இருப்பும் செப்பும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: May 25, 2025
பார்வையிட்டோர்: 327 
 
 

(2006ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வடபுலத்தின் வடமராட்சி மண்ணில் வடக்கு மூலையில் ஒரு நடுத்தரக் குடும்பம். அந்நாளில் அறுகு போல் வேரூன்றி ஆல்போல் செழித்து அரசோச் சிய குடும்பம். இன்று உருக்குலைந்த கூடாய் சிதறிச் சின்னாபின்னமாகி.. 

வம்ச விருத்திக்கு மூன்று புதல்வரையும் மூன்று புதல்விகளையும் பெற்றுச் செல்வாக்காகச் செருக்கோடு வாழ்ந்த பார்வதி இன்று பாயோடு பாயாய்… 

மகள்மார் மூவரும் அவளுடன் கூட வாழ்ந்து குதூகலித்திருக்கக் கொடுத்து வைக்கவில்லை. மூத்தவள் கமலா குடும்பத்துடன் கனடாவிலும் இளையவள் சுந்தரி கொழும்பிலும் கடைக்குட்டி சந்திரா வன்னியிலுமாய் இடம்பெயர்ந்துவிட மூத்தமகன் முத்துக்குமரனின் அரவணைப்பில் பார்வதிப் பாட்டி.. இளையமகன் இந்திரனும் மூன்றாமவன் முருகவேலும் அண்ணன் முத்துக்குமரனுக்கு உறுதுணையாக… 

இத்தனைக்கும் பார்வதிப்பாட்டிக்கு அகவை “எப்பன் சிப்பன்” அல்ல. தொண்ணூற்றி ஒன்பது தானாக்கும். 

அதனாலென்ன இந்த வயதிலும் அவளுடைய உள உறுதியென்ன உடல் வாகென்ன வேறு யாருக்கு வரும். அன்றைய நாட்களில் ஒடியல்பிட்டும், ஊர் அரிசிச்சோறும்,உடன் மீனும், தினைமாவின் புட்டும், வரகரிசிக் கஞ்சியும் உண்டு கட்டிக்காத்த உடம்பாக்கும். இந்த நாட்களைப்போல் கண்ட கண்ட மாத்திரையும் விழுங்கி எடுத்ததெற்கெல்லாம் ஊசியும்போட்டு பூசி மெழுகிய உடம்பா என்ன. தலையிடி என்றால் கொத்தமல்லிக் கசாயம், ஊறவைத்த வெந்தயம் அவித்த நீர் -தேனீருக்குப் பதில் நீர் மோர். மாதவிடாய்க் கோளாறெனில் விடத்தல் இலையும் பச்சை அரிசியும் சேர்த்து இடித்தமாவின் கழி-குறிஞ்சா இலைச்சாற்றில் உழுத்தம்மாவும் நல்லெண்ணையும் முட்டையும் சேர்த்துக் கிண்டிய கழிதான் தீன். இப்படி எத்தனையோ கைவைத்தியமும் இயற்கை வைத்தியமும் செய்து பேணிவளர்த்த தேகம். பனாட்டும் பாணியும் உண்டு இறுகிய சரீரம். அத்தனை உறுதி, அத்தனை ஆரோக்கியம். அதுதானே பாட்டியை இதோ தொண்ணூற்றி ஒன்பது வரை உறுதியாக வைத்துக் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது. 

ஒரு நோய் நொடி என்று பாயில் படுத்தறியாள்.எங்கேயும் ஒரு அலுவலாகட்டும் வலியப்போய் இழுத்துப்போட்டுச் செய்து முடித்து “காரியகாரி” என்று அறிந்தவர் அயலவர் எல்லாரிடமும் பெயர் பெற்ற கைகாரி அவள். 

சும்மா சொல்லக் கூடாது. வெளிநாட்டில் மூத்த மகளின் செல்வாக்கைக் காண கனடாவிலும் சில நாட்கள் இருந்தவள்தான். அங்கு போய் ஒரு வாரம் கூட ஆகவில்லை. “என்ன சொன்னாலும் ஊரைப்போல வருமே? இது என்ன வீடோ மாட்டுத்தொழுவம் போல ஒரு அறைக்குள்ளே கண்டறியாத ஒரு ரீ.வ. பின்னே ஒரு றேடியோ அதுக்கிடையிலெ ஒரு கொம்பியூற்றர் அது இது எண்டு -ஒரு ஓடைபோலெ ஒரு கூடத்திலெ என்னை முடங்கிக் கிடக்கவிட்டிட்டு அவையின்ர ஆட்டமும் பாட்டமும் கூத்தும் கும்மாளமும். எனக்கு வெப்பியாரமாகக் கிடக்கு -மூச்சுமுட்டுது. இனி இஞ்ச ஒரு கணம் தரிக்கமாட்டன்” எனப் பிலாக்கணம் பாடி ஒற்றைக்காலில் ஒரேபிடியாக நின்று ஊர் திரும்பி வீட்டிற்கு வந்து சேர்ந்து விட்டாள். 

