட்டும் அடியும் படணும்னு இருந்தா பட்டுத்தானேடி ஆகணும்?..
கீழவிழுந்து அடிப்பட்டு வலிக்கிறவலி சித்திபேசர பேச்சவிட கொறச்ச வலியாதா தெரியும்.. போறேன்..
சரிடி..மறுபடியும் ப்ச்..என்று சொல்லிக்கொண்டே தன் வீட்டிற்குள் நுழைந்தாள் ரேவதி.
ஏற்கனவே சாய்த்துசாய்த்து நடக்கும்சாரு கீழே விழுந்து அடியும் பட்ட காரணத்தால் ரொம்பவும் சிரமப்பட்டு வலியோடு மூன்று படிகள் ஏறி ரேழியில் கால் வைத்தாள்.
ரேழி நிலைப்படி தாண்டி தாழ்வாரத்தில் கால் வைக்கவே பயமாய் இருந்தது.
வேறுவழியில்லை.வைத்து தான் ஆகவேண்டும்.
தாழ்வாரத்திற்கு வந்து நின்றபோது.. சித்தி மடியில் தன் ஒன்னரைவயது குழந்தை சீனுவை வைத்துக் கொண்டு ஊஞ்சலில் அமர்ந்திருந்தாள்.
தாழ்வாரத்தில் வந்து நின்ற சாருவைப்பார்த்தநொடி முகம் கோபத்தால் கொடூரமாக மாறியது. முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன.
ஏய்..அங்கயே நில்லுடி நார மு…ட..
மணி என்ன ஆறுது? எப்பவே பள்ளிக்கூடம் விட்டாச்சு?..நீ எப்ப வீட்டுக்கு வர?பள்ளிக் கூடம் விட்டு பசங்களெல் லாம் அதது ஆத்துக்குப்போய் எத்தன்னாழி ஆச்சு?..நீ சாவுகாசமா வர?..
எங்க ஊர் மேயப்போன?..
பத்து வயசுக்கே ஊர்மேய ஆரம்பிச்சிட்டியா.. நாயே.. ஆக்கிஆக்கிப் போடறேன்ல மூணுவேளயும் மூக்கப்புடிக்க நன்னாத் தின்னுப்புட்டு பள்ளிக்கூடம் போறத சாக்கா வெச்சிண்டு மேயப்போறியா? எல்லா எந்தலையெழுத்து..மூத்தா பெத்த சனியனுக்கெல்லாம் ஆக்கிப்போடணும்னு..
பெத்துப்போட்டுட்டுட்டு செத்தாளே ஒன்னப் பெத்தவ.. செத்தப்ப ஒன்னையும் இழுத்துண்டு தொலஞ்சிருக்க வேண்டியதுதானே?எ உசிர எடுக்கணும்னு ஒன்ன விட்டுட்டுப் போனாளா?
பொட்டையப் பெத்தது போறாதுன்னு பெத்தத நொண்டியான்னா பெத்து எந்தலேல கட்டிட்டுப் போயிருக்கா..சனியனே நீயும் ஒன்னப் பெத்தவளோட ஒழிஞ்சி போயிருக்க வேண்டியதுதானே?உசிரோட இருந்து என்ன பண்ணப் போற?
நிறுத்தாமல் கத்தும் சித்தியை பயமும் கலவரமுமாய் பார்த்தபடி நின்றிருந்தாள் சாரு.
நிக்கிறதப்பாரு..நொண்டிப் பொணமே என்றபடி பக்கத்தில் காபிகுடித்துவிட்டு வைத்திருந்த டம்ளரை எடுத்து சாருவை நோக்கி வெறுப்பும் ஆவேசமுமாய் வீசினாள் நாகலெஷ்மி எனும் பெயர்கொண்ட சாருவின் சித்தி.
தன் மீது சித்தி வீசிய டம்ளர் படாமல் இருக்க சற்றே நகர..
நகர்ந்தவளின் அடிபட்ட முழங்கால் நச்சென தாழ்வார மூலையிலிருந்த மரஸ்டூலில் இடித்துக்கொண்டது. பளீரென வலித்தது. அம்மா என்று முனகினாள் சாரு.
ஏ பள்ளிக்கூடம்விட்டு ஆத்துக்குவர இவ்வளவு நேரம்ணுகேட்டே அதுக்கு பதில்சொல்லாம மொனகர?
என்னத் திட்றியா?என்ன தைரியம் ஒனக்கு?..
இல்ல சித்தி ஸ்டூல்ல இடிச்சிண்டுட்டே..அதா..
பேச்சமாத்தாத..வீட்டுக்குவர ஏ லேட்டு?.. பதில் சொல்றயா? இல்ல லேட்டா வந்த கால்ல சூடு வெக்கட்டுமா?
வேண்டா..வேண்டா சித்தி.. நா கீழவிழுந்துட்டே..
வலிதாங்க முடீல..நல்ல அடி..நடக்கவே முடீல சித்தி அதா..சித்தநாழி ..
சொல்லிமுடிப்பதற்குள் இடைமறித்தாள் நாகு.. நாகலெஷ்மி..
அட அப்பிடியா? எந்த சபேல போய் பரதநாட்டியம் ஆடின?குட்டையும் நெட்டையுமா நொண்டிக்கால வெச்சுண்டு சதிராட வேற போனியா?
அப்பிடி ஆடித்தா விழுந்தயா?நொண்டிநாய்க்கு டான்ஸ் ஆடவேற ஆசையா?துத்தேரி..
ஆத்தாவ பெத்தவொடனேயே முழுங்கியாச்சு..நீ மட்டும் இருந்து என்ன பண்ணப் போற?
நீயும் போய்த் தொலைஞ் சிருக்க வேண்டிதுதானே?
பொறந்தவொடனயே தொண்டைக்குள்ள நெல்லப்போட்டு தண்ணி ஊத்திருக்கணும்..இல்லாட்டி கள்ளிப்பால ஊத்தி ஆத்தாவோட போய்ச்சேருனு அனுப்பிருக்கணும்.
சனியன்..நிக்கறதபாரு..போ போ பத்தும்பாத்திரமுமா காஞ்சு போய்க் கெடக்கு..
போய் பாத்திரம்தேச்சு அடுப்ப மொழுகு.. மசமசன்னு நிக்கிற மேனா மினுக்கியாட்டம்….
ஈவு இரக்மின்றி நிடூஷியமாய் பேசும் சித்தியிடம் அடிபட்ட இடத்தைக்காண்பிப்பதோ.. விண்விண்ணென்று தெறித்துவலிக்கும் தலை வலியயைச்சொல்லி சூடா கொஞ்சம் காபி தரேளா சித்தி என்றுகேட்பதும் எந்த பலனையும் தராது என்பதைப் புரிந்தவளாக புத்தக மூட்டையை கூடத்து மூலையில் வைத்துவிட்டு சமயலறைக்குள் நுழைந்தாள் பத்துவயது சாரு.
சமயலறைத் தொட்டி முற்றத் தில் அம்பாரமாய்க் குவிந்து கிடந்தது பத்திரங்கள். தண்ணீர்ஊற்றி ஊறக்கூட வைக்காமல் காய்ந்து வரண்டுபோய்க் கிடந்தன அத்தனைப் பாத்திரங்களும்.
பார்த்தமாத்திரத்தில் பக்கென்றானது சாருவுக்கு.
அய்யோ எத்தன பாத்ரம்?காஞ்சுபோய் கெடக்கு..
இத்தன பாத்ரத்தையும் எப்பிடித்தேப்பேன்.
ஏற்கனவே அடிபட்டு ஒடம்பெல்லாம் வலிக்கறது.. தலவலி வேற தாங்க முடியல..லேசா ஜொரம் வந்தாப்ல அனத்த வேற அனத்தறது..
சூடா காபியாவது குடிச்சா தேவலாம்னு இருக்கு.. சித்தியக் கேக்கவேன்னா பயமாருக்கு..
கண்கள் கலங்கிப்போனது சாருவுக்கு.
டீ..மூதேவி..சமைக்கருள்ள சத்தத்தியே காணும்?.. பாத்ரத்தையெல்லாம் கொல்லேல கெணத்தடில கொண்டுபோய்போட்டுத் தேயி..இங்கியே சொகுசா தேச்சு தொட்டிமுத்தக் கொரட்டுலயே கவுத்துட லாம்னு பாக்காத..
அய்யோ தொட்டிமுத்ததுல கெடக்குற இவ்வளவு பாத்ரத்தையும் கொல்லக் கெணத்தடிக்கு எப்பிடிக் கொண்டுபோறது..
பத்துதடவன்னா தூக்கிண்டு போய் தூக்கிண்டுபோய் வெக்கணும்.
அயர்ச்சியாய் இருந்தது சாருவுக்கு.
சித்திசொல்லியாச்சு.. அதும்படி செஞ்சுதா ஆகணும்.
தொட்டிமுற்றம் ஏகத்துக்கும் பாசிபிடித்துக் கிடந்தது. காலவெச்சாலே வழுக்கும்..
இதுல எப்பிடி எறங்கி.. பாத்ரத்தெல்லாம் எடுத்து கொரட்ல வெச்சு..
ஏற்கனவே இப்பதா விழுந்து அடிபட்டு வந்திருக்கேன்.. யோசன பண்ணின்டு நின்னா வெளக்குமாத்தடி விழும் என்று நினைத்த வளாய்..
முற்றதின் விளிம்பில் அமர்ந்து முற்றத்துக்குள் கால்களை வைத்தபோது பாசி வழுக்கியது.அய்யோ பாசி வழுக்கி விழுந்துட்டா.?
சித்தி ஓடி வந்து விழுந் துட்டியா சாருக்குட்டி அப்பிடீன்னு சொல்லி தூக்கில்லா விடமாட்டா..
கொடத்துல இருக்குற தண்ணிய அப்பிடியே நொண்டிப்பொணமேன்னு சொல்லிண்டே மேல ஊத்துவா..சாகு..சாகும்பா..
கண்களில் கண்ணீர் தளும்பி கன்னங்களில் வழிந்தது.
முத்தத்துல எறங்கித்தா ஆகணும்.முற்றத்தின் ஒரு ஓரத்தில் அரையடி உயரத்தி லிருந்த சிமெண்ட் மேடையில் அம்மிக்கல் பதிக்கப்பட்டிருக்க..
அந்த அம்மிக்கல்லை இடக்கையால் பற்றிக் கொண்டு முற்றத்தில் இறங்கினாள்.
குனிந்து வலக்கையால் பாத்திரங்களை எடுத்து எடுத்து முற்றத்தின் மேல்விளிம்பில் குரட்டில் வைத்தாள். குனிந்து நிமிர்ந்து குனிந்து நிமிர்ந்து பாத்திரங்களை எடுத்து எடுத்து வைத்ததில் முதுகு வலித்தது. பசிக்கவேறு ஆரம்பித்தது.
மறுபடி குரட்டில் ஏற வேண்டும்.
இரண்டு காலும் நடுங்கியது.
குட்டையும் நெட்டையுமான கால்கள் ஒத்துழைக்க மறுத்தன.
அடிபட்ட முழங்காலை குரட்டின்மீது குத்திடவைத்து எம்பி மேவே ஏறமுடியாமல் வலி பின்னியெடுத்தது.
அம்மா இல்லேன்னா இப்பிடிதா படணும்..
மனம் சொல்லி மருகியது. அம்மா ஏம்மா அனாதயா விட்டுட்டுப்போன?
அப்பாகூட சித்தீட்ட பயந்துண்டு என்ட்ட பேசமாட்டேங் கிறா..சித்தி திட்டினாலோ அடிச்சாலோகூட
ஏ இப்பிடி சாருவ திட்ற அடிக்கிறனு பரிஞ்சு பேசமாட்டேங்கிறா? நா அனாதையாட்டம் இருக் கேம்மா..ரேவதிமட்டும் இல்லேன்னா..கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது.
மெதுவாய் குரட்டில் ஏறிவிட்டாள்.
பத்துவயதேயான அவளின் சின்னக்கைகளுக்குள் அதிக அளவு பாத்திரங்களை அடக்கிக் கொள்ள முடியாததால் ஏழுதடவை சமயலறைக்கும் கிணத்தடிக் குமாய் நடந்து நடந்து பாத்திரங்களைக் கொண்டு போய் கொண்டு போய் வைத்தாயிற்று.
மனமும் உடலும் சோர்ந்து போயிற்று.வலியும் பசியும் வாட்டியது.
கிணற்றில் வாளியைவிட்டு தண்ணீரை மொண்டவள் கயிற்றை இழுத்துத் தண்ணீர் நிரம்பியிருக்கும் வாளியை மேலே கொண்டுவரமுடியாமல் தடுமாறினாள்.
பத்துவயது உடல் நடுங்கியது.
வலுக்கட்டாயமாய் கைகளுக்கு வேலை கொடுத்துத் தண்ணீரை இறைத்து காய்ந்து வரண்டு கிடக்கும் பாத்திரங்கள் மீது ஊற்றி ஊறவைத்தாள்.
பெரிய இரும்பு வாளியில் தண்ணீர் ரொப்பி பக்கத்தில் வைத்துக்கொண்டு பாத்திரங்கள் அருகில் குத்துக்காலிட்டு அமர்ந்தாள் பாவாடைநனையாமலிருக்க பாவாடையை முழங்கால் வரை மேல்நோக்கி இழுத்துவிட்டாள்.
அடிபட்ட முழங்கால் நீலநிறத்தில் கருரத்தம் கட்டிப்போய் வீங்கியிருந்தது.
அடிபட்ட கட்டைவிரலின் நுனி கோலிகுண்டளவு வீங்கிப் போய் வலியைத்தந்தது.
நெட்டையும் குட்டையுமான கால்கள் குந்தி உட்கார மறுத்து அடம்பிடித்தன.
பசியும் தலைவலியும் அவற்றின் பங்குக்கு பாடாய்ப்படுத்தின.
சாம்பலும் உறுமட்டை நாரும் இருக்கும் மடக்கை (மண்பானையின் மூடி..நடுவில் லேசான குழிவோடும்..விளிம்பு சற்றே உயரமாகவும் இருக்கும் மண்ணால் செய்யப்பட்ட தட்டுபோன்ற அமைப்பு.. தஞ்சாவூர் மாவட்ட வழக்குச்சொல் ‘மடக்கு’) தன் அருகே இழுத்து வைத்துக் கொண்டாள்.
பத்தே வயதான சாருவின் சின்னஞ்சிறு கைகள் பாத்திரங்களை அழுத்தி அழுத்தித் தேய்க்க ஆரம்பித்தன.
மனம் நிலையின்றித் தவித்தது.
காபிகுடினுகூட சொல்லாத சித்தியை நினைத்து வெறுப்பாய் இருந்தது. தன்னோட பொண்ணுனா இப்பிடி இத்தன பாத்தரத் தையும் தேய்க்கச் சொல்லுவாளா?
கீழவிழுந்தேன்னு பெத்த பொண்ணு சொன்னா பதறிப்போய் அடிபட்டுடுத்தா கண்ணுன்னு தவிச்சுப் போமாட்டா..பொண்ணத்தூக்கிவெச்சுண்டு சமாதானம் பண்ணமாட்டா?மருந்து போட்டுவிடமாட்டா..காபி குடீடி செல்லம்னு கொஞ்ச மாட்டா?
அடிபட்ட எடத்தத் தடவி விடமாட்டா?
ஆனா என்னமட்டும் எவ்வளவு திட்டு திட்றா..செத்துத்தொல செத்துத்தொலன்னு..
பச்..க்ளாஸ்ல ஜானா..ரமா மீனா மல்லிகா பவானி எல்லொரும் என்ன சொல்லுவா?.. என்ன சொல்லுவா?..
பவானீ.. பள்ளிக்கூடம் விட்டதும் ஆத்துக்போனா எங்கம்மா அடிச்செல்லம் ஸ்கூல் விட்டு வந்தாச்சா.. செல்லகுட்டி அப்பிடினு என்ன கட்டிபுடிச்சி கன்னத்தக்கிள்ளி கொஞ்சுவா..இது ஜானா..
ஆமாண்டி ஜானா எங்கம்மா வுந்தாண்டி குட்டிம்மா குட்டிம்மானு கொஞ்சுவா..
திங்கறத்துக்கு முறுக்கு கடல உருண்டன்னு தினமு எதாவது குடுப்பா..குடிக்க ஹார்லிக்ஸ் குடுப்பாடி எங்கம்மா தெரியுமா?
இது மீனா..
எங்கம்மா மட்டும் என்னவாம்?..எங்கம்மா என்ன இடுப்புல தூக்கியே வெச்சுப்பா..திங்க குடுப்பா..எங்காத்துல போர்ன்விடாதா எனக்கு..இது மல்லிகா..
ஏய் எங்காத்துல எங்கம்மா எங்கப்பா ரெண்டுபேருமே நா பள்ளிக்கூடம் விட்டு ஆத்துக்குப்போனதும் செல்லக்குட்டி வந்தாச்சு வந்தாச்சுனு கொஞ்சுவா..
எங்கப்பா அல்வாவ்லாம் ஹோட்டல்லேந்து வாங்கிண்டுவந்து தருவா தெரியுமா?ரமாவின் பேச்சில் பெருமை பொங்கிவழியும்.
எனக்கும் ஜாலிதாம்ப்பா..
எங்கம்மா எனக்கு தலைக்கு தாழம்பூல்லாம் வெச்சு பின்னல் பின்னிவிடுவா.. கன்னத்த வழிச்சி திருஷ்ட்டி சுத்திப்போடுவா..முத்தம் குடுப்பா..
அவர்கள் அனைவரின் பேச்சும் ஸ்பஷ்ட்டமாய் சாருவின் காதில் விழும். மனம் தவிக்கும். தனக்கு மட்டும் அம்மா இல்லாத காரணத்தால் தன் வகுப்பிலுள்ள சமவயதை உடைய தோழிகளுக்குக் கிடைக்கும் எந்த சந்தோஷ மும் கிடைக்கவில்லை என்பது ஏங்க வைக்கும் நெஞ்சு துடிக்கும்.சின்ன இதயம் விம்மி அழும்.
அந்தநேரத்தில் ஒரு கரம் மெல்ல அவள் தோள் தொடும்.முதுகை ஆதரவாய் தட்டும்.தன் தோளோடு அவளை அணைக்கும். கையோடு கையை இணைத்துக் கொள்ளும். அவள் ரேவதி.
சாரு..நா இருக்கேண்டி ஒனக்கு..வருத்தப்படாத.மனசுக்குள்ள அம்மா இல்லயேன்னு அழாத.. வயதுக்கு மிஞ்சிய வாஞ்சையோடு பேசி தோழியைத் தேற்றுவாள் ரேவதி.
பாத்திரம் தேய்க்கும் இந்தத் தருணத்தில் வகுப்பில் நடப்பது நினைவில் வந்தது சாருவுக்கு.
அம்மா..அப்பிடீன்னு நா கூப்டதே இல்ல..ஆசையா இருக்கு அம்மான்னு கூப்ட..அம்மா மடீல படுத்துக்க..
அம்மா சாருசெல்லம்னு சொல்லி என்னக் கொஞ்ச ணும்னு..அதெல்லாம் நடக்கவே நடக்காது..நம்ம அம்மாதா நம்மள பெத்ததுமே செத்துப்போய்ட்டாளே..ஏம்மா..ஏம்மா செத்துப்போன என்ன விட்டுட்டு..கண்ணீர்பெருகி கன்னத்தில் வழிய வலது தோளால் வலது கண்ணை யும் இடது தோளால் இடது கண்ணையும் துடைத்துக் கொண்டாள்.
டொக்..டொக்..டொக்..கொல்லைக்கதவு லேசாய்த் தட்டப்படும் சப்தம்.கூடவே சாரூ என்றழைக்கும் ரேவதியின் மெதுவான குரல்.
ரேவின்னா கூப்டறா.. இருகைகளையும் தண்ணீருக்குள் விட்டு அலம்பிவிட்டு கைகளை உதறி பாவாடையில் துடைத்துக் கொண்டு எழுந்தவள்.. கால்மணி நேரத்துக்குமேல் குந்தியே அமர்ந்திருந்துவிட்டுச் சடாரென எழுந்ததும் தடுமாறினாள்.
கொல்லைக் கதவைத் திறந்தவளின் கண்களில் வலது கையில் சிறிய தட்டொன்றில் இரண்டு பஜ்ஜிகளும் வலக்கையில் டம்ளரில் காபியும் இருக்க ரேவதி நின்றிருந்தாள்..
ஏய் ரேவி என்னடியிது?
டீ..ஒனக்குதாண்டி..அம்மா குடுத்துட்டு வரச்சொன்னா..
சாரு கீழ விழுந்துட்டாம்மா.. அடிப்பட்ருக்குமா அவுளுக் குன்னே..
அய்யோ பாவண்டி கொழந்த..
சித்திக்காரி என்னன்னுகூட கேக்கமாட்டா..ஒழுங்கா வயித்துக்கு சோறே போடமாட்டா..அவளா சாருக்கு அடிபட்ட எடத்துல மருந்து தடவப்போறா..
இந்த பஜ்ஜிய குடுத்து திங்கச் சொல்லி சூடா காப்பிய குடிக்கச்சொல்லு.. கொழந்த பாவம்னாடி..
டீ..ரேவி..ஒங்கம்மாக்குதா எம்மேல..வார்த்தை வராமல் தவித்தாள்..கண்களிலிருந்து கண்ணீர் தளும்பி வழிந்தது.
சாரு மொதல்ல பஜ்ஜியத் தின்னு காபிய குடிடி.. ஒனக்குப் பசிக்கும்ல.. தலவேற வலிக்குதுனு சொன்ன.. நெத்தீல அடிபட்ருக்குல்ல..
தலய வலிக்கதா வலிக்கும்..
சூடாருக்கும்போதே காபிய குடிடி சாரு..
ரேவீ..குரல் தழுதழுத்தது..
ஏய்..மொதல்ல பஜ்ஜிய தின்னு காபிய குடிக்கப் போறியா இல்லையா?தோழியை பாசத்தோடு அதட்டினாள் ரேவதி.
ரேவி..எங்க சித்தி திடீர்னு இங்க வந்துட்டா..நீ குடுக்குறத பாத்துட்டா.. அப்பறம் என்ன நடக்கும்னு நெனச்சாலே பயமாருக்குடி..
சாரூ.. ஒங்க சித்தி இப்ப இங்க வரமாட்டா.. வாசல்ல பங்கஜம் மாமியோட வம்படிச்சிண்ருக்கா..
எங்கம்மா நானும் வாசல்ல போயி சாருவோட சித்திண்ட பேச்சுக்குடுக்கறேன்..அந்த வம்புக்காரிக்கு வம்படிக்கப் புடிக்கும்.வம்புகெடச்சா வாசலோட நிப்பா.. ஆத்துக்குள்ள போகவே தோணாது அவுளுக்கு..
அதுக்குள்ள சாருகிட்ட இந்த பஜ்ஜியையும் காபியையும் குடுத்துடுன்னு சொன்னாடி..
அதுனால ஒங்க சித்தி இப்போதைக்கு இங்க வரமாட்டா..
இந்தா..இந்தா..சீக்கிரமா பஜ்ஜிய தின்னுடி சாரு..காபிய குடிடி.. பேசிண்டே நிக்காதடி சாரு..
தோழியின் அன்பு அதட்டலை அடுத்து பஜ்ஜியைத்தின்று சூடான காபியை மெல்ல மெல்ல குடித்தபோது பசித்த வயிறுக்கும் வலிக்கும் தலைக்கும் இதமாய் இருந்தது சாருவுக்கு.
சாரூ..தபாரு..ஆஸ்ப்ரோ மாத்ர..
இத வாயிலபோட்டு தண்ணி ஊத்திக்கோ..தலவலி அடிபட்டவலீல்லாம் கொறையும். மாத்திரையை நீட்டினாள் ரேவதி.தோழியின் வலி தனக்கு வலிப்பதாய்த் தவித்தது ரேவதியின் மனது.
வாய்விட்டு அழுதுவிட்டாள் சாரு..குலுங்கியது உடல்..
ரேவி..ரேவி..எங்கிட்ட இவ்ளவு ஃப்ரெண்டா ஸ்னேகமா அன்பா இருக்கியேடி ரேவி..நா நா என்னடி பண்ணப்போறே ஒனக்கு?..நா நா ஒரு அனாதடி..
அப்பா இருந்தும் அனாதடி ரேவி..
சாரூ..அழாதடி.. அழாதடி சாரூ..நீ அழுதா என்னால தாங்க முடியாதுடி.. தபாரு சாரு..த பாரேன்..
நீ அனாத இல்லடி..
நா எப்பவும் ஒனக்காக இருப்பேண்டி..ஒன்னோட இருப்பேண்டி..ஏய்..சாரு..
நீயும் நானும் வேறவேற இல்லடி சாரு..நீ எப்பவும் எனக்கு ஃப்ரெண்டா இருந்தா அதுவே எனக்குப் போறும்டி சாரு..
நீதாண்டி நா..நாதாண்டி நீ..
நா அப்டிதாண்டி சாரு நெனைக்கிறே..நீ அப்பிடி நெனைக்கிலயாடி சாரு?
குலுங்கி அழும் தோழியைத் தோழமையோடு கட்டிக் கொண்டாள் ரேவதி.
ஆமாண்டி ரேவி..நா ஒ நெழலா இருப்பேண்டி..
நீதாண்டி நா..நாதாண்டி நீ..
நீயும் நானும் பிரியவே கூடாதுடி சாரு..
ஆமாண்டி ரேவி..நாம ரெண்டுபேரும் பிரியவே கூடாதுடி ரேவி..
பாவம் பத்தே வயதான தோழிகளுக்கு வாழ்க்கை யென்றால் என்னவென்றும்..
ஒவ்வொருவரின் வாழ்க்கை யையும்.. எதிர்காலத்தையும்..
காலம்தான் தீர்மானிக்கிறது..
அந்தக்காலம் தங்கள் இருவரின் வாழ்க்கையிலும் எப்படியான மாற்றங்களை செய்யத் தீர்மானித்திருக் கிறது என்றும் எப்படி அறிவார்கள்?
இந்தப்பத்துவயதுத் தோழிகள் மட்டுமல்ல பூமியில் பிறந்த யார்தான் தங்கள் வாழ்க்கையின் எதிர்காலம் பற்றி அறிவார்கள்?அனைத்துமே.. காலமோ/விதியோ/கடவுளோ ஏதோ ஒன்றான..அதன் கைகளில்.
அந்த ஏதோ ஒன்று வெகுசீக்கிரத்திலேயே தங்களைப் பிரிக்கப் போவதையும்..அந்தபிரிவுக்குப் பிறகு தாங்கள் சந்திக்கவே போவதில்லை யென்றும்..
ஆனாலும்.. அவள் இவள் நிழலாகவும்.. இவள் அவள் நிழலாகவும் வாழப்போவதை ஏற்கனவே அந்த ஏதோ ஒன்று தீர்மானித்து வைத்திருப்பதையும் அந்த சின்னஞ் சிறு தோழிகள் எப்படி அறிவார்கள்.
– தொடரும்…
![]() |
பெயர்: காஞ்சி.தங்கமணி சுவாமிநாதன். ஊர்: காஞ்சிபுரம். காஞ்சி.தங்கமணி சுவாமிநாதன் எனும் நான் ஓர் பெண். தங்கமணி எனும் பெயர் ஆண்/பெண் இருபாலருக்கும் பொருந்துவதால் வாசகர்கள் குழம்பிப்போகிறார்கள். அதனால் தான் விளக்கம் தந்துள்ளேன். நிறைய சிறுகதைகள், தொடர்கதைகள், ஆன்மிகக் கதைகள், சிறார்களுக்கான கதைகள், கவிதைகள் வாராந்திர அச்சு ஊடகங்கள், மின்னிதழ்களில் காஞ்சி.தங்கமணி சுவாமிநாதன் என்ற பெயரில் எழுதியுள்ளேன்..தற்போதும் எழுதிவருகிறேன். கதைகள்: காஞ்சி.தங்கமணி சுவாமிநாதன்மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
அடடா மழைடா… அடைமழைடா?
வளர்கவி
October 24, 2026
வீடு பேசும் நினைவுகள்
கல்பனா ராஜகோபால்
October 24, 2026
அழகு சிரிக்கிறது
இரா.துரைமாணிக்கம்
October 24, 2026
