இருவரும் அழுதனர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 1, 2025
பார்வையிட்டோர்: 476 
 
 

(1964ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“அம்மே மகே அ…ம்…மே ” 

வேதனையின் பாரத்தையெல்லாம் உயிரிலே ஏற்றி, அந்த உயிரை உதட்டிலே நிறுத்தி ஓலமிட்டாள் விமலவதி. 

டொக்டரும், நேஸ்மாரும் திடுக்கிட்டுப் போனார் கள். பிரசவத்தின்போது இவ்வளவு வேதனையை அநுப விக்கும் ஜீவனை அவர்கள் கண்டது, இதுதான் முதல் தடவை. 

நேரம் நொடிகளாகப் பிறந்து, நிமிஷங்களாகத் தவழ்ந்து மணித்தியாலங்களாக நடைபயின்று கொண் டிருந்தது. விமலவதியின் வாழ்க்கை என்ற சிலந்தி வலை யிலே பாய்ந்து, அதைச் சீர்குலைக்கக் காலப்பூச்சி தருணம் பார்த்திருந்தது. 

ஆனால்… அதற்குத் தோல்விதான். வாழ்வுப் போரிலே விமலவதி, இறுதியில் வெற்றி பெற்றுவிட்டாள்! 

மயக்க மருந்தும், டொக்டரின் கடமை உணர்வோடு கலந்திருந்த ஒப்பறேசன் திறமையும் சேர்ந்து, விமலவதியைக் காப்பாற்றி விட்டன. 

குழந்தை பிறந்தது. 

விமலவதி மயங்கிக் கிடந்தாள். 

அதன் கோலம்…! 

குழந்தையா அது? 

டொக்டரின் வாய் ‘ஹைட்ரோசிபலெஸ்’ என முணுமுணுத்தது. மூளைக்குள் நீர் நிறைந்துவிடும் வியாதியாம். 

அங்கு நின்ற எல்லோருடைய கண்களிலும் வேதனை யும், அநுதாபமும் குமிழியிட்டு நின்றன. பாவம், விமலவதி! 

காலம் வருஷங்களைப் பிரசவித்தபடி இருந்தது. விமலவதியின் குழந்தை என்ற ‘அது ‘ வும் வளர்ந்து வந்தது. 

மனிதத் தலைகள் இரண்டை ஒன்றாக்கி அமைத்த தைப் போலப் பெரிய தலை : அதிலே குட்டிக் கண்கள், குட்டி மூக்கு, குட்டி வாய், 

குட்டி வாய், குச்சிக்கால்கள், குச்சிக் கை, சிறிய உடல். 

ஆட்டம் – அசைவு எதுவுமே இல்லை. கிடத்திய கிடைதான். உயிரின் துடிப்பு மாத்திரம் கண்களிலும் மூக்கிலும் ஆடியபடி இருந்தது. அவ்வளவே ! 

விமலவதி அதைப் பெற்றதும் வேதனைதான், வளர்த்ததும் வேதனைதான். எல்லாமே வேதனை ! 

அதைப் புதினம் பார்க்க இதயமற்ற சனக்கும்பல் ஒவ்வொரு நாளும் வந்தபடியே இருந்தது. அவர்கள் வரும்போதெல்லாம் அத்தனை பேரையும் கழுத்தைத் திருகிக் கொல்ல வேண்டும் என்று ஆத்திரப்படுவாள் விமலவதி. அவளின் தாயுள்ளம் குமுறிக்குமுறி அடங்கும். 

சாடியுள்ளே அடைக்கப்பட்டிருந்த பூதத்தைப் போல, விமலவதியின் சிறிய நெஞ்சினுள்ளே தாய்மை பூதாகாரமாக வளர்ந்து, உலகத்தைத் தன் கற்பனை யிலே சுட்டெரித்தபடி இருந்தது. 

விகாரங்களிலே அவள் போடுகின்ற ஒவ்வொரு பூவும், கொடுக்கின்ற ஒவ்வொரு தானமும், அந்தக் குழந்தையின் நன்மையைக் குறிப்பனவாகவே இருந்தன. 

“அற்புதம் நிகழத்தான் போகிறது. எனது குழந்தையின் தலைசிறுத்து, அதுவும் குதலை பேசிக் குறுகுறு நடந்து என்னை மகிழ்விக்கத்தான் போகிறது.” 

விமலவதி பொறுமையோடு காத்திருந்தாள். 

விமலவதியின் கணவன் பியசிறி. ஆள் எப்பொழு தும் ஒரு மாதிரிதான்! ஆடம்பர புருஷன் மடிப்புக் கலையாத ‘சேட்’ அணிந்து கொலருக்குள் தெரிந்துந் தெரியாதது போல லேஞ்சியை மடித்து வைத்து, பளைய காட்’ சறம் படபடக்க, கோட்டும் அதுவும் இதுவுமாய் மாப்பிள்ளை போலத்தான், அவன் காட்சி தருவான் ஐந்து ரூபா உழைத்தால் பத்து ரூபாவிற் குச் செலவு காத்திருக்கும். எத்தனை எத்தனையோ ரகச் செலவுகள், பொழுதுபோக்குகள் அவனுக்கு ! 

சனி, ஞாயிற்றுக் கிழமைகளிலே தவறணையில் வாடி விடுவதும், மற்ற நாட்களில் ‘திறீறோஸஸ்’ சிகரெட்டும் கையுமாக, உலகத்தையே விலைக்கு வாங்கியவன் போலத் திரிவதும் பியசிறியின் வழக்கம். 

இதற்கெல்லாம் உழைக்க வேண்டுமே? ‘வாழைப் பழத்தை உரித்துத் தரும் கை அதை ஊட்டியும் விட் டால் என்ன என்ற நம்பிக்கையிலே, எதிர்பார்ப்பிலே வளர்ந்து ஊறிவிட்ட, சோம்பேறி அவன். 

இப்படிப்பட்டவனுக்கு அந்த மனிதப் பிண்டத்தைப் பார்க்க எப்படி இருக்கும் ? 

அவன் அதை வெறுத்தான்; நஞ்சுபோல வெறுத்தான். 

விமலவதி ‘அதை’க் கட்டியணைத்துத் தாய்மையைப் பொழியும்போதெல்லாம், வெறுப்பிலே அவன் நெளிந்து கொண்டிருப்பான். அருவருப்பால் பாதாதிகேச பரி யந்தம் நடுங்கும் அவனுக்கு! அந்தச் ‘சனி’ யனைப் பியசிறி ஒரு நாளாவது, கடமைக்குக் கூடத் தூக்கிப் பார்த்ததில்லை, 

அதைத் தன் குழந்தை என்று நினைக்கும் நினைப்பே அவனைச் சித்திரவதை செய்யும். கூனிக் குறுகிப் போவான். 

“பார், பார். ஒரு நாளைக்கு இந்தச் சவத்தை மண்டையிலே ஒரே போடாகப் போட்டு வாயைப் பிளக்க வைக்கிறேன். பார்” என்று மிருகம்போல உறுமுவான். 

விமலவதி சிலவேளைகளிலே, அவனோடு சண்டைக்குப் போவாள். இது என் குழந்தை. பத்து மாதம் சுமந்து பாடாய்ப் பட்டு நான் பெற்ற செல்வம், இதைக் கொல்ல முன்பு என்னைக் கொன்றுவிடு” என்று விமலவதி கண்ணீர் விடுவாள். 

பியசிறி, “பைத்தியக்காரி! பிள்ளையாம் பிள்ளை! இது பேய்” என்று தனக்குள் முணுமுணுப்பான். 

திடீரென்று பியசிறிக்கு ஞானோதயம் பிறந்து விட் டதோ? தன் பிழைகளுக்காய்ப் பிராயச்சித்தம் செய்ய எண்ணிவிட்டானோ? 

அன்று வீட்டிற்கு வந்ததிலிருந்து, அதோடு ஒட்டிப் பழகுகிறானே? கொஞ்சுகிறான், தாலாட்டவுமல்லவா தொடங்குகிறான் ? 

விமலவதிக்கு முதலில் விளங்கவில்லை. பிறகு, அவன் விஷயத்தை உடைத்தபொழுது… 

குழந்தையைக் கொண்டு சென்று ஒவ்வோரிடத்திலும், புதினங் காட்டிப் பிழைக்கப் போகிறானாம்! 

வேறுவிதமாகச் சொன்னால், மக்களின் அநுதா பத்தை வைத்துக் கொண்டு, கடவுளுக்கும், மனிதனுக்கு மிடையே, ‘தர்ம ஏஜன்ட்’ ஆகப் போகிறான், 

“தூ நீயும் ஒரு மனிதனா? உனக்கு வெட்கம் இல்லையா ? உன் பிள்ளையைக் காட்சிப் பொருளாக்கிப் பணஞ் சம்பாதிக்க உன்நெஞ்சு எப்படி இடம் தந்தது “? 

விமலவதி அவனைத் திட்டுதிட்டென்று, திட்டிக் கதறி ஒப்பாரி வைத்து….. 

பியசிறி அசைந்து கொடுக்கவில்லை. இந்தா ! ஏன் கத்துகிறாய்? இது எனக்கும் பிள்ளை தான், உன்னளவு உரிமை இதில் எனக்கும் இருக்கிறது. எனக்குக் குறுக்கே நீ நின்றால்….. ? அவ்வளவுதான் தொலைத்துத் தலை முழுகிவிடுவேன். உனக்கும் எனக்கும் தொடர்பில்லை என்றாகிவிடும். உன்னைத் திரும்பியும் பார்க்கமாட்டேன். எங்காவது போய்விடுவேவேன் என்று அவன் அழுத்தமாக, ஆனால் நிதானமாகச் சொன்னான். 

சுரணை நரம்பில்லாத பியசிறி பிடிவாதக்காரனுங் கூட சொன்னபடி செய்தும் விடுவான். அவனுடைய குணாம்சத்தில் இந்தப் ‘பிடித்த முயலுக்கு மூன்று கால் தனம் என்பது மிகமிக முக்கியமானது. 

‘விமலவதி தாய் மட்டுமல்ல, அவள் பியசிறியின் மனைவி என்பதும், மிகமிக முக்கியமான தவிர்க்க முடியாத பந்தம்’ என்று அவளின் பெண் நெஞ்சு பேசியது. 

அவள் பியசிறிக்குப் பணிந்து போய்விட்டாள். 

அடுத்த நாளிலிருந்து பியசிறியின் புதிய உத்தியோகம் ஆரம்பமாகியது. 

பட்டினப் பகுதிகள். சனப் புழக்கமான இடங்க ளுக்கு அவன் குழந்தையைத் தூக்கிச் செல்வான். மர நிழலிலோ, றோட்டுக் கரைகளிலோ, நடைபாதையிலோ, ஒரு துண்டை விரித்து அதைக் கிடத்தி விடுவான். 

“ஐயா! தருமவான்களே! இந்தக் குழந்தையைப் பாருங்கோ. ஏதோ தெய்வக் குறைபாடாம். இதைப் பெற்ற சீமாட்டி அன்றைக்கே கட்டையைப் போட்டு விட்டாள். நான் சும்மா இருக்க முடியுமா? பெற்ற தகப்பனல்லவா ? இந்தக் குஞ்சைக் கொண்டு எத்தனையோ தெய்வ சந்நிதியிலெல்லாம் கிடத்திக் குறையிரந்தேன். ன்னும் நோய் மாறவில்லை. என் பிள்ளையை நினைச்சு எனக்கு மூளையும் விறைத்துப் போய்விட்டது. இதை விட்டுவிட்டு எப்படி உழைக்கப் போவேன்? தருமதா தாக்களே ! எங்களுக்கு இரங்கி உங்கள் தர்ம சிந்தனை யைக் காட்டுங்கள். உங்கள் பரம்பரையெல்லாம் சீரோடும் சிறப்போடும் வாழும். புத்த பகவான் கருணை செய்வார்” என்று அவன் சத்தம் போடுவான். 

முதலில் இப்படிச் சத்தம் போடுவது கஷ்டமாகத் தான் இருந்தது; வெட்கமாகக்கூட இருந்தது. குரலும் நெளிவு குளைவின்றி மறமறப்பாக இருந்ததால், ‘தர்மதாதா’க்களின் இரக்கத்தை வரவழைப்பது கஷ்ட மாய் இருந்தது. ஆனால், போகப்போகப் பியசிறி பழகி விட்டான். குரலும் வரவர மெருகேறி இரக்கத்தின் உற்பத்தித் தானமாகிவிட்டது. 

கந்தலும், அழுக்குமான துண்டு துணிகளைத் தன் உத்தியோகத்திற்கு. ‘யூனிபோம்’ ஆக்கிக் கொண்டான். முகத்திலே தாடி வளர்ந்து ஏழ்மைக்கு அழகும் பூரண துவமும் அளித்தது. 

மக்களின் நெஞ்சைப் பிழிந்து அவர்களின் மடிப் பாரத்தைக் குறைக்கும் கலையிலே பியசிறி நிபுணனாகிக் கொண்டே வந்தான். 

கோயில் உற்சவங்கள், விழாக்களின் போதெல்லாம் அவை நடக்கும் இடங்களுக்குச் சென்று, அவன் நூற் றுக் கணக்கிலே பணம் சம்பாதித்தான். 

குழந்தையில் அவனுக்கு இப்பொழுது எந்த அரு வருப்புமே இல்லை: சமயாசமயங்களிலே மலசலங்கூட எடுத்தான். கிரமமாகக் குளிப்பாட்டினான். நல்ல தீனி’ யும் கொடுத்தான். முதலான முதல் அல்லவா? 

பிச்சைக்காரனாக உழைத்தாலும் மகராஜா போலச் செலவழிக்கத் தெரியும் பியசிறிக்கு. 

மாலையானால் குருடோ, முடமோ யாருடைய பொறுப்பிலாவது பிள்ளையை விட்டுவிட்டு அவன் ‘சிற்றுலா’ போவான்; சினிமா பார்ப்பான் ; சிகறற் புகைப்பான். 

இப்பொழுதெல்லாம் அவன் கள்ளின் பக்கமே போவதில்லை. சாராயந்தான் குடிப்பான். 

