இருப்பிடம் விட்டுப் போனவர்காள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 8, 2025
பார்வையிட்டோர்: 663 
 
 

(2014ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இரவு விரிந்து கிடந்தது எங்கும். தலைக்கு மேலிருந்து வானம் பார்த்துக்கொண்டேயிருந்தான். இன்று நிறைய நட்சத்திரங்கள். அவன் நினைத்தபடியே அவனுக்கு வேண்டிய எல்லோரும் தெரிந்தார்கள். அவன் நட்சத்திரங்களுக்கு பெயர் வைத்திருந் தான். எல்லாம் அவனுக்குப் பிடித்தமான பெயர்களாக. எப்பவாவதுதான் இப்படி எல்லோரும் ஒன்றாகத் தெரிகிறார்கள். நெருங்குவதும் விலகுவதுமாகச் சில நட்சத்திரங்கள் இருந்தன. அவன் தனியாக அடர்ந்த இருள் போன்ற மேகத்தின் ஊடே தெரிந்த நட்சத்திரத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

இரவு எங்கும் படர்ந்துபோயிருந்தது. ஹோட்டலின் திறந்த வெளியில் அவன் படுத்திருந்தான். கீழே மஞ்சளாக வெளிச்ச மிருந்தது. குளித்துக்கொண்டிருந்தார்கள் பையன்கள். அடிபம்பு அடிபடும் சப்தமும் எண்ணெய்யற்ற அதன் உராய்வும் துல்லிய மாகக் கேட்டன.

சிரித்தபடிக் குளித்துக்கொண்டிருந்தார்கள். வெளியே கடைக் கதவை ஒடுக்கச் சார்த்தியபடி முதலாளி நின்றிருந்தார். அந்தத் தெருவெங்கும் இருள் நிறைந்துபோயிருந்தது. அந்த ஹோட்டல் மெயின் பஜாரில் இருந்து உள்தள்ளி இருந்தது.

சின்னதாக விலகும் சந்தின் உள்ளே கணேச பிள்ளை சுத்த சைவ ஹோட்டல் என்ற போர்டு துருவேறிப்போயிருந்தது. அதன் மேல் இருந்த பல்பு எரிவதில்லை. மாதக் கணக்கு வைத்து சாப்பிடும் சிலரைத் தவிர மற்றவர்கள் இரவில் வருவது அபூர்வம். எப்பவாவது வெளியூர்க்காரர்களின் முகம் தென்படும்.

அவன் பார்த்துக்கொண்டிருக்கும் போதே அவர்கள் குளித்து விட்டு மாடியேறி வந்தார்கள். மாடி கொஞ்சம் பெரியது.

ஆளுக்கொரு தகரப் பெட்டி வைத்திருந்தார்கள். விரித்தபடி கிடக்கும் பாயும், படக் கதைகளும், கொடியில் உலரும் சிவப்புத் துண்டும் எப்போதும் அங்கு கிடக்கும்.

மாடியில் இருந்து பார்த்தால் மெயின் பஜார் தெரியும். இரவில் பையன்கள் பார்த்துக்கொண்டிருப்பார்கள். ரோட்டில் போகும் லாரியை எண்ணியபடி. எப்பவாவது செகண்ட் ஷோ விட்டுப் போகும் பெண்களில் ஒன்று மாடியைப் பார்த்துவிட்டு செல்லாதா எனத் தயக்கத்தோடு, சிலவேளைகளில் கடந்து போகும் பெண்கள் மேலே பார்த்தது பற்றிப் பேசிக் கொண்டபடி. ஜன்னல் பக்கமாக உட்கார்ந்து இருப்பார்கள்.

அன்று அவர்கள் மாடியைப் பார்த்தபோது ரோட்டில் யாரோ ஒரு பெண் போய்க்கொண்டிருந்தாள் போலும். மேலே அவனுக்குச் சப்தம் கேட்டது.

