இளமைக் கோலங்கள்






(1975ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6
அத்தியாயம்-1
மழை தூறிக் கொண்டிருக்கிறது. பஸ்ஸிலிருந்து இறங்கிய சிவகுமார், நிறுத்தத்திலுள்ள தகரக் கூடாரத்திலே ஒதுங்கிக் கொண்டான். காலையிலிருந்தே வானம் இப்படித்தான் சிணுங்கிக் கொண்டிருக்கிறது.

பஸ் நெருக்கத்தில் நசுங்கியவாறு வந்ததால் இந்த மழை நேரத்திலும் அவனது உடலில் வியர்வை கசிந்து கொண்டிருக்கிறது. கொழும்பிலே பஸ்களில் பிரயாணம் செய்வதென்றால் விசேஷ பயிற்சி பெற வேண்டும். நிறுத்தங்களில் சில விநாடிகள்தான் பஸ் நிறுத்தப்படுகிறது. அந்தக் குறுகிய நேரத்தில் எத்தனை பேர் ஏதோ ஜாலவித்தை புரிவது போல நுழைந்து விடுகிறார்கள்! கண்டக்டர் இயந்திரமாக மெசினை திருகித் திருகி ரிக்கட்டை விநியோகித்துக் கொண்டிருக்கிறான். இறங்க வேண்டியவர்கள் மூச்சைப் பிடித்துக் கொண்டு இடித்து நெருக்கி – சக பிரயாணிகளின் முணுமுணுப் பையும் கண்டக்டரின் கத்தலையும் பொறுத்தருளிக் கொண்டு இறங்க – ‘டிங்… டிங்…’ – பஸ் ஓடிக் கொண்டேயிருக்கிறது.
வெளியே இறங்கிவிட்டதால் குளிர்காற்று வந்து கடலை அணைக்கும் பொழுது இதமாக இருக்கிறது. சுகமாக மூச்செடுக்கவும் முடிகிறது. ‘அப்பாடா!’ எனப் பெருமூச்செடுத்தவாறே பஸ்ஸினுள் அந்தரத்தில் தொங்கிக் கொண்டுவந்த நிலையை இன்னொரு முறை நினைத்துப் பார்த்தான் சிவகுமார்; சனவெக்கை, குமைச்சல், வயிற்றைக் குமுட்டுகின்ற மணம். சீ!
காலி வீதியில் புத்தம் புதுக் கார்கள் கப்பல்களைப் போல மிதந்து செல்கின்றன. கண்ணாடியில் விழுகின்ற மழைத்துளிகளை ‘வைப்பர்’கள் மெதுமையாக அழித்து விட ராஜ கம்பீரத்துடன் அவை செல்கின்றன! அவைகளின் ஒவ்வொரு விதங்களையும் அழகான வர்ணங்களையும் காணும்பொழுது அவனுக்கு சந்தோஷமாகவும் பின்னர் கவலையாகவும் இருக்கிறது. தனக்கும் அப்படி ஒரு வாகனத்தில் பவனி வர முடியவில்லையே என்ற ஆற்றாமையுணர்வு.
மழை இன்னும் தூறிக்கொண்டேயிருக்கிறது. இப்பொழுது மழையோடு சேர்ந்து சற்று வெயிலும் எரிக்கிறது. இப்படி இரண்டையும் ஒரே நேரத்தில் பார்க்கும் பொழுது அழகாகத்தான் இருக்கிறது. தான் இப்படி மழைக்குப் பயந்து ஒதுங்கி நிற்பதில் பலனில்லை என அவன் எண்ணினான். மழையும் இப்போதைக்கு ஓயப்போவதில்லை.
அதை ஒரு பொருட்டாகக் கருதாமல் அங்குமிங்கும் ஓடி அலைந்து தமது அன்றாடக் கடமைகளில் ஈடுபட்டிருக்கும் மக்கள்! உடைகள் நனைய நனைய ஸ்டைலாக (அப்படி நினைத்துக்கொண்டு) நடக்கும் இளவட்டங்கள். தங்கள் ‘கேர்ள் பிரண்டை’ ஒரு சிறிய குடையினுள் மிகவும் பக்குவமாக அணைத்துக் கொண்டு செல்லும் பல ளைஞர்கள்! விதவிதமானதும் அரைகுறையானதுமான ஆடைகளை அணிந்தவாறு தாங்களே இந்த நாட்டின் நாகரிக மறுமலர்ச்சிக்கென்று விசேஷமாகச் சிருஷ்டிக்கப்பட்டவர்கள் என அந்தரங்கமான நம்பிக்கையின் இறுமாப்பில் செல்கின்ற இளமைக் கோலங்கள்!
சிவகுமார் பஸ் ஸ்ராண்டை விட்டு வெளியேறி ‘இங்கே கடவுங்கள்’ இல்லாத இடத்தில் காலி வீதியில் கடக்க முயற்சித்த பொழுது விரைவாக வந்த வாகனமொன்று ‘சடின் பிறேக்’ போட்டது-இவன் ‘அருந்தப்பு!’ என மனதுக்குள் நினைத்தவாறே மறுபக்கத்துக்கு ஓடினான்.
வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்துக்குப் பக்கத்திலுள்ள பெரிய மரங்களிலிருந்து காகங்களும் வேறு பறவைகளும் நிலத்தை அசிங்கப் படுத்தியிருக்கின்றன. நாள் முழுக்கப் பெய்த மழை நிலத்தையெல்லாம் சேறாக்கி அருவருப்பை ஊட்டுகிறது. கைலேஞ்சியைத் தலையில் வைத்து, காற்றில் பறக்காமல் காதினுள் செருகிவிட்டு இவன் நடந்தான்-‘இந்தத் துமியளுக்குள்ள நனைஞ்சால் தடிமன் பிடிச்சிடும்.
மார்க்கட்டில் வழக்கமான ஆரவாரத்துக்குக் குறைச்சல் இருக்கவில்லை. வீதியோரங்களில் மரக்கறிவகைகளை, தேங்காய், முட்டை இத்தியாதி சாமான்களைக் குவித்து வைத்து மக்களுக்குச் சேவை புரியும் (லாபாபாய்! லாபாபாய்!) வியாபாரிகள்! மாலையில் அலுவலகங்களில் வேலை முடிந்து வரும் ஆண்களும் பெண்களும் மற்றும் உயர்மட்டக் குடும்பஸ்தர்களின் வேலைக்காரர்களும் பொருட்களைப் பேரம் பேசி அள்ளிக் கொண்டிருக்கிறார்கள்! ஒரு பக்கத்தில் கொட்டப்பட்டு அழுகிக் கொண்டிருக்கின்ற மரக்கறி வகைகள் நாற்றமெடுக்கிறது. சில நோஞ்சான் சிறுவர்கள் வீசப்பட்டிருக்கிற மரக்கறிகளைப் பொறுக்கிக் கொண்டிருக்கிறார்கள் எப்படி எப்படியோ இறைவன் எல்லோருக்குமே படியளந்து கொண்டுதானிருக்கிறான்!
நாளை மறுதினம் பொதுமக்களுக்கு அடிக்கப் போகிற அதிர்ஷ்டத்தைப் பற்றி ஜோசியம் சொல்லிக் கொண்டிருக்கிறான் சுவீப் ரிக்கட் வாகனக்காரன். அதைக் கேட்டதும் ‘ஒரு ரிக்கட் எடுத்தாலென்ன’ என்ற அற்ப ஆசை சிவகுமாரின் மனதிலே தோன்றியது. அப்படி சில வேளைகளில் எடுத்து அதிர்ஷ்டம் அடிக்காமல் போகிற போதெல்லாம் கொடுத்த பணம் நாட்டின் அபிவிருத்திக்குத்தானே பயன்படுகிறது என மனதுக்குச் சமாதானம் சொல்லிப் பழகியிருக்கிறான். பொக்கட்டிலே காசைக் கணக்குப் பார்த்த பொழுது, அது காய்கறிச் சாமான் வாங்குவதற்கே போதுமானதாக இருந்ததால் அந்த எண்ணத்தையும் கைவிட்டான். கால்களின் பழக்கதோஷம், ‘எக்கவுண்ட்’ வைத்திருக்கிற கடைக்குள் இழுத்துச் சென்றது – ‘ஒரு ரீ அடிச்சிட்டுப் போகலாம்.’
‘ரீ மேக்கருக்குக் காது கேட்காதோ? இவன் ஏன் இந்தக் கத்துக் கத்துகிறான்?’
தேநீரை அருந்திவிட்டுக் காசாளர் மேசைக்கு வந்து கொப்பியை எடுத்துக் கணக்கை எழுதியபொழுது அவர், ‘என்ன தம்பி… ஒரே மழையாயிருக்குது’ எனத் தனது ‘ரேப்’பை முடுக்கினார். இப்படி இன்று எத்தனைபேரிடம் கேட்டிருப்பாரோ? இவனும் சிரிப்பை வெளிப்படுத்திக் கொண்டே, “ஓம்! விடுறபாட்டைக் காணயில்லை!” என்றான்.
ஓட்டமும் நடையுமாக வந்தபொழுது வீட்டு வாசலில் ‘லான்ட் லேடி’ நின்று புன்முறுவலை மலர்த்தினாள். பின்னர் “அங்கிள்! தெயார் இஸ் எ லெட்டர் ஃபோர் யூ!” என்றவாறே உள்ளே சென்று ஒரு கடிதத்தை எடுத்து வந்தாள். பிள்ளைகள் அழைக்கின்ற ‘அங்கிள்’ பட்டத்தையே அம்மாவும் பாவிக்கிறாள். அவளது ‘ரைட்ஸ்கேர்ட்டும்’ தோற்றமும் ஒரு நடுத்தர வயது மாது என்றா தோன்றுகிறது? இன்னும் எவ்வளவு இளமையாக இருக்கிறாள்! கடிதத்தைப் பெற்றுக் கொண்டு (தாங்ஸ்!) ஒரு புன்முறுவலைப் பதிலுக்குச் செலுத்திவிட்டு வீட்டின் . கோடிப்பக்கத்தை நோக்கி நடந்தான். அங்கேதான் அவனது அறை இருக்கிறது!
