இயற்கைதான் இறைவன்




முன்னொரு காலத்தில் பராகரன் என்னும் முனிவன் வாழ்ந்து வந்தார். அவர் நிறைய கற்ற முனிவராக இருந்தார். ஆனால் அவரிடம் “நான் என்ற அகந்தை காணப்பட்டது.
“நான் பல கலைகள் மற்றும் மந்திர தந்திரங்களையும் கற்றவன், ஒரு உலகத்தையே படைக்கும் வல்லமை படைத்த எனக்கு கடவுள் என்பவர் எதற்கு?. நானே கடவுள், நானே அதிபதியாக இருக்க முடியும் என்றால் உன்னை வழிபட எனக்கு என்ன அவசியம்? அதுவும் கற்சிலையாய் நிற்பவனாகிய நீ எப்படி எனக்கு கடவுளாக முடியும்,? இந்த கேள்வி பராகரன் முனிவனுக்கு ஏற்பட்டதிலிருந்து அவரால் நிம்மதியாய் இருக்க முடியவில்லை.

முட்டாள் மக்கள் கும்பல் குமப்லாய் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்திக் கொண்டிருக்கும் அவர்களை பார்த்து எரிச்சலும் கோபமும் கொள்கிறார் மக்கள் என்ன செய்வார்கள் பாவம், இவரை பார்த்தவுடன் விழுந்து வணங்குகிறார்கள், தெய்வத்தை போன்றவர் நீங்கள் என்று புகழ்கிறார்கள். அது என்ன தெய்வத்தை போன்று?
தெய்வமே நானாக ஏன் இருக்க கூடாது என்று நினைத்துக்கொண்டிருக்கும் என்னிடம் ‘தெய்வத்தை போன்று’ என்று பேசும் இந்த முட்டாள்களை என்னவென்று சொல்வது?
அதற்காக இவர்களிடம் வீண் ஜம்பம் அடித்து என்னை நிருபிக்க அவசியம் இல்லை. காலம் கனிவதற்காக காத்திருப்பதுதான் நல்லது முடிவு செய்கிறார் பராகரன்.
அவர் எதிர்பார்த்த நாள் வந்த்து. அந்த ஊரில் இடியும் மழையும் காற்றும் அடிக்க ஆரம்பித்தது. வெள்ளம் பெருக்கெடுத்து ஓட அனைத்தும் அடித்து செல்லப்பட்டன. வீடு வாசல் அனைத்தையும் இழந்து மக்கள் ‘ஓ தெய்வமே’ எங்களை ஏன் இம்சிக்கிறாய்? வானத்தை பார்த்து கதறி அழுதனர். அப்பொழுது வெளிப்பட்ட பராகரன், நான் உங்களை காப்பாற்றுகிறேன், அபயம் அளிப்பதாக மக்களிடம் கூறினார்.
மக்கள் அவரை பெரும் முனிவராக ஏற்றுக்கொண்டாலும் தெய்வமாக ஏற்றுக்கொள்ள தயங்கினார்கள். அவர்கள் இந்த இக்கட்டிலிருந்து எங்களை காப்பாற்றினால் போதும் என்று கேட்டார்கள். பராகரன் சிரித்தார். உங்களுக்கு நான்
வேண்டுமா? இல்லை அந்த கடவுள் வேண்டுமா? முடிவு செய்து கொள்ளுங்கள். தன் இருப்பிடம் சென்று விட்டார்.
மக்கள் பொறுத்து பார்த்தார்கள், மழையும், காற்றும் இன்னும் அதிகமாக அடிக்க ஆரம்பித்தன. உண்பதற்கு வழியில்லை, அவர்களுடைய உடமைகள் முதல் அனைத்தும் அழிந்து போய்விட்டன. அதற்குள் பாதி பிரிவினர் பராகரனை அடைந்து உங்களை கடவுளாக ஏற்றுக்கொண்டோம் எங்களை காப்பாற்றுங்கள். வேண்டி நின்றனர். அவர்களூக்காக இரங்கிய பரகாரன் தன்னுடைய மந்திர சக்தியை உபயோகப்படுத்தி மழையையும் காற்றையும், நிறுத்தினார். அவ்வளவுதான் அங்கிருந்த மக்கள் உற்சாகமும் மகிழ்ச்சியும் அடைந்தனர். அது மட்டுமல்ல, இதுவரை அவர்கள் இழந்திருந்த அனைத்தையும் தன்னுடைய மந்திர சக்தியால் உருவாக்கி கொடுத்தார். எல்லாம் அப்படி அப்படியே பெரு மழை பெய்த சுவடே இல்லாமல் செய்து கொடுத்தார்.
மக்கள் வாயை பிளந்தனர். இவர் இப்படிப்பட்ட வல்லமை படைத்தவரா? அந்த ஊரில் முக்கால்வாசி பேர் அவரை தெய்வமாக ஏற்றுக்கொண்டனர். ஒவ்வொருவர் வீட்டிலும் அவரது உருவப்பட்த்தை வைத்து பூஜிக்க ஆரம்பித்தனர். சிலர் அவருக்கு கோயில் கூட கட்டி கும்பிட ஆரம்பித்தனர். ஆயிற்று ஐந்தாறு மாதங்கள் ஓடியிருந்தது,
இப்பொழுது அவர்களுக்கு உழவுக்கும் குடிநீருக்கும் தண்ணீர் தேவையாக இருந்தது. காற்றும் முன்னர் போல் அடிக்காமல் இருந்ததால் மேகங்கள் அவர்கள் இடத்துக்கு வராமல் அடுத்த பக்கம் சென்றன.
மீண்டும் பராகரனை பார்த்து எங்களுக்கு மழை நீர் வர வழி செய்யுங்கள் என்று வேண்டிக்கொண்டனர். அவ்வளவுதானே, இவர் மந்திரத்தால் கட்டுப்படுத்தி வைத்திருந்த மழையையும் காற்றையும் அந்த ஊரில் பெய்ய அனுமதித்தார்.
அவ்வளவுதான் மீண்டும் மழையும் காற்றும் வெள்ளமென பெருக்கெடுத்து வர ஆரம்பித்தது இடைவிடாமல் இரண்டு மூன்று நாட்கள் பெய்த மழை, காற்றால் மீண்டும் அந்த மக்கள் சொல்லொண்ணா துயரம் அடைந்து பராகரனை பார்த்தார்கள். அவர் மந்திரம் போட எல்லாம் அமைதியாகின. இப்படி இரண்டு மூன்று முறை மழையும், காற்றும் நிற்க, பரகாரன் மந்திரம் போட்டு வரவழைக்க, இந்த தொடர் நிகழ்ச்சி. பராகரனுக்கு சலிப்பை வரவழைத்து விட்ட்து. இது என்ன ஒரு இயற்கை நம் மந்திரத்துக்கு கட்டுப்படுகிறது, மறுபடி மந்திரம் போட்டால்தான் வருகிறது. நமக்கு வேறு வேலை இல்லையா? இயற்கையையே பிடித்து நிறுத்தி பார்த்துக்கொண்டிருக்க முடியுமா? மறு முறை ஊர் மக்கள் வரும்போது என்னால் முடியாது என்று சொல்லி விட்டார். மக்கள் அவரிடமே நீங்கள் தானே சொன்னீர்கள், நானே எல்லாம் என்று, இப்பொழுது எங்களை கைவிட்டு விட்டீர்களே?. .
சட்டென்று அப்பொழுது ஒரு உண்மை பராகரனுக்கு புரிந்தது. ‘நானே எல்லாம்’ என்பது எவ்வளவு அனர்த்தம்? ஒரு இயற்கையை கட்டுப்படுத்தி ஒழுங்கு படுத்த முடியவில்லை. உலகம் முழுக்க கட்டுப்படுத்தி நட்த்திக் கொண்டிருக்கும் இறைவன் எவ்வளவு பெரியவன்? சிந்தனையுடன் என் இறுமாப்புக்கு சரியான தண்டனை கிடைத்துவிட்ட்து என்று எண்ணினார். தனது
மந்திர கட்டுக்களை எல்லாம் எடுத்து விட்டு இனி அதனதன் போக்கில் விட்டு விடுகிறேன் இறைவா? இவர்களுக்கு நல் வழி காட்டு என்று இறைந்தார். இரண்டு மூன்று நாட்களில் மழை நின்றது, காற்றும் நின்றது.
அவருடைய நித்திரையில் அக்னியாகவும்,நீராகவும், தோற்றமளிக்கும் ஒரு உருவம் “பராகரரே இறைவன் என்பதே உங்களை சுற்றி நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகள்தான். அவைதான் ஒன்றுக்கொன்று சார்ந்தும், முரண்பட்டும் உலகத்தை நடத்திக்கொண்டு வருகிறது. மனிதன் அத்தகைய சக்தியை தனக்கு இஷ்டப்பட்ட உருவமாக வைத்து தெய்வமாக கொண்டாடி மகிழ்கிறான். இயற்கையை நாம் வெல்லவேண்டும் என்று நினைத்து தடுத்தோமென்றால் இத்தகைய குழப்பங்கள் ஏற்படத்தான் செய்யும். அதனை மனித உருவாகிய உங்களை கொண்டு இறைவன் நிகழ்வாக நடத்தி காட்டியிருக்கிறான். இயற்கையை அதனதன் போக்கில் நடக்க விடுங்கள். அப்படிப்பட்ட இயற்கை, பேராபத்துக்கள் ஏற்படுமெனில் அனைத்து உயிர்களையும் காப்பாற்றிக்கொள்ள இறைவன் ஏதோவொரு நிகழ்வின் மூலம் வழி ஏற்படுத்தி தருவார்.
ஆனால் இயற்கையை தடுத்து நிறுத்த முயற்சிகள் செய்ய மாட்டார். ஏனெனில், இயற்கைதான் இறைவன், இறைவன்தான் இயற்கை. பராகரர் புரிந்து கொண்டார்.