இல்லறவியல்
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: October 12, 2022
பார்வையிட்டோர்: 2,224
(1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
திருக்குறள் கதைகள்
அன்புடைமை
எல்லாரிடத்தும் அன்புடையராய் இருத்தல்
அங்கவை, சங்கவை என்ற இரண்டு பெண்மணிகளும் தம் தந்தையாகிய பாரியினிடத்தில் வைத் திருந்த அன்பே பாரி இறந்ததும் கபிலரிடம் விருப்பம் உடையராய் வாழும் தன்மையை அளித்தது. அக்கபிலர் அழைத்துப்போய்த் திருக்கோவலூரில் விட்டு வடக்கிருந்து உயிரைவிடச் சென்றதும் அவ்விருப்பமே பசியோடு வந்த ஒளவையின் பசியை நீக்கி அவளோடு பழகும் நட்பை உண்டாக்கியது. இந்நட்பே இவர்களுக்கு அளவிடமுடியாத சிறப்பை உண்டாக்கியது. இதனால் அன்பு, விருப்பத்தையும் விருப்பம் பிறரிடம் பழகும் நட்பையும் உண்டாக்கும் என்று வள்ளுவரும் கூறியுள்ளார்.
அன்பீனும் ஆர்வம் உடைமை; அது ஈனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு.
அன்பு = (சுற்றத்தாரிடத்தில் காட்டிய) அன்பு
ஆர்வமுடைமை = பிறரிடத்தும் விருப்பம் உடைமை ஆகும் தன்மையை
ஈனும் = கொடுக்கும்.
அது = அவ்விருப்பமுடைமை
நண்பு என்னும் = (யாவரும்) சிநேகம் என்று சொல்லப்படும்
நாடாச்சிறப்பு = அளவிடமுடியாத மேன்மையை
ஈனும் = கொடுக்கும்
கருத்து: அன்பு, விருப்பத்தையும், விருப்பம் நட்பையும் உண்டாக்கும்.
கேள்வி: அன்பு, மக்களுக்குச் செய்யும் நன்மைகள் எவை?
– திருக்குறள் கதைகள் – 28-1-1949 – நான்காம் உயர்வகுப்புக்குரியது (IV Form) – அரசியலார் வகுத்த புதிய பாடத்திட்டப்படி எழுதியது – இந்நூல் திருக்கயிலாய பரம்பரைத் தருமபுர ஆதீனம் இருபத்தைந்தாவது மகா சந்நிதானம் ஸ்ரீ-ல-ஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திருவுள்ளப்பாங்கின்படி சிதம்பரம், வித்துவான் திரு.ச.சேதுசுப்பிரமணிய பிள்ளை அவர்களால் எழுதப்பெற்றது.