இரண்டில் ஒன்று
“ஹலோ…! குருமூர்த்தியா..?? நான் பிச்சுமணி பேசறேன்….
சௌக்கியமா..?? உன்னையும் கோக்கியையும் பார்த்து எத்தன நாளாச்சு….. ஒரு வருஷம் இருக்குமா..?? அதான்…..!”
குருமூர்த்தி ஒரு நிமிஷம் ஷாக் அடித்தமாதிரி துள்ளினான். ஃபோனைக் கையால் பொத்திக்கொண்டு..
“கோகி…பிச்சுமணி பேசறார்டி…
இங்கவரப்போறாராம்…உன்னைப்பாத்து நாளாச்சாம்..வந்தா மனுஷன் ஒரு மாசத்துக்கு மேல டேரா போட்டுடுவாரே….என்ன பண்ணலாம்…?”
“என்னன்னா சொல்றேள்……பிச்சு மாமாவா…பேசாம ஊர்ல இல்லைன்னு சொல்லுங்கோ….!”
“மாமா..சௌக்யமா?? இப்பதான் உங்களைப் பத்தி பேசிண்டிருந்தோம்..இந்த காலத்தில உங்களமாதிரி மனுஷாளப் பாக்கிறதே ஆபூர்வமான்னா இருக்கு…இப்ப பாத்து ஊர்ல இல்லையேன்னு கோகி ரொம்ப வருத்தப்படறா…
ஒரு கல்யாணத்துக்காக காரைக்குடி வந்திருக்கோம்..
அப்பிடியே கொஞ்சம் ஷேத்ராடனம் போய்ட்டு..திரும்ப ஒரு மாசம் ஆய்டும்.. வந்ததும் நானே கூப்படறேனே…!”
“மூர்த்தி…கோக்கிக்கு வருத்தமே வேண்டாம்..ஆமா காரைக்குடிய காஞ்சீபுரத்துக்கு எப்போ ஷிஃப்ட் பண்ணினா? எனக்கு தெரியாம..?”
“என்ன சொல்றேள்… ஒண்ணும் புரியலயே மாமா..!”
“வாசலண்ட வந்தது பாரு.. புரியும்..!”
“கோகி..மாமா என்னமோ சரியில்ல..ஏதோ உளர்றார்… எதுக்கும் இரு..வாசலப் பாக்க சொல்றார்.”
வாசல்கதவு ‘ பே’ என்று திறந்துதான் இருந்தது…
சாட்சாத் பிச்சு மணி மாமாதான்..!
திரை விலகினால் …சிரித்துக் கொண்டு நடராஜ தரிசனம் குடுப்பதுபோல் ……
இருபது பல்லும் தெரிய… சிரித்துக் கொண்டு நிற்கிறார்..
“மாமா… நீங்க…?”
“டேய்..மூர்த்தி..நீ கொஞ்சம் கூட மாறவேயில்ல..சின்ன வயசில இருந்த மாதிரி அதே புளுகு மூட்டை..!
ஃபோன்ல பேசறச்சே அக்கம் பக்கம் பாத்து பேசு… மொபைல்ல பேசறச்சே நாலுபக்கமும் பாத்து பேசுன்னு சொல்லுவா…
மீட்டிங்ல இருக்கேன்னு பொண்டாட்டி கிட்ட சொல்லுவான்..பார்த்தா ஜாலியா எவளோடயாவது சினிமா தியேட்டர்ல இருப்பான்..பின்னாடி வரிசல பெண்டாட்டி…
நினச்சு பாரு…..
பேந்த பேந்த முழிக்காம போய் ஒரு இருநூத்தம்பது ரூபா இருந்தா எடுத்துண்டு வா…கைல இரண்டாயிரமாத்தான் இருக்கு…..”
நேத்துதான் குருமூர்த்தி பாங்கில் ஆயிரம் வித்டிரா பண்ணினான்….அதைவைத்து இந்த மாசம் ஓட்டிவிடலாமென்று அற்ப ஆசை…..
இதோ மாமா ‘சுக்லாம்பரதரம்’ பாடியாச்சு..
‘ எங்கிட்ட ஐநூறாத்தான் இருக்கு…ஆட்டோகாரரை சில்லறை வாங்கிண்டு வரச்சொல்லுங்கோளேன்….”
மாமா கையில் பணம் போனால் ‘யானை வாய் சோளப்பொரிதான்’.
