இயற்கையின் இடுகாடு
பொறியாளனாய் வேலை பார்க்கும் எனது நண்பன் லட்சுமணனுடன் வழக்கம்போல இரவு உணவை அந்த உணவகத்தில் உண்டுவிட்டு வெளியே வந்தோம். நாங்கள் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை தோறும் இப்படி ஒரு நல்ல உணவகத்தில் ஒன்றாகச் சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தோம்.
“”இன்னைக்கு நாளே சூப்பரா இருந்துச்சுடா..”
“”அப்படி என்ன ஆச்சு?”
“”மேனேஜர் என்னைப் பாராட்டுனாருடா…”
“”ஓ… இன்னைக்கு எனக்கும் நல்ல நாள்தான். க்ளினிக்ல நல்ல கூட்டம்!”
சென்ற மாதம்தான் நான், லட்சுமணன் மற்றும் சில நண்பர்களுடன் கொடைக்கானல், ஆனைமலை ஆகிய இடங்களிலுள்ள பசுமை மற்றும் அமைதி வளத்தைப் பார்த்து மகிழ்ந்து, ரசித்துவிட்டு வந்தோம்.
அதற்கும் முந்தின மாதம் நாங்கள் முதுமலை, ஊட்டி ஆகிய இடங்களுக்குச் சென்று வந்தோம்.
“”ஏண்டா லக்ஸ், காடு, மலை, அருவியையே பாத்துப் பாத்து அலுத்துப் போச்சுடா..”
“”அதுக்கு என்ன செய்யச் சொல்றே?”
“”அடுத்த மாசம் எங்கயாச்சும் வித்தியாசமான இடத்துக்குப் போகலாமா? ம்..ம்.. நாம அடுத்த மாசம் அரேபியாவுக்குப் போகலாம். அங்க இருக்கற பாலைவனத்துல என்னதான் இருக்கு பார்க்கலாம்…”
“”டேய்! எப்படிடா?”
“”விமானத்துலதான்…”
ஒரு மாதத்துக்குப் பிறகு-
நானும் லட்சுமணனும் கோவை விமான நிலையத்தில் விமானத்துக்காகக் காத்துக் கொண்டிருந்தோம். நேரம் ஆனதும், நாங்கள் விமானத்தில் ஏறினோம். லட்சுமணனின் மனம் இதற்காகத்தான் ஒரு மாதமாகத் துடித்துக் கொண்டிருந்தது.
லட்சுமணனுக்கும் எனக்கும் ஐன்னல் அருகே உட்காருவது குறித்து ஓர் ஒப்பந்தம். ஒரு மணி நேரம் அவன், ஒரு மணி நேரம் நான். பறந்தது விமானம்….
சிறிதானது கோவை… இன்னும் சிறிதானது… மறைந்தது. இப்பொழுது வானமும் மேகங்களும்தான் தெரிந்தன.
ஒரு மணி நேரம் கழித்து இடம் மாற வேண்டும் என்ற எண்ணத்தை நான் மறந்து தூங்கிவிட்டேன்… அந்தத் தாலாட்டும் விமானத்தில்…
“”டேய்! சித்தார்த், எழுந்திரு…”
ஐயோ, எழுப்பி விட்டானே… நல்ல ஒரு கனவில் என்னை மறந்து மிதந்து கொண்டிருந்தேன்…
“”அரேபியா வந்துருச்சு!”
இருவரும் ஒரு ஹோட்டலை அடைந்தோம். அங்கு தெருவுக்கு இரண்டு அல்லது மூன்று வீடுகள்தான் இருந்தன.
மறுநாள், நாங்கள் பாலைவனத்துக்குச் சென்றோம். போகப் போக ஆச்சரியமாக இருந்தது. இன்னும் கொஞ்சம் தூரம் போக விரும்பினோம்.
ஒட்டகப்பாகனுக்கு உரிய பணத்தைக் கொடுத்துவிட்டு, ஒட்டகங்களில் ஏறி, ஒட்டகப் பயணத்தைத் துவங்கினோம்.
ஆட்டோவில் மேடு, பள்ளமான இடங்களுக்குச் செல்வது போன்ற உணர்வு. எங்கள் முன்னும் பின்னும் சில சுற்றுலாப் பயணிகள் வந்தனர்.
கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சை நிறமே இல்லை! இங்கும் அங்குமாக கள்ளிச் செடிகள் மட்டுமே இருந்தன.
“”எப்படிப் பாலைவனம் உருவானது தெரியுமா?”
“”நூறாயிரம் ஆண்டுகள் முன்னாடி இந்த இடத்தில் செழிப்பான காடுகளும் பசுமை நிறைந்த மரங்களும் இருந்தன. அப்போ இந்த இடத்துல மழையே பெய்யல. அதனால மரமெல்லாம் வாடி, வதங்கி இறந்து மண்ணால் மூடப்பட்டுப் போயின. இவைதான் மண்ணுக்கு அடியில் பெட்ரோலா, டீசலா மாறிச்சு. இதனால்தான் இங்க பெட்ரோல் நிறைய கெடைக்குது.”
“”வேற மாதிரியும் பாலைவனங்கள் உருவாகலாம்” என்றேன் நான்.
“”எப்படி?”
“”இந்த இடம் நீ சொன்ன மாதிரி முதல்ல காடாதான் இருந்திருக்கும். பெரிய நிலநடுக்கத்துல இந்தக் காடுகள் எல்லாம் மண்ணுக்கு அடியில் புதைஞ்சு போயிருக்கலாம். அப்ப இருந்து இங்க மழை இல்லாததால் இந்தப் பாலைவனம் உருவாகியிருக்கலாம்.”
“”சரி, அப்படின்னா, நாம இப்ப இறந்த மரங்களுக்கு மேலேதான் நிக்கிறோமா?”
“”ஆமா, நாம மரங்களின் இயற்கை இடுகாட்டுலதான் நிக்கறோம்.”
“”ச்சே… பாத்தியா, இயற்கை இறந்தாலும் அது பல தலைமுறைகளுக்கு உதவிகிட்டு இருக்கு. ஆனா, நாம் வாழ்ந்தாலும் இறந்தாலும் மற்றவங்களுக்கு ஒரு பயணும் இல்லை.”
“”ஆமாண்டா, நாம இயற்கையப் பார்த்து நிறையக் கத்துக்கணும். நாமளும் வாழ்க்கையில சாதிச்சு, முன்னேறி, மத்தவங்களுக்கு உதவிடணும்..”
நானும் லட்சுமணனும் ஒரு தீர்க்கமான முடிவுடன் பசுமைத் திட்டத்தை நிறைவேற்ற கோவை திரும்பினோம்.
– அக்டோபர் 2012