இறந்த அண்ணாவுடன் ஒரு வாக்குவாதம்





நான் பார்க்கிங் லாட்டை விட்டு காரில் வெளியே வந்தபோது தான் இன்றைய தேதி நினைவுக்கு வந்தது. ஏப்ரல் 14, 2045. அடாடா, என் அண்ணன் ராஜ்குமாரை அழைக்க மறந்துவிட்டேன்! உடனே அவன் நம்பருக்கு போன் செய்தேன்.
என் அண்ணாவின் கரகரத்த குரல் கேட்டது. “ஏய்,ரம்யா. என்ன விஷயம்?”

நான் ஒரு நிறுத்தத்தில் வேகத்தைக் குறைத்துக்கொண்டே சொன்னேன், “ராஜ், இன்று என்ன நாள் என்று உனக்கு ஞாபகம் இருக்கிறதா? இன்று உன்னுடைய மரண நாள். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாளில் தான் நீ இறந்து போனாய்.”
“ஓ, என் மரண நாளில் என்னை நினைவு கூர்ந்ததற்கு நன்றி!” அவன் தொனியில் இருந்த கிண்டலை நான் புறக்கணித்தேன். என் அண்ணன் எப்போதும் இப்படித்தான். அடுத்தவரை குத்திப் பார்ப்பதில் அவனுக்கு அலாதியான திருப்தி.
“அம்மா எப்படி இருக்கிறாள், ரம்யா?” என்று கேட்டான் உடனே.
“ம்ம்ம், நன்றாக இல்லை… ரொம்ப பலவீனமாக இருக்கிறாள், விஷயங்களை சுலபத்தில் மறந்து விடுகிறாள். நான்… ”
அவன் குறுக்கிட்டு, “நாம் கடைசியாக பேசும்போது நான் உன்னிடம் என்ன சொன்னேன்?” என்று கேட்டான். குரலில் கோபம் எட்டிப் பார்த்தது.
நான் உறுதியாக சொன்னேன், “அது மட்டும் முடியாது, ராஜ். நான் அம்மாவைக் கண்டிப்பாக முதியோர் இல்லத்தில் சேர்க்கப் போவதில்லை.”
“அடப்பாவி! நீ அவளைக் கொல்லப் போகிறாய். அவளால் இனி தனியாக வாழ முடியாது என்பதை உன்னால் புரிந்து கொள்ள முடியவில்லையா?”
“அதை என்னிடம் விட்டு விடு, ராஜ். அவள் என் பொறுப்பு. நான் அவளைப் பார்த்துக் கொள்கிறேன்,” என்றேன் நான் ஆயாசத்துடன்.
“எப்படி முடியும்? நீ அவளிடமிருந்து ஐம்பது மைல் தொலைவில் வசிக்கிறாய்… அவள் கீழே ஏதாவது விழுந்து வைத்தால் நீ என்ன செய்வாய்?” அவன் இப்போது கத்த ஆரம்பித்தான்.
நான் பெருமூச்சு விட்டேன். இந்த மாதிரிப் பேசுவது அவனுக்கு சுலபம்… தினசரி வாழ்க்கையில் கஷ்டப்படுவது அவனல்லவே, நான் தானே!
“இனி இப்படி என்னைக் கூப்பிட்டு அம்மாவின் நிலையைப் பற்றி புலம்ப வேண்டாம்.” என்று சொல்லி விட்டு, என் பதிலுக்கு காத்திராமல் அவன் இணைப்பை துண்டித்து விட்டான்.
என்ன ஒரு இரக்கமில்லாத ராட்சசன் என் அண்ணன்! நான் போனை பக்கத்திலிருந்த இருக்கையின் மீது எறிந்துவிட்டு ஆக்சிலேட்டரை பலமாக அழுத்தினேன். என் உதடுகள் துடித்தன.
இதெல்லாம் என் தவறு. சமீபத்திய AI (Artificial Intelligence) சாஃப்ட்வேர்களை பயன்படுத்தி இறந்த எனது அண்ணாவின் டிஜிட்டல் பதிப்பை நான் உருவாக்கியபோது, “டிஜிட்டல் பதிப்பில் இறந்த உறவினரின் ஆளுமை இருக்க வேண்டுமா?” என்ற கேள்விக்கு நான் இல்லை என்று பதிலளித்திருக்க வேண்டும்.