“டேய்..தள்ளுடா நோட்டை..என்னமோ யோசிச்சிண்டு… எல்லாம் அட்ஜஸ்ட் பண்ணிக்லாம் …விடு…”
ஒரு பெரிய சூட்கேஸ்….( நிச்சயம் மூணு மாசம் டேரா..)……இரண்டு தகர டின்கள்..( மாமாவின் டிரேட் மார்க்)… இரண்டு மூன்று மஞ்சப் பைகள்…… ஒரு குடை…!
“இந்தாப்பா…இருபது ரூபா கூட எடுத்துண்டு மீதியக் குடு…”
ஆட்டோக்காரர் பல்லை இளித்தார்..
‘ஊரான் வீட்டு நெய்யே..என் பெண்டாட்டி கையே….’
அவரோட பணமா என்ன…?
“கோக்கி…நன்னாயிருக்கியாம்மா…??”
“மாமா…வாங்கோ…தப்பா எடுத்துக்காதீங்கோ…இவருக்கு தீடீர்னு இந்தமாதிரிதான் மூளை குதர்க்கமாய் வேலை பண்ணும்…!”
‘அடிப்பாவி….! ஐடியா குடுத்தவளே நீதானே…இப்போ மாமா கிட்ட நல்லபேர் எடுத்துக்கலாம்னு என்னையே காட்டிக் குடுத்திட்டியே..’
மனதில் நினைத்துக் கொண்டான் குரு…
“கோக்கி… நான் தூக்கி வளத்த குழந்தை நீ….உன்னத்தெரியாதா… இவனையும் தெரியும்…விடு..போய் நல்ல ஸ்ட்ராங்கா ஒரு காப்பி போட்டுக் கொண்டா..உன்னோட கையால காப்பி குடிச்சு எவ்வளவு நாளாச்சு….”
“இதோ ஒரே நிமிஷம்…
இந்தாங்கோ..மசமசன்னு நிக்காம பாத்ரூம்ல எல்லாம் எடுத்து வைங்கோ..”
இவ்வளவு சீக்கிரம் ஒருத்தர் கட்சி மாற முடியுமா….??
நம் நாடு ஏன் இப்படி இருக்கிறது என்று குருவுக்கு இப்போது புரிந்தது…
மாமா பாத்ரூமிலிருந்து வர குறைந்தது அரைமணி நேரம் ஆகும்…
அதற்குள் ஒரு சின்ன flashback…..
கோக்கி என்றழைக்கப்படும் கோகிலாவின் ஒன்றுவிட்ட மாமாதான் இந்த பிச்சுமணி….
காஞ்சீபுரம் பக்கத்தில் மீஞ்சூர் என்ற இடம்தான் கோகிலாவின் பூர்வீகம்.அவளின் பாட்டனார் தஞ்சாவூரில் பெரிய மிராசுதார்..
ஏகப்பட்ட நில புலன்கள்…
கட்டிக்காக்க ஒரே பையன் சந்திர மௌலீஸ்வரன்.
எப்படியோ தட்டுத் தடுமாறி வக்கீலுக்கு படித்துவிட்டான். பாதி சொத்து அழிந்தது போக மீதியே ஏகத்துக்கும் இருந்தது…
பாலாமணி மனைவியாய் வாய்த்தது அதிர்ஷ்டம் தான்…
எல்லா நிலத்தையும் விற்று காசாக்கி மீஞ்சுரில் பெரிய வீடாய் கட்டிக் கொண்டாள்..மௌலிக்கு சும்மா இருப்பதே சுகமாயிருந்தது.
வரிசையாய் ஐந்து பெண் குழந்தைகள்..மௌலியும் ஆண்டியானான்.அப்போது வந்து ஒட்டிக் கொண்டவன் தான் இந்த பிச்சுமணி. பாலாமணியின் ஒன்றுவிட்ட தம்பி முறையாக வேண்டும்..
பிச்சுமணி மட்டும் இல்லாமலிருந்தால் பாலாமணியின் கதை கந்தலாயிருக்கும்..
ஐந்து பெண்களின் கல்யாணத்திலிருந்து.. பிரசவம்.. காதுகுத்து.. உபநயனம்.. சர்வமும் மாமா பிச்சு மணியின் தயவால்தான்..
குழந்தைகளின் மூத்திரத் துணியை கசக்கிப்போடுவதிலிருந்து….மருமாளுக்கு பத்திய சாப்பாடு பண்ணிப் போடுவது வரை எல்லாமே மாமாதான்.. கொஞ்சம் கூட அலுத்துக் கொள்ளவே மாட்டான்..
‘ தங்களுக்குப்பின் மாமா அங்கேயே தங்க வேண்டியது.
மாமாகாலத்துக்குப் பின்னால் ஐந்து பெண்களுக்கும் சம பாகம் ‘ என்று பாலாமணி சொன்னபோது ஒருத்தராவது மறுப்பு சொல்ல வேண்டுமே…உஹூம்….மாமா என்றால் எல்லோருக்கும் உயிர்….
மாமா ஆன மட்டும் கெஞ்சிப்பார்த்தார்..வேண்டவே வேண்டாமென்று…
ஆனால் பாலாமணி சொன்னால் சொன்னதுதான்…
மாமா கல்யாணம் பண்ணிக்கொள்ள மறந்தே போனார்… வரதராஜப் பெருமாளும்..ஏகாம்பரநாதருமே துணை…
கோகிலா மூன்றாவது.. !
மாமா செல்லம்..
மற்ற மருமாள்களைக்காட்டிலும் அவளிடம் பிரியம் அதிகம்… அதற்கு காரணம் உண்டு…
இங்கேயும் அதே வரதராஜப் பெருமாளும் .. காமாட்சி தாயாரும்..ஏகாம்பர நாதரும்..அதைவிட முக்கிய காரணம் குருமூர்த்தி… அவருடைய பால்ய கால சினேகிதன் கோண்டுவின் பேரன்.. இவர் பார்த்த வரன்…
இதோ மாமா குளித்துவிட்டே வந்துவிட்டார்..
“கோக்கி…காப்பின்னா இதான் காப்பி.. இன்னும் கொஞ்சம் டிபனுக்கு அப்புறம்…!என்ன டிபன் ??”
“பொங்கலும்..கொத்ஸூம். கொஞ்சூண்டு கேசரியும் கிளறியிருக்கேன்….”
அவர் வரேன்னதும் ‘ஊர்ல இல்லன்னு’ சொல்லச்சொன்னவ வட..பாயசத்தோட விருந்து வைக்கிற கொடுமய எங்க போய் சொல்றது…??
குருவுக்கு பொருமலாக இருந்தது…ஆனால் அடுத்த சில நிமிடங்களில் மாமா அசத்தி விட்டார்..
“மாப்ள.. போய் அந்த இரண்டு டின்னையும் கொண்டா…!”
எடுக்க எடுக்க புதையல் மாதிரி வந்து கொண்டே இருந்தது..
‘திரட்டிப்பால்…போளி…மனோகரம்..முள்ளுமுறுக்கு…இலவடாம். .மாவடு…ஆவக்காய்……’ எல்லாம் மாமா கைவண்ணம்…
“என்ன மாமா.. இத்தனையும் எதுக்கு சிரமப்பட்டு..??”
“ஒரு சிரமமும் இல்ல…தனியா உக்காந்து திண்ணய தேச்சுண்டு இருக்கச் சொல்றியா…எடுத்து வை…”
மாமாவுக்கு இன்னும் உபசாரம் கூடுமா ….கூடாதா .??
“சரி.. நான் போய் சித்த கண்ணசரப் போறேன்..டாண்ணு ஒரு மணிக்கு எல போட்டுடு கோக்கி….”
“ஏன்னா…மாமா பாவம் இல்ல…எங்களாலதான் கல்யாணமே பண்ணிக்காம இருந்துட்டார்…. அவருக்கும் எங்கள விட்டா யாரு….??”
“அவராவது சந்தோஷமா இருக்கட்டுமே..!”
“ஏன்…இப்போ உங்க சந்தோஷத்துக்கு என்ன கொறச்சலாம்..??”
“நீ சொன்னா சரிதான்…”
இந்த வசனம் வாயிலிருந்து அடிக்கடி வருவதால்தான் குருவின் பிழைப்பு ஓடிக்கொண்டிருக்கிறது .
எல்லா கணவர்களும் இதை பின்பற்றினால் குடும்பத்தில் குழப்பம் என்பது ஏது….??
மாமாவால் ஒரு நிமிஷம் கூட சும்மா இருக்க முடியாது. மகா சுறுசுறுப்பு…. எழுபது வயதுக்கு மேலே என்றால் நம்ப முடிகிறதா…?
தினமும் சாயங்காலம் கண்டிப்பாய் பெருமாளையும் , ஏகாம்பரேஸ்வரனையும் பார்த்துவிட்டு வரவேண்டும்…….
ஆனால் அதைவிட முக்கியமான காரியம் ஒன்று இருக்கே….!
‘ செல்லப்பா ‘ கோவில் இட்லி ‘ கண்டிப்பாய் சாப்பிட்டாக வேண்டும்..!
“டேய்… குருமூர்த்தி…. நான் உன்ன மட்டும் பாத்துட்டுப் போக வரல்ல… ‘ காஞ்சீபுரம் இட்லி ‘ சாப்பிட்டுட்டுத்தான் இந்த கட்ட வேகும்…”
யாரிந்த செல்லப்பா…?
கோவில் குடலை இட்லி பண்ணுவதில் இவரை மிஞ்ச யாருமில்லை என்ற பிரசித்தி பெற்றவர்…
இவருக்கப்புறம் இவரது மனைவி விஜயலஷ்மியும்…. மகன் கண்ணனும் வீட்டிலிருந்தபடி குடலை இட்லி..கீரை வடை..புளியோதரை ..பண்ணிக் குடுத்து பரம்பரை புகழை காப்பாற்றி வருகிறார்கள்..
இந்த மாசம் எடுத்த பணமெல்லாம் குடலே விழுங்கி விடும் போலிருந்தது…
மாமாவை சமாளிப்பது ஒன்றும் லேசுபட்ட காரியம் இல்லை…
ராத்திரியானாலே ‘ சிம்ம சொப்பனம்’ தான்.
“கோக்கி…! ஒரு ஜமக்காளமும் தலகாணியும் குடும்மா….!”
“எதுக்கு மாமா….?”
“படுத்துக்கத்தான்…..!”
“ரூம்புல கட்டில் இருக்கே… ஜம்முனு மெத்தைல படுங்கோ…வயசான காலத்தில கீழ படுத்தால் உடம்பு வலிக்கும்…”
“மெத்தையா…மூச்…. நன்னா தரைல ஜமுக்காளத்த விரிச்சு படுத்தாத்தான் தூக்கமே வரும்….வாசக்கதவ தெறந்து வை… கிரில் கதவை மட்டும் மூடு.. எனக்கு ஃபேன்.. கீன்… ஒண்ணும் ஆகாது…!”
“மாமா….இது ஒண்ணும் உங்க மீஞ்சூர் இல்ல… திருடன் வந்து வீட்ட சுருட்டிண்டு போய்டுவான்…!”
“என்ன மீறி எந்த திருடன் வருவான் பாக்கலாம்….?”
அது என்னவோ உண்மைதான்…மாமாவிடும் குறட்டை சிம்ம கர்ஜனைதான்…எட்டூருக்கு கேக்குமே…!
“கோக்கி… ஒரு சொம்புல வெதவெதன்னு தண்ணி வச்சுட்டு.. ஒரு டார்ச் மட்டும் குடுத்தியானா உபகாரமாயிருக்கும்..பூச்சி.பொட்டு…வரும்போல இருக்கே…”
ஒரு மாசம் ஓட்டுவது எப்படி இருக்கப்போகிறதோ….??
குருமூர்த்திக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது…..!!
அன்றைக்கு குருமூர்த்தி ஆஃபீஸிலிருந்து வரும்போதே கோகிலா முகம் வாடியிருந்தது..
“கோக்கி …குருவுக்கு தயிர்வடையும் கேரட் அல்வாவும் குடு…..!”
“என்ன விசேஷம்…..?”
“அதெல்லாம் ஒண்ணுமில்ல..இன்னியிலிருந்து ஒருவாரம் என் சமையல்தான்…கோக்கிக்கு ரெஸ்ட் வேணும் மாப்ள….”
ஆனால் கோகிலா முகமோ வேறு கதை சொன்னது…
ராத்திரி படுக்கும்போதுதான் கோகிலா வாயைத் திறந்தாள்…
“மாமாவ சீக்கிரம் ஊருக்கு அனுப்பற வழியப் பாருங்கோ.!’
“ஏன் கோகி…. உனக்கும் ரெஸ்ட்டா இருக்குமே…. சூப்பரா சமச்சிருந்தாரே…”
“ஏன் சமைக்கமாட்டார்…..? என்னோட உயிரையே எடுத்துட்டாரே…”
“கோக்கி.. என்ன உளுந்து…ரொம்ப பழசாயிருக்கும்போலிருக்கே… போய் நல்ல உருண்ட உளுந்து ஒரு கிலோ வாங்கிண்டு வா…
கறுப்பு புளியை கரச்சு சாம்பார் வச்சா கன்னங்கரேர்னுனா இருக்கும்… அப்படியே மண்ட வெல்லம் அரைக்கிலோ…!
நீங்கள்லாம் டேபிள் ஸால்ட்ட கட்டிண்டு அழறேள்…உடம்புக்கு ரொம்ப கெடுதல்…கல்லுப்புல சமச்சா ருசியே தனிதான்…அது நூறுகிராம்..!
கையோட தளிர் கும்பகோணம் வெத்தலையும்…..அசோகா சீவலும்…உள்ள தள்ளினால் தான் வேலையே ஒடும்…!”
“என்ன பத்து தடவ கடைக்கு நடக்க வச்சுட்டார்…..!
அப்புறம் பரண்ல இருக்கற ஈயச்சொம்ப தேடி எடுத்தாத்தான் ரசம் வைக்கமுடியுமாம்….!
“கோக்கி… எல்லாம் ரெடி… சித்த கண்ணசரப் போறேன்..நீ என்ன பண்ற… சமையல் ரூம் சுத்தமா தொடச்சு….பாத்திரத்தையெல்லாம் அலம்பி வச்சா ஆச்சு……!”
“உள்ள போனா….யான புகுந்த வெங்கலக் கடதான்… இவர் சமைக்கலன்னு யார் அழுதா….?”
ஒரு மணி நேரத்துல நானே அழகா சமச்சிருப்பேன்….. முடியலடா சாமி….”
கோகிலா கண்ணில் தண்ணி வந்தா குருவுக்கு பொறுக்காது…!
‘இரண்டில் ஒன்று’ பார்த்துவிட்டுத்தான் மறுவேலை..
ஆனால் அது இவ்வளவு சீக்கிரம் நடக்குமென்று சத்தியமாய் குருமூர்த்தி எதிர்பார்க்கவில்லை…..
கோகிலா அன்று படுத்தவள்தான்… உடம்பு கொதித்தது..இரண்டு நாளில் காலில் வீக்கம்…..
என்னென்னமோ உளறிக் கொண்டிருந்தாள்…
மாமாவுக்கு இருப்பே கொள்ளவில்லை…
“கோக்கி. .. பண்றது…?
எங்கொழந்தைக்கு என்ன ஆச்சு..?? குரு …உடனே ஆஸ்பத்திரில அட்மிட் பண்ணுடா..!
வீட்டப் பத்தின கவலய விடு…போ… சீக்கிரம்…”
கோகிலாவை அட்மிட் பண்ணி ஒருவாரம் ஆகிவிட்டது… இரண்டு கிட்னியும் வேலை பார்க்கவில்லையாம்…என்னமோ ‘டயாலிஸிஸ்’ என்று இருக்காம்…அதுவே இரத்தத்தை சுத்தம் பண்ணுமாம்…இன்னும் ஒரு மாசத்துக்குள் வேற கிட்னி வைக்கணுமாம்…!?
குருமூர்த்தி இடிந்து போனான்…
தைரியம் சொன்னது மாமாதான்…
“மாப்ள… ஒண்ணும் ஆய்டல… இதுமாதிரி நம்ப பட்டம்பி பையன் சம்பத்துக்கு வந்தது…இப்போ ஆபரேஷன் ஆகி ஜம்னு இருக்கான்…
நாளைக்கு ஒருநாள் ஆத்தில இரு… நான் போய் ஆஸ்பத்திரில கோக்கிய பாத்துட்டு…அப்பிடியே டாக்டரையும் பாத்துட்டு வரேன்…
மாமா வரும்போது மணி நாலாயிருந்தது…. ஆனால் முகத்தில் ஒரு பிரகாசம்….!!
“எல்லாம் சரியாய்டும் பாரு….கோக்கி ஒரே மாசத்தில பழையபடி ஆகலைன்னா எம்பேர மாத்திக்கறேன்…!”
குருவுக்கு ஒன்றுமே புரியவில்லை….
மாமா இரண்டு நாள் ஆஸ்பத்திரி போவதும் வருவதுமாய் இருந்தார்….
“மிஸ்டர்.. குருமூர்த்தி….உங்க வைஃப் ரொம்ப லக்கி… இன்னும் ஒரு வாரத்தில சர்ஜரி வச்சிக்கலாம்…. Perfect Donar கிடைச்சாச்சு…”
“என்ன டாக்டர் சொல்றீங்க….?”
“ஆமா… உங்க மாமா பிச்சுமணிதான் கிட்னி தரப்போறார்…
“உங்களுக்கே தெரியாதா….?”
“மாமாவா… அவர் வயசானவர்னா…?? அவர் எப்படி…?”
“கிடனிக்கு வயசெல்லாம் கிடையாது….மனசு போதும்… அவர் நம்ப எல்லாரையும்விட திடகாத்திரமாவே இருக்கார்…. நாங்க எல்லா டெஸ்டும் முடிச்சாச்சு… நீங்க சரின்னு சொன்னா நாங்க ரெடி….”
“மாமா… உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்….”
மாமா கையைப் பிடித்துக் கொண்டு அழுது விட்டான் குரு…!!
“மாமா… இப்போ பேசறதெல்லாம் சத்தியமான வார்த்தை…உங்கள மாதிரி ஒரு மாமா கிடச்சதுக்கு நாங்க குடுத்து வச்சிருக்கணும்….
ஆனாலும் நீங்க கிட்னி தரதில எனக்கு சம்மதமில்லை…இந்த வயசில…யாருமில்லாம..தனியா இருக்கற உங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா கோகி தாங்கமாட்டா…
கொஞ்சம் பொறுங்கோ..வேற யாராவது கிடைக்காமயா போகும்…ப்ளீஸ் மாமா….கோகி என்ன மன்னிக்கவே மாட்டா….!”
சிறிது நேர மௌனத்திற்குப் பின் மாமா பேச ஆரம்பித்தார்…….
“சரி…இப்போ நான் சொல்றத பொறுமையா கேப்பியா….?
குரு…எனக்கு நெனவு தெரிஞ்ச நாள் தொட்டு மூணு வேளை சாப்பாடு முழுசா சாப்பிட்டதில்ல…
எங்கப்பா ஒரு’ சவுண்டி’ பிராமணன்.. அவர் சாப்ட்டுட்டு கட்டிண்டு வர சாப்பாடுதான் எங்களுக்கு… அம்மா சமையல் பண்ணி நாலு வீட்டுக்கு குடுத்திண்டிருந்தா….அப்போ கத்துண்டதுதான் இப்போ எனக்கு கை குடுக்கறது…
அப்பா… அம்மா..காலத்துக்கப்புறம் கிட்டத்தட்ட அனாதயா நின்னப்போதான் பாலாமணி அக்கா நியாபகம் வந்தது…கைல சல்லிக்காசு கிடையாது..எப்பிடியோ விலாசம் கண்டுபிடிச்சு வித்அவுட்ல வந்த எனக்கு அடைக்கலம் குடுத்தா எங்கக்கா…
குரு…இன்னைக்கு வரைக்கும் இன்னொருத்தர் தயவுலதான் என் வாழ்க்கை ஓடிண்டிருக்கு….
அனுபவிச்சவாளுக்குத்தான் அந்த கொடுமை தெரியும்..
எதுக்கு இப்படி மானம் கெட்டு வாழணும்னு கூட யோசிச்சிருக்கேன்…
ஒரு போர்ஷன வாடகைக்கு விட்டு அதில வர வருமானத்திலதான் வண்டிய ஓட்டிண்டிருக்கேன்…எல்லாமே அக்கா போட்ட பிச்சை…நீ கூட நெனச்சிருப்ப…இந்த மாமா சுத்த கஞ்ச மகாப்பிரபுவா இருக்காரேன்னு…
அதனால்தான் என் உயிர் இருக்கிற வரைக்கும் ஓடா உழைக்கணும்னு தீர்மானம் பண்ணிட்டேன்…
இந்த உடம்பு ஒண்ணத்தவிர வேற சொத்து எங்கிட்டே கிடையாது.. நான் சீக்கிரம் போனா அந்த வீடாவது அவா எல்லாருக்கும் உபயோகமா இருக்கும்… அதுக்கும் வேளை வரலியே…..!
குரு…இது எனக்கு கிடச்ச அருமையான சந்தர்ப்பம்.. இதைத் தவற விட்டால் என்ன மாதிரி துரோகி யாரும் இருக்க மாட்டா….எனக்கும் வாழ்நாள் முடியப் போறது…சாகும்போது இரண்டு கிட்னியையும் வச்சிண்டு குத்தமுள்ள மனசோட சாகறதவிட… ஒரு கிட்னியோட நிம்மதியா சாக ஆசப்படறேன் குரு…போய் சர்ஜரிக்கு ஏற்பாடு பண்ணு….”