அறைக்குள் மகேந்திரன் கண்ணாடியின் முன்நின்று தனது நீளமான தலைமுடியை வாரிக்கொண்டு நின்றான். அவன் கண்ணாடியைக் கண்டால் விடமாட்டான்.
“என்னடாப்பா! பொம்பிளையள் மாதிரி எந்த நேரமும் கண்ணாடிக்கு முன்னாலை?” எனத் தனது சினத்தை வெளிப்படுத்தினான், மற்றவன் ஜெகநாதன்.
“பெரிய மன்மதன் என்ற எண்ணமோ?”
மகேந்திரன் அவனது கதைக்குக் காது கொடுக்காமலே துவாயை எடுத்துக் கொண்டு ‘பாத்ரூமுக்கு’ நடந்தான். பல நாட்களாக வெயிலையே கண்டறியாத குறைபாட்டைத் துவாய் பறைசாற்றியது. அவனை எப்படியாவது மட்டம்தட்ட வேண்டுமென்ற எண்ணத்துடன், “மச்சான்!… தயவுசெய்து உந்தத் துவாயைத் தோச்சுப் போடு… கிட்ட நிக்கேலாதாம்” என்றான் ஜெகநாதன். அவன் அலட்சியமாக “அது மச்சான்… வெயிலிலை காயாததாலைதான் மணக்குது…” எனக் காரணம் கூறிவிட்டுத் துவாயை அன்போடு தோளிலே கிடத்திக் கொண்டு சென்றான்.
அறைக்கு வந்து உடைகளை மாற்றிக்கொண்டு நின்ற சிவகுமார் “சரி… சரி, இந்தக் கதையளை விட்டிட்டு வாங்கோ… சமைக்கவேணும்!” என அவர்களைத் திசை திருப்பினான். “இப்பொழுதே தொடங்கினால்தான் ஒரு பாடாகச் சமைத்து முடிக்கலாம்.”
“மச்சான்!… எனக்கு நேரமில்லை… சிங்கள ரீயூசனுக்குப் போகவேணும்… நீங்கள் சமையுங்கோ… நான் பிறகு வந்து இயத்துக்களைக் கழுவுறன்…” எனச் சமாளித்தான் மகேந்திரன்.
ஜெககநாதனுக்கு இது பொறுக்கவில்லை. “நீர் லேசான வேலையைப் பார்க்காமல் வாரும்!… ஒவ்வொரு நாளும் இப்பிடி ஒவ்வொரு சாட்டைச் சொல்லிவிட்டுப் போகலாம் எண்ட நினைவோ?” எனத் தடுத்தான்.
“இல்லை மச்சான்… சோதினையும் கிட்டுது… கிளாசுக்குப் போகாட்டி என்னெண்டு பாஸ் பண்ணுறது?… நாளைக்கு விடியப்புறம் நான் எழும்பித் தனியச் சமைக்கிறன்… இப்ப குழப்பாதையுங்கோ!”
எப்பிடியாவது ஒரு காரணத்தைச் சொல்லிவிட்டு அவன் நழுவிவிடுவான்.
“நீ… ரீயூசன்… ரீயூசன் எண்டு சொல்லிக் கொண்டு ரீயூசனுக்குத்தான் போறியோ… அல்லது வேறை என்னத்துக்குப் போறியோ ஆர் கண்டது!” என்றான் சிவகுமார்.
“சிவா! நீயும் என்னைப் பற்றி அப்பிடி நினைக்கிறாயே மச்சான்?” என அவனுக்கு ‘ஐஸ்’ வைத்தான் மகேந்திரன்.
“சரி…! சரி!… போய்த்துலை!…. என்னவோ நல்லாய் வந்தால் சரி!” எனக் கூறிவிட்டு எழுந்து அறையை ஒதுக்கத் தொடங்கினான் சிவகுமார்.
குளியலறையில் மகேந்திரன் ‘பைப்’பைத் திறந்துவிட்டு முகம் கழுவுகின்ற ஓசை கேட்கிறது –
“உவன் மச்சான் சரியான ஆள்! ஒவ்வொரு நாளும் ஏதாவது சாட்டுச் சொல்லிப் போட்டுக் கழண்டிடுவான்…” என ஜெகநாதன் முணுமுணுத்தான்.
“ஜெகா! நீ இந்த இயத்துக்களைக் கழுவிக்கொண்டு வா…. நான் அதுக்கிடையிலை இவ்விடத்தை ஒருக்கால் கூட்டிறன்” என்றவாறே சமையலுக்குத் தேவையான சில பாத்திரங்களைக் கொடுத்தான் சிவகுமார்.
அத்தியாயம்-2
சுவாமி அறை, படுக்கை அறை, வரவேற்பறை, சமையல் அறை என எல்லா சௌகரியங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள (அப்படிக் கருதப்படுகின்ற) ஓர் அறையே அந்த மூன்று நண்பர்களையும் குடிவைத்திருக்கின்ற புண்ணிய கைங்கரியத்தையும் செய்கிறது. வெள்ளவத்தைப் பகுதியில் இப்படி ஓர் அறை ‘வசதி’யாகக் கிடைத்திருப்பது அவர்கள் முற்பிறப்பில் செய்த புண்ணியமோ என்னவோ! (இப்பிறப்பில் உருப்படியாகச் செய்தது என்ன இருக்கிறது?)