வரும் வழியில் கொழும்பில் சுந்தரியுடன் தங்கியிருந்த பொழுது அவளுக்குத் தீர்மானமாகச் சொல்லி விட்டாள். “இனிமட்டும் நான் பரதேசம் வெளிக்கிட மாட்டன். கனடாவாம் கனடா. அங்கே காலையிலே ஒரு கோழி கூவுற சத்தம் ஒரு திருவந்தாதி மணியொலி ஒரு அறுப்பும் கிடையாது. சீ அதுவும் ஒரு ஊரே.தின்னத் தந்த பச்சைத் தண்ணி மாம்பழத்தையும் கொக்காவின்ர மூஞ்சியில விட்டெறிஞ்சிட்டு வந்துவிட்டன் கண்டியோ! இனி நான் பிறந்த மண்ணிலை பிறந்த வீட்டிலை தான் என்ரை சீவன் போகும். ஆர் எண்டாலும் என்னைக் கண்ணிலை வைக்க விருப்பமெண்டால் ஊருக்கு வாருங்கோ – உன்ர உடன் பிறப்புக்களுக்கும் இதைச் சொல்லிவிடு” எனச்சொல்லிவிட்டு ஊர்போய்ச் சேர்ந்தவள்தான். 

ஆனால் கடைக்குட்டி சந்திராவைக் காண அவளால் வன்னிக்குப் போக முடியலை. அந்த இடங்களுக்குப் போய் நின்று பிடிக்கமாட்டாயம்மா” எனச் சொல்லி எல்லோரும் அவளைத் தடுத்துவிட்டார்கள். கடைக்குட்டி சந்திராவை நீண்டகாலமாய் காணவில்லையே என்ற தாபம் அவள் மனதில் பெரும் ஏக்கமாய்க் குடிகொண்டு விட்டது. 

இப்பொழுது ஆறுமாதங்களாக அவள் படுத்த படுக்கையில். பெற்ற பெண்மக்கள் அருகில் இருந்து பணிவிடை செய்யவில்லையே என்ற கவலையே தவிர சும்மா சொல்லிவிடக்கூடாது மகன்மார் மூவரும் எள் என முன்பு எண்ணெய்யாக நின்றனர். 

பாட்டிக்குப் பொறி தட்டிவிட்டது போலும். தனது அந்திமகாலம் நெருங்கி விட்டதென்று, “இனி நான் நீண்டகாலம் இருக்கமாட்டன். கொக்கா கமலா இளயவள் சுந்தரி சந்திரா எல்லாருக்கும் வியளம் அனுப்புங்கோ. இந்தக்கட்டை இனி அதிக நாள் தங்காதெண்டு” என அனுங்கியதில் மகன்மார் மூவரையும் பதற்றம் பற்றிக் கொண்டது. 

”ஏன்னெணை அம்மா விசர்கதை பேசுகிறாய் நீ இப்ப சாகமாட்டாய் நீ இன்னும் ஒரு வருஷமெண்டாலும் எங்களோட இருக்கோணும்” இது மூத்தவன் விம்மி விம்மி சொன்னது. 

”ஏனம்மா உங்களுக்கு என்னம்மா குறை வச்சனாங்கள் இப்படியெல் லாம் பிதற்றுகிறாய்” இது இளயவன் இயம்பியது. 

”எப்படியம்மா எங்களை விட்டிட்டு போக மனம் வந்தது. மக்கள் மருமக்கள் பேரன் பேத்தி பூட்டன் பூட்டி கொள்ளுப்பேரன் கொள்ளுப்பூட்டி எல்லாருடைய சீரும் சிறப்பும் பார்த்து…” இது மூன்றாமவன். 