பணந்தான் குவிகிறதே ! 

ஒன்றுதான் அவனுக்கு விளங்கவில்லை. வருத்தமாகக் கூட இருந்தது. தன்னுடன் கூடப் பிச்சைப் பிழைப் புக்கு விமலவதியை அழைத்தால், அவள் பிடிவாதமாக அதற்கு மறுத்தே வந்ததுதான் அந்த விளங்காத புதிர். 

தாயின் கண்ணீரிலே, இரக்க உரையிலே தன் வியா பாரத்தை விரிவடையச் செய்ய அவன் விரும்பியதில் என்ன தவறு? 

விமலவதிக்கு விளங்கவில்லை.
‘பைத்தியக்காரி’ 

பத்து நாள், இருபது நாள் என்று திரிந்துவிட்டுக் குழந்தையோடு வீட்டிற்கு வருவான் பியசிறி. 

அந்த நேரங்களிலே அதைத் தன் அன்பால் முழுக் காட்டி விடுவாள் விமலவதி. சீ ! அந்தச் சனியனை முகம், வாய் என்று பாராமல் முத்தம் இடுகிறாளே!’ என்று பியசிறி ஆச்சரியப்படுவான். 

ஒல்வொரு தடவையும் இந்தத் தொழிலை விட்டு விடு. உழைச்சுப் பிழைச்சு என்னையும் பிள்ளையையும் காப்பாற்று” என்று விமலவதி மன்றாடும்பொழுது அவளை ஏசிப்பேசி விரட்டவும் பியசிறி தவறவில்லை. 

இந்த மிரட்டலிலே ஒன்றிற்கு என்றைக்குமே செவிசாய்க்காது அவள் இருந்து வந்தாள். 

அவன் சம்பாதிக்கும் பணத்திலே ஒரு செம்புச் சல்லி யைக்கூட அவள் தீண்டுவதில்லை. 

வீடுவீடாய்ச் சென்று விமலவதி கூலிவேலை செய் வாள். வயல்களிலே, தோட்டங்களிலே சென்று நாலு காசு உழைப்பாள். அந்தப் பணத்திலேதான் அவள் அரைவயிற்றுக் கஞ்சியாவது குடித்து வந்தாள். 

“புத்ததேவா ! என் பிள்ளையைக் காட்சிப் பொரு ளாக்கி உழைக்கிற பணம் எனக்கு நஞ்சு. அதைத் தொடாமலே இருக்க எனக்கு அருள் தா. என் செல் வத்தின் தலையை நல்ல மாதிரி ஆக்கு.” என்று மண்டி யிட்டு நின்று, கண்ணீரை மலரோடு சேர்த்துப் புத்த தேவனின் காலடியிலே ஒவ்வொரு நாளும் சமர்ப்பித்தே வந்தாள், அவள். 

எப்படியோ நாலு காசு மிச்சம் பிடித்துத் தன் பிள்ளைக்கு ஒரு பொன்சங்கிலி கூடச் செய்து போட் டாள். அந்த வேளையிலே ஒவ்வொரு தாயும் அடையும் பெருமையை அவளும் அடையவே செய்தாள். 

பியசிறியின் தொழில் முடங்க வேண்டிய சந்தர்ப்ப மும் ஏற்பட்டது. 

‘வெசாக்’ விழாவிற்கு அநுரதபுரத்திற்குச் சென் றிருந்தபொழுது அது நடந்தது. 

சனநெரிசலிலே அது தவறிக் கீழே விழுந்து…… பலமான அடி. 

மண்டை உடைந்து விட்டது. பியசிறி குழந்தையை ஆசுப்பத்திரிக்குக் கொண்டு சென்றான். 

தந்தி பறந்தது. விமலவதி ஓடோடி வந்தாள். குழந்தையின் நிலைகண்டு இருவரும் அழுதனர். 

“ஐயா என் பிள்ளையைக் காப்பாற்றுங்க, ஐயா ! என் உயிரை வேணுமென்றாலும் கொடுக்கிறேன். அதைக் காப்பாற்றுங்க” என்று விமலவதி டொக்டரி’ன் காலடியிலே வீழ்ந்து கதறினாள். 

“ஐயா ! ஐயா ! அதைக் காப்பாற்றுங்க ஐயா ! ஆயிரம் ரூபா வேணுமென்றாலுந் தருகிறேன்” என்று பியசிறி கதறினான். 

இருவரையும் ஏமாற்றிவிட்டு அது அமைதியில் கலந்தது.  

பியசிறியும் விமல்வதியும் அதன்மீது விழுந்து விம்மி விம்மிக் கதறிக் கதறி அழுதார்கள். 

– கலைவாணி, டிசம்பர் 1964.

– கடல் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 1972-6-27, நண்பர் வெளியீடு, யாழ்ப்பாணம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *