இளம் மனைவி





(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அலட்சியம், எதற்கெடுத்தாலும் அலட்சியம் பெண்மை குமுறியது. ஜன்னல் கதவை படீரென்று அறைந்து சாத்திவிட்டு அவள் கட்டிலில் வந்து விரக்தியோடு உட்கார்ந்தாள். கல்யாணமாகும் முன் அவள் எழுப்பிய மனக்கோட்டைதான் எத்தகையது! இவ்வளவு சீக்கிரத்திலேயே ஏமாற்றத்தின் சாயை அதில் படர்ந்துவிடுமென்று அவள் எதிர்பார்த்தாளா? தன் அழகைப்பற்றி அவள் எவ்வளவு மமதை கொண்டிருந்தாள். கல்லூரியில் பயின்ற காலத்தில் சகமாணவர்கள் அவளைச் சுற்றி வந்த போது உபத்திரவமாக இருந்தாலும் ஒரு வித இன்பக் கிறுகிறுப்புமிருந்தது. அந்த மாணவர் கூட்டத்தில் அவன் தனித்து நின்றான். அவன் அழகின் வடிவம். அவனைப்பற்றி அவள் மிகைப்படுத்தி கற்பனை செய்யவில்லை. அவள் அழகுக்கு அவன் அழகு ஏற்றது என்று மட்டும் வலுக்கட்டாயமாகதன் உள்ளத்துக்கு இடித்துரைத்தாள். ‘மிகச் சிறந்த அழகன்’ என்று அவனை ஒப்புக்கொள்ள, தன் அழகைப்பற்றி அவள் கொண்டிருந்த கர்வம் இடம் கொடுக்க மறுத்தது.

அவளுடன் ஒரு வார்த்தை பேச மற்ற மாணவர்கள் தவங்கிடக்கும் போது அவன் மட்டும் நெஞ்சை நிமிர்த்தி நடந்தான். அவனுக்கென்ன அவ்வளவு அலட்சியம்? ஒரு வேளை மற்ற மாணவிகள் அவனிடம் பல்லைக்காட்டிக் கொண்டு நிற்பதால் எல்லாப் பெண்களையும் மட்டமாக எண்ணிவிட்டானோ? அவன் மீது அவளுக்கு வர்மம் ஏற்பட்டது. ஏன்? நினைக்க அவனுக்குச் சிரிப்பாகவிருந்தது. ‘அலட்சியம் செய்கிறாயா? பழிவாங்குகிறேன் பார் என்று கருவினாள். பாராமுகமாய் இருப்பவனைப் பணியவைக்கம் முயற்சியில் இறங்கினாள். அதன் விளைவு? காதல் துளிர்த்தது இருவருக்குமிடையே….. இன்று தம்பதிகள், ஒரே வார்த்தையில் சொன்னால், அவன் அலட்சிய சுபாவத்தை அவள் காதலித்தாள்.
இன்று…
அந்த அலட்சியம் வேதனைப் புழுவாய் உருவெடுத்து அவள் இதயத்தைக் குடைந்தது. நலுங்காமல் உடையணிந்துகொண்டு அவன் காரியாலயத்துக்குச் செல்வதை நாலுபேர் திரும்பிப் பார்ப்பதைக் கண்டு சிறிது பெருமையாகவிருந்தாலும் உள்ளம் பொறாமையால் தீய்ந்தது. அழகு, அந்தஸ்து, பெருமை, மன்னிக்கும் சுபாவம், விட்டுக் கொடுக்கும் பண்பு எல்லாம் ஒருங்கே அமைந்தவனிடம் இந்த அலட்சிய சுபாவமும் புல்லுருவிபோல் அமைந்துவிட்டது. சிந்தனைக் குரங்கு காலையில் நடந்த சம்பவத்துக்குத் தாவியது.
குளித்துவிட்டு வந்தவன் முடங்கிக் கிடந்த மனைவியைப் பார்த்து, “இன்னும் காலைப் பலகாரம் தயாராக வில்லையா!” என்றான். அதிகாரத் தொனியில்.
“தலையை வலிக்கிறது. தலையை நிமிர்த்தி எழுந்திருக்கவே முடியவில்லை.” – அவள் முனகினாள்.
“ஓகோ….’விக்ஸ்’ கொஞ்சம் பூசிக்கொள்” இந்த ஒரு வசனம் மட்டும்தான் அவன் வாயிலிருந்து உதிர்ந்துசில நிமிஷங்களில் தானும் போய் ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு அவளுக்கும் ஒரு பலகாரப் பொட்டலத்தை வாங்கிவந்து வைத்துவிட்டுக் காரியாலயத்துக்குப் போய்விட்டான்.
எவ்வளவு அலட்சியம் மனைவியிடம். ஆதரவாக ஒரு வார்த்தை பேசுவதிலுமா சிக்கனம்? காரியாலயத்திற்கு செல்லும் அவசரத்தில் இப்படி நடந்து கொண்டானா? அப்படியானால் அரைமணிநேரம் கண்ணாடிக்கு முன்நின்று தன்னை அலங்கரித்துக் கொண்டிருந்தானே? கட்டிய மனைவி காய்ச்சலாய் கிடக்கும் போது என்ன அலங்காரம் வேண்டிக்கிடக்கிறது…
தலைவலி அதிகரிக்க அதிகரிக்க கண் எரிவெடுத்தது. கட்டிலில் சாய்ந்து படுத்துக் கண்களை மூடினாள். கவலையாலோ, கண் எரிவாலோ கண்களிலிருந்து சூடான நீர் முத்துக்கள் சொரிந்தன. மதிய போனதுக்காக அவன் அங்கிருந்து வீடு நோக்கி வந்து கொண்டிருந்தான். அவள் இங்கு கண்ணீராய் கரைத்துக் கொண்டிருந்தாள்.