“எடெ எடெ மக்களே” இன்னும் அம்மா உங்களோட இருக்கோணும் எண்டொரு ஆசையோ? எல்லாம் போதுமெடா. ஆனால் கண்மூடுமுன்னே அவள் சந்திராவை ஒரு முறை கண்டனெண்டால்….” கிழவிக்கு நாக்குளறிற்று. கோடியில் வேப்ப மரத்திலே ஒரு காகம் ஆசூரியமாய்க் கத்துது. அதுவுமில்லாமெ கொப்பர் இராத்திரி கனவிலெ வந்து என்னோட வா போவம் எண்டு கையைப்பிடிச்சு இழுக்கிறார். நான் போகப் போறன். என்னை விடுங்கோ” பாட்டி கட்டிலிலிருந்து எழ எத்தனிக்கிறாள். எழ முயற்சித்தவள் கண்மூடித்திறப்பதற்குள் மூர்ச்சையாகி கட்டிலில் சாய்கிறாள். 

மறுகணம் செய்தி கனடா கொழும்பு என்று பறந்தது. வன்னிக்கு செல்வதில் சிறிது தாமதமாயிற்று. எனினும் அறிவித்துவிட்டுத்தான் ஓய்ந்தார்கள். மூன்று தினங்களுக்குள் மூத்தவள் கமலா பிள்ளைகளுடன் கனடாவிலிருந்து வந்து இறங்கி விட்டாள். கொழும்பிலிருந்து சுந்தரியும் உடனே புறப்பட்டு காலையில் வந்து சேர்ந்துவிட்டாள். மகள்மாரைக் கண்டதும் பாட்டியின் நோய் சிறிது சிறிதாகக் குறைந்து தெம்புண்டாயிற்று. பேரப்பிள்ளைகளுடனும் பூட்டப்பிள்ளைகளுடனும் சிரித்துப் பேசிக் கலகலப்பாக இருந்தது அரிய காட்சியாக இருந்தது. 

எங்கே பாட்டியின் காரியம் முடிந்துவிட்டால் தேடிய தேட்டத்தைப் பூட்டி வைத்திருக்கும் பெட்டகத்தைத் திறந்து எடுப்பதை எடுத்து விடுவதை விட்டு பாகப்பிரிவினை செய்து கணக்கு முடித்து வண்டியேறிவிடலாம் எனக் கருதிய மகள்மாரின் வாயில் மண். 

பாட்டி மயக்கம் தெளிந்ததும் முதல் செய்த காரியம் என்ன, தட்டுத்தடுமாறி கையினால் தடவி தனது தலயணையின் கீழ் வைத்த பெட்டகத்தின் திறப்பைத்தான். ம்…பத்திரமாய் இருந்தது அது. அந்தளவில் பாட்டிக்குப் பரமதிருப்தி. 

இதெலலாம் ஒரு நாட் பொழுதுதான். மீண்டும் பாட்டிக்கு மயக்கம் கண்டது. அம்மா என்ற விளிப்புக்கு விழியை மலர்த்துவதும் அனுங்குவதும் மீண்டும் மயக்கத்தில் ஆழ்ந்து போவதுவமாய் கண்ணாமூச்சி காட்டிக்கொண் டிருந்தாள். 

இது வல்ல சீவன். இது சீவன் இப்போதைக்குப் போகாது போலை. என எண்ணிய மகள்மார் “எட தம்பி இவர் மயில்வாகனப் பாரியாரியாரைக் கூப்பிட்டுக் காட்டிப் பார்ப்பம் எந்தளவில் இழுக்கும் எண்டு” எனச் சொன்ன ஆலோசனை எல்லாருக்கும் சரியாகப்பட்டது. 

“இது இத்தோட போறது தான் – ஆனால் இனி அட்டமியோட தான்- ஒரு கிழமையெண்டாலும் இழுக்கும்” என்ற பரியாரியாரின் வார்த்தை எல்லாருக்கும் கசப்பு மாத்திரை விழுங்கியது போல ஆயிற்று. 

“நானும் பிள்ளைகளும் இஞ்ச இருக்க அவர் கொழும்பிலை கடைச்சாப்பாடு -ஒத்துவராது. அவரும் சலரோக வியாதிக்காரன் -கண்டதையும் சாப்பிட்டு பத்தியத்தையும் முறிச்சுப் போடுவார். பின்னே மூத்தவள் வித்தியாவுக்கும் ‘ஏ.எல்’ சோதனை கிட்டுது. “ரியூசன் எல்லாம் தப்புது” சுந்தரி வெகுவாக அலுத்துக்கொண்டாள். 

“என்ற பாடென்ன அங்கை வெளி நாடெண்ட பேர்தான் சிறைச்சாலைச் சீவியம். நாங்கள் இல்லாமல் ஒரு கணம் அண்டலிக்கமாட்டார்.என்ன சறவைப்படுசாரோ தெரியாது. பொடியன்ர லீவும் முடிஞ்சிது. விசா நீடிக்க முடியாது. எனக்கு இதுகளை நினைக்க நித்திரையும் வருகுதில்லை.”கமலா அலவலாதிப்பட்டாள். 

“அக்காமாரே அம்மாவை நீங்கள் எல்லாரும் கடைசி நேரத்திலை கண்ணிலை வைச்சிட்டியள் தானே. இனி நீங்கள் புறப்படுங்கோ நாங்கள் அம்மாவின்ர கடமைகளைச் செய்து சங்கையோட ஆளை அனுப்பி வைக்கிறம்’ என்று தம்பிமார் மூவரும் அக்காக்காரிகள் இருவருக்கும் ஆறுதல் கூறினர்.

பின்னே வன்னியில் இருந்து சந்திரா வரவில்லையே என்ற கவலையும் தீர்ந்தது. அன்று காலை சந்திராவும் வந்து இறங்கி விட்டாள். 

எப்பொழுதோ வன்னிக்குப் போன பயணம். சந்திரா அம்மாவைக் காணாது பத்து வருடங்கள் உருண்டோடிவிட்டன. 

கொழும்பில் இருந்தும் கனடாவிலிருந்தும் சகோதரிகள் வந்தும் கூட உந்தா உதிலை இருக்கிற வன்னியில் இருந்து இத்தனை காலம் அவளால் வரமுடியாமல் போனதுதான் சோகம். 

அம்மாவைக் கண்டது -அதுவும் இந்த நிலையில் கண்டது சந்திராவுக்கு விம்மல் பொருமலாய் வெடித்தது. இத்தனை காலம் பொத்தி வைத்த சோகம் பொட்டென்று மடைதிறந்து…வாய் குளறிற்று. 

“அம்மா” 

அம்மாவிடமிருந்து ஒரு அசுமாத்தமும் இல்லை. 

“அ..ம்..மா… 

பாட்டி மெல்ல விழி மடலை மலர்த்தி “ஆர் சந்திராவே… 

சந்திரா வால் சோகத்தை அடக்க முடியவில்லை. இருந்தாலும் சமாளித்துக்கொண்டு “ஓம் அம்மா சந்திரா. நான்தான் உன்ர சந்…..” வார்த்தையை முடிக்க அவளால் முடியவில்லை. 

பாட்டியின் முகம் சுருங்கியது “எடி சந்திரா” இது உன்ர குரலில் லையடி..இது சந்திராவின் குரல்தானோ… இவளுக்கு என்னவோ நடந்திட்டுது. இவளின்ர குரல் ஏன் இந்த மாதிரி பிசுறு தட்டுது. உன்ர துடிப்பும் எடுப்பும் துடுக்கும் பேச்சும் எங்கேயடி? உனக்கு என்னடி நடந்தது சொல்லு ராசாத்தி’ 

பிள்ளையின் சுபாவம் பெற்றவர்களுக்குத் தெரியாததா. சந்திராவின் குரலும் பேச்சும் தொனியும் அவளின் உள்ளக்குமுறலை ‘பளிச்” சென்று காட்டிக்கொடுத்துவிட்டது. அவளுக்கு இந்தப் பத்து வருடகால எல்லைக்குள் நடந்துவிட்ட சோகம்.. தழிழ் ஈழமே யுத்தத்தின் கோரப்பிடியில் சிக்கிச் சீரழிந்து கிடைக்கும் போது அவள் கணவன் மாரடைப்பால் மரணமடைந்ததும் அவரின் அந்திமக் கிரிகைகளைக் கூட சரிவர நிறைவேற்ற முடியாமல் தத்தளித்தும், அவளின் மூத்தமகனும் மருமகளும் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்குண்டு தீப்பற்றி எரிவதைக் கண்முன்னே பார்த்திருந்ததும், அவர்கள் விட்டுச்சென்ற மழலை கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் பரிதவிக்கும் சோகம்…இளயவன் தமிழ் மண்ணுக்காகப் போராடி மாவீரரான காவியம் இத்தனை நடந்தும்கூட மீந்திருக்கும் கடைக்குட்டி கண்ணனுக்காக ஊசலாடும் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டிருக்கும் சோகம். எல்லாம் இழந்தும் இழப்பதற்கு ஒன்றும் இல்லை என்ற ஏதிலியாய்… 