“போறது டெய்லர் பொண்ணு… நடராசா தியேட்டர்தான் போவா…போகலாம்… மேல மூர்த்தி அண்ணனே கூப்பிடு…” யாரோ மேலேறி வந்தார்கள். அவன் நட்சத்திரங்களில் இருந்து விலகினான்.

“படத்துக்கு வாரீங்களா…”

“எங்க…”

“நடராசா தியேட்டருக்கு…”

அவனுக்குப் போகலாம் என்றே தோணியது. அவனுக்குத் தெரிந்த எல்லா ஹோட்டல்களிலும் வேலை பார்க்கும் பையன்கள் செகண்ட் ஷோ வருவார்கள். பெஞ்ச் டிக்கெட்டில் உட்கார்ந்தபடிக் கத்துவார்கள். அவனே கத்தியிருக்கிறான்.

அவன் எழுந்து பார்த்தான். கீழே சைக்கிளைத் தள்ளிக்கொண்டு கணேச பிள்ளை போய்க்கொண்டிருந்தார். முன் வாசல் பூட்டி யிருந்தது. பின் வழி வாசல் அவர்களுக்கு உண்டு. எல்லோரும் இறங்கி கீழே வரும்போது மாஸ்டர் எதிர்ப்பட்டார். அவர் எங்கும் வருவது கிடையாது, அவன் கிட்டத்தில் வந்ததும் கேட்டார்.

“சினிமாவுக்கா…”

தலையாட்டினார்கள். அவர்கள் ரோட்டில் இறங்கும்போது எதிரில் லாரி கடந்துபோனது.

படத்துக்கு நேரமிருந்தது. மெல்ல நடந்தார்கள். அவன் தெருக்களைப் பார்த்தபடியே வந்தான். இரவில் இந்தத் தெருக்களுக்கு இப்படியொரு அசாத்தியமான சுபாவம் வந்து விடுகிறது. பாதித் தெருவை இருள் பிடித்திருக்க ஆங்காங்கே வெளிச்சம் தெரிந்தது. வீடுகளில் ஜன்னல் அடைத்திருந்தார்கள். மூடிய கடைகளுக்குள் பேச்சரவம் கேட்டது.

கழுதைகள் சுவரோரமாக ஒண்டிப்போயிருந்தன. அசையாத மவுனம் கழுதைகளிடையே. குட்டிக் கழுதையொன்று அசைந்த படியே திரிந்தது. நிழல் ஓடிக்கொண்டிருந்தது அருகில்.

செகண்ட் ஷோ போகும் சிலர் போய்க்கொண்டிருந்தார்கள். பையன்கள் படத்தைப் பற்றிப் பேசிக்கொண்டு வந்தார்கள். முக்கு ரோட்டுக்கு வரும்போது நிறையக் கடைகளிருந்தன. பாட்டு போட்டுக்கொண்டிருந்தார்கள். கடந்து தியேட்டரை நெருங்கும் தூரத்தில் போகும்போது குமார் அவனிடம் சொன்னான்.

“அண்ணே…அத்தை… வீட்ல எல்லாம்…”

அவர்கள் அத்தை என்றது பெரிய மாஸ்டரின் மனைவியை. அவரை எல்லோரும் மாமா என்றுதான் கூப்பிடுவார்கள். எல்லாப் பையன்களும் அவர் வீட்டில் சாப்பிட்டிருக்கிறார்கள். அவர்கள் அடித்துக்கொண்டு மண்டையை உடைத்தபோது, முதலாளி யிடம் அடி வாங்கியபோது அவர் வீட்டுக்குத்தான் போவார்கள். அதிலும் புதுப் பையன்கள் உடன் ஒட்டிக்கொள்வார்கள்.

அவர் குள்ளமாயிருப்பார். கொஞ்சம் பருமனாகக் கூட தோன்றும். முகம் வெளுத்துத் தெரியும். வெகு ஆழத்தில் இருக்கும் கண்கள்.

அவர்கள் தியேட்டரை அடைந்தபோது டிக்கெட் கொடுக்க வில்லை. வெளியே சைக்கிளில் உட்கார்ந்தபடியே சிலர் பேசிக் கொண்டிருந்தார்கள். பெண்கள் கவுண்டர் திறந்தே கிடந்தது யாருமில்லை.

அவனை அத்தை பார்த்தது போலத் தெரிந்தது. சிரித்தான். அவர்கள் கிட்டத்தில் வந்தார்கள். அத்தைதான் கேட்டாள்.

“வீட்டுப் பக்கமே காணோம்…”

சிரித்தான்.

அத்தையின் பெண்கள் உடன் நின்றுகொண்டிருந்தார்கள். கலா தான் கேட்டாள்.

”வழி ஞாபகமிருக்குல்ல…’

அவனுக்கு வழி ஞாபகமிருந்தது. அவன் வீட்டில் இருந்து ஓடிவந்த இரண்டாம் நாளில் அவர் பிடித்துக்கொண்டார். அவனுக்கு ஞாபகமிருந்தது.

அப்போது மழைக்காலம். ஸ்கூலில் படித்துக்கொண்டிருந்தான். ஸ்கூல் காம்பவுண்ட் சுவரை ஒட்டியபடி நிறைய புற்கள் அடர்ந்து கிடந்தன. மழையில் புற்கள் புது நிறத்தில் இருந்தன. தினமும் மழை பெய்யும் அப்போதெல்லாம்.

அவன் வீடு ஸ்கூலில் இருந்து நான்கு தெரு தள்ளியிருந்தது.

அவன் வீட்டுக்கு எதிர் வீட்டில் வாத்தியார் இருந்தார். வாத்தியார் மகள் அவனோடுதான் படித்தாள். அவன் ஸ்கூலுக்குப் போகும் வழியெங்கும் பார்த்தபடியே போவான்.

மண் புழு ஊர்ந்த தடம் நெளிவு நெளிவாக இருக்கும். சில சமயங்களில் நினைத்துக்கொண்டது போல மண் புழுவைப் போல நெளிந்தபடியே ஓடுவான். ஈரமணல் எங்கும் கால் தடம் பதிந்துபோயிருக்கும். அல்லது யாராவது நடந்த காலடித் தடத்தின் மேல் நடந்து பள்ளிக்கூடம் போவான்.

வகுப்பின் போர்டு ஈரம் இறங்கி வரி வரியாக வழிந்திருக்கும். திருத்தி மடித்து வைத்த பேப்பரில் தண்ணீர் இறங்கியிருக்கும். அவன் நிறைய மண் புழுக்களைப் பிடித்து பாட்டிலில் போட்டுக் கொண்டு வருவான். பார்க்காத நேரங்களில் சிலர் சிலேட்டுகளில் விடுவான்.

கதறியபடி அலறி ஓடும் பெண் பிள்ளைகளுடன் விரட்டுவார்கள். தெருவில் மழையோடு அவர்கள் சப்தமும் கேட்கும். கோவில் குளம் நிறைந்துபோயிருக்கும். படிகள் தண்ணீருக்குள் மூழ்கிப் போயிருக்கும். உள்ளே படியில் நின்றபடியே ஆழம் காட்டு வார்கள்.

இருளில் ஒடுங்கிப்போயிருந்தான். குளத்துப் படிக்கட்டுகளில் உருவம் கையில் விளக்கோடு தெரிந்தது. அவன் அய்யாவாகத் தான் இருக்கக் கூடும்.

விளக்கை உயர்த்திப் பிடித்தார். மழை ஈரத்தில் சரியாகத் தெரியவில்லை. அவர் குரல் கொடுத்தார்.

”மூர்த்தி… லேய் அடிக்க மாட்டேன் வெளியே வா…”

அவனுக்கு பயமாக இருந்தது. வெளியே வந்தான். கிட்டத்தில் அய்யாவின் விளக்கு வெளிச்சத்தில் படிக்கட்டுகள்

மினுமினுத்தன. அய்யா கூப்பிட்டார்.

“வீட்டுக்கு வா…”

நடந்து போனபோது தெருவில் யாருமில்லை. வீட்டுக்கு அருகாமையில் வந்ததும் காதைப் பிடித்தார். வலித்தது. விளக்கை கதவைத் தள்ளி உள்ளே வைத்துவிட்டுச் செவுளோடு அறைந்தார்.

“வெளியே கெட… அப்பத்தான் அறிவு வரும்.”

அம்மா எதுவும் பேசவில்லை. திண்ணையில் உட்கார்ந்து இருந்தான். வாத்தியார் வீட்டில் லைட் எரிந்தது. அவனுக்கு அய்யாவின் மேல் கோபம் கோபமாக வந்தது. பேசாமல் எங்காவது ஓடிவிடலாம் எனத் தோணியது.

காலையில் அவன் கிளம்பியபோது அம்மா உண்டியலை உடைத்து காசை எடுத்தான். நிறைய சில்லறை இருந்தது. அவன் ஊரைக் கடந்து வரும்போது எதிர்ப்பட்ட சித்தப்பாவிடம் சொன்னான்.

“வாத்தியார் லீவு லெட்டர் கொடுக்கப் போறேன்”

அவன் ரயிலில்தான் வந்தான். நிறைய கூட்டமிருந்தது. கோவில் பட்டி ரயில்வே ஸ்டேஷன் அனாதியாக இருந்தது. அவன் வந்து இறங்கும்போது அங்கே மழையில்லை. வெளியே சுற்றினான். படம் பார்த்தான். இரவில் சர்ச்சின் வெளியே தூங்கினான்.

மறுநாள் இரவில் மழை பெய்தது. பசித்தது. சுருண்டு படுத்தான். குளிரடித்தது. படம் விட்டுப் போகும் ரோட்டில் நின்றபோது பெரிய மாஸ்டர் அவனைக் கூப்பிட்டார்.

அவர்கள் சிரித்தார்கள். அவன் ஜன்னலோரமாக ஒண்டிக் கொண்டான். அவர்கள் சிரிப்பும், பேச்சும் புரியவில்லை. அவன் இருந்த நாலு நாளில் ஒருவன் மட்டுமே அவனிடம் அதிகம் கிண்டல் பண்ணினான். அவன் கருப்பாக, உயரமாக இருந்தான். அவன் கிட்டத்தில் வந்து கிள்ளுவான்.

சினிமாக்களில் வருவது போல அவனைத் தூக்கிச் சுற்றுவான். அவனுக்கு அழுகையாக வரும். அதை மாமாவிடம் சொன்னபோது அவனைக் கூப்பிட்டார். எதுவும் கேட்கவில்லை. கிட்டத்தில் இழுத்து அறைந்தார்.

“வேற கடைக்கு போடா… முதலாளி கணக்கு தீத்துடுங்க…” அவன் ஏற்கெனவே சினிமாவுக்குப் போகக் காசு வாங்கியிருப்பான் போல இருந்தது. போகச் சொன்னதும் கடையை விட்டுப் போய் விட்டான்.

மாமா அவனிடம் மெதுவான குரலில் சொன்னார்.

“நீ வேண்ணா ஊருக்குப் போயிறேன்…”

அவன் ஊருக்குப் போனபோது ஸ்கூல் முடிந்துபோயிருந்தது. சில நாள்கள் வீட்டில் இருந்தான். அவன் சொல்லிக்கொண்டு திரும்பக் கிளம்பியபோது வெயில் காலம் ஏகமாக நிறைந்திருந்தது.


அவள் கேட்டதற்கு அவன் பதில் சொல்லியபோது மாமா சைக்கிளில் வந்தார். டிக்கெட் கொடுக்க ஆரம்பித்திருந்தார்கள். அவனிடம் சைக்கிளை நிறுத்திவிட்டு கேட்டார்.

“மாப்பிள்ளை, படத்துக்கா…”

பையன்கள் வரிசையில் நின்றார்கள். அவர் சிகரெட் வாங்கி பத்த வைத்துக்கொண்டார்.

“பிள்ளை கடைய மூடிடுவார் போலத் தெரியுது”

“எப்படித் தெரியுது”

“வசூல் இல்லை. கல்லாப் பெட்டி காலி. இதிலே புதுசா மெயின் பஜார்ல மெட்ரோன்னு ஒண்ணு திறக்கப்போறான் மதுரைக் காரன்”

“இங்க வா… வே… எந்த ஊரு”

அவன் பதில் சொல்லவில்லை.

“ஓடி வந்துட்டியா வீட்லேயிருந்து”

நின்றுகொண்டேயிருந்தான். அவனைக் கூட்டிக்கொண்டு தெரு வழியாகப் போனார். மழைக்குப் பிந்திய தெரு பிய்ந்து, சிதறியபடி இருந்தது. அவர் உடனே நடந்தான். நிறைய தெருக்களைத் தாண்டி, அவன் நின்ற வீட்டில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. கதவைத் தட்டினார்.

“மீனாட்சி…மீனாட்சி”

கதவு திறந்ததும் அந்தப் பெண் எதிர்ப்பட்டாள், அவனைப் பார்த்தாள். உள்ளே பிள்ளைகள் தூங்கிக்கொண்டிருந்தன. அவள் எதுவும் கேட்கவில்லை. அவன் சாப்பிட்டுத் தூங்கினான்.

காலையில் அவர்தான் அவனைக் கடைக்கு அழைத்துப் போனார்.

கடையில் நாலைந்து பெரிய பையன்கள் இருந்தார்கள். முதலாளியிடம் ஏதோ சொன்னார். அவன் கூடவே நின்று கொண்டான். எல்லோரும் மாஸ்டரை மாமா என்றார்கள்.

பகலெல்லாம் கடையில் வேலை செய்தான். எப்போதும் கூட்டம் வந்துகொண்டே இருந்தது. பையன்கள் அவனிடம் ஒரு வாளியும், வாழை இலையின் தண்டும் கொடுத்தார்கள். அன்றிரவு போகும்போது மாஸ்டர் சொன்னார்.

“மேலயே தங்கிக்க… முருகா இவனையும் கூட்டிக்கிட்டு மேல போ.”

அவன் மேலே போனபோது இரண்டு பையன்கள் ஏதோ படித்துக் கொண்டிருந்தார்கள். இவனைப் பார்த்ததும் சிரித்தார்கள். பீடி குடித்துக்கொண்டிருந்த ஒருவன் கிட்டத்தில் வந்து நின்றான்.

“எந்த ஊருடா உனக்கு?”

“மாமாதான் சேத்தாரு…”

“மருமகனா.. யாருக்கு…”

அவர்கள் சாப்பிடும்போது மணி மூன்றாகியது. ரெகுலராக வரும் சிலர் கூட இன்று காணவில்லை. காலி மேஜையும் நாற்காலியு மாயிருந்தது ஹோட்டல். எதிரில் தெரியும் நிலைக் கண்ணாடியும் காந்தி படமும் சலனமற்று அப்படியே இருந்தன. சாயங்கால மாகக் கொஞ்சம் கூட்டம் வந்தது. அவன் வேலையில் ஆழ்ந்து போனான். இருட்டும்போது கடை காலியாகிவிட்டது. பையன்கள் போய் விட்டார்கள். பிள்ளை மாமாவிடம் பேசிக்கொண்டிருந்தார்.

“பேசாம ஹோட்டலை மூடிட்டு… எடத்தை வித்தறலாம்னு இருக்கேன்.”

“என்ன அவசரம்”

“அவசரமென்ன. தாங்க முடியலே. எழுபது ரூவாய்க்கு ஓடிருக்கு இன்னைக்கு. இடத்தை ஒரு லட்சத்துக்கு கேக்கான். இடிச்சு லாட்ஜ் கட்டப்போறேன்ங்கா. வித்திற வேண்டியது தான்.”

“யாருக்கு”

“மதுரை பார்ட்டிதான்”

“பிறகு என்ன செய்றதாம்”

“பிள்ளையைக் கட்டிக் குடுத்திட்டு சொந்த ஊர்ப் பக்கம் போக வேண்டியதுதான்”

மாமாவுக்கு ஏக வருத்தமாக இருந்தது. அந்த ஊரில் பெரிய ஹோட்டல் என இருந்தது அவர் கடைதான். மாமா வேலைக்கு வரும்போது ஹோட்டல் ஏக தடபுடலாக இருந்தது. இங்கிலீஸ் காரன் காலத்திலே ஆரம்பித்ததாக இருக்கும். பெரிய மர மேஜைகள், நாற்காலிகள் கிடக்கும்.

ஓரத்தில் கிராமபோன் பெட்டி கூட உண்டு. அங்கு காபி சாப்பிட வராதவர்களே இருக்க மாட்டார்கள். பிள்ளையிடம் அப்போது ஒரு மினுமினுப்பு இருந்தது. வெள்ளை வேஷ்டி, சட்டையில் கல்லாவில் இருப்பார். பின்னால் நிறைய பெரிய மனிதர்களோடு எடுத்துக்கொண்ட படங்கள்.

பிள்ளைக்குப் பூர்வீகம் திருநெல்வேலிப் பக்கம் என்றாலும், இங்கு வந்து தங்கி ரொம்ப நாள்களானவர். நிறைய அயிட்டங்கள் போடும் லிஸ்ட் அவரிடம் இருந்து உள்ளே வந்துகொண்டே யிருக்கும். ரோட்டில் நாலைந்து ஹோட்டல்கள் வைத்த பிறகு கூட கூட்டம் குறையவில்லை.

வெளிப் பார்ட்டிகள் போட்ட கடைகளின் ஜோரில்தான் கூட்டம் குறைந்து கொண்டே இருந்தது.

மாமா கேட்டார்.

“பேசி முடிச்சாச்சா…’

“நாளைக்கு முடிஞ்சிரும்… வெள்ளிக்கிழமையில இருந்து நிறுத்திக்குவம். கணக்கு பாத்து வாங்கிக்கோங்க”

மாமா பதில் சொல்லவில்லை. அன்றிரவு மாமாவும், பிள்ளையும் பேசிக்கொண்டபடிதான் போனார்கள். சைக்கிள் மாமாவிட மிருந்தது.பிள்ளை பாதியிலேயே பிரிந்துபோனார். வழியெங் கும் இருள் நிறைந்துபோயிருந்தது. கடையை மூடிவிடலாம் என்ற முடிவுக்கு அவர் வருவதற்கே நிறைய நாள்கள் ஆயின. அவர் ஹோட்டலுக்கு எத்தனை பேர் வந்திருக்கிறார்கள். அவருக்கு ஞாபகமிருக்கிறது. வெள்ளைக்காரர்கள் கூட வந்திருக் கிறார்கள். ஒரு கட்டத்தில் சுதேசிக்காரர்களான காந்தி தியாகிகள் வந்து பேசியபடியே சாப்பிட்டுப் போயிருக்கிறார்கள்.

ஒரு கட்டத்தில் அவர்களுக்காகத் தனி மேஜை இருந்தது.அவர் கடையிருந்த தெரு வழியாக ஒரு நாள் சத்தியாகிரகிகள் ஊர்வலம் போய்க்கொண்டிருந்தார்கள். ஊர்வலம் கடையைத் தாண்டிப் போனபோது ஊர்வலத்தினை நோக்கி அடிதடி தொடங்கியது.

எங்கிருந்து தொடங்கியது என தெரியாதபோதும் கூட்டம் திசைக்கொன்றாகக் கலைந்து ஓடியது. போலீஸாரின் தாக்குதல் தொடர்ந்து பிள்ளைக் கடைக்குள் ஓடி வந்தார்கள். பிள்ளை அதை ஏன் செய்தார் என இன்னும் பிடிபடவில்லை.

உள்ளே அனைவரையும் வரச் சொல்லி கதவைச் சாத்திவிட்டு மேலேறிக் கத்தினார்.

ஹோட்டல் முழுவதும் சுதேசிகள் நிறைந்தார்கள். காந்தியைப் பற்றிப் பேசிக்கொண்டார்கள். அதன்பிறகு அவர் கடைக்கு நிறைய தலைவர்கள் வந்தார்கள்.

அவர் காந்தி இறந்துபோன அன்றிலிருந்து பத்து நாள்கள் கடையை மூடினார். சுதந்தரத்துக்குப் பின்பு அவருக்கு மக்களிடையே உள்ள மாற்றங்களும் தேவைகளும் புரியாமலே போனது. அதன்பின்பு நிறையவே நடந்துபோனது. ஒரு நாள் உள்ளூர் சங்கக் கூட்டத்தில் அவரை கௌரவித்தபோது யாரோ இதை ‘சுதேசி ஹோட்டல்” என்றார்கள். ஏதோ பத்திரிகையில் கூட அவர் படம் போட்டு எழுதியிருந்தார்கள்.

அன்றிரவு அவன் மேலே படுத்திருக்கும்போது பையன்கள் சொன்னார்கள்.

“மெட்ரோவுக்கு ஆள் வேணுமாம். போவமா.”

அவன் பதில் சொல்லவில்லை. அன்றிரவு நட்சத்திரங்களற்ற வானம் இருண்டுபோயிருந்தது. அவனுக்கு என்ன செய்வது எனத் தெரியவில்லை. யோசித்துக்கொண்டிருந்தான்.

மறுநாள் மத்தியானமே கடையை முடித்துக்கொண்டார்கள். காலியான சேர்களில் பையன்கள் உட்கார்ந்திருந்தார்கள். பிள்ளை கணக்கு நோட்டை எடுத்துக்கொண்டு வந்தார். அவனைத் தவிர மற்ற பையன்களுக்கு அம்பது ரூவாய்தான் சம்பளம். அவனுக்கு மட்டும் நூற்றுப் பத்து ரூபாய். யாருக்கும் மாதத்தில் கிடையாது. தேவையானபோது வாங்கிக் கொள்வார்கள். எப்பவாவதுதான் கணக்குத் தீர்ப்பார்கள் மாஸ்டருக்கு நானூறு ரூபாய்.

வரிசையாகப் பையன்கள் வாங்கியிருந்த பணம் எழுதப் பட்டிருந்தது. நல்ல கையெழுத்து பிள்ளைக்கு. பையன்களைப் பார்த்துப் பிள்ளை சொன்னார்.

“வேற கடைய பாத்து சேர்ந்து பிழைச்சுக்கோங்கப்பா… எங்க யிருந்தாலும் நல்லாயிருங்க.”

சாயங்காலமே பையன்கள் ஊருக்குப் புறப்பட்டுப் போனார்கள். அவன் மட்டும் இருந்தான். மாமா வீட்டுக்குப் போகலாம் என நினைத்தான்.

தெரு விரிந்துபோயிருந்தது. போய்க்கொண்டிருந்தான். மாமா வீட்டில் இருந்தார். அவன் போனதும் எழுந்துகொண்டார். இருவரும் கிளம்பி நந்தவனத்து ரோட்டில் போனார்கள். காற்று வெளி சூழ்ந்திருந்தது எங்கும்.

– எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள், முதற் பதிப்பு: 2014, உயிர்மை பதிப்பகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *