இருளிலிருந்து




(1939ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
க்ஷண சுகத்திற்குப் பிறகு ஏற்பட்ட அந்த ஆழ்ந்த வெறுப்பு அவருடைய உள்ளத்தைக் கிளறிவிட்டது. யசோதரை அப்படியே தூங்கிவிட்டாள். சித்தார்த்தனுக்குத் தூக்கம் கொள்ளவில்லை. கட்டிலிலிருந்து எழுந்து அறையில் உலவினார். சுகத்தைப் பற்றியும் துக்கத்தைப் பற்றியும் அவர் எண்ணங்கள் மேன்மேலும் உயர்ந்து கிளம்பின. ஆரோக்கியமும் யௌவனமும் சுகபோதை கொடுக்கும் மதுவாக இருக்கின்றன. சரீரத்தி லிருந்து அந்த மது குறைந்தால், நோயும், மூப்பும்-மரணமுங்கூட- துக்க பரம்பரையாகத் தோன்றுகின்றன. எது நிரந்தரம் ? ககம் நிச்சயமாக நிரந்தரமன்று; ஆனால் துக்கமும் நிரந்தரமன்று. சுகமென்னும் வெள்ளப் பெருக்கு எப்பொழுதும் துக்கமென்றசாகரத்தில் போய்த்தான் முடிவடை கிறது. சுகமே துக்கத்திலிருந்துதான், சிரமத்திலிருந்து தான் உற்பத்தியாகிறது. சொல்லப்போனால்.

சுகம் நிச்சயமில்லை. நோய், மூப்பு, மரணம் இவை நிச்சயம். சுகம் கொஞ்சம்; துக்கந்தான் அதிகம். எதற்காக இந்தத் தாரதம்மியம்? சுகம் ஏன் நசிக்கிறது? துக்கம் என் நீடிக்கிறது? துக்கம் ஏன் சதா சுகத்தின் இறுதியில், மாலையின் இறுதியில் மையிருட்டுப்போல, தென்படு கிறது ? துக்கம் தொலையக்கூடியதா? துக்கமற்ற சுகம் உண்டா? அது எது ?
‘யசோதரையிடம் நான்பெறும் இன்பம் நீடிக்க வில்லை. என்? யாசோதரையின் அழகே இன்பத்திற்குக் காரணம், அது நீடிக்காதே! அதன் பூரணப்பிரபையை மூப்பு வந்து ராகுபோலக் கிரஹிக்கும். கிருஷ்ண பக்ஷத்தின் சதுர்த்தசிபோல மரணமே வந்து அதை அபகரிக்கும். அவளுடைய காதல்?- அதுதான் நீடிக்குமா மரணத்தின் முன்பு?
ராஹுலனின் இளமையையும் அழகையும் பார்க்கும்பொழுது எனக்கு இப்பொழுது சந்தோஷமில்லை. மூப்பின் ஞாபகம், மரணத்தின் ஞாபகந்தான் வருகிறது. சௌந்தரியமே எனக்குச் சாவைத்தான் நினைப்பூட்டுகிறது: சாவுதான் உண்மை. அழகும் அன்பும் உண்மையல்ல.
‘அது கூடாது. சாவு உண்மையாகக் கூடாது! அழகும், அன்பும் அழியக்கூடாது. அவை தோன்றி மறைவதென்றால், பருவத்தின் புஷ்பங்கள் போல மலர்ந்து உதிர்ந்து போவதென்றால், வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லை. அவற்றை ஓர் அம்சத்தில் உலகத்தில் நிலைநிறுத்த வேண்டியது அவசியம். முயற்சிசெய்தால், அது முடியுமானால், என்ன சிரமந்தான் படக்கூடாது? நான் படுகிறேன், அந்தச் சிரமம். தேவை யானால் என் சுகத்தையே -வாழ்க்கையையே, அதற்குத் தியாகம் செய்கிறேன்’.
சித்தார்த்தனுடைய ஹிருதயத்தைத் துயரம் எட்டிக்கூடப் பார்க்க முடியாமல் பாதுகாத்துக்கொண்டு வந்தார் அவருடைய தகப்பனாரான சுத்தோதனர்; துக்கம் என்ற களங்கத்தையே அறியாத துல்லியமான உள்ளம் படைத்தவனாகத் தம் மகனை வளர்த்தார்.
மகன் கண்முன் வறுமை தென்படக் கூடாதென்று ஆக்ஞாபித்தார்; நோயின் குரவோ, காட்சியோ அவர் அருகிவேயே இருக்கக்கூடா தென்றும் கட்டனையிட்டார். மூப்பின் முதிர்ந்த களைப்புங்கூட அவர் மனத்தைக் கிளறக்கூடாதென்று ஜாக்கிரதையாகப் பாதுகாத்து வந்தார்.
இவ்வளவு முன்னெச்சரிக்கைகளுடன் கூடிய அந்த வாழ்க்கையால் சித்தார்த்தருடைய நினைவுகள் போக்கற்று, சுக திக்கிலிருந்து திரும்பி வாழ்க்கையின் மூலாதாரங்களைப் பிறப்பிலும் இறப்பிலும், வளர்ப் பிலும், இளைப்பிலும், ஊக்கத்திலும், நினைப்பிலும் ஆராய்ச்சிசெய்ய ஆரம்பித்தன. சாதாரணமாக அவரை, எல்லோரையும் போல வாழ்க்கை யில் அடிபடும்படி விட்டிருந்தால் அவர் புலன் அவ்வளவு தீக்ஷண்ய மாயிருந்திராது; வாழ்க்கையின் மேடு பள்ளங்களில் நடக்காததாலேயே அவர் மனம் மேலும் மிருதுவாகிப் புஷ்பப்பாதையிலேயே புண்பட்டது. உலகத்தில் தினசரி கண்ணில்படும் கொடுங்காட்சிகளை அடிக்கடி பார்த்து உள்ளத்தின் உணர்ச்சிகள் கூர்மை மங்கிப்போயிருந்தால், அவர் மனம் பிறகு அவ்வளவு பாடு பட்டிராது, அப்பொழுதுதான் மவர்ந்த மொக்கின் ஹிருதயம் போல அவர் ஹிருதயம் சதா காற்றுப்படாது புத்தம் புதிதாகவே இருந்ததால் அதன் மூச்சே அதைப்புடைத்து, தொட்டாற் சுருங்கியைப் போலச் சுருங்கச் செய்தது.
அவருடைய இன்பக்கனவின் இறுதியில் ஒரு சலிப்பும் ஓய்ச்சலும் உணர்ச்சிச் சாவும் ஏற்பட்டதைக் கண்டதுமே அவருக்கும் வெளியுலகத் துக்கும் நடுவே இருந்த திரையில் ஓர் ஓட்டை விழுந்துவிட்டது. அவ்வளவுதான். அதன் வழியாக வாழ்க்கையின் துன்பப்புயல் புகுந்து பாய்ந்து அவரைத் தாக்கிற்று.
அதனால்தான் துன்பமும் நோயும் மூப்பும் சாவும் சித்தார்த்தரை வேறுயாரையும் கலக்காத முறையில் கலக்கின. உலகத்தில் வேறு யாருமே திகைப்புக் கொள்ளாத வகையில் அவர் வாழ்க்கையின் துவந்துவங்களைக் கண்டு திகைப்புக் கொண்டார்.
அந்தத் துவத்துவங்களின் மூலங்களை ஆராய்ந்து களைந்தெறியாத வரையில் வாழ்க்கையில் அழகும் அன்பும் க்ஷணசுகங்களாகத்தான் இருக்கும் என்ற எண்ணம் அந்த நன்ளிரவில் அவருக்குத் திடீரென்று தோன்றிற்று.
இன்பமயக்கம் அளிக்கும் பலவித வாசனைகன் கட்டியது போன்ற அந்தப் பள்ளியறையின் சாளரத்தைத் திறந்து வெளியே பார்த்தார். அவர் உள்ளமும் தன் ஒற்றைக் கதவைத் திறந்துகொண்டு வெளியே பார்த்தது.
இரவு, மரணத்தின் கோரஸ்வரூபம் போல. மெளன தாண்டவம் செய்துகொண்டிருந்தது. வாழ்க்கையே ஒரு மந்திர சக்தியில் ஏங்கிக் கிடக்கும்பொழுது அதன் ஹிருதயத் துடிப்புப்போலச் சுவர்க்கோழிகள் இடைவிடாமல் சத்தம் செய்து கொண்டிருந்தன. எங்கும் மேகம் கவிந்து இருள் நிறைந்திருந்தது.
திடீரென்று சித்தார்த்தன் தன் வாழ்க்கைப் பள்ளியறையின் சிறுமை யையும் வெளியுலகத்தின் விஸ்தாரத்தையும் ஒப்பிட்டுப் பார்த்த பொழுது அவருக்குச் சிறியதில் ஒரு வெறுப்பும் பெரியதில் ஓர் ஆழ்ந்த இரக்கமும் ஏற்பட்டது. சுகவாசனையும் அழகொளியும் ஏறிய அந்த அறை, சுற்றிலுமிருந்த சோக இருளில் ஓர் அணுப்போலத் தென் பட்டது. அந்த ஒளியிலிருந்து பாய்ந்து அந்த இருளில் குதித்துவிட வேண்டுமென்று அவர் உடனே வேட்கை கொண்டுவிட்டார்.
அந்த மகத்தான முகூர்த்தத்தில் அவருக்கு மனைவி நினைவும் மகன் நினைவும் அற்றுப்போயின; தன் நினைவு கூட அற்றுப்போய் விட்டது; அந்த ஒளியுலகத்துடன் தனக்கு இருந்த பற்று அந்த நிமிஷம் அறுபட்டு விழுந்ததைக் கண்டார்.
முன்னே கிடந்த முடிவற்ற இருள் அவரைக் கூவி அழைத்தது. பொங்கி வழியும் அலைகள் போல.
தகப்பன் கட்டிவைத்த இன்பச்சிறையால் சித்தார்த்தரைக் கட்டுப் படுத்த முடியவில்லை; யசோதரையின் அழகும் ராஹுலனின் அன்புங் கூட அவரை அப்பொழுது அசைக்க முடியவில்லை. அவற்றின் வேரற்ற தன்மை அவருக்கு அந்த நிசியில் வெட்ட வெளிச்சமாகிவிட்டது.
மௌனமாக, நிச்சய புத்தியுடன், அந்த ஒளி மாளிகையைவிட்டு வெளியேறினார். வாழ்க்கையின் இருட்பாதையில் இறங்கினார்.
சந்திரோதயமாயிற்று: மேகங்களிலிருந்து விடுபட்ட சந்திரன் உச்சிவானில் தோன்றினான்.
– கலைமகல், மே-1939