இதை எல்லாம் இன்றோ நாளையோ மறையப்போகும் அன்னைக்குக் கூறி அவளையும கவலையில் ஆழ்த்தி அவலமாகச் சாகவிடவேண்டாமே… “ஒன்றுமில்லையம்மா, பயணம் செய்த அலுப்பு வேறொன்றுமில்லை” 

“இல்லையடி சந்திரா உனக்கென்ன நடந்தது. சொல்லடி என்ர செல்லம்” பாட்டியின் கை சந்திராவின் கன்னத்தை ஆதுரமாகத் தடவுகிறது. மறுகணம்… கை சோர்ந்து வீழ்கிறது. 

“அம்மா” என்ற ஓலம் பேரிரச்சலாய் அறையை நிரப்புகிறது. 

என்னவோ எல்லோரும் பிரசன்னமாய் இருக்கையில் பாட்டியின் ஆவி பிரிந்தது. அன்று வெள்ளிக்கிழமை. 

”ஆ’ இண்டைக்குச் சவம் எடுக்கோணும். சட்டுப்புட்டென்று காரியத் தைப் பாருங்கோ” இது அங்கிருந்த ஒரு முதியவர். 

“இது நல்ல கதை. கொழும்பிலையிருந்து அவர் விடிய வந்திடுவார் நாளைக்கு எடுக்கலாம்” இது இளளையவள் சுந்தரி. 

“அதெப்படி நாளைக்கெடுக்கிறது? நாளைக்குச் சனிக்கிழமை. சனிப்பிணம் தனிப்போகாது பிறகு வில்லங்கம்’ 

“இனி என்ன ஞாயிறு தான். ஒரு விதத்திலை நல்லதாய்ப் போயிட்டுது. காடாத்து எட்டு எல்லாம் அன்றைக்கே முடிச்சிடலாம். எல்லாருக்கும் வசதியாக” 

ஞாயிறும் விடிந்தது. ஈமக்கடன் காடாத்து முடிந்து இரவு எட்டு மணிக்குத்தான் எட்டு முடிந்தது. எட்டுப் படையலில் ‘அம்மாவுக்கு இது பிடிக்கும் அது பிடிக்கும்’ என்று சொல்லிச் சொல்லி பாட்டிக்குப் பிரியமான நெத்தலி மீன் போட்ட ஒடியல் பிட்டு மரவள்ளிக்கிழங்குத் துவையல் இப்படி எத்தனையோ பண்டங்கள் ஒவ்வொன்றாகப் பார்த்துப் பார்த்து வைத்துப்படைத் தனர். எல்லாம் நிறைவேற இரவு எட்டு மணிக்கு மேலாயிற்று. சாப்பாடு முடிந்து வந்தவர் எல்லாம் கலைந்த பின் எல்லோரும் திண்ணையில் இளைப்பாறியபடி. 

மூத்தவள் சொன்னாள் “தம்பி அம்மா இத்தனை காலம் பொத்தி வைச்ச இந்தப் பெட்டகத்தைத் திறந்து பார்” 

எல்லா மக்களின் விழிகளிலும் ஆவல் பொங்கி ததும்பிற்று. “பெட்டகத்துக்குள் என்ன இருக்கும்? எல்லோர் மூளையிலும் வினாக்கொக்கி. 

“அம்மாவை மூத்த அண்ணன் தானே பராமரிச்சவர். மூத்தண்ண னுக்குத்தான் அந்தச் சொத்து சேரோணும்” இது சந்திரா. 

“ஏன்? அம்மாவின்ர சொத்து எல்லாருக்கும் பங்குதானே” இது இளளையவள். இளளையவன் இந்திரனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. “எடி பெண்பிள்ளைகளுக்கு ஒரு சொத்தும் இல்லை. எல்லாருக்கும் சீதனம் தந்து கை கழுவி விட்டாச்சு. பிறகென்ன?” 

“இது நல்ல விண்ணாணக் கதை. நாங்கள் என்ன புறத்தியே? நாங்களும் பிள்ளையள் தானே. சொத்து எல்லாருக்கும்தான். அதையும் பார்ப்பம்” 

சின்னவன் முருகவேல் இடைமறித்தான். “அப்பு செத்துப் போக அம்மா என்னவெல்லாம் பாடுபட்டு எங்களை ஆளாக்கிக் கரை சேர்த்தவ. மூத்தக்கா, இளையக்கா, இளையண்ணா, நான் எல்லாரும் ஆண்டவன் புண்ணியத்தில் நல்லாக இருக்கிறம் தானே. மூத்த அண்ணாதான் வேலைவெட்டி எல்லாம் விட்டு அல்லும் பகலும் அடுகிடை கிடந்து அம்மாவை பார்த்தவர். பின்னெ சின்னக்காவும் நொடிச்சு நொந்திருக்கிறா. பெட்டியைத் திறவுங்கோ. உள்ளதைப் பிரித்து இரண்டு பேரும் எடுக்கட்டும்” 

“அதெப்படி? அம்மாவின்ர தோட்டம் ஆறுபேருக்கும் தான்” 

அறுவரும் நீயோ நானோ என்று குடுமி பிடிக்காத குறையாக பிய்த்துப்பிடுங்கத் தொடங்கி விட்டனர். 

நாய் கடி பூனை கடி. 

“சரி சரி கொஞ்சம் பொறுங்கோ, பெட்டியைத் திறந்து பார்ப்பம்” இளையவன் பெட்டியைத் திறந்தான். அப்பு செத்துப்போக பிழைப்பிற்காக அப்பம் சுட்டு விற்ற நினைவாக பழைய அப்பச் சட்டி, தட்டகப்பை, வெற்றிலை பாக்கு வைத்திருந்த வண்ண ஓலைக்கீற்றால் இழைத்த கொட்டைப்பெட்டி, கிளித்தலையுடன் ஒரு பாக்கு வெட்டி, சித்திர வேலைப்பாட மைந்த சுண்ணாம்பு கறண்டகம், பின்னே வெற்றிலை பாக்கு இடிக்கிற சின்ன உரல் உலக்கை, தைலாப்பெட்டி, பித்தளையில் செய்த ஐந்து அலகுச் சித்திரக்குத்துவிளக்கு, தூண்டாமணிவிளக்கு…” 

“இதுதான் அம்மாவின் தேட்டம்’ 

”இந்த பொக்கிசத்தைத்தான் அம்மா பொத்திவைச்சு அடை காத்தவவே?”

“அம்மாவின்ர இருப்பும் செருப்பும் இந்த செம்பாலும் செப்பாலும் செய்த பண்டங்களே” 

“எல்லாம் மூத்தண்ணர் எடுக்கட்டும். அவருக்கும் வேண்டாம் எண்டால் நூதனசாலைக்கு அனுப்பி விடுங்கோ” 

அடுத்த இரு நாட்களுக்குள் எல்லோரும் தங்கள் வழிச்செல்ல வீடு “ஓ” வென்று வெறிச்சோடிக்கிடந்தது. பெட்டகத்தில் கிடந்த பண்டம் யாரும் சீண்டுவாரற்றுக் கிடந்தது. 

(பரிசுச் சான்றிதழ் பெறும் சிறுகதை) 

– கலாபூஷணம் புலோலியூர் கே.சதாசிவம் ஞாபகார்த்தச் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற சிறுகதைகள். தொகுப்பாசிரியர்: தி.ஞானசேகரன்.

– சிறைப்பட்டிருத்தல் (ஞானம் பரிசுச் சிறுகதைகள் 2006), முதற் பதிப்பு: டிசம்பர் 2006, ஞானம் பதிப்பகம், கொழும்பு.

புலோலியூர் செ.கந்தசாமி

புலோலியூர். செ. கந்தசாமி 1937ல் பிறந்தவர். ஓய்வு பெற்ற நில அளவையாளர். கவிதை, சிறுகதை ஆகிய துறைகளில் எழுதி வருகிறார். சிலாபம் முத்தமிழ் மன்றம் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதற் பரிசு (1969), நோர்வே தமிழ்ச் சங்கம் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதற்பரிசு (2004), வடமராட்சி வடக்கு கலாசாரப் பேரவை நடத்திய சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு (2005) பெற்றுள்ளார். ‘மெல்லத் தமிழ் இனி…!’ இவரது சிறுகதைத் தொகுதி. 

தற்காலிக முகவரி – 3/1 அரெத்துசா ஒழுங்கை, கொழும்பு – 06 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *