இராஜ தந்திரம்




மகாராணி துர்கா கவலையில் ஆழ்ந்திருந்தாள். தனது கணவனின் படைகள் போரில் சற்று தொய்ந்து காணப்படுவதாக செய்திகள் பரவிக்கொண்டிருந்தது. எதிர் பார்த்த நண்பர்கள் தங்களது படைகளை அனுப்புவதாக் கூறியவர்கள் எதிராளியின் படை பலத்தை கண்டு பின் வாங்கி விட்டார்கள். இந்த நேரத்தில் உள் நாட்டில் அவரின் பங்காளிகள் சதிகள் செய்து கொண்டிருப்பதாகவும் தகவல் வந்திருக்கிறது.
யோசனையுடன் குறுக்கும் நெடுக்குமாக அலைந்து கொண்டிருந்தவள் தன் வளர்ப்பு மகனாய் வளர்ந்து கொண்டிருப்பவனும் நம்பிக்கைக்குரிய படைத்தளபதியின் தம்பியுமான ராமையாவை அழைத்து வர சொல்லி சேவகனை அனுப்புகிறாள். வந்து நின்ற ராமையாவிடம் உனக்கு ஒரு பொறுப்பை ஒப்படைக்கிறேன், இந்த நாட்டில் நடக்கும் சதிகளை கண்டு பிடித்து ஒழிக்கவேண்டும். இந்த வேலையை இன்று முதல் உனக்கு அளிக்கிறேன்.
உத்தரவு என்று தலை குனிந்து ஏற்றுக்கொண்டான் ராமையா, போர்க்களத்திலும், அரசியலிலும் இன்னும் இளைஞன், வயது இருபத்து மூன்றுதான் ஆகிறது.
உடனிருந்த மகாராணியின் தோழி கேட்டாள். எதை நம்பி இந்த சிறுவனிடம் பொறுப்பை ஒப்படைக்கிறாய்?
மகாராணி சிரித்தாள், கவலைப்படாதே, நான் அவனை வீரனாக மட்டும் பயிற்சி கொடுத்திருக்கிறேன் இப்பொழுது இந்த அரசியலிலும் உழன்று அனுபவம் பெறப்போகிறான்.
எல்லோரும் பெரிய வீரன் ஆகத்தான் விரும்புகிறார்கள், நீ அவனை அரசியல்வாதியாக்க நினைக்கிறாய்.
வீரனாய் இருந்தாலும், நாட்டை நிர்வகிக்க சாணக்கியம் தேவைப்படுகிறது. அதை அனுபவத்தின் மூலம் தான் கற்றுக்கொள்ளவேண்டும்.
நீ என்ன செய்யப்போகிறாய்?
காணாமல் போகப்போகிறேன். தோழி அதிர்ச்சி அடைந்தாள் காணாமல் போகப்போகிறாயா?
அரசரின் பங்காளியும், அவரை வீழ்த்துவதற்கு சமயம் பார்த்துக்கொண்டிருக்கும் கூட்டத்திற்கு தலைவனாகவும் இருக்கும் வீரவர்மன் சிரித்தான், அண்ணன் அங்கே போரில் தோற்றுக்கொண்டிருப்பதாக தகவல் வந்து கொண்டிருக்கிறது. இங்கு அண்ணியாரை காணவில்லை. நல்ல சமயம்தான் அரண்மனைக்குள் நுழைந்து விடுவோம், வீர்ர்கள் தயாராய் இருக்கிறார்களா? தோழர்களிடன் கேட்டான்.
உடனே அரண்மனையை கைப்பற்றி அரியணை ஏறி விடுங்கள். வீரவர்மனை சுற்றியிருந்த கூட்டம் ஆராவரித்தது.
செய்து விடலாம், ஆனால் எனக்கென்னவோ அண்ணியாரான மகாராணி காணாமல் போயிருப்பதாக வரும் செய்திகள் நெருடலை உண்டு பண்ணுகின்றன.
சேவகன் ஒருவன் வருகிறான், தலைவரே தங்களை சந்திக்க தளபதியின் தம்பி ராமையா வந்திருக்கிறார்.
அவனுக்கென்ன இங்கு வேலை? எனக்கென்னவோ சந்தேகமாகத்தான் இருக்கிறது. ம்..சரி வரச்சொல் பார்க்கலாம்.
இளவரசே வணக்கம்..
ம்..ம்… நீ காரியம் இல்லாமல் என்னை பார்க்க வரமாட்டாய், அதுவும் நீ ராணியின் கையாள் ஆயிற்றே.
உண்மைதான் இளவரசே, அங்கே என் அண்ணனும், மன்னனும் போரில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். மகாராணியோ இந்த நாட்டில் காவல் பொறுப்பை என்னிடம் கொடுத்திருக்கிறார்கள்.
அப்படியா, ராணி எங்கே என்று உனக்கு தெரியுமே?
மன்னிக்கவேண்டும், அதை சொல்லவேண்டுமென்றால் எனக்கு உங்கள் மீது நம்பிக்கை வரவேண்டும்.
என்ன சொல்கிறாய் எனக்கு விளங்கவில்லை.
நான் இந்த நாட்டின் தளபதி பொறுப்பை ஏற்க வேண்டும், புன்னகைத்தான்.
உன் அண்ணன்தானே நாட்டின் தளபதி !
அவன் இனி திரும்ப வருவது சந்தேகம்தான், எதிரி நாட்டு படை நம் நாட்டு படையை சுற்றி வளைத்து விட்டதாக தகவல். மகாராணி என்னையே கூப்பிட்டு இந்த நாட்டை பாதுகாக்க சொல்லி விட்டார்கள், என்னை ஒன்றும் தெரியாத நல்லவன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்.
புரிகிறது, சரி நான் என்ன செய்ய வேண்டும்?
நீங்கள் சரி என்று சொன்னால் இன்று இரவு அரண்மனைக்குள் உங்கள் படைகளை அனுப்ப தயார் என்றால்…..
உன்னை நம்ப தயாரில்லை, எனக்கு அப்படி ஒரு எண்ணமுமில்லை.
நல்லது, உங்களுக்கு விருப்பமில்லை என்றால் ஒதுங்கிக்கொள்ளுங்கள், நான் அரண்மனையை கைவசப்படுத்திக்கொள்கிறேன். அதன் பின் நீங்கள் எனக்கு தளபதியாய் இருக்கக்கூட வாய்ப்பு உண்டு.
யாரிடம் வந்து பேசிக்கொண்டிருக்கிறாய் தெரிகிறதா? நானும் அரச குடும்பத்தை சேர்ந்தவன் என்பதை மறந்து விட்டாய், உன்னை இங்கிருந்து உயிருடன் விட்டால்தானே.
சோமையா சிரித்தான் நீ ஏன் இன்னும் இந்த நாட்டை பிடிக்க முடியவில்லை என்று எனக்கு இப்பொழுது புரிகிறது.
என்ன சொல்கிறாய்?
ஒரு சாதாரண தளபதியின் தம்பி நாட்டை பிடித்து விடுகிறேன் என்று அரசரின் பங்காளி முன்னால் வந்து சொல்கிறானே அப்பொழுதாவது உங்களுக்கு புரியவேண்டாமா?
வீரவர்மனை சுற்றியிருந்த அவன் வீர்ர்கள் தங்கள் வாளை உருவ முயற்சிக்க, ராமையா கட்டளையிடுகிறான். ஒருவரும் அசையக்கூடாது. இப்பொழுது வீரவர்மன் என் கைதி, அது மட்டுமல்ல இந்த நாட்டின் அரண்மனை என் வசமாகி விட்டது. மகாராணியை கைது செய்து சிறையில் அடைத்து விட்டேன். அடுத்து உரிமை கேட்டு சண்டை போடுபவன் நீதான், இவனையும் கைது செய்து கொண்டு செல்ல்லுங்கள், அவ்வளவுதான் புற்றீசலாய் வீர்ர்கள் உள்ளே வந்து வீரவர்மனையும் மற்றவர்களையும் கைது செய்து கொண்டு செல்கிறார்கள்.
போர்க்களத்தில் மன்னனிடம் ஒருவன் செய்தி கொண்டு செல்கிறான், ராமையா நாட்டை பிடித்து விட்டான். மகாராணியையும், உங்கள் பங்காளிகளையும் கைது செய்து சிறையில் அடைத்து விட்டான். தளபதி சோமையாவும் பக்கத்தில் இந்த செய்தியை கேட்டுக்கொண்டிருக்கிறார்..
துடித்து போகிறார், மன்னா அனுமதி கொடுங்கள், இப்பொழுதே நாட்டுக்கு சென்று அவனை கண்ட துண்டமாய் வெட்டி வருகிறேன்.
பொறு தளபதியாரே, ராமையாவை வளர்த்தவள் மகாராணி. கொஞ்சம் யோசிப்போம். துரோகங்கள் நமக்கு ஒன்றும் புதிதல்லவே.
எதிரி நாட்டு படைகளிலும் அன்று இரவு முக்கிய ஆலோசனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
நாம் போரிட்டுக்கொண்டிருக்கும் மன்னன் நாட்டை இழந்து விட்டானாம். அவன் நாட்டை அவன் தளபதியின் தம்பியே கைப்பற்றிக்கொண்டானாம்.
இது உறுதியான செய்தியா? நம் ஒற்றர்கள் அவர்கள் இடத்திலிருந்து கொண்டு வந்த செய்தி, அது மட்டுமல்ல அவன் நாட்டுக்குள் இருந்தும் நமக்கு உறுதி படுத்திய செய்தி வந்துள்ளது.
அப்படியானால் இவனிடம் போரிட்டுக்கொண்டிருப்பது நமக்கு வீண் வேலை என்றூ சொல்லுங்கள்.
நாம் இவனை தோற்கடித்தாலும், நமக்கு எந்த பலனும் கிடைக்கப்போவதில்லை. அனேகமாக
இவன் திரும்ப அவன் நாட்டுக்கு சென்று அதை மீட்பதற்கு போராடிக்கொண்டிருக்கப்போகிறான்,
அவ்வளவுதான். நாடில்லாத இவனிடம் நாம் போராடி நம் வீர்ர்களை இழந்து கொண்டிருக்கப் போகிறோமா?
இரவே அரசர் வீர்ர்களுடன் உரையாற்றுகிறார். வீர்ர்களே இப்பொழுது நம் நாடு ஒரு துரோகியிடம் மாட்டிக்கொண்டுவிட்டது. நாம் நம் படைகளை திருப்பிக்கொண்டு சென்று அதை மீட்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். என்ன செய்யலாம் சொல்லுங்கள், நம் எதிரி அரசனான இவனிடம் போரிடுவோமா, இல்லை நாட்டுக்கு திரும்பி சென்று நாட்டை மீட்பதற்கு போரிடுவோமா?
வீர்ர்களிடையே குழப்பம் நிறைந்திருந்தது. ஒவ்வொருவருக்கும் தன் நாட்டுக்கு செல்லவேண்டும், அங்கு அவர்களுடைய குடும்பங்களுக்கு என்னவாயிற்றோ என்கிற கவலை வந்து சூழ்ந்து கொண்டது.
காலை விடியலில் இங்கிருந்து பார்த்த வீர்ர்கள் ஆச்சர்யப்பட்டனர். காரணம் அங்கே எதிரிகளின் படை ஒன்றும் காணப்படவில்லை. அவர்கள் இரவோடு இரவாக படைகளை நகர்த்தி சென்று விட்டிருந்தார்கள்.
அரசன் ஆச்சர்யத்துடன் தளபதி சோமையாவை அழைத்தான், எப்படி இரவோடு இரவாக கிளம்பி சென்று விட்டார்கள்?
அதுதான் எனக்கும் புரியவில்லை, பயந்து விட்டார்கள் என்று சொல்லவும் வாய்ப்பில்லை, நமக்கு சம பலத்துடன் இருப்பவர்கள், பார்க்கலாம் ஒற்றர்களை அனுப்பி உள்ளேன்.
ஒற்றன் ஒருவன் உள்ளே வந்தான், அரசருக்கும் தளபதிக்கும் வணக்கம் சொன்னவன், அவர்கள் நாலு காத தூரத்தில் சென்று கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பேசிக்கொண்டது, இதுதான் நாடில்லாத அரசனிடம் போரிட்டு காலத்தை கடத்துவது தேவையில்லை என்று அரசர் நினைக்கிறாராம்.
இதை கேட்ட அரசன் துயரத்துடன் எவ்வளவு கேவலமாகிவிட்டேன் பார்த்தீரா தளபதியாரே,
மன்னிக்க வேண்டும் மன்னா, நாம் இப்பொழுதே நம் படைகளை திருப்பி நம் நாட்டிற்கு செல்வோம், அங்கு அந்த துரோகியை… பல்லை கடித்தார்.
நாட்டின் எல்லையில் அரசர் முதல் அனைவரும் தடுத்து நிறுத்தப்படுகிறார்கள். கோபத்தில் கொதிக்கிறார் தளபதி..எங்களை தடுத்து நிறுத்த சொன்னவர்கள் யார்?
மகாராணி அவர்கள். மகாராணியா? அனைவரும் திகைக்க..
மகாராணி, அருகில் சோமையாவுடன், சுற்றிலும் பாதுகாப்பு படை வீர்ர்களுடன் வந்தவர்கள், அரசரின் கழுத்தில் மாலையை போட்டு வாருங்கள் என்று அழைத்தாள்.
அரசருக்கு ஆச்சர்யம், அதைவிட தளபதிக்கும் ஆச்சர்யம், தன்னுடைய தம்பி நாட்டை அபகரித்துக்கொண்டான் என்று கேள்விப்பட்டதிலிருந்து மனம் சஞ்சப்பட்டுக் கொண்டிருந்தவருக்கு மகாராணியுடன் இவனும் வந்தது மகிழ்ச்சியை கொடுத்தது.
மகாராணி சிரித்தாள் என்ன மன்னரும் தளபதியும் திகைத்து நின்று விட்டீர்கள்?
சோமையா என்னை கைது செய்ததும் உண்மை, அதே போல் நம் நாட்டை அபகரிக்க தயாராய் இருந்தவர்களையும் கைது செய்ததும் உண்மை.
என்ன சொல்கிறாய் எனக்கு ஒன்றும் விளங்கவில்லையே?
அங்கு நீங்கள் தோற்றுக்கொண்டிருப்பதாகவும், அனேகமாக நீங்கள் திரும்பி வர சாத்தியமில்லை என்று வதந்தியை பரப்பி உங்கள் சகோதரர் அன்று இரவு அரண்மனையை கைப்பற்றிக்கொள்ள தயாராகிவிட்டதாக எனக்கு தகவல் வந்தது. சோமையாவை கூப்பிட்டு யோசனை செய்தேன். அவர்கள் கைப்பற்று முன் நாமே கைப்பற்றிக்கொண்டதாக ஒரு நாடகத்தை போட்டுக்கொள்ள ஏற்பாடுகள் செய்தோம். அதன்படி என்னை கைது செய்யச்சொல்லியும், அன்று அனைத்து வீர்ர்களும் சோமையாவின் பேச்சை கேட்கவேண்டும் என்று ஆணையிட்டேன். அதன்படி இரவோடு இரவாக அவர்களை கைது செய்ய ஒரு காரணம் கிடைத்து அந்த கூட்டத்தை கைது செய்து சிறையில் அடைத்து விட்டோம். அது மட்டுமல்ல இந்த தகவலை ஒற்றர்கள் மூலம் உங்களுடன் போரிட்டுக்கொண்டிருந்த எதிரி அரசன் காதுகளுக்கும் கசிய விட்டோம். உங்களுக்கு வந்த தகவல் கூட தாமதமாகத்தான் கொடுத்தோம். காரணம் எதிரி நாட்டு மன்னனுடைய அசைவுகளை பார்த்து, அதன் பின்னரே உங்களுக்கு தகவல் தர சொன்னோம். காரணம் நீங்கள் மனம் தளர்ந்து விடக்கூடாது என்றுதான் இந்த ஏற்பாடு.சரியாக செய்து முடித்தான் சோமையா.
சோமையா வெட்கத்துடன் தலைகுனிந்து நின்றான்.
நீ வளர்த்த பிள்ளையல்லவா புத்திசாலியாகத்தான் இருப்பான். மன்னர் புன்னகையுடன் சொன்னார்