இழந்தது யார்?
கதையாசிரியர்: லக்ஷ்மி
தின/வார இதழ்: கலைமகள்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: January 25, 2026
பார்வையிட்டோர்: 3,440
(1952ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
வண்டி புறப்படச் சில நிமிஷங்கள்தாம் இருந்தன. கெளசல்யா தன் கடிகாரத்தை உற்றுப் பார்த்துவிட்டு அருகில் நின்ற தன் சிநேகிதி பக்கம் திரும்பினாள். ‘தேவகி, என்னால் நம்பவே முடிய வில்லை. கலாசாலையில் படிக்கும்பொழுது நீ கொண்டிருந்த லட்சியங்கள் எவ்வளவு! வாழ்க்கையைப்பற்றி இருந்த ஆசைகள் எத்தனை! அவை அனைத்தும் இப்படி உருக்குலைந்து போயிருப்பதைக் காண என் மனம் மிகவும் வேதனைப்படுகிறது” என்றாள்.
அந்த வார்த்தைகள் தேவகியைத் திடுக்கிடச் செய்தன. “நீ சொல்வது ஒன்றும் எனக்கு விளங்கவில்லையே! ஏன்? என் வாழ்க்கையில் என்ன குறை இருக்கிறது? அன்பான கணவர், நல்ல குழந்தைகள், இன்பமான குடும்பநிலை – இதைவிட நான் வாழ்க்கையில் அதிகம் என்ன எதிர்பார்க்க முடியும்? என்னைப் பொறுத்தவரை நான் சந்தோஷமாகத்தான் இருக்கிறேன். இப்படியே இருந்தால் போதும்” என்றாள், எரிச்சலும் படபடப்பும் நிறைந்த குரலில்.
“குடும்பம்! செக்கிலே கட்டிய மாடுகள்போல் குடும்பத்தில் உழன்று வாழ இந்த நாட்டில் கோடானுகோடிப் பெண்கள் இருக் கிறார்களே! ஆனால் தேவகி, நீயும் அந்தக் கோடிக்கணக்கான பெண் களில் ஒருத்தியாகி விட்டதைக் காண என் மனம் என்ன பாடு படுகிறது தெரியுமா? உனக்குக் கிட்டிய அரிய சந்தர்ப்பத்தைப் பாழ்படுத்திக் கொண்டுவிட்டாய். அன்று கலாசாலையில் நீ எண்ணியிருந்த லட்சியங்களை உறுதியாகப் பற்றிக்கொண் டிருந்தால், இந்தக் கௌசல்யாவின் பதவியிலே தேவகியல்லவா இருந்திருக்கவேண்டும்?” என்று அவள் மேலே பேசி முடிவதற்குள் முதல் மணி அடித்துவிடவே பரபரப்புடன் சிநேகிதியிடம் விடை பெற்றுக்கொண்டு இரண்டாவது வகுப்புப் பெட்டிக்குள் பாய்ந்து ஏறிக்கொண்டாள்.
வண்டி புறப்பட்டுச் சென்ற பின்பு தேவகி ஸ்டேஷனை விட்டு வெளியே வந்தாள். திடீரென்று தன் உடல் சக்தியை இழந்துவிட்டது போல் அவளுக்கு ஒரு விதமான சோர்வு உணர்ச்சி ஏற்பட்டது.
ஜவுளிக் கடைக்குத்தானே?” என்று டிரைவர் கந்தசாமி எஜமானியைக் குறிப்பாகக் கேட்டான். கௌசல்யா கூறிய அந்த வார்த்தைகள் காதிலே இன்னமும் ரீங்காரம் செய்துகொண் டிருந்த தனால், டிரைவரின் கேள்வி அவள் காதுகளில் படவில்லை.
”அம்மா, ஜவுளிக் கடைக்குத்தானே?” என்று மீண்டும் உரத்த குரலில் அவன் கேட்டான் கனவினின்று விழித்துக் கொண்டவள்போல் “ஆமாம்!” என்றாள் அவள்.
குழந்தை சித்திராவுக்கு என்ன விதமான உடைகள் வாங்குவது. தனக்கு என்ன தினுசுப் புடைவை எடுப்பது என்றெல்லாம் பத்துத் தினங்களுக்கு முன்பு பலவாறு கற்பனை செய்துகொண் டிருந்தாள். அந்த உற்சாகமும் ஆவலும் அன்றைத் தினம் அவளிடம் காணப்பட வில்லை. மனத்திலே கசப்பும் சோர்வும் நிறைந்திருந்தன.
பண்டிகைக்கு இரண்டு தினங்களே இருந்ததால் ஜவுளிக் கடையில் பெண்களின் கூட்டம் மிகவும் அதிகமாக இருந்தது. கடையிலிருந்து ஜவுளி தினுசுகளைப் பெரிய பொட்டலமாகச் சுமந்துகொண்டு இறங்கி வந்தாள், என்ஜினீயர் சதாசிவம் அவர்களின் மனைவி.
“இந்தக் கூட்டத்திலே நிதானமாக எதுவும் பார்த்து வாங்க முடியாது போலிருக்கிறது. என்னவோ கண்ணுக்குப் பிடித்த இரண்டு புடைவையை எடுத்துக்கொண்டேன். நீ இந்த வருஷம் என்ன தினுசு வாங்கப் போகிறாய்? கொள்ளேகாலமா? மைசூரா? என்று வினவினாள். தேவகி, அசட்டுப் புன்னகை செய்தாள். இன்னமும் ஒன்றும் தீர்மானிக்கவில்லை. ஏதாவது வாங்கினால் போச்சு” என்றாள். விரக்தியாக.
“தேவகி, உன்னைப் போன வெள்ளிக்கிழமையே பார்த்துப் பேசணும்னு ஆசைப்பட்டுக்கொண் டிருந்தேன். இந்த வருஷம் நம் கிளப் விழா ரொம்ப அற்புதமாக நடந்துவிட்டது. அந்தக் சௌசல்யா இவ்வளவு அழகாகப் பேசுவாள் என்று நான் நினைக்கவே இல்லை. ரொம்பப் பிரமாதம். ஆமாம்! கௌசல்யா உன்னுடைய அந்தரங்கத் தோழியாமே? இப்படிப்பட்ட பிரபலமான பெண்மணியைத் தோழி என்று சொல்லிக்கொள்ள உனக்கு ரொம்பப் பெருமையா இருக்கணும். என் சிறிய பொண் ரகுஜா, கௌசல்யா, கௌசல்யான்னு அந்தம்மா மேலே ஒரே பைத்தியமா ஆய்விட்டாள். அவளுடைய காலேஜ் தினத்திற்குக் கௌசல்யாவைக் கூப்பிட்டுப் பேசச் சொல்லப் போகிறாளாம்: அதற்கு நீதான் உதவி செய்யணும்” என்றாள்.
“காலேஜ் மாணவிகளுக்குப் பேசுவதென்றால் கௌசல்யாவுக்குப் பிடித்தமான விஷயம். கூப்பிட்டால் வந்து பேசுவாளே. அதற்கு என் உதவியே தேவையில்லை” என்றாள் தேவகி.
***
கடைக்கரான் நானாவிதமான பட்டுச் சேலைகளை எடுத்துப் பாயின் மீது விசிறிப் போட்டுக்கொண் டிருந்தான். பாயின்மீது ஒன்றின் பின் ஒன்றாக அடுக்கிக் கிடந்த பல வர்ணச் சேலைகளில் தேவகியின் கண்கள் லயிக்கவே இல்லை.
குழந்தை சித்திராவுக்கு நீல நிறத்திலே ஒரு பாவாடையை அவசரமாக எடுத்துக்கொண்டு எழுந்தாள்.
”அம்மாவுக்கு ஜவுளி?” என்று கடைக்காரன் குசலம் விசாரித்தான்.
“பிறகு வருகிறேன். குழந்தை பாவாடைதான் முக்கியம். தீபாவளிக்குள் தையல்காரன் கொடுக்க வேண்டுமே! அதனால்…” என்று மென்று விழுங்கிவிட்டு வெளியே வந்தாள்.
வழியில் தையற்கடையிலே பாவாடையைத் தைக்கக் கொடுத்து விட்டு வீட்டுக்குள்ளே நுழைந்தாள். எப்பொழுது வருவாள் என்று காத்திருப்பவன்போல் வேலைக்கார முத்து வாயிலில் நின்றிருந்தான்.
“ஹால் விளக்கை ஏத்தினேன். போட்டுனு அவிஞ்சு போச்சு. வீடு முழுக்க ஒரு விளக்குக்கூட எரிமாட்டேங்குது. கரண்டுலே ஏதோ மிஷ்டேக் ஏற்பட்டாப் போல இருக்குது” என்றான்.
“நாசமாப் போச்சு! கரண்டிலே கோளாறு ஏற்பட்டிருந்தா யாராவது எலக்ட்ரீஷியனைக் கூப்பிட்டுக்கொண்டு வந்து ரிப்பேர் செய்கிறதுதானே? விளக்கில்லாமல் ராத்திரிப் போது எப்படிப் போகும்?” என்றாள் தேவகி, எரிச்சலுடன்.
அதற்குள் குழந்தை சித்திரா உள்ளே யிருந்து ஓடி வந்தாள். “MILIT! ரகுவுக்கு அப்பா நல்ல பூசை கொடுத்தார். அவன் கோவிச்சுண்டு, மேஜை மேலே இருந்த அலாரம் கடியாரத்தை வீசி எறிந்து உடைச்சுட்டான். உன்கிட்டச் சொல்வேன்னா. சொல்லிக்கோ பயமில்லைன்னு கத்தறான்” என்று புகார் செய்தாள்.
தேவகிக்கு ஆத்திரத்தில் நெஞ்சுப் படபடப்பு அதிகரித்தது. தலையைப் பிடித்துக்கொண்டு சோபாவிலே தொப்பென உட்கார்ந்தாள். “சித்த வெளியிலே போய்விட்டு வருவதற்குள் இத்தனை அமர்க்களமா? ரகுவை அப்பா எதற்காக அடித்தாராம்?” எரிச்சலுடன் கேட்டாள்.
“ராமேசம் மாமா பங்களாவுக்குப் போய்ச் சண்பக மரத்திலே ஏறித் திருட்டுத்தனமாப் பூப் பறிச்சிண் டிருந்தானாம். ராமேசம் மாமா மாடியிலிருந்து பார்த்துட்டாராம். இவன் பயந்துகொண்டு தொப்புனு குதிச்சு ஓடி வந்துட்டானாம்” என்று சித்திரா தட்டுத் தடுமாறி விவரிப்பதற்குள் முத்து குறுக்கிட்டான்.
“மரத்திலே ஒரு பெரிய கிளை அப்படியே முறிஞ்சு போயிடுச்சு. ராமேசம் ஐயாவுக்குத் தோட்டம்னா உயிர் இல்லீங்களா? விடுவிடுன்னு ரகு பின்னாலேயே இங்கே வந்துட்டார். ஐயா ஆபீஸிலிருந்து அப்பத் தான் வந்தார். ராமேசம் ஐயா சொன்னதும், மாடியிலே ஒலிஞ்சுக் கிட்டிருந்த ரகுவைப் பிடிச்சு இழுத்துவந்து அந்த ஐயாவுக்கு முன்னா டியே செம்மையா உதைச்சுட்டார்” என்றான்.
ஆத்திரம், கோபம், துக்கம் எல்லா உணர்ச்சிகளும் ஏக காலத்தில் தேவகியின் உள்ளத்திலே கொந்தளித்தன. ரகுவின் விஷமத்தைப் பற்றி மேலே பேசாமல், “ஆமாம்! அப்பா எங்கே?” என்று மட்டும் கேட்டாள்.
“அப்பா டிபன்கூடச் சாப்பிடலை. கோபமா இருந்தார். எங்கே போயிருக்கேன்னு கேட்டார். கடைக்குப் போயிருக்கேன்னு சொன்னேன். வேறே வேலையென்ன உங்கம்மாவுக்கு என்று கத்தினார். அப்புறம் எங்கேயோ வெளியே போயிருக்கார்” என்று திக்கிக் கொண்டு முடிந்தாள் குழந்தை சித்திரா.
விஷயத்தைக் கேட்ட தேவகிக்கு ஆத்திரம் தாள முடியவில்லை. “லைட்டுக்கு ஏதாவது ஏற்பாடு பண்ணேன்! இங்கே வாயைப் பார்த்துக் கொண்டு ஏன் நிற்கிறாய்?” என்று முத்துவின்மேல் எரிந்து விழுந்தாள்.
சமையலறையினின்று எட்டிப் பார்த்த சமையற்கார அம்மாவின் முகம் அவளது வரவை ஆவலுடன் எதிர்பார்த்திருந்ததுபோல் காணப் பட்டது. நீ என்ன புகார் சொல்லப் போகிறாய்? சொல்லித் தொலை!’ என்று தேவகியின் உள்ளம் அதைக் கண்டு குமுறியது?
“ரகு சாயங்காலம் டிபன்கூடச் சாப்பிடல்லையம்மா: காபி டம்ளரை என் மூஞ்சியிலே விழறாப்பலே விட்டெறிஞ்சுட்டான். எஜமானும் ஒண்ணும் சாப்பிடலை. சாயங்காலம் சிரமப்பட்டுப் பண்ணின டிபன் முழுதும் அப்படியே ஆறிக் கிடக்கிறது” என்றாள். கீச்சுக்குரலில்-
டிபனைக் கொண்டு குப்பைத் தொட்டியிலே போடுங்கோ. பண்டம் பாழ்! இந்த வீட்டை விட்டுச் சித்தெ வெளியிலே போயிட்டா இத்தனை அல்லோலகல்லோலமா? செக்கு மாடுபோலத்தான் இருக்கு என் பொழைப்பும்” என்று கூச்சலிட்ட தேவகி மாடிப்பக்கம் விரைந்தாள்.
காலடிச் சப்தம் கேட்டதும் தொட்டிலில் படுத்திருந்த அவளது கைக்குழந்தை மது விழித்துக்கொண்டுவிட்டான். தாயைக் கண்டதும் தன்னை எடுத்துக்கொள்ளச் சொல்லி ஆர்ப்பாட்டம் செய்து அழத் துவங்கினான். “நீ ஒருவன் தான் பாக்கி என்று நினைத்தேன். நீயும் சமயத்துக்குத் தொல்லை கொடு” என்று முணுமுணுத்த தேவகி குழந்தையை எடுத்துக்கொண்டு அங்கிருந்த ஆசனமொன்றில் அமர்ந்ன்.
அறையிலே பரவி நின்ற இருள், அவளது உள்ளத்திலே கொந்தளித்துக்கொண் டிருந்த ஏக்கத்தை இன்னும் அதிகப்படுத்தியது. எவ்வளவோ கட்டுப்படுத்தியும் அவளையும் மீறிக் கண்ணீர்த் துளிகள் அவள் கன்னங்களின் மீது உருண்டோடின.
கௌசல்யா கூறியது எவ்ளவு பொருத்தம்! இப்படிச் செக்கு மாடு போல வாழும் வாழ்வு யாருக்குத்தான் கிட்டாது? ஆனால் கௌசல்யாவைப் போன்ற புகழ்பெற்ற மேதையாக வரும் பாக்கியம். எல்லாப் பெண்களுக்கும் கிட்டிவிடுமா? கௌசல்யா அசோகா பெண்கள் கலாசாலையில் ரசாயனப் பேராசிரியராக இருந்தாள். கல்வித் துறையிலே புகழ் பெற்ற பெண்மணி. ரசாயனப் பகுதியைப் பிரத்தியேகமாக அமெரிக்காவுக்குச் சென்று படித்திருந்தாள். தனது ஆராய்ச்சி ஒன்றிற்காகச் சமீபத்தில் அவள் டாக்டர் பட்டமும் பெற்றாள்.ரசாயனத்தைப்பற்றிப் புத்தகம் ஒன்றை வெளியிட்டு மிகவும் புகழ் அடைந்திருந்தாள். பெண்கள் முன்னேற்றத்துக்கு அரும் பாடுபட் டுக்கொண் டிருந்த தன் தோழியை அந்த வருஷம் ரத்னகிரி மாதர் சங்க ஸ்தாபன தினத்துக்குத் தலைமை வகிக்க அழைக்கலாம் என்று தேவகி தான் ஏற்பாடு செய்தாள். ஊரில் பல பெரிய மனிதர்கள் வீட்டுப் பெண்மணிகள் கௌசல்யாவை விருந்தாளியாக ஏற்றுக்கொள்ள ஆவ லாக இருந்தும், புகழ்பெற்ற மேதை கெளசல்யா தன் அந்தரங்கத் தோழி என்று உரிமை பாராட்டிக்கொள்ளவேண்டும் என்ற போலிக் கௌரவம் காரணமாகத் தேவகி அந்தப் பொறுப்பைத் தானே ஏற்றுக் கொண்டாள்.
தன் சிநேகிதியை வரவேற்க அவள் ஸ்டேஷனுக்குச் சென்றிருந் தாள். இரண்டாவறு வகுப்புப் பெட்டி ஒன்றிலிருந்து. முகத்தில் பாதியை வெள்ளைப் பிரேம் இட்ட கறுப்புக் கண்ணாடி மறைக்க, வெண் ணிற ஜார்ஜெட் சேலைத் தலைப்பு தரையைப் பெருக்கியபடி பின்னால் நீண்டு தொங்க, உயர்ந்த பாதம் வைத்த குதிகால் பாதரட்சையில் நடனம் ஆடுகிறவள் போல் தத்திக்கொண்டு மெலிந்த தோற்றமுடைய ஒரு பெண்மணி வந்து இறங்கினாள்: பூமாலை அவள் கழுத்தில் தொப் பென வந்து விழுந்தது. “தேவகி! நீ எவ்வளவு மாறிவிட்டாய்!” என்று கேட்ட சிநேகிதி அவள் கரத்தைப் பற்றிக் குலுக்கினாள்.
வருடங்கள் ஒருவருடைய தோற்றத்துக்கு மாறுதல் விளைவிப்பது போல் மனத்திலும் செயலிலும் எவ்வளவு மாறுதலை உண்டாக்கக்கூடும் என்பதைத் தேவகி தோழியிடம் கண்டாள். வாழ்விலே வேறு கோணங் களைப்பற்றிச் சிந்திக்காமல் ஒரே திக்கிலே தன் அறிவாற்றலைச் செலுத்திக் கொண்டிருந்ததாலோ என்னவோ, கௌசல்யாவிடம் சில குறைகன் நன்கு புலப்படக்கூடிய வகையில் தெரிந்தன. தன் படிப்பிலும் புகழிலும் அவளுக்குக் கர்வம் ஏற்பட்டிந்தது தன் குறைகள் பிறருக்கு இடைஞ்சலாக இருக்கும் என அவள் சிறிதும் நினைக்கவே இல்லை.
தன் சிநேகிதி புதிதாகத் தன் வீட்டுக்கு வந்திருக்கிறாளே என்று அன்றிரவு பலமான விருந்துக்கு ஏற்பாடு செய்தாள் தேவகி. பாதாம் கீரா? ஐயோ, எனக்கு வேண்டாம். நான் கையால்கூடற் தொடுவதில்லை. எதற்கு இதெல்லாம்? ஆமாம்! ஒரு ஜிலேபியை அப்படியே சாப்பிட்டுவிட்டாயே! நாக்கைக் கட்டாது இப்படி மித மிஞ்சிச் சாப்பிடுவதால்தான் நீ பலூன் மாதிரி ஊதிக் கிழவி போல் தளர்ந்துவிட்டாய். என்றாள், வெடுக்கென்று. தேவகிக்குச் சுருக் கென்றது.
“என்னைப் போல் மூன்று குழந்தைகளுக்குத் தாயானால் அதற்குப் பிறகு நீ தேகக்கட்டையும் இளமையையும் பற்றிப் பேசமாட்டாய்!” என்று சுடசுடப் பதில் அளிக்கவேணுமென்று தேவகிக்குத் தோன்றியது. மேலே விவாதிக்க விருப்பமில்லாது பேசாமல் இருந்து விட்டாள்.
***
மறுதினம் ஊரைச் சுற்றிப் பார்க்கத் தோழியை அழைத்துக் கொண்டு வெளியே கிளம்பினாள் தேவகி. ஏற இறங்க அவளை ஒருமுறை உற்றுப் பார்த்த கௌசல்யா ஆச்சரியத்துடன், ‘இது என்ன புடைவை? இது என்ன ஜாக்கெட்? பொருத்தம் ஏதாவது இருக்கிறதா பார்! தலையை இப்படியா வாரிக்கொள்வது? போய் நல்லதாக உடுத்திக் கொண்டுவா. உன்னோடு வெளியே வரக்கூட எனக்கு வெட்கமாக இருக்கிறது” என்றாள், அதட்டலாக.
தேவகியின் உடல் அவமானத்தால் குன்றியது: “குடும்பத் தொல்லை யில் இதையெல்லாம் கவனிக்கப் பொழுது எங்கே இருக்கிறது?” என்றாள், மென்று விழுங்கியவண்ணம்.
‘பூ! குடும்பம்! என்னைப் போல மூச்சு விட முடியாத வேலைகள் பல இருந்தால் நீ என்ன செய்வாயோ? அப்படி அலுவல்கள் பல இருந்தும், என்னைப்பற்றி ஒரு நாள்கூட நான் அசட்டையாக இருந்ததில்லை” என்று ஒரு பெரிய பிரசங்கம் செய்தாள் கௌசல்யா. முடிவில் தோழியின் இஷ்டப்படி ஆடை அலங்காரம் செய்துகொண்ட பிறகே தேவகி வெளியே செல்ல முடிந்தது.
கொண்டாட்டம் முடிந்த மறுதினம் கௌசல்யாவுக்குத் தொண்டை கட்டிக்கொண்டு லேசாகக் காய்ச்சல் வந்துவிட்டது. அவ்வளவு தான்! முகம் கழுவ வெந்நீர், கைகழுவ வெந்நீர் என்று அண்டா நிறைய வெந்நீர் போடத்தான் சமையற்காரிக்குச் சரியாக இருந்தது. எட்டு மணிக்கு மருந்து, ஒன்பது மணிக்கு ஆகாரம், பத்து மணி சுமாருக்குப் பழரசம் என்று நோயாளி போட்ட திட்டப்படி மருந்து எடுத்துக் கொடுத்துத் தேவகிக்கு இடுப்பு முறிந்துவிட்டது. அன்று காலை கௌசல்யா தான் ஊருக்குப் புறப்படுவதாகக் கூறியபோதே தேவகிக்கு அப்பாடா என்று நிம்மதியான மூச்சு வெளிவந்தது?
தோழி விவேகமின்றி நடந்துகொண்ட முறைகளைப்பற்றி அவள் தற்சமயம் பொருட்படுத்தவில்லை. அவள் கடைசியாகக் கூறிய வார்த்தை களின் கடுமையை நினைத்தே மனம் வருந்தினாள். ஆனால் அவள் கூறியது எப்படிப்பட்ட கசப்பான உண்மை? தேவகிமட்டும் குடும்பச் சகதியிலே உழலாமல் இருந்திருந்தால் கௌசல்யாவைக் காட்டிலும் பன்மடங்கு புகழை அடைந்திருப்பாள் என்பது முற்றும் உண்மை. தேவகி உண்மையில் எவ்வளவு பெரிய பாக்கியத்தை இழந்துவிட்டாள்!
***
காலடிச் சப்தம் கேட்டதும் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு தேவகி நிமிர்ந்து பகர்த்தாள். சீதாராமன் அறைக்குள் வந்து விளக்கைப் போட்டார். “லைட் ரிப்பேர் செய்து வெகு நேரமாகிறது. இன்னும் ஏன் இருட்டில் உட்கார்ந்திருக்கிறாய்?” என்று வினவினார்.
அவரைப்பார்க்கவோ பேசவோ விரும்பாத தேவகி, அப்படியா? குழந்தையைத் தூங்கச் செய்துகொண் டிருந்தேன்” என்று முணு முணுத்தவண்ணம், தன் அணைப்பிலே மீண்டும் துயிலில் ஆழ்ந்த மகனை எடுத்துத் தொட்டிலில் விட்டுப் பின்தொடர்ந்தாள்.
தந்தையின் அருகில் சித்ராமட்டும் உட்கார்ந்திருந்தாள். ரகுவைக் காணவில்லை. “ரகு சாப்பிட வராமல் பிடிவாதம் செய்கிறான்” என்று உட்கார்ந்த இடத்திலிருந்து சீதாராமன் கர்ஜித்தார்.
பின்கட்டு ஊஞ்சற் பலகைமீது குப்புறப் படுத்திருந்தான் ரகு. விளக்கொளியில் அவன் முதுகிலே படிந்திருந்த சிவந்த கோடுகளைக் கண்ட தேவகியின் நெஞ்சு பதறியது. மற்ற நாட்களாக இருந்தால் மகனை ஓடிப் போய் அணைத்துக் கண்ணீர் வடித்திருப்பாள். ஆனால் இன்று அவள் மனத்திலே இருந்த வெறுப்பும் ஏக்கமும் அவளது ஆத்திரத்தைத்தான் தூண்டிவிட்டன.
“என்னடா அழுச்சாட்டியம் பண்றே? எழுந்திரு” என்று அவனைப் பிடித்து உலுக்கினாள். ‘என்னை விடு. எனக்குச் சோறு வேண்டியதில்லை. போ நீ!” என்று கோபத்துடன் உறுமிய சிறுவனை, “நன்கறாப் பட்டினி கிடந்து சா!” என்று அதட்டிய தேவகி, மேலே வற்புறுத்தாமல் சமையற்கட்டுக்குச் சென்றுவிட்டாள்.
“ரகு சாப்பிட வரமாட்டேன் என்கிறானா?” என்று சீதாராமன் கோபத்துடன் கேட்டார்.
அதற்கு நேரிடையாகப் பதிலளிக்காமல், ஆமாம், அப்படித்தான் குழந்தையைப் போட்டு அடிப்பார்களா? சித்த வெளியிலே போய்விட்டு வரதுக்குள்ளே திமிலோகப்படுத்திவிட்டேளே?” என்று கேட்டாள்.
“துஷ்டப் பயல். அவமானம்! பிறத்தியார் வீட்டு மரத்திலே ஏறி பூவைத் திருடி.. சே !சே! என்ன பிள்ளை! குடும்பத்திலே இல்லாத பழக்கம்!” என்றார் சீதாராமன், வெறுப்பாக.
“ஏதோ வேடிக்கையாகச் செய்துவிட்டான். உங்களுக்கு மனத் தத்துவம் ஏதாவது தெரிந்தால்தானே? துஷ்டத்தனமாக ஏதாவது செய்துவிட்டால் அதைத் திருட்டுத்தனம் என்று கூறிவிடுவது மடமை. புத்தி சொல்கிறதை விட்டு முதுகை இரண்டாகப் பிளந்துவிட்டிருக் கிறீர்களே. எப்படித்தான் மனசு வந்ததோ?” என்று படபடவெனப் பொரிந்து கொட்டினாள் தேவகி.
அதற்குமேல் பேசமுடியாமல் துக்கம் தொண்டையை அடைத்துக் கொண்டது? கண்களில் நீர் முட்ட, மாடியறையை நோக்கி விரைந் தாள் : சோபா ஒன்றிலே சாய்ந்துகொண்டு முகத்தைக் கைகளால் மூடிக் கொண்டு இருதயமே வெடித்துவிடும்போல் விம்மியழத் தொடங்கினாள். எவ்வளவு நேரம் அவ்வாறு அழுதாளோ அவளுக்குத் தெரியாது. சீதாராமன் அருகில் வந்து உட்கார்ந்துகொண்டு தொண்டையைக் கனைத்துக் கொண்டார். “தேவகி, நீ வருத்தப்படாதே. ராமேசம் வந்து புகார் சொன்னதும் கோபம் தாங்கவில்லை. நீ அருகில் இருந்திருந்தால் என் கோபம் இப்படி அத்துமீறிப் போயிருக்காது. ரகுமேலே எனக்குமட்டும் பிரியம் இல்லையா?” என்று உணர்ச்சி பொங்கும் குரலில் கேட்டார்.
தேவகி பதில் பேசவில்லை: “அம்மா?” என்று அழைத்தபடி முத்து வராந்தாவில் வந்து நின்றான்: சீதாரர்மன் எழுந்து சென்று அவன் அளித்த ஒரு கடிதத்தையும் பொட்டலத்தையும் வாங்கிக்கொண்டு வந்து தேவகியிடம் நீட்டினார்? தேவகி பொட்டலத்தைப் பிரித்தாள். நெருக்க மாகக் கட்டியிருந்த சண்பக மலர்ச் சரத்தினின்று மணம் குப்பென முகத்தில் வீசியது: கடிதத்தைப் பிரித்துப் படித்தாள் தேவகி.
அன்புள்ள தேவகிக்கு,
இத்துடன் கொஞ்சம் சண்பகப் பூ அனுப்பியிருக்கிறேன்; பகலில் நடந்த சங்கதியைக் கேள்விப்பட்டேன். நான் அப் போது வீட்டில் இல்லையே என்று வருத்தப்பட்டேன். குழந்தை விளையாட்டாக ஏதோ தவறு செய்துலிட்டான். அதற்காக உன் கணவர் குழந்தையைப் போட்டு அடித்துவிட்டார் என்று கேள்விப்பட்டு எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.ஏதோ தெரியாது செய்துவிட்ட துஷ்டத்தனத்தைப் பெரிது பண்ணி விட்டோமே என்று இவரும் ரொம்ப மனசு கஷ்டப்பட்டார். மன்னித்துக்கொள். உனக்கு என் அன்பான வாழ்த் துக்கள். தீபாவளி காலையில் வழக்கம்போல் நீயும் குழந்தை களும் அவரும் இங்கே பக்ஷணம் சாப்பிட வரவேண்டும்.
இப்படிக்குப் பிரியமுள்ள கமலம் ராமேசம்.
தேவகி கடிதத்தை மடித்துச் சோபாவின்மேல் வைத்தாள். சீதாராமன் அதைப்பற்றிக் கேட்கும் முன் புதிய ஆடைகளின் சப்தம் அறைக்குள் கேட்டது. தையற்கடையிலிருந்து வந்த புதிய பாவாடை யைக் கட்டிக்கொண்டு. குழந்தை சித்ரா வந்து நின்றாள்.
.
”அட! சித்ரா ரொம்ப ஷோக்காக இருக்கிறாளே!” என்று தந்தை வியப்புடன் மகளை வரவேற்றார்.
“தீபாவளிக்கு வாங்கி வைத்திருக்கும் துணிகளை ஏன் அதற்குள் வீணாக்குகிறாய்? என்று மகளை அதட்டவேண்டும் என்று தேவகிக்குத் தோன்றியது. ஆனால் சித்ரா ஒரே ஓட்டமாக ஓடிவந்து தாயின் கழுத் தைக் கட்டுக்கொண்டு, அம்மா. தீபாவாளிக்கு முன்னாடி கட்டிக்கொண் டேன்னு கோவிச்சுக்கமாட்டியே? கட்டிப் பாக்கணும்னு ஆசையா இருந் தது என்று கூறிவிட்டு, “எனக்கு நன்னா இருக்காம்மா?” என் சங்கோசத்துடன் கேட்டாள். கழுத்தைச் சுற்றியிருந்த அவளது குழந் தைக் கரங்கள் தேவகியின் மேனியைப் புல்லரிக்கச் செய்தன. மிருதுவான அவளுடைய கன்னத்தைத் தன் கன்னத்துடன் பொருத்திக் கொண்டு, “நன்னாயிருக்கு கண்ணு கசக்காமல் பத்திரமா அவுத்து வைச் சுடணும்” என்றாள்.
சித்ரா சிட்டுக்குருவி போல் அறையிலிருந்து வெளியே ஓடினாள். “இப்பத்தான் சித்ரா பிறந்ததுபோல் இருக்கிறது. அதற்குள் பத்து வய தாகிவிட்டது. இன்னும் சில வருடங்களில் அவள் கல்யாணமாகிப் புக்ககம் சென்றுவிடுவாள் என்று நினைத்துப் பார்க்கமுடியவில்லை” என்று பரிவுடன் பேசினார் சீதாராமன். தேவகி தனக்குள்ளே புன்முறுவல் செய்துகொண்டாள். சற்றுமுன் அவள் மனத்திலே ஜுவாலை விட்டுக் கொண்டிருந்த கோபமும் ஏக்கமும் இப்போது அடங்கியிருந்தன. அவருடைய வார்த்தைகள் கேட்பதற்கு ஆறுதலாக இருந்தன.
“அம்மா! அம்மா!” என மெல்லிய குரலில் கூறியவாறு கண்களைக் கசக்கிக்கொண்டு குற்றவாளிபோல் ரகு அவளுக்குமுன் வந்து நின்றான். ‘இங்கே வாடா ரகு! இங்கே வா!” என்று தந்தை அழைத்தார். அவரைத் தன் கண்களால் வெட்டிவிடுகிறவன்போல் முறைத்துப் பார்த்துவிட்டுத் தாயின் அருகில் வந்து அவள் தோள்மீது சாய்ந்துகொண்டான்.
”அம்மா!” என்று மெதுவாகக் கூப்பிட்ட மைந்தன் தன் கால் சராய்ப்பைக்குள் கையை விட்டு எதையோ எடுத்தான். “உனக்காகத் தான் அம்மா இதைப் பறிச்சேன்: ராமேசம் மாமா கோவிச்சுக்கொண் டார். அப்பா அடிச்சுட்டார்” என்று துக்கத்துடன் திணறிய மகன், வாடி வதங்கித் தன் செவ்விய நிறத்தை இழந்த பத்துச் சண்பக மலர் களைத் தாயின் கையில் திணித்தான்.
”எனக்கா!” என்று வியப்புடன் தேவகி கேட்குமுன், “நேத்து அந்த மாமிகிட்டே பேசிண்டு இருந்தப்பேர் நீ சொல்லலையா. ‘எனக்குக் கூடச் சண்பகப் பூ பிடிக்கும்; ஆனா எங்க தோட்டத்திலே கிடையா’ துன்னு! நீயும் சித்ராவும் தலையிலே வச்சுக்க நான் ராமேசம் மாமா வீட்டு மரத்திலேருந்து பறிச்சேன்” என்றான் ரகு.
தேவகியின் கண்கள் கலங்கின. ரகுவை மார்புடன் தழுவிக் கொண்டு. “ரகு கண்ணு! ராமேசம் மாமாவைக் கேட்காமல் அவர் வீட்டு மரத்தில் ஏறிப் பறிப்பது தப்பல்லவா? நீ அப்படிச் செய்ய லாமா?” என்று கேட்டாள்;
“இனிமே அப்படிச் செய்யமாட்டேன். நான் நல்ல பையனா. இருப்பேன். உனக்கு என்மேலே கோபமா?” என்று கேட்டான் ரகு.
“இல்லைடா கண்ணு!” என்று கொஞ்சலாகப் பதிலளித்தாள் தேவகி.
“பின்னே என் சாப்பிடலை? என்மேலே கோபமா இருந்தாத். தானே நீ சாப்பிடாம இருப்பே?” என்றான் ரகு, விடாமல்.அவளது மடிமீது உதிர்ந்து கிடந்த சண்பக மலர் ஒன்றைச் சீதாராமன் கையில் எடுத்துக்கொண்டார். இன்பம், துன்பம் என்று இனம் பிரிக்கமுடியாத ஓர் உணர்ச்சி அவரது நெஞ்சைப் பலமாக அழுத்தியது.
“நீயும் நானும் சேர்ந்து சாப்பிடுவதற்காகக் காத்திருந்தேன். வாழ் போகலாம்” என்று மகனை அணைத்துத் தூக்கிக்கொண்டபடி எழுந்து நின்றாள் தேவகி. அவள் உள்ளத்திலே வீசிய புயல் அடங்கி அதற்குப் பதிலாக அமைதியும் ஆனந்தமும் நிலவியிருந்தன.
“இரு” என்று கூறிய சீதாராமன் தம் கையில் இருந்த சண்பக மலரை அவளது கூந்தலில் செருகிவிட்டு அர்த்தபாவத்துடன் முறுவல் செய்துவிட்டு மகனின் கன்னத்தைச் செல்லமாக வருடினார்.
“என்னைத் தொடாதே போ! உன்னோட நான் டூ! வவ்வல் வ்வ்வே!” அழகு காட்டினான் தந்தைமீது கோபம் தணியாத ரகு.
“சே. ரகு! அப்பாகிட்ட மரியாதை இல்லாமல் பேசலாமா? தீபாவளிக்கு உனக்கு எத்தனை பட்டாஸ் வாங்கித் தரப்போகிறார். தெரியுமா?” என்று கூறிவிட்டு வாய்விட்டுச் சிரித்தாள் தேவகி.
“போக்கிரிக் கழுதை! இப்படி வ!” என்று மைந்தனை அவளிட மிருந்து தந்தை தூக்கித் தம் தோள்மீது சாய்த்துக்கொண்டு சிரித்தார். குழந்தையும் வெட்கத்துடன் கோபத்தைவிட்டுப் பல்லைக் காட் டினான். எத்தனை இன்பமான சிரிப்பு!
‘கணவனின் அன்பான மொழிகளைக் கேட்கும்போது ஏற்படும் ஆனந்தம், குழந்தைகளின் மழலை மொழிகளைக் கேட்கும்போது ஏற்படும் இன்பம் – இவற்றை நீ அறிவாயோ? கௌசல்யா ! வாழ்விலே பெரும் பாக்கியத்தை இழந்தவள் நீதான்! நான் அல்ல!’ என்று தேவகி தனக்குள்ளே எண்ணமிட்டவண்ணம் கீழே இறங்கிச் சென்றாள்.
– அக்டோபர் 1952, கலைமகள்
– கலைமகள் பொன்விழாக் கதம்பம் (1932-1961), பொன்விழா வெளியீடு, முதல் பதிப்பு: ஏப்ரல் 1982, கலைமகள் காரியாலயம், சென்னை.
![]() |
லக்ஷ்மி வாழ்க்கையிலும் எழுத்திலும் மருத்துவரே! சமூக முன்னேற்றத்துக்காகச் சிறுகதைகள், புதினங்கள் எழுதிய சிறந்த எழுத்தாளர்களுள் "லக்ஷ்மி' இன்றும் விவாதமின்றிப் பேசப்படுபவர். வார, மாத இதழ்களில் குறிப்பாக அதிகம் விற்பனையாகும் இதழாசிரியர்கள் போட்டி போட்டுக்கொண்டு "லக்ஷ்மி'யின் நாவல்களையும் சிறுகதைகளையும் வெளியிட்டனர். திருச்சி மாவட்டம் 'தொட்டியம்' என்ற சிற்றூரில், 'லக்ஷ்மி' என்னும் புனைபெயர் கொண்ட திரிபுரசுந்தரி, 1921-ஆம் ஆண்டு மார்ச் 23-ஆம் தேதி சீனிவாசன்-பட்டம்மாள் தம்பதிக்குப் பிறந்தார். தொட்டியத்தில் தொடக்கக் கல்வி, முசிறியில்…மேலும் படிக்க... |
