இயல்பான இயற்கைகள்
ராஜசேகருக்கு வயது அறுபத்தியெட்டு.
அவருக்கு சமீப காலங்களாக தன் இறப்பைப் பற்றிய சிந்தனைகள் அதிகரித்தது. இறப்பிற்குப் பின் தான் என்னவாக, எப்படி இருப்போம்? தாம் செல்லப்போவது சொர்க்கத்திற்கா அல்லது நரகத்திற்கா?
இதே எண்ணங்கள் அவரை தினமும் அரித்துக் கொண்டிருந்தன. மனைவி கமலாவிடம் இதைப்பற்றி பேசியபோது அவள்[SK1] , “இதுல என்னங்க சந்தேகம், நாம ரெண்டு பேருமே இறப்பிற்குப் பின் சொர்க்கத்திற்குத்தான் போவோம்…ஆனா யார் முந்தி, யார் பிந்தி என்பதுதான் நமக்குத் தெரியாது” என்றாள்.
ராஜசேகர் நேர்கோட்டில் வாழ்பவர். இரண்டு மகன்களுக்கும் நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுத்தார். தற்போது அவர்கள் அமெரிக்காவில் குழந்தைகளுடன் செட்டிலாகி விட்டனர். தன் கடமைகளை நல்லபடியாக முடித்துவிட்டு மனைவி கமலாவுடன் நிம்மதியாக திருநெல்வேலி பெருமாள்புரத்தில் வசிக்கிறார்.
மறுநாள் காலை, ராஜசேகர் அடுத்த தெருவில் வசிக்கும் தன் முப்பது வருட நண்பர் குமரேசனிடம், இறப்பிற்குப் பின் என்ன என்று கேட்டுத் தெரிந்துகொள்ள ஆர்வத்துடன் விரைந்தார். குமரேசன் சற்றுத் தடாலடியான பேர்வழி. நேரடியாகச் சிந்திப்பவர். வெட்டு ஒண்ணு, துண்டு ரெண்டு என்று அடித்துப் பேசுபவர். சக மனிதர்களை மிகவும் மரியாதையாக நடத்தினாலும் – பூஜை புனஸ்காரங்கள்; சாஸ்திரங்கள்; சம்பிரதாயங்களில் நம்பிக்கையற்றவர். ஆனால் பிறருக்கு தாராளமாக உதவி புரிவதில் மெனக்கிடுபவர். வயது அறுபத்தைந்து.
காலையிலேயே, ராஜசேகரைப் பார்த்ததும், “என்னடா திடீர்ன்னு…ஏதாவது சந்தேகமா?” என்றார்.
“ஆமா குமரேசு, எனக்கு சமீப காலங்களா மரணபயம் அதிகரித்துள்ளது. செத்த பிறகு நான் என்னவா ஆவேன்? எப்படி இருப்பேன்? நான் போகப்போவது சொர்க்கமா, நரகமா? சுருக்கமாக, என் இறப்பிற்குப் பிறகு என்ன என்பதைத் தெரிந்து கொள்ள ஆசை…நீதான் அதை எனக்கு விளக்கிச் சொல்லவேண்டும்” என்றார்.
“நீ மொதல்ல ரிலாக்ஸ்டா உட்காரு. கோமு, சேகருக்கு காபி கொண்டா” என்று சமையலைறைக்கு குரல் கொடுத்தார்.
ராஜசேகர் அங்கிருந்த சோபாவில் அமர்ந்தார்.
“வயசானா எல்லோருக்கும் மனசுல பைத்தியக்கார எண்ணங்கள் வரும் போலிருக்கிறது… பிறப்பும், இறப்பும் எல்லா மனிதர்களுக்கும் மிக இயல்பான இயற்கைகள். நாம் உயிருடன் இருக்கும்போது எப்படி மற்றவர்களுக்கு உதவி புரிந்து, பரஸ்பர மரியாதையுடன், புரிதலுடன் வாழ்கிறோம் என்பதுதாண்டா ரொம்ப முக்கியம்…”
கோமதி இருவருக்கும் காபி எடுத்துவந்து, வைத்துவிட்டுப் போனாள்.
“நீ பொறக்குறதுக்கு முன்னாடியும் இந்த உலகம் எப்போதும்போல இயங்கிக்கொண்டிருந்தது. நீ செத்த பிறகும் இந்த உலகம் இயல்பா இயங்கிக் கொண்டுதான் இருக்கும்…. நீ ஜனித்ததே உன்னோட அமோக வெற்றி; உன்னோட இறப்பு என்பது உன்னுடைய கடைசித் தோல்வி.”
“எனக்குப் புரியல முருகேசு…”
“எழுபது வருடத்துக்கு முன்னால், என்றோ ஒரு மகிழ்ச்சியான தருணத்தில் உன்னோட அப்பா உன் அம்மாவை சந்தோஷமாக முயங்கியபோது, அதன் உச்சகட்டத்தில் உன் அப்பா வெளியிட்ட பல்லாயிரக்கணக்கான க்ரோமசோம்களில் (chromosomes) நீ மட்டும் வெற்றி வீரனாக முன்னே நீந்திச்சென்று சென்று முதல் ஆளாக உன் அம்மாவுடைய ஓவரியின் சினை முட்டையில் புகுந்துகொண்டு ஜனித்தாயே… அன்று ஆரம்பித்தது உன் வெற்றிப் பயணம். அந்த வெற்றிப் பயணம் இன்னமும் உனக்குத் தொடர்கிறது. அதுவே உன் இறப்பின் மூலம் தோல்வியில் முடிவடைகிறது. எனவே ஜனனம் மனிதனின் வெற்றி; மரணம் அவனின் தோல்வி…
… ஆனால் மனித மனம் வாழ்க்கையில் தோல்வியை என்றுமே ஒப்புக் கொள்வதில்லை. அதனால்தான் மறுபிறப்பு, சொர்க்கம், நரகம், ஆவியாக அலைதல் என நாம் கற்பனையான காரணங்களைத் தேடி அலைகிறோம். வென் யு டை, தட்ஸ் ஆல்… யுவர் செல்ஸ் ஸ்லோலி டை அண்ட் யு பிகம் டோட்டலி டெட். அதன் பிறகு நீ ஒரு வெற்றிடம். பீரியட். வான வேடிக்கைகள் வானில் சென்று மறைவதைப் போல… எனவே ஜனனமும் மரணமும் இயல்பான இயற்கைகள்…”
“சரி, நான் இறப்பதற்கு முன் நிறைய நல்லவைகளை செய்ய ஆசைப்படுகிறேன் குமரேசு…”
“ரொம்ப நல்ல விஷயம்… உனக்கோ பணத்துக்குப் பஞ்சமில்லை. மாதா மாதம் டாலரில் உன் மகன்கள் வேறு அனுப்புகிறார்கள். உனக்கு வருகிற பணத்தில் ஒரு இருபது சதவீதமாவது செலவழித்து சில ஏழைக் குழந்தைகளின் படிப்புச் செலவை ஏற்றுக் கொள்ளேன். அதுதவிர அவர்களுக்கு யூனிபார்ம், ஷூஸ் வாங்கிக் கொடேன்…”
“கோவிலுக்கும் நிறைய டொனேட் பண்ணலாம்.. புண்ணியமாவது கிடைக்கும்.”
“புண்ணியமாவது, புடலங்காயாவது? கோவில்கள்தான் ஊழலின் ஊற்றுக் கண்களே. எந்தக் கோவில்கள்ல இப்ப ஒரிஜினல் சிலைகள் இருக்கு சொல்லு?… கடவுளின் பெயரால் நாம் நிறைய ஏமாற்றப் படுகிறோம். ஆங் இன்னொரு முக்கியமான விஷயம். நீ செத்தப்புறம் உன் உடலை மெடிகல் காலேஜ் மாணவர்களின் ஆராய்ச்சிக்காக தானமாகக் கொடுக்கலாம். அவர்களின் கல்விக்கு உன் உடல் உதவியாக இருக்கும். நாளைக்கே திருநெல்வேலி மெடிகல் காலேஜ் சென்று உன் உடலை எழுதி வையேன்…”
ராஜசேகர் உடனே சுறுசுறுப்பானார்.
“நாளைக்கு என்ன, இன்னிக்கே நானும் கமலாவும் செல்கிறோம்…”
உடனே எழுந்து சென்றார்.
காலை பத்தரை மணிக்கு ராஜசேகர், கமலாவுடன் பாளை ஹைகிரவுண்டில் இருக்கும் திருநெல்வேலி மெடிகல் காலேஜ் சென்றார்.
அங்கு வைஸ்-பிரின்ஸிபால் ரேவதி என்கிற பெண்மணியை இருவரும் பார்த்தார்கள். அவர் இவர்களை அன்புடன் அமரச்செய்து, உடனே இன்டர்காமில், “சுலோ, நான் உடனே இரண்டு வயதானவர்களை அனுப்புகிறேன். அப்ளிகேஷன் கொடுத்து, கேடவர் பாங்கில் (cadaver bank) அவர்களைச் சேர்த்துவிடு” என்றார்.
பியூனைக் கூப்பிட்டு, “சுலோச்சனா மேடம் கிட்ட, இவங்களைக் கூப்பிட்டுகிட்டு போ…” என்றார்.
சுலோச்சனா இவர்களுக்காக காத்திருந்தார். நடுத்தர வயதில் குண்டாக பழுத்த பப்பாளி நிறத்தில் இருந்தார். இவர்களைப் பார்த்து அன்புடன் சிரித்தார்.
கமலாவுக்கு அவளை மிகவும் பிடித்துவிட்டது. இருவரும் நட்புடன் பேச ஆரம்பித்தனர். அவளுக்கு இரண்டு குழந்தைகளாம். இவர்களை அவள் தன்னுடைய சாந்தி நகர் வீட்டிற்கு அழைத்தாள். கணவரை இழந்த சுலோச்சனாவைப் பற்றி கமலா நிறைய கேட்டுத் தெரிந்து கொண்டாள்.
சுலோச்சனா இரண்டு ப்ரிண்டட் அப்ளிகேஷனை நீட்டி, “இத படிச்சுப் பார்த்து பூர்த்தி செய்யுங்க… கூடவே உங்க புகைப்படங்கள்; அட்ரஸ் ப்ரூப் அட்டாச் பண்ணிக் குடுங்க… நீங்க எப்ப மெடிகல் செக்கப்புக்கு இங்கு வந்தாலும் உங்களுக்கு பத்து பர்சன்ட் டிஸ்கவுன்ட் உண்டு… நீங்க அப்ளிகேஷன் கம்ப்ளீட் பண்ணிக் கொடுத்ததும், நாங்க ஒரு ஐடி கார்ட் கொடுப்போம். அதுல எங்களுடைய இருபத்திநாலு மணிநேர காண்டாக்ட் நம்பர் இருக்கும். இறந்த ஆறு மணி நேரத்துக்குள்ள எங்களுக்கு நீங்க போன் பண்ணிச் சொன்னதும், உடனே எங்க ஆம்புலன்ஸ் உங்க வீட்டுக்கு வந்து பாடியை எடுத்துக்கிட்டு காலேஜுக்கு வரும். அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு அந்த பாடியை உறவினர்கள் எவராவது பார்த்துச் செல்ல வசதியாக ப்ரிஸ்ஸர்வ் பண்ணி வச்சிருப்போம். அதன் பிறகு நிரந்தரமா அந்த பாடியை ஒரு கெமிக்கலில் போட்டு வைத்து விடுவோம். அது நாளைடவில் சுருங்கி அடையாளம் தெரியாமல் கறுத்துப் போய்விடும்.”
“இதை நாங்க படிச்சுப் பார்த்துட்டு, பூர்த்தி பண்ணி அடுத்த வாரம் கொடுக்கலாமா மேடம்?”
“ஓயெஸ்… உங்களுக்கு எப்ப தோணுதோ, அப்ப என்கிட்டையே வந்து கொடுங்க, நான் உடனே ஐடி கார்டு உங்களுக்கு இஷ்யூ பண்ணிடறேன்…”
இருவரும் கிளம்பிச் சென்றனர்.
இவர்கள் வீட்டிற்குச் சென்ற சிலமணி நேரங்களில் அமெரிக்காவில் இருந்து மூத்த மகன் ஸ்கைப்பில் தொடர்புகொண்டு பேசினான். பேத்தியை கொஞ்சுவதற்காக ஆறு மாத விஸாவில் அமெரிக்கா வந்துபோக வற்புறுத்தினான். விமான டிக்கட் அனுப்பி வைப்பதாகச் சொன்னான். இவர்களும் சரியென மூன்று மாதங்கள் சென்று தங்கி வரலாமென சந்தோஷமாக டெக்ஸாஸ் கிளம்பிச் சென்றனர்.
இளைய மகனும் கலிபோர்னியாவிலிருந்து டெக்ஸாஸ் வந்து இவர்களுடன் ஒருவாரம் சந்தோஷமாக இருந்தான். அப்போது ராஜசேகர், இறந்தபிறகு தங்களுடைய பாடியை மெடிகல் காலேஜுக்கு டொனேட் பண்ணப்போகிற எண்ணத்தை வெளிப்படுத்த, இரண்டு மகன்களும் சந்தோஷமாக ஒப்புக்கொண்டனர்.
நான்கு மாதங்களுக்குப் பிறகு, திருநெல்வேலி திரும்பி வந்தனர். ஜெட்லாக்கில் இரண்டு நாட்கள் அடித்துப் போட்டாற்போல் தூங்கினர். மறுநாள், டேபிளின் மேல் இருந்த மெடிகல் காலேஜ் கேடவர் பாங்க் அப்ளிகேஷனைப் பார்த்ததும் ஞாபகம் வந்தவர்களாக அதைப் பூர்த்தி செய்தனர்.
மறுநாள் காலையில் அப்ளிகேஷனுடன், சுலோச்சனா மேடமை பார்த்துக் கொடுத்துவர மெடிகல் காலேஜ் சென்றனர்.
அவர் இடத்தில் அவருக்கு பதிலாக வேறு ஒருவர் அமர்ந்திருந்தார்.
“சுலோச்சனா மேடம் இன்னிக்கு வரலீங்களா?”
“நீங்க யாரு?”
“நான்கு மாதம் முந்தி நாங்க அப்ளிகேஷன் வாங்கிகிட்டுப் போனோம். இப்ப அதை கொண்டு வந்திருக்கோம்…”
“அவங்க இரண்டு மாதம் முந்தி ஹார்ட் அட்டாக்கில் இறந்துட்டாங்க. அவங்க இடத்துக்கு மாற்றலாகி நான் வந்திருக்கேன். என்கிட்ட நீங்க கொடுக்கலாம்…”
இருவரும் அதிர்ந்தனர்.
“உங்களுக்கு முன்னாடியே அவங்க தன்னை கேடவர் பாங்கில் சேர்த்துக்கிட்டாங்க…”
கமலா வருத்தத்துடன் “இப்ப பாங்க்ல அவங்க பாடியைப் பார்க்க முடியுமா?” என்றாள்.
“கண்டிப்பா முடியாதுங்க மேடம்… பாடி அடையாளம் தெரியாதவாறு கறுத்து, சிறுத்துப் போயிருக்கும்…”
அப்ளிகேஷனை அவரிடம் கொடுத்துவிட்டு, ஐடி கார்டுகளை வாங்கிக்கொண்டு இருவரும் சோகத்துடன் வீடு திரும்பினர்.
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை.
இருவரும் சாந்தி நகரிலுள்ள சுலோச்சனாவின் வீட்டைத்தேடிக் கிளம்பிச் சென்றனர். வீட்டைக் கண்டுபிடித்து கதவைத் தட்டியதும், அவருடைய மகன் வந்து கதவைத் திறந்தான். உள்ளே மகள் சோகமாக அமர்ந்திருந்தாள்.
இருவரும் தங்களை அறிமுகப் படுத்திக்கொண்டு, அவர்களின் அம்மாவின் மறைவிற்கு வருத்தம் தெரிவித்தனர்.
மூத்தவன் கம்ப்யூட்டர் இஞ்சினியரிங் கடைசி வருடம் படிக்கிறானாம்; மகள் பி,ஈ முதலாம் ஆண்டு படிக்கிறாளாம். வீடு எல்.ஐ.சி யில் லோன் வாங்கி கட்டிய வீடாம். இரண்டு வருடங்களாக லோன் திருப்பிச் செலுத்திய நிலையில், அம்மாவின் இறப்பினால் வீடு தற்போது அவர்களுக்குச் சொந்தமாகி விட்டதாம்.
கமலா சுலோச்சனாவின் மகளை கட்டியணைத்து ஆதரவுடன் அவள் தலையைத் தடவினாள்.
ராஜசேகர் மிகத் தெளிவாக, “தம்பி ரொம்ப நல்லாப் படியுங்க…உங்க இருவரின் கல்விக்காக எவ்வளவு செலவானாலும் அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். வேறு எந்த விதமான உதவிகள் வேண்டுமென்றாலும் என்னைத் தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்…” என்று வருத்தத்துடன் சொன்னார்.
தன்னுடைய முகவரி கார்டை எடுத்துக் கொடுத்தார்.
வீடு திரும்பும்போது கமலா, “நாம் நினைப்பது ஒன்று, நடப்பது ஒன்று…” என்றாள்.