அறையின் யன்னலோரமாக ஒரு கட்டிலும் அதற்கு எதிராக மறுபக்கத்தில் இன்னொரு கட்டிலும் போடப்பட்டிருக்கின்றன. இந்தக் கட்டில்கள் படுக்கைகளாக உபயோகப்படுவது மாத்திரமின்றி வந்தாரை வரவேற்று அமரவைக்கின்ற இருக்கைகளாகவும் சேவையாற்றுகின்றன.
இன்னொரு கட்டில் போடுவதற்கு இடமில்லாததனாலோ, அல்லது தனது சம்பளத்தை வைத்துக்கொண்டு கொழும்புச் சீவியமும் நடத்தி ஒரு கட்டிலுக்கும் சொந்தக்காரனாக இருக்கும் அளவுக்கு வசதியில்லாததனாலோ கட்டிலொன்றின் அவசியத்தைப் பற்றி மகேந்திரன் சிந்தித்ததேயில்லை. ஜெகநாதனுக்குச் சொந்தமான கட்டிலுக்குக் கீழே சுருட்டிப் போடப்பட்டிருக்கும் பாய் இரவு வேளைகளில் இவன் சுருண்டு கொள்வதற்கு நல்ல துணையாக இருந்து வருகிறது.
அறையின் ஒருபக்க மூலையில் மேசையும் கதிரையும் இருக்கின்றன. இவையிரண்டும் ஜெகநாதன் பெரிய மனசோடு இந்த அறைக்குத் தானம் செய்தவை. மேசையில் நெருப்புப் பெட்டி முதல் ‘டிக்செனறி’ ஈறாக சகலவிதமான சாமான்களும் பரவி யிருக்கின்றன.
மேசைக்கும் மேலே சுவரிலே, ‘யாருமிக்கப் பயமேன்’ என இந்த அறைவாசிகளுக்கு அபயமளித்தவாறு தோற்றமளிக்கின்ற பிள்ளையார் – முருகன் திருவுருவப்படம். அவ்வப்போது கொளுத்தப்படும் ஊதுபத்திகளின் சாம்பல் மேசையிலுள்ள புத்தகங்களின் மேல் உதிர்ந்து கிடக்கின்றது.
அறைக் கதவின் உட்புறமாக சில அழகான குமரிகளின் கவர்ச்சிப் படங்கள் ஓட்டப்பட்டிருக்கின்றன. அந்தப் படங்களில் ஏதோ கலையம்சம் இருக்கிறது என்பது மகேந்திரனின் வாதம்.
ஒரு மண்ணெண்ணெய் அடுப்பும் வேறு தட்டுமுட்டுச் சாமான்களும் வைப்பதற்காக, அறையின் பக்கத்து மூலையில், பக்கீசுப் பெட்டிப் பலகையில் மேசையுருவில் செய்யப்பட்ட இரு பொருட்கள் உள்ளன. அதற்குக் கீழே சில சிறிய பெரிய போத்தல் களும் ஒரு துருவலையும் வைக்கப்பட்டிருக்கின்றன. வீட்டுச் சொந்தக்காரன் இல்லாத நேரம் பார்த்து சுவரில் அடிக்கப்பட்ட ஆணியில் கொழுவப்பட்டுள்ள கம்பியொன்றில் சில இடியப்பத் தட்டுகளும் ஒரு நீத்துப் பெட்டியும் ஈவிரக்கமின்றி அந்தச் சுவரின் அழகையே கெடுப்பவை போலத் தொங்கிக் கொண்டிருக்கின்றன.
அன்றாடம் கடைகளிற் சாப்பிடுவதால் ‘போகவா, நிற்கவா’ என ஊசலாடுகின்ற உயிர்களைத் தடுத்தாட்கொள்வதற்காக அவர்கள் கையாள்கின்ற தந்திரந்தான் இந்தச் சமையற் திட்டம். இதிலே எதிர்பார்த்த வெற்றியும் கிடைக்கவில்லை. தோல்வியும் இல்லை. மகேந்திரனையும் வழிப்படுத்தி ஒத்துழைக்கச் செய்தால் கரைச்சலாக இருக்காது என்பது ஜெகநாதனின் அபிப்பிராயம். ஜெகநாதன் ஆரம்பித்து வைத்த இந்த ‘நாங்களே சமைக்கிற’ திட்டத்தை முறிந்து போகாமல் நல்ல முறையில் ஒப்பேற்றிக் கொண்டு போகிறவன் சிவகுமார்.
அறையைக் கூட்டி ஒதுக்கிவிட்டு மண்ணெண்ணெய் அடுப்பைப் பற்ற வைத்துக் கொண்டே சிவகுமார் சொன்னான் “மச்சான்! நான் உலைக்குத் தண்ணியை வைச்சிட்டுத் தேங்காயைத் துருவிறன்… நீ கறியை ஒருக்கால் கழுவிக் கொண்டு வா!”
மீன் கழுவித் துப்புரவு செய்வதில் ஜெகநாதன் வலு விண்ணன். சிவகுமார் நுணுக்கம் பிடிச்சவன், ஆறச்சோர அமர்ந்திருந்து கழுவுகின்ற அளவுக்குப் பொறுமையும் இல்லாதவன்.
ஜெகநாதன் அறைக்கு வெளியே உள்ள ‘பை’புக்குப் பக்கத்தில் ஒரு பலகையைப் போட்டு அமர்ந்தவாறே மீனை வெட்டத் தொடங்கினான்.
அதிகாலையில் எழுந்து சமைத்துவிட்டு வேலைக்குப் போகும் பொழுது சாப்பாட்டைக் கட்டிக்கொண்டு போகலாம் என்றுதான் ஆரம்பத்திற் கருதினார்கள். ஆனால், அது எல்லோருக்குமே கஷ்டமான காரியமாகத்தான் பட்டது. கொழும்பு உத்தியோகத்தர் களின் வரப்பிரசாதமான பாண் காலை வேளைகளில் கைகொடுக் கின்றது. ஜெகநாதன் ஸ்பெஷலாக ‘பட்டரும்’ வேண்டி வைத்திருந் தான். பாணைச் சீவல் சீவலாக வெட்டிப் பின்னர் கரண்டியை எடுத்து மெதுவாக பட்டரில் தடவி அதைப் பாணிலே பூசுவான். இதையெல்லாம் மிகப் பொறுமையாக இருந்து நுணுக்கமாக அவன் செய்வதைப் பார்க்க ஆச்சரியமாயிருக்கும்; “இவன் சரியான கசவாரம் மச்சான்! பாணுக்கு பட்டர் தடவுகிறானோ… பட்டரைப் பொலிஷ் பண்ணுகிறானோ?… அரை கிலோ பட்டரை வேண்டி ஒரு மாதமாகுது அப்பிடியே வைச்சிருக்கிறான்” என்று மகேந்திரன் எரிச்சலோடு கூறுவதைக் கேட்டு சிவகுமார் சிரித்துக் கொள்வான்.
மத்தியான நேரத்தில் எங்காவது ஒரு கபேயில் அவரவர் பாட்டைக் கவனித்துக் கொள்வார்கள்.
இரவிலே மாத்திரம் சமைத்துச் சாப்பிடுவதற்கு வசதியான நேரம் கிடைக்கிறது. இப்படித் தாங்களே சமைப்பதால் சத்தான உணவாக இருக்குமென்ற காரணத்துக்காகச் சில சங்கடங்களை மனதார ஏற்றுக் கொண்டார்கள். இது தேகாரோக்கியத்தைப் பொறுத்தவரையிற்தான் பொருந்தும். நாவிற்குச் சுவையில்லா திருப்பது என்னவோ ‘கசப்பான’ உண்மைதான்!
சிவகுமார் தேங்காயைத் துருவி வைத்துவிட்டு அரிசியைக் களைந்து உலையில் போட்டான். பின்னர் வெண்காயம் மிளகாயை எடுத்து நறுக்கிக்கொண்டே “ஜெகா!… இவ்வளவு நேரமும் என்ன செய்து கொண்டிருக்கிறாய்?” என்று குரல் கொடுத்தான்.
“இந்தா முடிஞ்சிட்டிது… வாறன் மச்சான்!”
ஜெகநாதன் மீன் கழுவிக் கொண்டிருந்தபொழுது அகிலா வாசற்கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே வந்தாள். வீட்டைச் சுற்றிலும் சிறுசிறு சாடிகளில் வைக்கப்பட்டிருக்கிற ரோசாச் செடிகளில் அழகான மலர்கள் மெல்லிய காற்றின் தழுவலில் அடக்கமாக அசைவது போல – அகிலா எழிலாக மெல்ல மெல்ல நடந்து வருகின்ற அழகை இவனது கண்கள் கள்ளத்தனமாக ரசித்தன. மீன் அரிந்து கொண்டிருந்த கத்தி சதக்கெனக் கையைப் பதம் பார்த்து அவனது குற்றத்தை உணர்த்தியது.
அவன் மீன் கழுவிக்கொண்டிருப்பதைக் கவனித்த அகிலா, தான் காண்பதை அவன் உணர்ந்தால் கூச்சப்படக்கூடும் என எண்ணி அதைக் காணாதவள் போல மறுபக்கமாகத் திரும்பிக் கொண்டே வீட்டினுள் நடந்தாள்.
கழுவிய மீனை அறையினுள் கொண்டு சென்று உப்புப் போட்டு மூடி வைத்தவாறே, “மச்சான்! கதாநாயகி வந்திட்டா!” என்றான் ஜெகநாதன்.
“கதாநாயகியோ?… ஆரது விளங்கச் சொல்லன்.”
சிவகுமார் தேங்காய்த் துருவலில் பாலைப் பிழிந்தெடுத்தான்.
“வேறை ஆர்?… அகிலாதான்!”
காற்றுக் குளிர்மையாக வீசி வந்து உடலைத் தழுவுகின்ற சுகமான ஸ்பரிசம்.
அத்தியாயம்-3
வானம் வெளித்து விட்டது. ஆங்காங்கே நட்சத்திரங்கள் தலைகாட்டிக் கொண்டிருக்கின்றன. மழை இல்லை. காற்று வீசியதால் தூறல் போட்டுக் கொண்டிருந்த மேகங்கள் விலகிவிட்டன.
சமைத்து முடிந்துவிட்டதால் பெரியதொரு தலையிடி தீர்ந்தது போலிருந்தது. சிவகுமார் சஞ்சிகையொன்றை வாசித்துக் கொண்டிருந்தான்.
தூரத்தே கடலில் குமுறுகின்ற அலைகள்.
ஜெகநாதன் சிகரட்டைப் புகைத்தபடி, “சிவா! கடற்கரை வரைக்கும் நடந்து போய் வருவோமா?” எனக் கேட்டான். சிவகுமாரும் உற்சாகத்தோடு எழுந்தான்.
கொழும்பில் இயந்திரமயமான வாழ்க்கையில் சற்றேனும் மனதுக்கு ஆறுதலாக இருப்பது இந்தக் கடற்கரைதான். இரவு வேளைகளில் நெடுநேரம் இந்தக் கடற்கரைக் கற்களில் அமர்ந்து கொண்டு பல பிரச்சினைகளைப் பற்றியும் பேசித் தீர்த்திருக்கிறார்கள்.
கடற்கரையை நோக்கி நடந்துகொண்டிருந்த பொழுது, “அழகில்லாத பொம்பிளையைக் கலியாணம் முடிக்கிறதைப் பற்றி என்ன நினைக்கிறாய் சிவா?” என்று கேட்டான் ஜெகநாதன்.
இந்த நேரத்தில் இப்படியொரு சிந்தனை தோன்றக் காரணம் என்னவென்று எண்ணியவாறு, “ஏன் கேக்கிறாய்?” என்றான் சிவகுமார்.
“ஒரு கதைக்காகத்தான் கேட்டனான்… சொல்லன்!…. ஜெகநாதன் புதிர் போட்டான்.
“அழகில்லாத பொம்பிளையளும் கலியாணம் முடிக்கத்தானே வேணும்!”
கடற்கரையோரத்துப் புகையிரதப் பாதையின் இரும்புத் தாண்டவாளத்தில் கால்களைப் பதிந்து நடந்து கொண்டே, “அதில்லைப் பிரச்சனை… வடிவில்லாதவளை முடிச்சுக் கொண்டு மனநிறைவோடை வாழலாமா எண்டுதான் கேட்கிறன்.”
பொங்குகின்ற பேரலைகளின் இரைச்சல்.
“அது அவரவற்றை மனதைப் பொறுத்த விஷயம்!”
ஜெகநாதனுக்கு இந்தப் பதில் திருப்தியளிக்கவில்லை. ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டு நடந்து வந்த இருவரும் ஒருகல்லில் அமர்ந்து கொண்டனர்.
“சரி! உன்ரை அபிப்பிராயம் என்ன?… நீ வடிவில்லாத ஒருத்தியைக் கட்டச் சம்மதிப்பியோ?”
சிவகுமாரின் பாடு சங்கடமாகப் போய்விட்டது. ஒருவாறு சமாளித்துக் கொண்டு, “ஆரெண்டாலும் வடிவானவள்தான் தங்கடை மனைவியாய் வரவேணுமெண்டு விரும்புவாங்கள்… அப்பிடித்தான் நானும்…”
“கூ…க்….” குரலிட்டவாறு புகையிரதம் ஓடி வந்தது. பக்கத்திலிருந்து அலைகளின் ஓசையை எவ்வளவு நேரமும்கேட்டுக் கொண்டிருக்கலாம். இடையிடையே இந்தப் புகையிரதத்தின் இரைச்சலைத்தான் சகிக்க முடியவில்லை.
“அப்பிடியெண்டால் அழகில்லாதவளெல்லாம் கலியாணமே முடிக்கக் கூடாதெண்டு சொல்லுறியோ?”
சிவகுமாருக்குப் பேச முடியவில்லை. சற்று முன்னர், ‘அழகில்லாத பெண்களும் கலியாணம் முடிக்கத்தானே வேணும்’ எனத் தான் சொன்ன நியாயத்தையே அவன் திரும்பத் தனக்கு உணர்த்துவதை நினைத்த பொழுதுதான் இப்படி வாய் அடைத்துக் கொண்டது.
”என்ன பேசாமவிருக்கிறாய்… சொல்லன்… வடிவில்லாத பொம்பிளையளும் வாழத்தானே வேணும்?…. எல்லாரும் அழகிதான் வேணு மெண்டு நிண்டால்…. அழகில்லாதவையளை ஆர் முடிக்கிறது?”
“நான் சொல்லுறன் எண்டதுக்காக எல்லாற்றை கருத்தும் அதுதான் எண்டு அர்த்தமில்லை…. வடிவில்லாத பொம்பிளையளை முடிச்சுக் கொண்டு எத்தனையோ பேர் மகிழ்ச்சியாகச் சீவிக்கினம் தானே?… அதுமாதிரி அழகில்லையெண்டதுக்காக எந்தப் பெண்ணும் ஒதுக்கப்படமாட்டினம்……”
கடதாசிச் சுருளிலுள்ள சுண்டல் கடலையைக் கொறித்தவாறு ஒரு சோடி அன்னநடை போடுகிறது. அவன் அவளுக்குக் கடலையை ஊட்டியும் விடுகிறாள். அவள் அவனது மனைவியோ அல்லது காதலியோ தெரியாது.
“சரியடாப்பா! அப்பிடிச் சொல்லுற நீயே…. அழகிதான் வேணுமெண்டு நிக்கிறாய்?” ஜெகநாதனும் விடாமல் அவனது மனதைக் குடைந்தான்.
“அது என்ரை விருப்பம் எண்டுதானே சொன்னனான். அதையும் மீறி நீ சொல்லுற மாதிரி…. வடிவில்லாதவளைத்தான் முடிக்க வேண்டி வந்திட்டால் என்ன செய்யிறது?”
“அப்ப, நீ….. அழகில்லாதவளைக் கலியாணம் செய்யச் சம்மதமென்டுறாய்?”
“ஓமெண்டுதான் வைச்சுக் கொள்ளன!”…
“…இப்ப ஆரைக் கொண்டு வந்து என்ரை தலையிலை கட்டுறதுக்குக் கேட்கிறாய்?” என எரிச்சலோடு வினவினான் சிவகுமார்.
“மச்சான்…. எனக்கொரு கலியாணம் பேசி வந்திருக்கு….. ஆனால், பொம்பிளை வடிவில்லை…. அதுதான் யோசிக்கிறன்” எனப் புதிரை விடுவித்தான் ஜெகநாதன்.
சிவகுமாருக்கு ஆச்சரியம் மேலிட்டது. அழகற்ற ஒருத்தியை மண முடிக்கலாமா என அவன் கருத்திற் கொண்டதே பெரிய காரியம்தான். “நீ பொம்பிளையைப் பார்த்திட்டியே?”
“இன்னும் பார்க்கயில்லை….. ஆனால், போட்டோ பார்த்தனான்.”
“போட்டோவிலை வடிவில்லாதவையள் சிலவேளை நேரிலை வடிவாய் இருப்பினம்…” சிவகுமார் சமாதானப்படுத்தினான்.
“இல்லை….நேரிலை பார்த்த ஆக்கள் சொன்னவையள்…. அவ்வளவு வடிவில்லைத்தானாம்…”
“நீ சம்மதம் சொல்லியிட்டியோ?”
“இன்னும் சொல்லயில்லை…… ஆனால், அதைச் செய்யலாமெண்டுதான் நினைக்கிறன்.”
ஜெகநாதனின் அழகிற்கும் கம்பீரத்திற்கும் தோதான பெண் எடுப்பதானால் நல்லதொரு அழகிதான் வாய்க்க வேண்டும் என நினைத்திருந்தது பொய்யாகப் போய்விட்டது.
“உனக்குச் சம்மதமெண்டால் செய்ய வேண்டியதுதானே மச்சான்?…. பிறகேன் யோசிக்கிறாய்?”
“இல்ல…. இதிலை யோசிக்க வேண்டிய விஷயங்களும் இருக்கு!”
ஜெகநாதன் சிகரட்டை வாயில் வைத்துக் கொண்டு நெருப்புக் குச்சியைத் தட்டி அதைப் பற்ற வைக்க முயன்றான். கடற்காற்று அம் முயற்சிக்குக் குறுக்கே நின்று தடை செய்து கொண்டிருந்தது. புகையிரதப் பாதையில் ஒருவர் புகைத்துக் கொண்டு வரவே இவன், “லைட் பிளீஸ்” கேட்டுப் பற்ற வைத்துக் கொண்டான்.
“அதென்ன புதுப் பிரச்சினை?”
“இப்ப மச்சான்… நான் அவளைக் கட்டிக் கொண்டு வந்திட்டன் எண்டு வை! நாளைக்கு அவளோடை றோட்டிலை போகயிக்கை…. நாலு தெரிஞ்சவங்கள் கண்டிட்டு நொட்டை சொல்ல மாட்டாங்களோ?”
“நீ ஏன் மற்றவங்களைப் பற்றிக் கவலைப்படுகிறாய்?…. உனக்குச் சரி எண்டுபட்டால் செய்ய வேண்டியதுதானே?”
“நல்லாயிருக்கு!….. நாங்கள் இந்தச் சமூகத்திலை கௌரவத்தோடை வாழவேணுமெண்டால் மற்றவங்களுக்கும் பயப்பிடத்தானே வேணும்?….. ஊரிலை எங்களைப்பற்றி என்ன கதைக்கிறாங்கள்…. எப்படி மதிக்கிறாங்கள் எண்டதைப் பற்றிக் கவலைப்படாமல் வாழேலுமே?”
சிவகுமார் எரிச்சலடைந்தான் : ‘கௌரவம்’ என்று வெளிப்புறமான போர்வையில் மாத்திரம் போலி வாழ்க்கை வாழத்தானா இவனும் விரும்புகிறான்?
“ஜெகா!… அப்பிடியெண்டால் வீணாய் மன அவஸ்தைப் படாமல்… உனக்குப் பிடிச்ச ஒரு அழகியைக் கட்டிக்கொண்டு சந்தோஷமாய் இருக்க வேண்டியதுதானே!”
“ஒண்டும் தெரியாதவன்போலக் கதைக்கிறாய் சிவா!….. அழகியைக் கட்டினாப்போலை பிரச்சினை இல்லையே?…….. அதுகும் ஆபத்துத்தான்!”
வானத்திலே வண்ணமதியை அணைத்துச் செல்கிற மேகக்கூட்டங்கள் இடையிடையே பூமியில் இருள் கவியச் செய்கின்றன.
“ஆபத்தோ?” இடன் ஆச்சரியத்தோடு கேட்டான்.
“பின்னையென்ன?…. வடிவானவளைக் கட்டிப்போட்டு அவளுக்குப் பின்னாலையும் முன்னாலையும் திரியேலுமே!…. அழகு இருக்கிற இடத்திலைதான் ஆபத்தும் இருக்குது!…. இதாலை பிறகு குடும்பத்திலை பெரிய சச்சரவுகளும் வரும்…. இப்படி எத்தனை கேசுகளை நான் கண்டிருக்கிறன்..”
சிவகுமார் அவனை விசித்திரமாகப் பார்த்தான். தன்னம்பிக்கை இல்லாமையினாற்தான்
இவன் அழகியைக் கட்ட விரும்பவில்லையோ எனத் தோன்றியது. அவனது மனதில் அப்படியோர் எண்ணம் தோன்றுவதற்கு என்ன காரணம் என்றும் புரியவில்லை. இப்படிச் சந்தேகக் கண்கொண்டவனுக்கு யார்தா ன் ஒத்து வரப் போகிறாள்?
“அப்ப… நீ என்னதான் செய்யப் போறாய் எண்டு சொல்லன்?… பிரம்மச்சாரியாய் இருக்கப் போறியோ?”
ஜெகநாதன் இதுவரை பேசிக் கொண்டிருந்ததை விடக் குரலைத் தாழ்த்திச் சொன்னான், “இல்லை மச்சான்…. இப்ப பேசிற சம்பந்தம் நல்ல சீதனத்தோடை வந்திருக்குது!”
“ஓஹோ! இப்பத்தானே எனக்கு உன்ரை பிரச்சினை விளங்குது!… இவ்வளவு சீதனத்தோடை வந்த சம்பந்தத்தை விடவும் மனமில்லை… வடிவில்லாதவளைக் கட்டிறதுக்கும் யோசனையா யிருக்குது… அதுதான் புதுவிளக்கமெல்லாம் சொல்லுகிறாய்!….”
ஜெகநாதன் சற்று நேர மௌனம் சாதித்துவிட்டுப் பின்னர் ஒரு மெல்லிய சிரிப்புடன் சொன்னான். “சிவா!… ஒவ்வொருத்தரும் தங்களை மனதிலை வைச்சுக்கொண்டு நியாயம் சொல்லுறதுதான் வழக்கம்!… உனக்கு என்ன குறை?… அழகான ஒரு காதலி… உன்ரை அதிர்ஷ்டத்துக்கு அவள் பணக்காரியாயும் இருக்கிறாள்… அதுதான் நீ இந்த ஞாயம் பிளக்கிறாய்?… சீதனம் வேண்டாமல் கலியாணம் முடிச்சுப் போட்டுப் பிறகு கஷ்டப்படுறதே?”
“நான் அதுக்காகச் சொல்லயில்லை மச்சான், உண்மையைச் சொன்னால் நான் இந்தச் சீதன முறைக்கே எதிர்ப்பானவன்தான்… இப்ப, உன்னையே எடுத்துக் கொள்ளுவம்! சீதனம் வேண்டித்தான் கலியாணம் முடிக்க வேணுமெண்டு என்ன அவசரம்?… சொத்துப் பத்தில்லையோ… வீடு வாசலில்லையோ… கை நிறையச் சம்பளம் எடுக்கிறாய்!… வேறை என்ன தேவை?….”
“என்ரை பிரச்சினை என்ணெண்டால் மச்சான் அண்ணை யவையள் ரெண்டு பேரும்… நல்ல இடங்களிலை… பொருள் பண்டத்தோடை ‘மெறி’ பண்ணி நல்லாயிருக்கிறாங்கள்… பிறகு, நான் சீதனம் வேண்டாமல் செய்தால்…. மதிக்கமாட்டினமெல்லே? அவையளைப்போலை நானும் ‘ஸ்ரேற்றசை மெயின்ரெயின்’ பண்ண வேணுமெண்டால் சீதனம் வேண்டத்தான் வேணும்.”
கடல் அலைகள் பெரிதாகச் சிரிப்பதுபோல் கற்களில் மோதிக் கொள்கின்றன.
– தொடரும்…
– 1975-ம் ஆண்டளவில் சுதாராஜ் எழுதிய முதலாவது நாவல்.
– இளமைக் கோலங்கள், முதல் பதிப்பு: 2005, மணிமேகலைப் பிரசுரம், சென்னை.