கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை நாடகம்
கதைப்பதிவு: June 27, 2025
பார்வையிட்டோர்: 1,231 
 
 

(1947ல் வெளியான கற்பனை நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

காட்சி 6-10 | காட்சி 11-15 | காட்சி 16-19

காட்சி – 11 

தோட்டம்: 

[பாண்டியனும் இன்பவல்லியும்] 

(சந்திரோதயம்) 

பாண்டியன் :- இன்பவல்லி! சந்திரனின் தோற்றம் எப்படி இருக்கிறது பார். கடல் அரசனும், நதிகளாகிய மாதர்களும் கூடி அலைகளுக் கிடையே ஆடும் பொழுது ஒருவர் மீது ஒருவர் வீசி யெறிந்து கொண்ட பூச்செண்டு மேலெழுந்தது போல் தோன்று கிறதல்லவா? 

இன்பவல்லி :- அரசே! முத்துக்களை வீசுகின்ற கடலின் முகட்டிலே முளைத்தெழுந்த நிலா, இருட்டரசன் மாலையாகிய மங்கையைத் திருமணம் புரியும் பொழுது வைக்கப்பட்ட பொற்குடத்தைப் போலிருக்கிறது. 

பாண்டியன் :- அருமையான கற்பனை இன்பவல்லி!… ஓ ஹோ! நாணம் மேலிட்டு விட்டதோ?… எங்கே ஓடுகிறாய் இன்பவல்லி! உன் சாதாரண நடையே நாட்டியத்தின் உன்னத பாவம் போல் காட்சியளிக்கிறதே. இதோ உன்னைப் பிடித்துவிட்டேன், பார்த்தாயா? 

(சிரிப்பு) 

[இருவரும் பாடுகின்றனர்] 

இன்பவல்லி :- இந்தக் கல் மேடையில் அமர்வோம் பிரபு. மரம், செடி, கொடி எல்லாவற்றுக்கும் பொன் முலாம் பூசும் சந்திரனின் அமுதக் கிரணங்களின் அழகிய தோற்றம் உள்ளத்திலே இன்ப வாரிதியைப் பெருக்குகிறது. 

பாண்டியன் :- உன் கருங் கூந்தலும் அதனிடையே தோன்றும் முகமும், வான மண்டலத்தில், மேகத் தினிடையே சந்திரன் இருப்பதைப் போலிருக்கிற தல்லவா? மேகத்தை மின்னாகிய கோடுகள் பிளந் தோடுவதைப் போல உன்னுடைய கோதி முடித்த கூந்தலிலே பொன்னாபரணங்கள் சூட்டியிருப்பது எவ்வளவு ரம்மியமாயிருக்கிறது தெரியுமா?

இன்பவல்லி :- (வருத்தமாக) அரசே ! 

பாண்டியன் :- இன்பவல்லி! ஏன் உன் முகம் வாட்ட மடைந்திருக்கிறது? 

இன்பவல்லி :- நிரந்தர குதூகலத்துடன் வாழும் பாக்கியம் செய்திருந்தாலல்லவோ என் முகம் எப்பொழுதும் மலர்ந்திருக்கும்…

பாண்டியன் :- இன்பவல்லி! பிதற்றுகிறாய். 

இன்பவல்லி :- உன் மத்தம் பிடித்தவள் பிதற்றத்தானே முடியும் அரசே. 

பாண்டியன் :- என்ன சொல்லுகிறாய்?

இன்பவல்லி :- அரசே! என்னுடைய இந்த வாழ்வு நனவு தானே? 

பாண்டியன் :- இதெல்லாம் என்ன இன்பவல்லி..? 

இன்பவல்லி :- தங்கள் மனதை யாரும் கலைக்க நினைத்தால்… 

பாண்டியன் :- யாரால் கலைக்க முடியும்? 

இன்பவல்லி :- தங்கள் தாய், தங்கை, அமைச்சர்… 

பாண்டியன் :- (சிரித்து) இதற்குத் தான் பெண்களைப் பேதை என்கிறார்கள். காரணம் சிறிது மின்றி மலர் போன்ற உன் உள்ளத்தை எவ்வளவு வதைத்துக் கொண்டாய்..? 

இன்பவல்லி : ஸ்வாமி! இதை நான் நம்பலாமா?

பாண்டியன் :- இன்னுமா அவநம்பிக்கை? 

இன்பவல்லி :- ஒருவேளை நான் கொடியவளாக இருந்தால்…? 

பாண்டியன் :- இன்பவல்லி! என் சுகத்தையே திருடி உன் வாழ்க்கையுடன் பின்னிக் கொண்டாயே இதைவிடவா கொடுமை இழைக்க முடியும் உன்னால்? 

(சிரிப்பு) 

[சுந்தரி வருகிறாள்.] 

சுந்தரி :- இன்பவல்லி!.. ஆ… அரசரா தயவு செய்து மன்னிக்க வேண்டும்.

இன்பவல்லி :- சுந்தரி! 

பாண்டியன் :- சுந்தரி! இங்கே வா, எங்கே போகிறாய்? என்ன விசேஷம்? 

சுந்தரி :- ஒன்றுமில்லை… இன்பவல்லியைக் கண்டு… ஆ… இன்பவல்லியின் முகம் ஏனிப்படி வாடி இருக்கிறது? 

பாண்டியன் :- அர்த்தமற்று உளறும் அவளை நீயே கேள். 

சுந்தரி :- ஓ! அதனால் அவள் மனம் பதைக்கிறாளோ?

பாண்டியன் :- எதனால்? 

சுந்தரி :- பாவம். எத்தனை நாட்களுக்குத்தான் மனதில் அடக்கி…

பாண்டியன் :- இதெல்லாம் நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?

சுந்தரி :- அரசே!.. நீங்கள் இருவரும் உடலால் இருவர்…… 

பாண்டியன் :- ஆனால், அவளை என் உயிரினும் பெரிதாக மதிக்கிறேன். 

சுந்தரி :- உங்களுடைய இன்ப துன்பங்கள் அவளையும் சேர்ந்தவை தானே? 

பாண்டியன் :- சந்தேகமில்லாமல். 

சுந்தரி :- அதனால் தான் பிரபு… உங்கள் உள்ளம் வருந்தும் என்றாலும், காதால் கேட்டதைத் தங்களிடம் தெரியப்படுத்த வேண்டுமென்று அவள் விரும்பியிருக்கலாம். 

பாண்டியன் :- என்ன அது? 

சுந்தரி :- பிரபு! தங்கள் தாய் பாண்டிமாதேவியைப் பற்றி அவதூறாகச் சொல்வதாக தயவு செய்து வெகுளக் கூடாது. 

பாண்டியன் :- என் தாயா? விஷயத்தைச் சொல்.

சுந்தரி :- தன் காதலரின் தாயைப் பற்றி யாரும் ஏதாவது பேசினால் எந்தப் பெண்ணின் நெஞ்சுதான் துடிக்காது. 

பாண்டியன் :- சுந்தரி! என்ன சொல்லுகிறாய்?

சுந்தரி :- தங்கள் தாயாரும் அமைச்சரும் அரசாங்க விஷயமாகச் சந்தித்துப் பேசலாம், ஆனால்…

பாண்டியன் :- இல்லை, இது பொய்…

சுந்தரி :- நானும் இன்பவல்லியும் பொய்யென்றுதான் எண்ணுகிறோம். ஆனால்…

பாண்டியன் :- ஆனால் என்ன? 

சுந்தரி :- அவர்களுடைய சந்திப்பைப் பற்றி ஊரார் பலவிதமாகப் பேசிக் கொள்ளுகின்றனர். வம்புப் பேச்சு வளர்ந்து வருத்தத்தை அளிக்கும் நிலைவரை விடாமல் முளையிலேயே கிள்ளி யெறிந்துவிடுவது நல்லதல்லவா? 

பாண்டியன் :- சரி. 

சுந்தரி :- இல்லாமற் பிறவாது, அள்ளாமல் குறையாது. பாண்டிய மன்னனின் தாய்… ஒரு…

பாண்டியன் :- போதும்,.. நான் வருகிறேன்…

[புறப்படுகிறான்] 

திரை. 

காட்சி – 12

இன்பவல்லியின் விடுதிக்கு முன் இடம்: 

[பாண்டியன் தளர்ந்து நடந்து வருகிறான். ஒரு செடிக்குப்பின் யாரோ பதுங்கி இருப்பது தெரிகிறது.] 

பாண்டியன் :- யார் அங்கே? 

தேவி :- (எழுந்து) மகனே! நான் தான்…

பாண்டியன் :- அம்மா! நீங்கள்தானா? உருவிய வாளுடன் இங்கே பதுங்கியிருப்பானேன்? இதோ இது யார்? 

[அமைச்சர் எழுந்திருக்கிறார்.] 

அமைச்சர் :- தங்கள் அமைச்சர் நல்லந்துவன். 

தேவி :- மகனே! நீரில் விழுந்த எறும்பின் நிலையில் இருக்கிறாய் நீ. உன்னை அறியாமலே சூழ்ச்சிக் காரர்களின் வலையில் அகப்பட்டுக் கொண்டாய். அதை எடுத்துச் சொல்லி அறிவு புகட்டக்கூடிய நிலையை மீறிவிட்டாய் நீ. 

பாண்டியன் :- இதெல்லாம் எனக்குத் தேவையில்லை. நீங்கள் இங்கே பதுங்கியிருந்த காரணம்? 

தேவி :- உன் உயிரை விட எனக்கு வேறு அரிய பொருள் உண்டா? அதைக் காப்பாற்ற…

அமைச்சர் :- சதிகாரர்களால் உங்களுக்கு அபாயம் ஏற்படாமல் இருக்க நீங்கள் அறியாமலே, இந்த ஒரு இரவல்ல எத்தனையோ இரவுகளாகக் காத்து வருகிறோம்.

பாண்டியன் :- நீங்களா என்னைக் காப்பாற்றி வருகிறீர்கள்? 

அமைச்சர் :- வஞ்சகத்தை அறியாத நீங்கள் வஞ்சகர் களின் நடுவே இன்புற்றிருக்கிறீர்கள். உங்கள் உயிரை வேலையாட்களிடம் ஒப்புவிக்க உங்கள் அன்னையின் மனம் சம்மதிக்கவில்லை.

பாண்டியன் :- அதற்காக ஒரு பெண்…

தேவி :- பெண்மை மென்மை யானது தான். ஆனால் அது வீரம் கலந்தது. கோழி தன் பலத்தை மறந்து குஞ்சைக் கொத்தவரும் பருந்திடம் போராடுவதை நீ கண்டதில்லையா? வீரத்தின் திருவுருவாய் விளங்கிய பெண்களின் செயலை நீ கேட்டதில்லையா? வீராங்கனைகள் பலர் தோன்றிய நாடு இது. இந்த நாட்டிலே பிறந்த ஒரு பெண் தன் புத்திரனைக் காப்பாற்றக் கூட சக்தியற்ற கோழையாகவா ஆகிவிடுவாள்? 

பாண்டியன் :- போதும். உண்மைக்கு மாறான பேச்சு.

தேவி :- என்ன? 

பாண்டியன் :- எல்லாம் எனக்குத் தெரியும். என் இன்பவல்லியைக் கொல்வதற்கு நீங்கள் செய்யும் கூட்டுச் சதி இது. 

தேவி :- நெடுஞ் செழியா…? 

அமைச்சர் :- அரசே ! உங்கள் அன்னையைப் பார்த்தா இவ்வாறு சொல்லுகிறீர்கள். 

பாண்டியன் :- நிறுத்துங்கள், என்னென்ன காரியங்கள் இங்கே நடக்கின்றன வென்பதை நான் கவனித்துக் கொண்டு தான் வருகிறேன். 

[சிலர் ஓடும் சப்தம் கேட்கிறது. இன்பவல்லி வருகிறாள்.] 

பாண்டியன் :- யாரோ ஓடுவது போன்ற சப்தம் கேட்கிறதே…. இன்பவல்லி! நீ எங்கே வந்தாய்?

இன்பவல்லி :- (பதற்றத்துடன்) ஆம்! அரசே

பாண்டியன் :- ஏன் இந்தப் பதற்றம்? 

இன்பவல்லி :- அரசே! தங்களை வழியனுப்பி விட்டு உள்ளே சென்றதும் ஏதோ கூக்குரல் கேட்டது ஓடி வந்தேன். 

[சுந்தரி வருகிறாள்.] 

பாண்டியன் :- சுந்தரி ! நீயும்…….. 

சுந்தரி :- ஆம், அரசே! நான் நினைத்தபடிதான் எல்லாம் நடக்கின்றன. 

பாண்டியன் :- என்ன ? 

சுந்தரி :- அரசே! அமைச்சரின் சூழ்ச்சி உச்சஸ்தாயியை அடைந்து விட்டது. தங்கள் அன்னையைக் கைப்பொம்மையாக்கி தங்களைக் கொன்று விட்டு இந்த அரசாட்சியைக் கைப்பற்றுவதற்கு அவர் எடுத்துக் கொண்ட முதல் நடவடிக்கை இது. 

தேவி :- சுந்தரி! என்ன சொல்லுகிறாய்?

அமைச்சர் :- இது பயங்கரமான பொய். 

சுந்தரி :- அரசே! என் காதில் விழுந்த இவ்விஷயத்தை முதலில் நம்ப மறுத்தேன். பெற்ற தாயே பிள்ளையைக் கொல்லும் சூழ்ச்சிக்கு உடந்தையா யிருக்க மாட்டாரென்று எண்ணினேன். 

பாண்டியன் :- ஏன் இருக்காது? நான் இன்பமாகப் பொழுதைக் கழிப்பதைத்தான் அவர்கள் விரும்ப வில்லையே. 

அமைச்சர் :- அரசே! தாங்கள் இதை நம்புகிறீர்களா?

சுந்தரி :- இச்சதிகாரர்களுக்குத் துணையாக வந்த படைவீரர்களே இப்பொழுது ஓடியவர்கள். பிரபு! உங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

பாண்டியன் :- ஆம், நான் என் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால் இவ்விருவரும் உயிருடன் வெளியில் இருக்கக்கூடாது. 

அமைச்சர் :- அரசே! 

தேவி :- அமைச்சரே! இனி அவனுடன் பேசிப் பயன்?… எது ஒளி, எது இருள் எனப் பகுத்தறியும் சக்தியை இழந்து வஞ்சகர்கள் ஊட்டிய நஞ்சை அருந்திய அவன் நெஞ்சில் ஈரமில்லாமல் பேசுவதில் வியப்பில்லை. 

பாண்டியன் :- வியப்புக்கு இடமில்லை. இத்தனை நாட்கள் உங்களைச் சிறையில் அடைக்காமல் விட்டது.. 

அமைச்சர் :- அரசியாருக்குச் சிறையா…? 

பாண்டியன் :- உமக்கும்தான். அங்கும் உமது சதியை தொடர்ந்து நடத்த முயற்சிப்பீரா? 

தேவி :- தாயிடம் பேசுகிறோம் என்பதை மறந்து பேசும் அவனிடம் தர்க்கம் ஏன்? நெடுஞ்செழியா!… மனித ரத்தத்தால் கழுவ வேண்டிய உன் கண் கண்களில் படிந்துள்ள மாசை…

பாண்டியன் :- உங்கள் சிறைவாசக் காட்சியால் மாற்ற இயலுமா என்று பார்க்கிறேன். 

[கேலியாக நகைக்கிறான்.] 

திரை. 

காட்சி – 13

அரண்மனையில் தனியிடம் : 

[இன்பவல்லி சோகமாக உட்கார்ந்திருக்கிறாள்,] 

சுந்தரி :- (கடுமையாக) இன்பவல்லி ! உன்னையே நீ மறந்துவிட்டாய். 

இன்பவல்லி :- சுந்தரி! அனுபவத்திலும் அறிவிலும் பெரியவளான நீ என் செய்கை தவறானதென்று உண்மையிலேயே கருதுகிறாயா? 

சுந்தரி :- தவறா? மகத்தான தவறு என்று சொல்லுகிறேன். பாண்டியனை மயக்க வேண்டிய நீ, அவன் மையலில் விழுந்து விட்டதாக நடிக்க வேண்டிய நீ, உண்மையிலேயே அவன் வசப்பட்டு விட்டாய்.

இன்பவல்லி :- அது என் குற்றமல்ல. 

சுந்தரி :- நீ சேரநாட்டிலிருந்து பாண்டி நாட்டிற்கு எதற்காக அனுப்பப்பட்டாய்? 

இன்பவல்லி :- எதற்காக அனுப்பப்பட்டேன். என் வஞ்சகத்தில் நானே பலியாகவா? 

சுந்தரி :- மிகவும் நன்றாக இருக்கிறது உன் போக்கு. சில நாட்களாகச் சேர மன்னனுக்கு நாம் எவ்வித குறிப்பும் அனுப்பவில்லை என்பதை அறிவாயா?

இன்பவல்லி :- அறிந்து பயன்? 

சுந்தரி :- அவன் உப்பைத் தின்ற நீ அவனுக்குத் துரோகம் செய்ய நினைக்கிறாயா? 

இன்பவல்லி :- என்னை நம்பி உள்ளன்புடன் நேசிக்கும் பாண்டிய மன்னனுக்கு நான் துரோகம் செய்ய வேண்டு மென்று சொல்லுகிறாயா? 

சுந்தரி :- என்ன? 

இன்பவல்லி :- என் ஸ்வாமிக்குத் தீங்கிழைக்க நான் இசைய…

சுந்தரி :- என்ன? ஸ்வாமியா? வெகு அழகாக இருக்கிறது? 

இன்பவல்லி:- சுந்தரி! நீயும் ஒரு பெண்தானே? ஒரு பெண்ணின் உள்ளத்தை நீ அறியமாட்டாயா? 

சுந்தரி :- பேஷ்! கடமை தவறிய நீ எனக்கே உபதேசம் செய்ய ஆரம்பித்து விட்டாயா? 

இன்பவல்லி :- சுந்தரி! இனியும் கொடுமை இழைக்க என் இருதயத்தில் போதிய கடுமை இல்லை. நான் பாண்டிமா தேவியையும் அமைச்சரையும்…

சுந்தரி :- ஓ ஹோ! காதலுக்கு இடம் கொடுத்த உன் மனம் கருணைக்கும் இடம் கொடுத்துவிட்டதோ?

இன்பவல்லி :- இதுவரை, உன் வார்த்தைகளுக்கு அஞ்சி வாய் மூடி மௌனியாக இருந்துவிட்டேன். இனி என் கடமை…

சுந்தரி :- சேரமன்னன் உன்னிடமிருந்து இதை எதிர் பார்க்கவில்லை. 

இன்பவல்லி :- பாண்டிய மன்னருக்கு நான் செய்ய வேண்டிய பணி இதுதான். 

சுந்தரி :- உன்னுடைய இந்த விபரீதப் போக்கு சேரனுக்கு எட்டினால்…

இன்பவல்லி :- நான் எனக்காக அஞ்சுவதை மறந்து விட்டேன். 

சுந்தரி :- ஹும், அப்படியா? பாண்டிய மன்னனின் வீழ்ச்சிக்கு உலை வைக்க வேண்டிய நீ உன் வீழ்ச்சிக்கே உலை வைத்துக்கொண்டாய். 

திரை. 

காட்சி – 14 

பாண்டியன் உட்கார்ந்திருக்கிறான்: 

[அரசகுமாரி வருகிறாள்] 

குமாரி :- அண்ணா ! உனக்கு வெட்கமாயில்லை. 

பாண்டியன் :- குமாரி…

குமாரி :- என்னை உன் தங்கை என்று சொல்லிக் கொள்ள உன் நாக் கூசவில்லையா? 

பாண்டியன் :- ஏன் இப்படிக் கோபப்படுகிறாய். என்ன செய்து விட்டேன்? 

குமாரி :- என்ன செய்யவில்லை? இந்தக் கேள்வியைக் கேட்க உனக்கு என்ன யோக்கியதை இருக்கிறது? 

பாண்டியன் :- அதிகம் பேசாதே. சொல்ல வேண்டியதைச் சொல். 

குமாரி :- என் தாயை எதற்காகச் சிறையிலடைத்தாய். அமைச்சரைச் சிறைப்படுத்தக் காரணம்? 

பாண்டியன் :- மக்களுக்கு அவர்களிடமுள்ள மதிப்பு மங்காதிருக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தினால் தான். 

குமாரி :- அவர்களைப் பற்றிக் கேவலமாகச் சொல்லி அதே சமயத்தில் உன்னையும் அரசன் என்று சொல்லிக் கொள்ள… ஆம் மறந்து விட்டேன், உனக்கு மானம் என்று ஒன்றிருந்தா லல்லவா? 

பாண்டியன் :- உன் வார்த்தைகள் அத்துமீறிப் போகின்றன. 

குமாரி :- தலைக்குமேல் சாண் போனாலென்ன. முழம் போனாலென்ன? நம் குலத்தின் பெருமையை அழிப்பதற்கு நீ காரணமாயிருந்தாய் என்ற அவச் சொல்லைத் தாங்கிக் கொள்ளக் கூடிய தைரியத்தைப் பெற்று விட்டாய் போலும். 

பாண்டியன் :- போதும், நிறுத்து. 

குமாரி :- நம் எதிரிகள் இந்தச் சந்தர்ப்பத்தையே எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். உன் நாட்டிய ராணி இன்பவல்லி அவர்கள் கைப்பாவை என்பதில் ஐயமில்லை. 

பாண்டியன் :- இன்பவல்லியைப் பற்றி நீ ஒன்றும் பேசக்கூடாது.

குமாரி :- அதோ அவளே வருகிறாளே 

[இன்பவல்லி வருகிறாள்.] 

உன்னைப் பார்க்கவந்தவள் என்னைக் கண்டு ஏன் இப்படி மிரள மிரள விழிக்கிறாள்? 

பாண்டியன் :- இன்பவல்லி என்ன விசேஷம்? 

குமாரி :- இன்பவல்லி ! சும்மா வாம்மா ! ஏனிப்படி பயப்படுகிறாய் ? ஹூம். உனக்குக் குற்றமுள்ள நெஞ்சு என்று நான் சொல்லவில்லையே..! இன்பவல்லி! நீ ஒரு பெண் தானே? மனமறிய என் சகோதரனை வஞ்சிக்கிறாயே. ஒரு அரச வம்சத்தையே நாசம் செய்யத் துணிந்த உன்னிடம் மனச்சாட்சியை எதிர்பார்க்க முடியுமா? உன் பசப்பு வார்த்தைகளின் மயக்கத்தில்…

[இன்பவல்லி கண்ணீர் விடுகிறாள்.] 

பாண்டியன் :- குமாரி! போகிறாயா? இல்லை…

குமாரி :- என்னையும் சிறையில் அடைத்து விடுவாயோ? நான் போகிறேன். ஆனால், உன் மிரட்டலுக்குப் பயந்து கொண்டல்ல. இன்பவல்லி! நான் சொல்வதை நன்றாய் அறிந்து கொள். உன் உதட்டுப் புன்முறுவலில் என் சகோதரனை வீழ்த்தலாம். ஆனால், எல்லாரையுமே அப்படி ஏமாற்றிவிட முடியாது. 

(போகிறாள்.)

திரை. 

காட்சி – 15 

சேரன் சபை : 

[சேரனும் சேனாதிபதியும்] 

சேரன் :-சுந்தரியிடமிருந்து வந்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதைக் கவனித்தீரா? 

சேனாதிபதி:- ஆம் பிரபு! கவனித்தேன். இரை தேடப் போனவள், தானே இரையாகி விட்ட கதையாக இருக்கிறது! 

சேரன் :- அவளை நான் எவ்வளவு நம்பியிருந்தேன்… 

சேனாதிபதி :- இந்தப் பொறுப்பான வேலைக்கு வேறு யாரையேனும் அனுப்பியிருக்க வேண்டும் பிரபு. 

சேரன் :- இது அவள் குற்றமல்ல… பருவ காலம். 

சேனாதிபதி :- மன்னனை மணந்து ராணியாக வாழ்க்கை நடத்திவிடலாமென்று கனவு கண்டுவிட்டாள் போலும்! 

சேரன் :- மன்னன்… இன்னும் எவ்வளவு காலத்துக்கு மன்னன்! 

சேனாதிபதி :- இன்னும் சிறிது காலம் உண்மையாக நடந்திருந்தால், இன்பவல்லி எவ்வளவு பெரிய பதவியைப் பெற்றிருப்பாள்! எதற்கும் கொடுத்து வைக்க வேண்டாமா? 

சேரன் :- உடனே திரும்பி வர வேண்டுமென்று இன்பவல்லிக்குத் தாக்கீது அனுப்பும். 

சேனாதிபதி:- அவள் வர மறுத்தால்…? 

சேரன் :- அப்பொழுது கூறுகிறேன். 

சேனாதிபதி :- உத்தரவு. 

திரை. 

– தொடரும்…

– இன்பவல்லி (கற்பனை நாடகம்), முதற் பதிப்பு: மார்ச் 1947, மணி மன்றம் தமிழ் நூல் வெளியீட்டகம், திருச்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *