உண்மை சுடும்
மஞ்சுவோடு பல காலமாக மிகவும் உறவு நெருக்கத்துடன் மனம் திறந்து பேசிப் பழகியிருப்பது போல், அவள் சிறிதும் எதிர்பாராத விதமாகத் தொலைபேசியில், தனபாலன் சரளமாகக் குரலை உயர்த்திப் பேசுவதைக் கேட்டவாறே அவள் ஒன்றும் பேசத் தோன்றாமல் வாய் அடைத்துப் போய் மெளனமாக நின்றிருந்தாள். அவர் முகம் கூடச் சரியாக அவளுக்கு ஞாபகமில்லை. .நெருங்கிய உறவாக இருந்தாலும் அவள் மீது உண்டான புரிந்துணர்வற்ற பேதமைப் போக்கினால், அவர் மட்டுமல்ல அவள் கணவன் சார்பான எல்லா உறவுகளுமே இருள் கவிந்து மூடிப் போன நிழலின் சுவடுகள் தான்.
இதில் புரையோடிப் போயிருக்கிற உச்சக் கட்டத் துயரமான காலப் பதிவுகளில் நசிந்து உருக்குலைந்து வேர் கழன்று போகாமல் அவள் தனக்கேயுரித்தான உயிரின் சத்தியமே பெரிதென நம்பி, உறவின் கறைகளில் சிக்கிப் பங்கமுற்றுப் போகாத, சாகாவரம் பெற்ற சாந்தி யோகமே மிகவும் சிறந்ததென எண்ணி அன்பு வழி ஒன்றே வாழ்வெனக் கருகின்ற ஓர் இலட்சியப் பெண் அவள்
அவளுக்கு முன்னால் அன்பின் சுவடு வற்றிப் போன, இருள் ஊடுருவி மறைக்கின்ற,, வெகு தொலைவில், மங்கலடித்து வெறிச்சோடிக் கிடக்கிற அவரும் அவர் போன்ற மனிதர்களும் நினைவில் எழாத நிலையிலேயே அவர் தன்னை இனம் காட்டிப் பேச முயன்றது அவளுக்குப் பெரும் வியப்பாக இருந்தது.. அவள் சட்டென அவரை நினைவு கூர முயன்று, முடியாமல் போகவே, திரும்பக் கேட்டாள்.
“ஆர் தனபாலனா? எனக்குத் தெரியேலையே ஆரென்று சொல்லுங்கோ”
“என்ன இப்படிக் கேட்கிறியள் . உங்கடை அவருக்கு நான் மச்சான்.. அவரின் தங்கை பாமாவைத் தெரியாதே அவளின்ரை புருஷன் தான் நான்”
“ஓ! இப்ப தான் ஞாபகம் வருகுது.. என்ன விஷயம் ?சொல்லுங்கோ”
“உங்களுக்குத் தாங்ஸ் சொல்லுறன்”
“எதுக்கு?”
“ஒரு பெரிய சாதனை செய்திருக்கிறியள். எல்லாம் இதுகளோடு பொறுமையாக ஓர் ஒன்றரை வருடம் வாழ்ந்திருக்கிறியளே!. ஆருக்கு வரும் இந்தப் பொறுமைக்குணம்? எப்படி முடிஞ்சுது உங்களாலை?”
அவர் குரல் சூடேறித் தன்னை மறந்த ஆவேசத்துடன் நிலை தடுமாறி மனம் குழம்பிப் பேசுவதை இடையில் குறுக்கீடற்ற மெளனத்துடன் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தாள். அவள்… அவர் ஏன் இதையெல்லம் சொல்ல வருகிறார் என்று புரியாமல் அவள் மனம் குழம்பினாள். மீண்டும் அவரே பேச்சைத் தெடர்ந்தார்.
“என்ன? ஒன்றும் கதைக்கிறியளில்லை. எனக்கு என்ன நடந்ததென்று கேட்க மாட்டியளே?”
“நான் வம்பிலை மாட்டிக் கொள்ளுறதில்லை”
“இதை வம்பு வழக்கென்று ஏன் நினக்கிறியள்? இது எங்கடை குடும்பப் பிரச்சனை. நீங்களும் இந்தக் குடும்பத்திலை ஓர் அங்கத்தவர் மட்டுமில்லை இதுகளோடு வாழ்ந்து அனுபவிச்ச உங்களுக்கு நான் சொல்ல என்ன இருக்கு? சரியான காட்டுமிராண்டிச் சனங்கள்.. இதுகளோடை எப்படி வாழ்ந்தனீங்கள்? எப்படி முடிஞ்சுது உங்களாலை? சீ! என்ன மனிசர் என்று நான் கிடந்து துடிக்கிறன்.. கொழும்புக்கு வந்தும் என்ரை மச்சானோடு பெரும் ரகளையாய் போச்சு.. ஒரே வீட்டிலை கொஞ்ச நாள் இருந்து பார்த்தம்.. முடியேலை. அவன் எங்களைக் கரைச்சல் படுத்தித் துரத்திப் போட்டான். இப்ப வீடு மாறி வந்திட்டம். இருந்தாலும் நீங்கள் பெரிய பொறுமைசாலிதான். அதுக்குத் தான் மறுபடியும் தாங்ஸ் சொல்லுறன்”
அவர் கூறுவது போல், அவள் அவர்களோடு சுமார் ஒன்றரை வருடங்களுக்கு மேலாகப் பொறுமை காத்து வாழ்ந்து முடித்தது ஒரு பெரிய சாதனை தான் அவளைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல், அன்பற்ற ஒரு கடும் போக்கில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தித் தன்னைத் தண்டித்து விட்ட கொடுமைகளை இன்னும் தான் அவள் மறந்து விடவில்லை.. அதைப் பகிரங்கப்படுத்தி நீதி கேட்டு அவள் வழக்குத் தொடுத்திருந்தால் என்றோ அவள் கல்யாண வாழ்க்கை சேறு பூசிக் கொண்டு பாதியிலேயே முடிந்து போயிருக்கும்
அது நடந்து ஒரு யுகத்துக்கும் மேலாகிறது. இனி அதைப் பற்றிப் பேச என்ன இருக்கிறது? “நான் தீக்குளித்த உண்மைகள் என்னுடனேயே எரிந்து சாம்பலாகிப் போகட்டும் “
இன்று அப்படிப் பேச நேர்ந்த கட்டத்திலும், அவள் இயல்பான அன்பு கருதி அவரிடம் எதுவுமே சொல்ல வராமல், நீண்ட நேரமாக மெளனமாகவே இருந்தாள் அவள் வெளிப்படையாக வாய் திறந்து, தனது வாழ்க்கை பற்றிய, கசப்பான உண்மைகளை அவரிடம் கூறத் தொடங்கினால், இப்போது அவர் தூக்கியிருக்கிற போர்க் கொடிக்கு அது மேலும் உரமூட்டுவதாய் அமைந்து விடுமே .அப்படியாகுமானால் அவள் அன்புக்கு என்ன பொருள்? பகையை விட அன்பே சிறந்ததென்று நினைக்கையில் அவளுக்கு எதுவுமே பேச வரவில்லை. அவள் மனம் திறந்து அவரிடம் எல்லா உண்மைகளையும் மறைக்காமல் கூறி விட்டால், நிச்சயம் பாமாவுக்கே இது பெரும் பிரச்சனையாகப் போகும். அவர்கள் வீட்டில் மேலும் ஒரு பிரளயமே வெடிக்கும்.
இப்படிப் பகை வளர்த்துச் சண்டைத் தீ மூட்டுவதை மஞ்சு என்றைக்குமே விரும்பியதில்லை.. அப்பாவால் அவர் போதனைகளால் அவள் வளர்க்கப்பட்ட விதம் அப்படி. அது அவளுடைய அன்பையே முதன்மைப்படுத்தி வாழும், வாழ்க்கை நெறிகளின் உன்னதமான உயிர் வழிபாடு.. இந்நிலையில் முன்பு பாமா செய்த படு மோசமான காரியங்களுக்காக, அவளைப் பழி வாங்கி வஞ்சம் தீர்த்துக் கொள்கிற கெட்ட சுபாவம் இப்போது கூட அவளிடம் வரவில்லை
அதற்குப் பதிலாக உயிர் நேசம் ஒன்றே குறியாகப் பாமாவை வாழ வைக்கும் பெருங்கருணையோடு அவரை ஆறுதல்படுத்த எண்ணி உருக்கமாக அவள் கூறினாள்
“ வாழ்க்கையில் இப்படி எத்தனையோ தவறுகள் நடக்கும் . இருக்கிறது கொஞ்ச நாட்களுக்குத் தான். வீணாகச் சண்டை போட்டு என்ன ஆகப் போகுது? விடுங்கோ. எல்லாத்தையும் மறந்திட்டு வாழப் பாப்பம்”
“என்ன விடுறதே? நல்ல கதை சொல்லுறியள் . உங்களுக்கு இது வேண்டுமானால் சரியாய்ப் படலாம் .இவன்களை இப்படியே விட்டால் என்ன நடக்கும் தெரியுமே?
“வேறென்ன நடக்கப் போகுது பகைப் புதை குழிக்குள் எல்லாரும் விழுந்து சாக வேண்டியது தான்”
“ சாவுக்குப் பயந்தால் வாழ முடியுமே?அநியாயத்தைத் தட்டிக் கேட்காவிட்டால் எல்லாம் எல்லை மீறிப் போய் விடும்
“”அநீதி தலையெடுக்கும் போது கடவுளே தோன்றுவார். தண்டிப்பார் என்று நீங்கள் கேள்விப்பட்டதில்லை.. எல்லாம் அவர் பார்த்துக் கொள்வார்”
அவள் சொல்லி முடிக்கவில்லை அதைக் கேட்கப் பிடிக்காமல் அவர் ஆவேசம் கொண்டு போனை வைக்கும் சத்தம் அக்கரையிலிருந்து கனதியாகக் கேட்டது
அவர் அவளோடு போனில் பேசியது மேல் போக்காக நன்றி கூற மட்டுமல்ல அவளின் வாயைக் கிளறித் தான் கலகம் மூட்டிச்சண்டை போட இரை தேடியே அவர் ஆடிய இந்த நாடகமும் பேசிய வார்த்தைகளும் தோல்வியிலேயே முடிந்து போயின.
அவர் போல் சகதி குளித்துச் சேறு பூசிக் கொள்ள வராமல் கரை ஒதுங்கிப் போன அவளின் ஒளி மயமான தனிமைஉலகம் அவருக்குப் பிடிபடாமல் கண்களில் ஒட்ட மறுத்தது.. அது வேறாகக் கறையற்ற அன்பு வழியிலேயே இருப்புக் கொண்டிருப்பதை அவரால் எப்படித் தான் அறிந்து கொள்ள முடியும்? அதை விட வாய் வேதமாக அவள் கூறி விட்ட அன்பு பற்றிய போதனை அவருக்குப் பெரும் மன எரிச்சலையே அளித்தது.
அவர் எதிர்பார்த்துக் காத்திருந்தது போல ,அவளும் அவர் வழியில் சகதி குளித்துச் சேறு பூசிக் கொள்ள நேர்ந்திருந்தால் மூண்டு இன்னும்,சுவாலை விட்டு எரியப் போகிற கலகத் தீக்குள், விழுந்து முழுவதும் எரிந்து போகப் போவது பாமா மட்டும் தான்.. அவள் அப்படி எரிந்து போகக் கூடாதென்று கருதியே மஞ்சுவின் இந்த அதி உச்சக் கட்ட அன்பு வழிபாடு அதை ஒரு குறையுமில்லாமல் நல்லபடி நிறைவேற்றி விட்ட நிலையில், இது பற்றி அறிய நேர்ந்தால் பாமாவின் மனம் தன் பக்கம் திரும்புமா என்று புரியாமல் மஞ்சு இருட்டில் உறங்காமல் விழித்துக் கிடந்தாள்… நாளை உதயம் வெளிக்குமா என்று தெரியவில்லை
பாமா இன்னும் திரை விலகாது இருட்டிலேயே அடைபட்டுக் கிடப்பதாக அவளுக்கு உணர்வு தட்டிற்று.. ஒன்று கூடி ஒரே வீட்டில் இருந்த போது அப்படித் தான் நடந்து கொண்டாள்.. அவளைப் பொறுத்த வரை மஞ்சுவின் கறையற்ற அன்பும் நன்னடத்தைகளும் வெறும் புறம் போக்குக் கருந்தீட்டுகள் தாம். எப்போதுமே அவள் வேண்டாத விருந்தாளி தான் அவர்களுக்கு
இன்று மட்டும் மஞ்சு தன்னைப் பகை கொண்டு தாக்காமல் அன்பு வழியில் தன்னைக் காப்பாற்றி வாழ வைத்ததை எண்ணி அவள் மனம் திருந்தி மஞ்சுவை அவள் வழியில் புரிந்து கொள்ளப் போகிறாளா என்ன
அது ஒரு போதும் நடக்காதென்றே மஞ்சு மிகவும் கவலையுடன் நினைவு கூர்ந்தாள்.. தன் வாழ்வில் நேர்ந்த துன்பகரமான பாவக் கணக்கு முடியும் வரை பாமாவும் அவள் சார்ந்த மனிதர்களும் இப்படித்தான் இருப்பார்களென்று அவளுக்கு உறைத்தது… அவர்களோடு வாழ்ந்த பாவ வாழ்க்கைக்குப் பரிகாரமாகத் தீக்குளித்துக் குளித்தே அன்பின் உயிர்ச் சுவடு வற்றிப் போகாத , உள்ளார்ந்த பெருமைகளோடு தான் புடம் பெற்று வாழவே இந்தப் பாவக் கணக்கும் அதன் மனிதர்களும் என்ற எண்ணமே அவளுக்கு ஆறுதலை அளித்தது
– மல்லிகை (ஜூலை 2008)