“என்ன! இன்னமும் தலைவலி மாறவில்லையா? அப்போ மத்தியானச் சாப்பாடும் ஹோட்டலில்தான்…” வீட்டின் உள்ளே நுழைந்ததும் கேட்டான். அவன் குரலில் எவ்வித உணர்ச்சி பாவமும் இல்லை.
“தலைவலியோடு காய்ச்சலும் சேர்ந்து கொண்டது. என்னால் தலை நிமிர்த்தவே முடியவில்லை…” அவள் இதயத்தின் அடித்தளத்திவிருந்து சொற்கள் வெடித்துத் தெறித்தன. ‘போகும் போது டாக்கடரிடம் சொல்லிவிட்டுப் போகிறேன்….” அவன் படிதாண்டிப் போய்விட்ட பின்னும் அவன் குரல், அவள் செவிகளில் திரும்பத் திரும்ப எதிரொலித்தது. சிறிது நேரத்தில் அது பேய்க் கூச்சலாக மாறி அவள் செவியருகே ஊளையிட ஆரம்பித்ததும் செவிகளைப் பொத்தியபடியே “போதும் நிறுத்துங்கள்” என்று அண்டமதிரக் கத்தினாள்.
டாக்டர் வந்து பார்த்த போது அவள் நினைவற்றுக் கிடந்தாள். அவள் உடலைப் பரிசோதித்த பின் மருந்து கொடுத்துவிட்டுச் சென்ற டாக்டர் அவனுக்கு டெலிபோன் செய்தார்.
“மிஸ்டர் உமது மனைவியின் நிலை திருப்திகரமானதாக இல்லை. அளவுக்கு மீறிய கவலையால் இதயம் பலவீனமடைந்திருக்கிறது. .”
“என்ன டாக்டர் சொல்லுகிறீர்கள்? உண்மையாகவா” – பதற்றத்தோடு கேட்டான்.
“இதில் நான் பொய் சொல்ல வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? ரொம்ப ஜாக்கிரதையாக நோயாளியைக் கவனியுங்கள். கொஞ்சம் அஜாக்கிரதையாக இருந்தாலும் நிரந்தர ஏமாற்றத்துக்குள்ளாகி விடுவீர்கள்…”
“டாக்டர்” கந்தோர் என்பதையும் மறந்து கத்தினான். சகஉத்தியோகத்தர்கள் ஒன்றும் புரியாமல் திகைத்துப் போனார்கள். சில வினாடிகளில் அவன் மனைவிக்குப் பக்கத்தில் நின்றான்.
அவள் ஆச்சரியத்தோடு நிமிர்ந்து பார்த்தாள். அவள் கண்ணின் கடைக்கோணத்தில் ஒரு நீர் முத்துத் திரண்டது. ஆதரவோடு மருந்தை எடுத்து சிறுகுழந்தைக்குப் புகட்டுவது போலப் புகட்டினான். அவன் ஒவ்வொரு செயலும் ‘என்னை ஏமாற்றி விடாதே’ என்று அவளிடம் மன்றாடியது.
மறுநாள் அதிகாலை அவள் கண்விழித்த போது, கவலை தோய்ந்த முகத்தோடு தன் பக்கத்தில் அவன் உட்கார்ந்திருப்பதைக் கண்டாள். கண் விழித்திருக்கிறீர்களே, உடம்புக்காகாதே’ என்று முகமனுக்காகக் கூட அவள் கூறவில்லை. மறுபக்கம் புரண்டு படுத்தாள்.
உணவு, உடை ஆகியவற்றை மட்டுமல்ல, அவன் காரியாலயத்தையே மறந்துவிட்டான். சவரம் செய்யாத முகமும் வாராத தலையும் அவனை ஒரு முழுப் பைத்தியமாக மாற்றி விட்டிருந்தது. சென்ற வாரம் அவனைக் கண்டவர்கள் இன்று அவனைக் கண்டால் ‘அவன்’ தான் ‘இவன்’ என்று நம்பமாட்டார்கள். அத்தியந்த நண்பர்கள் அவனை இன்று கண்டால் அழுதே விடுவார்கள்.
ஆனால் அவள் –
அழவில்லை,அனுதாபப் படவில்லை. அவள் உள்ளத்தில் என்றுமில்லாத சாந்திநிலவியது. ‘அடிப்பாவி, அரக்கியாயிருக்கிறாளே’ என்றீர்களா? அதுதானில்லை. அவள் ஒரு சராசரி மனைவி.
தாழையடி சபாரத்தினம்
ஈழத்தின் முன்னோடி எழுத்தாளர்களில் ஒருவர் அமரர் தாழையடி சபாரத்தினம்.. மறுமலர்ச்சிச் சஞ்சிகையின் ஆசிரியர்களில் ஒருவராக இருந்தவர். கல்கியில் சிறுகதைக்காகப் பரிசு பெற்றவர். ஆனந்தனில் இவர் எழுதிய குருவின் சதி தகுந்ததொரு சிறுகதையாகக் கருதப்படுகின்றது.ஈழத்துப் பத்திரிகைகள் அனைத்திலும் எழுதியுள்ளார்.
– 25.06.1962
– ஈழநாடு சிறுகதைகள் (தொகுதி-1), முதல் பதிப்பு: 2008, பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வட மாகாணம், திருகோணமலை.